கண்ணன் பெரியவர்களின் அனுமதி பெற்று பயணத்திற்குத் தயாரானான். மனைவிகள், மக்கள், தேவையான கருவிகள் எல்லாவற்றையும் முதலில் கிளப்பினான். பின்னர் தான் தனியாகத் தேரில் கிளம்பினான். அவனைத் தொடர்ந்து நால்வகைப் படையும் கிளம்பிற்று.
செல்லும் வழியில் ஆங்காங்கே தங்குவதற்கு விளாமிச்சை வேரால் ஆன கூடாரத் திரைகள், படுகைகள், கம்பளிகள், ஆடைகள் ஆகியவற்றை ஒட்டகம், எருது, கழுதைகள், எருமைகள் பெண்யானை ஆகியவற்றின் மீது ஏற்றிச் சென்றனர்.
ஒரு மக்கள் கடலே நகர்ந்து செல்வதுபோல் இருந்தது.
நாரதர் கண்ணனை வணங்கி வான்வழிச் சென்றார். கண்ணன் வந்திருந்த தூதுவனிடம், அரசர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல். விரைவில் வந்து ஜராஸந்தனைக் கொல்வேன். என்று கூறியனுப்பினான்.
ஆனர்த்தம், ஸௌவீரம், மருப்ரதேசம், குருக்ஷேத்ரம் ஆகியவற்றையும், நதிகள், மலைகள், பல நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றையும் தாண்டிச் சென்றது கண்ணனின் படை.
த்ருஷத்வதி, ஸரஸ்வதி ஆகிய ஆறுகளைக் கடந்து இந்திரப்ரஸ்தம் வந்தடைந்தனர்.
தர்மபுத்ரன் கண்ணனை உபாத்யாயர்களும் நண்பர்களும், புடைசூழ முறைப்படி வரவேற்றார்.
வேதகோஷங்கள், வாத்யங்கள் முழங்க பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்தார் யுதிஷ்டிரர்.
கண்ணனை ஆரத்தழுவி மகிழ்ச்சியுற்றார். கண்களில் நீர் பொங்க, உடல்பூரிக்க உலக மரியாதைகளை மறந்தார். பீமன், அர்ஜுனன் அனைவரும் கண்ணனைக் கட்டித் தழுவிக்கொண்டனர். நகுலனும் சகாதேவனும் வணங்கி நின்றனர்.
கண்ணனை வரவேற்க இந்திரப்ரஸ்த நகரம் மிகச் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் நீராடி, புத்தாடை உடுத்தி, ஆபரணங்களும், மாலைகளும் அணிந்துகொண்டு உலா வந்தனர். கண்ணன் மீது பூமாரி பொழிந்தனர். அனைத்து இடங்களிலும் தீப வரிசை ஒளிர்ந்தது.
கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் கண்ணனைக் காணும் ஆர்வத்துடன் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். கண்ணன் அவர்கள் அனைவரையும் புன்னகையுடன் நோக்கினான்.
குந்தி திரௌபதியுடன் முன் சென்று வரவேற்றாள். கண்ணனைக் கட்டியணைத்துக்கொண்டாள். மாளிகைக்குள் நுழைந்ததும் ஆனந்தத்தால் தர்மபுத்ரர் முறைகளை மறந்தார். பிரமித்துப் போய் செயலற்று நின்றுகொண்டிருந்தார்.
திரௌபதியும், சுபத்ரையும் கண்ணனின் மனைவிகள் அனைவரையும் உபசரித்தனர்.
யுதிஷ்டிரன் கண்ணனை மகிழ்விப்பதற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தார்.
தன் படையுடன் இந்திரப்ரஸ்தத்தில் சில மாதங்கள் தங்கிய கண்ணன் அர்ஜுனனுடன் ரதத்தில் ஏறி அடிக்கடி நகர் வலம் வந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment