ஸ்ரீசுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷித்! சிறு துரும்பு முதல் ப்ரும்மா வரை அனைவர்க்கும் முதலும் முடிவும் உண்டு. இவ்வுலகின் அனைத்து விஷயங்களும் நீரோட்டம் போலவும் விளக்கொளியைப் போலவும் நிரந்தரமற்றவை. மாறுபடக்கூடியவை. தோற்றமும் லயமும் காலத்தின் அடிப்படையில் நிகழ்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை எப்போதும் வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றின் சுழற்சி கண்களுக்குத் தெரிவதில்லை.
மேற்கூறிய அனைத்து காரியங்களுக்கும் ஆதாரமானவர் பகவான் நாராயணன் ஒருவரே. அனைத்தும் அவரது திருவிளையாடலே.
இந்த ஸம்ஸாரக் கடலைக் கடக்க விரும்புபவர்களுக்கு உதவும் சிறந்த ஓடம் புருஷோத்தமனின் லீலைகளைச் செவியாறப் பருகுவதும், அவரது நாமங்களை நாத்தழும்பேறச் சொல்வதுமேயாகும்.
இதுவரை நான் உனக்குக் கூறிய விஷயங்களை முதன்முதலாக நர நாராயண ரிஷிகளுள் ஒருவரான நாராயண ரிஷி தேவரிஷியான நாரதர்க்குக் கூறினார். நாரத மஹரிஷி என் தந்தை வியாஸருக்குக் கூறினார்.
க்ருஷ்ணத்வைபாயனர் என்றழைக்கப்படும் வேதவியாஸர் என் தந்தையாவார். அவர் ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் எனக்கு இவ்விஷயங்களைக் கூறினார். உனக்கு நான் கூறியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணம் எனப்படும். இவை முழுதும் பகவானின் லீலைகளை வர்ணிப்பதாகும்.
இனி வருங்காலத்தில் நைமிஷாரண்யம் எனும் க்ஷேத்ரத்தில் சௌனகாதி மஹரிஷிகள் ஒரு பெரிய ஸத்ர யாகம் செய்வார்கள். ஆயிரம் வருஷ காலம் நடக்கப்போகும் அந்த யாகத்தின் விராம காலத்தில் ஸூத பௌராணிகர் இந்தப் புராணத்தை அங்கிருக்கும் ரிஷிகளுக்குக் கூறப்போகிறார்.
இப்புராணத்தின் ஒவ்வொரு எழுத்தும் பகவானின் மஹிமையைப் பற்றி மட்டுமே பேசுவதாகும். பகவானின் லீலைகளை மட்டுமே வர்ணிக்கும் கிரந்தம் இது.
அனைவரும் காலத்தின் கைப்பாவைகள்.
எனவே அரசனே! நான் இறக்கப்போகிறேன் என்று எண்ணாதே. அறியாமை என்பது விலங்குகளுக்கானது. மனிதனுக்கானது அல்ல. எனது இவ்வுடல் முன்பு இல்லை. இப்போது இருக்கிறது. நாளை இருக்குமா என்பது நிச்சயமில்லை. அதே போலத்தான் உன் உடலும்.
விதையிலிருந்து முளை தோன்றி மரமாகும். பின்னர் மரத்திலிருந்து விதை தோன்றும். அதுபோல சரீரத்திலிருந்து சரீரம் தோன்றிக்கொண்டே போகும்.
நீ இனி எப்போதும் தோன்றப்போவதில்லை. இதற்கு முன்பாகவும் தோன்றவில்லை. சாஸ்வதமான ஆத்மாவாக இங்கேயே தான் இருக்கிறாய். அதற்கும் இந்தப் ப்ரபஞ்சத்திற்கும் தொடர்பில்லை. நீ உடலினின்று வேறானவன். உடலுக்குத்தான் தோற்றமும் அழிவுமே தவிர ஆன்மாவான உனக்கு எப்போதும் மாறுபாடு இல்லை. நீ சாஸ்வதமானவன்.
கனவுலகில் ஒருவன் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை நம்புவான். விழிப்பு வந்ததும் அவை மறைந்துவிடும். ஆன்மாவைப் பற்றிய மெய்யறிவு ஏற்பட்டதும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. அப்போது பார்க்கும் பொருள் அனைத்திலிருந்தும் தான் தனித்திருப்பது புலனாகும். ஆன்மாவுக்குப் பிறப்புமில்லை. இறப்புமில்லை. சுத்தமான மெய்யறிவே பரமாத்ம ஸ்வரூபமாகும்.
குடத்தினுள்ளும் வெளியிலும் ஆகாயம் நிறைந்திருக்கும். குடம் உடைந்தால் குடத்திலுள்ள ஆகாயம் பெருவெளியில் கலந்துவிடும். அதுபோல் சிலர் இறந்தால்தான் ப்ரும்மதோடு கலக்கமுடியும் என்றெண்ணுகின்றனர்.
அவ்வாறன்றி இவ்வுடலுக்குள் இருந்தாலும் நீ ப்ரும்மம்தான். ஆனால், உள்ளே இருக்கும்போது நீ ப்ரும்மத்திலிருந்து வேறானவனாகத் தெரிவது மாயையால்தான்.
ஆன்மாவிற்கு குணங்களையும் குற்றங்களையும் இருப்பது போல் கற்பிப்பது மனம்.
மனம் மாயையின் தூண்டுதலால் ஏற்படுவது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..