Friday, September 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 337

இறைவன் புவியில் அவதரிக்கும் பொற்காலம் வந்தது.
எல்லா நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் சாந்தமாக இருந்தன. ப்ரும்மாவின் நக்ஷத்ரமான ரோஹிணி வானில் வந்தாள்.

திசைகள் தெளிந்தன. பூமியின் எல்லா ‌இடங்களும்‌ மங்களகரமாய் விளங்கின.
ஆறுகளில் நீரோட்டம் தெளிந்திருந்தது. இரவாயினும் தாமரைகள் மலர்ந்திருந்தன.

எல்லாவிதமான மலர்களும் கால நேரம் மறந்து ஒரே சமயத்தில் மலர்ந்தன. வண்டுகளின் ரீங்காரத்துடன் காடு அழகாய் விளங்கியது.

கம்சனின் அட்டூழியத்தால் அந்தணர்கள் வளர்க்கும் மூவித அக்னிகளும் ஒளியின்றி இருந்தன.
இப்போது அவை பிரகாசிக்கத் துவங்கின.

வானில் துந்துபிகள் முழங்கின. கின்னரரும் கந்தர்வரும் பாடினர்.

வித்யாதரப் பெண்களும், அப்ஸரஸுகளும் நடனமாடினர்.

பகவான் அவதரிக்கும் காலம் வந்ததும் முனிவர்களும் தேவர்களும் பூமாரி‌ பொழிந்தனர். கிழக்கே பூர்ண சந்திரன் உதிப்பதுபோல் தேவகி வயிற்றிலிருந்து மறைந்து பகவான் வெளித்தோன்றினார்.

மிக அழகிய உருவம். செந்தாமரை இதழ் போன்ற கண்கள். கழுத்தில் கௌஸ்துப மணி. அரையில் மஞ்சள் பட்டாடை. நீருண்ட மேகம்போல் நீலமேனி. வைடூர்யக் கற்கள் பதித்த கிரீடம். சுருள் சுருளான கேசம், காதுகளில் அசைந்து கன்னங்களில் பளீரிடும் குண்டலங்கள். ஒளி வீசும் அரைஞாண், தோள்வளைகள், கங்கணங்கள். சின்னஞ்சிறு உருவத்திற்கேற்ப ஆயுதங்கள். குட்டி வெண்சங்கம், கிலுகிலுப்பை போன்ற கதை, தீபாவளிச் சக்கரம் போன்ற சக்கரத்தாழ்வார், அழகிய சிறிய தாமரை ஆகியவற்றை ஏந்திக்கொண்டு காட்சியளித்த இறைவனை வசுதேவர் கண்டார்.

கண்கள் மலர, இவ்வளவு நாள்களாக அவர்கள் பட்ட துன்பமெல்லாம் மறந்து இன்பவெள்ளம் சூழ்ந்தது.

இறைவனே புதல்வனாகப் பிறந்ததை உணர்ந்து, குழந்தை பிறந்ததும் செய்யவேண்டிய தானங்களை மனத்தினால் செய்தார் வசுதேவர்.

இறைவனைக் கண்டதும் ஏற்பட்ட ஞானத்தால், பரவசம் பொங்க வணங்கி வணக்கி எழுந்து நாத்தழுதழுக்கத் துதிக்கலானார்.

இவ்விடத்தில் பகவானை அத்புத பாலகன் என்று ஸ்ரீ சுகர் சொல்கிறார்..
எதனால் அப்படிச் சொன்னார்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 336

எங்கும்‌நிறை இறை இவ்வளவு சுலபமாக ஓரிடத்தில் அடைந்து தன்னை எளிமைப்படுத்திக்கொள்ளுமாகில் வாய்ப்பை விடலாமா?

ப்ரும்மா முதலான அத்தனை தேவர்களும் தேவகியை வலம் வந்து துதிக்கலாயினர்.

ஐயனே! தாங்கள் தங்கள் அடியார்களைக் காப்பதொன்றே கொள்கையாய் உடையவர்.
உண்மை ஒன்றினாலேயே அடையத் தக்கவர். முக்காலத்திலும் நிலைத்திருக்கும்‌ உண்மைப் பொருள்.

ஐம்பெரும்பூதங்களுக்கும் காரண வஸ்து. அவற்றின் அந்தர்யாமியாக இருப்பவர்.
அவை அழிந்தாலும் தான் அழியாமல் நிற்பவர். நேர்மை, இன்சொல் ஆகியவற்றால் அடையத் தக்கவர். இவ்வாறு எல்லாவகையிலும் சத்யமாய் விளங்கும் தம்மைச் சரண் புகுந்தோம்.

இவ்வுலகத்தை ஒரு மரமாகக் கொண்டால், அது பிரக்ருதியை (இயற்கை) ஆதாரமாகக் கொண்டது.
இன்ப துன்பங்கள் எனும் இரு பழங்கள் கொண்டது.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களே வேர்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை அதன் சுவைகள்.

ஐந்து ஞானேந்திரியங்களும் அதன் விழுதுகள்.

சோகம், மோகம், ஜரை, ம்ருத்யு, பசி, தாகம் என ஆறு தன்மைகள் கொண்டது.

தோல், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து ஆகிய ஏழு போர்வைகள் உடையது.

ஐம்பூதங்கள், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு கிளைகளும், கண், காது, மூக்கு, வாய் என முகத்தில் ஏழும், கீழே இரண்டுமாய் ஒன்பது வாயில்களும் கொண்டது.

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் ஆகிய பத்து வாயுக்களும் அதன் இலைகள்.

இம்மரத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரு பறவைகள்‌ உள்ளன.

இம்மரத்தின் தோற்றத்திற்கான காரணம் தாங்களே. அது ஒடுங்குமிடமும் தாங்களே. காப்பவரும் நீரே.அறிவிலிகள் இவற்றை வெவ்வேறாய்க் காண்கின்றனர்.

பேரறிவாகவும், ஆத்மாவாகவும் உள்ள தாங்கள் உலகின் நலனுக்காகப் பல வடிவங்களை ஏற்கிறீர்கள். அவை நல்லவர்க்கு இன்பம் அளிப்பவை. சத்வகுணம் பொருந்தியவை. தீயோர்க்கு நெருப்பைப் போன்றவை.

அடியார்க்கருள்பவரே! கருணை கொண்ட சாதுக்கள் எளிதில் கடக்க இயலாத சம்சாரக் கடலை தங்கள் திருவடியாகிய மரக்கலம் கொண்டு தாங்களும்‌ கடந்து, பிறருக்கும் உதவுவதற்காக இங்கேயே விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

சிலர் தாங்கள்‌ முக்தி பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் பக்தி செய்யாமல், கீழே விழுகின்றனர்.

தங்களிடம் அன்பு கொண்ட அடியவர்கள் எந்நிலையிலும் நல்வழியினின்று வழுவுவதில்லை. எவ்வித இடையூறுகள் வந்தாலும் அவற்றால் பயமின்றி எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அவர்களைக் காப்பவர் தாங்களே.

தாங்கள் ஸத்வ ஸ்வரூபமாக இருப்பதால், ஸத்வகுணத்தாலேயே தங்களைக் காண முடியும்.

மனத்தின் சாட்சியான தங்களை வாக்காலும், மனத்தாலும் அனுமானிக்க இயலுமே தவிர, தங்களது பெயரும் வடிவும் நிரூபிக்கத் தக்கவை அல்ல. ஆயினும் உபாசனைகளால் அடியவர்கள் தங்களை உணர்கிறார்கள்.

தங்களது திருநாமங்களை செவியால் கேட்டு, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்பவனுக்கு மீண்டும் பிறவி இல்லை.

தங்கள் திருவடிகளை பூமியில் வைப்பதாலேயே பூமியின் சுமை நீங்கும்.

மிக அழகிய, மெல்லிய, இலச்சினைகள் பொருந்திய தங்கள் திருவடிகளையும், தங்கள் கருணையையும் நாங்கள் நேரடியாகக் காணப்போகிறோம். இதைவிடப் பேறு ஒன்றுண்டா?

தங்கள் பிறப்பிற்குக் காரணம் தங்கள் திருவிளையாடலே.

தாயே! தேவகீ! தங்கள் பாக்யவசத்தால் பரம்பொருளான இறைவன், நமது நன்மைக்காக தனது பதினாறு பூரண கலைகளுடனும் தங்கள் திருவயிறு வாய்த்துள்ளார். கம்சனைக் கண்டு பயம்‌கொள்ளாதீர்கள். தங்கள் புதல்வன் அனைவரையும் காப்பார்.

இவ்வாறு துதித்துவிட்டு அனைத்து தேவர்களும் கிளம்பினர்.

அனைத்தையும் தேவகி கனவில் நடக்கிறது என்றும் திவ்ய சொப்பனம் என்றும் நினைத்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 335 கருவான பரம்

வைகுண்டத்தில் பரவாசுதேவனாக சேவை சாதிக்கும் பகவான், ஸாக்ஷாத் ப்ரும்ம ஸ்வரூபம். அவரை தரிசனம் கூட செய்ய முடியாமல், பாற்கடலின் கரையிலேயே நின்று ப்ரும்மாவை முன்னிட்டுக்கொண்டு தத்தம் குறைகளைச் சொன்னார்கள் தேவர்கள்.

ப்ரும்மாவாவது நேரில் பகவானைக் கண்டாரா என்றால் இல்லை. அவருக்கும் துர்லபமானது (கடினம்) பகவத் தரிசனம். உள்ளே அனுமதிக்கவும் இல்லை. மானசீகமாக ப்ரும்மாவின் தியானத்தில் பேசினார் பகவான்.

அப்பேர்ப்பட்ட பகவான் இப்போது தேவகியின் வயிற்றில்.
ஒரு நெகிழிப்பை போன்ற மெல்லிய கர்பப்பை. அதைச் சுற்றி சந்தனமும், பன்னீருமா வைத்திருக்கிறார்கள்?

ஒரு பக்கம் இரைப்பை. தாய் ஏதாவது சூடாகவோ குளிர்ச்சியாகவோ உண்டால், குழந்தையைத் தாக்கும். ஒரு பக்கம் கணையம், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், இரத்தம், மலம் இவை சூழ விளங்கும் கர்பப்பை.

வீட்டுக்குள்ளேயே இருக்கும் கழிப்பறையை நன்றாக‌ சுத்தம்‌ செய்திருந்தாலும்கூட, நாம் சாதாரணமாகத் திறந்து வைப்பதில்லை. மற்ற அறைகளிலில் அதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க கதவை மூடி வைக்கிறோம்.

இந்த மெல்லிய கர்பப்பைக்குள் முழுவதும் நீர், இருள். அந்நீரில் சிற்சிறு கிருமிகள் உண்டாகி குழந்தையின் மெல்லிய சருமத்தை அவ்வப்போது தீண்டும்.

தாயார் காரமான உணவு உண்டால் குழந்தைக்குக் கண் எரியுமாம்.

பத்து மாதங்கள் சிறைவாசம். கையை காலை விருப்பம்போல் நீட்டக்கூட முடியாமல், சுருண்டு கிடக்கவேண்டும்.

தாய் ஏதாவது பயமுறுத்தும் நாராசமான சத்தங்களைக் கேட்டால்‌ குழந்தை அஞ்சும். தாயின் காம, கோப, பய உணர்வுகள் குழந்தையின் மனத்தையும் பாதிக்கும்.

கர்பப்பையைச் சுற்றி இருக்கும் மற்ற பாகங்களிலிருந்து நறுமணமா வீசப்போகிறது?

இத்தகைய கொடுமையான கர்ப வாசத்திற்கு பல‌ மஹான்கள் கூட அஞ்சுவதைப் பார்க்கிறோம்.

மஹாலக்ஷ்மித் தாயார் கூட கர்பவாசம் வேண்டாம் என்று பொற்றாமரையிலோ, துளசிச்செடியின் அடியிலோ, பூமிக்கடியில் பெட்டிக்குள்ளோ நேரடியாக குழந்தையாக அவதாரம்‌ செய்கிறாள்.

ஆனால், பகவானுக்கு எவ்வளவு ஸௌலப்யம் (எளிமை) பாருங்கள்! யோகியர்க்கும் துர்லபமான இறைவன் இத்தகைய கொடிய கர்பவாசத்தை விரும்பி ஏற்கிறான்.

இவ்வளவு சுலபனாக பகவான் வரும்போது அவனை விடலாமா?

இறைவனைச் சுமந்த தேவகி தேவமாதாகவே விளங்கினாள்.

வைகுண்டத்தில் தரிசனம் கூட கிடைக்காத தேவர்கள் இப்போது தேவகியைச் சுற்றி சுற்றி வலம் வந்து வணங்கித் துதி செய்கிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, September 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 334

அனந்தன் ஏழாவது கர்பமாக தேவகியின் கருவறையில் குடி புகுந்தார்.
கம்சனால் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டுள்ள பயத்தை உணர்ந்த பகவான் தான் அவதாரம் செய்ய முடிவெடுத்தார்.

யோகமாயையான துர்கையை அழைத்தார்.

மங்கள வடிவுள்ள தேவீ! கோபர்களும், பசுக்களும் நிறைந்த அழகிய ஆய்ப்பாடியில் வசுதேவரின் மனைவி ரோஹிணி வசிக்கிறாள்‌. வசுதேவரின் மற்ற மனைவிகளும் கம்சனுக்கு பயந்து வெவ்வேறு இடங்களில் மறைந்து வசிக்கிறார்கள்.

தேவகியின் வயிற்றில் என் அம்சமான ஆதிசேஷன் கருவாக அமர்ந்திருக்கிறார். நீ அந்தக் கருவை உன் யோக சக்தியால் எடுத்து ரோஹிணியின் வயிற்றில் மாற்றி வைத்துவிடு.

நான் தேவகியின் வயிற்றில் உடனே கருவாய் உருக்கொள்வேன். நீ சேஷனை மாற்றியபின், ஆய்ப்பாடியின் தலைவரான நந்தனின் மனைவி யசோதாவின் வயிற்றில் பிறப்பாய்.

விரும்பியதனைத்தும் வழங்கும் உன்னை மாந்தர் பல்வேறு உபசாரங்களுடன் வழிபடுவர். பூவுலகில் என் சகோதரியாகப் பிறக்கப்போகும் உனக்கு துர்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, க்ருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகை என்னும் பெயர்களில் கோவில்கள் ஏற்படும்.

உன்னால் கர்பத்திலிருந்து மாற்றப்படுவதால், ஸங்கர்ஷணன் என்றும், எல்லோரையும்‌ மகிழ்விப்பதால் ராமன் என்றும், வலிமை மிக்கவராதலால் பலன் என்றும் சேஷன் அழைக்கப்படுவார்.

பகவான் கூறியதைக் கேட்ட மாயை, 'அப்படியே செய்கிறேன்' என்று கூறி, அவரை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டாள்.

பூமிக்கு வந்து, ஏழு மாதங்களாய் வளர்ந்திருந்த தேவகியின் கருவை ஒரே கணத்தில் மாற்றி ரோஹிணியின் வயிற்றில் வைத்தாள். தானும் சென்று யசோதாவின் வயிற்றில் அமர்ந்துகொண்டாள்.

உறங்கி எழுந்து பார்த்தால், திடீரென்று வயிற்றில் ஏழு மாதக்கரு. எப்படி இருந்திருக்கும் ரோஹிணிக்கு?

கருவில் குடியிருந்தது பகவானின் அம்சமான சேஷன் ஆனதால், அவளுக்குப் பல தெய்வீக சொப்பனங்கள் ஏற்பட்டன. புரியாவிட்டாலும், ஏதோ தெய்வ சங்கல்பம் என்று மன அமைதி கொண்டாள். அவளைப் பற்றிய தகவல்கள் எதுவும் கசியாமல் நந்தகோபர் ஜாக்கிரதையாகப் பார்த்து க் கொண்டார்.

அங்கே தேவகியின் நிலை?

இதுநாள் வரை குழந்தை பிறந்துவிடும். அதைக் கண்ணாலாவது பார்க்கலாம். இந்தக் குழந்தை கம்சன் மீது தான் கொண்ட பயத்தால்  ‌கருவிலேயே கரைந்துவிட்டதோ என்றெண்ணி அழுதழுது தானும் கரைந்தாள்.

தேவகியிடம் இறையின் அவதாரம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் கரு கலைந்ததென்றெண்ணி மிகவும் வருந்திப் புலம்பினர்.

அந்நேரத்தில் அனைவர்க்கும் ஆறுதல் வருமாப்போலே ஸாக்ஷாத் பகவான் சிறு தீபம்போல் வசுதேவரின் மனத்தில் நுழைந்து, தேவகியின் கருவில் புகுந்தார்.

பகவானைக் கருவில் கொண்ட தேவகி அதிகாலையில் சூரியனைக் கொண்ட கீழ்திசைபோல் பிரகாசித்தாள்.

அண்டம் தாங்கும் இறைவனைக் கருவில் தாங்கிய தேவகி கம்சனின் மாளிகையில் சிறைப்பட்டு குண்டத்தில் அடைபட்ட தீம்பிழம்பாய், துஷ்டனிடம் அடைபட்ட வேதவித்யையாய் ஒளி மங்கி பிரகாசித்தாள்.

அவளைக் கண்டதுமே கம்சனுக்கு பயம் ஏற்பட்டது. என்னதான் அழுக்கு உடைகளுடன், சிறையிலிருந்தாலும், தேவகியின் ஒளியும், அழகும் முன்போல் இல்லை. அதைக் கண்டு பலவாறு யோசித்தான்.

இவளது கருவில் இறைவன் இருப்பானோ, இப்போது இவளைக் கொன்றால் பழி வருமோ, கர்பிணியைக் கொல்வது என் ஆயுளை உடனேயே அழிக்குமே.

இவ்வாறு யோசித்து அவளைக் காணவும் பயந்துகொண்டு நடைபிணமாய் அரண்மனைக்குள் அடைந்து கிடந்தான். எதுவாயினும் குழந்தை பிறந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றினாலும், எப்போதும் ஸ்ரீஹரியையே நினைக்கலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, September 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 333

கம்சன்தான் முட்டாளாயிற்றே. நாரதர் சொன்னதைக்‌கேட்டபோதும் அப்போதைக்கு அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
அவர் புறப்பட்டுச் சென்றதும் அதே அரசவையில் தனிமையில் வெகுநேரம் அமர்ந்திருந்தான்.

பயந்தவனுக்குத் தனிமையே எமன். மனத்தில் எழும் விதம் விதமான சந்தேகங்களை தனிமை பூதக் கண்ணாடி வைத்துப் பெரிய காட்சியாகக் காட்டும்.

விளையாட்டாக நாற்காலிகளை எண்ணத் துவங்கினான். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாற்காலிகளிலிருந்து எண்ண எண்ண ஒவ்வொரு முறையும் எட்டாவது நாற்காலியும் வெவ்வேறாக வந்தது.

தேவர்கள் அனைவரும் பகவத் கைங்கர்யத்திற்காகப் பிறந்திருக்கிறார்கள் என்ற‌ நாரதரின் கூற்று நினைவுக்கு வர, தன்னைப் பற்றித்தான் சொன்னார் என்று உறைத்தது.

உடனே, காவலர்களை அழைத்து தேவகியையும் வசுதேவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். நேராக சிறைக்குச் சென்று, அந்தப் பச்சிளங்குழந்தையை தேவகியிடமிருந்து கதறக் கதற பிடுங்கினான்.

அங்கிருந்த பெரிய கல்லில் குழந்தையின் கால்களைப் பிடித்து தேங்காய் உடைப்பதுபோல் மடேரென்று அடித்தான்.
அன்று தேவகியின் அலறலில் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப் போனது.

இதையெல்லாம்‌ கேள்விப்பட்டு கம்சனின் தந்தையும் அரசருமான உக்ரசேனர் கம்சனைக் கண்டிக்கத் தலைப்பட்டார்.

கம்சனுடைய ஆதரவாளர்கள் அனைவரும் அசுரர்களே. அவர்களின் துணையுடன் தந்தையையும் சிறையிலிட்டான் கம்சன்.

தனக்குத்தானே பட்டாபிஷேகம் செய்துகொண்டு மதுராவின் அரசனாக அரியணை ஏறினான்.

ஏற்கனவே மந்திரி சபையில் இருந்த மதியூகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, அசுரப் படையை மந்திரிகளாக நியமித்தான்.

ஒவ்வொருவரும் மக்களைத் துன்புறுத்துவதில் வல்லவர்.
வருடத்திற்கொன்றாக வசுதேவருக்கு மேலும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவர்களின் பெயர்களாவன, ஸுஷேணன், பத்ரஸேனன், ருஜு, ஸம்மர்தனன், பத்ரன் ஆகியன.

'மக்கள் அறுவரைக் கல்லிடை மோதி' என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடனேயே கம்சனுக்குத் தெரிவிக்கப்படும். உடனடியாக சிறைச்சாலைக்கு வந்து முதல் குழந்தையைக் கொன்றதுபோலவே, ஒவ்வொரு குழந்தையையும் கல்லில் அடித்துக் கொன்றான் அந்தக் கல்நெஞ்சக்காரன்.

பகவத் கைங்கர்யத்தில் சிறந்தவர் ஆதிசேஷன். இராமாவதாரத்தில் பகவானுக்கு இளவலாகப் பிறந்ததால் அவருக்கு பகவானுக்கு சேவை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள்‌ கிடைத்தன. வைகுண்டத்தில் இருந்தால் ஒரே ஒரு கைங்கர்யம்தான்.

பூமியில் பகவானின் அவதார காலத்தில் அவருடன் பிறந்தால், எத்தனை எத்தனை கைங்கர்யங்கள்?

ஏவல்‌ செய்யலாம், கால் பிடித்துவிடலாம், விசிறலாம், சமைத்துக் கொடுக்கலாம், பரிமாறலாம், அனுஷ்டானத்திற்கு உதவலாம், நிழல் போல் எங்கு சென்றாலும் அவரது அழகை ரசித்துக்கொண்டே உடன் செல்லலாம், அவர் பேசப் பேச குரலினிமையில் மயங்கலாம், இன்னும்‌ எவ்வளவோ.‌ ஆதிசேஷனோ லக்ஷ்மணனாகப் பிறந்து அத்தனையும் செய்து இப்போது நன்றாக ருசி கண்டுவிட்டார்.

எனவே பகவான் அவதாரம் செய்யப்போகிறார் என்றதும், பூமிக்கு ஓடிவந்து தேவகியின் கர்பத்தில் அமர்ந்து விட்டார். ஆனால், ஆர்வமிகுதியால், முந்தி வந்ததால், பகவானின் அண்ணனாக அமையும் பேறு பெற்றார்.

உலகைத் தாங்கும் ஸங்கர்ஷணனை வயிற்றில் தாங்கும் பேறு பெற்ற தேவகி இரண்டாவது சூரியன்போல் ஜொலித்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 332

முதன் முதலில் பிறந்த பச்சிளங்குழந்தையை, அதன் முகத்தைக் கூடப் பாராமல், தூக்கிக்கொண்டுபோய்க் கம்சனிடம் கொடுக்கத் துணிந்தார் வசுதேவர்.

கம்சன் அவரை நன்கறிந்தவன் ஆனாலும், இச்செயலால் ஒரு கணம் அசந்து போய்விட்டான். மிகவும் மகிழ்ந்தான்.
அவனது மனம்கூட சற்றே இளகியது.

இந்தக் குழந்தையால் எனக்கு ஆபத்தில்லை வசுதேவரே. எட்டாவது குழந்தையால்தானே மரணம். நீங்கள் இதை எடுத்துச் செல்லலாம். என்று கூறினான்.

நல்லது என்று கூறிவிட்டு வசுதேவர் மீண்டும் பிள்ளையை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

புண்ணியச் செயலோ, பாவச் செயலோ ஒரேயடியாகச் சேர்ந்து கனிந்தால்தான் அது பலன் தரும் வேளை வரும். கம்சன் ஏற்கனவே பல பாவச் செயல்களைச் செய்தவன் ஆனாலும், பகவான் கையால் வதம் ஆகும் அளவிற்கு பாவங்கள் சேரவில்லை போலும்.

அவன் பாவச் செயல்களைச் செய்ய தாமதித்தால், பகவானின் அவதாரவேளையும் தள்ளிப்போகும்.
வெகு சீக்கிரமே பகவான் அவதரிக்க வேண்டும் என்று விரும்பிய நாரதர், கம்சனைச் சற்று தூண்டிவிட எண்ணினார்.
அப்போதுதான் பகவான் சீக்கிரமாக அவதாரம் செய்வார் என்பதால் அப்படிச் செய்தார்.

சாதுக்கள் உலக நன்மைக்காகவும், பகவானுக்காகவும் எத்தகைய செயலை வேண்டுமானாலும் செய்வர். தம்மைத் தாழ்த்திக்கொண்டு பிறரை உயர்த்துவதில்‌ சாதுக்களுக்கும் பகவானுக்கும் ஓயாத போட்டி நிலவுகிறது.

அம்பரீஷனின் சரித்திரத்திலும், துர்வாசர் கோபப்பட்டு ஆபிசாரத்தை ஏவுகிறார். அம்பரீஷனின் பெருமையை வானளாவ உயர்த்துவதற்காக அப்படிச் செய்தார். அதை நன்கு உணர்த்தவே ஸ்ரீசுகர் அவரது வருகைக் காட்சியில் ஸாக்ஷாத் பகவான் துர்வாஸ: என்கிறார். அவர் ஞானி, பரமேஸ்வரனின் அம்சம். அவருக்குத் தெரியாதா என்ன? அம்பரீஷனைப் பற்றி? ஈரேழு பதின்னான்கு லோகங்களிலும் அம்பரீஷனின் புகழை நிலைக்கச் செய்யவே அத்தகைய காரியத்தைச் செய்தார். அது தகாத காரியம்‌போல் தெரிந்தாலும், உலகனைத்திற்கும் அம்பரீஷனின் பக்தி புலனாயிற்றே. ஸ்ரீ சுதர்சனத்தின் மஹிமையும் புலனாயிற்று.

இப்போது நாரதர் கம்சனின் அவைக்குச் சென்றார்.
அசுர சபையானாலும், தேவ சபையானாலும்
அவருக்கு மட்டும் வரவேற்பு உண்டு.

ஹரி நாமம் சொன்னால்‌ தண்டனை கொடுக்கும் ஹிரண்யகசிபுவின் சபையில்கூட நாராயண நாமத்தை வீணையில் மீட்டிக்கொண்டு நாரதர் செல்ல, அவன் அவரது இசையை ரசிக்கிறான் என்னும்போது கம்சன் எம்மாத்திரம்?

நாரதருக்கு முறையான வரவேற்பு கொடுத்து, ஆசனமளித்தான் கம்சன்.

என்ன கம்சா? கவலையாக இருக்கிறாய்?

மரண பயம்தான் ஸ்வாமி. உங்களுக்குத் தெரியாதா?
அசரீரி தேவகியின் எட்டாவது குழந்தையால் மரணம் என்று சொல்லிற்று.

முதல்‌ குழந்தை பிறந்துவிட்டது போலிருக்கிறதே.

ஆம்‌ மஹரிஷி. அதனால் எனக்கு ஆபத்தில்லையே. வசுதேவர் கொண்டு வந்தார்தான். ஆனால், நான் போகட்டும் என்று அனுப்பிவிட்டேன்.

ஓ.. அப்படியா..

தேவர்கள் எல்லாரும் பூமியில் பிறந்திருக்கிறார்கள் கம்சா. அதிருக்கட்டும்?
அதோ இங்கிருக்கும்‌ நாற்காலிகளில் எது எட்டாவது நாற்காலி? சொல் பார்க்கலாம்.

இதென்ன கேள்வி ஸ்வாமி?

சும்மா சொல்லேன் பார்க்கலாம்.

இதுதான் மஹரிஷி. என்று கம்சன் ஒன்றைக் காட்ட,

இந்தப் பக்கத்திலிருந்து எண்ணினால்?

அதோ அது.. என்று இன்னொன்றைக் காட்டினான் கம்சன்.

தேவர்களின் கணக்கு விநோதமானது கம்சா. புத்தியுடன் பிழைத்துக்கொள்

என்று கூறிவிட்டு
நாராயண நாமத்தை கர்ஜித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் ‌நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 331

கம்சனிடமிருந்து தேவகியைக் காக்கப் பலவாறு பேசினார் வசுதேவர். எதற்கும் அவன் மனமிரங்காததால், கடைசி முயற்சியாக இப்படிச் சொன்னார்.

இளகிய மனமுள்ளவரே! அசரீரி வாக்கின்படி தேவகியின் எட்டாவது புதல்வனால்தானே உங்களுக்கு ஆபத்து? இந்த அபலையான தேவகியால் எந்த ஆபத்தும் இல்லையே. எனில், எங்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும், பிறந்ததுமே உங்களிடம் ஸமர்ப்பிக்கிறேன். இவளை விட்டுவிடுங்கள்.

மகா கொடியவன் ஆனாலும், வசுதேவர் ஸத்யசந்தர் என்பதில் கம்சனுக்கு எள்ளளவும் ஐயமில்லை. கொடுத்த வாக்கைக் காப்பவர் என்று நம்பினான். எனவே இம்முறை சற்று இரங்கி கழுத்திலிருந்த கத்தியை எடுத்தான்.

மிகவும் கோபமாக வீரர்களை அழைத்தான்.
இருவரையும் காவலில் வையுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு ரதத்திலிருந்து இறங்கி ஒரு குதிரையின் மீதேறிக்கொண்டு வேகமாகச் சென்றான்.

வீரர்கள் வசுதேவரையும் தேவகியையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். இருவரையும் தனித்தனிச் சிறையில் அடைக்கச் சொல்லி கம்சன் குறிப்பேதும் கொடுக்கவில்லை. அதைப் பற்றிய யோசனையும் அவனுக்கில்லை.

அசரீரி கம்சனை முட்டாளே! என்று விளித்தது. அவன் ஏற்கனவே மூடன்தான் ஆனாலும், இப்போது அதுவே ஆசீர்வாதம் போலாகி கம்சனின் மூளை சிந்திக்கும் திறனற்று சுத்தமாக மழுங்கிப்போனது.

தம்பதிகளை வெவ்வேறு அறைகளில் சிறைப்படுத்தினால், அங்கே குழந்தைப்பேற்றிற்கான வாய்ப்பே இருந்திருக்காது. மரணபயமும் தேவையில்லை.

ஆனால், எப்போதுமே, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், எத்தனை திட்டங்கள் போட்டாலும், தெய்வ ஸங்கல்பம் மட்டுமே வெல்லும். அதனால், இந்த சாதாரண விஷயம் கூட தோன்றாத அளவிற்கு கம்சன் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டிருந்தான். எனவே தம்பதிகளைப் பிரித்துவைக்கத் தோன்றவில்லை.

காலம் சுழன்றது. எல்லாருக்கும் தெய்வம் போன்றவளான தேவகி வருடத்திற்கொன்றாக குழந்தைகளைப் பெற்றாள். தெய்வம் வந்து குழந்தையாகப் பிறக்கப்போவதால், தேவகியை தெய்வம் போன்றவள் என்று வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

முதல் குழந்தை ஆண் குழந்தை. பிறந்ததும், அதற்கு கீர்த்திமந்தன் என்று பெயரிட்டார் வசுதேவர்.

பொய்க்கு அஞ்சும் வசுதேவர், அந்தக் குழந்தையை தேவகியிடமிருந்து வாங்கினார். தாயின் கதறலை விடவும் சத்தியத்தை மதித்தார் அந்த மஹாத்மா.

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க தைரியமற்றவராய், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு காவலர் பின்தொடர, கம்சனின் அரண்மனையை நோக்கி நடந்தார்.

நல்லாருக்குத் தாங்க இயலாதது எது?
அறிவாளிகளுக்கு எதுதான் வேண்டாம்?
துஷ்டர்களால் செய்ய இயலாத கொடுமைதான் உண்டா?
மனத்தை அடக்கியவர்க்கு செய்ய இயலாத தியாகம் ஏது?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 330

கத்தியுடன் நிற்கும் கம்சனைப் பார்த்து வசுதேவர் கூறலானார்.

தாங்கள் வீரர்களில் தலைசிறந்தவர் என்று புகழ் பெற்றவர். அப்படியிருக்க, ஒரு பெண்ணை, அதிலும் மணக்கோலத்திலிருக்கும் சொந்த சகோதரியை, மகளுக்கொப்பானவளைக் கொல்லலாமா?

மரணம் என்பது பிறவி எடுத்தோர் அனைவர்க்கும் நிச்சயமானது. இன்றோ, நாளையோ, நூறாண்டுகள்‌ கழித்தோ கூட வரலாம்.
உடலைப் பிரியும் ஜீவன் தன் வசமிழந்து வினைவழிச் சென்று வேறு உடல் பெற்றுவிடுகிறது.

நடந்து செல்லும்போது ஒரு காலை ஊன்றிய பின்பே மறு காலை பூமியிலிருந்து எடுக்கிறோம். அதுபோல் ஜீவனும் மற்றொரு உடலைப் பற்றிக்கொண்ட பின்பே வாழும் உடலை விடுகிறது.

பலதடவைகள் மனத்தால் பார்த்து, கேட்டு, உருவகப்படுத்தியதை விவரிக்க முடியாமல் வார்த்தையின்றித் தவிப்பதுபோல் முன்பிருந்த உடலின் நினைவை மொத்தமாய் இழந்து, ஆனால், வினைப்பயனையும், அனுபவ அறிவையும்‌ சுமந்துகொண்டு வேறு உடலை ஜீவன்‌அடைகிறது.

வினைப்பயனின்படி, மாயையினால் தூண்டப்பட்டு மனம் எந்த உடலின்பால் இழுக்கப்படுகிறதோ அதுவே அடுத்த பிறவியாக அமைகிறது.

காற்றினால் நீர் அசையும்போது
நீர்நிலையில் எதிரொளிக்கும் சூரியனும் அசைவதுபோல் தோன்றும்.
நீரில் தெரியும் சூரியன் அசைவதை வைத்து வானத்து சூரியனும் அசைகிறது என்று கொள்ளலாகுமா?

அதுபோல் பிறவியை நிலையென நினைத்துக்கொண்டு பாவங்கள் செய்யலாகாது.
இயல்பாகவே எளியோரிடம்‌ அன்பு காட்டும் நீங்கள் இவளைக் கொல்லலாகாது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு வசுதேவர் கூறிவிட்டு கம்சனைப் பார்த்தார்.

ம்ஹூம். அவன் சற்றும் மனம் இரங்கியதாகத் தெரியவில்லை. இறுகிப்போன கடுமையான முகத்துடன், தேவகியின் கழுத்தில் கத்தியை வைத்தபடியே நின்றிருந்தான்.

அந்த துஷ்டனைப்‌ பார்த்து, வசுதேவர் மேலும்‌ பேசத் துவங்கினார்.

நன்னடத்தை உள்ளவரே! ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். இவளுக்கு குழந்தை பிறக்கும் என்பது என்ன நிச்சயம்?
அதுவும்‌ எட்டு குழந்தைகள் பிறக்கும் என்பதற்கு உத்தரவாதம்‌ இருக்கிறதா?

அப்படியே பிறந்தாலும் அதற்கு முன்பே கூட இயற்கையாகவே இவளோ, நானோ, அந்தக் குழந்தைகளோ, அல்லது நீங்களோ மரணிக்க வாய்ப்பு உள்ளதே‌.

அசரீரி வாக்கை நம்பி உங்கள் தங்கையை மணநாள் அன்றே கொல்லலாமா? தங்களைப் போன்றவர்க்கு அது அழகா? எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே. இது தங்களது புகழுக்குக் கேடாகாதா?
என்றார்.

அதற்கும் கம்சன் அசைந்து கொடுக்கவில்லை.
அத்தனை சாஸ்திரங்களும்‌ அறிந்த வசுதேவர் மிகவும் சிந்தித்தார். சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளில், கடைசி வழியைப் பின்பற்றமுடியாது. ஏனெனில் கம்சன் அதிகாரத்தில் இருப்பவன்.

சமாதானமும், பேதமும் பேசிப் பார்த்தார். பயனில்லை. இப்போது தானம் என்ற வழியைப் பின்பற்றி வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனத்துடன் மீண்டும் பேசினார்.

மிகவும் அஞ்சினாலும், கோபம் வந்தபோதும், அடக்கிக்கொண்டு சிரிப்புடன் பேசத்துவங்கினார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, September 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 329

மதுராவின் ராஜவீதிகளில் மணப்பெண்ணான தேவகியையும், மணமகனான வசுதேவரையும் அழைத்துக்கொண்டு வெகு விமரிசையான தேரோட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தான் கம்சன்.

குதிரைகளின் சத்தம், மக்களின் வாழ்த்தொலி, மங்கள வாத்யங்களின் முழக்கங்கள், அத்தனை ஆரவாரங்களையும், தாண்டி இடி முழக்கம்போல் ஒரு அசரீரி வாக்கு கேட்டது.

அடே! முட்டாளே!

என்ற அசரீரி வாக்கு அழைத்தது. அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்களில் அனைவர் காதுகளிலும் விழுந்தபோதும், ஒருவரேனும் அண்ணாந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், கம்சன் நிமிர்ந்து பார்த்தான்.

சுற்றியுள்ள அனைவரும் இந்திரன், சந்திரன் என்று முகஸ்துதி செய்தாலும், தான் யாரென்பது அவரவர்க்குத் தெரியுமல்லவா?
அசரீரி அழைத்ததும், கம்சன் நிமிர்ந்து பார்த்தான்.

அடே முட்டாளே! நீ யாரை அன்புடன் அழைத்துச் செல்கிறாயோ, அவளது எட்டாவது கரு உன்னை அழிக்கப்போகிறது.

அதைக் கேட்டானோ இல்லையோ, அனல் பட்ட பாம்பைப் போல் துள்ளிக் குதித்தான்.

துஷ்டர்களின் இயல்பே மிகவும் ஆபத்தானது. பிடித்துவிட்டால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அடுத்த கணமே ஏதாவது காரணத்திற்காகத் தூக்கிப் போட்டு மிதிக்கவும் தயங்கமாட்டார்கள்.

இவ்வளவு நேரம், தேவகியை ரதத்தில் வைத்துத் தானே பெருமையுடன் தேரோட்டிய கம்சன், அசரீரி வாக்கைக் கேட்ட அடுத்த கணத்தில் தேவகியின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவ்வளவு நேரம் எள் போட்டால் கூட தரையில் விழாமல் நிரம்பியிருந்த கூட்டம் காணாமல் போயிருந்தது. கம்சனின் ஊர் மக்களுக்குத் தெரியுமே. மந்திரிகள், வீரர்கள், ஊர் மக்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.

அத்தனை பெரிய ராஜவீதியில், நட்ட நடு வீதியில் தேரில் கம்சனும், தேவகியும், வசுதேவரும் மட்டும்.

பிறந்தது முதல் தேவகியைக் குழந்தைபோல் தூக்கி வளர்த்த தமையனான கம்சன், தனக்கு அவளது குழந்தையால் ஆபத்து என்றதும், தங்கையைக் கொல்லத் துணிந்தான். கத்தியை உருவிக்கொண்டு நிற்கிறான்.

காலையில்தான் திருமணமாயிருக்கிறது. மணம்‌முடித்து சில மணிநேரங்கள் கூட ஆகவில்லை. கைப்பிடித்த மனையாளுக்குத் துணையாக வசுதேவர் நிற்கிறார்‌. கம்சனின் சுபாவத்தை நன்கறிந்தவர். தடுத்தால் தானும் கொல்லப்படலாம் என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியும் மற்றவரைப் போல் விட்டு விட்டு ஓடாமல், கம்சனைச் சமாதனப் படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

எனில், சாஸ்த்ரோக்தமாக, மந்திரங்கள் ஒலிக்க நடக்கும் திருமணங்களின் மஹிமையே தவிர வேறென்ன?

திருமண மந்திரங்கள் மணமகனுக்கும் மணமகளுக்குமான பற்பல வாக்குறுதிகள் கொண்டவை மட்டுமல்ல, அவை மணவாழ்க்கைக்கான மந்திரக்காப்பாகவும் விளங்குகின்றன.

மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்திராவிட்டாலும், பூரண ஒத்துழைப்புடன் மந்திரபலத்தில் குறைவின்றி நடைபெற்ற திருமணங்களால் மட்டுமே ஆயிரக்கணக்கான நம் முன்னோர்களின் வாழ்க்கை அதி சிறந்ததாக விளங்கியிருக்கிறது.

தேவகியின் கேசத்தைப் பற்றியிழுத்து, அவளது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நிற்கும் மூர்க்கனான கம்சனிடத்து நல்வார்த்தைகள்‌ சொல்லி அமைதிப்படுத்த முயன்றார் வசுதேவர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, September 15, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 328

துவாபர யுகம். பாரத தேசம், யாதவர்களின் தலைநகரான மதுரா நகரம்.

எப்போதும் ஸ்ரீஹரியின் ஸாந்நித்யத்துடன் விளங்கும் மதுவனமே தற்போது மதுரா‌ நகரமாக உருமாறியிருந்தது. ஸ்ரீ ராமனின் சகோதரரான சத்ருக்னனால் த்ரேதா யுகத்தில் உருவாக்கப்பட்டது.

சூரஸேன வம்சத்தைச் சேர்ந்த வசுதேவருக்கும், உக்ரஸேனரின் தம்பியான தேவகனின் மகள் தேவகிக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. ஒரு இனிய நன்னாளில் காலையில் அரண்மனைக்குள் சுற்றமும், முக்கிய அதிகாரிகளும் சூழ திருமணம் நடந்தேறியது.

மாலையில் பொது மக்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தி மகிழ்வதற்காக அவர்களைத் தேரிலேற்றி பட்டணப் பிரவேசம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

(இக்கதையை நான் கோப குடீரச் சிறுவர்களுக்குக் கூறும் சமயம், ஒரு சிறுமி, சடாரென கல்யாண ரிசப்ஷன் மாதிரியா மா? என்று கேட்டாள். குழந்தைகள் நம்மை விடவும் அதிக புரிதலோடு விளங்குகிறார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்வது நம் கடைமையாகிறது).

குடும்பத்தின் செல்லக் கடைக்குட்டியான தேவகியின் திருமணம் என்பதால் உக்ரசேனரின் மூத்த மகன் இளவரசன் கம்சனுக்கு உற்சாகம் கரை புரண்டோடியது. அசுர ஸ்வபாவம் கொண்டவன் ஆனாலும், பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் ஆனாலும், தங்கைப் பாசம் அவனைப் புரட்டிப்போட்டது.

கிட்டத்தட்ட மகள் வயதுடைய தேவகியின் திருமணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் கம்சன் தானே முன்னின்று செய்தான்.

மாலையானதும், மிக நன்றாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வசுதேவரும் தேவகியும் எழுந்தருள, தேரோட்டம்‌ துவங்கிற்று.
துவங்கும் கணத்தில் கம்சன் தன் தேரிலிருந்து இறங்கி புதுமணத் தம்பதியரின் தேருக்கு வந்தான்.

என் தங்கையின் திருமணம். நானே தேரோட்டுவேன். இறங்கு
என்று தேரோட்டியை இறக்கிவிட்டுத் தானே தேரில் ஏறி குதிரைகளின் கடிவாளங்களைப்‌ பிடித்தான்.

தேவகியின் தந்தையான தேவகன், தங்கவடம்‌ பூண்ட நானூறு யானைகளையும், பதினையாயிரம்‌ குதிரைகளையும், ஆயிரத்து எண்ணூறு தேர்களையும், நன்கு அலங்கரித்துக் கொண்ட இருநூறு பணிப்பெண்களையும் தேவகியுடன் ஸ்த்ரீதனமாக அனுப்பினார்.

வாழ்த்தொலியாக சங்கு, துரியம், மிருதங்கம், துந்துபி போன்ற வாத்தியங்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டன.

மதுரா நகரம் முழுவதும் தோரணங்களாலும், அலங்கார மலர் வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளும் நன்றாக அலங்கரிக்கப்பட்டு, வாசலில் பெரிய கோலங்களும், தீபங்களும் திகழ்ந்தன. ஆங்காங்கே மகளிர் மணமக்களுக்கு ஆரத்தி காட்டி, குங்குமம், சந்தனம், பன்னீர், மலர்கள், மங்களாக்ஷதை ஆகியவறரைத் தூவி வாழ்த்தினர்.

மிக விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது அந்தத் தேரோட்டம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..