Tuesday, December 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 377

உலகைக் காக்கும் இறைவன் இன்று கன்றுகளைக் காத்துக் கொண்டிருக்கிறான். கையில் உணவுப்‌பொட்டலத்துடன் காட்டில் அலைந்துகொண்டிருக்கின்றனர்.

துள்ளுபவை கன்றுகளா சிறுவர்களா என்று தெரியாதபடி உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

கன்றுகளுக்கு நீர் காட்டுவதற்காக அங்கிருந்த மடுவின் அருகே வந்தனர். எல்லாக் கன்றுகளும் நீர் பருக, சிறுவர்களும்‌ கைகளால் அள்ளி அள்ளி நீரைக் குடித்தனர்.

யமுனைக்கு, அவர்களோடு கண்ணனும் வந்து நீர் பருகுவது சந்தோஷம்தான் என்றாலும், கைகளால்‌ அள்ளிக் குடிக்கிறானே. திருவாயமுதம் கிடைக்காதா என்று ஏங்கினாள்.

அவளது ஏக்கம் கண்ணனுக்குத் தெரியாதா.. புதிய விளையாட்டைத் துவங்கினான்.

கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு  குனிந்து நேரடியாக கன்றுகளைப் போலவே வாயால் நீரை உறிஞ்சத் துவங்கினான்.

யமுனையின் சந்தோஷம் அவளது நீரோட்டத்தில் தெரிந்தது. கடகடவென்று எங்கிருந்தோ நிறைய பூக்களைக் கொண்டுவந்து கண்ணனிடம் சேர்த்தாள். திடீரென்று நிறைய நீரில் பூக்கள் வருவதைப் பார்த்ததும் கோபச் சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து கண்ணனுக்குச் சூடிவிட்டனர். ஒரு பெரிய தாமரையை கண்ணனின் கையில் கொடுக்க, அதைக் கொண்டு அவன் விளையாடிக்கொண்டும் கன்றுகளையும் சிறுவர்களையும் அடித்துக்கொண்டும் வந்தான். 

வந்துகொண்டே இருந்தபோது வழியில் திடீரென்று ஒரு‌பெரிய மலை முகடுபோல் ஒரு பிராணி படுத்திருப்பது தெரிந்தது. கோபச் சிறுவர்கள் பயந்துபோனார்கள்.

மிகவும் வலிமை மிக்க பகன் என்ற அசுரன் கொக்கு வடிவத்தில் அங்கே அமர்ந்திருந்தான். கண்மூடித் திறப்பதற்குள் லபக்கென்று கண்ணனை விழுங்கிவிட்டான்.
அவ்வளவுதான் பலராமன் உள்பட அனைவரும் அதிர்ந்துபோய்  மூர்ச்சையாகி விழுந்தனர்.

கொக்கின் வாய்க்குள் சென்ற கண்ணன் பெரிய நெருப்புக் கோளம் போல் பகனின் தொண்டைக்குள் சுட ஆரம்பித்தான். நெருப்புக் கங்கை விழுங்கியதுபோல் தவித்த பகாசுரன் உடனே வெளியில் கக்கினான்.

வெளியே வந்ததும் கண்ணன் தன் அமுதப் பார்வையால் சிறுவர்களை எழுப்பிவிட்டான்.

பகன் மறுபடி கண்ணனை அலகால்‌ குத்துவதற்காக ஓடிவந்தான். கண்ணன் வெகு லாவகமாக ஒரே துள்ளலில் எழும்பி பகனின் அலகுகளைப் பிடித்தான். இரண்டு அலகுகளையும் இழுத்து ஓலையைக் கிழிப்பதுபோல் விளையாட்டாக பகாசுரனைக் கிழித்துப் போட்டான்.

அக்கணமே  வானத்திலிருந்து பூமாரி பொழிய, சிறுவர்களோ கண்ணனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு ஆடினர். கையிலிருந்த கொம்பு, சங்கு எல்லாவற்றையும் ஊதிக் கொண்டாடினர்.
போன உயிர் திரும்பி வந்ததுபோல மகிழ்ந்தனர். 

அன்றைக்கு வீட்டுக்குப் போன சிறுவர்கள் அனைவரும் தத்தம் அன்னையரிடம் பகாசுரனைக் கண்ணன் கிழித்த விதத்தைப் பலவாறு அபிநயம் பிடித்துச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.

கண்ணனுக்குத் தீங்கு நினைப்பவன் தன் தீங்கைத் தானே தேடிக் கொள்கிறான். விளக்கைத் தேடி விட்டில் பூச்சி வருவதுபோல் கண்ணனைத் தேடி அசுரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தானே மாய்ந்துபோகிறார்கள்.

அன்று கர்காச்சாரியார் சொன்னது உண்மையாயிற்று என்று நந்தனும், இன்னும் பல கோபர்களும் பேசி பேசிப் பொழுது போயிற்று. இதனாலேயே அவர்களை சம்சாரம் பாதிக்கவே இல்லை.

புள்ளின் வாய்க்கீண்டானை 
பொல்லா அரக்கனை 
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடி..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, December 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 376

தினம் தினம் கண்ணன் புதுப்புது விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து கோபச்சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தான்.

ஒருநாள் களிமண்ணால் பொம்மை செய்து விளையாடிக்கொண்டிருந்தான் கண்ணன். அவனைப்போல் அழகாக சிறுவர்களுக்கு பொம்மை செய்ய வரவில்லை. இருப்பினும் முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு அசுரன் வந்து வெகுநேரமாக நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் கன்றின் உருவம் எடுத்துக்கொண்டு மந்தையில் கலந்துவிட்டான். மாலையானதும் அனைவரும்  கன்றுகளைத் திரட்டிக்கொண்டு கிளம்ப முயற்சி செய்தார்கள். 

லட்சக் கணக்கான கன்றுகள் இருப்பினும் ஒவ்வொன்றின் பெயரும் கண்ணனுக்குத் தெரியும். அவையும் கண்ணன்பால் மிகுந்த அன்பு வைத்திருந்தன. புதிதாகக் கூட்டத்தினுள் கலந்த கன்றைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டான். அசுரன் வடிவிலிருந்த கன்று கண்ணனைக் கொல்வதற்காக மற்ற கன்றுகளை இடித்துத் தள்ளிக்கொண்டு  முண்டியடித்துக்கொண்டு கண்ணனின் அருகே வந்து முட்டப் பார்த்தது.

கண்ணன் அவனை பலராமனுக்குச் சுட்டிக் காட்டினான். பின்னர் ஒன்றுமறியாதவன்போல் அதனருகே தானே சென்று அதன் பின்னங்கால்களைப்‌ பிடித்துத் தூக்கி விண்ணில் கரகரவென்று சுழற்றினான். அக்கணமே அசுரனின் உயிர் பிரிந்தது. பின்னர் அசுரனின் உடலை அங்கிருந்த விளாமரத்தின்மீது வீசினான் கண்ணன். மரங்களிலிருந்து விளாம்பழங்கள் உதிர்ந்துவிழ அவற்றோடு சேர்ந்து அசுரனும் வீழ்ந்தான்.

கீழே விழுந்ததும் அவனது உடல் உண்மையான அசுர  நிலைக்குத் திரும்பி விட்டது. அதைக் கண்டு சிறுவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர். தேவர்களும் பூமாரி பொழிந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, December 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 375

கன்று‌ மேய்க்கக் காடு சென்றான் கண்ணன். அண்ணனும் அவனும் இணையாக நடந்துவர, மற்ற சிறுவர்களுக்குள் ஒரே போட்டி. யார் கண்ணனுக்கிணையாக நடப்பது என்று. கண்ணனுக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளிக்கொண்டு கண்ணனுடன் சேர்ந்து நடந்தனர்.

லட்சக் கணக்கான கன்றுகள் முன்னே துள்ளிக் குதித்துக் கொண்டு செல்ல புழுதிப் படலம் கிளம்பியது. அதற்கு நடுவே கண்ணனின் முகம் திரையிட்டதுபோல் தெரிவதைக் காண கோபியர்கள் அனைவரும் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தனர். இனி கண்ணனை மாலைதான் காணமுடியும் என்ற ஏக்கம் அவர்களிடம் தெரிந்தது.

அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே மிகவும் ஒயிலாக நடந்து சென்றான் கண்ணன்.

காட்டை அடைந்ததுதான் தாமதம். அங்கே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டான்.

எல்லாக் கன்றுகளையும் அதைச் சுற்றியுள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பினார்கள் குழந்தைகள். பின்னர்  அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர். அன்னை போட்டுவிட்ட தங்க ஆபரணங்கள், மாலை, அனைத்தையும் கழற்றி ஒரு துணியில் சுற்றி ஆலமரத்தின் பொந்தினுள் வைத்தான் கண்ணன்.

உடனே குழந்தைகள் அவனது எண்ணப்போக்கைப் புரிந்து கொண்டனர். அங்குமிங்கும் ஓடிச்சென்று காட்டு மலர்களைப் பறித்துவந்தனர். என்னென்னமோ பூக்கள் மற்றும் இலைகள். அனைத்தையும் சேர்த்து ஒரு மாலை கட்டினர். அதைக் கண்ணனுக்குச் சூட்டினர்.  நிறைய வண்ணத் தாதுப்பொடிகள் ஆங்காங்கே பாறைகளில் இருந்தன. அவற்றைச் சேகரித்து வந்து கண்ணனின் கன்னங்களிலும், நெற்றியிலும் பூசி, அழகாகப் போட்டு வைத்தனர்.

ஒருவன் குன்றிமணிகளைப் பொறுக்கிக்கொண்டு வந்தான். அவற்றை அழகாக ஓட்டை போட்டு மாலையாகக் கோர்த்தான் இன்னொருவன். அந்த மாலையையும் கண்ணன் மிகவும் உகப்போடு சூடிக்கொண்டான்.

அவரவர் மனம் போல் கண்ணனுக்கு அலங்காரம் செய்துவிட அத்தனையும் தனக்கு அழகு செய்யும்படியாக ஏற்றான் கண்ணன். இடைச் சிறுவர்கள் பலராமனுக்கும் அவ்வாறே அலங்காரம் செய்துவிட்டனர்.

நண்பர்கள்  எல்லோரும் சாதாரணமாக அலங்காரம் இல்லாமல் இருக்கும்போது தனக்கு மட்டும் பொன்னகை எதற்கு என்று ஸ்வாமி நினைத்தான் போலும். மேலும் அவர்களுக்கு கண்ணனை அலங்கரித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்க வேண்டும். அதைக் கண்ணன் நிறைவேற்றினான். எனவேதான் அவ்வளவு அழகாக அலங்கரித்தனர். மாலையானதும் அனைத்தையும் களைந்துவிட்டு, பொந்திலிருந்து நகைகளை எடுத்து யசோதை போட்டுவிடுவதைப் போலவே மீண்டும் சிறுவர்களே அணிவித்துவிடுவார்கள்.

தினசரி இதுவே வாடிக்கையாயிற்று.

வீட்டிலிருந்து கிளம்பும்போது ஸர்வ அலங்காரத்துடன் ராஜமன்னாராகக் கிளம்பும் கண்ணன் காட்டுக்குச் சென்றதும் சாதாரணப் பூக்களால் அலங்காரம் செய்துகொண்டு காட்டுமன்னாராக விளங்கத் துவங்கினான்.

அலங்காரங்கள் முடிந்ததும் வேறென்ன? விளையாட்டு த் தான். கண்ணனுடன் விளையாடக் கசக்குமா? எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்?

கண்ணாமூச்சி ரேரே என்று கண்ணைக் கட்டிக்கொண்டு தேடும் விளையாட்டு உண்மையில் கண்ணன் உம்மாச்சி ரேரே என்பதாகும். 

கோலி அடித்தல், கிட்டுப் புள், ஒளிந்து விளையாடுதல், ஓடித் தொடுதல், ஒரு பொருளைப் பகிர்ந்து தொடரோட்டம், கண்ணைக் கட்டி விளையாடுதல், ஒளிந்து விளையாடுதல், பச்சைக் குதிரை தாண்டுதல், இலக்கு வைத்துக்கொண்டு ஓடுதல், ஒருவர் மீது ஒருவர் ஏறி உருவம் போல் ஆக்குதல், தவளை ஓட்டம்,  காட்டிலுள்ள விலங்குகளைப் போல் குரலெழுப்புதல், அவைகளைப்போல் நடத்தல், ஓடுதல் இன்னும் ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை முதன் முதலில் விளையாடச் சொல்லிக் கொடுத்தவன் கண்ணனே.

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது இவைகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, December 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 374

கண்ணனும் பலராமனும் கன்று மேய்க்கும் பருவத்தை எட்டினர். கண்ணனைப் பாடசாலையில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்று நந்தன் விரும்பினார். தான் படிக்கவில்லையென்றாலும் தன் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பது தந்தையின் இயல்பல்லவா? ஆனால், கண்ணனுக்கு பாடசாலையில் படிக்க விருப்பமில்லை. அதற்காகப் பிறகு காலத்தை ஒதுக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான் போலும். கோகுலத்தில் இருக்கும் வரை கோகுலவாசிகளைக் கணமும் பிரியக்கூடாது என்பது அவனது எண்ணமாக இருக்கலாம். கண்ணனின்  பிடிவாதத்தினால் அவனைப் படிக்க அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டார் நந்தன்.

இதன் நடுவில் கண்ணனுக்கு ஒரு புல்லாங்குழல் கிடைத்துவிட்டது. அது வந்ததிலிருந்து உறங்கும் நேரம்கூடக் கீழே  வைக்க மாட்டான்.

எந்நேரமும் கண்ணனின் இடுப்பிலேயே அமர்ந்திருக்கும் புல்லாங்குழல், சில சமயம் முதுகு சொறியவும், சில‌சமயம் நண்பர்களை அழைக்கவும், சில நேரங்களில் பானையில் ஓட்டை போடவும் பயன்பட்டது.
அவ்வப்போது வாசிக்கவும் செய்வான். அதைக் கேட்கும் யசோதை இவன் நம்மோடுதானே எப்போதும்‌ இருக்கிறான்.  எப்போது இவ்வளவு அழகாகக் குழலிசைக்கக்  கற்றுக்கொண்டான் என்று அதிசயிப்பாள்.

கண்ணன் கன்று மேய்க்கவும், ப்ருந்தாவனத்தில் விளையாடவும் மிகவும் விரும்பினான். ஆனால், யசோதைக்கோ அவனை வனத்திற்கு அனுப்ப மனம் இசையவில்லை.

என்னென்னமோ காரணங்கள் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் கண்ணனிடம் எடுபடவில்லை. கண்ணன் எல்லாவற்றிற்கும் தயாராக பதில் வைத்திருந்தான். அவனது பிடிவாதமே வென்றது.

 மேலும், இடையர்களுக்கு மாடு மேய்ப்பது குலத் தொழில். எல்லா வீட்டுக் குழந்தைகளும் கன்று மேய்க்கக் கிளம்பும்போது கண்ணனை மட்டும் அப்பருவத்தில் வீட்டில் அமர்த்துவது சரியில்லை என்பதால் நந்தன் அனுமதித்தார்.

கண்ணன் கோலாஹலமாகக் கிளம்பினான்.

அழகிய பட்டாடை, தலையில் மயில்பீலி வைத்த கிரீடம்,  முத்து மாலைகள், காதுகளில் குண்டலங்கள், கைகளில் கங்கணங்கள், இடுப்பில் கிண்கிணி, கால்களில் நூபுரம் என்று மிக அழகாகக் கண்ணனை அலங்கரித்தாள். 

கன்று மேய்க்கக் கானகம்  செல்வதற்கு, இத்தனை அலங்காரங்கள் தேவையில்லை என்று கண்ணன் மறுத்தபோதும் அவளது மனம் ஏற்கவில்லை. 

ஒரு குச்சியின் உச்சியில் தயிர்சாத மூட்டையைக் கட்டிக்கொண்டு, கொம்பு, குச்சி, வேல், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்.‌

மறக்காமல் குழலையும் எடுத்து இடுப்பில்‌ செருகிக்கொண்டு கிளம்பினான் கண்ணன்.

கண்ணனுடன் பலராமனும் கிளம்பினான். 

வீட்டு வாசலில் கண்ணனை ஒத்த சிறுவர்கள் அவனுக்காக வந்து காத்திருக்க,

அவர்களோடெல்லாம் சேரக்கூடாது. 
வெய்யிலில் அலையக்கூடாது, 
கன்னா பின்னாவென்று விளையாடக்கூடாது.
 அடிபடும்படியான ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது.
யமுனையில் நீந்துகிறேன் என்று இறங்கக்கூடாது.
 உச்சி வேளையில் உணவை உண்டுவிடவேண்டும். 
மீதி வைக்காமல் சாப்பிடவேண்டும். 

கண்ணனின் காதில் அறிவுரைகளைப் பலமுறை  ஓதிக்கொண்டே இருந்தாள் யசோதை.

எல்லாவற்றிற்கும் பொறுமையாக ம்ம், சரிம்மா, நீ சொன்னபடி செய்யறேம்மா‌ என்று பதிலுரைத்தான் ஸ்வாமி. எப்படியாவது கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. வாசல் வரை வந்து வழியனுப்பினாள் அன்னை.


கன்றுகள் அனைத்தையும் முன்னால் விட்டு, அவற்றின் பின்னால் கண்ணனும்‌ பலராமனும் செல்ல,‌ அவர்கள் இருவருடன் இணையாகவும், பின் தொடர்ந்தும் மற்ற குழந்தைகள் சென்றனர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Wednesday, December 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 373

அடுத்த நாள் அதிகாலையில் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு, தத்தம் பசு மந்தையை ஒழுங்குபடுத்தி ஒரே இடத்தில் கொண்டு சேர்த்துக் கொண்டு, கோபர்களது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் துவங்கியது.

முதியவர்கள், சிறுவர்கள், மற்றும் பெண்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். பசுக்களை முன்னே செல்லவிட்டு, கோபர்கள் வில்லேந்திக்கொண்டும், கொம்புகளை ஊதிக்கொண்டும், முரசறைந்துகொண்டும், மிகுந்த கவனத்துடன் நாற்புறமும் பார்த்துக்கொண்டு சென்றனர். 

வண்டிகளில் அமர்ந்திருந்த பெண்கள் கண்ணனின் லீலைகளை அழகாகப் பாடிக்கொண்டே சென்றனர்.

யசோதை, ரோஹிணி இருவரும் கண்ணனையும் பலராமனையும் ஒரே வண்டியில் வைத்துக்கொண்டு பயணித்தார்கள். வழியெல்லாம் குழந்தைகளின் குறும்பையும், மழலைப் பேச்சையும் ரசித்துக்கொண்டே வந்தனர். 

காட்டுவழியில் சென்றதால் பல வித்யாசமான மரங்கள், மலர்கள், விலங்குகள் அனைத்தையும் கடந்து சென்றனர்.

வழியில் எதைப் பார்த்தாலும் குழந்தைகள் இருவரும் மாற்றி மாற்றி இது என்ன? இது என்ன? என்று கேட்டுக்கொண்டே வந்தனர். 

பேசிப்பேசி நேரம் போனதும் தெரியவில்லை. பயணக்களைப்பையும் உணரவில்லை. ப்ருந்தாவனமே வந்துவிட்டது. 

அங்கே நடுவிலிருந்த பெரிய சமவெளியின் நடுவில் நந்தன் சென்று ஒரு கொடியை நட்டார். அதைச் சுற்றி அரை வட்ட வடிவில் வண்டிகளை நிறுத்தினர்.

கோபர்கள் சென்று பசுக்கள் தங்குவதற்கான கொட்டில்களை கிடுகிடுவென்று அமைத்தனர்.

 மாடுகளையும், கன்றுகளையும் பாதுகாப்பாகக் கொட்டிலில் விட்டனர். பசுக்களல்லவோ அவர்களது செல்வம்? அவற்றை முதலில் காக்கவேண்டுமல்லவா?

பின்னர், தாங்கள் தங்குவதற்காகவும், நந்தனுக்காகவும் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டனர். அதுவரை தற்காலிகத் தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.

பற்பல குன்றுகள் சூழ்ந்த நீண்ட நெடிய கம்பீரமான  கோவர்தன மலை, ஆங்காங்கே தங்கக் குவியல் போன்ற மணல் திட்டுக்கள், மயில்கள், குயில்கள், அன்னங்கள், மற்றும் பல பறவைகளின் ஒலிகள்  சங்கீதமாய்க் கேட்கும் அழகிய வனம் ஆகியவற்றைக் கண்டதும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

புதிய இடம் என்பது தவிர, ப்ருந்தாவனத்தின்  அழகும் மயக்கிற்று.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் இயற்றிய ப்ருந்தாவனத்தை வர்ணிக்கும் மதுரகீதம்

ராகம்: மாயாமாளவகௌளை தாளம்: ஏகம்

ப்₃ருந்தா₃வனம் ப₄ஜே ப்₃ருந்தா₃வனம் - நித்யம்
ப்₃ருந்தா₃வனம் ப₄ஜே ப்₃ருந்தா₃வனம்

01. க₂க₃ம்ருக₃ ப்₄ரமிதம் ப்₃ருந்தா₃வனம் - விவித₄
புஷ்பைரலங்க்ருதம் ப்₃ருந்தா₃வனம்

02. யமுனா லாலிதம் ப்₃ருந்தா₃வனம் - நித்ய
ராஸோத்ஸவஸ்த₂லம் ப்₃ருந்தா₃வனம்

03. ஹரிசரணாங்கிதம் ப்₃ருந்தா₃வனம் - க்ருஷ்ண
லீலாஸ்த₂லம் ஶ்ரீ ப்₃ருந்தா₃வனம்

04. பூ₄லோக கோ₃லோகம் ப்₃ருந்தா₃வனம் - க்ருஷ்ண
ப₄க்தானாம் ஆஶ்ரயம் ப்₃ருந்தா₃வனம்

05. ப₄க்தசித்தாகர்ஶணம் ப்₃ருந்தா₃வனம் - ப்₃ரஹ்ம
நிஷ்டா₂கர்ஷகம் ப்₃ருந்தா₃வனம்

Tuesday, December 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 372

இடைக்குலப் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுள் மூத்தவரான உபநந்தர் கோகுலத்தை விட்டு வேறெங்காவது செல்லலாம் என்று ஆலோசனை கூறினார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராகப் பேசத் துவங்கினர்.

சின்னக் குழந்தைகளாப் பார்த்து கொன்னு போட்டிருக்கா அந்த ராக்ஷஸி. பக்கத்து கிராமத்தில்கூட நிறைய குழந்தைங்க போயிடுச்சு. நல்லவேளையா அவளால நம்ம ஊர்க் குழந்தைகளுக்கு ஒன்னும் ஆகல.

இன்னொருவர் ஆரம்பித்தார்.

காத்து மாதிரி ஒரு அசுரன் வந்தானே. நம்ம கண்ணனை ஆகாசத்தில் கொண்டுபோய்த் தூக்கிப்போட்டானே. எவ்ளோ ஒயரம். யப்பாடீ..கீழ விழுந்த  குழந்தையை எப்டியோ பகவான் காப்பாத்தினார்.

இப்ப என்னடான்னா நெடுநெடுன்னு ஆகாசத்துக்கு வளர்ந்திருக்கற மரங்க ரெண்டும் சாய்ஞ்சுடுச்சு.

நல்லவேளையா அதுக்கு நடுவுல இருந்த கண்ணனுக்கோ வேற குழந்தைங்களுக்கோ ஒன்னும் ஆகல.

வரிசையா ஏதாவது ஆபத்து வந்துட்டே இருக்கு.

ஒவ்வொரு நிமிஷமும் நம்ம குழந்தைகளுக்கு என்னாகுமோன்னு பயமாவே இருக்கு.

அதிலயும் கண்ணனுக்கு ஏதாவது ஆகுமோன்னுதான் ரொம்ப பயம்.

காலைல மாடு மேய்க்கப் போனாக்கூட நினைப்பெல்லாம் வீட்லதான். 

டேய், உனக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு. அப்டிதான் இருக்கும். சும்மாயிரு.

எல்லாரும் கொல்லென்று சிரிக்க அந்த இடையன் வெட்கினான்.

அடுத்த அசம்பாவிதம் நடக்கறதுக்கு முன்னால நாம வேறெங்கயாவது போலாம்.

ம்ம்ம்..
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார் நந்தன்.

பின்னர், வேறெங்க போலாம்? நீங்களே ஏதாவது யோசிச்சு வெச்சிருந்தா  சொல்லுங்க. என்றார்.

ஒரு வயதான இடையன் பேசத்துவங்கினார்.

நந்த ராஜா.. நான் ஒரு எடம் சொல்லவா..

சொல்லுங்க.

பக்கத்தில ப்ருந்தாவனம்னு ஒரு காடு இருக்கே.

ஆமாம். நானும் மாடு ஓட்டிட்டுப் போறப்ப சில சமயம் அதுக்குள்ள போயிருக்கேன்.

ம்ம். ஆமா. அது நல்ல இடம். ஒரு பக்கம் யமுனா நதி. இன்னொரு பக்கம் கோவர்தன மலை. இயற்கையா ஒரு பாதுகாப்பா அமைஞ்சிருக்கு. நடுவில் பெரிய சமவெளி இருக்கு. அங்க போனா நாம எல்லாரும் தங்க வசதி பண்ணிக்கலாம்.
சட்டுனு எதிரிகள் யாரும் வரமுடியாது.

மற்றொரு கோபன், ஆமா ஆமா அது நல்ல இடம். அங்கயே போலாம்.

என்று சொல்ல, நந்தருக்கும் அந்த யோசனை சரியென்று பட்டது. அதற்குள் மற்ற கோபர்களும் 

ஆமாம் ஆமாம் நாம ப்ருந்தாவனத்துக்கே போகலாம் 

என்று கூட்டாகச் சொல்ல, அனைவரும் ப்ருந்தாவனம் செல்வது ஒரு மனதாக முடிவாயிற்று.

நந்தன், அனைவரையும் பார்த்து,
நல்லது, நாளைக்கே போகலாம். இன்னிக்கு எல்லாரும் வீட்டுக்குப்போய் கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க. வண்டிகள்ள சாமானெல்லாம் கட்டுங்க. மாடு கன்னுக்குட்டியெல்லாம் தொலயாதபடி, கட்டி அழைச்சிட்டுப்போவோம்.

பெண்கள் குழந்தைகள்ளாம் வண்டிகள்ள வரட்டும்.

எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கோங்க.

முன்னும் பின்னுமா காவலுக்கு ஆள் போகணும்.

எல்லாரும் நாளை பொழுதுவிடியும்போது கிளம்பலாம்‌. போய்ச்சேரும்போது சூரியன் மேல ஏறிடும். அதுக்கேத்தபடி ஏற்பாடு இருக்கட்டும். என்றார்.

உறங்கிக்கொண்டிருந்தபடியே கண்ணன் சிரித்தான்.
ப்ருந்தாவனத்திற்குப் போகவேண்டும் என்ற அவனது  சங்கல்பம் ஈடேறிவிட்டது. 

சாமி தாமரைப்பூ காட்டிச்சோ, என்று குழந்தையைக் கொஞ்சிவிட்டு, சாமான்களை ஏறக்கட்டும் வேலையைப் பார்க்கப்போனாள் யசோதை.

அசுரர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்காக வரவில்லை. கண்ணனைக் கொல்லத்தான் வந்தார்கள் என்று கோபர்களுக்கு நன்றாகத் தெரியும். கண்ணனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்பதே அவர்கள் அனைவரின் கவலையும். கண்ணனுக்கு ஒரு இடத்தில் ஆபத்து அதிகம் என்றால் அவ்விடம் தங்களுக்கும் வேண்டாம். அவன் வேறிடம் சென்றால் நாமும் அவனுடன் செல்வோம். கண்ணனைப் பிரிந்து இருக்க இயலாது என்பதே அவர்களது நிலைப்பாடு. ஒருவர் பாக்கியின்றி,  அவர்கள் அனைவருமே  கண்ணனுக்காக அவ்வளவு நாள்களாக தாங்கள் வாழ்ந்து வந்த வீடு, சூழல் அனைத்தையும் விட்டு வேறிடம் செல்லத் தயாரானார்கள் என்பதே அவர்களது பக்தியின் அழகு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, December 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 371

கண்ணனுக்கும் பலராமனுக்கும் எப்போதும் விளையாட்டுத்தான். கால் முளைத்துவிட்டதால், இப்போது யமுனைக் கரை வரை செல்லத் துவங்கினர். அங்கிருக்கும் மணல் திட்டுகளில் விளையாடத் துவங்கினால் அவர்களுக்குக் காலநேரம் போவதே தெரியவில்லை.

காலையில் சாப்பிட்டு விளையாடப்போன குழந்தைகள் உச்சி வேளைக்கும் வராததால், அவர்களை அழைத்துவர யசோதை ஆள்களை மாற்றி மாற்றி அனுப்பிக்கொண்டிருந்தாள். யார் அழைத்தால் என்ன, விளையாட்டு மும்முரத்தில் எதுவும் அவர்கள் செவியேறவில்லை. மனம் பொறாமல், ரோஹிணியே நேரில்‌ சென்றாள். 

இரண்டு குழந்தைகளையும் உச்சி வேளையாயிட்டது. சாப்பிட வாங்க கண்மணிகளா என்று கூப்பிட..
அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் பெரியம்மா என்று கண்ணன் கெஞ்சினான். ஏற்கனவே பெரியம்மா செல்லம் மிகவும் அதிகம். சரி சீக்கிரம் வந்துடுங்க என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து யசோதையே கிளம்பிப் போனாள். அன்னை தங்களைத் தேடிக்கொண்டு ஆற்றங்கரைக்கே வந்ததைப் பார்த்து கண்ணனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

அவளோ,  காலையில் சாப்பிட்டது. இப்ப பசிக்கலையா? சாப்பிட வாடா கண்ணா.. பலராமா நீயாவது அழைச்சிண்டு வரலாம்ல. அண்ணாதானே..
என்று குரல் தழைய அழைக்க, கண்ணனுக்கு தைரியம் வந்துவிட்டது.

அம்மா கொஞ்ச நேரம்மா என்று கெஞ்ச, அவள் விட்டாளில்லை.

ரொம்ப களைச்சுப்போய்ட்ட கண்ணா.. உடனே வா. சாப்பிட்டு கொஞ்சம் தூங்கலாம்.

அப்பா காத்துண்டிருக்கார். உன்னோட சேர்ந்து சாப்பிட. வாடா.

ம்ஹூம்..
கண்ணன் ஒன்றையும் காதில் வாங்கவில்லை.

இருங்கம்மா..

இன்னிக்கு உனக்கு பிறந்தநாள் வேற. உடம்பு முழுக்க மண்ணு. ஸ்நானம் பண்ணிட்டு உன் கையால கொஞ்சம் தானங்கள்ளாம் பண்ணணும். வாடா..

கண்ணன் நிமிர்ந்தான். 
அப்பன்னா அப்பிச்சி கிடைக்கும். அவனது எண்ண ஓட்டத்தை அறியாதவளா அன்னை.

உன் நண்பர்களையெல்லாம் பார். எல்லாரும் குளிச்சுட்டு அழகா அலங்காரம் பண்ணிருக்காங்க. நீதான் அழுக்கா இருக்க. பொண் குழந்தைகள்ளாம் கேலி பண்ணுவாங்க. வாடா.

இதை ஏன் நீங்க முதல்லயே சொல்லல? வாங்க போலாம். என்று அன்னை கையைப் பிடித்துக்கொண்டு கண்ணன் ஓட, அவனுக்கிணையாக பலராமனும் வீட்டை நோக்கி ஓட, யசோதையோ அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சிரைக்க வீடு வந்து சேர்ந்தாள்.

பின்னர் கண்ணனுக்கும் பலராமனுக்கும் மங்கல ஸ்நாணம் செய்வித்து, உணவு கொடுத்தாள். கண்ணனின் திருக்கரங்களால் பல தானங்களைச் செய்தார் நந்தன். 

பின்னர் ஊர்ப் பெரியவர்கள் எல்லாரும் கூடி அமர்ந்து ஆயர்பாடியின் நன்மை தீமைகள் பற்றி விவாதித்தனர்.

நந்தனின் மூத்த சகோதரரான உபநந்தர்,  பேசலானார். அவர் கண்ணனுக்கு மிகவும் பிரியமானவர்.

இங்கு குழந்தைகளுக்குத் தீமை விளைவிக்கும் செயல்கள் நிறைய நடக்கின்றன. இவ்விடம் நமக்கு ஏற்றதாக இல்லை. நாம் இங்கிருந்து வேறிடம் செல்லலாம் என்ற யோசனையை முன்வைத்தார். பின்னர், கோபர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எண்ணங்களைக் கூறத் துவங்கினர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 15, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 370

கோகுலத்தில் கண்ணன் கோபியரின் கைப்பாவையாக இருந்தான்.

பல நேரங்களில், அவர்களின் கட்டளைக்கேற்ப படி, பலகை ஆகியவற்றை எடுத்துவந்து கொடுப்பான். ஒரு மூன்று வயதுக் குழந்தை எப்படி ஒரு பலகையைத் தூக்குமோ அப்படி, தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வருவான். அவனைப் பார்த்தால் இவனா அசுரர்களைக் கொன்றான் என்று தோன்றும்.

ஒரு சமயம் நந்தகோபரின் பாதரக்ஷைகளை தலைமேல் வைத்து எடுத்து வந்து கொடுத்தான்.

நந்தனுக்கு கண்ணன் தெய்வீகக் குழந்தை என்பது தெரியாமல் இல்லை. ஆனாலும் , கண்ணனின் மாயை அவரை அதற்குமேல் யோசிக்கவிடாமல் கட்டிப்போட்டிருந்தது. தன் பாதரக்ஷையைத் தலைமேல் சுமந்து வரும் கண்ணனை நினைந்து நினைந்து நெகிழ்ந்தார் அவர்.

தன்னுடைய பாலலீலைகளால் கோகுலத்தில் இருந்தவர்களுக்கு எல்லையில்லாத இன்பத்தை அளித்தான் கண்ணன்.

முத்தமிடுகிறேன் என்று சொல்லி கன்னத்தைக் கடித்துவைப்பதும், வெண்ணெய்யைத் திருடி உண்டுவிட்டு, அவர்களை யசோதையிடம் மாட்டிவிடுவதும், யசோதையிடம் அவர்கள் புகார் சொல்வதும், கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிடுவதும், யசோதையிடம் சாமர்த்தியமாக பதில் சொல்வதும் கண்ணனின் லீலைகள் எண்ணில.

பகவானின் இயல்பை அறிந்த சான்றோர்களுக்கு அவன் பக்தர்களுக்கு ஆட்பட்டவன் என்பதை இத்தகைய லீலைகளால் நன்கு உணர்த்தினான்.

ஒருநாள், வாசலில் பழம் வாங்கலியோ பழம் என்ற நடுங்கும் குரல் கேட்டது.

குடுகுடுவென்று வாசலில் ஓடிய கண்ணன், பழக்கூடையைச் சுமந்துகொண்டு ஒரு பாட்டி நிற்பதைக் கண்டான்.

எனக்கு பழம் தருவீங்களாம்மா..

அன்பின் தலைவன் அன்பொழுகக் கேட்டால் மறுப்பவர் யார்?
அதுவும் யாருமில்லாத அநாதையாக வாழும் அவளை அம்மா என்று அழைக்கிறான்.

ஓ.. உங்களுக்கில்லாததா.. வாங்க சாமி என்றாள்.

அம்மா எது வாங்கினாலும் அதற்கு பதிலாக ஏதாவது தானியம் கொடுப்பதை கவனித்திருக்கிறான் கண்ணன். எனவே,

கொஞ்சம் இருங்கம்மா வரேன்.

என்று கூறிவிட்டு உள்ளே ஓடினான்.

உள் அறைக்குச் சென்று ஒரு பானையிலிருந்து கைநிறைய தானியத்தை அள்ளிக்கொண்டு தன் அழகு நடையுடன்

வந்துட்டேன்மா.. போயிடாதீங்க

என்று கூவிக்கொண்டு ததகா பிதகாவென்று ஓடிவந்தான்.

குட்டிக்குழதையின் விரலிடுக்குகளில் தானியம்‌ நிற்குமா? ஓடி வந்த வேகத்தில் சிந்திக்கொண்டே வந்தது. அந்தக் கிழவியிடம் கையைக் கொண்டுவந்து நீட்டியபோது அதில் பத்து தானியம்கூட இல்லை. அவளோ அவனது தாமரை மொட்டுக் கையைப் பார்க்கவில்லை. கண்ணனின் அழகு சொட்டும் தாமரை முகத்தைப் பார்த்தாள்.

தலையிலிருந்த சும்மாட்டுத் துணியை எடுத்து விரிக்க, அதில் கையை உதறினான் கண்ணன். பின்னர் தன் கூடையிலிருந்த அத்தனை பழங்களையும் கண்ணன் கையில் அடுக்கினாள்.

அன்றைக்கு வியாபாரமே ஆகவில்லை அவளுக்கு. கண்ணனோ பத்து தானியங்களைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். அப்படியும் அவள் எதையும் எண்ணவில்லை. அவளது மனம் நிறைந்திருந்தது.

குழந்தை அம்மா என்று அழைத்தானே. எவ்வளவு அழகான குழந்தை. அவன் குழந்தையா, தெய்வமா? அவன் குரல் இவ்வளவு இனிமை. நான் வணங்கும் தெய்வமே வந்தாற்போலிருக்கிறதே.

தன்னை மறந்தாள் அவள். சும்மாட்டுத் துணியை சுருட்டி பத்திரமாகக் கூடையில் வைத்துக்கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்தாள். வண்டி மாட்டைப்போல் அநிச்சையாய் வீட்டை அடைந்தாள். போகும் வழியில் எல்லாம் கண்ணனின் முகமே கண்களில் நிற்க, வாயோ கான்ஹா கான்ஹா என்று அவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்ததும் கூடையைத் தலையிலிருந்து இறக்க முயற்சி செய்தாள். அவள் தள்ளாடுவதைப் பார்த்து பக்கத்துவீட்டுப் பெண்மணி ஓடிவந்து

விழுந்துடாதீங்க பாட்டீ. என்ன வியாபாரமாகலையா. கூடை இவ்ளோ கனமா இருக்கு?
என்று கூறிக்கொண்டே இறக்கி வைத்தாள். அப்போதுதான் பாட்டிக்கு உறைத்தது.

எல்லாப் பழத்தையும்‌கொடுத்துட்டேனே. கூடைல மிச்சம் இருக்கான்ன?

என்று கேட்டுக்கொண்டு அவசரம் அவசரமாகத் துணியைத் திறந்தாள். உள்ளே நவரத்னங்களும், வைரங்களும், வைடூர்யங்களும் அவளைப் பார்த்துச் சிரித்தன.

பாட்டீ பாட்டீ இதெல்லாம் என்ன என்று பக்கத்துவீட்டுப்‌பெண் அவளை உலுக்க, அந்த பாக்யவதிக்கு ஒவ்வொன்றும் கண்ணனாகவே தெரிந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Saturday, December 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 369

புல்லாய்ப்‌ பிறவிதரவேணும்,

‌எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே,

தவ திவ்ய மந்திரே ஸ்தம்போ பவாமி வா

என்று இறைவனின் வாழிடத்தில் ஏதாவது ஒன்றாகப் பிறவி வேண்டி மஹான்கள் அனைவரும் வரம் கேட்டுக் கொண்டிருக்க, இங்கோ நாரதரிடம் அபசாரப்பட்டதற்கு கோகுலத்தில் மரமாகும்படி சபிக்கிறார். உண்மையில் அது சாபமா, வரமா?

மஹான்களிடம் எத்தகைய தொடர்பு ஏற்பட்டாலும் அது அவர்களின் கருணையின் வெளிப்பாடே ஆகும். அத்தொடர்பு இறைவனிடம் கொண்டு சேர்த்துவிடும்.

கண்ணன் பிறந்தது முதல் இன்று வரை ஒரு கணம் கூட விடாமல் அவனது லீலைகளை ரசித்துவந்தனர் இந்த மணிக்ரீவனும், நளகூபரனும்.

மரம் என்ற நிலையிலிருந்து விடுபட்டதற்காக மகிழ்ந்தாலும், மற்றொருபுறம் அங்கிருந்து கிளம்பவேண்டுமே, கண்ணனை அருகிலிருந்து காண இயலாதே என்ற ஏக்கமும் இருந்தது.

இருவரும் பகவானை நோக்கி‌ என்ன சொன்னார்கள் தெரியுமா?

க்ருஷ்ணா! யோகீஸ்வரனே! ப்ரக்ருதியைக் கடந்த புருஷோத்தமன் நீரே! நீங்களே இப்பிரபஞ்சத்தின் ஸ்தூல வடிவமாகவும், ஸூக்ஷ்ம வடிவாகவும் இருக்கிறீர்.

அனைத்து ஜீவன்களுக்கும், உயிருக்கும், உள்ளத்திற்கும், புலன்களுக்கும் தலைவன் நீர் ஒருவரே. நீங்களே காலம். எங்கும் வியாபித்திருப்பவர். சகல உயிர்களின் சாட்சியும் நீங்களே.

தங்களை அறிவது எளிதல்ல. ப்ரக்ருதிக்கும் அப்பாற்பட்டு முன்னமே விளங்கும் தங்களை ப்ரக்ருதியில் இருந்துகொண்டு எப்படி அறிய இயலும். அனைத்து சிறப்புகளும் கொண்டவர். உலகைப் படைத்தவர். குணங்களால் மறைக்கப்பட்டவர். பரம்பொருளான தங்களை வணங்குகிறோம்.

தங்களது இந்த உடல் இயற்கையானதல்ல. தெய்வீகமானது. ஆனால், உடல் பொருந்தியவர் எவராலும் செய்யையலாத காரியங்களைச் செய்கிறீர்.

எல்லா உலகங்களின் நன்மைக்காக பேராற்றல் கொண்டு அவதாரம் செய்திருக்கிறீர்.

நம: பரம கல்யாண நம: பரமமங்கள|
வாஸுதேவாய ஶாந்தாய யதூநாம் பதயே நம:||

எங்களுக்கு நீங்கள் ஒரு வரத்தை அளிக்கவேண்டும்.

எங்கள் வாக்கு எப்போதும் தங்களின் திருக்கல்யாண குணங்களையே பாடவேண்டும்.
எங்கள் உடல் தங்களுக்குப் பணிபுரிவதிலேயே ஈடுபடட்டும்.

எங்கள் மனத்தில் எப்போதும் தங்கள் திருவடித் தாமரை மலர்ந்திருக்கட்டும்.
நீங்கள் குடியிருக்கும் இவ்வுலகை எப்போதும் எங்கள் தலை வணங்கட்டும். உங்களின் உடலாக விளங்கும் சாதுக்களையே எங்கள் கண்கள் எப்போதும் பார்க்கட்டும்.

எவ்வளவு அழகான வேண்டுதல்?
இத்தகைய பிரார்த்தனையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த கண்ணன் கலகலவென்று சிரித்தான்.

உலகத்தளையால் பிணைக்கப்பட்ட ஜீவன் உரலில் கட்டுப்பட்ட என்னைத் துதிக்கிறான். நானோ தளைகளற்றவன். ஆனால் ஜீவன் கட்டுப்பட்டவன் என்று சிரித்தான் போலும்.

கண்ணன் அவர்களைப் பார்த்து, நீங்கள் நாரதரை அவமதித்திருந்தபோதும் அவர் உங்களுக்குச் செய்தது அருளே ஆகும். நல்லோரின் தரிசனத்தால் சூரியனைக் கண்ட இருள்போல் ஜீவன்களின் பந்தம் விலகுகிறது.

நீங்கள் உங்கள் இருப்பிடம்‌ செல்லுங்கள். உங்களுக்கு என்மேல் நிலையான பக்தி ஏற்படட்டும். என்று கூற, அவர்கள் இருவரும் கண்ணனை வலம் வந்து மீண்டும் வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் கண்ணனை அவிழ்த்துவிட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே என்று தோன்றலாம். ஆனால், கண்ணனை எவரும் கட்ட இயலாது. அன்பினால் தானே கட்டுண்ணப் பண்ணிக்கொண்டான் எம்பெருமான். எனவே அத்தகைய அன்புடையவர்களே கட்டை அவிழ்க்கவும் தகுதியானவர்கள் என்று எண்ணி விட்டுச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Wednesday, December 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 368

கண்ணன் உரலில் கட்டுண்ட லீலையைக் கேட்டதும் பரிக்ஷித் நெகிழ்ந்துபோனான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
இவ்வுலகமே பகவானின் வசத்தில் உள்ளது. அப்படியிருக்க அவனோ யசோதையிடம் கட்டுண்டு, அந்த இடையர்களின் கைப்பொம்மையாக விளங்கினான்.

என்றதும், பரிக்ஷித் கேட்டான்.
மஹரிஷி! அந்த மரங்களிலிருந்து வெளிவந்தவர்கள் யார்? அவர்கள் என்ன துதி செய்தார்கள்? அவர்கள் ஏன் மரமாக நின்றார்கள்? ஏதேனும் சாபமா?
விளக்கமாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
அவர்கள் இருவரும் குபேரனின் புதல்வர்கள். நளகூபரன், மணிக்ரீவன் என்பது அவர்கள் பெயர். ஒரு சமயம் செல்வச் செருக்கால் நாரதரை அவமதித்து விட்டார்கள். அவரது சாபத்தால் மரங்களாகிப்போனார்கள்.

ஓ.. அதென்ன சாபம்? நாரதருக்குக் கூட கோபம் வருமா? அப்படி என்ன செய்தார்கள்?

ஸ்ரீ சுகர் கூறலானார்.
குபேரனின் மைந்தர்களான அவ்விருவரும் ஸ்ரீ ருத்ரனின் தொண்டர்கள். ஒரு சமயம் கைலாயத்தில் ஒரு தோட்டத்தில் வாருணீ எனப்படும் மதுவை அருந்தி மெய் மறந்தனர். கண்கள் சுழல, நாக்குழற, போதையால் நடை தடுமாற, அத் தோட்டத் தி லும், கங்கைக் கரையிலுமாக பெண்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

தாமரைக் குவியல்போல் பூத்திருந்த கங்கையில் ஆண்யானைகள் பிடிகளுடன் விளையாடுவதுபோல் நீர் விளையாட்டு ஆடினர்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த நாரதரைக் கண்டதும் அங்கிருந்த பெண்கள் ஓடிப்போய் ஆடைகளை அணிந்துகொண்டு மரியாதை நிமித்தமாக வணங்கினர்.

குபேரனின் புதல்வர்கள் இருவரும், முனிவரை வணங்காதது மட்டுமின்றி, அவரை அவமதிக்கவும் செய்தனர்.

அதைக் கண்ட நாரதர் அவர்கள் இருவரையும் மரங்களாகப் போகும்படி சபித்தார்.

அளவுக்கு மீறி விரும்புவதை அனுபவிப்பதால் புத்தி தடுமாற்றம் ஏற்படும். செல்வச் செழிப்பாலும், கல்வியாலும், உயர்குடிப் பிறப்பாலும் வருவதைக் காட்டிலும் அளவுக்கதிகமான மதம், பெண்கள் சேர்க்கை, சூதாட்டம், மது இவற்றால் ஏற்படுகிறது.

இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், இவ்வுடலுக்கு அழிவில்லை என்றெண்ணுவர்.
இந்த உடல், புதைக்கப்பட்டு, விலங்குகளுக்கும், புழுக்களுக்கும் உணவாகப் போகிறது. அழியும் இவ்வுடல் சுகத்திற்காகப் பிற உயிர்க்குத் தீமை செய்பவனுக்கு நரகம் கிட்டும்.

இவ்வுடல், அன்னமிட்டு வளர்த்தவரையோ, உயிர் கொடுத்த தந்தையையோ, தாயையோ, குடும்பத்தாரையோ, அரசனையோ, எரிக்கும்‌நெருப்பையோ, தின்னும் நாயையோ‌ சார்ந்ததல்ல. பிரக்ருதியில் தோன்றி மறைகிறது. இதன் தோற்றமும் மறைவும் விளக்கப்படுபவை அல்ல. இதைத் தனதென்று எண்ணுபவன் முட்டாள்.

முள்ளால் குத்தப்பட்டால் வேதனை புரியும்‌. அவன் அவ்வேதனை மற்றவர்க்கு நேராவண்ணம் காப்பான். அதை அனுபவிக்காதவனுக்கு மற்றவரின் துன்பம் புரியாது.

சம்நோக்குள்ள சாதுக்களின் சங்கத்தால் பேதபுத்தி அழியும். பேராசை குறையும். மனம் தூய்மை பெறும். அதனால் அவனுக்கு நன்மை ஏற்படும்.

நீங்கள் இருவரும் உங்கள் செருக்கு அழியும்வரை உணர்வுகளற்ற மரமாக இருங்கள். உங்களுக்கு இந்த நினைவுகள் மறக்காது. நூறு தேவ வருடங்கள் கழிந்தபின் பகவான் வாசுதேவனின் அருள் கிட்டும். அவரால் பக்தி ஏற்பட்டு, உங்கள் உலகை அடைவீர் என்றார் நாரதர்.

பின்னர் கிளம்பி பதரி சென்றார். நளகூபரனும் மணிக்ரீவனும் கோகுலத்தில் இரட்டை மருதமரங்களாக ஆயினர்.

நாரதரின் கூற்றை மெய்ப்பிக்க விரும்பிய கண்ணன் அந்த மரங்களின் இடையே சென்று அவற்றை முறித்து அவர்களை சாபத்திலிருந்து விடுவித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம்- 367

உரலில் கட்டுப்பட்டு அங்கேயே நின்று கொண்டிருந்த கண்ணன், சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லோரும் தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒருவரும் அவனைப் பார்க்காத சமயம் உரலைப் பிடித்துத் தள்ளினான். அது கீழே விழுந்து உருளத் துவங்கியது. அதில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான்.

அது உருண்டு கண்ணன் இழுத்த இழுப்பிற்கு வந்தது. அதை இழுத்துக்கொண்டு நடப்பது கடினமாக இருந்ததால் தவழத் துவங்கினான்.

அங்கே இரட்டை மருதமரங்கள் இருந்தன. அவற்றிற்கிடையே நுழைந்து அந்தப் பக்கம் சென்றுவிட்டான். உருண்டு சென்ற உரலால் மரங்களின் இடுக்கில் செல்ல இயலவில்லை. சிக்கிக்கொண்டன. திரும்பிப் பார்த்த கண்ணன், உரல் வராததைக் கண்டு, கயிற்றைப் பிடித்து இழுத்தான். உரலால் இடிபட்டதும் மடமடவென்ற பெரிய சத்தத்துடன் இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தன.

அம்மரங்களிலிருந்து இரண்டு யக்ஷர்கள் வெளியில் வந்தனர். அவர்கள் கண்ணனைத் துதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றனர்.

மரங்கள்‌ முறிந்து விழுந்ததும், அனைவரும் அதிர்ந்துபோனார்கள். தூரத்திலிருந்த கோபர்களும் கோபிகளும் கண்ணனுக்கு என்னவாயிற்றோ என்று பயந்துபோய் ஓடிவந்தனர்.

அதற்குள் சற்று அருகிலிருந்த சிறுவர்கள் கண்ணா கண்ணா என்று அழைத்துக்கொண்டு ஓடிவரவும், கந்தர்வர்கள் கிளம்பிச் செல்லவும் சரியாக இருந்தது.

மரங்களைத் தாண்டி தாண்டி ஓடிவந்த கோபர்கள், அங்கே திருதிருவென்று விழித்துக்கொண்டு அமர்ந்திருந்த கண்ணனைப் பார்த்ததும், குழந்தைக்கு ஒன்றும் அடிபடவில்லை என்று ஆறுதலடைந்தனர். பின்னர் உரலின் கட்டை அவிழ்த்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தனர். யசோதை போட்ட முடிச்சை அவிழ்க்கவில்லை. கயிறு கண்ணன் இடுப்பிலேயே தொங்கிக்கொண்டு வந்தது.

டமடமவென்ற சத்தம் கேட்ட யசோதை கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அலறிக்கொண்டு ஓடிவந்தாள். அவளிடம் குழந்தையைக் கொடுத்ததும், வாரி முத்தமழை பொழிந்தாள். கண்ணனின் உடல்‌ முழுவதும் தடவி அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். அன்னையைக் கண்டதும் அழத் துவங்கியிருந்தான் கண்ணன்.

இனி உன்னைக் கட்டிப்போடமாட்டேன் தங்கமே என்று கூறிக்கொண்டு உள்ளே தூக்கிக்கொண்டுபோனாள்.

குழந்தையைப் போய் கட்டிப்போட்டியே. என்னாச்சு பாத்தியா என்று திட்டிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தனர் மற்ற கோபியர். அவர்கள்தான் முந்தைய நாள் வரை கண்ணனின் விஷமத்தைப் புகார் செய்தவர்கள்.

அதற்குள் நந்தனும் வந்துவிட, அங்கிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்கள் கோபர்கள்.

அவர்களோ,
குழந்தை உரலை இழுத்துக்கொண்டு மரங்களின் நடுவில் போனான். உரல் சிக்கிக்கொண்டது. உரலை இழுத்தான். மரங்கள் விழுந்துவிட்டன. அதிலிருந்து இரண்டு பேர் வந்தனர். கண்ணனுடன் ஏதோ பேசினர். நாங்கள் அருகில் சென்றதும் அவர்கள் மறைந்துவிட்டனர்
என்றார்கள்.

சிறு குழந்தை இழுத்ததால் மரங்கள் சாயுமா என்ன என்று சொல்லி அவர்கள் நம்பவில்லை. ஆனால் சிலர், இதற்கு முன் வந்த அசுரர்கள் அழிந்ததை நினைத்து அப்படியும் இருக்கலாம் என்று பேசினர்.

உள்ளே வந்து குழந்தையைப் பார்த்த நந்தன், கண்ணனின் இடுப்பில் கட்டியிருந்த கயிற்றைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.

பதறிப்போய்க் கண்கள் கலங்கியிருந்த யசோதையிடம்,
ஒன்றும் பயப்படாதே. இவனுக்கு எதுவும் ஆகலியே. இன்னுமா இதை அவிழ்க்கல?
என்று கேட்டுக்கொண்டே கயிற்றை அவிழ்த்துவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, December 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 366

பால் குடித்துக் கொண்டிருந்த போது, அம்மா இறக்கிவிட்டுவிட்டுப் போனாள் என்ற கோபத்தில் வீட்டிலிருந்த தயிர், மோர்ப் பானைகளை உடைத்துவிட்டு, வெண்ணெய்ப்பானை ஒன்றை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான் கண்ணன்.

யசோதை அவனைப் பிடிக்க வந்தபோது வெண்ணெய்யைக் காலி செய்துவிட்டு, அதையும் போட்டுடைத்துவிட்டு ஓடத்துவங்கினான்.

கையில் தடியோடு யசோதை பயந்தவன் போல் ஓடும் கண்ணனைத் துரத்தினாள்.

யோகிகளால்கூட மனத்தினாலும் பிடிக்கமுடியாத அவனை யசோதை துரத்திக்கொண்டு ஓடினாள். அவளால் பிடிக்க முடியுமா?

தலைமுடி அவிழ, பூக்கள் சிதற, சிறுத்த இடை கொண்ட அவள் பருத்த உடலால் நடை தளர, மூச்சு வாங்கிக்கொண்டு தொடர்ந்தாள்.

திரும்பிப் பார்த்த கண்ணனுக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது. ஓடும் வேகத்தைக் குறைத்தான். சட்டென்று அவனைப் பிடித்தாள் யசோதை.

அவ்வளவுதான். மையிட்ட கண்களைக் கைகளால் கசக்கிக்கொண்டு அழத் துவங்கினான்.

பயம் என்றால் என்னவென்றே அறியாதவன் கண்ணன். அப்படிப்பட்டவனுக்கு இப்போது ஏற்ற பாத்திரத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப பயந்தாகவேண்டிய கட்டாயம். என்ன செய்வதென்று யோசித்தான்.

ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு அதிதேவதை அவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. தைரியத்திற்கு, கோபத்திற்கு, மகிழ்ச்சிக்கு என்று தேவதைகள் இருக்கும்போது, பயத்திற்கு இருக்காதா? அந்த தேவதையை அழைத்தான்.

ஈரேழு பதினான்கு புவனங்களையும்‌ படைத்த இறைவன், பிரஜாபதிகள், திக் பாலர்கள், கிரஹ தேவதைகள் அனைத்தையும் விட்டு தன்னை அழைப்பதைப் பார்த்து பயத்திற்கான அதிதேவதை சற்று தொலைவிலேயே நின்றுகொண்டு பயந்து நடுங்கிக்கொண்டே கண்ணனைப் பார்த்தது.

அது எப்படி பயப்படுகிறது என்று பார்த்து அதைப்போல் நடித்தானாம் கண்ணன்.

என்ன செய்தாலும் நடிப்பு என்று யசோதை கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக, கண்ணைக் கசக்கி, மையைக் கண்ணைச் சுற்றி அப்பிக்கொண்டுவிட்டான். கன்னத்திலிருந்த த்ருஷ்டிப் பொட்டும் ஈஷிக்கொண்டது.

ஏற்கனவே கண்ணன் கருமை நிறத்தவன் என்றாலும், இன்னும் கொஞ்சம் மையை அப்பிக்கொண்டால் பரிதாபம் வரும் என்று நினைத்தான் போல.

பின்னர் பரிதாபம் சொட்டும் முகத்துடன் யசோதையைப் பார்த்தான். அன்னையின் உள்ளமாயிற்றே. சாதாரணக் குழந்தை அழுதாலே அன்னை மனம் தாங்காது. இவனோ தெய்வக் குழந்தை. சட்டென்று கையிலிருந்த தடியை வீசினாள். முகத்திலிருந்த பொய்க்கோபத்தைச் சற்று குறைத்தாள்.

ஆனால்,
சிறியதாகவாவது ஏதேனும் தண்டனை தந்தாலொழிய இவனுக்குப் புரியாது. மற்றவரைத் தொந்தரவு செய்வதாக தினமும் புகார் வருகிறதே என்றெண்ணினாள். எனவே, சுற்றுமுற்றும் பார்த்தாள். கன்றுக் குட்டியைக் கட்டும் கயிறு அங்கிருந்தது. அதை எடுத்து

உன்னை இந்த உரலோடு கட்டிப்போடப் போகிறேன். சற்று நேரம் எங்கும் போகாமல் ஒரே இடத்தில் இரு. அதான் உனக்கு தண்டனை.

என்று சொல்லிக்கொண்டு, கண்ணனைக் கட்டத் துவங்கினாள்.

நீளமான கயிறுதான். ஆனால், மூன்று வயதுக் குழந்தையான கண்ணனின் இடுப்பைச் சுற்றி ஒரு முடிச்சுப் போட வரவில்லை. இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.

அதற்குள் எல்லா கோபியரும் அங்கு கூடிவிட்டனர். ஒருத்தியைப் பார்த்து வேறு கயிறு கொண்டு வா என்று சொல்ல, அவள் ஓடிப்போய் இன்னொரு கயிறு எடுத்துவந்தாள். யசோதைக்குத் தெரியாமல் கண்ணன் அவளை முறைக்க, அவள் பயந்துபோனாள்.

அந்தக் கயிற்றை மீண்டும் இணைத்துக் கண்ணனைக் கட்ட முயன்றபோது, ஆச்சரியமாக இரண்டங்குலம் குறைந்தது.

நீளம் நீளமாக இருக்கும் கயிறுகள் கண்ணனின் இடுப்பைச் சுற்றியதும் எப்படிப் போதாமல் போகின்றன என்று யோசிக்கவிடாமல் மாயையால் அவர்களது அறிவைக் கட்டி வைத்திருந்தான் கண்ணன். அண்டம் உண்ட வயிற்றை அரையடித் தாம்பு கட்டுமா என்ன?

வீட்டிலுள்ள எல்லாக் கயிறுகளும் வந்துவிட்டன. ஆனால், எல்லாவற்றையும் இணைத்தாலும் கண்ணனின் இடுப்பை ஒரு சுற்று சுற்றி முடிச்சுப் போட வரவில்லை.

இதென்ன மாயம்? என்று மயங்கியவள்.

போடா, உன்னைக் கட்டக்கூட முடியல
என்று சலித்துப்போய் கயிற்றைக் கீழே போட்டாள்.

அன்னை மனம் வாடலாமா? உடனே,
அம்மா, உனக்கு என்னைக் கட்டணும்னு ஆசையா இருந்தா கட்டும்மா, நான் வயத்தை இப்படி எக்கிக்கறேன்.
என்று சொல்லி கயிற்றை எடுத்து அவள் கையில் கொடுத்தான். வயிற்றை எக்கிக் காட்டினான். கடலும் மலையும் சற்றே நெகிழ்ந்தன.

சின்னக் குன்று அசைந்து வருவதுபோல் நடக்கும் யானை ஒல்லிப்பீச்சானான பாகனின் பின்னாலேயே செல்லும். அவன் காட்டிய இடத்தில் நிற்கும். தன்னைக் கட்டவேண்டிய சங்கிலியை எடுத்துப் பாகன் கையில் கொடுக்கும்.  கட்டுவதற்காகத் தன் காலையும் தூக்கிக் காட்டும். எதற்காக என்றால் அதைப் பிடிக்கும்போது அதனிடம் சத்தியம் வாங்குவார்களாம். அதற்காகவும், பாகனின் அன்பிற்கு வசப்பட்டும், அவன் சொல்வதைக் கேட்டு பெரும்பலம் பொருந்திய யானை தன்னைக் கட்ட அனுமதிக்கிறது.

அதைப்போல் அனைத்துலகையும் படைத்து, நிர்வகித்து, அழிக்கும் இறைவன் தன்னலமற்ற பக்தி கொண்டவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிற்கிறான்.

சட்டென்று கண்ணனிடமிருந்து கயிற்றை வாங்கி அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டி முடிச்சிட்டாள் யசோதை. கயிற்றின் மறுமுனையை அங்கிருந்த உரலுடன் கட்டினாள்.

இங்கேயே சற்று நேரம் கிட. அப்பதான் புத்தி வரும்
என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள். அங்கிருந்த கோபியரில் சிலர் அவனை நமுட்டுச் சிரிப்புடன் மாட்டிண்டியா என்பதுபோல் பார்த்தனர். அவர்களைக் கண்ணன் முறைத்ததும் பயந்துபோய் ஓடிவிட்டார்கள்.

மீதிபேருக்கு குழந்தையைப் போய் கட்டுவார்களா என்று யசோதைமேல் கோபம். எனவே, அவளிடம் சென்று கட்டை அவிழ்க்கச் சொல்வதற்காகச் சென்றனர்.

மேலேயிருந்து இந்த லீலையைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் ஹா என்று தம்மை மறந்து கத்திவிட்டனர்.
தலையை ஆட்டி அவர்களை அமைதி காக்கும்படி எச்சரிக்க, நமுட்டுச் சிரிப்புடன் வாயைப் பொத்திக் கொண்டனர்.

உரலில் கட்டுண்ட கண்ணன் தோட்டத்தில் தனிமையில் விடப்பட்டான்.
அடுத்த லீலைக்கு ஆயத்தமானான். யாராவது பார்க்கும்போது மட்டும் ஊம் ஊம் என்று விசும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 365

ஒரு நாள் யசோதை தயிர் கடைந்துகொண்டிருந்தாள். தயிர் கடையும்போது கயிற்றின் தாள லயத்திற்கேற்ப கண்ணனின் லீலைகளைப் பாடலாகப் பாடிக்கொண்டே கடைந்தாள்.

ஒட்டியாணத்தால் இடுப்பில் பட்டாடை இறுகிப் போயிருந்தது. கயிற்றை இழுப்பதால் ஏற்படும் அசைவினால் அவள் காதிலிருந்த குண்டலங்களும், கழுத்திலிருந்த திருமாங்கல்யமும், கைவளையல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு சீரான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தன.

அப்போது கண்ணன் ஓடிவந்தான். அவனது சலங்கை, தண்டை மற்றும் கிண்கிணி ஒலிகள் அவன் வருகையைப் பறை சாற்றின.

ஓடிவந்த கண்ணன் மத்தைப் பிடித்துக்கொண்டு தயிர் கடைய விடாமல் தடுத்தான்.

அம்மா, பால். என்று கேட்க,
யசோதை தயிர் கடைவதை நிறுத்திவிட்டு கண்ணனை மடியில் அமர்த்திப் பால் குடிக்கச் செய்தாள். அதற்குள் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கும் ஓசை வந்தது. பணிப்பெண்களை அழைத்துப் பார்த்தாள். அப்போதைக்கு எவரும் அங்கில்லை.

ஒரு கங்காளம் நிறைய பால் பொங்கி கோட்டை அடுப்பில் வழிந்தால், பால், பாலாடை எல்லாம் வீணாகும். அடுப்பைச் சுத்தம் செய்வதும் கடினம். மேலும் அந்தப்பாலும் கண்ணன் குடிப்பதற்காக காய்ச்சிய பால்தான். எனவே, சட்டென்று கண்ணனை இறக்கி விட்டுவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள் யசோதை.

தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு, குடித்து முடிப்பதற்கு முன் சடாரென்று இறக்கி விடப் பட்டதும், வந்ததே கோபம்.

கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த அம்மிக் குழவியை எடுத்து தயிர்ப்பானையை உடைத்தான். கண்களில் பொய்யாக நீர் பெருக, கையில் கிடைத்த மத்தைக் கொண்டு அங்கு வைத்திருந்த மற்ற பானைகளையும் விளாசினான். இன்னொரு பானையை அடிக்கப்போனபோது, உள்ளிருந்து வெண்ணெய் எட்டிப் பார்த்தது. வெண்ணெய்ப்பானையை உடைக்க மனம் வரவில்லை. யசோதையின் கைப்பக்குவத்தால் கடைந்த வெண்ணெய்யின் ருசியை அறிவானல்லவா?

வெண்ணெய்ப் பானையை எடுத்து உண்ண ஆரம்பித்தான். அதைக் காலி செய்துவிட்டு, அடுத்த வெண்ணெய்ப் பானையை எடுத்தான்‌. யசோதை வரும் சத்தம் கேட்டதும், மறக்காமல் பானையை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓடினான்.

அங்கே ஒரு உடைந்த உரல் கிடந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து மடியில் பானையை வைத்துக்கொண்டு, நன்றாக ரசித்து உண்ணத் துவங்கினான். வழக்கம்போல் குரங்கார் அங்கு வர, அம்மாவின் வெண்ணெய்யை அதற்கும் கொடுத்து, முகத்திலும் அப்பிவிட்டான்.

யாராவது வரும் சத்தம் கேட்டால் ஊம் ஊம் என்று வாயில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டே பொய்யழுகை அழுதான்.

அடுப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்த யசோதைக்கு, வழி தவறி பாற்கடலை அடைந்துவிட்டோமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. வீடு முழுதும் வெள்ளை வெளேரென்று வெண்ணாறு ஓடியது. கண்ணனின் வேலைதான் என்றறிந்தவள்.

இத்துனூண்டு இருந்துண்டு இந்தப் பிள்ளைக்கு கோவத்தைப் பாரு என்று
தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

இருந்தாலும், இவ்வளவு கோவம் நல்லதுக்கில்லை. இன்று அவனைக் கண்டித்து புத்தி புகட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

கண்ணன் எங்கிருக்கிறான் என்று தேடினாள். தோட்டத்தில் உரலின் மீது அமர்ந்திருக்கக் கண்டாள். சத்தம் போடாமல், மெதுவாகப் பூனை நடையாகச் சென்று கண்ணனின் பின்னால் சென்றாள்.

கண்ணனுக்கு அம்மா வருவது தெரியாமல் இல்லை.

பிறகேன் கண்ணன் எழுந்து ஓடவில்லை என்றால், கையிலிருந்த பானையின் வெண்ணெய் தீரவில்லை. ஆறு அமர வெண்ணெய்யை ரசித்து விழுங்கவும், யசோதா கண்ணனின் அருகில் வரவும் சரியாக இருந்தது. யசோதா அவனை எட்டிப் பிடிக்கும் நேரம், காலியான வெண்ணெய்ப் பானையை எடுத்துத் தரையில் போட்டுடைத்துவிட்டு உரலிலிருந்து துள்ளி இறங்கி ஓடினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..