ஸத்ர யாகம் என்பது ஆயிரம் வருடங்களுக்கு நடக்கும் யாகமாகும். அவ்வமயம் பருவ காலம் வந்தது. திடீரென ஒரு சுழற்காற்று ஒரு துர்நாற்றத்தைப் பரப்பிக்கொண்டு மண்ணை வாரியிறைத்தது.
பல்வலன் வேள்விக்கூடத்தில் மலத்தை மழை போல் பொழிந்து நடுவில் சூலமேந்திக் கொண்டு நின்றான்.
ஆங்காங்கே பிளவுபட்டு மலைபோல் பருத்த கறுத்த உடல், தாமிர நிறத்தில் செம்பட்டையான முடி, மீசையும், தெற்றிப்பற்களும் கொண்ட பயங்கரமான முகம்.
அவனைக் கண்டதும் பலராமன் உலக்கையையும், கலப்பையையும் நினைத்தான். நினைத்த மாத்திரத்தில் அவை பலராமனின் கண்முன்னால் தோன்றின.
பலராமன் அந்த அரக்கனைக் கலப்பையால் அருகில் இழுத்தான். பின்னர் உலக்கையால் தலையில் ஓங்கி அடித்தான். நெற்றி பிளந்து குருதி கக்கிக்கொண்டு அக்கணமே வீழ்ந்தான் பல்வலன்.
நைமிஷாரண்யத்து முனிவர்கள் அனைவரும் பலராமனை வாழ்ந்த்தினர். வாடாத தாமரைமலர்களாலான வைஜயந்தி மாலைகளையும், இரண்டு பட்டாடைகளையும், ஆபரணங்களையும் அளித்தனர்.
பலராமன் அவர்களை வணங்கி விடைபெற்று, கௌசிகி நதியில் நீராடி, ஸரயு தோன்றும் ஸரோவரை அடைந்தான்.
அங்கே நீராடி, ஸரயுவை ஒட்டியே நடந்து சென்று ப்ரயாகையை அடைந்தான். ப்ரயாகையில் தர்ப்பணங்களை முடித்து புலஹாஸ்ரமம் சென்றான்.
பின்னர் கோமதி, கண்டகி, விபாசை, சோணை ஆகிய நதிகளிலும் நீராடி கயா சென்றான். அங்கே பித்ருக்களை வழிபாடு செய்தான். பின்னர் கங்கை கடலுடன் இணையும் முகத்துவாரத்தை அடைந்தான். அங்கே நீராடியபின் மகேந்திரமலை சென்று பரசுராமரை தரிசனம் செய்தான். கோதாவரியின் ஏழு கிளைநதிகள், வேணா, பம்பை, ஸரஸ், பீமரதி முதலிய அனைத்து நதிகளிலும் நீராடி அவற்றைப் புனிதமாக்கினான். அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சுப்ரமண்யரை தரிசனம் செய்தான். பின்னர் சிவஸ்தலமான ஸ்ரீ சைலத்தை வந்தடைந்தான். அங்கே சிலகாலம் தங்கி வழிபட்டு, பின்னர் திராவிட தேசம் வந்து வேங்கடமலையைக் கண்டு வணங்கினான். பின்னர் காமகோட்டம் எனப்படும் காஞ்சிபுரம் வந்து சிலகாலம் தங்கியிருந்தான். அதன் பின்னர் காவிரியில் நீராடி ஸ்ரீ ரங்கம் சென்று தங்கினான். அதன் பின் வ்ருஷபாசலம், தென்மதுரை ஆகியவற்றை தரிசனம் செய்துகொண்டு ராம ஸேதுவை அடைந்தான். அங்கு அந்தணர்களுக்கு பத்தாயிரம் பசுக்களை வழங்கினான். பின்னர் க்ருதமாலா எனப்படும் வைகை நதி, தாமிரபரணி, மலயமலை ஆகியவற்றைக் கடந்து அங்கே தவம் செய்துகொண்டிருந்த அகஸ்தியரை அபிவாதனம் கூறி வணங்கினான். அவரிடம் ஆசிபெற்ற பின், கன்யாகுமரியை அடைந்து அங்கே கோவில் கொண்டுள்ள பகவதியை தரிசனம் செய்தான். அங்கிருந்து பால்குனம் எனப்படும் அனந்தசயனம் (திருவனந்தபுரம்) சென்று பஞ்சாப்ஸரஸில் நீராடி பத்தாயிரம் பசுக்களை தானம் செய்தான்.
பின்னர் கேரளம் வழியாகச் சென்று திரிகர்த்த தேசத்தையும் கடந்து, கோகர்ணம் என்ற சிவக்ஷேத்ரத்தை அடைந்தான். தீவின் நடுவில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆர்யாம்பாளை தரிசனம் செய்தபின் சூர்பராக க்ஷேத்ரம் சென்றான். தாபி, பயோஷ்ணி, நிர்விந்த்யா ஆகிய நதிகளில் நீராடிய பின் தண்டகாரண்யத்தை அடைந்தான் பலராமன்.
பின்னர் ரேவா நதியில் நீராடி அதன் கரையிலுள்ள மாஹிஷ்மதி நகரம் சென்றான். அங்குள்ள மனு தீர்த்தத்தில் நீராடி மீண்டும் பிரபாஸ க்ஷேத்ரம் வந்தடைந்தான்.
அங்கிருந்த அந்தணர்களைக் கண்டு வணங்கி நாட்டு நிலவரம் பற்றிக் கேட்டான்.
அவர்கள் மஹாபாரத யுத்தம் நடந்துகொண்டிருப்பதாகவும், அதில் பாரிலுள்ள அத்தனை அரசர்களும் மடிந்தனர் எனவும் கூறினர். பூமியின் சுமையைக் கண்ணன் குறைத்துவிட்டான் என்று நிம்மதியடைந்த பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடக்கும் கதாயுத்தத்தைத் தடுக்க விரும்பி குருக்ஷேத்ரம் சென்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment