Sunday, June 13, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 648

பகவான் நாராயணர் மார்க்கண்டேயரைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.


ரிஷிகளுள் மேன்மையானவரே! என்னிடம் கொண்ட பக்தியாலும், புலனடக்கம், தவம், மற்றும் வேதம் ஓதுதல் ஆகியவற்றாலும் தாங்கள் மேலான சித்திகளைப் பெற்றுவிட்டீர்கள்.


தங்களது ப்ரும்மச்சரியம் மிகவும் போற்றத்தக்கது. வேண்டும் வரம் யாது? கேளுங்கள். என்றார்

மிகவும் நெகிழ்ந்த மார்க்கண்டேயர். தங்கள் தரிசனமே மாபெரும் பேறு. அதற்கு மேலும் என்ன தேவை இருக்கிறது?

தேவாதிதேவரும் காணற்கரிய தாங்கள் என் கண்களுக்குக் காட்சிப் பொருளானீர்.

எந்த மாயையில் இந்த பிரபஞ்சமும் அதன் தலைவரான ப்ரும்மாவும் மயங்குகின்றனரோ, அதைக் காண விரும்புகிறேன். என்றார்.

வித்யாசமான இந்த ஆசையைக் கேட்ட பகவான் புன்னகைத்தார்‌ அவ்வாறே ஆகட்டும் என்று கூறி விடை பெற்றுச் சென்றுவிட்டார். ஏனெனில் பகவான் இருக்கும் இடத்தில் மாயை வர இயலாதல்லவா? அதற்காகக் கிளம்பினார் போலும்.
மார்க்கண்டேயர் தம் ஆசிரமத்திலேயே அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார். பகவானின் தரிசனத்தையும், அவரது புன்முறுவல், பேச்சு, நடை உடை பாவனைகள் ஆகியவற்றையே நினைத்துக்கொண்டு மானஸீகமாகப் பூஜை செய்தார்.

சில நேரங்களில் பகவானின் ரூபத்தில் மயங்கி செயல் மறந்து நிற்பார். பின்னர் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவார். இப்படியே காலம் கழித்தார்.

ஒரு நாள் மாலை புஷ்பபத்ரா நதிக்கரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரும் சுழற்காற்று அடித்தது. இடியும் மின்னலுமாகப் பேரிரைச்சலுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கியது.

நதியில் நீர்ச்சுழல் பெருக, நாற்புறமும் நீர் சூழ்ந்தது. பெருங்கடல் மேலேறி வந்ததோ, பூமியே மூழ்குமோ என்னும் அளவிற்கு பெரு வெள்ளமும் அலையும், சுழலுமாக அடித்தது. பெரும் முதலைகளும் நீர் வாழ் பிராணிகளும் அவரை உரசிக்கொண்டு சென்றன.

எங்கு நோக்கினும் நீர் நீர் நீரைத் தவிர வேறொன்றுமே இல்லை. மெல்ல மெல்ல தாவரங்களும், மற்ற ஜீவராசிகளும், அவற்றுடன் தாமும் மூழ்கினார்.

மிகவும் பயந்துபோனார். பெரும் அலைகள் தோன்றி மலைகளும் மூழ்குவதைக் கண்டார்.

மூவுலகங்களும் நீர் சூழ புவி, ஆகாயம், தேவர்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், ஜோதிர் மண்டலம் அனைத்தும் நீரில் மூழ்கின. அப்பேரலைகளுக்கு நடுவில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு மார்க்கண்டேயர் ஒருவரே எஞ்சியிருந்தார்.

அங்கும் இங்கும் அலைந்தார். தம்மைக் காத்துக்கொள்ள வழி தேடினார். பிடிமானம் ஏதும் கிடைக்கவில்லை. விரித்த சடை பறக்க பைத்தியம் போல அரற்றிக்கொண்டு நீரில் திரிந்தார்.

பயங்கரமாகப் பசித்தது. திமிங்கிலங்களும் சுறாக்களும் அவர் மீது வந்து மோதி மிகவும் அடிபட்டது.

ஒன்றும் புரியாமல் மதி மயங்கி அஞ்ஞான இருளில் மூழ்கி, விண்ணுக்கும் மண்ணுக்கும் வேறுபாடு அறியாமல் கலங்கிப்போனார்‌.

ஒரு சமயம் அலைகளால் தூக்கிவீசப்பட்டார். ஒரு சமயம் பிராணிகள் அவரை விழுங்க வந்தன. நடுவில் அவற்றுக்கு ஆகாரமாகி மரணம் தழுவி, மீண்டும் கடலிலேயே விழுந்தார். இப்படியே நூறாயிரம் கோடி வருடங்கள் கடந்தன.

நீரில் சுற்றி சுற்றி அலைந்து கொண்டிருந்த அவர் பல்லாண்டு காலம் கழித்து பூமியில் ஓரிடத்தில் ஒரு திடலைக் கண்டார். அதில் பெரிய ஆலமரம் இருந்தது. நிறைய இலைகளும், தளிர்களும் பழங்களுமாக இருந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment