Monday, January 4, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 619

கண்ணன் மேலும் விளக்கினான்.

உத்தவா! உலகப் பொருள்களில் ஒரு உயர்வைக் கருதினால் அவற்றிடம் ஒரு பற்று வந்துவிடும். பற்றினால் அதை அடையும் ஆசை எழுகிறது. கிடைக்கவில்லையென்றாலோ, கிடைப்பதில் தடை வந்தாலோ கலகம்தான். கலகத்தினால் கோபம் வரும். கோபம் வந்தால் அறிவு மழுங்கும். நல்லதெது தீயதெதுவெனப் பிரித்தறிய இயலாது. அறிவு அழிந்ததும் சிந்திக்கும் சக்தி குறைந்துவிடும்.

விவேகம் அழிந்தால் மனிதத்தன்மை குறைந்து விலங்காகிவிடுகிறான். அத்தகையவனுக்கு இவ்வுலக இன்பமும் இல்லை. அவ்வுலக இன்பமும் இல்லை.

புலனுகர் பொருள் பற்றிய சிந்தனையே எப்போதும் இருந்தால் அவனும் ஒரு போகப்பொருளாகிவிடுகிறான். கொல்லன் பட்டறையிலுள்ள துருத்தி போல் மூச்சு விடுகிறான். வீண் வாழ்க்கை நடத்துகிறான்.

கசப்பு மாத்திரையின் மேல் இனிப்பு தடவிக் கொடுப்பதுபோல வேதங்களில் ஸ்வர்கம் மற்றும் நல்லுலகங்கள் பற்றிய வர்ணனை அமைந்துள்ளது. ஆனால் அவைதான் உயர்ந்த இலக்கு என்று வேதம் குறிப்பிடவில்லை. கர்மாக்களின் நோக்கம் சித்த சுத்தி கொடுத்து முக்தியில் ருசி உண்டாக்குவதே.

வேதத்தின் உட்கருத்தை அறியாதவர்கள் மலர் போன்ற ஸ்வர்கம்‌ முதலியவைகளை பழம் போன்று கருதி வழிதவறுகின்றனர். ஆனால், ஞானிகள் இவ்வாறு அறிவுறுத்துவதில்லை.

கர்மாவில் மூழ்குபவர்கள், ஸ்வர்காதி லோகங்கள், புலன் வழி இன்பங்கள்‌ ஆகியவற்றில் மயங்கி படைப்பின் காரணமான மூலபுருஷனையோ, அவர் ஆத்மாவாகத் தமக்குள் விளங்குவதையோ உணர்வதில்லை.

ரஜஸ், தமஸ், ஸத்வம் ஆகிய முக்குணங்களில் ஊன்றியிருப்பவர்கள் இந்திரன் முதலான தேவர்களை மிகவும் ஆழமான ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். அதில் சிறிதளவு கூட என்னை உபாசிப்பதில் காட்டுவதில்லை.

வேதங்களில் மூன்று பாகங்கள் உள்ளன. கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் ஆகியவை. இவை மூன்றிலுமே ஆராய்ந்து முடிவாகச் சொல்லப்படும் விஷயம் ஜீவனும் ப்ரும்மமும் ஒன்று என்பதே. ஆனால், முனிவர்கள் அதை இலை மறை காயாகச் சுட்டுகிறார்கள். அப்படிக் கூறுவதே எனக்கும் விருப்பமாயிருக்கிறது.

சித்த சுத்தி ஏற்படும் வரை கர்மாக்களை செய்வதே சிறப்பு. மனத்தூய்மை இல்லாமல் கர்மாக்களை விடுவது பொறுப்பின்மை. அது பாவமாகும். அதனால் ஆத்ம ஞானம் தெள்ளறிவு படைத்தவர்க்கே புலப்படும்.

வேதங்களின் பெயர் சப்தப்ரும்மம் என்பதாம். அவற்றின் ஒலி வடிவாக விளங்குவது நானே. அது பெருங்கடலைப் போன்றது. அதன் ஆழத்தை அறிய இயலாது. முனிவர்களால்‌ கூட வேதத்தின் முடிவான அபிப்ராயத்தை தெளிவாகக் காட்ட இயலாது.

தாமரைத்தண்டினுள் காணப்படும் மெல்லிய நூலைப்போல் சரீரத்தில் மெல்லியதாக அநாஹத ஒலி கேட்கும். அதுவே ஸப்த ப்ரும்மத்தின் நுண்ணிய வடிவமாகும்.

வேதஸ்வரூபமாகவும், அமுதமயாமாகவும் இருக்கும் நான் அதே சமயத்தில் ஹிரண்ய கர்பனாகவும் இருக்கிறேன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment