Thursday, September 12, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 326

பரீக்ஷித் கூறியதைக் கேட்ட ஸ்ரீ சுகர் மிகவும் மகிழ்ந்தார். பரீக்ஷித்தைப் பலவாறு பாராட்டினார்.

ராஜரிஷியே! உன் அறிவு நல்வழியில் உறுதி பெற்றுள்ளது. வாசுதேவனின் கதையைக் கேட்பதில் ஆழ்ந்த ஈடுபாடு வந்துள்ளதே. பகவானின் கதையைப் பற்றிய கேள்வி, கேள்வி கேட்டவர், கதை சொல்பவர், கதை கேட்டவர் ஆகிய மூவரையும் கங்கையைப் போல் தூய்மைப்படுத்துகிறது.

மலை, கடல், எண்ணற்ற உயிர்கள் ஆகியவை எல்லாம் பூமிக்கு பாரமில்லை. தீயவழியில் செல்வோரின் பாரத்தை பூமாதேவியால் தாங்க முடிவதில்லை.

அசுர குணமுள்ளவர் மிகுந்துபோய் ஸாதுக்களைத் துன்புறுத்தி வந்தனர். இதனால் மிகவும் வருந்திய பூமாதேவி ப்ரும்மாவைச் சரணடைந்தாள்.

பசு உருவம் கொண்டு, மிகுந்த துயருடன் வருந்தி, கண்ணீருடன் ப்ரும்மாவிடம் சென்ற பூமாதேவி, தன் துயரத்தைத் தெரிவித்தாள்.

அவளது துயரை உணர்ந்த ப்ரும்மா அவளுடன், பரமேஸ்வரன், மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் கரையை அடைந்தார்.

ஸகல வேதங்களுக்கும் மூல ஸ்தானமான ப்ரும்மா, பகவானை புருஷ‌ஸூக்தத்தால் வழிபட்டார்.
வேதத்தில் எவ்வளவோ அரிதான ஸ்துதிகள் உள்ளன.
ப்ரும்மா அவற்றுள் ஏதாவது ஒன்றைச் சொல்லிருக்கலாம்.
வேதம் படிக்கும் குழந்தைகளின் அரிச்சுவடியாக போதிக்கப்படுவது புருஷஸூக்தம்.
அனைத்து வேதங்களையும் அறிந்த ப்ரும்மா, படைப்புத்தொழிலின் மூலகர்த்தாவான ப்ரும்மா சிறப்பு வாய்ந்த ஸ்துதிகளால் பகவானைத் தொழாமல், ஏன் ஆரம்ப பாடங்களில் வரும் புருஷ ஸுக்தத்தினால் பகவானைத் தொழுதார்
என்று தோன்றுகிறதல்லவா?

அனைத்தும் அறிந்த ப்ரும்மா இந்த சந்தேகத்தை அறியமாட்டாரா என்ன?

ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் ஒருவர் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அந்தச் செயலாளரின் வேலைகளுள் ஒன்று தலைவரின் அன்றாட அலுவல்களை நேரப்படி அவருக்கு நினைவுபடுத்துவதாகும்.
மிகப் பெரிய பதவியில் இருப்பவரிடம் சமயம் பார்த்துத்தான் பேசவேண்டும். ஐந்து மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறதென்றால் செயலாளர் நான்கு மணிக்கு நினைவு படுத்த வேண்டும். ஆனால், நேரடியாகச் சொன்னால், தலைவர் எனக்குத் தெரியாதா என்று கோபித்துக்கொள்ள வாய்ப்பு அதிகம். சொல்லாமல் விடவும் இயலாது. ஏன் சொல்லவில்லை என்று அதற்கும் கோபிப்பார். செயலாளரின் நிலை தர்ம சங்கடம். மிகவும்‌ சாமர்த்தியமாகப் பழக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் அவர்.

அதைப்போலவே ப்ரும்மாவும் பகவானிடம்‌ பழக அஞ்சுகிறார்.
அனைத்தும் அறிந்த பகவானுக்கு இப்போது அவதரிக்க வேண்டிய காலம் என்பது தெரியாதா என்ன?

நேரடியாக நினைவு படுத்தினால் அதிகப் பிரசங்கித்தனமாகப் போகும். அதே சமயம் அதைச் சொல்லத்தான் வந்திருக்கிறார். எனவே புருஷ ஸூக்தத்தைச் சொல்கிறார்.

புருஷ ஸுக்தம் ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: என்று ஆரம்பிக்கும். ஸஹஸ்ர என்ற வார்த்தை பலமுறை வரும். ஸஹஸ்ர என்பதற்கு ஆயிரம் என்பது பொருள்.

புருஷ ஸுக்தத்தைச் சொல்வதன் மூலம் அவதார காலம் வந்துவிட்டதே. பூமியில் தங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறதே. என்று நினைவு படுத்துகிறாராம். எனவே, பகவான் அவதாரம் செய்யும் காலம் வந்ததைக் குறிப்பால் உணர்த்தும்படி புருஷஸுக்தத்தால் பகவானைத் தொழுகிறார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment