Tuesday, January 12, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 622

கண்ணன் தொடர்ந்தான்.

உத்தவா!
உற்சவங்கள், தினசரி பூஜைகள், ஆகியவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள், நிலம், கடைகள், கிராமங்களை எனக்கு அர்ப்பணம் செய்பவர்க்கு எனக்கு நிகரான செல்வச் செழிப்பு ஏற்படும். என் மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வதால் மண்ணுலக ஏகாதிபத்யமும், கோவில் கட்டினால் மூவுலக ஆட்சியும், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்வோர்க்கு ப்ரும்ம லோகமும், இம்மூன்றையுன் செய்தால் எனக்கு நிகரான நிலையும் கிட்டும்.

இவற்றின் பலன்களை எனக்கு அர்ப்பணம் செய்பவன் பக்தியோகத்தை அடைந்து என்னை அடைந்துவிடுவான்.

தன்னாலோ பிறராலோ அந்தணனுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களைக் கவர்பவன் லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக மலம் தின்னும் புழுவாகவும், பன்றியாகவும் பிறந்து துன்புறுவான்.
உலக விவகாரத்தில் தான் படைப்பு, ப்ரக்ருதி, புருஷன், பார்ப்பவன், பார்க்கப்படும் வஸ்து ஆகியவை வேறுபடுகின்றன‌.ஆனால் உண்மையில் அனைத்தும் வேறுபாடற்ற பரமாத்ம ஸ்வரூபமேயாம். அதனால் யாருடைய இயல்பையும், அதை ஒட்டி வரும் நடவடிக்கைகள், பழக்கங்கள் ஆகியவற்றையும் இகழக்கூடாது.

கர்மாக்களை உயர்த்திப் பேசுபவன், இகழ்பவன் இருவருமே ஞானத்திற்கான அதிகாரத்தை இழக்கிறார்கள்.

இரண்டாவதாக ஒரு பொருளே இல்லை என்னும்போது இந்த வஸ்து நல்லது அல்லது இவ்வளவு நல்லது, இவ்வளவு கெட்டது என்றெல்லாம் கூற இயலாது. இவ்வுலகிலுள்ள எப்பொருளாயினும் அதைச் சொல்லவோ, காட்டவோ முடியும். எனவே அது ஸத்யமல்ல.

ப்ரதிபிம்பம், எதிரொலி, முத்துச் சிப்பி ஒளிரும்போது வெள்ளியாகத் தெரிவது அனைத்தும் மயக்கமே. ஆனால் இவை தொடர்பாக மனத்தில் ஏற்படும் உணர்வுகள் ஸத்யம்‌. எனவே சரீரம் பொய் என்றாலும் அதனால் வரும் உணர்வுகளால் அக்ஞானம் விலகி வைராக்யம் ஏற்பட்டு, ஞானத்திற்கு வழிகோலும்.

ஞானத்தை அடைந்தவன் இவ்வுலகில் எவரையும் புகழவோ, இகழவோ மாட்டான்.

உத்தவர் கேட்டார்.
எனில் பிறப்பு இறப்பு ஆகியவை யாருக்கு ஏற்படுகிறது கண்ணா?

கண்ணன் சிரித்தான். உத்தவா! உண்மையில் ஸம்சாரம் என்பது இல்லவே இல்லை. கனவு காணும்போது வரும் ஆபத்துகள் விழிப்பு நிலையில் இல்லை. கனவு முடியும்வரை கனவென்பது தெரியாது. கனவில் சிங்கம் வந்தால் பயந்துகொண்டு அலறுகிறான்‌. உணர்வு வந்துவிடுகிறது. பொருள் இல்லை. இல்லாத பொருளில் கிடைக்கும் சுகத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலையே இல்லை.

கனவு காணும் வரை கனவில் வரும் ஆபத்துகளும் உண்டு. விழித்துக் கொண்டால் எதுவுமே இல்லை.
சோகம், மகிழ்ச்சி, மோகம், லோபம், தாபம் போன்ற உணர்வுகள் ஆத்மாவுக்கில்லை. அவை சரீரத்தினுடையவை. ஆழ்ந்த உறக்கத்தில் எந்த உணர்வும் இல்லை

உடல், பொறிகள், ப்ராணன், மனம் ஆகியவற்றுடன் ஆத்மா தன்னைத் தொடர்புள்ளதாக எண்ணும்போது ஜீவன் என்று அழைக்கப்படுகிறது‌. தன்னை ஜீவன் என்றெண்ணும் வரையில் பரமேஸ்வரனின் காலச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு சுழல்கிறான்.

ஞானம் என்ற கத்தியால் இந்த மயக்கத்தை வெட்டவேண்டும். அதற்கு ஒரு ஸத்புருஷனான ஆசார்யனை நாடி ஞானோபதேசம் பெறவேண்டும். அப்படிச்செய்தால் சுதந்திரமாக இரண்டற்றவனாக ஆனந்தமாகச் சுற்றலாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

No comments:

Post a Comment