Tuesday, April 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 251

அதிதி தேவி தன் புதல்வர்களான தேவர்களின் கஷ்டம்‌ நீங்க வழி சொல்லுமாறு தன் கணவரான கச்யப ப்ரஜாபதியிடம் கேட்டாள்.

கச்யபர் கூறினார்.
அதிதி! முன்பு ப்ரும்மதேவரிடம் நான் இதைக் கேட்டபோது, அவர் எனக்கு கூறியதை அப்படியே கூறுகிறேன்.

பங்குனி மாதத்தின் வளர்பிறையில் முதல் பன்னிரண்டு நாள்கள் பால் மட்டும் உணவாக ஏற்று பக்தியுடன் பகவானைப் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு துவங்கி, பகவானைப் பூஜை செய்யும் முறையை மிகவும் விளக்கமாக எடுத்துரைத்தார் கச்யபர். அனுஷ்டானங்கள், ஜபிக்க வேண்டிய மந்திரங்கள், செய்ய வேண்டிய கிரியைகள் அனைத்தையும் உபதேசம் செய்தார்.
செய்யவேண்டிய தானங்கள்‌ பற்றியும் கூறினார்.

தினமும் பாட்டு, நர்த்தனம், பகவானது துதிகள், வேத மந்திரங்கள், பகவானைப் பற்றிய கதைகள் ஆகியவற்றை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும்.

பகவானுக்கு பிடித்தமான பயோ விரதம் என்ற இவ்விரதத்தை ப்ரும்மா எனக்குக் கூறியபடியே உனக்குக் கூறினேன்.
இது பகவானை மகிழ்விப்பதாகும். இதனைக் குறைவற முறைப்படி செய்யவேண்டும்.

அப்படிச் செய்தால், பகவான் வெகு விரைவில் உன் விருப்பத்தை நிறைவேற்றுவார். என்றார்.

கணவர் கூறியபடி அதிதி தேவி மிகவும் கவனமாக பன்னிரண்டு நாள்கள் அந்த பயோ விரதத்தை மேற்கொண்டாள்.

புலன்களை அடக்கி, மனத்தை வாசுதேவனிடம் ஒன்றச் செய்து சிரத்தையுடன் விரதத்தைப் பூர்த்தி செய்தாள்.
அப்போது பகவான் பீதாம்பரம் உடுத்தி, சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் அவள் முன் தோன்றினார்.

திடீரென்று பகவான் எதிரில் தோன்றவும், அதிதி தேவி, ஒரு தடியைப் போல் அவர் முன் விழுந்து வணங்கினாள்.

பின் எழுந்து கண்ணீருடன் நாத்தழுதழுக்க, பகவானைத் துதிக்க விழைந்தாள். உடல் மயிர்க்கூச்செறிந்து நடுங்கியது. பேச இயலாமல் நின்றாள்.
பகவானை விழுங்கிவிடுவாள்‌ போலப்‌ பார்த்துக்கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து, அன்பு பொங்கி வர, மெதுவாகப் பேசலானாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, April 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 250

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
பரீக்ஷித்! தேவர்கள் சென்றதும், அசுரர்கள் ஸ்வர்கத்தைக் கைப்பற்றியபோது, தேவர்களின் தாயான அதிதி தேவி மிகவும் வருந்தினாள்.

வெகு காலமாக சமாதியிலிருந்த கச்யபர், ஒரு சமயம் சமாதி கலைந்து எழுந்து ஆசிரமத்தினுள் வந்தார். அப்போது ஆசிரமத்தில் மகிழ்ச்சி இல்லாததைக் கண்டார்.

அவரை வணங்கி உபசரித்த அதிதிதேவியின் முகம் வாடியிருப்பதைக் கண்டு அவளிடம் கேட்டார்.

தேவீ! ஏதேனும் கேடு நிகழ்ந்ததா? அறநெறிகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறாயா? ஏதாவது நேரக்கூடாதது நிகழ்ந்துவிட்டதா?

இல்லறத்தில் ஏதேனும் செல்வக் குறைபாடா? யாரேனும் விருந்தாளிகளை உபசரிக்காமல் விட்டுவிட்டாயா?

எந்த வீட்டில் வந்த விருந்தாளிக்கு தண்ணீர் மட்டுமாவது தந்து உபசரிக்கவில்லையோ, அது வீடல்ல. நரிகள் வாழும் பொந்து.

நான் வெளிச் சென்றிருப்பதனால் வருந்தி மூன்று அக்னிகளுக்கும் ஹோமம் செய்யாமல் விட்டுவிட்டாயா? எப்போதும் மலர்ந்திருக்கும் உன் முகம் வாடியிருக்கிறதே. என்ன காரணம்?
என்றார்.

அதிதி கூறலானாள்.
இங்கு எனக்கு எக்குறையும் இல்லை. நான் எப்போதும் தங்களையே தியானம்‌ செய்வதால் மூன்று அக்னிகளுக்கும், விருந்தாளிகளுக்கும், பணியாளர்கள், மற்றும் துறவிகளுக்கும் வேண்டியவற்றைக் கொடுக்கிறேன்.

தங்களைப் போன்ற ப்ரஜாபதிகள் எனக்கு அறநெறிகளை போதித்திருப்பதால், என் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

அசுரர்கள், தேவர்கள் அனைவரும் தங்கள் மக்கள். எனவே, நீங்கள் அனைவரிடமும் சமமான அன்பு கொண்டிருக்கிறீர்கள்.

நான் தங்களைத்தான் அண்டியிருக்கிறேன். என் மக்களான தேவர்களின் பகைவர்கள் அவர்களின் செல்வங்களையும் பதவிகளையும் பறித்துக்கொண்டார்கள். எங்களை ஸ்வர்கத்திலிருந்து துரத்திவிட்டார்கள். எனவே, நானும் என் மக்களும் துன்பக்கடலில் மூழ்கித் தவிக்கிறோம்.
தாங்கள்தான் என் மக்களைக் காக்க வேண்டும்.

கச்யபர் சிரித்தார்.
தேவீ! இவ்வுலகம் அன்புத்தளையால் பிணைக்கப்பட்டுள்ளது. ஐம்பூதங்களாலான இவ்வுடல் எங்கே? ஆன்மா எங்கே? யார் யாருக்குக் கணவன்? யாருக்கு யார் பிள்ளை? எல்லா உறவுமுறைகளுக்கும் அஞ்ஞானமே காரணம். அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் உறையும் பகவானை ஆராதனை செய். உன் துயர் நீங்கும். பகவானிடம் கொண்ட பக்தி எப்போதும் வீண்போகாது. இதுவே சிறந்த வழி. என்றார்.

அதிதி மீண்டும் கேட்டாள்.
லோகநாயகனான பகவான் என் விருப்பத்தை நிறைவேற்றித்தர நான் எவ்விதமாக உபாசனை செய்யவேண்டும்? நான் என் புதல்வர்களுடன் பெருந்துன்பத்தை அனுபவிக்கிறேன். எனவே எனக்கு வெகு விரைவில் பகவான் மனமகிழ்ந்து அருள்புரியும் வழிமுறையைக் கூறுங்கள்
என்றாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, April 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 249

பொற்றேரில் ஏறிக்கொண்ட பலி அக்னிபோல் ஒளிர்ந்தான். பெருவலி படைத்த தானவத்தலைவர்கள் பலர், தத்தம் படையுடன் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

அனைத்து சேனைகளையும் அணிவகுத்துக்கொண்டு இந்திர பட்டணமான அமராவதி நோக்கி கிளம்பினான்.

அமராவதி பட்டணத்தின் அழகு சொல்லவும் கூடுமோ..
தகதகவென்று ஜொலிக்கும் அப்பட்டணத்தினுள் தீய எண்ணத்துடன் எவராலும் நுழைய இயலாது.

பலி அமராவதியை நாற்புறமும் முற்றுகையிட்டான்.
பலியின் ஆயுதங்களைக் கண்டு பயந்துபோன இந்திரன் தேவர்கள் புடைசூழ குரு பகவானிடம் சென்று முறையிட்டான்.

பலியைக் கண்ட குரு பேசலானார்.
தேவேந்திரா, இவனது தேஜஸும், ஆயுதங்களும் வேதம் ஓதும் ப்ருகு வம்சத்து அந்தணர்களின் ஆசீர்வாதத்தினால் கிடைத்துள்ளன. அவர்கள் தங்கள் தவ வலிமையை அனைத்தையும் ஒன்று திரட்டி இவனுக்கு அளித்துள்ளனர்.

ஸர்வசக்தனான பகவான் ஒருவனைத் தவிர இவனை எதிர்க்க எவராலும் இயலாது. காலம் அனைத்தையும் கனிய வைக்கும்‌. இப்போது இவனுக்குப் பொற்காலமாகும். இவனது தீய காலத்தை எதிர் நோக்குங்கள். அதுவரை விண்ணுலகைத் துறந்து எங்காவது மறைந்து வாழுங்கள்.

இவன் என்றாவது ஒருநாள் அந்தணர்களை உதாசீனப்படுத்துவானாகில் அப்போது சுற்றம் சூழ அழிவான், என்றார்.

தங்கள் நன்மையில் பெரிதும் கருத்துள்ள குருவின் சொற்களுக்கிணங்கி தேவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் அமராவதியை விட்டுச் சென்றனர்.

தேவர்கள் சென்றதும் பலி அமராவதியைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டான்.

தங்கள் சீடனான பலியிடம் அதீத அன்பு கொண்ட ப்ருகு வம்சத்து அந்தணர்கள் பலிக்கு இந்திர பதவி நிலைக்க வேண்டி நூறு அசுவமேத யாகங்களைச் செய்வித்தனர்.

அவ்வேள்விகளின் மகிமையால், பலியின் புகழ் மூவுலகங்களிலும் பரவியது. உயர்ந்த செல்வத்தை அடைந்த பலி முழுமை பெற்றதாக எண்ணி மகிழ்ந்து அனுபவிக்கலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, April 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 248

பரீக்ஷித், ஸ்ரீ சுகமுனியிடம், மன்வந்தரங்களும், அவர்களின் அதிபதிகளும் யாரால் நியமிக்கப்படுகின்றன என்று கேட்டான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! மன்வந்தரங்கள், அவற்றின் அதிபதிகளான மனுக்கள் அனைவரும் ஸ்ரீமன் நாராயணனால் நியமிக்கப்படுகின்றனர்.

யக்ஞபுருஷன் பல அவதாரங்கள் ஏற்கிறார். அந்தர்யாமியாகவும் இருந்து தூண்டுகிறார். அதனாலேயே மனுக்கள் உலகத்தை முறையாக நடத்துகின்றனர்.

நான்கு யுகங்களின் முடிவில், வேதம் மறைந்தது போலாகும்போது, ஸப்தரிஷிகளும் தங்கள் தவ வலிமையால் வேதத்தை நினைவில் பெற்று வெளிக்கொணர்கின்றனர். அவற்றாலேயே அறநெறிகள் அறியப்படுகின்றன. மனுக்கள் அனைவரும் பகவானின் கட்டளைப்படி மிகவும் கவனமாக தர்மநெறிகளைக் காப்பாற்றுகிறார்கள். அவர்களது புதல்வர்களும் தந்தையின் வழியில் தர்மத்தைக் காக்கிறார்கள். பஞ்சமஹாயக்ஞங்கள் முதலிய கர்மாக்களால் ரிஷிகள், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் ஆகியோர் அவியுணவைப் பெறுகின்றனர்.

பகவான் அந்தந்த மன்வந்தரங்களில் ஸனகாதிகளின் உருவில் தத்வ ஞானத்தையும், யாக்ஞவல்க்யர் போன்றோரின் உருவில் கர்ம நெறிகளையும், தத்தாத்ரேயர் முதலிய யோகேஸ்வரர்களின் உருவமேற்று யோகமார்கத்தையும் உபதேசிக்கிறார்.

காலத்திற்கேற்றபடி, முக்குணங்களை ஏற்று பகவான் ப்ரஜாபதிகளின் உருவில் அவதரித்து படைக்கும் தொழிலைச் செய்கிறார். அரசனின் உருவில் திருடர்களை அடக்குகிறார். காலனின் உருக்கொண்டு அனைத்தையும் அழிக்கிறார்.

மாயை பற்பல திருமேனிகள் தாங்கி ஜீவனின் புத்தியை மோகத்தில் ஆழ்த்துகிறது. எனவே பகவானின் உண்மை ஸ்வரூபத்தை ஜீவனால் அறியமுடிவதில்லை.

இதுவரை, மஹாகல்பம், அவாந்தர கல்பம் ஆகியவற்றின் கால அளவைக் கூறினேன். ஒவ்வொரு அவாந்தர கல்பத்திற்கும் பதினான்கு மன்வந்தரங்கள் உண்டு.
என்றார்.

பரீக்ஷித் மீண்டும் கேட்டான்.
மஹரிஷியே! இவ்வளவு பெரிய ப்ரபஞ்சத்தின் நியாமகனாக இருக்கும் பகவான், ஏன் பலிச் சக்ரவர்த்தியிடம் ஏழைபோல் யாசித்தார்? தான் வேண்டியதனைத்தையும் பெற்றபின்னும் ஏன் பலியைக் கட்டிப்போட்டார்? பரிபூரணனான பகவானின் இச்செயல் புரியவில்லையே. இதை விளக்குங்கள். என்றான்.

ஸ்ரீ சுகர் அரசன் கூர்ந்து கவனித்துக் கதை கேட்பதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் கூறலானார்.

அரசனே! இந்திரன் தேவாசுர யுத்தத்தில் பலியைத் தோற்கடித்து அவனது செல்வத்தையும் உயிரையும் பறித்தான். அப்போது ஸஞ்ஜீவனி வித்யையால் சுக்ராசார்யார் அவனைப் பிழைக்கச் செய்தார். அதனால் பலி, தன் உடைமைகள் அனைத்தையும் குருவின் காலடியிலும், ப்ருகு வம்சத்து அந்தணர்களுக்கும் ஸமர்ப்பித்து, உடல், பொருள், உயிர் ஆகியவற்றைக் கொண்டு அவருக்குத் தொண்டு புரியலானான்.

இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அந்தணர்கள் பலிக்கு ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்து, விஸ்வஜித் என்னும் வேள்வியையும் செய்வித்தனர்.

பலி முறை வழுவாது வேள்வியைச் செய்து அவியுணவை இட்டு அக்னியை வழிபட்டதும், அவ்வேள்வித்தீயினின்று பொன்னாடைகளால் சூழப்பட்ட மிக அழகான தேரும், பச்சை நிறமுள்ள குதிரைகளும், சிங்கம் பொறித்த கொடியும் வெளிவந்தன.

மேலும் தங்கக்கம்பிகளால் சுற்றப்பட்ட தெய்வீக வில்லும், குறையாத அம்புகள் கொண்ட இரண்டு அம்பறாத்தூணிகளும் திவ்யமான கவசங்களும் வந்தன. பலியின் தாத்தாவான ப்ரஹலாதன் எப்போதும் வாடாத ஒரு மாலையையும், சுக்ராசார்யார் ஒரு வெண்சங்கையும் பலிக்குக் கொடுத்தனர்.

இவ்வாறு அந்தணர்களால் போர்த்தளவாடங்கள் அனைத்தையும் பெற்று அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ப்ரஹலாதனை வணங்கிவிட்டுக் கிளம்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, April 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 247 மன்வந்தரங்களின் கதை

பத்தாவது மன்வந்தரத்தில் ப்ரும்மஸாவர்ணி என்பவர் மனு ஆவார். அவர் அனைத்து நற்குணங்களும் கொண்டவர். பூரிசேஷணன் முதலியோர் அவரது புதல்வர்கள். ஹவிஷ்மான் ஆகியோர் ஸப்தரிஷிகள். சம்பு இந்திரனாவான். விஸ்வருஜனின் பிள்ளை விஷ்வக்ஸேனராக பகவான் அவதரிப்பார்.

பதினோராவது மனு தர்மஸாவர்ணி. அவருக்கு ஸத்யம், தர்மம் முதலான பத்து பிள்ளைகள். விஹங்கமான், காமகமான் ஆகியோர் அவரது புதல்வர்கள். வைத்ருதன் என்பவன் இந்திரன். அருணன் முதலானோர் ஸப்தரிஷிகள்.

ஆர்யகன் என்பவரது மனைவி வைத்ருதையிடம் தர்மஸேது என்ற பெயருடன் ஒரு அம்சத்துடன் பகவான் திரு அவதாரம் செய்து மூவுலகங்களையும் காப்பாற்றுவார்.

ருத்ரஸாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனு. தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் ஆகியோர் அவரது மகன்கள். அந்த மன்வந்தரத்தில் ருததாமா என்பவர் இந்திரன். ஹரிதர் ஆகியோர் தேவ கணங்கள். தபோமூர்த்தி, தபஸ்வி, ஆக்னீதரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

ஸத்யஸஹன் மனைவியான ஸூந்ருதாவிடம் ஸ்வதாமா என்ற பெயருடன் பிறந்து பன்னிரண்டாவது மன்வந்தரத்தைக் காப்பார்.

பதிமூன்றாவது மனு தேவஸாவர்ணி. சித்ரஸேனன், விசித்ரன் ஆகியோர் அவரது புதல்வர்கள்.
ஸுகர்மன், ஸுத்ராமன் என்பவர்கள் தேவர்கள். திவஸ்பதி, அவர்களது இந்திரன். தத்வதர்சி ஆகியோர் ஸப்தரிஷிகள்.

தேவஹோத்ரனின் மனைவி ப்ருஹதீயின் புதல்வராக யோகேஸ்வரன் என்னும் திருநாமத்துடன் பகவான் அவதரிப்பார்.

இந்திர ஸாவர்ணி பதினான்காவது மனு. உருபுத்தி, கம்பீரபுத்தி, ஆகியோர் இந்திர ஸாவர்ணியின் புதல்வர்கள்.
பவிரன், ஸாக்ஷுஷன் ஆகியோர் தேவகணங்கள். சுசி என்பவர் இந்திரன். அக்னி, பாஹு, சுசி, தத்தன், மாகதன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

பகவான் ப்ருஹத்பானு என்னும் பெயருடன் ஸத்ராணன், விதானா ஆகியோரின் மகனாக அவதரிப்பார். அப்போது வேதத்தில் கூறப்பட்டுள்ள கர்மகாண்டத்தை விளக்குவார்.

மன்னா, முக்காலங்களிலும் விளங்கும் பதினான்கு மன்வந்தரங்கள் பற்றிக் கூறினேன். இப்பதினான்கு மன்வந்தரங்கள் ப்ரும்மாவின் ஒரு பகலாகும்.
என்று கூறினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, April 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 246 மன்வந்தரங்களின் வர்ணனை

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்!
விஸ்வவான் எனப்படும் சூரியனின் புதல்வனான ச்ராத்ததேவன் ஏழாவது மனுவான வைவஸ்வதன் ஆவார். இப்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரம்தான்.

வைவஸ்வத மனுவிற்கு பத்து பிள்ளைகள்.
இக்ஷ்வாகு, நபகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூஷன், பிருஷத்ரன், வஸுமான் ஆகியோர்.

ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விஸ்வேதேவர்கள், மருத்கணங்கள் அஸ்வினீ தேவர்கள், ருபுக்கள் ஆகியோர் பிரதான தேவர்கள். புரந்தரன் இந்த மன்வந்தரத்தின் இந்திரன் ஆவான்.

கச்யபர், அத்ரி, வஸிஷ்டர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் ஆகியோர் ஸப்த ரிஷிகள்.
இந்த மன்வந்தரத்தில் ஆதித்யர்களின் கடைசித் தம்பியாக கச்யபரின் மனைவி அதிதி வயிற்றில் வாமனனாக அவதரித்து மூவுலகையும் அளக்கும் த்ரிவிக்ரமனாக நிற்கிறார் பகவான் ஸ்ரீ ஹரி.

அரசனே! இதுவரை சென்ற ஏழு மன்வந்தரங்கள் பற்றிக் கூறினேன்.
இனி வரப்போகும் ஏழு மன்வந்தரங்களையும் கூறுகிறேன் கேள்.

விஸ்வகர்மாவின் புதல்விகளான ஸந்த்யாவும், சாயாவும் விஸ்வவானின் இரு மனைவிகள். வடவா என்பவள் மூன்றாவது மனைவி என்றும், ஸந்த்யாவே தான் வடவா என்றும் கருத்துக்கள் உண்டு.

யமன், யமி, ச்ராத்ததேவன் மூவரும் ஸந்த்யாவின் குழந்தைர்கள். சாயாவின் குழந்தைகள் ஸாவர்ணீ, தபதி, சனி பகவான் ஆகியோர். தபதி என்பவள் ஸம்வரணன் என்பவனின் மனைவியானாள். ஸந்த்யா தேவி வடவா என்னும் பெண் குதிரை உருவம் எடுத்தபோது அஸ்வினி குமாரர்களைப் பெற்றாள்.

எட்டாவது மன்வந்தரத்தில் சாயாவின் புதல்வரான ஸாவர்ணி என்பவர் மனுவாகப் போகிறார். நிர்மோகன், விரஜங்கன் ஆகியோர் அவரது புதல்வர்களாவர்.

அந்த மன்வந்தரத்தில் ஸுதபஸ், விரஜன், அம்ருதப்ரபன் ஆகியோர் தேவகணங்கள். இந்திரனாக விரோசனன் மகனான பலி வரப்போகிறார்.

இந்த பலிச் சக்ரவர்த்தியிடத்தில்தான் ஏழாவது மன்வந்தரத்தில் மூன்றடி மண் கேட்டு வாமன பகவான் வந்தார். பலி அவருக்கு மூவுலகங்களையும் தானமாக அளித்துவிட்டார். எட்டாவது மன்வந்தரத்தில் பகவானின் அருளால் பலி இந்திரப்பதவி பெற்று அவற்றை அனுபவித்து , பின்னர் அனைத்தையும் துறந்து மோக்ஷமடையப்போகிறான்.

பகவானால் ஆட்கொள்ளப்பட்ட பலி இப்போது தேவலோகத்தை விடவும் சிறந்த உலகத்தைப் பெற்று மகிழ்ச்சியோடு விளங்குகிறான்.

காலவர், தீப்திமான், பரசுராமர், அச்வத்தாமா, க்ருபாசார்யார், ரிஷ்யச்ருங்கர், வியாஸர் ஆகியோர் எட்டாவது மன்வந்தரத்தின் ஸப்தரிஷிகள் ஆகப்போகிறார்கள். இவர்கள் தற்போது தத்தம் ஆசிரமத்தில் யோகத்தில் உள்ளனர்.

ஸ்ரீமன் நாராயணன் தேவகுஹ்யனின் மனைவியான ஸரஸ்வதியின் வயிற்றில் ஸார்வபௌமன் என்னும் பெயருடன் அவதாரம் செய்யபோகிறார்.
புரந்தரன் என்னும் இந்திரனிடமிருந்து இந்திரபட்டத்தை அபகரித்து பலிக்குத் தரப்போகிறார்.

வருணனின் புதல்வனான தக்ஷஸாவர்ணி ஒன்பதாவது மனு ஆவார். பூதகேது, தீப்தகேது ஆகியோர் அவரது புதல்வர்கள்.

பாரா, மரீசிகர்பன் முதலியோர் தேவகணங்கள். அத்புதன் என்பவன் இந்திரன். த்யுதிமான் முதலானோர் ஸப்தரிஷிகளாகப் போகிறார்கள்.

ஆயுஷ்மானின் மனைவி அம்புதாரா. அவள் வயிற்றில் பகவான் ஒரு அம்சத்துடன் ரிஷபதேவர் என்ற பெயருடன் அவதரிக்கப்போகிறார். அவரால் அத்புதன் எனப்படும் இந்திரனுக்கு தேவலோகம் அளிக்கப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, April 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 245

பகவான் ஸ்ரீ ஹரி மோஹினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பரமேஸ்வரன் அத்திருக்கோலத்தைக் காண விரும்பி, பார்வதியுடன், பூத கணங்கள் சூழ, பகவான் ஹரியை நோக்கி வந்தார்.
அவரை உரிய மரியாதையுடன் வரவேற்று, உபசரித்து, ஆசனமளித்து அமர்த்தினார்.

மஹாதேவன் பேசலானார்.
நாராயணா! பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறீர். பிரபஞ்சத்தை அடக்கி ஆள்பவர் தாங்கள். பிரபஞ்சமாகவும் நீரே இருக்கிறீர். எல்லாப்பொருள்களுக்கும் ஆன்மாவாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறீர்.

பரமார்த்திக ஸத்ய சின்மய வடிவமாய் விளங்குகிறீர். அமுதமேனியர். முக்குணங்களற்றவர். ஆனந்த வடிவினர். தங்களைத் தவிர எதுவுமே இல்லை. அனைத்திலும் விடுபட்டுத் தனித்திருக்கிறீர். அனைத்து ஜீவராசிகளின் நல்வினை தீவினைக்கேற்ப பயனளிக்கிறீர். எவ்வித விருப்பு வெறுப்பும் அற்றவர். உபநிடதங்கள் விளக்கும் பரப்ரும்மம் தாங்களே.

தங்கம் பலப்பல ஆபரணங்களாகவும், கட்டித் தங்கமாகவும் உள்ளது. அதுபோலவே தாங்களும் காரிய ரூபமான உலகமாகவும், காரணமாகவும் விளங்குகிறீர்.

இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல், மற்றும் ஸகல ஜீவராசிகளின் செயல்கள், ஸம்ஸார பந்தம், முக்தி ஆகியவற்றை அறிவீர்.

திருவிளையாடல்கள் புரிய எண்ணிய தாங்கள், ஸத்வ குணத்தை ஏற்று, பல அவதாரங்கள் புரிந்தீர்கள். அவை அனைத்தையும் கண்டிருக்கிறேன். இப்போது தாங்கள் ஏற்ற மோஹினி வேடத்தைக் காணவில்லை. மயக்கும் அத்திருக்கோலத்தைக் காணும் ஆவலோடு நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.

பகவான் மிகவும் ஆழ்ந்த பொருள் பொதிந்த புன்னகையுடன் சொன்னார்.

பரமேஸ்வரா! தேவர்களுக்கு அமுதம் கிடைக்க, ஏதோ செய்து அசுரர்களை மயக்கமுறச் செய்யவேண்டும். அதற்காக மாயையே உருவான மோஹினி உருவம் எடுத்தேன். காமத்திற்காட்படவர்களே அவ்வுருவைக் காண விழைவர். தாங்கள் கேட்பதால் காட்டுகிறேன்
என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

பார்வதியும், சிவனும், மற்ற பூதங்களும் நாற்புறங்களிலும் கண்களைச் சுழற்றித் தேடலாயினர்.
அப்போது சிவந்த தளிர்களும், பல வண்ண மலர்களும் நிறைந்த ஒரு மலர் வனத்தில் இடுப்பில் அழகிய பட்டாடையும், ஒட்டியாணமும் அணிந்த அழகிய பெண்ணொருத்தி பந்து விளையாடிக்கொண்டிருக்கக் கண்டனர்.

காதுகளில் மகரகுண்டலமும், முகத்தில் சுருண்டு விழும் முடியழகும், அவளது அவயவங்களின் அழகும் அகில உலகங்களையும் மயக்குபவை. அவள் பரமேஸ்வரனைத் தன் ஓரவிழியால் பார்க்க, அவர் பார்வதி மற்றும் பூதகணங்களை மறந்து அவளைத் தொடர்ந்து ஓடலானார். அவளைத் தொடர்ந்து வெகுதூரம் ஓட, அவள் பிடிகொடுக்காமல் வழுக்கி ஓடினாள். ஒருவழியாக அவளைத் தாவிப் பிடித்ததும், பரமேஸ்வரன் தன் நிலைக்குத் திரும்பினார்.
ஆன்மாவாக விளங்கும் பகவானின் மகிமையை அறிந்த பரமேஸ்வரன், பகவானின் சக்தியை மீற எவரால் முடியும் என்று எண்ணினார்.

அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த பகவான்,
தேவதேவனே! நீங்கள் என் பெண்ணுருவைக் கண்டு மயங்கியபோதும், நிலை கலங்கவில்லையே. என் மாயையிலிருந்து தப்ப உங்களைத் தவிர வேறு எவரால் முடியும்? என்று பரமேஸ்வரனைக் கொண்டாடினார்.

பின்னர், பரமேஸ்வரன், பார்வதியிடம்
பகவான் விஷ்ணுவின் மாயையைக் கண்டாயல்லவா? அனைத்து வித்யைகளுக்கும் தலைவனான நானே மயங்கினேன் என்றால் சாதாரண ஜீவராசிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

நான் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஸமாதியிலிருந்து விழித்தபோது, யாரை தியானம் செய்கிறீர்கள் என்று கேட்டாயல்லவா? அந்த உபாசனா மூர்த்தி இந்த பரமபுஷர்தான். இவரே ஆதிபுருஷன்.

காலத்திற்கப்பாற்பட்டவர். இவரது உண்மை உருவம் எல்லையற்றது. மனம், மற்றும் சொல்லுக்கெட்டாதது. என்றார்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
பரீக்ஷித்! மந்தர மலையை முதுகில் தாங்கிய ஸ்ரீ மன் நாராயணனின் இந்த திருவிளையாடல்களைக் கேட்பவர்க்கு பகவான் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியருள்வான். அந்த இறைவனின் சரண கமலங்களை வணங்குகிறேன். என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, April 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 244

அமுதம் தங்களுக்குக் கிடைக்காததால் கடுஞ்சினம் கொண்ட அசுரர்கள் போரிடலாயினர்.

அமுதம் உண்ட பலத்தாலும், பகானின் மேலுள்ள நம்பிக்கையாலும், தேவர்களும் சமருக்குத் தயாராகினர்.

திருப்பாற்கடலின் கரையில் அசுரர்களுக்கும்‌ தேவர்களுக்கும் இடையே பயங்கரமான போர் துவங்கியது. தேவாசுரப் போர் என்று பெயர் பெற்றது.

போர்முனையில், தேர்ப்படைகள் தேர்ப் படைகளோடும், காலாட்படைகள் காலாட்படைகளோடும் , குதிரை மற்றும் யானைப்படைகள் தகுந்தவற்றோடும் மோதின.

சிலர் ஒட்டகம், கோவேறு கழுதை, எருமை, மான், கரடி, புலி, சிங்கம், கழுகு, கோட்டான், கொக்கு, பிணந்தின்னிக் கழுகு, திமிங்கிலம், சரபம், காட்டெருமை, எருது, நரிகள், ஆடுகள் ஆகியவற்றின் மீதெல்லாம் ஏறிக்கொண்டு போரிட்டனர்.

பலவண்ணக்கொடிகள், ரத்தினங்கள் இழைத்த தேர்கள், தூய்மையான வெண்குடைகள், பறக்கும் உத்தரீயங்கள், தலைப்பாகைகள், ஒளி சிந்தும் கவசங்கள் ஆகியவற்றோடு விளங்கியது தேவர் படை.
பலி வைகாயஸம் என்னும் மிகச்சிறந்த விமானத்தின் மீதேறி போருக்கு வந்தான். அவ்விமானத்தின் தரம் சொல்லவொண்ணாதது. மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பல தானவர்கள் தத்தம் வாகனங்களில் பலியைச் சூழ்ந்து வந்தனர். இவ்வசுரர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்ததில் சிரமத்தை அடைந்தவர்கள். அமுதம் பெறாதவர்கள்.

அசுரர் தலைவன் பலி பல விதமான சாஹஸங்கள் செய்து கடும்போர் செய்தான். அசுரர்கள் மிகவும் பயங்கரமாகச் சண்டையிட்டபோதும், தேவர்கள் அதற்கு ஈடு கொடுத்தனர்.
தேவேந்திரன் கடைசியில் தன் வஜ்ராயுதத்தால் பலியின் மீது தாக்க, பலி தன் விமானத்தோடு கீழே விழுந்தான்.

பலியின் நண்பனான ஜம்பாஸுரன் ஓடிவந்து ஐராவதத்தைத் தாக்க, அது வலி தாங்காமல் விழுந்தது.
இந்திரனின் தேரோட்டி மாதலி தேர் கொண்டுவர இந்திரன் தேரிலேறிப் போரிட்டான். பின்னர் இந்திரன் ஜம்பாஸுரனை வஜ்ராயுதத்தால் கொன்றான்.

பாகன் என்னும் அசுரன் மழைபோல் அம்பைப் பொழிந்து மாதலியைத் துன்புறுத்தி தேரைச் சிதைத்தான்.
அசுரர்கள் சூழ்ந்துகொண்டு இந்திரனை மறைத்தனர்.இந்திரனைக் காணாமல் குழப்பமடைந்த தேவர் சேனையை சின்னாபின்னமாக்கினர் அசுரர்கள்.

சிறிது நேரம் கழித்து அசுர சேனையின் நடுவிலிருந்து ஆதவன் போல் ஒளியுடன் வெளிப்பட்டான் இந்திரன்.

தன் சேனை அழிக்கப்பட்டது கண்டு வஜ்ராயுதம் ஏந்தினான். பலன், பாகன் முதலிய அசுரர்களைக் கொன்றான்.
அதுகண்டு அசுரர் சேனை பயந்தது. நமுசி என்னும் அசுரன் பாய்ந்து வர, அவனையும் வஜ்ராயுதத்தால் அடித்தான் இந்திரன்.

ஆனால், அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. பல அசுரர்களை வென்ற வஜ்ராயுதம் நமுசியிடம் ஏன் வேலை செய்யவில்லை என்று யோசித்தனர் தேவர்களும் இந்திரனும்.

‌இவ்வாறு வருந்தி நிற்கையில்,
நமுசியை காய்ந்த பொருள்களாலோ, ஈரமான பொருள்களாலோ கொல்ல இயலாது
என்ற அசரீரி கேட்டது.

அத்தகைய பொருள் எது என்று ஆலோசித்து கடல் நுரை என்பதைக் கண்டுகொண்டான் இந்திரன்.
பின்னர் கடல் நுரையால் நமுசியை அடிக்க, அவன் மாண்டான்.

அசுரர்கள் அடியோடு அழிக்கப்படுவதும், போர் முடிவின்றி நடப்பதும் கண்டு கவலை கொண்ட ப்ரும்மதேவர் நாரதரை இந்திரனிடம் அனுப்பினார்.

நாரதர், போதும் சண்டையை நிறுத்துங்கள். இனி அசுரர் பக்கம் எதிர்க்க தலைவர் எவருமில்லை. அப்பாவியான அசுரர்களைக் கொல்லவேண்டாம் என்று கூறினார்.
அவரது சொல் கேட்டு போர் நிறுத்தப்பட்டது.

மிஞ்சியிருந்த அசுரர்கள், நாரதரின் அனுமதி பெற்று, அடிபட்டு விழுந்துகிடந்த தங்கள் அரசனான பலியைத் தூக்கிக்கொண்டு அஸ்தமன மலைக்குச் சென்றனர்.

அந்தப் போர்க்களத்தில் அவயவங்கள் சேதமாகாமல் இருந்தவர் களையும், கழுத்து அறுபடாமல் இருந்தவர் களையும், ம்ருத ஸஞ்சீவனி கொண்டு சுக்ராசார்யார் பிழைக்கச் செய்தார்.

குருவான சுக்ராசார்யாரின் கரம் பட்டதுமே, எழுந்து உட்கார்ந்தான் பலி. வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை நன்குணர்ந்தவன் பலி. எனவே, தோல்வியால் மனம் வருந்தவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, April 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 243 கடல்‌ கடைந்த கடல்வண்ணன் - 7

மோஹினியின் அழகில் மயங்கி அவள் எதைச் சொன்னாலும் தலையாட்டினர் அசுரர்கள்.

அதன் பின் அவர்கள் அனைவரும் மறுநாள் நீராடி உபவாசம் இருந்து பசுக்களுக்கும் பிராணிகளுக்கும் உணவும், அந்தணர்களுக்கு தானமும் அளித்து அவர்களிடம் மங்கல வாழ்த்து பெற்றனர். பின்னர் நன்கு அலங்கரித்துக் கொண்டு கிழக்கு நுனியாகப் போடப்பட்ட தர்பாஸங்களில் அமர்ந்தனர்.

அவ்விடத்தில் அவ்வாறே தேவர்களும் வந்து அமர, மோஹினி மயக்கத்தால் அசுரர்கள் அமுதம் கிடைத்தால் போதுமென்று வாளாவிருந்தனர்.

தங்கத் தேரொன்று அசைந்து வருவதுபோல் கையில் அமுத கலசத்துடன் அசைந்து அசைந்து மோஹினி வந்தாள்.

இயல்பிலேயே கொடூரத்தன்மை நிரம்பிய அசுரர்களுக்கு அமுதம்‌கொடுத்தால், விபரீதம் நிகழும் என்பதால் அவள் அசுரர்கள் பக்கம் சிரித்துக்கொண்டு தேவர்கள் பக்கம் அமுதத்தை பரிமாறினாள்.

மேலும் அவர்களிடம் அமுதின் தெளிந்த பகுதியைத்தான் தேவர்களுக்குக் கொடுக்கிறேன். அடியிலிருக்கும் விழுதான பகுதி உங்களுக்குத்தான் என்று கூறியவாறே தேவர்களுக்குப் பரிமாறினாள்.

மோஹினியிடம் கொண்ட மயக்கம், தங்கள் ஒப்பந்தம் ஆகியவற்றாலும், மேலும் அவளோடு வழக்காடுவதில் விருப்பமில்லாததாலும் அசுரர்கள் பேசாமலிருந்தனர்.

இவ்வாறு தேவர்களுக்குப் பரிமாறுகையில், ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சுதாரித்துக்கொண்டான்.

அவன் தேவனைப்போல் உருமாறி தேவர்கள் பந்தியில் சூரிய சந்திரர்களுக்கிடையில் அமர்ந்து கொண்டான்.

மோஹினி வரிசையாகப் பரிமாறிக்கொண்டு வந்தபோது ஸ்வர்பானுவும் இடையில் கையை நீட்டி அமுதத்தை வாங்கி உண்டுவிட்டான்.

சூரிய சந்திரர்கள் அவன் அசுரன் என்று காட்டிக்கொடுக்க, மோஹினியான பகவான் தன் சக்கரப்படையால் அவன் தலையை வெட்டினார்.

அமுதம் பெற்றுவிட்டதால் மரணம் ஏற்படவில்லை.
எனவே அவனை ராகு கேது என்னும் கிரஹங்களாக்கினார்.

சூரிய சந்திரர்கள் காட்டிக்கொடுத்ததால் ராகு அவர்கள் மீது பகை கொண்டு அவர்களைப் பீடிக்கிறான். அதுவே கிரஹணம் எனப்படுகிறது.

பரீக்ஷித்! தேவர்களும் அசுரர்களும் ஒரே இடத்தில் ஒரே வஸ்துவைப் பெற முயற்சி செய்தனர். ஆனால், பலனை நுகர்வதில் எவ்வளவு வேறுபாடு பார்த்தாயா?

தேவ்ரகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், பகவான் ஒருவனையே நம்பினர். அசுரர்களோ, தங்கள் உடல் வலிமையை நம்பினர்.

எந்த ஒரு செயலுக்கும் பயனளிப்பது பகவான் என்று அவன் மீது நம்பிக்கை வைத்துச் செய்யப்படும் செயல் வெற்றியடைகிறது. அதாவது பகவதர்ப்பணமாகச் செய்யும் செயல் பலனளிக்கிறது.

நான் எனது என்ற அபிமானத்துடன் செய்யும் செயலுக்கான வெற்றி உறுதியில்லை. உடலின் மீதும், சுற்றத்தின் மீதும் பற்றுக்கொண்டு செய்யப்படும் எந்தச் செயலும் வெறும் சிரமங்களே.

மோஹினி வேடத்தைக் களைந்த பகவான் கருடன் மீதேறிச் சென்று மறைந்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டது கண்டு பெருஞ்சினம் கொண்டனர் அசுரர்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, April 9, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 242 கடல் கடைந்த கடல்வண்ணன் - 6

திருமகள் திருமாலின் கழுத்தில் மாலையிட்டதும், சங்கு, துரியம், ம்ருதங்கம் ஆகிய வாத்யங்கள்‌முழங்கின. அபஸரஸ்களும், கந்தர்வர்களும் ஆடிப்பாடினர்.

இதன் பின் சிவந்த கண்களை உடைய வாருணி தேவி தோன்றினாள்.
பகவானின் அனுமதியுடன் அவளை தேவர்கள் பெற்றனர்.

தொடர்ந்து பாற்கடலைக் கடையத் துவங்கினர்.
அப்போது மிக அழகான ஒரு ஆண்மகன் தோன்றினார்.

உருண்டு திரண்டு முழந்தாள் வரை நீண்ட திருக்கரங்கள், மூன்று மடிப்புகள் கொண்ட கழுத்து, செவ்வரியோடிய கண்கள், நீலமேக வண்ணம், இளம் வயதினர். கழுத்தில் மாலை, அரையில் மஞ்சள் பட்டாடை, மணிமயமான மகர குண்டலங்கள், விசாலமான மார்பு, ஒப்பற்ற அழகுடன் வளைகள் மின்னும் கரங்களில் அமுத கலசத்தை ஏந்தி வந்தார்.

அவர் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாவார்.
அவரே ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை சாஸ்திரத்தை அளித்த தன்வந்திரி பகவான் ஆவார்.


வேள்விகளில் ஹவிர் பாகத்தைப் பெறுபவரும் இவரே.

அவரைக் கண்டதும் அசுரர்கள் ஓடிச்சென்று அமுத கலசத்தைப் பறித்துச் சென்றனர்.

அதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய தேவர்கள், பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைந்தனர்.

வருந்தும் தேவர்களைக் கண்ட பகவான் மனமிரங்கி அவர்களைக் காப்பதாக உறுதியளித்தார்.

அமுததில் ஆசைகொண்ட அசுரரகள், கலசத்தைக் கையில் வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று சண்டையிட்டுக்‌ கொண்டிருந்தனர்.

அவர்களது உட்பூசல் அதிகமாகிக் கொண்டிருந்தபோது, பகவான் அங்கு வர்ணனைக்கெட்டாத அழகுடன் ஒரு பெண்ணாக உருவம் எடுத்து வந்தார்.

நீலோத்பல புஷ்பம் போன்ற மேனி, அழகான அவயவங்கள், காதணிகள் மின்னும் கன்னங்கள், எடுப்பான மூக்கு, பார்க்கத் தெவிட்டாத திருமுகம், கலங்கிய கண்கள், அழகிய கழுத்து, கூந்தலில் மல்லிகை மாலை, ஒட்டியாணம் மின்ன, சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிரம்பிய புன்முறுவல் கொண்டு மயக்கும் மோஹினி ரூபம் எடுத்து அசுரர்களில் மனத்தில் காமத்தீயை வளர்த்தார்.

அவளைக் கண்டதும், மயங்கிய அசுரர்கள், அமுதத்தை மறந்தனர். அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டனர்.
அவளைப் பலவாறு வர்ணித்தவர்கள், பெண்ணே, நாங்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த அமுதத்தைப் பங்கிடுவதில் எங்களுக்குள் பகையும் போட்டியும் ஏற்படுகிறது. எனவே ஓரவஞ்சனையின்றி இவ்வமுதத்தை நீ எங்கள் அனைவர்க்கும் பிரித்து வழங்கவேண்டும் என்றனர்.

மோஹினி கூறினாள்.
கச்யப முனிவரின் புதல்வரான நீங்கள் ஒரு பெண்ணிடம் நம்பிக்கை வைக்கலாமா? புதிதாய்க் கிடைக்கும் நட்பு நிலைக்குமா? நியாய பாரத்தை ஏன் என்னிடம்‌ கொடுக்கிறீர்கள்? என்றாள்.

இவ்வாறு மோஹினி சொன்னதும், அசுரர்களுக்கு அவள் மேல் இருந்த நம்பிக்கை அதிகமாயிற்று.
உரக்கச் சிரித்த வண்ணம் அவளிடம் அமுத கலசத்தைக் கொடுத்தனர்.

அதை வாங்கிக்கொண்டவள், நான் செய்வது எதுவாயினும் நீங்கள் ஏற்கவேண்டும். நியாயம் அநியாயம் என்று வாதிடக்கூடாது. இதற்கு ஒப்புக்கொண்டால், அமுதத்தைப் பகிர்ந்தளிக்கிறேன் என்றாள்.
அவள் மேலிருந்த மயக்கத்தினால் அசுரர்கள் ஒப்புக்கொண்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, April 8, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 241 கடல் கடைந்த கடல்வண்ணன் - 5

பாற்கடலிலிருந்து ஆலஹால விஷத்திற்குப் பின் ஒவ்வொரு பொருளாய் வெளிவந்தன. காமதேனு, உச்சைஸ்ரவஸ், ஐராவதம், மரகதமணி, பாரிஜாதமரம், அப்ஸரப் பெண்டிர் ஆகியவைகளைத் தொடர்ந்து, அழகே திரண்டு வந்தாற்போல், மஹாலக்ஷ்மி தாயார் வந்தாள்.

அவளது மின்னல்போல் செம்பொன் நிறத்தில் ஒளிரும் திருமேனி, இளமை ஆகியவற்றின் சிறப்பால் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருமே அவளைப் பெற விரும்பினர்.

இந்திரனும், தேவர்களும் தாயாருக்கு, சிறந்த சிம்மாசனத்தையும், நதிகள் தூய்மையான நீரையும் கொண்டு வந்தன.

பூமிப்பிராட்டி, தாயாரின் அபிஷேகத்திற்காக மூலிகைகளைக் கொடுத்தாள்.

பசுக்கள், பஞ்சகவ்யத்தையும், வசந்தருது நறுமணப்பூக்களையும் கொண்டு வந்தன.

இந்தப் பொருள்களைக் கொண்டு மஹாலக்ஷ்மிக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது.

மேகங்கள் உருவம் கொண்டு வந்து மங்கல வாத்யங்களை இசைத்தன.
பின்னர், திருமகள் சிங்காசனத்தில் அமர, அந்தணர்கள் வேதஸூக்தங்களை ஓதி, எண்டிசை யானைகளும் சேர்ந்து பட்டாபிஷேகம் செய்வித்தன.

கடலரசன் இரண்டு மஞ்சள் பட்டாடைகளையும், வருணன் வைஜயந்தி மாலையையும் அளித்தனர்.

விஸ்வகர்மா பலவித ஆடை ஆபரணங்களைக்‌ கொடுக்க, ஸரஸ்வதி நல்முத்து மாலைகளைக் கொடுத்தாள்.

ப்ரும்மா தாமரை மலர் கொடுத்தார். நாகங்கள் இரண்டு குண்டலங்களை அளித்தன.

அந்தணப் பெருமக்கள் வாழ்த்து கூற, தன் திருக்கரங்களில் வைஜயந்தி மாலையை ஏந்தி, அனைத்து குணநலன்களும் பொருந்திய புருஷோத்தமனைத் தேடினாள் மஹாலக்ஷ்மி.

சிறுத்த இடை, தளிரன்ன மேனி, சிலம்புகள் ஒலிக்க, தங்கக்கொடி அசைவதுபோல் இங்குமங்கும் நடந்து, குணக்குன்றாக தனக்கேற்ற ஒரு ஆடவனைத் தேடினாள்.

தேவர்கள், சித்த சாரணர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் ஆகிய எவரும் அவளுக்கேற்ற வண்ணம் இல்லை.

இவருக்குத் தவம் இருக்கிறது. ஆனால், கோபக்காரராய் இருக்கிறார் என்று துர்வாசரையும்,

இவரிடம் ஞானம் உள்ளது. ஆனால், பற்றும் உளதே. தேவகுரு, அசுரகுரு இருவரையும்,

மஹானாக இருந்தாலும் பெண்ணாசையை விடவில்லையே என்று ப்ரும்மனையும், சந்திரனையும்,

செல்வந்தனாய் இருப்பினும், பிறரை அண்டி வாழ்கிறார் என்று இந்திரனையும்,

தர்மம், அனுஷ்டாங்கள் இருப்பினும் ஜீவன்களிடத்து அன்பில்லை என்று பரசுராமரையும்,

கொடை வள்ளலாய் இருப்பினும், முக்தியில் விருப்பமற்று இருப்பதாக, சிபியையும்,

பராக்ரமம் இருப்பினும், அது காலத்திற்குட்பட்டதென்று கார்த்தவீர்யார்ஜுனனையும்,

நீண்ட ஆயுள் இருப்பினும் புலனடக்கம் மிகுந்தவர், எனவே என்னைப் பிரியமானவளாக ஏற்கமாட்டார் என்று மார்க்கண்டேயரையும்,

நிறைய நலன்கள் இருப்பினும் அழியத்தக்கவர் என்று ஹிரண்யகசிபுவையும்,

எல்லாம் நிறைந்திருந்தும் சாம்பல் பூசியிருக்கிறார், சுடுகாட்டில் வசிக்கிறாரே என்று பரமேஸ்வரனையும் தள்ளினாள்.

எல்லா குணங்களும் நிரம்பியும், என்னை விரும்பவில்லையே என்று ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்து வருந்தினாள்.

பின்னர் சற்று நேரம் யோசித்து, ஸ்ரீமன் நாராயணனையே மணாளனாகத் தேர்ந்தெடுத்தாள்.

ஏனெனில் அவரிடம்தான் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பியுள்ளன. அஷ்டமா சித்திகளும் அவருக்கு சேவை செய்த போதிலும், அவர் எதிலும் பற்றின்றி ஆத்மாராமராய் இருக்கிறார்.
அவர் எதையும் தள்ளவும் இல்லை. அதே சமயம் அவற்றில் ரமிக்கவும் இல்லை. என்று தெளிந்தாள்.

இவருக்கு சேவை செய்வது என் பெரும் பாக்யம் என்று எண்ணிக்கொண்டு கைகளில் இருந்த வண்டுகள் சூழ்ந்த வைஜயந்தி மாலையை திருமாலின்  அணிவித்துவிட்டு, வெட்கதுடன் கூடிய புன்சிரிப்புடன் அவர் எதிரில் நின்றாள்.

தானே தேடி வந்து மாலையிட்ட மங்கையை, அகில உலகத்தின் தாயான திருமகளை ஏற்று, அவளுக்கு தன் மார்புத் தடத்தில் என்றும் வசிக்குமாறு இடமளித்தார் எம்பெருமான்.

ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி இறைவனின் திருமார்பில் அமர்ந்து தன் கருணை ததும்பும் கடைக்கண்களால், மூவுலகங்களையும் கடாக்ஷித்து செழிப்புறச் செய்கிறாள்.

ஸ்ரீ ஸ்வாமிஜியின் மதுரகீதம்
ராகம்: மத்யமாவதி தாளம்: ரூபகம்

01. வருவாய் வருவாய் மஹாலக்ஷ்மி தாயே
வந்து எங்கள் மனையில் நிலையாய் நிலைத்திடுவாயே நீயே

02. முல்லை மல்லி தலையில் தரித்து
குவலய மலரை கைகளில் தரித்து

03. மூக்குத்தி ராக்கொடி ஒட்டியாணம் நெத்திசுட்டி
காசு முத்து மாலைகள் பதக்கமும் தரித்து

04. நெற்றியில் திலகமும் கண்களில் கருமையும்
காதினில் தோடும் கைகளில் வளையல் மோதிரமும் சூடி

05. தாமரைக் கண்களும் தாமரை மாலைகளும்
தாமரைக் கைகள் தாமரைத் திருவடிகள் கொண்ட தாயே

06. குங்கும மஞ்சள் குழம்புகள் பூசிய கால்களில்
பாதஸரம் கொலுசு சலங்கைகள் தரித்து

07. குதிரை பசுக்கள் முன்னே நடந்து வர
ஆனை பிளிறி உன் வரவினில் மகிழ

08. குறைவில்லாத செல்வமும் நிறைவான வாழ்கையும்
ஏற்றமிக பெரு வாழ்வும் வெற்றிகரம் பல நல்கிட

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, April 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 240 கடல் கடைந்த கடல்வண்ணன் - 4

தேவர்களும் அசுரர்களும் பகவானின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து முதலில் வெளிப்பட்டது ஹாலஹாலம் என்னும் கொடிய விஷம்.

வெளியில் வந்த விஷத்தின் நெடியும், புகையும் எங்கும் பரவியது. அனைவருக்கும் மயக்கம் வந்தது. கஷ்டம் பொறுக்க இயலாமல், அனைவரும் பரமேஸ்வரனை சரணடைந்தனர்.

ஸ்ரீ ஹரிக்கு மிகவும் ப்ரியமானவரும், எப்போதும் நாமம் சொல்பவரும், ஞானியும், பற்றற்றவருமான பகவான் பரமேஸ்வரனை அவர்கள் பலவாறு துதித்தனர்.

மற்றவர் துன்பத்தைச் சற்றும் பொறுக்காத பரமேஸ்வரன், அந்த ஹாலஹால விஷத்தை சற்றும் தாமதியாமல் அருந்திவிட்டார்.

ஸதி தேவி விஷம் அவருக்குத் தீமை செய்யாவண்ணம் அதைக் கழுத்தில் நிறுத்தினார். அவரது கழுத்து நீல நிறமாகிவிட்டது.
அதுமுதல் நீலகண்டன் என்னும் திருநாமம் அவருக்கு உரித்தாயிற்று.

பிறருக்கு உதவி செய்யும் சான்றோர்களுக்கும் துன்பங்கள் வரும். ஆனால், அதை அவர்கள் சற்றும் மதிக்க மாட்டார்கள். அதையும் பகவானின் பூஜை என்றே ஏற்பர்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் நலத்தையே அருளும் பரமேஸ்வரனின் செயலை அனைவரும் கொண்டாடினர்.
அவர் அருந்தும்போது சிந்திய சில விஷத்துளிகளை பாம்புகளும், விஷச் செடி கொடிகளும், மற்ற விஷ ஜந்துக்களும் பெற்றுக்கொண்டன.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் கடலைக் கடையத் துவங்கினர்.
அடுத்தாக காமதேனு வெளிவந்தாள்.

அக்னிஹோத்ரம் முதலிய கர்மாக்களுக்கு வேண்டிய பாலைத் தருவதால், அவளை ப்ரும்மவித்துக்களான ரிஷிகள் பெற்றுக்கொண்டனர்.

பிறகு உச்சைஸ்ரவஸ் என்ற வெண்மை நிறக்குதிரை வந்தது. பலிச் சக்ரவர்த்தி அதை எடுத்துக் கொண்டான்.

பிறகு வெள்ளிமலை போன்று ஐராவதம் தோன்றியது. அதை இந்திரன் ஏற்றான்.

அடுத்து வந்த கௌஸ்துப மணியை பகவான் ஏற்றார்.

அதன் பின் விண்ணுலகையே ஒளிரச் செய்யும் ப்ரகாசத்துடன் கற்பக மரம் வந்தது. அதையும் இந்திரன் ஏற்றான்.

அடுத்ததாக பட்டாடையும், பல ஆபரணங்களும் அணிந்த அப்ஸரப் பெண்டிர் வந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.