Tuesday, March 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 420

இடையில் பொன் வரிகளாய் அசையும் பீதாம்பரம், கழுத்தில் ஐந்து மலர்களால் ஆன வண்டுகள் சூழந்த வனமாலை, முகத்தில் தவழும் புன்முறுவல் ஆகியவற்றுடன் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோன்றினான் கண்ணன்.

அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் கண்ணனை ஒவ்வொருவிதமாக எண்ணி ஆனந்தித்தனர். ஒருத்தி கையைப் பிடித்துக்கொண்டாள். ஒருத்தி அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ஒருத்தி சரணத்தைப் பிடித்துக்கொண்டாள். முக்தி நிலையை அடைந்த ஞானிகளின் ஆனந்தத்தை ஒத்தது அவர்களுடைய ஆனந்தம்.

அவர்களின் விரகதாபம்‌ முழுவதுமாக நீங்கியது. நக்ஷத்ரங்கள் சூழ ஒளிவீசும் நிலவைப்போல் கண்ணன் மிக அழகுடன் விளங்கினான்.

மலர்களின் நறுமணம் வீசியது. வண்டுகளின் ரீங்காரம் சீரான இசையாக ஒலித்தது. எங்கும் அமைதி நிலவியது. அவர்கள் அனைவரும் கண்ணனை அமரவைத்துப் பூஜை செய்தனர்.

பின்னர், கண்ணனுடன் ப்ரணய கலஹத்தினால் ஏற்பட்ட செல்லக் கோபத்தினால் பேசினர்.

கண்ணா! உலகில் மூன்று விதமானவர்கள் இருக்கின்றனர்.

ஒரு வகையினர் தம்மிடம் அன்பு செலுத்துபவரிடம் மட்டும் அன்பு செலுத்துவர்.

மற்றொரு வகையினர், தம்மிடம் அன்பு செலுத்தாதவரிடம்கூட அன்புடன் பழகுவர்.

இன்னொரு வகையினர் தம்மிடன் செலுத்தினாலும் சரி, செலுத்தாவிட்டாலும் சரி, அனைவரிடமுமே பழகுவதே இல்லை. ஏன் இவ்வாறு இருக்கிறார்கள்?

என்று கேட்டனர்.

அதனுள் மறைந்த பொருள் யாதெனில், நாங்கள் உன் மீது இவ்வளவு அன்பு செலுத்தினாலும் நீ அன்பே இல்லாதவன்போல் மறைந்தது சரியா? என்பாதாகும்.

விரித்துக்கூறியது, ஒளித்துக்கூறியது,  கூறாதது, நெஞ்சிலுள்ளது அனைத்துமறிவான் கண்ணன்.

அவர்கள் சொல்வது புரியாதா?

பெண்களே! 
தன்னிடம் அன்பில்லாதவரிடமும் அன்பு செலுத்துபவர் பெற்றோரைப்போல் கருணை உள்ளவர். எதிர்பார்ப்பே இல்லாத நல்லிதயம் கொண்டவர்.

தன்னிடம் அன்பாகப் பழகினாலும் அன்பு காட்டாதவர், அன்பில்லாதவரிடம் எப்படி அன்பு செலுத்துவர்? அவர்கள் செய்ந்நன்றி மறந்தவராகவோ, த்ரோகிகளாகவோ இருக்கக்கூடும். அல்லது நமது நன்மையே குறிக்கோளாகக் கொண்ட குருவாகவோ, ஞானியாகவோ இருக்கலாம். இரண்டு வகையானவரும் அன்புடையவர் அன்பில்லாதவர் இருவரிடமும் சமபுத்தியுடன் விளங்குவர்.

ஆனால், நான் இவற்றுள் எந்த வகையிலும் சாராதவன். என்னிடம் அன்புடன் பழகுபவர்களுக்கு என் மீதான அன்பு இன்னும் உறுதிப்படுவதற்காக நான் அவர்களை விட்டுச் சில காலம் விபகியிருப்பேன். பெருஞ்செல்வம் படைத்தவன் திடீரென்று அதை இழப்பானாகில் அவன் அதைப் பற்றியே சிந்திப்பானல்லவா? அதைப்போல் என்னுடைய பிரிவினால் என்னைத் தவிர வேறெதுவும் எண்ண இயலாமல் போகும். அதனால் பக்தி உறுதிப்படும்.

நன்மை, தீமை, தர்மம், அதர்மம், உறவுகள் என்று அனைத்தையும் துறந்து வந்த உங்கள் அனைவரின் பக்தியை இன்னும் உறுதிப்படுத்தவே சிறிது நேரம் உங்களிடமிருந்து மறைந்தேன். இனி, நான் உங்கள் அனைவருக்கும் கட்டுப்பட்டவன். உங்கள் அன்பிற்குக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்புக் கடனிலிருந்து என்னால் விடுபடவே இயலாது.
என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, March 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 419

கோபிகா கீதம் (2)

நாங்கள் சௌபக மதம் கொண்டதால் எங்களை விட்டு நீ நீங்கினாயா? நாங்கள்தான் அழகிகள், நாங்கள்தான் பாக்யசாலிகள் என்ற செருக்கு எங்களுக்கு இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால் எங்கள் மத்தியில் நின்று நீ ஒரு புன்முறுவல் செய்தால் போதுமே. எங்களது மனமே அழிந்துபோகும். பிறகு செருக்கு மட்டும் எப்படி இருக்கும்? எங்கள் செருக்கை அழிக்க நீ மறைந்து போக வேண்டிய அவசியமில்லை. நேரில் வந்து உன் தாமரை முகத்தைக் காட்டு.

பசுக்களைப் பின் தொடர்ந்து செல்லும் உன் தாமரைபோன்ற திருவடிகளை வணங்கியவரின் பாவம் போகும். எவ்விடத்தில் உன் திருவடி படுமோ அவ்விடத்திலேயே மஹாலக்ஷ்மி வசிக்கிறாள். கங்கையின் தோற்றுவாயான  அந்தத் திருவடியை எங்கள் மேல் வைத்து எங்கள் மனத்திலுள்ள காமத்தீயை அழித்துவிடு.

மனம் கவரும் இனிய சொற்களைப் பேசுபவனே! தேனினும் இனிய உன் குரலில் மயங்கினோம்.

உனது கதையமுதம் மூன்று விதமான துன்பங்களையும் போக்குவது. (ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம்). வாடும் மனத்திற்கு உற்சாகம் தருவது. கேட்க இனியது. மங்களமானது. ஞானிகளால் துதிக்கப்படுவது. எங்கும் நிறைவது. 

பகவானின் கதைகளைச் சொல்வதும் பாடுவதுமே சிலருக்கு வாழ்வாதாரமாகிறது. அத்தகைய பாக்யசாலிகள் கவி எனப்படுகின்றனர்.

கண்ணா! உன் சிரிப்பு, அன்பு பொழியும்‌ பார்வை, உனது லீலைகள் ஆகிய அனைத்தும் நினைக்க நினைக்க இனிமையானவை. மங்களம் தருபவை. தனிமையில் நீ எங்களுடன் பேசிய பேச்சுக்களும், விளையாட்டுக்களும் எங்கள் மனத்தைக் கலக்குகின்றன.

நீ தினமும் காலையில் மாடு மேய்க்கக் கிளம்பும்போது காட்டிலுள்ள கல்லும் முள்ளும் உன் பாதத்தில் குத்துமே என்று‌ எண்ணி எங்கள் நெஞ்சம் புண்ணாகும்.

வீரனே! மாலை நீ திரும்பி வரும்போது, உன் தாமரை முகத்தில் கருங்குழல் தவழ, உடல்‌ முழுதும் புழுதி படிய நீ தரும் காட்சி எங்கள் மனத்தில் ஆசையை வளர்க்கும்.

ப்ரும்மதேவரால் வழிபடப்படும்  திருவடி. வணங்குபவரின் விருப்பத்தை நிறைவேற்றும் திருவடி.
 ஆபத்தில் நினைத்தால் ஓடிவரும் திருவடி. பூமியை அழகு மிளிரச் செய்யும் திருவடி. மங்களம் தரும் திருவடி.
அந்தத் திருவடியை எங்களுக்குக் கொடு.

எல்லையற்ற இன்பம் தரும் உன் திருவாயமுதை புல்லாங்குழல் நன்கு பருகிவிடுகிறது. உன்னைத் தவிர வேறு ஒரு பொருளிலும் எங்கள் கவனம் செல்லாமல் தடுப்பது உன் திருவாயமுதமே ஆகும்.

நீ வனம் செல்லும் சமயம் ஒரு நொடி எங்களுக்கு ஒரு யுகமாகிறது. நீ திரும்பி வரும்போது உன் அழகை முழுதும் காண முடியாமல் இமைகளைப் படைத்த ப்ரும்மாவின் மேல் கோபம் வருகிறது.

கணவர், உற்றார், புதல்வர், உடன் பிறந்தோர், உறவினர் அனைவரையும் துறந்து தடைகளை மீறி, உன் வேணுகானத்தின் குறிப்பை உணர்ந்து அதில் மயங்கி ஓடிவந்திருக்கிறோம். நம்பி வந்த எங்களைக் கைவிடலாகுமா?

உன் லீலைகளையும், திருவுருவையும் தவிர வேறெதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அவற்றிலேயே மயங்கிக் கிடக்கிறோம்.

அனைவரின் வினைகளையும் எரிக்கவே அவதாரம் செய்திருக்கிறாய். உன்னிடம் மனவருத்தம் நீக்கும் மருந்து ஏதாவது இருக்குமானால், அதை உன்னிடம் அன்பு கொண்ட எங்களுக்குக் கொடு.

வனத்தில் அலைந்தால் தாமரை போன்ற  மெல்லிய உன் திருவடி நோகும். எனவே அலைந்தது போதும். சிற்சிறு கற்கள் குத்தினால் உன் திருவடி வருந்துமே என்‌று எங்கள் மனம் கலங்குகிறது. நீ உடனே வா. அந்தத் திருவடிகளை நாங்கள் எங்கள் மார்பில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறோம்.

இவ்வாறு பலவாறு புலம்பி உரத்த குரலில் தேம்பி தேம்பி அழத் துவங்கினர் கோபிகள்.

அவர்கள் அழுவதைப் பொறுக்காத கண்ணன் அக்கணமே அவர்கள்‌ மத்தியில் சூரியனைப்போல் ஒளிவீசிக்கொண்டு தோன்றினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Sunday, March 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 418

ராதையைக் கண்ணன் தனியாக அழைத்துச் சென்றபோதும், அவள் வேண்டுமென்றே எதையோ‌ செய்து பிரிந்து வந்துவிட்டாள். காரணம், தன் தோழிகள் கண்ணனின் பிரிவால் தவிக்கும்போது, தான் மட்டும் தனித்து இறையுடன் இணைய விருப்பமில்லை. கூடியிருந்து குளிர்வதிலேயே ஆனந்தம் அவளுக்கு. 

இதே காரணத்தினால் அல்லவோ ப்ரஹலாதன் இன்னமும் வைகுண்டம் செல்லாமல் தனித்துத் தவம் செய்துகொண்டிருக்கிறான்.

தன் தோழிகளுக்குக் கண்ணனை அடையும் வழியை ராதையே காட்டுகிறாள்.

அனைவரும் சேர்ந்து யமுனைத் திட்டிற்கு வந்தனர். தானே மறைந்துகொள்பவன் தானே வெளிப்பட்டால்தான் உண்டு. தேடி அடையும் பொருளா கண்ணன்?

மறைந்திருப்பவனை வெளிக்கொணர, ஒரே ஒரு உபாயம்தான் உண்டு. அது அவன் பெயரையும் புகழையும் பாடுவது.

யமுனையின் கரையில் அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டு, உரத்த குரலில் கண்ணனின் புகழை அழுதுகொண்டே பாடத் துவங்கினர்.

இந்தப் பாடல் கோபிகா கீதம் எனப்படுகிறது. ஸம்பிரதாய பஜனையில் மிக முக்கியமான அங்கத்தை வகிக்கிறது.

18 ச்லோகங்களைக் கொண்டது.

18 என்ற எண் வெற்றிக்கான எண்ணாக எண்ணியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ மத் பாகவதம் நிச்சயமாக மோக்ஷத்தைப் பெற்றுத் தரும் புராணம் என்பதாக அதில் 18000 ஸ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஜயம் என்ற பெயரும் உண்டு.

மஹாபாரதப் போரில் தர்மம் வெல்லும் என்பதாக 18 நாள்கள் போரை நடத்தினான் கண்ணன்.

இந்த கோபிகா கீதத்தை ஜபம் செய்துவர கண்ணனின் தரிசனம் நிச்சயம்‌க கிட்டும் என்பதன் அடையாளமாக 18 ஸ்லோகங்களில் அமைந்துள்ளது. 

முதல் ஸ்லோகம்‌ ஜயதி என்ற சொல்லுடன் துவங்குகிறது.

கண்ணா! நீ இந்த கோகுலத்தில் பிறந்திருப்பதாலேயே மஹாலக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள். அதனால், இந்த கோகுலம் இந்திர லோகத்தை விடவும் மேலானதாக விளங்குகிறது.
உம்மிடம் உயிரை வைத்த நாங்கள் நான்கு திசைகளிலும் உன்னையே தேடுகிறோம்.

கண்ணா! ஆயுதங்களால்‌ செய்வது மட்டும்தான் கொலை என்று எண்ணுகிறாயா? சரத்காலத்தில் மலர்ந்த தாமரையிதழை விஞ்சும் அழகுடைய கண்களால் எங்களைக் கொல்லுகிறாயே. இது கொலையில்லையா? நாங்கள் உந்தன் அடிமைகள் ஆவோம். எங்களை இப்படி சித்ரவதை செய்யலாமா?

யமுனையின் விஷநீர், மலைப்பாம்பினால் வந்த துன்பம், பெருமழையால் வந்த விபரீதம், காட்டுத்தீ, மற்றும் பல ‌அசுரர்களிடமிருந்து எங்களைக் காத்தாயே. 

யசோதையின் புதல்வனான நீ, ப்ரபஞ்சத்தின் அனைத்து பொருள் மற்றும் ஜீவன்களிலும் உள்ளிருந்து ஒளிவீசும் ஆத்மா என்பதை நாங்கள் நன்கறிவோம். உலகைக் காப்பதற்காக நீ யதுகுலத்தில் பிறந்திருக்கிறாய்.

மஹாலக்ஷ்மியின் கரம் பற்றிய, ஸம்ஸார பயம் போக்கும் தாமரை போன்ற உன் அபயக் கரத்தை எங்கள் தலை மீது வைத்து எங்களுக்கு அருள் செய்வாயாக.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Saturday, March 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 417

கண்ணனைத் தேடிக்கொண்டு வனத்தில் அலைந்த கோபியர் ஓரிடத்தில் கண்ணனின் திருவடி அச்சுக்களையும் அவற்றுடன் ஒரு பெண்ணின் காலடி அச்சுக்களையும் கண்டனர். 
கண்ணனுடன் சென்ற பெண் யாராக இருக்கும்? இவள் கண்ணனை நன்கு பூஜை பண்ணியிருப்பாள். அதனால்தான் கண்ணன் நம்மையெல்லாம் விட்டு இவளை மட்டும் ரகசியமாக அழைத்துச் சென்றிருக்கிறான்.

ப்ரும்மாவும் ஈசனும் லக்ஷ்மியும் விரும்பும் திருவடி இம்மண்ணின் மீது படர்ந்ததே. இதைத் தலையில் அணிந்தாலே கண்ணன் கிடைத்துவிடுவானோ.. ஆனால், இதைத் தலையில் வைத்துக் கொண்டால் தாபம் இன்னும் பெருகுகின்றதே அன்றிக் குறையவில்லையே..

 காலடிகளைப் பின்தொடர்ந்து செல்லத் துவங்கினர்.

சற்று தூரம் சென்றதும், 
இங்கே பார்த்தாயா.. பெண்ணின் காலடிகளைக் காணவில்லை. கண்ணனிம் பாதம் பூமியில் நன்றாய்  அழுந்தியிருக்கிறது. கண்ணன் அவளைத் தூக்கிக்கொண்டு சென்றிருப்பானோ..

தொடர்ந்து செல்ல, ஒரு மரத்தின் அருகே இருவரின் காலடிகளும் இருந்தன. கண்ணனின் காலடிகள் இன்னும் அதிக அழுத்தமாகவும் மரத்தைச் சுற்றியும் இருந்தன. அவ்விடம் முழுவதும் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் பூமியை மூடியதுபோல் காணப்பட்டது.

பார்த்தயா கண்ணன் அவளுக்காக மரத்திலிருந்து பூக்களை உதிர்த்திருக்கிறான். எழும்பிக் குதித்திருக்கிறான். இவ்விடத்தில் அவளுக்குத் தலைவாரிப் பின்னி பூச்சூட்டியிருப்பான்.

கண்ணன் ஆத்மா ராமன். அவனுக்கு வெளியிலிருந்து இன்பம் தேவையில்லை. அந்தப் பெண்ணுக்காக இவற்றை செய்திருக்கிறான்.

தொடர்ந்து கண்ணன் சென்ற பாதையிலேயே தங்களை மறந்து புலம்பிக்கொண்டு சுற்றித் திரிந்தனர்.

கண்ணனுடன் சென்ற கோபி, மற்ற கோபிகளை விட்டுக்‌ கண்ணன் என்னுடன் தனித்து வந்தானே என்று மகிழ்ந்தாள். காட்டின் இன்னொரு பகுதிக்குச் சென்றதும், இனியும் என்னால் நடக்கமுடியாது. என்னைத் தூக்கிச்செல் கண்ணா. என்று கூறினாள்.

இவ்வாறு அவள் சொல்லக்கேட்ட கண்ணன், என் தோளில் ஏறிக்கொள் என்று சொல்லிக் குனிந்தான். அவள் ஏற முயற்சி செய்யும்போது சடாரென்று மறைந்துவிட்டான். நிலை தடுமாறி தொபுக்கடீர் என்று கீழே விழுந்தாள் அவள்.

அங்கேயே அமர்ந்து அழுது தவிக்கலானாள்.

ஹே! கண்ணா! எங்கிருக்கிறாய்? எங்கு போனாய்?  ஏன் மறைந்தாய்? என்னையும் அழைத்துப்போ என்று கதறினாள்.

பகவானின் காலடியைப் பின்பற்றி வந்த மற்ற கோபிகள் அழுதுகொண்டிருக்கும் கோபியைக் கண்டனர். அவளை அணைத்துத் தேற்றி நடந்ததை விசாரித்தனர். கண்ணன் தன்னிடம் பிரியமாக நடந்து கொண்டதையும், தன் கொழுப்பினால் தான் பட்ட அவமானத்தையும் சொன்னாள் அவள்.

சூரிய ஒளியும் நிலவொளியும் கூடப் புகமுடியாத பல அடர்ந்த காடுகளைக் கொண்டது ப்ருந்தாவனம். நிலவொளி தெரியும் வரை உள்ள இடங்களில் சுற்றித் தேடிவிட்டு, இருளில் செல்லாமல் மீண்டும்‌ யமுனைக் கரைக்கே அனைவரும்‌ திரும்பினார்கள்.

அங்கே ஒன்று கூடி, கண்ணனின் வரவை எதிர்நோக்கிக்கொண்டு அவன் புகழைப் பாடத் துவங்கினர்.

இவ்விடத்தில் கோபிகளுக்கு ஸௌபக மதம் ஏற்பட்டதாகவும், அதனால் கண்ணன் விலகியதாகவும் கொள்ளலாகாது. தனித்துக் கண்ணனுடன் சென்ற கோபி ராதையாவாள். 

ஸ்ரீமத் பாகவதம் முழுதும் ராதை என்ற பெயரை ஸ்ரீசுகர் பயன்படுத்தவில்லை. ஏனெனில்‌ ப்ரேமையின் தலைவியான நீளா தேவியின் அம்சமாக வந்திருப்பவள் ராதை. ப்ரும்மஞானியான ஸ்ரீ சுகர் ஏற்கனவே பகவானின் கருணையைச் சொல்லுமிடங்களில் எல்லாம் ஆங்காங்கே மூர்ச்சையாகி ஸமாதிக்குச் சென்று, பிறகு மீண்டும் தன்னிலை அடைந்து கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். ராதையின் பெயரை உச்சரித்தாலோ, கேட்டாலோ, மீண்டும் ‌ஸமாதி அவஸ்தை வந்தால் மீண்டு வர எத்தனை நாளாகும் என்பது அவருக்கே தெரியாது. பரீக்ஷித்திற்கு ஏழு நாள்கள் கெடுவில்‌ ஏற்கனவே ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. இன்னும் மீதி இருக்கும் கண்ணனின் கதையை அவர் விரிவாகக் கூறியாகவேண்டும். எனவே கால அவகாசத்தைக் கருதி, ராதையின் பெயரைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்திவிட்டு, தொடர்ந்து கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார். 

பின்னால் வந்த அத்தனை மஹாத்மாக்களும் ராதையைப் பாடித் தள்ளிவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியுமாதலால், பரீக்ஷித்திற்குக் கதை சொல்வதற்காக இவ்விடத்தில் தன் ப்ரேமானுபவத்தை விட்டுக் கொடுக்கிறார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, March 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 416

கண்ணனைக் காணாமல் தவித்த கோபியரின் எண்ணம் முழுவதும் கண்ணனே. அவனது நடை, சிரிப்பு, கண்களைச் சுழற்றிப் பார்க்கும்‌ பார்வை ஆகியவற்றையே எண்ணிக்கொண்டு கண்ணனைப் போலவே செய்யத் துவங்கினர்.

நான்தான் கண்ணன் நான்தான் கண்ணன் என்று அவனுடைய லீலைகளைச் செய்தனர். அவன் புகழைப் பாடினர். ப்ருந்தாவனத்திலுள்ள எல்லாக் காடுகளிலும் கண்ணனைத் தேடி அலைந்தனர். 

கண்ணனைப் பற்றி மரங்களிடம் கொடிகளிடமும் கேட்டனர். 

அரச மரமே! கண்ணனைப் பார்த்தாயா? ஆல மரமே! கண்ணன் இவ்வழிச் சென்றானா? இவ்வாறு சிரிப்பானே. என்று சிரித்துக் காட்டி அவனைக் கண்டாயா என்று ஒவ்வொரு மரமாகக் கேட்டுக்கொண்டு அலைந்தனர்.

மருதோன்றி, நாகமரம், புன்னை மரம், சம்பக மரம் ஒன்றையும் விடவில்லை. 

சிறிது தூரத்தில் துளசி வனம் இருந்தது. அங்கு சென்று துளசியை வழிபட்டு 
நீ இருக்கும் இடத்தில் கண்ணன் இருப்பான் அன்றோ துளசி மாதாவே? அவனைப் பார்த்தாயா? என்று கேட்டானர்.

மல்லிகை, ஜாதி, பிச்சி, மாலதி ஆகிய செடி கொடிகளிடம் உங்களைத் தடவிக்கொண்டே இவ்வழிச் சென்றானா? கண்ணனின் கரம் உங்கள் மேல் பட்டதா? என்று வினவினர்.

ரஸாலமரம், மா, முரள், பலா, வேங்கை, மலையகத்தி, நாவல், எருக்கு, வில்வம், மகிழம், கடம்பு, பெருங்கடம்பு ஆகிய ஒரு மரத்தையும் விடவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே வாழும் மரங்களே! கண்ணன் சென்ற பாதையைக் காட்டி உதவுங்கள் என்று மன்றாடினர்.

பூமாதேவியை வணங்கிக் கேட்டனர்.

அம்மா! நீ செய்த தவமென்ன? கண்ணனின் திருவடிகள் பட்டதாலன்றோ புல்லரித்துப்போய்ப்  பூத்துக் குலுங்குகிறாய்? 
அதுமட்டுமா, திரிவிக்ரமனாக உன்னை அளந்தானே. வராகராக வந்தபோது அவனை அணைத்தாயே. கண்ணன் எங்கே என்று உனக்குத் தெரியாமல் போகுமா? எங்களுக்குக் கூறலாகாதா?

கண்ணனின் நறுமணம், வனமாலையின் சுகந்தம், சந்தனப்பூச்சின் வாசம் அனைத்தும் இவ்வழியில் உணர்கிறோமே. கண்ணன் இவ்வழிச் சென்றானா? என்று வழியில் நின்ற மானைக் கேட்டனர்.

இவ்வாறு புலம்பிக்கொண்டே கண்ணனின் லீலைகளை மறுபடி செய்யலானார்கள்.

ஒருத்தி பூதனையானாள். மற்றொருத்தி அவளைக் கொல்ல வந்தாள். சகடாசுரன் போல் நடித்தவளை ஒருத்தி காலால் உதைத்தாள்.

குழந்தைபோல் ‌உட்கார்ந்திருந்தவளை த்ருணாவர்த்தன் போல் ஒருத்தி தூக்கிச் சென்றாள்.

ஒருத்தி கண்ணனைப் போல் தவழ்ந்தாள்.

சிலர் மாடுகளைப்போல் நிற்க, கண்ணனாக ஒருத்தி அவர்களை ஓட்டிச் சென்றாள்.

ஒருத்தி கண்ணனைப்போல் நடந்துகாட்டினாள்.

ஒருத்தி காற்றையும் மழையையும் கண்டு பயப்படாதீர்கள். உங்களை நான் காப்பேன் என்று மேலாடையை உயர்த்திப் பிடித்தாள்.

காளியனாக நின்ற ஒருத்தியின் தலை மேல் கண்ணனாக இன்னொருத்தி காலை வைத்துக்கொண்டு நின்றாள்.

ஒருத்தி தன்னை உரலில் கட்டினாற்போல் பயந்து நின்றாள்.

இவ்வாறு புலம்பிக் கொண்டும் நடித்துக்கொண்டும் தேடிச் சென்றவர்கள் ஒரு இடத்தில் கண்ணனின் காலடிகளைக் கண்டனர்.

அவற்றில் தாமரை, கொடி, வஜ்ராயுதம் முதலிய அச்சுகள் இருந்தன. எனவே அவை கண்ணனின் காலடிகள்தான் என்பது உறுதியாயிற்று.

அவற்றைப் பின்பற்றி ஒரு பெண்ணின் காலடிகளையும் கண்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, March 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 415

கோபியரின் பேச்சைக் கேட்ட கண்ணன் சிரித்தான்.

பின்னர் அவர்களுடன் ராஸலீலை செய்யத் துவங்கினான்.

அச்சுதன் என்ற பெயர் கொண்ட கண்ணன், ஐஸ்வர்யமும், ஞானமும் நிரம்பியவன். தர்மத்திலிருந்து சற்றும் விலகாதவன். அடியார்களைக் கைவிடாதவன். 

கோபிகள் அனைவரின் முகங்களும் தாமரைபோல் மலர்ந்திருந்தன. நீலவண்ணனின் புன் முறுவலால் முல்லைச் சரம் போன்ற அவனது பல்வரிசை மின்னியது.

நட்சத்திரங்கள்‌ சூழ விளங்கும் நிலவைப் போல கண்ணன் அழகுற விளங்கினான்.

ஆயிரக்கணக்கான கோபியர் சூழ்ந்து நின்று பாட, கண்ணன் வனமாலை அசையப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு ப்ருந்தாவனத்தைச் சுற்றி சுறி வந்தான். 

பின்னர் அனைவரும் யமுனையின் மணல் திட்டிற்குப் போனார்கள்.

ஆம்பல் பூக்கள் பூத்துப் படர்ந்த யமுனை பார்க்கவே ரம்யமாக இருந்தது.

அங்கேயே கோபியருடன் விளையாடத் துவங்கினான். கோபியர் அனைவரும் தங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறப்பெற்றனர். பரந்தாமனான கண்ணன் விரும்பியேற்ற அழகிகள் அவர்கள். தங்களைப் போன்ற பாக்யசாலிகள் வேறெவரும் உண்டா என்று நினைத்தனர்.

ப்ரும்மாவும் பரமேஸ்வரனும் மயங்கும் அழகுள்ள கண்ணன், கோபியரின் தற்பெருமையைக் களைய எண்ணினான்.

அவர்கள் மனத் தெளிவு பெறுவதற்காக அவ்விடத்திலேயே மறைந்தான்.

பகவான் திடீரென மறைந்ததும் கோபிகள் அனைவரும் திகைத்தனர். இங்கு எங்கேயாவதுதான் இருப்பான் என்று தேடிப் பார்த்தனர். மணல் திட்டு முழுவதிலும் தேடியும் கண்ணனைக் காணவில்லை. 

தங்கள் தலைவனைக் காணாத பெண்யானைகள் போல் தவிக்க ஆரம்பித்தனர்.

காணுமிடமெல்லாம் கண்ணனின் முகமே அவர்களின் கண்களில் நின்றது. அதை நம்பி அருகே சென்று சென்று ஏமாந்துபோயினர். பைத்தியங்களைப்போல் புலம்பத் துவங்கத் துவங்கினர். 

கண்ணனைக் காணவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Sunday, March 22, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 414

குழலிசை கேட்டு ஓடிவந்த பெண்களைப் பார்த்து பகவான் கூறினான்.

வாருங்கள் வாருங்கள் பாக்யசாலிகளே!

இந்த இரவு வேளையில் இத்தனை பேரும் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களே. ஏதாவது காரணம் உண்டா? என்ன விஷயம்?

ஏற்கனவே காடு பயங்கரமானது. அதிலும் இரவில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடும். நீங்கள் இப்படி வரலாமா? எதுவாகினும் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள்.

உங்கள் வீட்டில் தேடமாட்டார்களா? முழு நிலவு வீசும் அழகில் காட்டை ரசித்தாயிற்று அல்லவா? இனியும் இங்கென்ன வேலை?

உங்கள் கணவருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பாலுக்காக அழுகின்றன. என்னிடம் உள்ள அன்பினால் வந்திருந்தால் மிகவும் நல்லது. 

ஆனால், குடும்பத்தைக் குறைவின்றிக் காப்பதே உங்களது முதல் கடைமை. கணவரை விட்டு விட்டு இன்னொருவனைத் தேடி இப்படி இரவில் வருவது தகாது. அப்படி வந்தால் பாவம் வரும். 

என் லீலைகளைக் கேட்பதாலும், என்னைக் காண்பதாலும்,  என்னை தியானம் செய்வதாலும் பக்தி ஏற்படும். அருகில் இருக்கவேண்டும் என்பதில்லை. வீட்டுக்குக் கிளம்புங்கள். 
என்று  ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னான்.

கண்ணனின் பேச்சைக் கேட்ட கோபியர்கள் மனம் நொந்தனர். மிகுந்த துக்கம்‌ ஏற்பட்டது. கண்களில் கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேரம்‌ கழித்துப் பேசத் துவங்கினர்.

கண்ணா! பற்றற்றவர்கே பிடிபடும் மாயோன் நீ. எங்களைக் கைவிட்டுவிடாதே. கடுஞ்சொல் கூறலாகாது. எதற்கும் கட்டுப்படாதவன் நீ. ஆதி புருஷனான நாராயணன் எப்படி தன்னை அண்டியவர்களைக் கைவிடமாட்டாரோ அவ்வாறே நீ எங்களைக் கைவிடலாகாது. 

கணவருக்கும், குடும்பத்தாருக்கும் பணிவிடை செய்வதும், குழந்தைகளைப் பேணுவதும் எங்கள் கடைமைதான். அவர்கள் அனைவரும் இவ்வுடலின் உறவுகள். ஆனால், நீயோ ஆன்மாவின் உறவினன். மனித வாழ்வின் நோக்கமே உன்னை அடைவதுதானே. அதனால் அந்தச் சேவைகளை உயிரின் உறவான உனக்கே செய்கிறோம். தயவு‌செய்து ஏற்றுக்கொள்.

கணவரும் மக்களும் எப்போதும் துன்பம் தருபவர்கள். மேலும் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் மாறக்கூடும். உண்மைப் பொருளான உன்னைக் காண்பவர்கள் உனக்கே சேவை செய்வர். அதுவே நிலைத்து வாழும் வழியாகும்.

வீடுகளிலிருந்த எங்கள் ஈடுபாடு அறவே ஒழிந்தது. எங்களால் எதிலும் ஈடுபட முடியவில்லை. இங்கே எப்படி வந்தோம் என்றே தெரியவில்லை. எவ்வாறு கோகுலம் செல்ல முடியும்?

எங்களின் அனைத்து விதமான தாபத்தையும் போக்கவல்லவன் நீ ஒருவனே. உமது பிரிவால், உள்ளத்தில் ஏற்படும் நெருப்பு எங்கள் உடலையும் அழித்துவிடும்.

மஹாலக்ஷ்மிக்கே உனது பாத சேவை சில நேரங்களில்தான் கிட்டும். ஆனால், காட்டுவாசியான எங்களிடம் அன்பு வைத்து நீ இங்கேயே இருக்கிறாய். எங்களுடைய பாக்யம் இது. இந்த ஆனந்தம் நிரந்தரமானது. இதை விடுத்து வேறொரு செயலை எப்படிச் செய்ய முடியும்?

எப்படி மஹாலக்ஷ்மியும், யோகிகளும் மற்ற பக்தர்களும் உனது சேவையை விரும்புகிறார்களோ அவ்வாறே நாங்களும் விரும்புகிறோம்.

உனது அழகிய பார்வை, புன்சிரிப்பு, முடிக்கற்றை அசையும் நெற்றி, ஒளி பொருந்திய  திருமுகம், மோகிக்க வைக்கும் உன் திருமேனியழகு ஆகியவற்றிற்கு நாங்கள் அடிமைகள்.

உன்னைக் கண்டு பசுக்களும், விலங்குகளும் தம் நிலை மறக்கின்றன. பேதைப் பெண்களாகிய நாங்கள் எம்மாத்திரம்? உனது குழலிசையைக் கேட்டு உருகாதவர்கள் உயிரில்லாதவர்களே.

எங்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவித்தவன் நீதானே. இப்போது நீயே துன்பம் தரலாமா? உனது திருக்கரங்களை எங்கள் தலை மீது வைத்து ஆட்கொள்வாயாக.

என்று அழுதுகொண்டே கூறினார்கள்.

கோபிகளின் இந்த ஸ்துதி ப்ரணய கீதம் எனப்படுகிறது. பஞ்ச கீதங்களுள் இரண்டாவது கீதம் இது.

இதே போல் அந்தணர்களின் மனைவிகளுக்குக் கேட்கத் தெரியவில்லை. அவர்கள் ஏமாந்துபோய் வீட்டுக்குப் போய் விட்டனர். இப்போது பூரண சரணாகதி அடைந்த கோபியர்களைக் கண்ணன் என்ன செய்தான்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Saturday, March 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 413

மழைக்காலத்தை அடுத்த வசந்தகாலம் வந்தது. இரவில் மல்லிகைக்கொடிகள் இலைகளே தெரியாத அளவிற்கு பூத்து மலர்ந்திருந்தன.

மார்கழி மாதத்தில் குட்டி கோபிகளுக்கு வாக்களித்தபடி கண்ணன் இக்காலத்தில் திருவிளையால் செய்ய எண்ணம் கொண்டான்.

சந்திரன் தன் ஒளியால் பூமியைக் குளிர்வித்தான். அனைத்துப் பொருள்களும் நிலவொளியால் அழகு மிகுந்து மிளிர்ந்தன.

பூரணமாக 16 கலைகளும் கொண்ட கண்ணன், இரவில் ப்ருந்தாவனத்தை அடைந்து சந்திர ஒளியில் வனத்தின் அழகை வெகுவாக ரசித்தான்.

பின்னர் ஒவ்வொரு கோபியின் இதயமும் நுழைந்து இழுக்கும் வண்ணமாகத் தேனிசையை புல்லாங்குழலில் எழுப்பினான்.

கேட்கும் ஒவ்வொரு கோபிக்கும் தன் பெயரை அழைப்பதுபோலிருந்தது.

இறைவனிடமிருந்து வரும்‌ அழைப்பை எவரால் மறுக்க இயலும்?

கோபிகளின் கால்கள் நிற்க இயலவில்லை. தங்கள் நிலை மறந்து அப்படியே அனைத்தையும் விட்டுக் கிளம்பி குழலிசை வரும் திசையை நோக்கி ஓடினர்.

பசுவைக் கறந்துகொண்டிருந்தவர்கள், பாலைக் காய்ச்சிக்கொண்டிர்ருந்தவர்கள், உணவு பரிமாறிக்கொண்டிருந்தவர்கள், குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தவர்கள், கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர்கள், உண்டுகொண்டிருந்தவர்கள், அலங்காரம் செய்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

நீராடுபவர்கள், கண்களுக்கு மை தீட்டிக்கொண்டிருந்தவர்கள், எவருக்கும் தங்கள் நிலை நினைவில்லை. ஆடைகளயும் அணிகலன்களையும் மாற்றி அணிந்துகொண்டு ஓடினர்.

அவர்கள் சென்றதை குடும்பத்தில் இருந்தவர் எவரும் அறியவில்லை. எனில், அவர்கள் யோக சரீரத்துடன் சென்றனர் என்கின்றனர் பெரியோர். 

செல்ல இயலாத சில கோபிகள் அங்கேயே அமர்ந்து கண்ணனை தியானம் செய்தனர். எனவே அவர்கள் பாவவினை நீங்கியது. கண்ணனை அணைத்திருந்த ஆனந்தத்தை அனுபவித்ததால் புண்ய வினையும் நீங்கப்பெற்று அக்கணமே முக்தியடைந்துவிட்டனர்.

உடல் நிற்பது வினைப்பயனால் மட்டுமே. வினைகள் தீர்ந்தால் உடலால் நிற்க இயலாது. பரீக்ஷித் இடை மறித்தான்.

முனிவரே! அவர்கள் கண்ணனைக் காதலனகத்தானே கண்டனர்? எனில் வினைகள் தீர்வதெப்படி?

ஸ்ரீ சுகர் சிரித்தார்.

அரசனே! உனக்கு முன்பே கூறியிருக்கிறேன்.

கண்ணனின் ரூபம் மாயையின் தொடர்பில்லாதது. அவன் மீது எவ்வகையிலேனும் கருத்தைச் செலுத்துபவர்களின் வினை ஒழிந்துபோகும். 

சிசுபாலன், மற்றும் பல அசுரர்களும் கண்ணன் மீது பகை கொண்டிருந்தபோதிலும் முக்தியடைந்தனரல்லவா?

கோபிகளைப் போல்(காமம்), 
சிசுபாலன் போல் (பகை),
கம்சனைப்போல் (பயம்),
யசோதையைப்போல் (அன்பு),
பாண்டவர்களைப்போல் (உறவு), 
நாரதர் முதலியவர் போல் (பக்தி) 
இவர்களுள் எவ்வகையில் கண்ணனை நினைத்தாலும் முக்தி நிச்சயம். 

இதில் சந்தேகமோ, வியப்போ வேண்டாம். மரம், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியவை உள்பட முக்தியை அடையும்போது அன்பு செலுத்துபவர்க்கு முக்திக்குத்  தடையேது?

தொடர்ந்து ஸ்ரீ சுகர் அங்கு நடந்தவற்றை வர்ணிக்கலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, March 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 412

வருணனின் பெருமையை நன்குணர்ந்த நந்தன் அவர் கண்ணனிடம் காட்டிய மரியாதையை நினைத்து வியந்தார். வீட்டுக்குச் சென்றதும் தன் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

அதைக் கேட்ட கோபர்கள் மனத்தில் ஒரு ஏக்கம் வந்தது.

ஸர்வேஸ்வரனான பகவான் நம் தோழன் என்றால், அவனால் வைகுண்டத்தைக் காட்ட முடியுமல்லவா? அவன் நம் கண்முன் நடமாடும்போதே வாய்ப்பைப் பயன்படுத்தி வைகுண்டத்தைப் பார்க்கலாமே என்று எண்ணினர்கள்.

எல்லாவற்றையும் அறிந்த கண்ணனுக்கு அவர்களது உள்ளக் கிடக்கை தெரியாதா?

ஒருநாள் அவர்கள் அனைவரையும் அழைத்தான்.

அவர்கள் தம் உண்மை நிலையை உணரவில்லையே. தங்களைத் தகுதியாக்கிக்கொள்ளாமல் அறியாமை மறைக்கிறதே என்றெண்ணியவன் தன் சாமர்த்தியத்தால் அவர்களுக்கு வைகுண்டத்தைக் காட்ட முடிவு செய்தான். 

அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளச் செய்து தன் யோக சக்தியால் அத்தனை கோபர்களுக்கும், தன் நண்பர்களுக்கும் ஒளி மிகுந்த வைகுண்டத்தைக் காட்டினான்.

முதலில் ப்ரும்ம ஸ்வரூபமாகத் தான் இருப்பதையும், தன்னிலிருந்து அனைத்து உலகங்கள் தோன்றுவதையும் காட்டினான். பின்னர் பரவாசுதேவன் கோலத்தையும் காண்பித்தான்.

அதன் பின் யமுனையில் இருந்த ப்ரும்மரதம் என்ற மடுவிற்கு அழைத்துச் சென்றான். அதில் அனைவரையும் முழ்கச் செய்தான். மூழ்கி எழும்போது அவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் இருந்தனர்.

அக்ரூரருக்கும் இதே இடத்தில்தான் வைகுண்ட தரிசனம் ஏற்பட்டது. 
தங்க மயமாக மின்னும் வைகுண்டத்தில் கோபர்கள் ஆசை  தீரச் சுற்றினர். ஏராளமான கற்பக மரச் சோலைகளும், பூக்களும் நீரோடைகளும் கண்டனர். ஏற்கனவே வைகுண்டவாசம் செய்யும் மஹனீயர்களையும் கண்டனர். அவர்களுடன் விளையாடும் கண்ணன் அங்கு ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தனர். வேதமே உருவெடுத்து பகவானைத் துதித்தது.

மறுபடி அவர்களை தன் யோக சக்தியால் ப்ரும்மரதத்திலேயே கொண்டுவந்து விட்டான் கண்ணன். அதைப் பற்றியே பேசிப் பேசி மாய்ந்த கோபர்களுக்கு அத்தனையும் கனவு போலிருந்தது.

மறுபடி கண்ணன் தோளின் மீது கைபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, March 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 411

கண்ணன் கோவர்தனத்தைத் தூக்கியது ஐப்பசி மாத சதுர்தசி, தீபாவளி. அன்றிலிருந்து ஏழு நாள்கள் மலையைத் தாங்கிக் கொண்டிருந்தான். எட்டாம் நாளன்று இந்திரன் வந்து வணங்கி கோவிந்த பட்டாபிஷேகம் செய்வித்தான். எனவே அன்று வட இந்தியாவில் 'கோபாஷ்டமி' என்று கொண்டாடுகின்றனர்.

அடுத்து வந்த கார்த்திகை மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம் கைசிக ஏகாதசி என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அது மிகவும் புண்யமான தினம் என்பதால், அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்தார் நந்தன். பின்னர் மறுநாள் துவாதசி அன்று அதிகாலை எழுந்து யமுனையில் ஸ்நானம் செய்யப் புகுந்தார்.

உண்மையில் அவர் சென்றது நள்ளிரவிலாகும். சேவலின் குரலைக் கேட்டு அதிகாலை என்றெண்ணிச் சென்றுவிட்டார்.

நள்ளிரவு நேரம் அசுரர்களின் வேளையாகும். அவ்வேளையில் நதிகளில் நீராடுதல் பாபத்தை விளைவிக்கும். அறியாமையால் நந்தன் யமுனையில் இறங்க, வருணனின் பணியாளன் ஒருவன், வருணனின் உத்தரவின்படி நந்தனைப் பிடித்து வருணலோகம் கொண்டுசென்றுவிட்டான்.

நதிக்கு ஸ்நானம் செய்யப்போன நந்தன் விடிந்து வெகுநேரமான பின்னும் திரும்பாததால் அரண்மனையில் பதட்டம் கூடிற்று. அரசனைக் காணவில்லை என்னும் செய்தி மக்களை எட்டுமுன் கண்டுபிடித்து அழைத்துவரத் தலைப்பட்டான் கண்ணன். 

எல்லா இடங்களிலும் தேடினான். யமுனை முழுவதிலும், மடுக்களிலும் தேடிக் காணாமல், ஞான திருஷ்டியால் நோக்கினான்.

நந்தன் வருணலோகத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் மிகுந்த கோபம் வந்தது. தனக்குத் துயரென்றால் அதைப் பொறுக்கும் கண்ணனுக்கு, தன் மீது அளவற்ற அன்பு கொண்ட தந்தைக்குத் துன்பம் என்றதும் பொறுக்க இயலவில்லை.

மிகுந்த சினத்துடன் காலனைப்போல் கிளம்பி வருணலோகம் சென்றான். தந்தையைத் தேடி பகவானான கண்ணன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தான் வருணன். எனவே இறைவனை வரவேற்க வருணலோகத்தின் வாசலிலேயே அனைத்து வித மரியாதைகளையும் செய்ய ஆயத்தமாய்க் காத்திருந்தான்.

கோபத்துடன் வந்த கண்ணன் வரவேற்பைக் கண்டதும் சற்று சினம் தணிந்தான்.

கண்ணனை வணங்கி, எல்லாவித மரியாதைகளையும் செய்தபின் வருணன் துதிக்கத் துவங்கினான்.

ப்ரபோ! உடல் பெற்ற பயனை இன்றுதான் அடைந்தேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவர்கள் ஸம்ஸாரக் கடலின் அக்கரையை அடைகிறார்கள்.

யோகிகளுக்குப் பரமாத்மாவாகவும், வேதாந்திகளுக்கு பரப்பிரும்மமாகவும், பக்தர்களுக்கு பகவானாகவும் இருப்பது தாங்களே. 

மாயை இவ்வுலகை தங்களிடமிருந்து வேறாகக் காட்டுகிறது. ஆனால் தங்களிடம் செயலிழந்துவிடுகிறது. 

தங்களது பெருமை உணராமல் என் பணியாள் செய்த தவற்றை மன்னிக்கவேண்டும். தங்கள் தந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்றான்.

தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் கண்ணனின் சினம் முற்றாய்த்  தணிந்தது. நந்தனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

தேவாதிதேவரே ஆனாலும் பகவான் வைகுண்டத்தில் இருக்கும்போது தரிசனம் செய்ய முடிவதில்லை. எத்தகைய துயர் வந்தாலும் அவர்கள் ப்ரும்மாவிடம் முறையிட்டு, அவர் மூலமாகத்தான் இறைவனிடம் கூற இயலும். அப்போது பகவானாக மனம் வைத்து தரிசனம் தந்தால் உண்டு. பல நேரங்களில் அசரீரியாகப் பேசிவிடுகிறான். க்ருஷ்ணாவதாரத்தின் போதும் ப்ரும்மாவின் மனத்தில் தியானக் குரலாய் ஒலித்தானே தவிர, பகவானின் தரிசனம் இல்லை.

அத்தகைய பகவான் பூமியில் இறங்கி மிகவும் எளிமையாக வெண்ணெய் திருடி, சிறுவர்களுடன் விளையாடுகிறான் என்னும்போது தேவர்களுக்கு மிக அதிசயமாக இருக்கிறது. பூலோகத்தில் காலைக் கூட வைக்காமல் இரண்டடி மேலிருந்தே பேசும் பழக்கமுள்ளவர்கள் தேவர்கள்.

இந்திரன், ப்ரும்மா ஆகியோர் பகவானின் எளிமையைக் கண்டு ஏமாந்துபோயினர். ஆனால், வருணனின் நிலை வேறு. 

இந்திரன் சொல்லி மழையைப் பொழிவித்த நீர்க்கடவுளான  வருணன், பகவானின் பெருமைகளைக் கண்ணெதிரே கண்டவன். ஏழு நாளும் மழை வடிவில் கிரிதாரியை அவனும் ரசித்தவன்தானே.

எப்படியாவது பகவான் விபவாவதாரம் (புவியில் இறங்கியிருக்கும்போதே) தன் லோகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றெண்ணினான் போலும். அதனால் அவனே நள்ளிரவில் கூவ சேவலைத் தூண்டினான் என்றும் சொல்கிறார்கள்.

எப்படியோ கண்ணன் வருணலோகத்தில் கால் பதித்து தந்தையை மீட்டு வந்துவிட்டான்.

பகவான் பரவாசுதேவனாக இருக்கும்போது மற்ற லோகங்களுக்குச் செல்வதில்லை. எனவே க்ருஷ்ணாவதாரத்தில் எல்லா‌ லோகங்களுக்கும் சென்று வந்துவிடுகிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, March 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 410

யார் இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் படைத்து அதனுள் நுழைந்து நீக்கமற நிறைந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறாரோ, 

யார் ஈரேழு பதினான்கு லோகங்களின் தலைவர்களையும், அவற்றை‌ நிர்வகிக்க அதிகாரிகளையும் நியமித்தாரோ,

யாருக்கு எவராலும் பயனில்லையோ, எவருடைய துணையுமின்றி எவர் தனித்தியங்குவாரோ,

எல்லாவற்றிற்கும் மேலாக எவர் தன்னை இந்திர பதவியில் நியமித்தாரோ,

அவரது பராக்கிரமங்களையும், இயல்பையும் மறந்து அவரிடமே தான் பெரியவன் என்ற திமிரைக் காட்டினான் இந்திரன். 

அதன் பலனாக இறைவனை ஏறெடுத்தும் பார்க்கத் துணிவில்லாமல் வருந்தி, கூனிக் குறுகிக் கொண்டு தன் செருக்கு முற்றிலும் அழிய, தலையைக் கவிழ்ந்துகொண்டு நின்றான்.

பின்னர் மெதுவாக தழுதழுத்த குரலில் பேசினான்.

இறைவா! உமது வடிவம் பரம சாந்தமானது. ஸத்வ குணத்தால் ஆனது. தங்களைப் பற்றிய உண்மை அறியாதவர் தங்களை சாதாரண மனிதப் பிறவி என்றெண்ணுகின்றனர்.

அறியாமையின் தொடர்பு தங்களுக்குத் துளியும் இல்லை. அப்படியிருக்க ஆசை, கோபம், கஞ்சத்தனம் ஆகிய தீய குணங்கள் தங்களிடம் எவ்வாறு இருக்கும்?

உலகின் தந்தை, குரு, தலைவன், காலன், ஈசன் அனைத்தும்‌ நீரே!

அப்படியிருக்க நானே ஈசன் என்ற செருக்குடையவர்கள், தங்களால் அகங்ஹாரம் அழியப்பெற்று பக்தி மார்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

உமது பெருமையை உணராமல், செருக்கால் நான் செய்த பிழைகளைப் பொறுத்தருளுங்கள்! இனியும் இத்தீய எண்ணம் எனக்கு எக்காலத்திலும் வரக்கூடாது.

எனக்கான வேள்வி தடைபட்டதால் என் ஆளுமையிலிருந்த பெருமழையையும், காற்றையும் துஷ்பிரயோகம் செய்து கோகுலத்தை அழிக்க முற்பட்டேன். என் முயற்சிகள் அனைத்தும் வீணாகி அகங்காரம் அழிந்தது. தங்களையே சரணடைகிறேன்.

கலகலவென்று சிரித்த கண்ணன், இடி போன்ற கம்பீரமான குரலில் பேசினான்.

இந்திரா! உன் செருக்கை அழிக்கவே வேள்வியைத் தடை செய்தேன். செல்வத்தால் ஏற்பட்ட ஆணவத்தால் கண்கள்‌ குருடாகின்றன. அவனது கண்கள் காலரூபனான என்னைக்‌ காண்பதில்லை. நான் யாருக்கு அருள் புரிய விரும்புகிறேனோ அவர்களது செருக்கை அழிப்பேன். எப்போதும் என்னை நினைவில் கொள்ளச் செய்வேன்.

நீங்கள் இப்போது செல்லலாம். உங்கள் கடைமைகளைக் குறைவறச் செய்யுங்கள். என்றான்.

அப்போது இந்திரனுடன் வந்திருந்த காமதேனு கண்ணனை வணங்கிப் பேசினாள்.

உலகைக் காக்கும் இறைவா! நீரே எங்களது மேலான தெய்வம். பசுக்களையும் அந்தணர்களையும், நல்லோரையும் துன்புறுத்திய இவரைத் தலைவராக இனி எங்களால் ஏற்க இயலாது. நீரே எங்களது தலைவன் என்று பட்டாபிஷேகம் செய்ய விரும்புகிறோம். 

கோலோகத்தின் தலைவராக கோவிந்தரான நீங்களே இருக்கவேண்டும்.

கண்ணன் சிரித்து ஆமோதிக்க,
சுரபி தன் பாலால் கண்ணனுக்கு அபிஷேகம் செய்தாள். இந்திரன் தன் தாயான அதிதியின் சொற்படி, ஐராவதத்தை ஆகாச கங்கையைக் கொண்டுவரப் பணித்திருந்தான். அந்த நன்னீரால் கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்து கோவிந்தன் என்று பெயர் சூட்டினான்.

தும்புரு, நாரதர், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், சாரணர்கள், மற்ற எல்லா தேவர்கள், அனைவரும் வந்து கோவிந்தன் பெயரைப் பாடி பூமாரி பெய்து, ஆனந்த நடனம் புரிந்தனர்.

கோவிந்த பட்டாபிஷேகம் சிறப்பாக முடிந்ததும் இந்திரன் மற்ற தேவர்களுடன் கண்ணனின் அனுமதி பெற்று இருப்பிடம் சென்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.




Sunday, March 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 409

கோபர்கள் அனைவரும் நந்தனிடம் கண்ணனின் லீலைகளைச் சொல்லி சொல்லி பின்னர் அவன் யார் என்று கேட்டனர்.

நந்தன் மிகுந்த பெருமையுடன் அவர்களைப் பார்த்துக் கூறத் துவங்கினான்.

முன்பொரு முறை கர்காச்சாரியார் என்னிடம் கூறியவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

இங்கு வளரும் இந்தக் குழந்தை க்ருதயுகத்தில் வெள்ளையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும்,  துவாபர யுகத்தில் சிவப்பாகவும், இருந்தது. இப்போது கறுமை நிறத்தில் இருக்கிறது. இவன் ஒரு சமயம் வசுதேவரின்‌ மகனாகப் பிறந்தானாம். எனவே, வாசுதேவன் என்பதும் இவன் பெயரே.

இவனது செயல்கள், குணங்கள், வடிவங்கள் ஆகியவற்றிற்கேற்ப ஏராளமான பெயர்கள் உண்டு. அவை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கர்காச்சாரியாருக்குத் தெரியும்.

இவன் உங்களுக்கு இன்னும் பல நன்மைகளைச் செய்வான். இவனால் நமது பல துன்பங்கள் எளிதாக விலகும்.

இவனிடம் அன்பு கொண்டவர்கள் பெரும் பாக்யசாலிகள். விஷ்ணுவின் அடியார்களை யாரும் துன்புறுத்த முடியாதல்லவா? அதே போல் கண்ணனிடம் அன்பு கொண்டவர்களையும் யாரும் துன்புறுத்த இயலாது.

கர்கர் மேலும் என்ன சொன்னார் தெரியுமா? கண்ணன் குணங்களிலும், செல்வத்திலும், பெருமை, புகழ் ஆகியவற்றிலும் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஒப்பானவன் என்றார். ஸ்ரீ மன் நாராயணனுக்கு ஒத்தார் மிக்கார் உண்டா?

எனவே கண்ணன் ஸ்ரீ மன் நாராயணனின் அம்சமாக வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன்.

கோபர்கள் அனைவரும் மிகவும்‌ மகிழ்ந்தனர். 
நான் அப்பவே நினைச்சேன், நான்தான் சொன்னேனே. கண்ணன் சாதாரணப் பையனில்லன்னு என்று வளவளவென்று கண்ணனின் பெருமைகளைப் பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்.

அனைவரும் வீட்டுக்குச் சென்று சகஜ நிலைக்குத் திரும்பியதும், கண்ணன் மீண்டும் தனியாக கோவர்தன மலைக்குச் சென்றான். 

மலை மீதேறி அங்கிருந்த கல்லின் மீது தனியாக அமர்ந்து கொண்டான்.

தேவேந்திரன் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக்கோர வருவான் என்பதைக் கண்ணன் அறிந்திருந்ததால் தனியாகச் சென்றான். பெரிய பதவியிலிருப்பவர்கள் சாதாரண மக்கள் முன்பு அவமானத்தால் குறுகினால், அவர்களை மக்கள் மதிக்காததோடு, அவர்களால் தம் பணியையும் குற்ற உணர்வின்றித் தொடர இயலாது. எனவே, கோபர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து வந்து காத்திருந்தான்.

இந்திரனுக்கு கண்ணன் ஸாக்ஷாத் பகவான் என்பதை உணர்ந்தது முதல் மிகவும் பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது. கண்ணனைக் காணக் கிளம்பும் சமயம் தனியாகச் செல்வதற்கு சங்கோஜப் பட்டுக்கொண்டு பசுக்களின் தேவதையான  காமதேனுவையும் அழைத்துக்கொண்டு வந்தான். 

கண்ணனைக்‌ கண்டதும் தன் கிரீடம் தரையில் படுமாறு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, March 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 408

கண்ணன் தன் அமுதப் பார்வையாலேயே கோகுல வாசிகளின் பசி தாகங்களைப் போக்கினான். அவர்களும் வைத்த கண் வாங்காமல் கண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கோபியரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மற்ற நாள்களில் காலையில் கண்ணன் மாடு மேய்க்கக் கிளம்பினால் மறுபடி அவனது காட்சிக்கு மாலை வரை காத்திருக்க வேண்டும். ஏழு நாள்களாக கண்ணன் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிற்க அவனைக் கண்களால் பருகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே. விடுவர்களா. 

சிறுவர்களுக்கோ கண்ணனைப் பகல் முழுதும் காண இயலும், விளையாடலாம். மாலையானால் பிரிய வேண்டும். கண்ணனைப் பார்க்க மறுநாள் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அனைவரும் இரவு பகலாக கண்ணனுடனேயே இருந்தனர்.

எட்டாம் நாள் காலை இந்திரன் வந்து பார்த்துவிட்டு வெட்கினான். அதற்கு மேல் மேகங்களும் இல்லை. கண்ணனின் யோக சக்தியைக் கண்டு வியந்தான்.

வானம் வெளுத்து சூரிய கிரணங்கள் படர்ந்ததும், கண்ணன் அனைவரையும் மலையை விட்டு வெளியில் போகச் சொன்னான்.

அனைவரும் வெளியே சென்றதை உறுதிப் படுத்திக்கொண்டு மலையை மறுபடி உயரே தூக்கி வீசினான்.
விறுவிறுவென்று தானும் வெளியில் வந்து கீழே வந்த மலையைப் பிடித்து வாகாக முன்னிருந்தது போலவே வைத்தான். 

இக்காட்சியைக் கண்டு வானத்தவர் அனைவடும் பூமாரி பெய்து பாடி ஆடினர்.

பலராமனுடன் கண்ணன் கிளம்ப, கோகுலவாசிகள் அவனைத் தொடர்ந்தனர். அனைவரும் கண்ணன் புகழைப் பாடிக்கொண்டே தத்தம் வீடுகளை அடைந்தனர்.

வெள்ளத்தால் உருக்குலைந்த வீடுகளைச் சரி செய்ய நந்தன் ஆள்களை அனுப்பி உதவி செய்தான்.

அனைவரும் கண்ணன் மலையைத் தூக்கியது பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் எல்லோரும் நந்தனிடம் சென்றனர்.

கண்ணனின் செயல்கள் அமானுஷ்யமானவை. அவன் எப்படி பாமரர்களான நம்மிடையே பிறந்தான்? 
யானை தாமரையைத் தூக்குவதுபோல் ஏழே வயதில் ஒரே கையால் மலையைத் தூக்கினானே.

காலனைப்போல் பூதனையின் உயிரைக் குடித்தானே

வண்டிக்குக் கீழே படுத்திருந்த மூன்று மாதக் குழந்தை பசிக்காக காலை உதைத்து அழுதால் அது பட்டு வண்டி உடையுமா?

ஒரு வயதில் த்ருணாவர்த்தன் தூக்கிச் சென்றான். ஆனால் அவனைக்‌ கழுத்தை இறுக்கிக் கொன்றானே.

உரலை இழுத்துக்கொண்டுபோய் மரங்களை வீழ்த்தினானே!

கன்று மேய்க்கச் சென்றவன் தன்னைக் கொல்ல வந்த கொக்கைக் கிழித்துப்போட்டானே.

கன்றோடு கன்றாகப் புகுந்து கொல்ல வந்த வத்ஸாஸுரனை விளாமரத்தின் மீது வீசியெறிந்து வீழ்த்தினானே. அதெப்படி?

கழுதையாக வந்த தேனுகாசுரனையும் அவனது சுற்றத்தையும் கொன்று பனம்பழக்காட்டை எல்லோர்க்கும் பயன்படச் செய்தானே.

வலிமை மிக்க ப்ரலம்பாசுரனை மாய்த்து பசுக்களையும் கோபர்களியும் காட்டுத்தீயினின்று காத்தானே.

விஷம் கொண்ட காளியனை அடக்கி அவனை வெளியேற்றி யமுனையின் மடுவை நன்னீராக்கினானே

இயற்கையாகவே நமக்கு அவனிடம் அன்பு பெருகுகிறதே. ஏன்?

ஏழே வயதுள்ள சிறுவன் ஏழு நாள்கள் மலையைத் தாங்குவது எப்படி? நந்தரே! உண்மையில் கண்ணன் யாரென்பதைக் கூறுங்கள். 
என்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, March 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 407

மழை வலுத்துக்கொண்டே இருந்தது.
விறுவிறுவென்று கோலை ஊன்றி வேகமாய் நடந்தான் கண்ணன்.

பின்னால் ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்த கோப கோபியர்களின் மனத்தில் கண்ணன் என்ன செய்யப்போகிறான் என்ற ஆச்சரியமே நிறைந்திருந்தது. அவனுடன் இணைந்து நடப்பது ஆனந்தமாக இருந்தது. 

கோவர்தன மலையடிவாரத்தில் வந்து நின்றான்.
இதுநாள் வரை நம்மைக் காத்த இம்மலையே இப்போதும் காக்கும் என்றான் கண்ணன். 

மலையின் அருகில் சென்று காலால் ஒரு உதை விட, அது அழகாக மேலே கிளம்பி ரங்கராட்டினம் போல்  சுழன்றது.. ஒரே பாய்ச்சலில் மலையின் அடியில் சென்று நடுவிலிருந்த பெரிய கல்லின் மீது ஏறிக்கொண்டான். இடது கை சுண்டுவிரலை மேலே உயர்த்தி மேலே பார்த்துத் தலையசைத்ததும், மலை அழகாக வந்து குடைபோல் அமர்ந்தது. 

சிறுவர்கள் நாய்க்குடையைப் பிடுங்குவது போலிருந்தது அக்காட்சி.

நண்பர்களே! பயப்படாதீர்கள்! என் கையிலிருந்து மலை நழுவாது. எல்லாரும் உள்ளே வாருங்கள். இம்மலை நமக்கு பாதுகாப்பளிக்கும். மாடுகளையும், மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே வாருங்கள். என்றான்.

தலைக்கு மேல் பழமோ, இலையோ, மயில்பீலியோ குடையோ இல்லை. பெரிய மலை. 

ஒரு கணம் கண்ணன் தடுமாறினாலும் அனைவரும் சட்டினி.

எதையாவது யோசித்தார்களா அவர்கள். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று போற்றுகிறாள் ஆண்டாள். உண்மையில் இவ்விஷயத்தில் அறிவைப் பயன்படுத்தினால் அவநம்பிக்கை தான் வரும். இறைவன்/ குருவின் மீது கேள்வி கேட்கத் தோன்றாத நம்பிக்கை வந்துவிட்டால் போதும். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான். இறைவன் கொடுத்த அறிவைக் கொண்டு அவனை அறிய இயலாது என்பதை உணரும் கணத்தில் அறிவு செயல்படாமல்‌ நிலைக்கும் தருணத்தில் இறைவனின் பரிபூரணமான அருள் தடையின்றிக் கிடைக்கிறது.

அத்தனை பேரும் சற்றும் தாமதிக்காமல் மலைக்கடியில் ஓடினர். ஆங்காங்கே தமக்கேற்ற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கையிலிருந்த பொருள்களை வைத்துவிட்டு ஈரத் துணிகளைப் பிழிந்து உதறினர். ஆண்கள் குச்சியை நட்டுக் கொடி கட்டிக்கொடுக்க துணிகளை உலர்த்தினார்கள். 

பின்னர் அனைவரும் கண்ணனின் இணையடியில் குழுக்களாக அமர்ந்தனர்.

யசோதையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம்,  சிறுமிகள்‌ ஒரு கூட்டம், சிறுவர்கள் ஒரு கூட்டம், நந்தனுடன் பெரிய கோபர்கள்.

ஆளாளுக்குக் கண்ணனின் புகழைப் பேசத் துவங்கினார்கள்.

நந்தன், என் மகனைப் பாத்தீங்களா. ஒரு கஷ்டம்னதும் எப்டி மலையையே தூக்கிட்டான் பாருங்க.
என்று பெருமை பேசினார். 

உண்மையில் மலையை ஒரு ஏழு வயதுச் சிறுவனால் தூக்கமுடியுமா என்ற கேள்வியே இல்லை.

பெண்கள் பேசுவதைக் கேட்க கேட்க, யசோதைக்கு நந்தனின் மேல் கோபம் வந்தது. நேராக நந்தனிடம் வந்து,

உமக்கென்ன வேலை செய்ய ஆள்களா இல்லை? தடிதடியாக இத்தனை காவலர்கள் இருக்காங்களே. அவங்களை வெச்சு மலையைத் தூக்கிக்கறதுதானே. என் பையன் பாவம் சின்னப்பையன். அவன்தான் எல்லா வேலையும் செய்யணுமா. அவனுக்குக் கை வலிக்காதா. என்று கத்தினாள்.

நந்தன் திகைத்துப்போய் நிற்க, கண்ணன் சிரித்தான். அம்மா, விடுங்கம்மா. எனக்கொன்னும் கஷ்டமில்ல. என்றான்.

கண்ணனின் அருகே வந்து அவனை முத்தமிட்டாள் யசோதை. சிறுமிகள் முகம் சிவந்தது.

சிறுவர்களோ கண்ணா, நீ விளையாட வா.  இந்தக் குச்சிகளை அங்கங்க வெச்சு மலையை கீழ விழாம நிறுத்திக்கலாம். என்றழைக்க, கண்ணன் சிரித்தான். நீங்க விளையாடுங்க. அண்ணா இவங்ககூட விளையாடுங்களேன் என்று அனுப்பிவைத்தான்.

சிறுமிகள் மெதுவாக கண்ணனின் அருகே வந்தனர். 
கண்ணா!

ம்ம்..

கை வலிக்கிறதா?

ஆமா, கொஞ்சமா வலிக்கற மாதிரி இருக்கு.

நாங்கல்லாம் செத்தாலும் பரவால்ல. மலையைக் கீழ வெச்சுடேன். உன்னைக் கஷ்டப்படுத்திக்காதயேன். 

கண்ணனின் கையைத் தடவி ஒருத்தி எவர்க்கும் தெரியாமல் முத்தமிட, 

இந்த மாதிரி முத்தம் கொடுத்தா வலியெல்லாம் பறந்துபோயிடும். எத்தன மலை வேணா தூக்குவேன். என்றான்.

சிறுமிகள் முகமும் கண்களும் சிவந்துபோய் ஓடிவிட்டனர்.

தான் கஷ்டப்படவில்லை. லீலையாகத்தான் மலையைத் தூக்குகிறேன் என்பதாக, இடுப்பிலிருந்த புல்லாங்குழலை எடுத்து, வலது கையால் வாசிக்கத் துவங்கினான்.

குழலிசையில் மயங்கி அனைவரும் மோனத்திலாழ்ந்தனர்.
காலம் கடிதே விரைந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, March 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 406

தேவேந்திரன் யாகத்தின் மூலம் வரப்போகும் உணவுகளுக்காகக் காத்துக் காத்துக் குழம்பினான்.

ஏன் யாக உணவுகள் வரவில்லை? ஒருக்கால் தீட்டு, மரணம் அல்லது வேறு ஏதாவது காரணங்களால் யாகத்தைத் தள்ளி வைத்திருக்கிறாகளா?

யோசித்து யோசித்துப் பின் பொறுமையை இழந்து, ஒரு தேவனை அழைத்து என்னவாயிற்றென்று பார்த்து வர அனுப்பினான். 
அந்த தேவன் கோகுலம் சென்று நடந்ததைக் கண்டு வந்து இந்திரனிடம் உரைக்க, தேவேந்திரனின் கோபம் தலைக்கேறியது.

கண்ணனின் மீதும், நந்தனின் மீதும் வந்த ஆத்திரத்தால் அறிவை இழந்தான். தானே இறைவன் என்ற கர்வத்தினால் உலகை அழிக்கும் ஸம்வர்தகம் என்ற ப்ரளய கால மேகக்கூட்டத்தை அழைத்தான்.

காட்டில் வசிக்கும் இடையர்கள், போயும் போயும் மனிதர்கள், செல்வச் செருக்கால் தேவர்களை அவமதித்துள்ளனர்.

கண்ணன் ஒரு வாயாடி, திமிர் பிடித்தவன், அறிஞன் என்ற அகங்காரம், மனிதன், அவனைத் துணைக்கொண்டதற்காக அந்த இடையர்கள் வருந்தவேண்டும்.
(இந்த ஸ்லோகத்திற்கு மாற்றாகப் பொருள் உண்டு. பெரியவர்களால் நிந்தா ஸ்துதியாக போற்றப்படுகிறது.)

மேகங்களே, தங்களைப் பெரிய மனிதர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் அவர்களது செருக்கைப் பொடிப் பொடியாக்குங்கள். அவர்களது செல்வமான  பசுக்களையும் அழியுங்கள்.

பேராற்றல் கொண்ட மருத் என்ற காற்றுக்கூட்டத்துடன் நான் உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன்.

மலைக்குப் பூஜை செய்துவிட்டு கோகுல வாசிகள் வீடு திரும்பினர். அன்று முழுவதும் மலைச்சாமியைப் பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. மலைச்சாமி கண்ணனைப் போலவே இருந்தது என்று பேசிக்கொண்டார்கள்.

திடீரென்று வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மின்னல்கள் கண்ணைப் பறித்தன. வானமும் மேல் லோகங்களும் கீழே விழுந்துவிட்டதைப்போல் தொடர்ந்து இடி விழுந்தது. பேய்க்காற்று வீசிற்று. ஆலங்கட்டி மழை கொட்டத் துவங்கிற்று.

குடிசைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கண்ணன் ஊருக்கு மத்தியில் ஒரு மரத்தடியில் கல்லின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்திருந்தான்.

அனைவரும் மாடுகளை அழைத்துக்கொண்டு கண்ணனிடம் ஓடிவந்தார்கள்.

கண்ணன் அவர்கள் அனைவரையும் தீர்கமாக ஊன்றி கவனித்தான்.

ஸர்வக்ஞனான பகவான் அவர்கள் மனத்தைப் படித்தான்.

இந்திர வேள்வியைத் தடை செய்ததால் அவன் கோபம் கொண்டு மழையை ஏவியிருப்பதை அறிந்திருந்தான்.

கண்ணா காப்பாற்று என்று வேண்டிய கோபர்கள் 
ஒருவராவது வேள்வியை நிறுத்தியதால் வந்த ஆபத்து என்றோ  கண்ணனால் நிகழ்ந்தது என்று சொல்வதல்ல, மனத்தினால் கூட எண்ணவில்லை.

கையிலிருந்த கோலை ஊன்றி எழுந்து, கல்லின் மேல்‌ ஏறிய கண்ணன், அவர்களைப் பார்த்துப்‌ பேசத் துவங்கினான்.

தனக்கான வேள்வி தடைபட்டதால் இந்திரன் கோபம் கொண்டு மழையை ஏவியிருக்கிறான். கவலைப் படாதீர்கள். நான் அவனது திமிரை அடக்குவேன். ஸத்வ குணம் கொள்ள வேண்டிய தேவர்கள் அகங்காரம் கொள்வது பிரபஞ்ச ஒழுங்கை பாதிக்கும். என்னையே சரணடைந்தவர்களை நான் அனைத்து சக்திகளையும் பயன்படுத்திக் காப்பாற்றுவேன். இதுவே என் கொள்கை.

அனைவரும் என் பின்னால் வாருங்கள்.

என்று கூறி, விறுவிறுவென்று நடக்கத் துவங்கினான்.

கோகுலத்திலிருந்த கோப கோபியர்கள், மாடுகள், மற்றும் அனைத்து ஜீவராசிகள் அனைத்தும் கண்ணனைப் பின் தொடர்ந்தன.
நாமும் எப்போதும் கண்ணனைப் பின்தொடர்வோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, March 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 405

வேள்விக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தணர்களும் வரவழைக்கப்பட்டுவிட்டதால் அவர்களைக் கொண்டு உலக நன்மைக்காக சிறிய அளவில்‌ ஒரு வேள்வி நடத்தப்பட்டது. வேள்வி முடிந்ததும் அனைவர்க்கும் தக்ஷிணைகளும் தானங்களும் வழங்கப்பட்டன.

இந்திர வேள்விக்காகச் சேர்த்த பொருள்களைக் கொண்டே அனைத்தும் செய்யப்பட்டன. அனைவரும் நன்கு அலங்கரித்துக்கொண்டு  எருதுகள் ‌பூட்டப்பட்ட வண்டிகளில் அமர்ந்து கண்ணனின் லீலைகளைப்‌ பாடிக்கொண்டு கோவர்தன மலையடிவாரத்தை அடைந்தனர்.

மலையின் முன்னால் பெரியதாக படையல் போடப்பட்டது. கோவர்தன மலையின் முன் குட்டி குட்டி மலைகள் போல் உணவுகள் பரத்தப்பட்டன.  புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம்,‌ தேங்காய் சாதம், ரொட்டிகள், லட்டுகள், முறுக்குகள், அப்பங்கள், திரட்டுப்பால், பாயசம், வடை, இன்னும் பல வகை இனிப்புகளும், சாதங்களும் படைக்கப்பட்டன.

அனைவர் மனத்திலும் ஒரு பெரிய சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. இந்திர வேள்வி என்று செய்யும்போது, அனைத்து உணவுகளும் அக்னி குண்டத்தில் படைக்கப்படும். இப்போது மலையின் முன் வைத்திருக்கிறோமே. இவ்வளவு உணவுகளும் என்னாகும்? என்பதுதான் அது.

அனைவரின் உள்ளும் உறையும் கண்ணனுக்கு அவர்களின் சந்தேகம் தெரியாதா? அவனே பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டான். நான் கோவர்தன மலை என்று சொல்லிக்கொண்டு  அனைத்து உணவுகளையும்  விழுங்கிவிட்டான்.

இப்போது சுவைக்காகவாவது ப்ரசாதம் மிஞ்சுமா என்று கவலை வந்துவிட்டது கோபர்களுக்கு.

வாயில் விரலைப் போட்டுக்கொண்டு நந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த கண்ணன், 

அப்பா! அதிசயம்‌ பாருங்கள்! தெய்வமே காட்சி தருகிறது. இந்த மலையப்பனே நம்மை காத்தருள்கிறார். எல்லாரும் அவருக்கு நமஸ்காரம் செய்யலாம் என்று கூறிவிட்டு, முதலில் தான் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்‌செய்தான். கண்ணன் செய்வதைப் பார்த்து  அத்தனை மக்களும் நமஸ்காரம் செய்தனர்.

பின்னர் அனைவரும் மலையை வலம் வந்தனர். 

வண்டிகளில் பெண்களும்‌ குழந்தைகளும் ஏறிக்கொள்ள, ஆண்கள் நடந்து சென்று மலையைச் சுற்றிவலம் வந்து வணங்கினர்.

பின்னர் கண்ணன் புகழைப் பாடிக்கொண்டு வீடு சென்றனர்.

அங்கே இந்திரலோகத்தில் தேவேந்திரன், கோகுலத்திலிருந்து விதம் விதமான உணவுகள் வரப்போகின்றன என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தான். 

ஏனெனில் ஸ்வர்கத்தில் உணவு என்பதே இல்லை. யாருக்கும்‌ பசியும், உறக்கமும்‌கிடையாது. ஸ்வர்கத்தில்‌ நுழையும் ஜீவனுக்கு உள்ளே வரும்போதே அவனது புண்யக் கணக்கிற்கேற்றபடி ஓரிரு துளிகள் அம்ருதத்தை வாயில் விடுவார்கள். அவ்வளவுதான். அந்த ஜீவனுக்கு ஸ்வர்கத்திலிருக்கும் வரை பசியும், உறக்கமும் கிடையாது. பசியுமில்லை, உறக்கமும் வராது என்றால் என்னவாகும்? பைத்தியம் பிடிக்காதா? எப்போதும் கேளிக்கைகளிலேயே பொழுதைக் கழிக்க இயலுமா என்ன? 

மேலும் பூவுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்களில் சேகரித்த புண்யத்தின் பலன் ஸ்வர்கத்தில்‌ மிகக்‌குறுகிய காலத்தில் கரைந்துவிடும். 

வேள்விகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்படும் உணவுதான் அக்னி‌பகவான் மூலமாக குறிப்பிட்ட தேவரைச் சென்றடையும். இப்போது இந்திரன் கோகுலத்திலிருந்து  ருசியான உணவு வரப்போகிறதென்று காத்திருக்கிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, March 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 404

இடைச்சேரி விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே தோரணங்கள், மாலைகள், தீபங்கள், ஏராளமான தானியங்கள் மலைபோல் குவிக்கப்படிருந்தன.

அண்டா அண்டாவாக விதம் விதமான உணவுகளும் பட்சணங்களும் தயாராகிக் கொண்டிருந்தன. வேள்விச் சாலைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து கோபர்களும் வேள்விக்கு வேண்டிய பொருள்களைத் தயார் செய்யும் வேலையில் இருந்தனர்.

நந்தன் ஒரு மரத்தடித் திண்ணையில் சில கோபர்களுடன் அமர்ந்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அனைத்தையும் நன்கு கவனித்த கண்ணன், நேராக தந்தையிடம் சென்றான்.

கண்ணனுக்கு அனைத்தும் தெரிந்தபோதிலும் மிகவும் அடக்கமாக, வணங்கிக் கேட்டான்.

அப்பா! இதென்ன இவ்வளவு பரபரப்பு? என்ன நடக்கப்போகிறது? என்ன வேள்வி? யாரைக் குறித்து? எதற்கு இவ்வளவு திரவியங்கள்? ஏதாவது விழாவா? என்னிடம் சொல்லக்கூடாதா? 

இந்த வேள்வி எதற்கு? இதன் காரண காரியங்கள் இருக்கிறதா? அல்லது வழக்கம் என்பதற்காகச் செய்கிறோமா?

கண்ணனைப் பற்றி நன்கறிந்த நந்தன் அவனை தீர்கமாகப் பார்த்தார். பின்னர் கூறத் துவங்கினார்.

கண்ணா! நமக்கெல்லாம் பகவான் இந்திரன். மேகங்களின் அதிபதி. நமக்கு நல்ல நீரை மேகங்கள்தானே வழங்குகின்றன? எனவே அந்த மேகங்களால் உண்டான மழையால் விளையும் பொருள்களைக் கொண்டு வேள்வி செய்து இந்திரனை வழிபடுகிறோம்.

நாம் இதைப் பரம்பரையாகச் செய்துவருகிறோம். இவ்வாறு குலவழக்கமாகச் செய்யும் விஷயங்களைத் தன் விருப்பத்திற்காகவோ, பேராசை, பயம், மற்றும் துவேஷம், சோம்பேறித்தனம் ஆகியவற்றால் செய்யாமல் விட்டால் நன்மை விளையாது.

இதைக் கேட்ட கண்ணன், இந்திரனைச் சீண்டிப் பார்க்கும் விதமாகப் பேசினான்.

அப்பா! ஒவ்வொரு உயிரும் கர்மவினையால் தோன்றுகிறது. கர்மவினையாலேயே மடிகிறது. இன்ப துன்பம் அனைத்திற்கும் காரணம் கர்மாதான்.

இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் கர்மவினைக்கேற்ற பயனையே அளிப்பார். கர்மா இல்லாமல் தன்னிச்சையாக சுகத்தையோ துக்கத்தையோ வழங்கமாட்டார்.

அவரவர் தத்தம் வினைக்கேற்ற பயனையே அனுபவிக்கிறார்கள் என்னும்போது, இங்கு இந்திரனால் நமக்கென்ன பயன்?

வினைப்பயனை ஒட்டியே இவன் எதிரி, இவன் நண்பன் என்ற பாகுபாடு நிலவுகிறது.

முன்வினைக்கேற்ப விதிக்கப்பட்ட கடைமைகளைச் செய்துகொண்டு வாழ்வை நடத்தவேண்டும். வாழ்வை நடத்த எது உதவுகிறதோ அதுவே தெய்வம்.

வாழ்விற்குதவும் தெய்வத்தை விட்டு மற்றவரை உபாசனை செய்தால் பலனொன்றுமில்லை.

அப்பா! வைசியர்களாகிய நமக்கு விவசாயம், வணிகம், பசுக்களைக் காத்தல், வட்டிக்குப் பணம் தருதல் ஆகிய நான்கும் வாழும் வழிகள். நாமோ பசுக்களைக் காத்துப் பிழைக்கிறோம்.

முக்குணங்களால் தூண்டப்பட்டே பிரபஞ்ச கர்மங்கள் யாவும் நடக்கின்றன. மழை ரஜோ குணத்தால் தூண்டப்படுகிறது. இதில் மகேந்திரனுக்கென்ன வேலை?

நமக்கென்று நாடோ, வீடோ, நகரமோ கிடையாது. நாம் எப்போதும் காட்டிலும் மலையிலும்தானே வசிக்கிறோம். எனவே அந்தணர்கள், பசுக்கள் இவர்களின் நன்மைக்காக ஒரு சிறிய வேள்வி  செய்யலாம். எல்லா விதமான உணவுகளும் தயாராகட்டும்.
 அந்தணர்களுக்குப் பல்வகையான உணவுகளையும், தக்ஷிணைகளையும் கொடுக்கலாம். 

மற்ற ஜீவராசிகள், சமூகத்தில் பிற்பட்ட மக்களுக்கும் அவரவர்க்குப் பிடித்த உணவைக் கொடுப்போம். பசுக்களுக்குப் புற்களைக் கொடுப்போம். கோவர்தன மலைக்குப் படையல் போடுவோம். புத்தாடை உடுத்தி, நன்கு அலங்கரித்துக் கொண்டு, நன்கு உண்டபின், மலையை வலம் வருவோம். வேள்வி, பசுக்கள், அந்தணர்கள், மற்றும் இந்த கோவர்தன மலை ஆகியவையே எனக்குப் பிரியமானவை. 

நான் சொன்னவை தங்களுக்கு உகப்பென்றால் செய்யுங்கள் என்றான்.

கண்ணன் பேச பேச, எல்லா கோபர்களும் அங்கு கூடிவிட்டிருந்தனர்.

அனைவரும்‌ சேர்ந்துகொண்டு 
கண்ணன் சொன்னது சரி. கண்ணன் சொன்னது சரி என்று கூக்குரலிட, நந்தன் ஊராரின் ஆமோதித்தலின்படி கண்ணன் சொன்னதை செயல்படுத்த உத்தரவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..