Thursday, May 27, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 643

யாக்ஞவல்க்யரின் ஸ்துதியைக் கேட்டு மகிழ்ந்த சூரிய பகவான் அவர் முன் குதிரை முகத்துடன் தோன்றினார்.  இதுவரை எவராலும் அறியப்படாத யஜுர்வேத சாகைகளை போதித்தார்.

மிகவும் அரிய அந்த வேத சாகைகளை யாக்ஞவ்ல்க்யர் பத்தாகப் பிரித்தார். மிகவும் வேகமாக உபதேசிக்கப்பட்ட அந்த மந்திரங்கள் வாஜஸந்ய சாகை எனப் பெயர் பெற்றன‌. 

ஜைமினி தான் கற்ற சாமவேதத்தை தன் மகனான ஸுமந்துவுக்கும் அவர் மகனான ஸுந்வானுக்கும் கற்பித்தார்.

ஸுகர்மா என்பவர் ஜைமினியின் மற்றொரு சீடர். இவர் ஸாமவேதத்தை ஆயிரம் கிளைகளாகப் பிரித்தார்.

ஸுகர்மாவின் சீடர்கள் இரண்யநாபன், பௌஷ்யஞ்சி, ஆவந்தியன் ஆகியோர். இவர்கள் மூவருக்கும் வட தேசத்தைச் சேர்ந்த ஐந்நூறு சீடர்கள் இருந்தனர். இவர்கள் உதீச்ய ஸாமவேதிகள் என்றழைக்கப்பட்டனர். 

பௌஷ்யஞ்சியின் சீடர்கள் லோகாக்ஷி, மாங்கலி, குல்யன், குஸீதன், குக்ஷி, ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா நூறு ஸம்ஹிதைகளைக் கற்றனர்.

இரண்யநாபரின் சீடரான கிருதன் தன் சீடர்களுக்கு இருபத்து நான்கு ஸம்ஹிதைகளை உபதேசம் செய்தார். மீதியை ஆவந்தியர் தன் சீடர்கள் மூலம் பரப்பினார்.

அதர்வண வேதம் ஸுமந்து என்பவரால் பரவிற்று. அவருடைய சீடர் ஸுபந்தன் தான் கற்றதை பத்யர், வேதசர்யர் ஆகியோர்க்கு உபதேசம் செய்தார்.

வேதசர்யருக்கு சௌக்லாயனி, ப்ரும்மபலி, மோதோஷர், பிப்பலாயனி என்ற நால்வர் சீடரவர்.

பத்ரரின் சிஷ்யர்கள் குமுதன், சுனகர், ஜாஜலி ஆகியோர். சுனகர் தன் சீடர்களான பப்ரு, ஸைந்தவாயனர் ஆகியோர்க்கு இரு ஸம்ஹிதைகளை உபதேசம் செய்தார். ஸர்வாணி, நக்ஷாத்ரகல்பர், சாந்திகல்பர், கசியபர், ஆங்கீரஸர் ஆகியோரும் அதர்வண வேதத்தைப் பரப்பினர். 

இனி புராண பிரவசனம் செய்யும் புராணிகர்கள் பற்றிப் பார்க்கலாம்.

த்ரய்யாருணி, கசியபர், ஸாவர்ணி, அக்ருதவிரணர், வைசம்பாயனர், ஹாரிதர் ஆகியோர் பௌராணிகர்கள்.

இவர்கள் அனைவரும் தம் தந்தையான ரோமஹர்ஷணரிடம் ஒவ்வொரு புராணத்தைக் கற்றனர். ரோமஹர்ஷணர் வியாஸரின் நேர் சீடராவார். நான் இந்த ஆறு ஆசார்யர்களிடமும் சீடனாக இருந்து அனைத்துப் புராணங்களையும் கற்றேன் என்றார் ஸூத பௌராணிகர்.

இந்த ஆறு புராணங்கள் தவிர மேலும் நான்கு மூல ஸம்ஹிதைகளை கச்யபர், ஸாவர்ணி, அக்ருதவிரணர், என் தந்தை ரோமஹர்ஷணர் ஆகியோரிடம்‌ கற்றேன்.

சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து புராணங்களின் இலக்கணங்கள் வகுக்கப் படுகின்றன. 

புராண லக்ஷணங்கள் பத்து.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

படக்குறிப்பு:

நைமிஷாரண்யத்தில் உள்ள வேத வியாஸர் ஆசிரமத்தில் உள்ள 5000 வருடங்கள் பழமையான ஆல மரம். இதன் அடியில் அமர்ந்து வியாஸர் வேதங்களைத் தன் சீடர்களுக்குக் கற்பித்தார் என்று கூறப்படுகிறது.

Saturday, May 22, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 642

வைசம்பாயனரின் சீடர்களுள் சிலர், குருவிற்கு நேர்ந்த ப்ரும்மஹத்தி தோஷம் நீங்க ப்ராயச்சித்தம் செய்தனர். இவர்கள் சரகாத்வர்யுக்கள் எனப்படுவர். அதைக் கண்ட யாக்ஞவல்க்யர் அவர்களை ஏளனம் செய்தார். அதைக்கேட்டு சினமுற்ற வைசம்பாயனர், அந்தணர்களை அவமதிக்கும் நீ என் சீடனாக இயலாது. என்னிடம் கற்ற வேதத்தைக் கக்கிவிட்டு இங்கிருந்து போ என்றார். 

யாக்ஞவல்க்யரும் வைசம்பாயனரிடம் கற்ற யஜுர்வேதததைக் கக்கிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். அந்த யஜுர் பாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை மற்ற முனிவர்கள் மிகவும் விரும்பினர்‌. ஆனால் அந்தணர்களான அவர்கள், கக்கியதைத் திரும்ப எடுப்பது உகந்ததல்ல என்றெண்ணியதால் தித்திரிப் பறவைகளாக உருக்கொண்டு அவ்வேத பாகங்களை விழுங்கி விட்டனர். அந்த யஜுர்பாகம் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது‌.

அதன்பின் யாக்ஞ்வல்க்யர், வேதங்களை மீண்டும் அடைய முனைந்தார். அதற்காக வேதங்களின் தலைவரான ஆதித்யனை உபாசனை செய்தார்.

சூரிய பகவான் மீதான மிகவும் அழகான சுருக்கமான ஸ்துதி இதோ.

1. ஓங்கார ஸ்வரூபமான ஆதித்யரே உமக்கு நமஸ்காரம். எல்லா உலகங்களுக்கும் ஆத்மா நீரே. கால ஸ்வரூபமாக விளங்குகிறீர்கள். விதைத்தாவரம் (உத்பிஜம்), வியர்வையில் தோன்றும் ஜீவன்கள் (ஸ்வேதஜம்), முட்டையில் தோன்றுவன (அண்டஜம்), கருவில் தோன்றுவன (ஜராயுஜம்) என்ற நால்வகை ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் ஒரே சீராக வியாபித்திருப்பவர் தாங்களே. எதிலும் ஒட்டாமல் தனித்து இயங்குகிறீர்‌. நீரை ஆவியாக்கி மழை பெய்விப்பவர் தாமே. அனைத்து உலகங்களும் சீராக இயங்கக் காரணம் தாங்களே. தங்களுக்கு நமஸ்காரம். (தத்ஸ விதுர்வரேண்யம் என்பதன் பொருள்)

2. புத்தியைத் தூண்டும் தேவாதிதேவன் நீர். மூன்று வேளைகளிலும் தம்மைத் துதிப்பவரின் அஞ்ஞானத்தை அடியோடு அழிப்பவர். உலகின் உச்சியில் ஒளிமண்டலமாக  விளங்கும் தங்களை தியானிக்கிறோம்‌.  (பர்கோ தேவஸ்ய தீமஹி என்பதாகும்)

3. தாங்களே எல்லா ஜீவன்களின் அந்தர்யாமி. அனைத்திற்கும் ஆதாரம். ஜடப்பொருள்கள் அனைத்தையும் அதனதன் வழியில் ஊக்குவித்துச் செலுத்துகிறீர். (தியோ யோந: ப்ரசோதயாத்)

காரிருள் வடிவான அஞ்ஞானம் எனும் பாம்பின் வாயில் தினம் தினம் இந்தப் ப்ரபஞ்சம் விழுந்து பிணம்போல் இருக்கிறது. கருணைக்கடலான தங்களின் அமுதப் பார்வையால் அதை உயிர்ப்பிக்கிறீர்கள். தர்மம் மற்றும் அனுஷ்டானங்களில் ஜீவனை ஈடுபடச் செய்பவர் நீரே. திருடர் மற்றும் தீயோர்க்கு பயத்தை விளைவிக்கிறீர்.

எண்திசையில் இருக்கும் யோகிகளும் தத்தம் இடத்திலேயே தங்களை வணங்கி அர்க்யம் ஸமர்ப்பிக்கின்றனர்‌. மூவுலகிற்கும் குருவாக விளங்குகிறீர். அனைவரும் உம்மை வணங்குகின்றனர். இதுவரையிலும் யாராலும் முறைப்படி பயிலப்படாத யஜுர் வேத சாகைகளை எனக்கு உபதேசம் செய்வீராக. நான் தங்களையே சரணமாகப் பற்றுகிறேன். என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, May 21, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 641

ருக் மந்திரங்கள் அதிகமாகக் காணப்படும் பஹ்வ்ருசம் என்ற ஸம்ஹிதையை பைலருக்கு உபதேசம் செய்தார் ஸ்ரீ வியாஸ பகவான். அதைத் தொடர்ந்து வரும் நிகதம் என்ற யஜுர் வேத  ஸம்ஹிதையை வைசம்பாயனருக்குக் கொடுத்தார். 

ஸாம சந்தங்கள் கொண்ட சந்தோகம் என்ற ஸம்ஹிதையை ஜைமினிக்குக் கொடுத்தார். அதர்வாங்கிரஸீ என்ற ஸம்ஹிதையை சுமந்து என்பவருக்குக் கொடுத்தார்.

பைலர் தனது ருக் ஸம்ஹிதையை இரண்டாகப் பிரித்தார். அவற்றை இந்திரப்பிரமிதி மற்றும் பாஷ்கலர் என்பவர்க்குத் தனித்தனியாக உபதேசம் செய்தார். 

பாஷ்கலர் தனக்குக் கிடைத்த ருக் ஸம்ஹிதையை நான்காகப் பிரித்தார். அவற்றை முறையே போத்யர், யாக்யவல்க்யர், பராசரர், அக்னிமித்ரர் ஆகியோர்க்கு உபதேசம் செய்தார். 

இந்திரப்பிரமிதி ஞானியாவார். அவர் தனக்குக் கிடைத்த ருக் ஸம்ஹிதையை மாண்டூக்யருக்கு உபதேசம் செய்தார். அவரது மாணவர் தேவமித்திரர் ஆவார். ஸௌபரி முதலான முனிவர்கள் தேவமித்திரரிடம் பயின்றனர்.

மாண்டூக்யரின் புதல்வர் சாகல்யர். அவர் தான் கற்றதை ஐந்தாகப் பிரித்தார். வாத்ஸ்யர், முத்கலர், சாலீயர், கோகல்யர், சிசிரர் ஆகிய ஐந்து சீடர்களுக்கு உபதேசம் செய்தார். 

சாகல்யரின் சீடர் ஜாதூகர்ண்யர் என்பவர். அவர் தான் பெற்ற கல்வியை மூன்றாகப் பிரித்தார். வேதங்களின் விரிவுரையான நிருக்தத்துடன் அவற்றை பலாகர், பைஜர், வைதாளர், விரஜர் ஆகிய நால்வருக்கு உபதேசம் செய்தார்.

பாஷ்கலரின் புதல்வர் பாஷ்கலி என்பவர். அவர் அத்தனை சாகைகளிலிருந்தும் மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து வாலகில்யம் என்றொரு சாகை செய்தார்‌. அதைத் தம் சீடர்களான பாலாயனி, பஜ்யர், காஸரர் ஆகியோர்க்குக் கொடுத்தார்.

மேற்கூறப்பட்ட அனைத்து மஹரிஷிகளும் ருக் வேதத்தின் சாகைகளான பஹ்வ்ருச சாகைகளை ச்ரத்தையாகப் பயின்றனர்.

வேதத்தின் இப்பிரிவுகளைப் பற்றிய விவரங்களைக் கேட்பவர்கள் அனைத்துப் பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, May 19, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 640

சௌனகர் கேட்டார்.
பகவான் வியாஸர் வேதங்களை தம் சீடர்களுக்குக் கொடுத்தார் அல்லவா? அவர்கள் அதை  எத்தனையாகப் பிரித்தார்கள்? என்றார்.
ஸூத பௌராணிகர்  பதிலிறுக்கத் துவங்கினார்.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் படைப்பு பற்றி அறிவதற்காக தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருடைய ஹ்ருதயத்திலிருந்து நாக்கு தொண்டை ஆகியவற்றின் தொடர்பின்றி ஒரு ஒலி எழுந்தது. 

வெளியிலிருந்து எழும் ஓசைகள் கேட்காத வண்ணம் காதுகளைப் பொத்திக்கொண்டு மனத்தை அடக்கி அமர்ந்தால் இதயத்திலிருந்து எழும் இந்த அநாஹத ஒலியைக் கேட்கலாம். 

இந்த நாதத்தை விடாமல் கேட்பதன் மூலம் அத்தனை விதமான மன மாசுகள் மற்றும் வாஸனைகளை அடக்கி உள்ளத் தூய்மை பெற்று இறைநிலையை அடைந்து விடுகின்றனர் யோகிகள். அவர்கள் பிறவிச் சுழலில் சிக்குவதில்லை.

இந்த அநாஹதத்திலிருந்து ப்ரணவம் தோன்றுகின்றது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்று மாத்திரைகள் அளவிலான ஒலிகளைக் கொண்டது. இந்த ப்ரணவத்தினால் கண்களுக்குப் புலப்படாத ப்ரக்ருதியின் சக்திகள் அனைத்தும் தெளிவாகத் தெரியத் துவங்கும்‌. இவ்வொலி அநாதியானது‌. நாத ரூபமான இறைவனே ஆகும்‌. எனவே தனித்தியங்கும் சக்தி கொண்டது. செவி இயங்கவில்லை என்றாலும் அநாஹதம் இயங்கும். ப்ரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களிலும் உறையும் பரம்பொருளை உணர்வுபூர்வமாக காட்டித் தரும் சக்தி கொண்டது ப்ரணவமாகும்.

பகவானின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்படும் இந்த ஓங்காரத்தினின்றே வேதங்கள் தோன்றின. இதன் இருப்பிடம் பகவானே ஆவார். ஓங்காரத்தைப் பிடித்துக்கொண்டு பயணிப்பவன் அதன் இருப்பிடத்தை அறிகிறான். ஓங்காரத்தின் மூன்று ஒலிகளும்  ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும், ரிக், யஜுர், ஸமம் என்ற மூன்று வேதங்களையும், பூ, புவி:, ஸுவ: என்ற மூன்று லோகங்களையும், ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளையும் குறிக்கின்றன. 

இதன் பின் ப்ரும்மா ஓங்காரத்தினின்றே அ முதல் துவங்கும் அனைத்து எழுத்துக் கூட்டங்களையும், ஒலிக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

பிறகு தனது நான்கு முகங்களின் வாயிலாக நான்கு வேதங்களையும் வெளியிட்டார். பின்னர் தன் புதல்வர்களுக்கு அவற்றை உபதேசம் செய்தார். அப்படியே வழி வழியாக வேதம் பரவிற்று.

வேதங்களைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்ட நைஷ்டிக ப்ரும்மச்சாரிகளால் வேதம் ப்ரப்பப்பட்டு வந்தது. துவாபர யுகத்தின் முடிவில், அநாதியாக இருந்த வேதங்களை பகவானின் அவதாரமாக வந்த வியாஸர் நான்காகப் பிரித்தார். 

பெரிய நவரத்தினக் கூட்டங்களிலிருந்து ஒவ்வொரு மணியாக எடுத்து வகைப் படுத்துவது போல மந்திரக் கூட்டங்களிலிருந்து  அவற்றின் ஒலி,  பொருள் மற்றும் பயன்களுக்கேற்றவாறு பிரித்து ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்று பெயரிட்டார்.

அவற்றைத் தன் நான்கு சீடர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, May 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 639

வெகு வேகமாகச் சுழன்றுகொண்டு யாக குண்டத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்திர விமானத்தைக் கண்டார் ப்ருஹஸ்பதி. அவர் ஆங்கீரஸ மஹரிஷியின் மகனாவார்.
உடனே ஜனமேஜயனைப் பார்த்துக் கூறத் துவங்கினார்.

அரசே! இந்த தக்ஷகன் அமுதம் உண்டவன். அதனால் மரணமற்றவன். இவனைக் கொல்வது இயலாது. 

ஜீவராசிகள் எல்லாம் தத்தம் வினைப்பயனுக்கேற்ப வாழ்வைப்‌ பெறுகின்றன. இறப்புக்குப் பிறகு பரலோகம் செல்வதும் வினைப்பயனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. முன் வினைப் பயனைத் தவிர வேறொருவரால் எந்த ஜீவனுக்கும் இன்பத்தையோ துன்பத்தையோ தர இயலாது. 

இவ்வுலகில் பலருக்கும் மரணம் ஏற்படுவதன் காரணம் பாம்பு, திருடன், நெருப்பு, பசி, தாகம், நோய், விபத்து ஆகியவையே ஆகும். இவையெல்லாம் மரணத்திற்குக்  காரணங்கள் அல்ல. ஒருவரின் முன்வினைப்படி இவை ஏவப்படுகின்றன.

இந்த சர்ப்பயாகத்தை இத்துடன் நிறுத்திவிடுவாய். குற்றமற்ற பல அப்பாவி சர்ப்பங்கள் இத்தீயில் பலியாகிவிட்டன. போதும். என்றார்.

வியாழ பகவானின் கூற்றைக் கேட்ட ஜனமேஜயன் அவரை வணங்கி, தங்கள் கட்டளைப்படி செய்கிறேன் என்று கூறினான். சர்ப்ப யாகத்தை உடனே நிறுத்தினான். ப்ருஹஸ்பதியை முறைப்படி பூஜை செய்தான்.

பரிக்ஷித் சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டது, அவர் மகன் ச்ருங்கி கோபமுற்றுச் சபித்தது, அச்சாபத்தின்படி தக்ஷகன் கடித்து மன்னன் இறந்தது, ஜனமேஜயன் சினமுற்று சர்ப்பயாகம் செய்தது, அந்த யாகத்தில் பல பாம்புகள் இறந்தது என்று ஏழு நாள்களில் நிகழ்ந்த  அனைத்து நிகழ்வுகளையும்  உற்றுக் கவனித்தால் அவை எதனாலோ செலுத்தப்படுவது புரியும். அனைத்திற்கும் காரணம் மாயை. மாயைதான் வினைப்பயனின்படி ஒவ்வொருவரையும் ஆட்டுவிக்கிறது‌. 

இவ்வுடலை நித்யமானது என்றும் அதையே ஆத்மா என்றும் எண்ணுபவர்களால் நிச்சயம் இச்சுழலினின்று வெளிவர இயலாது. அவர்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவரையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர். 

மனிதர்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் தீயகுணங்களைப் பேசத் தூண்டுவது மாயைதான். பகவானைப் பற்றிப் பேசும்போது மாயை வேலை செய்யாது. பேசாமல் ஒதுங்கி நிற்கும். அழியாது. மாயைக்குப் பற்றி நிற்க ஏதோ ஒரு பொருள் வேண்டும். இம்மை மறுமை ஆராய்ச்சியைத் துவங்கினால் மனம் தானே அடங்கும். மனமே இல்லாத, சங்கல்பமே இல்லாத, பரமாத்மாவிடம் மாயைக்குப் பற்றிக்கொள்ள ஏதுமில்லை.

ஒரு செயல், அதைச் செய்யத் தேவையான பொருள்கள், அதனால் விளையும்‌ புகழ் இவற்றுடன் சேரும்.  செய்பவன் நான் எனது என்ற அஹங்காரத்தைப் பற்றிக்கொள்கிறான். பரமாத்மா எவருக்கும் பகைவனில்லை. அதைப் பற்றுபவனுக்கு அஹங்காரம் அழிகிறது. 

விடுதலை அடைய விரும்புபவன், இறைவனின் பதத்தைத் தவிர மீதி அனைத்தையும் இது உண்மையில்லை என்று தள்ளவேண்டும். எதைத் தள்ளவே இயலாதோ அதுவே பரம்.

அதுவே பகவானின் ஸ்வரூபம். இப்பதத்தைப் பெற விரும்புபவன், வசைச் சொல்லையும், புகழ்ச்சியையும் ஒன்றாய் ஏற்கவேண்டும். எந்த ஜீவனிடமும் பகை கொள்ளக்கூடாது.

ஸ்ரீ வியாஸ பகவானிடமிருந்து இந்த குறைவற்ற புராணமாகிய ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்றேன். அந்த குணக்குன்றை இத்தருணத்தில் வணங்குகிறேன்.
என்றார் ஸூத பௌராணிகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, May 7, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 638

பரிக்ஷித்தைத் தீண்டுவதற்காக வந்து கொண்டிருந்தபோது வழியில்  தக்ஷகன் ஒரு அந்தணனைக் கண்டான்.
அவன் பெயர் கச்யபன் என்பதாம். அவன் ஒரு சிறந்த மருத்துவன். எப்படிப்பட்ட விஷமானாலும் அதை முறித்து உயிர் பிழைக்கச் செய்துவிடுவான்.

 தக்ஷகன் அவனை விசாரிக்க, அவன் மன்னன் பரிக்ஷித்தை உயிர் பிழைக்கவைத்தால் எனக்கு நிறைய தானங்கள் தருவார் என்றான். தக்ஷகனோ உனக்கு ஏராளமான செல்வத்தை நானே தருகிறேன், வந்த வழியே திரும்பிச் செல் என்று கூறி, நாக லோகத்தின் சிறந்த செல்வங்களை அவனுக்கு வாரிக்கொடுத்து அனுப்பிவிட்டான். 

அதன் பின் தக்ஷகன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு பரிக்ஷித்தின் அருகில் சென்று சடாரென்று எவரும் எதிர்நோக்காத தருணத்தில் கடித்துவிட்டான். 

பரிக்ஷித் ஏற்கனவே விழி மூடி ப்ரும்ம நிஷ்டையில் ஆழ்ந்து லயித்திருந்தான். அவனுக்கு உடல் பற்றிய அறிவே இல்லை. 

மிகவும் பயங்கரமான விஷமுடைய தக்ஷகனின் பல் பதிந்ததும் அதன் விஷத்தால் எழும்பிய ஜ்வாலையில் பரிக்ஷித்தின் உடல் கருகிச் சாம்பலானது.

வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் ஹா என்று கூச்சலிட்டனர். மிகவும் வியந்தனர். பரிக்ஷித் மீளாப்பதம் அடைந்தது கண்டு பூமாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கின.

பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் தன் தந்தையின் விஷயங்களைக் கேள்வியுற்று மிகச் சினந்தான்.

அந்தணர்களை அழைத்து சர்ப்பயாகம் என்ற வேள்வியைத் துவக்கினான். மந்திரங்களின் மூலம் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள பாம்புகளை ஆகர்ஷித்து அக்னி குண்டத்தில் ஆகுதியாக விழச் செய்தான். 

அவ்வேள்வித்தீயில் மாபெரும் சர்ப்பங்கள் எல்லாம் தன்னிலை இழந்து வந்து பொத் பொத்தென்று விழுந்து கருகிச் சாம்பலாயின. அதைக் கண்ட தக்ஷகன் பயந்துபோனான். ஓடோடிச் சென்று  இந்திரனைச் சரணடைந்தான். 

எல்லாப் பாம்புகளும் வந்தபோதிலும் தக்ஷகன் மட்டும் வராதது கண்டு ஜனமேஜயன் அந்தணர்களைக் கேட்டான்.

எல்லாப் பாம்புகளும் வருகின்றன. தக்ஷகன் மட்டும் ஏன் இன்னும் வரவில்லை? யாகத்தில் ஏதாவது தோஷமா? என்றான். 

அதற்கு அவர்கள் தக்ஷகன் இந்திரனைச் சரணடைந்த விஷயத்தைக் கூறினர். இந்திரன் காப்பதால் தக்ஷகன் வரவில்லை என்று கூறினர். அதைக் கேட்ட ஜனமேயன், இந்திரனோடு சேர்ந்து தக்ஷகன் இவ்வேள்வித்தீயில் விழும்படி மந்திரம் சொல்லுங்கள் என்றான்.

உடனே அந்தணர்கள் இந்திரனை ஆகர்ஷிக்கும் மந்திரங்களைக் கூறத் துவங்கினர்.

தக்ஷகனையும் சேர்த்து அழைத்தனர். உடனே தேவலோகம் நடுங்கத் துவங்கியது. இந்திரன் தக்ஷகனோடு விமானத்திலிருந்தான். அவ்விமானம் சுழலத் துவங்கியது. தேவேந்திரன் பயந்து அலறினான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, May 5, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 637

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.

பரீக்ஷித்!
எண்ணெய், விளக்கு, திரி ஆகிய மூன்றுக்கும் தொடர்பு உள்ளவரைதான் தீபம் எரியும். அதுபோல உடலின் தொடர்பால் செய்யும் செயல், மனம், உடலில் தங்கும் ஆத்ம சைதன்யாம் ஆகிய மூன்றும் தொடர்பில் இருக்கும் வரை தான் பிறவிச் சுழல் இருக்கும். ஸத்வ குணம், ரஜோ குணம்,‌ தமோ குணம் ஆகிய மூன்று குணங்களின் மாறுபாடுகளாலேயே ஜீவனின் தோற்றம், அழிவு ஆகியவை ஏற்படுகின்றன.

விளக்கு அணைந்தாலும் ஒளி என்னும் தத்துவம் இருப்பதுபோல உடலின் தொடர்பு அறுந்தாலும் ஆன்மா ப்ரகாசமாகச் சுடர் விடுகிறது. அது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறது.

அரசே! நீ நன்கு விசாரம் செய்து சரீரம் வேறு. ஆத்மா வேறு என்பதை உணர்வாயாக. உள்ளத்தில் பகவானின் திருவடியைப் பிடித்துக்கொள்.

அந்தண சாபத்தின்படி தக்ஷகனால் உன்னைத் தீண்ட இயலாது. ஏனெனில் பரமாத்மாவோடு ஒன்றிவிட்ட ஜீவனுக் காலனால் பாதிக்க இயலாது. ஏன் அருகில்கூட வர முடியாது.

உன் நிஜ ஸ்வரூபத்தில் ஒன்றுவாயாக. ஆன்மா ஒன்றியபின், சரீரத்தைத் தக்ஷகன் கடிப்பதால் உனக்கு பாதிப்பு ஏற்படாது. உனக்கு இந்தப் ப்ரபஞ்சம் தெரியாது. உண்மைப்பொருள் மட்டுமே உனக்குத் தெரியும்.

நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டேன் பரீக்ஷித். இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

என்றார்.

பரீக்ஷித் ஸ்ரீ சுகரை வணங்கினான். என் மேல் தங்களுக்கு எவ்வளவு கருணை. பரமாத்மாவின் எண்ணற்ற லீலைகளைக் கூறி மெய்ஞானத்தைப் புகட்டினீர்கள். நான் தன்யனானேன். என் பிறவிப்பயன் எட்டப்பட்டது.

நானும் இங்குள்ள மற்றவர்களும் தாங்கள் கூறிய கதையமுதத்தை மனமாரப் பருகினோம். இந்த புராணம் முழுவதும் பகவானின் லீலைகளும் குணங்களும் நாம வைபவங்களுமே நிரம்பியுள்ளது.
அதனால்தான் சான்றோர்கள் இதில் மூழ்கித் திளைக்கின்றனர்.

நான் ப்ரும்மநிலையை அடைகிறேன். எனக்கு தக்ஷகனிடம் பயமில்லை. எனக்கு அனுமதி கொடுங்கள். நான் மௌனத்தை ஏற்று,  புலன்களை அடக்கி, வாசனைகளை அழித்து, பரமாத்ம ஸ்வரூபத்தில் லயித்து ப்ராணனை விட்டு விடுகிறேன். எம் அறியாமை முற்றிலுமாய் அழிந்தது.

என்று கூறினான்.

பின்னர் ஸ்ரீசுகர் அவனை வாழ்த்திவிட்டு மற்ற முனிவர்களுடன் அவ்விடம் விட்டுக்‌ கிளம்பினார்.

என்னதான் ப்ரும்மஸ்வரூபம் என்றாலும் தன் மனம் விரும்பிய சீடன் உடலை விட்டு நீங்குவதைக் காண அவர் மனம்‌ பொறுக்கவில்லை போலும்.

அனைவரும் சென்றபின் பரிக்ஷித், கங்கைக் கரையில் கிழக்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பயின் மேல் வடக்கு நோக்கி  பத்மாசனமிட்டு அமர்ந்தான். பகவானிடம் சிந்தனையை ஒருமுகப்படுத்தினான். தியானத்தில் ஆழ்ந்து இரண்டற்ற நிலைக்குச் சென்றான். பிறகு சலனங்கள் அனைத்தையும் நிறுத்தி மூச்சையும் அடக்கினான். ஒரு கட்டை போல உணர்வுகள் அற்று அமர்ந்திருந்தான். 
ப்ரும்மமாகவே ஆகிவிட்டான்.

தூரத்தில் சமீக மஹரிஷியின் மகனான ச்ருங்கியின் சாபத்தின்படி தக்ஷகன் பரீக்ஷித்தைத் தீண்டுவதற்காக வந்து கொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..