Monday, June 11, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 8 ச்ரவண யோகம்

ஸ்ரீ மத் பாகவத பாராயணத்தின் பெருமையை உணர்த்தும் மற்றொரு கதை.
க்ருத யுகத்திலும், த்ரேதா யுகத்திலும், த்வாபர யுகத்திலும் அடிக்கடி பூமிக்கு வந்து ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதர், கலியுகம் துவங்கியதும் பூமிக்கு வரவே பயந்தார். கலியின் கோர முகத்தைக் காண நாரதருக்கே அச்சமாயிருந்தது என்றால், கலியுகம் எப்படி இருக்கிறது என்பது தெளிவு.
இருப்பினும், பகவத் ஸங்கல்பத்தினால் பூமியைச் சற்று பார்த்துவருவோம் என்று இறங்கினார்.
எங்கு போனாலும், மக்கள் கூட்டம், ஒரே இரைச்சல், சண்டை சச்சரவுகள், அடிதடி. எல்லோரும் எதையோ தேடி அலைந்து கொண்டிருந்தனர். கோவில்களுக்குப் போனால், கேட்கவே வேண்டாம். அங்கு நிலைமை இன்னும் மோசம். எங்கே சென்றாலும் காசு கேட்டார்கள். ப்ரகாரங்களிலேயே கடைகள், எச்சில், குப்பைகள். பூமி முழுவதும் பொதுவாக இயங்கிய ஒரே மொழி பணம் மட்டுமே. பயந்துபோனார் நாரதர். அவரால் எதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை.
கண்ணன் லீலைகள் ப்ருந்தாவனம் சென்று பார்க்கலாம் என்று ஸ்ரீ வனம் போனார். அங்கு காடுகள் குறைந்திருந்தபோதிலும், பகவந்நாமம் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்ததைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்தார்.
வைகுந்தம் சென்று பகவானிடம் பூமியின் நிலைமையை எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்துக் கிளம்பினார். அப்போது, நாரதரே என்று ஒரு குரல் கேட்டது.
தன்னை அடையாளம் கண்டு கூப்பிடுவது யார் என்று ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்த்தார். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். அவளருகில் மிகவும் வயதான இரண்டுபேர் படுத்திருந்தார்கள். அவர்களிருவரும் குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்தனர்.
நாரதர் அந்தப் பெண்ணைப் பார்த்து,
யாரம்மா நீ? என்னை எப்படி அடையாளம் தெரிந்தது? இவர்கள் இருவரும் யார்?
என்று கேட்டார்.
பக்திக்கு ஸூத்ரம் எழுதியதே தாங்கள்தான். பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான ப்ரஹ்லாதன், துருவ நக்ஷத்ரமாய் விளங்கும் துருவன் இவர்களெல்லாம் உமது சிஷ்யர்கள். ஆனால், உமக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. யாரென்று கேட்கிறீர். இது எனது துர்பாக்யமாகும். நான்தான் பக்திதேவி.
என்றாள்.
அதிர்ந்துபோன நாரதர்,
பக்திதேவியா, ஏனம்மா இப்படி இருக்கிறாய்?
இவர்கள் யார்?
இவர்கள் என் புதல்வர்கள் ஞானமும், வைராக்யமும். என் நிலையும் இவர்களைப் போல் தான் இருந்தது. நான் எப்படியோ ஊர்ந்து ஊர்ந்து கண்ணன் லீலை செய்த இடமான இந்த ஸ்ரீ வனத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். இங்கு வந்ததும் என் நிலைமை சற்று சீரானது. ஆனால் என்ன செய்தாலும் என் புதல்வர்களை எழுப்ப முடியவில்லை. பக்திக்கு சூத்திரதாரியான நீங்கள்தான் உபாயம் சொல்லவேண்டும்
என்றாள்.
நாரதர், அவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு, அருகில் அமர்ந்து உபநிஷத், பகவத்கீதை முதலியவற்றைப் பாராயணம் செய்தார். ஆனால், அவர்கள் இருவரின் நிலைமையிலும் முன்னேற்றமே இல்லை. செய்வதறியாது திகைத்த நாரதர், யமுனைக்கரையில் யோசித்துக் கொண்டே நடந்தார். அப்போது ஸனகாதி மஹரிஷிகளுள் ஒருவரான ஸனத் குமாரர் எதிர்ப்பட்டார். ஸனத்குமாரரின் அம்சமாக முருகப் பெருமான் அவதரித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
நாரதர் கவலையோடு வருவதைப் பார்த்ததும் கேட்டார்,
நாரதரே, எப்போதும் ப்ரஸன்னமாக பகவன் நாம கோஷம் செய்வீரே. இப்போது என்ன கவலை?
பக்திதேவியின் நிலையை எடுத்துச் சொன்ன நாரதர், ஞானத்தையும் வைராக்யத்தையும் எழுப்ப வழி தெரியவில்லை என்றார்.
என்ன நாரதரே, கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கலைவாருண்டோ? எல்லாம் அறிந்த தாங்களே இப்படி சொன்னால் என்ன செய்வது?
திருதிருவென்று விழித்தார் நாரதர்.
தாங்கள் வியாசருக்கு உபதேசம் செய்து எழுதத் தூண்டிய புரணமான ஸ்ரீமத் பாகவதம் இருக்க என்ன கவலை?
ஸப்தாஹ வித்திப்படி பாராயணம் செய்தால் ஞான வைராக்யங்கள் துள்ளியெழுந்துவிடுமே என்றதும்
நாரதர், சரியான சமயத்தில் பகவத்ஸ்வரூபமாகவே வந்து நினைவு படுத்தினீர்கள். தாங்களே ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மஹாயக்ஞத்தை நடத்திக்கொடுக்க வேண்டும்
கரும்பு தின்னக்கூலியா? நன்றாகச் செய்துவிடலாம். இப்போதே துவங்குவோம் என்றார். ஸ்ரீவனத்தில் யமுனைக் கரையிலேயே ஸப்தாஹம் துவங்கியது. இனிப்பு இருக்கிறது என்று எறும்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறதா என்ன? ஸ்ரீமத் பாகவதம் ஸ்வயமே அத்தனை பக்தர்களையும் ஆகர்ஷிக்கக்கூடியது. ஏராளமான பக்தர்கள் யமுனைக்கரையில் கூட, ஸனத்குமாரர் வெகு விமரிசையாக ஸப்தாஹம் செய்தார்.
தினமும் பாராயணம் முடிந்து இரவு திவ்யநாம ஸங்கீர்த்தனம் நடைபெறும். அதில் ஸனத்குமாரர், அர்ஜுனன் முதலியோர் பாட, நாரதர் வீணையை மீட்ட, இந்திரன் மிருதங்கம் வாசிக்க, உத்தவர் ஜால்ரா போட்டுக்கொண்டு பாட, ப்ரஹலாதன் கையைத் தட்டிக்கொண்டு ஆட, யமுனா ப்ரவாஹத்தோடு நாமப்ரவாஹமும் சேர்ந்தது.
ஏழுநாள் முடிவில், ஞானமும் வைராக்யமும் ஆரோக்யம் திரும்பி சக்தி பெற்றனர். பக்திதேவி இன்னும் ப்ரகாசமாக மிளிர்ந்தாள். அவள் ஞானவைராக்யமான தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஸப்தாஹ பந்தலின் நடுவே வந்து நின்று அமர்வதற்கு இடம் தேடினாள். எங்கும் எள் போட்டால் விழாது என்னுமளவிற்கு கூட்டமாக அமர்ந்திருந்தனர். நாரதரைப் பார்த்துக் கேட்டாள்.
ஸ்வாமி, என்னையும் என் குழந்தைகளையும் பொலிவடையச் செய்தீர்கள். இந்த ஸப்தாஹத்தில் எனக்கும் ஒரு இடமளியுங்கள் என்றாள்.
நாரதர் அவளைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து,
இங்கு வந்திருப்பவர் அனைவரின் இதயத்திலும் சென்று உன் குழந்தைகளோடு அமர்வாயாக என்றார்.
அப்படி அனைவர் மனத்திலும் பக்தி ஞான வையாக்யத்தோடு நிறைந்ததும், ஸாக்ஷாத் பகவானான ஸ்ரீ கிருஷ்ணன் அங்கு ஆவிர்பவித்தான்.
ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்தை ச்ரவணம் செய்யும் அனைவரின் ஹ்ருதயத்திலும் பக்தியும் அதைத் தொடர்ந்து வைராக்யமும் ஞானமும் நிலைபெறும் என்பதாக ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியம் கூறுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment