ஒரு நாள் தர்மபுத்ரர், பெரியவர்கள் அனைவரும் கூடியிருந்த சபையில் கண்ணனிடம் கூறினார்.
கோவிந்தா! வேள்விகளில் சிறந்தது ராஜசூயம். அவ்வேள்வியால் தம்மை ஆராதிக்க விரும்புகிறேன். அதைத் தாங்கள்தான் நடத்தித் தரவேண்டும்.
தங்கள் திருவடிகளை தியானிப்பவரும், புகழைக் கூறுபவரும் மனத்தூய்மை பெற்று, இவ்வுலக வாழ்வின் நலன்கள் அனைத்தையும் பெறுவதோடு முக்தியும் அடைவர். இங்குள்ள மக்கள் அனைவரும் தங்கள் திருவடி மஹிமையை உணர வேண்டும். தங்களை வழிபடுவதன் நன்மையை கௌரவர்கள் உள்பட அனைத்து தேசத்தவரும் அறியவேண்டும்.
நீங்கள் வேறுபாடுகள் அற்றவர். ஆனந்த ரூபம். தங்களைத் தொழுபவர்க்கும் மற்றவருக்கும் வித்தியாசம் பார்க்காதவர். ஆனால், உமது அருள் வேண்டுபவர்க்கு வேண்டியபடி கிட்டும். அதை அறிந்தவர்கள் தம்மை விட்டு பிற விஷயங்களை நாடமாட்டார்கள்.
என்றார்.
பகவான் கண்ணன் தனக்கே உரிய மந்தஹாஸத்துடன் பதிலிறுத்தான்.
எப்போதும் வெற்றியடைபவரே! தங்கள் எண்ணம் மிகவும் நல்லது. இதனால் உங்கள் புகழ் உலகெங்கிலும் பரவும். ரிஷிகள், அந்தணர்கள், மூதாதையர், தேவர்கள், நல்லோர், மற்றும் அனைத்து உயிர்கட்கும் இவ்வேள்வியானது நன்மைதரும் விஷயமாகும்.
ஆனால், தாங்கள் அனைத்து அரசர்களையும் வெற்றி கொண்டு அல்லது நட்பாக்கிக்கொண்டு பின்னர் இவ்வேள்வியைச் செய்யலாம். உங்கள் சகோதரர்கள் தேவாம்சங்களாகத் தோன்றியவர்கள். நீங்கள் என்னைத் தங்கள் புலனடக்கத்தால் வசப்படுத்திவிட்டீர்.
என்றான்.
அதைக் கேட்ட யுதிஷ்டிரன், உடனே தனது தம்பியர்க்கு திக்விஜயம் செய்து வர ஆணையிட்டார்.
தென்திசையில் சகாதேவன் ஸ்ருஞ்ஜய வீரர்களுடனும், மேற்கு திசையில் நகுலன் மத்ஸ்ய தேசத்து வீரர்களுடனும், வடதிசையில் அர்ஜுனன் கேகய வீரர்களுடனும், கிழக்கில் பீமன் மத்ரதேச வீரர்களுடனும் சென்றனர்.
சில நாள்களில் நால்வரும் அனைத்து திக்குகளையும் வென்று பெரும்பொருளைத் திரட்டி வந்தனர்.
ஜராசந்தனை மட்டும் வெல்லாமல் திரும்பியதைக் கண்டு தர்மபுத்ரர் சிந்தையில் ஆழ்ந்தார். மனக்கிலேசம் போக்கும் மாதவன், அவரிடம் உத்தவன் கூறிய உபாயத்தைக் கூறினான்.
பின்னர் கண்ணன், பீமன், அர்ஜுனன் மூவர் மட்டும் அந்தணர் வேடம்பூண்டு கிளம்பினர்.
கிரிவிரஜ நகரம் சென்று தினமும் ஜராசந்தன் அதிதிகளை உபசரிக்கும் வேளையறிந்து அந்நேரத்தில் அவனது அரண்மனைக்குச் சென்றனர்.
அந்தணர்களை மதிக்கும் ஜராசந்தன், அவர்களைக் கண்டதும் வரவேற்று யாதுவேண்டும் என்று கேட்டான்.
அரசே! தங்களிடம் ஒன்றைப் பெறவேண்டி அதிதிகளாக வந்தோம்.
பொறுமையுள்ளவர்க்கு பொறுக்கத் தகாதது ஏதுமில்லை. தீயோர்க்கு செய்யத்தகாத செயல் ஏதுமில்லை. வள்ளல்களால் வழங்கமுடியாததொன்றில்லை. எல்லாரிடமும் சமநோக்கு உள்ளவர்க்கு இவன் வேற்றாள் என்ற எண்ணமில்லை.
நிலையற்ற இவ்வுடலைக் கொண்டு நிலையான புகழை அடையத் தவறுபவனின் பிறவி வீணாகும்.
அரிச்சந்திரன், ரந்திதேவன், சிபி ஆகியோர் நிலைத்த புகழைப் பெற்றவராவர்.
ஜராசந்தன் வந்தவர்களின் பேச்சுவழக்கு, நடை, உடற்கட்டு, வில்லின் நாண்கயிற்றால் காய்த்துப்போன மணிக்கட்டு ஆகியவற்றைக் கண்டு இவர்கள் யாராயிருக்கும் என்று யோசிக்கலானான். பின்னர், இவர்கள் யாராயினும் அந்தணர் வேடமிட்டு வந்திருப்பதால் என் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.
மஹாவிஷ்ணு அந்தண வேடமிட்டு வந்து இந்திரன் விரும்பிய செல்வத்தை பலியிடமிருந்து பறித்தார். ஆனால், பலி அழியாப் புகழ் பெற்றார். மஹாவிஷ்ணு என்றறிந்தும், குரு சுக்ராசாரியார் உணர்த்தியும் தானம் அளித்தார். அவ்வாறே நானும் இவர்கள் கேட்பதைக் கொடுப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment