Wednesday, October 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 340

அப்போதுதான் பிறந்த, மனம் மயக்கும் அழகுடைய சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து தேவகி பேசினாள்.

இறைவா! தங்களுக்கு பிறப்பு, இறப்பு, வளர்தல், குறைதல், பாவம், புண்ணியம், விருப்பு, வெறுப்பு, சோகம், மோகம் ஆகியவை இல்லை. தன்னொளி கொண்டவர். எங்கும் நிறைந்தவர்.

புலன்களுக்கெட்டாதவர். இதுதான் என்று காட்ட இயலாதவர். தாங்களே பரம்பொருள். தங்கள் பாத கமலத்தில் சரணடைந்தவனுக்குக் காலபயம் இல்லை.
எனவே, கொடிய கம்சனிடம் பயந்த எங்களைக் காக்கவேண்டும்.

தங்களுடைய இந்த வடிவம் ஞானக் கண்களால் காணத் தக்கது. இதை மறைத்துக் கொண்டு சாதாரணக் குழந்தையாகத் தோன்றுங்கள்.

உலகனைத்தையும் தாங்கும் தாங்கள் கருப்பையினுள் ஒடுங்கியது மிகவும் வியப்பு.

தாயான தேவகி ஞானியைப் போல் பேசுகிறாள். அதுவரை மனக் கலக்கமுற்றிருந்த தேவகிக்கு இறைவன் தன் ஒரே காட்சியினால் ஞானத்தை அளித்தார். ஏனெனில், தொடர்ந்து வரப்போகும் பல வருடங்களுக்கு பிறந்த பச்சிளங்குழந்தையைப் பிரிந்து சிறையில் வாழப்போகும் தேவகிக்கு பிள்ளைப்பாசம் வந்தால் தாங்க இயலாதல்லவா? ஞானத்தைக் கொடுத்து அவளது துக்கத்தை மறக்கச் செய்கிறான் இறைவன். எங்கும் நிறைந்த பரம்பொருள் தன் குழந்தை என்றுணர்ந்தால் பிரிவேது? துக்கம்தான் ஏது?

இருப்பினும் தாயல்லவா? எனவே அற்புதக் குழந்தை என்று காட்டிக்கொண்டால் ஆபத்து வருமோ என்று அஞ்சி சாதாரண உலகக் குழந்தையைப் போல் மாறச் சொல்கிறாள்.

பிறப்பற்ற இறைவன் தாய் சொல்லைத் தட்டாமல் உடனே கேட்கிறான்.

செப்பு வாயைத் திறந்து குட்டி இறைவன் பேசத் துவங்கினான்.

தாயே! நீங்கள் முந்தைய காலத்தில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் உங்கள் பெயர் ப்ருச்னி. உங்கள் கணவரான இவர் ஸுதபஸ் என்ற பிரஜாபதியாக இருந்தார்.

ப்ரும்மதேவர் உங்கள் இருவரையும் பிரஜைகளைப் படைக்கக் கட்டளையிட்டார்.

நீங்கள் இருவரும் தூய்மையான மனத்துடன், புலன்களை அடக்கி என்னை வழிபட்டீர்கள். பன்னிரண்டு தேவ ஆண்டுகள் கடுந்தவம் செய்தீர்கள். அப்போது உங்கள்முன் தோன்றிய நான், நீங்கள் விரும்புவதைக் கூறும்படி கேட்டேன். நீங்கள் என்னைப் போல் ஒரு குழந்தை வேண்டுமெனக் கேட்டீர்கள்.

எனக்கு ஒத்தார் மிக்கார் எவருமில்லாததால் நானே உங்கள் இருவருக்கும் ப்ருச்னிகர்பன் என்ற பெயருடன் பிறந்தேன்.

மறுபடி அதிதி - கச்யபராக நீங்கள் பிறந்தபோது நானே உங்களுக்கு உபேந்திரன் என்ற பெயருடன் வாமனனாகப் பிறந்தேன். முன் எடுத்த பிறவிகளைத் தங்களுக்கு நினைவூட்டவே இவ்வடிவில் உங்களுக்குக் காட்சியளித்தேன். நீங்கள் இருவரும் என்னை பரம்ப்பொருள் என்றும், புதல்வன் என்றும் எண்ணி எண்ணி என்மீது அன்பு செலுத்தி, இப்பிறவியின் முடிவில் முக்தியடைவீர்கள்.
என்று கூறியபின், மேலும் சில விஷயங்களைச் சொல்லிவிட்டுச் சிறு குழந்தையாக ஆனார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment