Tuesday, March 23, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 635

அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு ப்ரக்ருதி மட்டுமே எஞ்சி நிற்கும். இதுவே இந்த உலகத்திற்கு மூலகாரணம் ஆகும். இது மாறுதலற்றது. தொன்றுதொட்டு விளங்குவது. ஆதி அந்தமில்லாதது. அழிவற்றது‌. ப்ரளயத்தில் தன் அத்தனை செயல்பாடுகளையும் ஒடுக்கிக்கொண்டு சம நிலையை அடைகிறது. அப்போது காலம், தேசம், இரவு, பகல், வருடம், மாதம், நாள் எதுவுமில்லை. குணங்கள் ஏதுமில்லை. ப்ராணன், புத்தி, இந்திரியங்கள்,‌ அதி தேவதைகள், கற்பனைகள் எதுவுமில்லை.

தூக்கம் கனவு விழிப்பு ஆகியவையும் இல்லை. பஞ்ச பூதங்களும் இருக்கப் போவதில்லை. எல்லாமே சூன்யம் போல இருக்கும். இந்நிலையைக் கற்பனை செய்ய இயலாது. இந்த மாறுபாடற்ற தத்வம்தான் மூலப்பொருள்.

இதுவே ப்ராக்ருதிக ப்ரளயம் ஆகும். 

இனி ஆத்யந்திக ப்ரளயம் பற்றிக் கூறுகிறேன் கேள் பரீக்ஷித் என்று ஆரம்பித்தார் ஸ்ரீசுகர்.

இது லயம் அல்லது மோக்ஷம் எனப்படும். ஞானமே அனைத்துவிதமான அறிவிற்கும்‌அடிப்படை ஆகும். புத்தி, இந்திரியங்கள், விஷயங்கள் ஆகிய அனைத்தும் ஞானத்தினாலேயே தெளிவுறும். ஞானம் மட்டுமே எப்போதும் ஒளிர்வது. மற்றவை அனைத்தும் அழியக்கூடியவை. பொய்யானவை. கண்களுக்குத் தென்படக்கூடியவை‌. ஆதார அறிவை விடுத்து தனியே நிற்க இயலாதவை.

இரண்டும் ஒன்றாகவே மிளிரக்கூடியவை. 

பரமாத்ம ஸ்வரூபமான ஆன்மா ஒன்றேயாகும். அஞ்ஞானி ஒவ்வொரு உடலிலும் உறையும் ஆத்மா வெவ்வேறு என்று எண்ணுவான். அதாவது பரந்த ஆகாயத்திலுள்ள காற்றும் சிறுகுடத்திலுள்ள காற்றும் வெவ்வேறு என்பதைப்போல முட்டாள்தனம் அது.

ஆகாயத்தில் தோன்றும் சூரியனும் குட்டை நீரில் எதிரொளிக்கும் சூரியனும் வெவ்வேறல்ல. அதன் பிம்பமே இது. இவை இருக்கும் இடம்தான் வேறே தவிர ஸ்வரூபம் ஒன்றுதானே.

ஒரே தங்கக்கட்டியிலிருந்து பல விதமான நகைகள் செய்வதுபோல ஆன்ம ஸ்வரூபமான பகவான் பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான்.

மேகம் சூரியனால்தான் உருவாகிறது. சூரியனின் அம்சம்தான் கண்கள். ஆனால் கண்களால் சூரியனைச் சரியாகப் பார்க்க இயலாது. அதேபோல ஆத்மாவின் அம்சமான ஜீவனால் ஆத்மாவை அஹங்காரம் மறைப்பதால்  சரியாக உணர இயலாது. 

ஞானம் என்ற கத்தியால் அஹங்காரத்தை வெட்டினால் ஜீவன் தன் ஆத்ம ஸ்வரூபத்தை நன்குணர்ந்து அதிலேயே லயிக்கிறது‌. ஆன்மாவின் இந்த நிலையே ஆத்யந்திக ப்ரளயம் எனப்படும்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment