பலராமன் இன்னும் என்னென்ன லீலைகள் செய்தார்? அவரைப் பற்றிக் கூறுங்களேன் என்றான் பரிக்ஷித்.
ஸ்ரீ சுகர் துவங்கினார்.
ஆதிசேஷனின் அம்சமாக பகவானின் கலைகளுள் ஒன்றாக பலராமன் அவதாரம் செய்ததும் அவன் மீது காதல் கொண்ட நாகலோக கன்னிகைகள் கோபியர்களாகவும், மற்ற தேசங்களிலும் அவதரித்தனர்.
ஒரு முறை பலராமன் ரைவத மலையின் அருகிலிருந்த காட்டில் தன்னை விரும்பும் பெண்களுடன் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். அங்கிருந்த மடுவில் ஜலக்ரீடைக்காக அனைவரும் இறங்கினார்கள்.
அவ்வமயம், நரகாசுரனின் நண்பனான த்விவிதன் என்பவன் தன் நண்பனின் இறப்புக்காகப் பழி வாங்கும் எண்ணம் கொண்டு அக்கிரமங்கள் செய்தான். இடைச்சேரிகளைத் தீயிட்டுக் கொளுத்தினான். குலப்பெண்களைத் தூக்கிக்கொண்டுபோய் நாசம் செய்தான். மலைகளைப் பெயர்த்தெடுத்து துவாரகையின் அருகிலிருந்த ஆனர்த்த தேசத்தின் (கடியாவாட்) மேல் எறிந்தான்.
பத்தாயிரம் யானை பலமுள்ள அவன் கடலின் நடுவில் நின்றுகொண்டு நீரை வாரியடித்து கரையோரப் பகுதிகளை மூழ்கடித்தான்.
முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று வேள்விகளைக் குலைத்தான். அப்பாவி மக்களைத் தூக்கிக்கொண்டுபோய் குகைக்குள் அடைத்து வாயிலை மூடினான்.
இவ்வாறு அட்டூழியங்கள் செய்துகொண்டே ரைவத மலையின் அருகிலிருந்த காட்டிற்கு வந்தான். அங்கே பலராமன் ஜலக்ரீடை செய்வதைப் பார்த்து அவன் மீது கோபம் கொண்டான்.
மடுவின் கரையிலிருந்த மரத்தின் மீதேறிக்கொண்டு கிளைகளை உலுக்கினான். பலராமனுடன் இருந்ததால் அப்பெண்கள் பயப்படவில்லை. மாறாக அவனைக் கேலி செய்து சிரித்தனர்.
அவன் அசிங்கமான சேஷ்டைகளைச் செய்து ஈ என்று இளித்துக்கொண்டு அவர்கள் எதிரில் வந்தான். பலராமன் அவனைக் கல்லால் அடித்தான்.
த்விவிதனோ பெண்களின் துணிகளைக் கிழிக்கத் துவங்கினான்.
கடுங்கோபம் கொண்ட பலராமன் கலப்பையையும் உலக்கையையும் எடுத்தான்.
த்விவிதன் மரங்களைப் பெயர்த்து அடிக்கத் துவங்கினான். பலராமன் அவன் வீசிய அத்தனை மரங்களையும் தடுத்து முறிக்க அவ்விடமே மரங்களற்று பாழும் இடமாகிப்போனது.
த்விவிதன் மலைமீதேறிக்கொண்டு கல்மாரி பொழிந்தான். பலராமன் அனைத்தையும் தூள்தூளாக்கினான். பின்னர் அவ்வானரன் பலராமனின் நெஞ்சில் முஷ்டியால் குத்தினான். பலராமன் விளையாடியது போதும் என்றெண்ணி உலக்கையையும் கலப்பையையும் கீழே வைத்துவிட்டு அவனை முகத்தில் ஓங்கிக் குத்த, ரத்தம் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான் த்விவிதன். வானுலகிலிருந்து பூமாரி பெய்ய, சித்தர்களும் முனிவர்களும் பலராமனை வாழ்த்தினர். இந்த த்விவிதன் சுக்ரீவனின் அமைச்சனாவான்.
பலராமன் துவாரகைக்குத் திரும்பினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment