Saturday, June 5, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 645

ஒருவன் விழிப்பு, தூக்கம், கனவு ஆகிய நிலைகளிலிருந்து விடுபட்டு அனைத்திற்கும் காரணம் மாயை என்றறிந்து, ஆத்ம விசாரம் செய்து முக்திப் பாதையில் செல்கிறான். அப்போது தத்வமஸி முதலிய வாக்கியங்களால் ஞானத்தை அடைகிறான். அதன் பின் கர்ம வாஸனைகள் அவனைத் தீண்டுவதில்லை.

பத்து அல்லது ஐந்து என்று புராண இலக்கணங்கள் வகுக்கப்படுகின்றன.

ஐந்து இலக்கணங்கள் கொண்டவை உபபுராணங்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகின்றன.
மொத்தம் 18 மஹா புராணங்களும், 18 உபபுராணங்களும் உள.
ப்ரம்ம புராணம்
பத்ம புராணம்
வைஷ்ணவ புராணம்
சிவ புராணம்
லிங்க புராணம்
கருட புராணம்
நாரத புராணம்
அக்னி புராணம்
ஸ்காந்த புராணம்
பவிஷ்ய புராணம்
ப்ரும்மவைவர்த்தக புராணம்
மார்க்கண்டேய புராணம்
வாமன புராணம்
வராஹ புராணம்
மத்ஸ்ய புராணம்
கூர்ம புராணம்
ப்ரும்மாண்ட புராணம்
ஸ்ரீமத் பாகவத புராணம்
ஆகியவை மஹா புராணங்கள்.
ஸனத்குமார புராணம்
கபில புராணம்
மானவ புராணம்
ப்ருஹன் நாரதீய புராணம்
வருண புராணம்
கலிக புராணம்
ந்ருஸிம்ஹ புராணம்
ஸௌர புராணம்
பராசர புராணம்
விஷ்ணு தாமோதர புராணம்
ஆதித்ய புராணம்
வஸிஷ்ட புராணம்
தேவி புராணம்
துர்வாஸ புராணம்
மஹேஸ்வர புராணம்
சம்ப புராணம்
தேவி பாகவதம்
சிவ புராணம்
ஆகியவை உபபுராணங்கள்.

வியாஸரின் சீடர்கள் இந்தப் புராணங்களைக் கற்று அவர்களது பரம்பரை மூலம் பரப்பிவருகிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு ப்ரும்மதேஜஸ் வளரும் என்றார் ஸூதர்.

சௌனகர் மீண்டும் கேட்டார்.
மிருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி என்று கேள்வியுற்றிருக்கிறேன். ப்ரளய காலத்தில்கூட அவர் மிஞ்சியிருந்தாராமே. அதெப்படி?

அவர் இந்தக் கல்பத்தில் எங்களுடன்தான் பிறந்தார். நாங்கள் பார்த்தவரை ப்ரளயம் எதுவும் இதுவரை நிகழவில்லை.

அப்படியிருக்க அவர் ப்ரளயத்தில் மிஞ்சி, ஆலிலைமேல் பாலகனாக பகவத் தரிசனம் பெற்றாராமே. அது எங்ஙனம்? தாங்கள் அறியாத விஷயமே இல்லை. தயவு செய்து விளக்குங்கள். என்றார்.

ஸூதர் மிகவும் மகிழ்ந்தார்.
மிகவும் பொருத்தமான கேள்வி. பகவானின் லீலைகளைப் பேசுவதால் கலியின் கொடுமை விலகி ஓடும்.

மிருகண்டு முனிவரின் தவப் புதல்வர் மார்க்கண்டேயர்.
என்று துவங்கினார்.

மார்க்கண்டேயர் நியமங்களின்படி வேதங்களைக் கற்று ப்ரும்மயக்ஞம் முதலானவற்றைத் தவறாமல் செய்துவந்தார்.

வாழ்நாள் முழுவதும் ப்ரும்மச்சர்யத்தில் இருப்பதாக உறுதி பூண்டு கழுத்தில் ருத்ராக்ஷம், மான்தோல், தர்பை ஆகியவற்றை அணிந்துகொண்டார்.

அக்னி பூஜைகள், குரு வழிபாடு, சூரிய நமஸ்காரம், பதினாறு உபசாரங்களுடன் கூடிய மானஸ பூஜை இவற்றோடு ஆத்மவிசாரமும் செய்துவந்தார். காலையிலும் மாலையிலும் மௌனமாக பிக்ஷை ஏற்று வருவார். குருவிடம் சமர்ப்பித்து விட்டு அமைதியாக இருப்பார். குரு அனுமதித்தார் உணவு ஏற்பார். இல்லையேல் உபவாசம். இவ்வாறு அவரது வாழ்க்கை தவம், வேதம் ஓதுவது என்று வெகு காலம் ஓடிற்று. தன் பக்தியாலும் தவத்தாலும் காலனையும் வெற்றி கொண்டுவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment