Wednesday, September 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 325

அவசரம் அவசரமாகக் கண்ணனின் கதையைச் சில ஸ்லோகங்களில் கூறி முடித்துவிட்டு குறும்பு தவழும் புன்முறுவலுடன் பரீக்ஷித்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்ரீ சுகர்.

இன்னும் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து ஆவலுடன் அமர்ந்திருந்த பரிக்ஷித்திற்கு ஏமாற்றத்தில் முகம் வாடிவிட்டது.

மெதுவாக ஸ்ரீ சுகரைப் பார்த்துப் பேசலானான்.
முனிவர் பெருமானே!
சூரிய வம்சத்து சரித்திரங்கள், சந்திர வம்சத்து சரித்திரங்கள், மன்வந்தரக் கதைகள், படைப்பு, பகவானின் பல்வேறு அவதாரக் கதைகள், பக்தர்களின் கதைகள் ஆகியவை அனைத்தையும் விரிவாகக் கூறினீர்கள்.
அதேபோல யது வம்சத்தில் பிறந்து பகவான் ஆற்றிய லீலைகளையும் எனக்கு விரிவாகக் கூறுங்கள்.

பகவான் கண்ணனின் கதையை நான் வெகு காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
மேலும் எங்கள் வீட்டில் உறவினராக வந்து கலந்து பழகி, எங்கள் முன்னோரைப் பற்பல ஆபத்துக்களிலிருந்து காத்திருக்கிறார்.

நான் என் தாயின் கர்பத்திலேயே அழிந்துபோயிருக்கவேண்டியவன். கருவறைக்குள் நுழைந்து, எனக்கு வந்த பேராபத்தைத் தடுத்து என்னைக் காத்தவர் அவரே.

நான் பிறந்து சில காலத்தில் பகவான் கண்ணன் வைகுண்டம் சென்றுவிட்டார்.

குழந்தையிலிருந்து என் வீட்டிலுள்ளவர்கள் வீட்டின் ஒவ்வொரு பொருளையும் காட்டி காட்டி,
இது கண்ணன் பயன்படுத்திய நாற்காலி,
இது கண்ணன் பயன்படுத்திய மெத்தை,
இது கண்ணன் அனுஷ்டானத்திற்குப் பயன்படுத்திய பாத்திரம்,
இந்தத் தூணில்தான் கண்ணன் எப்போதும் சாய்ந்துகொண்டு நிற்பான்,
இவை கண்ணன் குளிப்பாட்டிய குதிரைகள்,
இவை கண்ணனின் வஸ்திரங்கள்,
இவ்விடத்தில் நின்றுகொண்டு இதைச் சொன்னான்,
அந்தத் தோட்டத்தில்தான் எப்போதும் உலாவுவான்
என்று சொல்லி சொல்லி வளர்ந்த்திருக்கிறார்கள்.

எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே கண்ணன் துவாரகைக்குக் கிளம்பிவிட்டதால், பச்சிளங்குழந்தையான என்னோடு அவர் விளையாடிய நினைவுகள் ஏதும்‌ எனக்கில்லை.

ஆனால், கருவறைக்குள் என்னைக் காக்க வந்தபோது, கண்ட தரிசனம் நன்றாக நினைவிருக்கிறது.

எங்கள் வீட்டிலேயே நுழைந்து நுழைந்து புறப்பட்ட கண்ணனின் லீலைகளைக் கேட்க எனக்கு முழு உரிமை உள்ளது. கண்ணனின் கதையமுதத்தைப் பருகவே நான் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்ததாக நம்புகிறேன்.

ஒருக்கால், ஐந்து நாள்களாக இடத்தை விட்டு அசையாமல் கதை கேட்பதால், எனக்கு பசி தாகம் உடலில் ஏதாவது சிரமம் இருக்கும் என்று நினைத்து நீங்கள் கண்ணன் கதையை சுருக்கிவிட்டீர்களா?

தங்களுடைய திருவாயிலிருந்து பெருகும் பகவானின் கதையமுதத்தை என் இரு காது மடல்களால் வாங்கிப் பருகும் எனக்கு ஸம்ஸாரமே இல்லை என்னும்போது, உடல் சிரமங்கள் ஏது?

முற்பிறவிகளில் பசுவையும், பிராம்மணனையும் கொன்றவர்க்கே கண்ணனின் கதையில் ஆர்வம் ஏற்படாமல் போகும். என் மனம் கண்ணனின் கதையை ஆவலுடன் எதிர்பார்ப்பதிலிருந்து நான் அவ்வாறான பாவங்கள் ஏதும் செய்யவில்லை என்றறிகிறேன்.
என் மனம் கண்ணனின் கதையைக் கேட்க ஏங்குகிறது.

ரோஹிணியின் புதல்வர் என்றறியப்பட்ட பலராமனுக்கு தேவகியின் கருவறையுடன் எவ்வாறு சம்மந்தம் ஏற்பட்டது?
அவர் ஏன் வசுதேவர் வீட்டிலிருந்து ஆயர்பாடிக்குச் சென்றார்?
கோகுலத்திலும் மதுராவிலும் என்னென்ன லீலைகள் நிகழ்த்தினார்?
தாய்மாமன் உறவு மிகவும் புனிதமானதாயிற்றே. அப்படியிருக்க மாமனையே ஏன் கொன்றார்?
எவ்வளவு ஆண்டுகள் பூமியில் வசித்தார்?
அவருடைய குடும்பம் பற்றிக் கூறுங்கள்.

என் பாட்டனார்கள் கண்ணனையே ஓடமாகக் கொண்டு பீஷ்மர் போன்ற திமிங்கிலங்கள் நிறைந்த கடல் போன்ற கௌரவர் படையை வென்றது எவ்வாறு?

பிறந்தது முதல் கண்ணன் செய்த அனைத்து லீலைகளையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.

என்று பரிக்ஷித் சொல்லக் கேட்டதும், சிறு குழந்தையைப் போல் அவனைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தது அந்த ஞானக்கிளி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment