Saturday, June 9, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 6 அசிங்கம் அழகானது

தென்பாரதத்தின் கோடியிலிருந்து மாதக்கணக்காக நடையாய் நடந்து, ஜென்ம சாபல்யம் அடைந்துவிடவேண்டும் என்ற தீராத வேட்கையோடு, பல சிரமங்களைப் பொருட்படுத்தாது, பல ஆபத்துகளிலிருந்து தப்பி வந்தும், காசி வந்து கங்கைக் கரையை அடைந்துவிட்ட பின்னரும், லட்சியம் பூர்த்தியாகவில்லை. கங்காமாதா கண்ணுக்குப் புலப்படவில்லை.
அழுகை அழுகையாய் வந்தது. அப்பேர்ப்பட்ட பாவியா நான்? விமோசனமே இல்லையா?
கங்காமாதாவை நினைத்து நினைத்து அழுதழுது புழுவாய்த் துடித்தார்.
இரவாகிவிட்டது.
அங்கேயே உட்கார்ந்து அரற்றிக்கொண்டிருந்தார்.
எதனால் தனக்கு தரிசனம் கிட்டவில்லை என்று தெரிந்துகொள்ள கங்காமாதாவைக் குறித்து தியானம் செய்யத் துவங்கினார்.
தியானத்தில் ஒளிப்ரவாஹமாய் கங்காமாதா தோன்றினாள்.
அம்மா, எனக்கு ஏன் தங்கள் ப்ரவாஹம் தெரியவில்லை?
நீ ஒரு பரம பாகவதோத்தமரை அவமத்துவிட்டாய். அவரிடம் சென்று மன்னிப்பு வேண்டு. அவர் மன்னித்துவிட்டாரானால், உனக்கு தரிசனம் கிட்டும்
அம்மா, நான் அனைவரிடமும் வணக்கத்துடன் பழகும் இயல்புடையவன். யாரை அவமதித்தேன்? தாங்கள் சொன்னால், ஓடோடிச்சென்று அந்தப் பெரியவரின் பதம் பணிவேன்.
நேற்றிரவு ஒருவர் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தாயே. அவர் பெரிய மஹாத்மா. நீ அவரை நிந்தித்து பெரும் பாவத்தை சம்பாதித்துக்கொண்டாய். அவரை வணங்கி மன்னிப்புக் கேள்.
என்று சொல்லி மறைந்துவிட்டாள் கங்கை.
பயணி சிந்தித்தார். நேற்றிரவு சந்தித்தவரோ, காசி தெரியாது. கங்கை தெரியாது என்றார். ஆனால், கங்காமாதாவோ அவரை மஹாத்மா என்கிறாள்.
பார்த்த சில நிமிடங்களில் அவரைப்பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு திட்டியது தவறுதான். அவரிடம் மன்னிப்பு வேண்டினால் மட்டும் போதாது. கங்காமாதாவே ஒருவரை மஹாத்மா என்று கொண்டாடுகிறாள் என்றால் அவர் என்ன ஸாதனை செய்தார், என்ன தவம் செய்தார், ஏதேனும் மந்திரஜபம் செய்கிறாரா, தெய்வ உபாசனையா?
என்னதான் செய்கிறார் என்று தெரிந்துகொண்டு அவரிடம் உபதேசமும் வாங்கிக்கொள்ளவேண்டும் என்று நிச்சயித்து அந்த கிராமத்தை நோக்கி நடந்தார்
ஒரு நாளலெல்லாம் நடந்து அந்த வீட்டை அடையும்போது இருட்டிவிட்டது. இரவில் தொந்தரவு செய்யக்கூடாதென்று திண்ணையில் படுத்தார்.
அப்போது மிகவும் கோரமான உருவம் கொண்ட ஏழு பேர் அந்த வீட்டினுள் சென்றனர். அவர்களின் உருவத்தைப் பார்த்து பயந்துபோன பயணி வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார்.
அந்த வீட்டுப் பெரியவர் உறங்கிக்கொண்டிருக்க, ஒருத்தி விசிறினாள்.
மற்றவர்கள் வீட்டைப் பெருக்கி, நீர் கொண்டு வந்து மெழுகி, கோலம் போட்டு, வீட்டை ஒழுங்கு செய்து என்று அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.
எல்லா வேலைகளும் முடியவும் ப்ரும்ம முகூர்த்தம் வரவும் சரியாக இருந்தது. இப்போது அந்தப் பெண்கள் அனைவரும் அதிரூபசுந்தரிகளாக மாறிவிட்டிருந்தனர். ஏழு பேரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே வரும் நேரம், அவர்களுக்குத் தலைவிபோல் இருந்த ஒரு பெண்ணின் காலில் சென்று விழுந்தார் நமது பயணி. உற்றுப் பார்த்ததும் அவள்தான் நேற்று தியானத்தில் தரிசனம் கொடுத்ட்க கங்காமாதா என்று உணர்ந்துகொண்டார்.
அம்மா நீங்களா?
இவர்களெல்லாம் யார்?
நீங்கள் வந்து சேவை செய்யுமளவிற்கு இவர் உயர்ந்தவரா?
தெரியாமல் தவறு செய்தேன் அம்மா.
கங்கா புன்சிரிப்போடு சொன்னாள்.
நாங்கள் கங்கா, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா, கோதாவரி, ஸிந்து, காவேரி ஆகிய ஸப்த் புண்யநதிகளாவோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் எங்களிடம் ஸ்நானம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கிறார்கள். அவற்றின் தாக்கத்தால் நாங்கள் குரூபிகளாக மாறிவிடுகிறோம். தினமும் இவருக்கு ஸேவை செய்வதன் மூலம் எங்களிடம் சேர்ந்த பாவங்கள் அனைத்தும் தொலைந்துபோய், நாங்கள் எங்கள் ஸ்வரூபத்திற்குத் திரும்புகிறோம்.
நீ பொழுது விடிந்ததும் அவரை வணங்கு.
என்று சொல்லிவிட்டு ஆறு புண்யநதிகளுடனும் மறைந்துபோனாள் கங்காமாதா.
பொழுது எப்போது விடியும் என்று மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கலானார் பயணி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment