Wednesday, March 10, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 634

கலியுகத்தில் தோஷங்களே நிறைந்துள்ளன. ஆனாலும் மிகவும் உயர்ந்த ஒரு நல்ல விஷயம் உள்ளது. அது யாதெனில் ஆராவமுதனான கண்ணனின் திருநாமத்தை மனதார ஒரே ஒரு முறை சொல்வதாலேயே அனைத்து விதமான தளைகளிலிருந்தும் விடுபட இயலும்.
உயர்ந்த கதியைப்‌ பெறலாம். 

க்ருத யுகத்தில் ஸ்ரீமன் நாராயணனை மனத்தை ஒருமைப்படுத்தி தியானிப்பதால் என்ன பயன் விளையுமோ..

திரேதாயுகத்தில் மாபெரும் வேள்விகள் மூலம் பகவானை ஆராதிப்பதால் என்ன பயன் விளையுமோ.. 

துவாபர யுகத்தில் பகவானின் திருவுருவை நெறிமுறையுடன் பூஜிப்பதால் என்ன பயன் விளையுமோ..

அதே பயன்..

இக்கலியுகத்தில் பகவானின் திருநாமத்தைச் சொல்வதால் விளையும். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, முக்தி கைகூடும்.

சுகர் மேலும் தொடர்ந்து பரமாணு முதல் த்விபரார்தம் வரை உள்ள கால அளவு அவற்றின் ஸ்வரூபம், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, கல்பம், ப்ரளயம் ஆகியவற்றின் தன்மை ஆகியவற்றை மிகவும் சுருக்கமாகக் கூறினார். ஏற்கனவே மூன்றாவது ஸ்கந்தத்தில் விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. 

அரசனே! ஓராயிரம் சதுர்யுகங்கள் ப்ரும்மாவிற்கு ஒரு பகல். இதைக் கல்பம் என்றழைப்பர். ஒரு கல்பத்திற்கு 14 மனுக்கள். கல்பத்தின் முடிவில் ஆயிரம் சதுர்யுகங்கள் வரை ப்ரளயம் இருக்கும். அது ப்ரும்மாவின் இரவு ஆகும். இதில் பூலோகம், பித்ரு லோகம், ஸ்வர்க லோகம் (பூ:, புவ:, சுவ:) ஆகிய மூன்று லோகங்களும் ப்ரக்ருதியில் ஒடுங்கும். இதை நைமித்திக ப்ரளயம் என்பார்கள். அப்போது ப்ரும்மதேவர் உறக்கம் கொள்வார். பகவான் நாராயணன் அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்டு ஆதிசேஷன் மீது சயனிப்பார்.

இவ்வாறு பகலும் இரவுமாக ப்ரும்மா நூறாண்டு காலம் வசிப்பார். அவரது காலம் முடியிம் தறுவாயில் மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஏழும் மூலப்ரக்ருதியில் அடங்கும்.

இதை ப்ராக்ருதிக ப்ரளயம் என்பார்கள். ஐம்பொருள் சேர்க்கையினால் உண்டான இந்த ப்ரும்மாண்டம் தக்க தருணம் வந்ததும் தன் சேர்க்கையை விடுத்து மூலப்பொருளில் (பஞ்சபூதங்களில்) ஒடுங்கும்‌. 

ப்ரளய காலத்தில் நூறாண்டுகள் மழை பொழியாது. எவருக்குமே உணவு கிட்டாது. பசி தாகத்தால்‌ துன்புறும் மக்கள் ஒருவரை ஒருவர் உண்பார்கள். காலக் கொடுமையால் கொடுந்துன்பம் உற்று அனைவரும் அழிந்துபோவர். 

ப்ரளய காலக் கதிரவன் கடல்கள், ஜீவன்களின் உடல்களில் உள்ள ஈரம், பூமியில் உள்ள ஈரம் அனைத்தையும் வெப்பத்தால் உறிஞ்சுவான். அதன் பின் ஸங்கர்ஷணனிடமிருந்து ஸம்வர்த்தகம் எனப்படும் வெளிப்படும் நெருப்பு காற்றில் வேகமாகப் பரவும்‌. ஈரேழு லோகங்களிலும் எந்த ஜீவனும் நிலைக்காதவாறு பொசுக்கும். ப்ரும்மாண்டம் முழுவதையும் பொசுக்கிய பின்பு, இந்த அண்டம் ஒரு சாணி உருண்டை போல் கருகிக் காட்சியளிக்கும்‌‌.

 அதன் பின் ஸம்வர்த்தகக் காற்று நூறு வருடங்களுக்கு மேல் வீசும். அவ்வமயம் விண்வெளி முழுவதும் சாம்பல் நிறைந்திருக்கும். அதன் பின் மேகக்கூட்டங்கள் ஒன்று‌கூடி ப்ரளயகாலப் பெரு மழையை வர்ஷிக்கும். பதினான்கு லோகங்களும் நீரால் நிரம்பும். அனைத்தும் நீரில் மூழ்கிப்போகும். 

அதன் பின் புவியின் குணமான மணம் (கந்தம்) நீரில் கரையும். நீரின் குணமான சுவை (ரஸம்) நெருப்பில் ஒடுங்கும். நெருப்பின் குணமான ஒளி காற்றில் உறைந்துவிடும். காற்றின் குணமான தொடுவுணர்ச்சி ஆகாயத்தில் ஒடுங்கும். ஆகாயத்தின் குணமான ஒலி தாமஸ அஹங்காரத்தில் அடங்கும். ராஜஸ அஹங்காரம் தன் குணம், செயல் அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும். ஸத்வம் ராஜஸம், தாமஸம் ஆகிய‌ முக்குணங்கள் மஹத் தத்வத்தையும் உள்வாங்கும். அதன் பின் மூலப்பொருள் முக்குணங்களையும் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு தான் மட்டும் நிலைக்கும். 

இதே வரிசையில் தான் ப்ரபஞ்சத்தின் தோற்றமும் நிகழ்வதை முன்பே உனக்கு விளக்கினேன்.
என்றார் ஸ்ரீசுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment