Tuesday, June 5, 2018

ஸ்ரீமத் பாகவதம் - 2 ஸ்ரீ சுகாசாரியார்

ஸ்ரீமத் பாகவதம் - 2
ஸ்ரீ சுகாசாரியார்


வேதம் முழுவதையும் கிரஹித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ்நாளுக்குள் அத்யயனம் செய்வது கடினம் என்று உணர்ந்துகொண்டார். எனவே, அதை நான்காகப் பிரித்து
ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும்,
யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும்,
ஸாம வேதத்தை ஜைமினியிடமும்,
அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார்.
பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார்.
கடைசியாக பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீ மத்பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீமத் பாகவதம் ஞான யக்ஞம், ஆஸ்ரயம், மோக்ஷ க்ரந்தம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் மிகவும் ரஸரூபமானது.
ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பதுபோல் அமைந்தது.
ஸ்ரீ வியாஸ பகவான் ஒருமுறை யாகம் செய்யும்போது, யாக குண்டத்திலிருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார்.
தோன்றும்போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார்.
ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்திலிருந்து வெளி வந்ததும், எதையும் கவனியாமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார்.
எங்கும் நிரம்பியிருக்கும் ஆத்மாவில் ரமிப்பவராதலால் ஆடைகளின்றி, திக்குகளையே அம்பரமாகக்(ஆடையாக) கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார்.
தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்துபோன வியாஸரோ, சுகரைத் துரத்திக்கொண்டு ஓடினார்.
புத்ரா புத்ரா என்று கத்திக்கொண்டு தந்தை துரத்திக்கொண்டு ஓட, சுகர் தன்னைத்தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதிலிறுத்தன என்றால், அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று கற்பனை செய்துகூட பார்க்‌க முடியவில்லை.
ஓடிக்கொண்டிருந்த சுகர்
ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக்கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்துவிட்டு குளியலைத் தொடர்ந்தனர்.
சற்று நேரத்தில்
பின்னாலேயே துரத்தக்கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர்.
இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களிடம் கேட்டார்.
நீங்கள் செய்வது நியாயமா?
பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையவில்லையா?
கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப்படுகிறீர்களே.
அதற்கு அந்தப் பெண்கள்,
மன்னித்துவிடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இளவயதுடையவராய் இருந்தபோதும், அவரைக் கண்டதும் வெட்கமேற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்மவஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை.
ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம்
என்றனர்.
இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப்பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக்கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார்.
மேலும்,
ஹ்ருதயத்தில் துளியும் காமவாசனையற்ற, ப்ரும்மஸ்வரூபமான ஸ்ரீ சுகர்தான் தசமஸ்கந்தத்தில் ராஸலீலையை வர்ணிக்கிறார், என்றால் ராஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாஸத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment