Thursday, September 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 331

கம்சனிடமிருந்து தேவகியைக் காக்கப் பலவாறு பேசினார் வசுதேவர். எதற்கும் அவன் மனமிரங்காததால், கடைசி முயற்சியாக இப்படிச் சொன்னார்.

இளகிய மனமுள்ளவரே! அசரீரி வாக்கின்படி தேவகியின் எட்டாவது புதல்வனால்தானே உங்களுக்கு ஆபத்து? இந்த அபலையான தேவகியால் எந்த ஆபத்தும் இல்லையே. எனில், எங்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும், பிறந்ததுமே உங்களிடம் ஸமர்ப்பிக்கிறேன். இவளை விட்டுவிடுங்கள்.

மகா கொடியவன் ஆனாலும், வசுதேவர் ஸத்யசந்தர் என்பதில் கம்சனுக்கு எள்ளளவும் ஐயமில்லை. கொடுத்த வாக்கைக் காப்பவர் என்று நம்பினான். எனவே இம்முறை சற்று இரங்கி கழுத்திலிருந்த கத்தியை எடுத்தான்.

மிகவும் கோபமாக வீரர்களை அழைத்தான்.
இருவரையும் காவலில் வையுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு ரதத்திலிருந்து இறங்கி ஒரு குதிரையின் மீதேறிக்கொண்டு வேகமாகச் சென்றான்.

வீரர்கள் வசுதேவரையும் தேவகியையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். இருவரையும் தனித்தனிச் சிறையில் அடைக்கச் சொல்லி கம்சன் குறிப்பேதும் கொடுக்கவில்லை. அதைப் பற்றிய யோசனையும் அவனுக்கில்லை.

அசரீரி கம்சனை முட்டாளே! என்று விளித்தது. அவன் ஏற்கனவே மூடன்தான் ஆனாலும், இப்போது அதுவே ஆசீர்வாதம் போலாகி கம்சனின் மூளை சிந்திக்கும் திறனற்று சுத்தமாக மழுங்கிப்போனது.

தம்பதிகளை வெவ்வேறு அறைகளில் சிறைப்படுத்தினால், அங்கே குழந்தைப்பேற்றிற்கான வாய்ப்பே இருந்திருக்காது. மரணபயமும் தேவையில்லை.

ஆனால், எப்போதுமே, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், எத்தனை திட்டங்கள் போட்டாலும், தெய்வ ஸங்கல்பம் மட்டுமே வெல்லும். அதனால், இந்த சாதாரண விஷயம் கூட தோன்றாத அளவிற்கு கம்சன் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டிருந்தான். எனவே தம்பதிகளைப் பிரித்துவைக்கத் தோன்றவில்லை.

காலம் சுழன்றது. எல்லாருக்கும் தெய்வம் போன்றவளான தேவகி வருடத்திற்கொன்றாக குழந்தைகளைப் பெற்றாள். தெய்வம் வந்து குழந்தையாகப் பிறக்கப்போவதால், தேவகியை தெய்வம் போன்றவள் என்று வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

முதல் குழந்தை ஆண் குழந்தை. பிறந்ததும், அதற்கு கீர்த்திமந்தன் என்று பெயரிட்டார் வசுதேவர்.

பொய்க்கு அஞ்சும் வசுதேவர், அந்தக் குழந்தையை தேவகியிடமிருந்து வாங்கினார். தாயின் கதறலை விடவும் சத்தியத்தை மதித்தார் அந்த மஹாத்மா.

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க தைரியமற்றவராய், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு காவலர் பின்தொடர, கம்சனின் அரண்மனையை நோக்கி நடந்தார்.

நல்லாருக்குத் தாங்க இயலாதது எது?
அறிவாளிகளுக்கு எதுதான் வேண்டாம்?
துஷ்டர்களால் செய்ய இயலாத கொடுமைதான் உண்டா?
மனத்தை அடக்கியவர்க்கு செய்ய இயலாத தியாகம் ஏது?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment