Saturday, February 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 403

அந்தணர்கள் தம் மனைவியர் இல்லாத குறையை உணரவே இல்லை. கண்ணனைக் கண்டு திரும்பிய பெண்களைக் கண்டு, வந்துவிட்டீர்களா, வாருங்கள் என்று சகஜமாக அடுத்த நிகழ்வைப் பார்க்கத் துவங்கினார்கள். 

இதற்கிடையில் கண்ணனைக் காணக் கிளம்பிய ஒரு பெண்ணை அவளது கணவர் மிகவும் கண்டித்து வீட்டுக்குள் வைத்து கதவைத் தாளிட்டு விட்டார். உடலால் கண்ணனைக் காணக் கிளம்ப இயலாது என்றதும் அப்பெண் சரீரத்திலிருந்த தொடர்பை விட்டுவிட்டு கண்ணனின் சரணத்தை அடைந்தேவிட்டாள்.
என்னே அவளது பக்தி!

இறைவனைக் காண உடலை ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டும்‌. அதற்காகத்தான் உடல். தடையாக இருந்ததால் உதறிவிட்டு யோகமார்கத்தில் அடைந்துவிட்டாள்.

அந்தணர்களோ மனித உருவெடுத்து இறைவன் வந்திருக்கிறான் என்றறிந்தும் இப்படி க்ருஷ்ண தரிசனத்தைக் கோட்டை விட்டோமே என்று நொந்து கொண்டனர். தத்தம் மனைவியரிடம் கண்ணனைப் பற்றிக் கேட்டறிந்தனர். இப்போதும் கண்ணன் அங்கேதானே காட்டில் இருக்கிறான். போய் தரிசனம் செய்யலாமே என்றால், கம்சனின் மீதிருந்த பயம் அவர்களைத் தடுத்தது.

எப்படியேனும் கம்சனுக்கு உளவுச் செய்தி போய்விடும். மிகக் கடுமையான தண்டனையை அளிப்பான்‌ என்பதை எண்ணி பயந்ததனால்  போகவில்லை.

அந்தணப் பிறப்பு, வேதங்களைக் கற்ற அறிவு, கர்ம காண்டத்தில் புலமை, விரதங்கள், அனைத்தும் பக்தியில்லாததால் பயனற்றுப் போயிற்று.

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் ஆகவேண்டியதென்ன? அவர் இவ்வாறு உணவுக்காக யாசிப்பது லீலையன்றி வேறென்ன? அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்தோமே.

மனித வேடத்தில் வந்த இறைவனின் வேண்டுகோளை அலட்சியம் செய்தோமே.

திருமகள் சேவை செய்யும் பாதம், காட்டில் நடந்து நம்மருகே வந்தபோதும் மாயையினால்‌ மயங்கிப் போகாமல் இருந்துவிட்டோமே.

யோகீஸ்வரனான பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனாக யதுகுலத்தில் தோன்றியுள்ளார் என்று பலமுறை கேள்விப்பட்டும் படித்தும் புத்தியில் உறைக்கவே இல்லையே.

இறைவனின் மாயை யோகிகளையும் நிலைகுலையச் செய்துவிடும்.
பெண்களாயிருந்தும், எந்த ஸம்ஸ்காரங்களும் இல்லாதபோதும், குருஸேவை செய்யாதபோதும், ஆன்மவிசாரம் செய்யாதபோதும், கதை கேட்டதால் ஏற்பட்ட  பக்தியினாலேயே இறை தரிசனம் பெற்றார்களே என்று கூறி மனைவியரை வணங்கினார்கள்.

இந்தப் பெண்களாலன்றோ இப்போது கண்ணனிடம் பக்தி உண்டாகியிருக்கிறது
என்றெல்லாம் புலம்பினார்கள்.

கண்ணன் அப்பெண்கள் அளித்த ருசியான உணவை நண்பர்களுன் பகிர்ந்துண்டான்.

பின்னர், மாடுகளையும் கோபர்களையும் அழைத்துக்கொண்டு பலவிதமான கதைகளைப் பேசிக்கொண்டு வீடு திரும்பினான்.

அங்கே இடைச்சேரி விழாக்கோலம் பூண்டிருந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Friday, February 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 402

வேள்வி செய்யும் தீக்ஷிதர்களிடம் பலமுறை உணவு கேட்டும் அவர்கள் காதிலேயே வாங்கவில்லை. குழந்தைகள்‌ மிகவும் வருந்தி கண்ணனிடம் சென்று கூறினார்கள்.

கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. 

ஏண்டா.. சாப்பாடு வேணும்னா மாமிகிட்ட போய் கேப்பாங்களா.. யாகம் பண்றவங்களைக் கேப்பாங்களா.. யாக சாலைக்குப் பின்னாடிப்போனா அவங்க வீடுகள் இருக்கும். அங்க இருக்கற மாமிகள் கிட்ட போய் கேளுங்க. தருவாங்க என்றான்.

எடுப்பது பிக்ஷை. அந்தக் குழந்தைகள் சற்றும் யோசிக்காமல் கண்ணன் சொன்னான் என்பதற்காக, நேராக யக்ஞ பத்னிகளிடம் போனார்கள்.

அங்கே சென்று கண்ணன் வந்திருக்கிறான் என்று சொன்னதுமே அந்தப் பெண்கள் சட்டென்று எழுந்தனர்.

கண்ணனா? வந்திருக்கானா? எங்க? எங்க?

இங்க பக்கத்தில் காட்டில் இருக்கார்..

பரபரவென்று உள்ளே‌ ஓடிச்சென்று சமைத்த உணவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர்.

எங்க கிட்ட கொடுக்கறீங்களா?

குழந்தைகள் கேட்டதும்,

நாங்களே வந்து கொடுக்கறோமே. கண்ணனை ஒரு‌ தரமாவது பார்க்கவேண்டாமா?

ஆறு கடலை அடைவதுபோல் கண்ணனை அடைய ஓடினார்கள்.
ஓட்டமும் நடையுமாகச் சென்ற அவர்களது வேகத்திற்கு சிறுவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இதுநாள் வரை பால் தயிர் விற்க வரும் கோபிகள் வாயிலாக கண்ணனின் அனைத்து லீலைகளையும் கேட்டறிந்து கண்ணன் மீது அளவிலா அன்பை வளர்த்துக்கொண்டிருந்தனர் அந்தணப் பெண்மணிகள்.

யமுனைக் கரையில் புதிதாகத் துளிர்த்திருந்த அசோக மரக் காட்டில் பலராமன் மற்றும் பல கோபர்கள் சூழ நின்றிருந்த கண்ணனைக் கண்டனர்.

கறுத்த மேகம் போல் மேனி, இடையில் பொன்னாடை, வனமாலை, தலையில் பெரிய முண்டாசு. அதன் மீது மயில்தோகை. பூக்கள் மற்றும் தாதுப்பொடிகளால் கண்ணனின் கன்னத்திலும் உடலிலும் பல ஓவியங்களை சிறுவர்கள் வரைந்து வைத்திருந்தனர். ஒரு கை தோழனான ஸ்ரீதாமாவின் தோளில் போட்டுக்கொண்டு தாமரைப் பூவைச் சுழற்றிக்கொண்டிருக்க, மறு கை கோலைப் பிடித்திருக்க, இதழில் குமிழ் சிரிப்பு கொப்பளிக்க, கன்னத்தில் ஒரு முடிச்சுருள் விளையாட, காதில் அல்லிப்பூவைச் செருகிக்கொண்டு ஒய்யாரமாய் நின்றிருந்த கண்ணனின் அழகில் மயங்காதவர் உண்டா?

கண்ணனைக் கண்டதும் அப்பெண்மணிகளின் தாபமெல்லாம் தீர்ந்தது.

அவர்களை வரவேற்றான் கண்ணன்.

பாக்யவதிகளே! வாருங்கள்! நீங்கள் போய் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்களே. உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்?

தனக்கு எது நல்லது என்று உணர்ந்த அறிவாளிகள் பயன் கருதாத அன்பை என்மீது வைக்கிறார்கள். அது உண்மையில் அவர்களது ஆன்மாவின் மீது வைக்கும் அன்பாகும்.

உடல், அறிவு, மனம், உறவுகள், செல்வம் அனைத்தும் ஆன்மாவுக்கு பிரியமானவை என்று எண்ணுவதாலேயே அவற்றின்மீது பிரியம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் ஆன்மாவை விட பிரியமானது வேறெதுவும் இல்லை.

சாதாரணமாக உடலில் காயம் பட்டால் உடல் முக்கியம் என்று நினைப்பார்கள். உடலில் ஒரு பாகம் அழுகினால், அதை வெட்டினால்தான் உயிர் பிழைக்கலாம் என்று மருத்துவர் சொன்னால் உயிர்தான் வெல்லம். முக்கியம்.‌ உடலின் பாகம் அல்ல. என்று தானே முடிவு செய்கிறோம். உங்கள் வீட்டில் தேடத் துவங்கும் முன் கிளம்புங்கள்.

அந்தணப் பெண்கள் கூறினார்கள்.

கண்ணா! இதென்ன இப்படிக் கடுஞ்சொல் கூறலாமா? நாங்கள் எங்கள் உறவுகளை எல்லாம் அறுத்துவிட்டு உன்னிடம் வந்திருக்கிறோம்‌. இனி எங்களை கணவர், பெற்றோர் யாரும் ஏற்க மாட்டார்கள்.

இந்த உணவுகளை ஏற்றுக்கொள். எங்களைத் திருப்பி அனுப்பாமல், எங்களுக்கு வேண்டியதைச் செய். உன் சரணம் தவிர எங்களுக்கு வேறு அடைக்கலமில்லை.

கண்ணன் சிரித்தான்.

பெண்களே! இவ்வுலகில் என்னைச் சேர்ந்தவரை எவரும் வெறுக்கமாட்டார்கள். அனைவரும் மதிப்பார்கள். உங்கள் வீட்டிலும் உங்களை வரவேற்பார்கள். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். குடும்பத்தில் இருந்துகொண்டு சேவை செய்துகொண்டு, மனத்தை என்னிடம் வையுங்கள். அருகில் இருந்து பக்தி செய்வதை விட,  தூரத்திலிருந்துகொண்டு என்னையே எப்போதும் நினைத்து பக்தி செய்தால் விரைவில் என்னை அடையலாம்.

என்றான்.

இதைக் கேட்டதும், அந்ணப்‌ பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அத்தனை உணவுகளையும் கண்ணனிடம் சமர்ப்பித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, February 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 401

கோபியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கண்ணன் தன் நண்பர் படையுடன் மாடுகளை அழைத்துக்கொண்டு வனம் சென்றான். 

பேசிக்கொண்டே வெகுதூரம் வந்துவிட்டான். கண்ணன் மிகவும் ரசிக ஹ்ருதயம் உள்ளவன். வழியெங்கும் காணப்படும் செடிகள், பூக்கள், மரங்கள் அனைத்தையும் ரசித்து ரசித்து, அவற்றைக் காட்டிப் பேசிக்கொண்டே செல்வான். ஒரு இடத்தில் மரங்கள் மிகவும் அடர்த்தியாக குடைபோல் விரிந்திருந்தன. அவ்விடத்தில் சூரியனின் கிரணங்கள் துளியும் விழவில்லை. மாறாக மிகக் குளிர்ச்சியாக இருந்தது.

அதைக் கண்டு கண்ணன் மிகவும்‌ ஆச்சரியத்துடன் சொன்னான்.

ஹே ஸ்தோஹ க்ருஷ்ணா! ஹே அம்சு! ஸ்ரீ தாமா! ஸுபலா! அர்ஜுனா! விசாலா! ருஷபா! தேஜஸ்வீ! தேவப்ரஸித்தா! வரூதபா! இங்கே பாருங்கள்! இந்த மரங்களின் தயாள குணத்தை. இவை பிறருக்காகவே வாழ்கின்றன. காற்று, வெய்யில், மழை, பனி ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டு அவை  நம்மைப் பாதிக்காமல் தடுத்துக் காப்பாற்றுகின்றன. இவற்றின் நிழல் எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது!

நல்லோரிடம் வந்தவர்கள் உதவி பெறாமல் சென்றதுண்டா? அது போல் இம்மரங்களை நாடி வந்தவர்கள் இவற்றின் பயனை அடையாமல் செல்லமுடியாது.

இம்மரங்களின் இலை, பூ, காய், பழம், பட்டை, கட்டை, சந்தனம், கோந்து, கரி, விறகு, துளிர், இலைகள், கிளைகள் ஆகிய எல்லாமே மற்றவர்க்குப் பயன்படுகின்றன.

உடலும் உயிரும் பெற்றதன் பயன் யாதெனில் மற்ற உயிர்கட்கு உயிர், மனம், வாக்கு, பொருள் மற்றும் உடலால் மேலான உதவியை எப்போதும் செய்வதே.

இவ்வாறு பேசிக்கொண்டே ஒவ்வொரு மரத்தையும், செடியையும், மலர்களையும் தன் அமுதக்‌கரங்களால் தடவிக்கொண்டே யமுனைக்கு வந்துவிட்டான் கண்ணன். அங்கு புல்வெளியில் பசுக்களை மேயவிட்டார்கள். யமுனையின் தேன் போன்ற குளிர்ந்த நீரைப்‌ பருகினார்கள். 

ஓரிடத்தில் அனைவரும் அமர, சில கோபச் சிறுவர்கள், கூறினார்கள். 

ஹே! க்ருஷ்ணா! எல்லா துஷ்ட அரக்கர்களையும் விரட்டுவாய் அல்லவா! இப்போது பசி என்னும் அரக்கன் எங்களை வாட்டுகிறான். அவனை விரட்ட ஏதாவது வழி செய் என்றனர்.

கண்ணன் சிரித்தான். 

பின்னர், அவர்களிடம் 
இங்க பக்கத்தில் வேதம் ‌ஓதும் அந்தணர் குடியிருப்பு இருக்கு. அவங்க ஆங்கீரஸம் அப்டிங்கற ஒரு ஸத்ர யாகம்‌ பண்றாங்க. அங்க போய் என் பேரையும் பலராமன் அண்ணா பேரையும் சொல்லி நாங்க அனுப்பினோம்னு சொல்லி சாப்பாடு கேட்டு வாங்கிட்டு வாங்க
என்று அனுப்பினான்.

உடனே சில கோபச் சிறுவர்கள் அந்தணக் குடியிருப்பை நோக்கிப் போனார்கள். அங்கு சில அந்தணர்கள் யாகம்‌ செய்துகொண்டிருந்தனர். அவர்களிடம்‌சென்று, 

ஐயா, நாங்க இடைச் சேரிலேர்ந்து வரோம். கண்ணனும் பலராமனும் எங்களை அனுப்பினாங்க. அவங்க ரெண்டு பேரும் இங்கதான் பக்கத்தில்‌ மாடு மேய்க்க வந்திருக்காங்க. அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கமுடியுமா? என்றார்கள்.

அற்ப பலன்களை வேண்டி யாகம்‌ செய்யும் அந்த அந்தணர்கள், சிறுவர்களின் வேண்டுதலைக்‌ கேட்டும் கேளாததுபோல் இருந்தனர்.

தந்திருக்கலாம், அல்லது தருகிறேன் என்று கூறியிருக்கலாம், சற்று பொறுங்கள் என்றோ தரமாட்டோம், போங்கள் என்றாவது சொல்லியிருக்கலாம். 

கண்ணனே வேதத்தின் முழு அங்கமும் பலனும் ஆவான் என்பதை அறிந்தும், மனிதன்தானே என்ற லட்சியத்தால்
எதுவுமே சொல்லாமல், யாகத்தைத் தொடர்ந்தனர்.

சிறுவர்கள் பாவம். வெகு நேரம் காத்துக் காத்துப் பார்த்துவிட்டு, இனி இவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்பதை அறிந்து கண்ணனிடம் திரும்பிச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Friday, February 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 400

தினமும் பாவை நோன்பு நோற்க யமுனைக்கு வரும் பெண்களைக் கண்காணிக்கும் விதமாக கண்ணன் நண்பர்களுடன் வருவான.

அவர்களின் வேண்டுதலைக் கேட்ட கண்ணன் ஒரு லீலை செய்ய எண்ணினான்.

ஒரு நாள் கோபிகள் அனைவரும் ஆடைகள்‌ அனைத்தையும் கரையில் கழற்றி வைத்துவிட்டு கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டே  யமுனைக்குள் இறங்கினார்கள்.

என்ன இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஐந்தாறு வயதுக் குழந்தைகள். நீருக்குள் இறங்கியதும் சற்று விளையாடினார்கள். நீந்தினார்கள். நீரை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டு நீந்திப் பிடித்து, நீருக்குள்ளேயே வட்டமாக நின்று கும்மியடித்து என்று ஒரே அமர்க்களம்.

இறைவனை அடைய நான் என்ற அஹங்காரத்தையும், மான அவமானங்களையும் தியாகம் செய்யவேண்டும். சரீரம் என்பது ஆன்மாவிலிருந்து வேறுபட்டது என்று உணர்தல் அவசியம். கோபியர் அனைவரும் தன்னையே அடைய விரும்பியதால் கண்ணன் அவர்களின் அஹங்காரம், மான அவமானங்களை அழிக்க விரும்புகிறான். பற்றுக்கள்  அனைத்தையும் துறந்தவர்க்கு அவனே பற்றுக்கோடு.

இப்போது கரையில் இருந்த அத்தனை ஆடைகளையும் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த கடம்பமரத்தின் மீதேறினான். அதன் கிளைகளில் கோபியரின் உடைகளைக் கட்டித் தொங்கவிட்டுவிட்டுத் தானும் ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான்.

வெகுநேரம் நீரில் ஆடியதில் குழந்தைகளுக்குக் குளிர் எடுத்தது. 

கரைக்குப் போகலாம்டீ.. பூஜைக்கு நேரமாச்சு.
ஹவிஸ் வேற வெக்கணும். ஒருத்தி சொல்ல, எல்லோரும் ஆமோதித்துக் கரையேறத் துவங்கினர். 

ஒருத்தி அலறினாள்

ஹேய்.. துணியெல்லாம் எங்கடீ..

இங்கதான வெச்சோம்..

காணோமே..

எங்க போயிருக்கும்

எப்படித் தேடறது? 

கரையில் அங்குமிங்கும் கண்களை ஓடவிட்டனர். துணிகள் எங்கும் இல்லை.

பயம், குளிர், ஆடையில்லாமல் வீட்டுக்கு எப்படிப் போவது? அழத் துவங்கினர். ஒருத்தி எதேச்சையாக நிமிர எல்லாத் துணிகளும் மரத்தின் மேலிருந்ததைக் கண்டாள்.

அதோ அங்க இருக்குடீ..

யாரு மரத்துமேல வெச்சது?

எப்படி எடுக்கறது?

அதோ கண்ணன்டீ..

ஓ.. அவன் வேலைதான்..

கண்ணா துணிகளைக் கொடு..

சிரித்தான் கண்ணன்.

என்ன சிரிக்கற? உன்னை எங்களுக்கு காவலுக்குதான வரச்சொன்னாங்க. நான் மஹாராஜா கிட்ட சொல்லுவேன்.

தாராளமா இப்படியே போய் சொல்லேன். எனக்கென்ன?

துணியைக் கொடுடா..

கொடுத்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, எப்ப அப்பாகிட்ட சொல்வேன்னு சொன்னயோ, கிடையாது. நீ எங்கப்பா கிட்ட போய் சொல்லிக்கோ..

கண்ணா கண்ணா தயவு செய்து கொடுத்துடு. ரொம்ப குளிருது..

ஆமா.. மழை வேணும்னு தான நோன்பிருக்கறதா சொன்னீங்க. இப்ப என்ன வேண்டிண்டீங்க?

...தலையைக் கவிழ்ந்துகொண்டார்கள். என்ன சொல்வது?

கண்ணா துணியைக் கொடு. நீ இப்படிப் பண்ணலாமா?

இதோ பாருங்க. நீங்கள்லாம் பாவம் பண்ணிருக்கீங்க. அதற்குப் பிராயசித்தம் பண்ணுங்க. கொடுக்கறேன். 

என்ன பாவம்? என்ன பிராயசித்தம்?

நதியில் துணியில்லாம இறங்கக் கூடாது. நீங்க இத்தனை பேரும் துணியில்லாம இறங்கினதால் யமுனை சாபம் தரும். 

அதுக்கு பிராயசித்தம் என்ன தெரியுமா?

நானே ஸர்வேஸ்வரன். என்னை வணங்கினால் எல்லா பாவமும் போய்விடும்.

சரி வணங்கறோம். துணியைக் கொடு கண்ணா. இரு கரம் கூப்பினர்.

இப்படி இல்ல. 

பின்ன?

தலைக்கு மேல் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு இங்கே வந்து கேட்டால் தருவேன்.

கண்ணா அதெல்லாம் முடியாது.

அப்டின்னா துணி கிடையாது.

இவ்விடத்தில் ஆண்டாள் அழகாக தோழியும் நானும் தொழுதோம். துகிலைப் பணித்தருளாயே என்று சொல்கிறாள். அதாவது ஒரு தோழியின் இடது கரமும் இன்னொரு தோழியின் வலது கரமும் கொண்டு கும்பிடுதல்.

அவ்வாறு கும்பிட்டுக் கேட்டபின்பு போனால் போகிறதென்று துணிகளைக் கொடுத்தான் கண்ணன்.

துணிகளை வாங்கிக்கொண்ட கோபிகள் வெட்கத்துடன் கண்ணனை நோக்க, அதைப் புரிந்துகொண்ட கண்ணன்
உங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும். என்னிடம் செலுத்தப்படும் காமம், வறுத்த விதை போன்றது. உலகியல் தளைக்குள் தள்ளாது. வரும் சரத்காலத்தில் தங்கள் அனைவரின் எண்ணத்தையும் நிறைவேற்றுகிறேன். இப்போது ஆயர்பாடிக்குச் செல்லுங்கள்  என்று வாக்களித்தான்.

நோன்பின் பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டதை எண்ணிப் பூரித்த கோபிகள் வீடு திரும்பினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, February 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 399

சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் அதிகாலையில் இருளில் யமுனைக்கரைக்குப் போய் நோன்பிருக்கப் போவதாகச் சொன்னதும், நந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

எதற்காக நோன்பு? இப்ப என்ன அவசியம்?

என்ன சொல்வது? நந்தனிடம் போய், உங்கள்‌ மகனான கண்ணனை நாங்கள்‌ காதலிக்கிறோம். அனைவரும் கண்ணனையே மணக்க விரும்புகிறோம் என்று சொல்ல‌ முடியுமா?

திருதிருவென்று விழித்தார்கள். ஒருத்தி சுதாரித்துக்கொண்டு

நாட்டில் மாதம்‌ மும்மாரி மழை பெய்யணும். அப்டி பெய்தாதானே பயிர், புல் எல்லாம் நல்லா விளையும்? மாடுகளுக்குப் புல் கிடைக்கும்? நல்லா பால் கறக்கும்? நாமும் சௌக்கியமா இருக்கலாம்? அதனால் எல்லாரும் சௌக்கியமா இருக்கணும்னு வேண்டிண்டு நோன்பு இருக்கப்போறோம் என்றாள்.

நந்தன் அகமகிழ்ந்து போனான். மக்கள் வளமாக வாழ எந்த நல்ல காரியம் செய்தாலும் அரசன் அதற்குத் துணை நிற்பான். மக்களை வளமாகவும், நிம்மதியாகவும் வைப்பதே அரசனின் முதற்கடைமையல்லவா?

ஓ.. அப்படியா? ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்.

ஒரு பெரிய கோபி சொன்னாள்

மஹாராஜா.. இருட்டில் பெண்‌குழந்தைகளை தனியா எப்படி அனுப்பமுடியும்? நாங்க யாராவது துணைக்குப் போகலாம்னா காலங்கார்த்தால நிறைய வேலை இருக்கே. மாட்டையெல்லாம் கவனிக்கணும். விடியல்ல கிளம்பினாதான் மதுரைக்கு போய் வியாபாரம் பண்ணமுடியும். இவங்களைத் தனியா எப்டி அனுப்பறது? என்றாள்.

நந்தன் சற்றும் யோசிக்காமல், உள்ளே திரும்பி கண்ணனை அழைத்தான்.

கண்ணா கண்ணா!

அவ்வளவு நேரமும் என்ன பேசுகிறார்கள் என்பதனைத்தையும் ஒளிந்திருந்து கேட்ட கண்ணன், தந்தை அழைத்ததும் ஒன்றுமறியாதவன் போல் வந்தான்.

நாளைலேர்ந்து இவங்கல்லாம் விடிகாலைல யமுனைக்குப் போய் நோன்பிருக்கப் போறாங்களாம்.
நீ துணைக்குப் போய் வா.

கோபிகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நோன்பிருக்கத் துவங்கும் முன்பே பலன் வந்துவிட்டது. ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது.

அப்பா.. இவங்களுக்கெதுக்கு நோன்பு?

எல்லாரும் சௌக்யமா இருக்கறதுக்கு நோன்பிருக்காங்க. அதைக் காப்பாத்திக் கொடுக்கறது ராஜாவோட கடைமைப்பா. அதான். நீ போய்ட்டு வா.

அய்ய.. அப்பா.. நால்லாம் போகமாட்டேன். பொண்குழந்தைங்க கூட சேர்ந்தா காது அறுந்துடும்னு இதோ இவங்க பாட்டிதான் சொல்வாங்க. என்றபடி ஒருத்தியைக் காட்டினான்.

அவள் வெட்கத்தினால் இன்னொருத்தி பின்னால் ஒளிந்துகொண்டாள். 

டேய்.. அதெல்லாம்‌ ச்சும்மாடா.. உன்னைத் தெரியாதா.. ரொம்ப பிகு பண்ணாத. போய் வா.

ஏதோ நீங்க சொல்றதால் போறேன் பா. என்றவன் கோபிகளைத் திரும்பிப் பார்த்து பழிப்பு காட்டிவிட்டு ஓடினான்.

கண்ணன் உடன் வரப்போகிறான் என்று மகிழ்ச்சி கரை புரண்டாலும், 

ஆனாலும் இவன் அழும்பைப்‌ பாரு. நாளைக்கு வரட்டும். பேசிக்கலாம். என்று பேசிக்கொண்டார்கள் அந்த பாக்யவதிகள்.

தினமும் அதிகாலை எழுந்து ஒவ்வொரு வீடாகப் போய் அனைவரையும் எழுப்பி அழைத்துக்கொண்டு யமுனைக்குச் செல்வார்கள். தூய பெருநீரில் நீராடி, யமுனைக் கரையில் மண்ணால் தேவியின் உருவத்தை அழகாகச் செய்வார்கள். பின்னர், சந்தனம், மணம் மிக்க மலருள்ள மாலைகள், பூக்கள், தூபம், தீபம், பழங்கள் கொண்டு பூஜை செய்வார்கள். அங்கேயே கல் கூட்டி ஒரு ஹவிஸைப் பொங்கி உண்பார்கள். 

நடு நடுவில் கண்ணன் வந்து இவர்களை வம்பிழுத்துச் செல்வான். இப்படியாக வெகு நேர்த்தியாக நோன்பிருந்து தேவியிடம்

காத்யாயினீ! மஹாமாயே! மஹா யோகின்யதீச்வரீ|
நந்தகோப ஸுதம் தேவீ! பதிம் மே குரு தே நம:||

என்று வேண்டிக்கொள்வார்கள். அதாவது காத்யாயினீ! மஹா மாயை எனும் சக்தியாக இருப்பவளே! யோகீஸ்வரியாக விளங்குபவளே! (ஏதாவது அதிசயம் செய்தாவது கண்ணனை எங்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக யோகீஸ்வரி என்றழைக்கிறார்கள் போலும்) நந்த கோபனின் மகனான கண்ணனை எங்களுடைய கணவனாக ஆக்கு தேவீ என்பதாக.

கண்ணனைக் கணவனாக்க வேண்டி அவனது சகோதரியைக் கேட்டால் அவள் என்ன செய்வாள்? கண்ணனைப் பார்த்தாள். அவன் நான் பார்த்துக்கொள்கிறேன்‌. என்று சொல்லிவிட்டதால் தேவியும் கண்ணனின் லீலைகளை ஆவலுடன் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.

தினமும் கோபியரின் வேண்டுதலைக் கேட்காமல் கேட்டுக்கொண்டிருந்த கண்ணன் ஒரு லீலை செய்ய எண்ணினான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, February 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 398

வசந்த காலம் முடிந்து ஹேமந்த ருது எனப்படும் முன்பனிக்காலம் வந்தது. கோகுலத்திலிருந்த அத்தனை கோபிகளும் கண்ணனைத் திருமணம் செய்ய விரும்பினர். இது எப்படி‌ சரியாகும் என்றால், அவர்களுக்கு கண்ணன் இறைவன் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. 
அகில தேஹினாம் அந்தராத்மத்ருக்..
அதாவது அனைத்து ஜீவன்களின் அந்தராத்மாவாக இருப்பவனே என்று பின்னால் கோபிகா கீதத்தில் பாடுகிறார்கள்.

எவன் ஒருவனுக்கு இப்பிரபஞ்சத்தின் கட்டுப்பாடுகள் இல்லையோ, எவன் பிரபஞ்சத்தைப் படைத்தவனோ அவனோடு ஒரு ஜீவன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டால் பிரபஞ்சத்தின் ஆதார சக்தி அந்த ஜீவனை கர்மாவினால் உண்டான பஞ்ச பூதங்களாலான உடலை சிதைத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. கர்மா முற்றிலும் அழிந்து விடுவதால், அதை அடிப்படையாகக் கொண்ட உடலுக்கும் வேலையில்லை. ஆன்மா ஒன்றிவிட்ட பிறகு,‌ உடலின் இருப்பு ஜீவனுக்கு ஒரு பொருட்டில்லை.

இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணத்தைத்தான் அவன் பார்க்கிறான். அதுவே அவனை அடையும் உந்து சக்தி. எவ்விதமான எண்ணம் என்பது பற்றி இறைக்கு அக்கறையில்லை. ஜீவன் எவ்வெண்ணத்தில் இறையைத் தொடர்பு கொள்கிறதோ, அதே வழியில் இறை அவனை ஆட்கொள்கிறது.

தாய்மை (வாத்ஸல்யம்), இறைவன் தனது குழந்தை என்ற எண்ணம் (உம். யசோதை)
ஸக்யம் - இறை என் நட்பு (உம் அர்ஜுனன்),
தாஸ்யம் - இறை என் தலைவன் உ.ம் உத்தவன், ஹனுமான்
இறை என் குரு (பரதன், ரமணர், அருணகிரிநாதர்)
இறைவன் என் எதிரி (ராவணன், போன்ற பல எதிரிகள்)
இறைவன் என் எதிரி என்ற பயம் (கம்சன்),
இறைவன் என் காதலன், கணவன் (ஆண்டாள், மீரா, கோபிகள், வ்ருத்ராசுரன்),
இறை என்றே பக்தி செய்தவர்கள் (த்ருவன், ப்ரஹ்லாதன் முதலிய பலர்)

இவ்வாறு எந்த எண்ணத்தின் அடிப்படையில் இறையை இடைவிடாது நினைத்தாலும் அதே வழியில் இறை ஆட்கொள்ளும் அவ்வளவே. பஞ்ச பூதங்களும் இறையின் படைப்பு. எனவே அவற்றின் கட்டுப்பாடுகள் இறைக்கில்லை. எனவேதான் தூணிலிருந்து குதித்தது, தோன்றி மறைகிறது. விரும்பினால் பிறந்து வாழ்கிறது.

இங்கே கோபிகள் இறைவனைக் காதலாலும்,  காமத்தாலும், அடைய விழைகின்றனர். கண்ணனை இறை என்று உணர்ந்தபின் அவ்வாறு வேண்டுவதால் சரீர நியமங்கள் அவசியமின்றிப் போகின்றன.

யார் யார் எதை விரும்புகிறார்களோ அதை அவ்வாறே வழங்குவது இறையின் சுபாவம். 

ஹேமந்த ருதுவின் துவக்கத்தில் கோபியர் கண்ணனைத் தம் தலைவனாக அடைய வேண்டி பாவை நோன்பு இருக்க முடிவு செய்தார்கள். பாவை நோன்பை தேவி காத்யாயனியைக் குறித்துச் செய்தனர். 

பின்னாளில் ருக்மிணி தேவியும் கண்ணனைக் கணவனாக அடைய விரும்பி கௌரி பூஜை செய்கிறாள். நல்ல கணவனை அடைய விரும்புபவர்கள் கௌரி தேவியை வழிபடவேண்டும் என்பது பாகவதம் சொல்லும் செய்தி.

கோபியர்க்கு அதிகாலையில் நீராடும் பழக்கம் இல்லை. தீபாவளிக்கு தீபாவளிதான் நீராடுவார்கள். அதிலும் ஒரு தீபாவளிக்கு தலைக்கு நீராடினால், அடுத்த தீபாவளிக்குத்தான் உடல் நீராட்டம் என்று வேடிக்கையாச் சொல்கிறார்கள். அப்பகுதியின் தட்பவெப்பம் அவ்வாறு இருந்திருக்கக்கூடும்.

இப்போது ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் யமுனையில் நீராடி காத்யாயனியை வழிபடுவதாக சங்கல்பம் செய்தனர்.

தினமுன் நன்றாக அலங்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். கண்ணன் எப்போது வந்தாலும், ஏன் கனவில் வந்தால் கூட அழகாகத் தெரியவேண்டும் என்று உறங்கச் செல்லும் முன் கூட ஒப்பனை செய்வார்களாம். இந்த மாதம் முழுதும் தாமாக விரும்பி மலர் சூடுவதில்லை, மையிட்டுக்கொள்வதில்லை. கண்ணன் வந்து பண்ணிவிட்டால் செய்துகொள்வார்களாம். எப்போதும் பாலும், தயிரும், நெய்யுமாக உண்பவர்கள், நோன்பு மாதம் முழுவதும் நெய்யை விலக்குகிறார்கள்.
வழக்கமான விதிகளான புறம் பேசாமை, தகாதனவற்றைச் செய்யாமை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்கிறாள். ஆண்டாள்.

மார்கழி மாதம்‌ முழுவதும் ஒரே கொதியாக குழைந்து வெந்த ஹவிஸை உண்ணப்போவதாக முடிவு செய்தனர். அதைத்தான் பொங்கல் என்று நாம் செய்கிறோம்.

 இக்காலத்தில் மஞ்சள் நிறம் மேன்மை பெறுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிட்டு மஞ்சள் நிறப் பரங்கிப் பூவை வைப்பார்கள். மஞ்சள் நிற ஜவ்வந்திப்பூ தவிர வேறொன்றும் விளையாது. பொங்கலும் மஞ்சள் நிறமாக இருக்கும். மார்கழியின் முடிவில் வரும் தைத் திருநாளிலும் மஞ்சளுக்கு அதிக ஏற்றம் கொடுப்பார்கள்.

இவ்வாறு கோபியர் நோன்பிருப்பதற்காக அனுமதி வேண்டுகின்றனர். கூட்டாக நிறைய பெண்கள் அதிகாலையில் யமுனைக்குச் சென்று நோன்பிருக்கவேண்டும் என்பதால் அரசனிடம் அனுமதி வேண்டும்.

இப்ப எதுக்கு சின்ன சின்ன பெண்குழந்தைகளுக்கு நோன்பு? என்ன பலன் வேண்டும்? என்று கேட்டான் நந்தன்.

பாவம் அந்தப் பெண்கள் என்ன பதில் சொல்வார்கள்? 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Saturday, February 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 397

கண்ணன் வேணுகானம் செய்யும் அழகை ஒரு அத்யாயம்‌ முழுதும் வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ஒரு புகழ்பெற்ற கலைஞரின் இசை நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றால், அவர் வருவதற்கு முன் அரங்கத்தைத் தயாராக வைப்பார்கள். மற்ற அனைத்து ஏற்பாடுகளும் பார்த்து பார்த்து செய்யப்படும். அரங்கம் குளிரூட்டப்பட்டு, வாசனை திரவியங்கள் மணக்க சித்தமாயிருக்கும்.

 அதுபோல் கண்ணன் குழலூதுவதற்காக வரப்போகிறான் என்றால் இயற்கை அவனுக்காக வனத்தைத் தயார் படுத்திவிடுகிறது.

மழைக்காலம் முடிந்து எங்கும் பசும்புற்கள் முளைத்திருக்கின்றன. மரங்களும் கொடிகளும் நன்கு பூத்து அவற்றின் நறுமணம் ப்ருந்தாவனம் முழுதும் வீசுகிறது. ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூக்கள் மலர்ந்தால் அவற்றின் நறுமணம் எப்படி இருக்கும்? அதைச் சுமந்து கொண்டு மெல்லிய இதமான காற்று வீசி‌ எங்கும் பரப்பிவிடுகிறது.

வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து ரீங்காரமிடுவது ஸ்ருதி சேர்த்து ஆரோஹணம் அவரோஹணம் பாடுவது போல் உள்ளது.

பறவைகள் சேர்ந்திசைக்குத் தயாராக கூவிப் பார்த்துக்கொள்கின்றன. நீரோடைகளும் அருவிகளும் அவற்றை எதிரொலிக்கின்றன.

இவை அனைத்தையும் கேட்ட கோபியர் 
கண்ணன் எப்படி அழகாகக் குழலூதுவான் என்று வர்ணிக்கத் துவங்கினர்.

தலையில் மயில்பீலி அசைகிறது. காதுகளில் கொன்றைப்பூ, ஐந்து விதப் பூக்கள் மற்றும் இலைகளால் ஆன வைஜயந்தி மாலை கழுத்தில் அசைகிறது. 
(வைஜயந்தி மாலை என்பது செடியில் மலரும் மலர், கொடிகளில் மலரும்‌ மலர், நீரில் மலர்வது, மரங்களில் மலரும் மலர் வகை, மற்றும் இலை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பதாகும்)

சுற்றி கோபச் சிறுவர் கூட்டம், முல்லைப்பூப் போன்ற விரல்கள் புல்லாங்குழலின் துவாரங்களில் விளையாட மிக ஒயிலாக நடந்து கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைகிறான்.

இவ்வாறாக அவனை தியானம் செய்த கோபிகள் மானசீகமாக கண்ணனை அணைத்துக்கொண்டனர்.

கண் பெற்றதன் பயன் இந்தக் கண்ணனைக் காண்பதேயாகும். அவனது கடைக் கண் பார்வை நம் மேல் விழுவதும், புல்லாங்குழலைப் போல் அவனோடு ஒட்டுவதுமே பிறவி எடுத்ததன் பயன்.

பசுக்களின் குளம்படியால் எழும் புழுதி படர்ந்த முகம், கலைந்த தலை, முத்து முத்தாய் வியர்வை பூக்கும் முகம், அசையும் குண்டலங்கள், தலையில் மாந்தளிரும், மயிலிறகுக் கொத்தும், அல்லிப்பூ மாலையசைய ஒரு தேர்ந்த கலைஞனைப்போல் ஆடிப்பாடிக்கொண்டு வருகின்றனர் பலராமனும் கண்ணனும்.

ஆண்டாள் பெருமாளைக் காதலித்ததால் சங்குடன் வழக்குப் படித்தாள். இங்கு கோபியர் புல்லாங்குழலுடன் வழக்குப் படிக்கின்றனர்.

இந்தப் புல்லாங்குழல் என்ன பாக்யம் செய்ததோ.‌ கோபிகைகளான நம் எல்லாருக்கும் சொந்தமான கண்ணனின் இதழமுதத்தை தான் மட்டுமே இஷ்டம்போல் பருகுகிறது. மூங்கில் மரங்கள் தம் இனத்தில் ஒருவனுக்கு வந்த பேற்றை நினைத்து மேனி சிலிர்க்கின்றன.

ப்ருந்தாவனம் முழுவதும் கண்ணன் தன் பாத அச்சுக்களை வைத்திருக்கிறான். அதனால் பெரும் செல்வம் பெற்று விளங்குகிறது. மயில்கள் கண்ணனுக்கு முன்பாக நின்று அவனது குழலிசைக்கேற்ப தோகை விரித்து ஆடுகின்றன.

மற்ற விலங்குகளும் பறவைகளும் குழலிசையில் மயங்கி அசைவற்று நிற்கின்றன.

பெண்மான்கள் தங்கள் அன்பு முழுவதையும் வெளிப்படுத்துமாறு கண்ணனை நோக்குகின்றன. ஹரிணி என்றால் பெண்மான். க்ருஷ்ண ஸாரம் என்பது ஆண்மான். அவை தங்கள் கணவர்களையும் கண்ணனைக் காண அழைக்கின்றன. 

வானத்தில் செல்லும் தேவர்களும் கந்தர்வர்களும் குழலிசையைக் கேட்டு மயங்கி மயங்கிக் கீழே விழுகின்றனர்.

காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் கண்ணனின் திருவடியைச் சுற்றி அமர்ந்திருக்கின்றன.
பசுக்கள் காதுகளை மேலே‌ நிமிர்த்தி  கிண்ணம்‌போல் ஆக்கிக்கொண்டு ஆடாமல் அசையாமல்  குழலிசையைப் பருகுகின்றன. மேய்ந்த புற்களை விழுங்கும் நினைவின்றி கடைவாயில் வழியவிடுகின்றன.

முனிவர்கள் எல்லாரும் பறவை உருக்கொண்டு வந்தார்களோ என்னும்படியாக அவை மரங்களின் மீது அசையாமல் கண்களை மூடி இசையை ரசிக்கின்றன.

யமுனை தன் வேகத்தை அடக்கிக்கொண்டு இசைக்கு ஏற்றபடி சலசலக்கிறாள். கண்ணனின் திருவடியில் சேர்க்க மலர்களைக் கொண்டுவருகிறாள். 

மேகங்கள் பன்னீர் தெளிப்பதைப் போல் இதமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரல் தெளிக்கின்றன.

கண்ணன் நடந்த புற்களின் மீது அவன் பாதங்களில் பூசிய நலங்கின் சிவந்த சாந்துப்பொடி ஆங்காங்கே விழுந்திருக்கிறது.
வனத்தில் வசிக்கும் வேடுவப் பெண்கள் அந்தக் குங்குமத்தை எடுத்துப் பூசிக்கொள்கின்றனர்.

கண்ணன் செல்லும் பாதையில் இருக்கும் முட்களை காற்று அப்புறப்படுத்துகிறது. கண்ணன் அவ்வழிச் சென்றது அம்முட்கள் அழுகின்றனவாம். காற்றை அழைத்து எங்களைக் கண்ணனின் பாதம் பட்ட இடத்தில் மீண்டும் கொண்டு சேர்த்துவிடு என்று கெஞ்சுகின்றனவாம்.

கோவர்தன மலையை பெரிய ஹரி பக்தர் என்று குறிப்பிடுகின்றனர் கோபியர்.

பக்தரின் ஹ்ருதயத்தில் பகவான் இருப்பான். அதுபோல் கோவர்தன மலையில் நடுவில் ஒரு குகை உண்டு. கண்ணன் அடிக்கடி அதனுள் சென்று அமர்ந்து கொள்வானாம். பக்தருக்கு பகவானின் லீலைகளை நினைந்து அடிக்கடி புளகாங்கிதம் ஏற்படும். அதுபோல் மலைமேல் வளந்ர்திருக்கும் புற்கள் கோவர்தனம் புளகாங்கிதமடைவதால் விளைகின்றனவாம். பக்தனுக்கு அடிக்கடி பகவத் குணத்தை நினைந்து  ஆனந்தக் கண்ணீர் வரும். அதுபோல் கோவர்தனத்திலிருந்து  அருவி கொட்டுகிறதாம். ஹரி பக்தர் எப்போதும் தன்னை நாடி வருபவர்க்கு உணவளித்து உபசாரங்கள் செய்வார். கோவர்தனமும் தன்னை நாடி வருபவர்க்கு மரங்களிலிருந்து பழங்களையும், கிழங்குகளையும் கொடுக்கிறதாம். எப்போதும் கண்ணனின் பாத ஸ்பர்ச சுகத்திற்காக ஏற்கும் பக்தனாக கோவர்தன மலை வர்ணிக்கப்படுகிறது.

கண்ணனின் குழலிசை கேட்டு அசையும் விலங்குகள் எல்லாம் சிலையாகி நிற்க, அசையாத மரங்களும், மலைகளும் புல்லரித்து நிற்கின்றன. இது விந்தையிலும் விந்தை அல்லவா?

காலையில் மாடு‌மேய்க்கக் கிளம்பும் கண்ணனைக் கண்‌மறையும் வரை கண்டபின், 
அவன் குழலூதும் அழகை கோபியர் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டிருந்தனர். அவ்வாறிருக்கையில் அவர்களுக்குப் பொழுது போவதே தெரியவில்லை. மாலையானதும் கண்ணன் திரும்பி வரும்வரை உள்ளேயே செல்லாமல்  வாசலிலேயே நின்றுகொண்டு கண்ணன் புகழைப் பாடுவதிலேயே அவர்களது நாள் கழிந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, February 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 396

பெருமழை பொழிந்து செழிப்படைந்த பேரீச்சம்பழங்களும் நாவல் பழங்களும் பழுத்துக் குலுங்குகின்ற காட்டிற்குள் பசுக்களும் இடையர்களும் சூழ, கண்ணன் பலராமனுடன் சென்றான்.

பால் சுரப்பால் கனத்த மடிகளுள்ள பசுக்கள்‌ மெதுவாக நடந்து வந்தன. கண்ணன் அவற்றின் பெயரைச் சொல்லி அழைத்தாலே பாலைச் சொரிந்தன.

காட்டுவாசிகள் மகிழ்ச்சியாக வசித்துக் கொண்டிருந்தனர்‌. பூக்களினின்று ஒழுகும் தேன் மரங்களின் மீது வழிந்து கொண்டிருந்தது. நிறைந்து பாயும் அருவிகள், எதிரொலிக்கும் மலைகள், குகைகள் அனைத்தையும் கண்ட கண்ணன் மிகுந்த மகிழ்ச்சியுற்றான்.

அவ்வப்போது இதமான காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போதெல்லாம் மரப்பொந்துகளிலோ குகைகளிலோ அமர்ந்து வேர்கள், கிழங்குகள் ஆகியவற்றை உண்டு மகிழ்ந்தனர்.

யமுனையின் அருகே இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவைக் கண்ணன் உண்டான்.

இஷ்டம்போல் மேய்ந்துவிட்டு, த்ருப்தியுடன் படுத்து அசைபோடும் பசுக்களையும், மடியில் பால் நிறைந்திருப்பதால் திணறும் பசுக்களையும், மழைக் காலத்தின் அழகையும் கண்ட கண்ணன் பலராமனிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தான்.

நிறைய பயிற்சிகள் செய்த யோகியின் சித்தம் தெளிவடைவதைப்போல் நீர்நிலைகளில் நீர் தெளிந்திருந்தது. தாமரைகள் மலர்ந்திருந்தன. 

கண்ணனிடம் கொண்ட பக்தி, குரு அளிக்கும் கல்வியைக் கற்க முடியாமல் மறைக்கும் அறியாமையை நீக்குகிறது. இல்லறத்தானுக்கு உலகியல் வாழ்வில் உள்ள பேராசையை நீக்குகிறது. வானப்ரஸ்தனுக்கு தன் நியமங்களைச் செய்யும்போது ஏற்படும் தடைகளை விலக்குகிறது. துறவிகளுக்கு பாவ புண்ய வாசனைகளைத் தொலைக்கிறது. அதைப்போல் இந்த வசந்த காலம் ஆகாயத்திலுள்ள மேகத்தை நீக்குகிறது. மழைக்காலத்தில் உயிரினங்கள் வெளியில் செல்ல முடியாமல் அடைந்து கிடந்தன. இப்போது அவை வெளியில் வந்து ஒன்றை ஒன்று கண்டு அன்பு செலுத்துகின்றன. பூமியுன் சேற்றையும் நீரின் கலங்கலையும் போக்கி தெளிவடையச் செய்கிறது.

முனிவர்கள் உலகப்பற்றை விட்டு பாவம் நீங்கி அமைதியுடன் இருப்பதுபோல், மேகங்கள் தங்கள் செல்வமான நீரை உலகிற்கு அளித்துவிட்டு வெண்மையாக விளங்கின.

ஞானியானவன் சிலசமயம் மோனத்திலும், சில சமயம் ஞானத்தைப் போதித்துக்கொண்டும் இருப்பார். அதுபோல் மலைகள் சில இடங்களில் அருவிகளாக நன்னீரைக் கொட்டின. சில இடங்களில் சுனைகளாகத் தேக்கிவைத்துக்கொண்டன.

அறிவிலிகள் தினமும் ஆயுள் குறைவதை உணர்வதில்லை. அதுபோல் நீர்வாழ் பிராணிகள் நீர்நிலைகளில் நீர் குறைவதை உணரவில்லை.

பெரிய குடும்பமுள்ள ஏழை புலனடக்கமில்லாததால் துன்பமுறுவான். அதுபோல் நீர்நிலை வாழ் பிராணிகள் வெப்பத்தை உணர்ந்தன.

ஞானிகள் நான் எனது என்ற பற்றை விடுவதுபோல் பூமி சேற்றை விட்டது.

யோகிகள் பிராணனைக் கட்டுப்படுத்தி புலன் வழியாக புத்தி வெளியே சென்று உலக அறிவைக் கொண்டு வருவதைத் தடுப்பார்கள். அதுபோல் விவசாயிகள் வயலினின்று நீர் வெளியேறாமல் தடுத்தனர்.

உடலே நான் என்ற அறிவை ஞானம் நீக்கும். கண்ணன் கோபியரின் தாபத்தை நீக்கினான். இவற்றைப்போல் சூரிய வெப்பத்தால் வரும் துன்பத்தை சந்திரன் அகற்றினான்.

உபநிடதங்களின் பொருளை உணர்ந்தவன் ஸத்வ குண மிகுதியால் சித்தம்‌ தெளிந்து விளங்குவான். அதுபோல் வானம் மேகமின்றி நக்ஷத்ரங்கள் மின்ன விளங்கிற்று.

கண்ணன் யாதவர்கள் வட்டமிட புவியில் விளங்குவதுபோல் சந்திரன் வானில் நக்ஷத்ரக் கூட்டங்களுடன் விளங்கினான்.

வெம்மையும் குளிரும் சமநிலையில் இருந்ததால் மக்கள் தாபம் நீங்கப் பெற்றனர். ஆனால் கோபியருக்கோ தாபம் அதிகரித்தது.

நற்செயல்களை அவற்றின் பலன் பின் தொடரும். அதுபோல் விலங்குகளும், பறவைகளும், பெண்களும் காமவயப்பட்ட தம் காதலர்களால் பின்தொடரப்பட்டனர்.

நல்ல அரசனின் வரவால் திருடர் பயம் நீங்கி உலகம் பயமற்று வாழும்‌. அதுபோல் சூரியன் உதித்ததும் அல்லிப்பூக்கள் நீங்கி தாமரைகள் மலர்ந்தன.

புனிதப் பணிகள் செய்து சித்தி பெற்றவர்கள் மறுமையில் தேவர் முதலிய பிறவிகளை அடைவர். அதுபோல் மழையால் வெளிச் வெல்ல இயலாமல் இருந்த வணிகர்களும், உயர்கல்வி பெற வெளியில் செல்பவர்களும் இப்போது இடம்‌பெயர்ந்து விரும்பிய பயனைப்‌ பெற்றனர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, February 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 395

மழைக்கால வர்ணனம்

இந்த அத்யாயம் முழுவதும் ஸ்ரீசுகர் பல்வேறு ஆச்சரியமான உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம், ஸத்சங்கம், நாம கீர்த்தனம், கதா ச்ரவணம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அவற்றோடு சேர்ந்து அவரவர்க்கான தர்மம், பூகோள வர்ணனை, பதினான்கு லோகங்களின் வர்ணனை, ஸ்வர்க‌நரக வர்ணனை, நதிகளின் மேன்மை,  வாழ்வியல் நெறி, மொழிப்புலமை,  சமயோசித புத்தி, மனோ தத்துவம், சாங்க்ய யோகம், என்று ஸ்ரீமத் பாகவதம் பேசாத விஷயமே இல்லை. 

இவை தவிர ஏராளமான ஸ்துதிகளும் கொண்டது ஸ்ரீமத் பாகவதம்.

எல்லா உயிரினங்களும் கிளைத்துத் தழைக்கும் பெருமழைப் பருவம்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் பரிவட்டம் கட்டி, இடி மின்னல் வாத்யங்களுடன் துவங்கிற்று.

ஆகாயம் எப்படி இருந்தது? ப்ரும்ம ஸ்வரூபமே ஆனாலும் முக்குணங்களால் மறைக்கப்பட்ட ஜீவாத்மாவைப் போல நீருண்ட மேகங்கள் சூரிய, சந்திர, நக்ஷத்ரங்களை மறைத்திருந்தன.

எட்டு மாதங்களாக சூரியன்  உறிஞ்சி எடுத்த நீர்ச் செல்வத்தை மேகதேவதை திரும்பி வழங்கத் துவங்கினார்.

நல்லோர் பசி தாகத்தால் தவிப்பவர்க்கு உணவும் நீரும் அளிப்பது போல் மின்னல் கொண்ட பெருமேகங்கள் இவ்வுலகிற்கு நீரை வழங்கின.

கடுந்தவம் செய்து உடல் வற்றியவன் அதன் பலனைப் பெறும் சமயத்தில் சட்டென்று புஷ்டி அடைவதைப்போல, கோடையின் கொடும் வெப்பத்தினால் சுருங்கிய பூமி, மழையைப்‌ பெற்றதும் செழிப்புற்றது.

கலியுகத்தில் பாவங்களின் வலிமையால் நாத்திகப் பிரசாரம் மேலோங்கும். வேதம் மங்கி நிற்கும். அதுபோல் மேகம் சூழ்ந்த இரவில் நக்ஷத்திரங்கள் ஒளிராமல், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தன.

அனுஷ்டானங்கள் முடிந்ததும் குருவின் அனுமதியோடு வேதபாராயணப் பயிற்சியைத் துவங்கும் பாடசாலைக் குழந்தைகளைப் போல், மழையைக் கண்டதும் உறங்கிக்கொண்டிருந்த  அத்தனை தவளைகளும் சத்தமிடத் துவங்கின.  

புலனடக்கமின்றி தீய வழியில் செல்லும் மனிதனின் செல்வம் தடம் புரள்வதைப்போல் கோடையில் வரண்டிருந்த சிற்றாறுகளில் மழை வந்ததும் வெள்ளம் தாறுமாறாகக் கரை புரண்டோடியது.

பூமி பசும்புற்களால் பச்சையாகவும், பூச்சிக்கூட்டங்களால் சிவந்தும், நாய்க்குடைகளால் மூடப்பட்டு வெளுத்தும் காணப்படுவது ஒரு அரசனின் பல்வேறு படைகளின் அணிவகுப்பைப் போல் இருந்தது.

வயல்கள் செழித்ததால் உழவர்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது. எல்லாம்‌ இறைவன் செயல் என்றுணராத  செல்வச் செழிப்புள்ளவர்களுக்கு‌ அது பொறாமையை ஏற்படுத்தியது.

ஹரி பக்தர்கள் இறை சேவையால் உள்ளும் புறமும் அழகைப் பெற்று ஒளிர்வர். அதுபோல் நீரிலும் நிலத்திலும் வாழும் அனைத்துப் பிராணிகளும் புது நீரால் புத்தழகு பெற்று மிளிர்ந்தன.

பக்குவமாகாத யோகியின் சித்தம் காமத்தினால் கொந்தளிக்கும். அதைப்போல் பெருமளவு ஆற்றுநீர் புகுந்ததும் கடல் கொந்தளித்தது.

பகவானிடம் முழுமையாக ஈடுபட்டவர்கள் எத்தகைய துன்பம் வந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். அதுபோல், எவ்வளவு பெரிய மழை பெய்த போதிலும்‌ மலைகள் அசைந்து கொடுக்க வில்லை.

வேதங்களை தினமும் ஓதவேண்டிய அந்தணர்கள் அதைச் செய்யாதபோது, காலத்தால் மறைக்கப்படும். அதைப்போல் கால்ம் காலமாக ஒரே வழியில் நடப்பதனால் தோன்றும் ஒற்றையடிப்பாதைகள் மழைக்காலத்தில் புற்களால் மூடப்பட்டிருந்தன.

மின்னி கணப்பொழுதில் மறைவதால் மின்னல் எனப்பட்டது. அவ்வொளி நிலைத்து நிற்காது. நற்குணங்கள் நிரம்பியவரிடம், விலைமாதர்கள் நிலையான அன்பு வைக்கமாட்டர்கள் அதுபோல் மின்னல் ஒளியும் நிலையில்லாமல் இருந்தது.

முக்குணங்களால் உருவம் பெற்ற உடலில் எந்தத் தொடர்பும் இன்றி ஜீவாத்மா பிரவேசித்து வாழ்கிறது. அதைப்போல் மேகமுள்ள வானில் எந்தத் தொடர்பும் இன்றி வானவில் பிரகாசிக்கிறது.

தன்னொளியால் விளங்கும் ஜீவன் நான், எனது என்ற அஹங்காரத்தால் ஒளி மங்குகிறான். அதுபோல் மேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு ஒளிமங்கிக் காணப்பட்டது.

இல்லறத்தார்கள் சாதுக்களின் வருகையைக் கண்டு மகிழ்வதுபோல் மேகங்களைக் கண்டதும் மயில் கூட்டம் மகிழ்ந்து ஆடியது.

தவம் செய்து வாடிக் களைத்தவர்கள், அதன் பயனை அனுபவிப்பதுபோல், மரங்கள் வேர்களின் வழியே நீர் பெற்றுச் செழிப்புற்றன.

எவ்வளவு தொல்லைகள் இருந்தபோதும் உலகியல் பற்றுள்ளவர்கள் வீடுகளிலேயே ஈடுபாடு கொள்வர். அதுபோல் சேற்றால் ஓடைகள் கலங்கியிருந்தபோதும் சக்ரவாகப் பறவைகள் அங்கேயே வசித்தன.

நாத்திகர்களின் தவறான வாதங்கள் வேத மார்கங்கள் சீரழிவதுபோல் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அணைகள் உடைந்தன.

இன்னும் பல உதாரணங்களுடன் ப்ருந்தாவனத்தில் மழைக் காலத்தின் காட்சியை ஸ்ரீ சுகர் விளக்குகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, February 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 394

ஒருநாள் கண்ணனும் கோபர்களும் மாடுகளை மேயவிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 

அப்போது, மாடுகள் மேய்ந்துகொண்டே வழி தெரியாமல் வெகு தூரம் சென்றுவிட்டன. அங்கு ஒரு முஞ்சைக் காடு இருந்தது. அதற்குள் அலைந்த மாடுகளுக்கு வழி தெரியவில்லை.

நன்கு உலர்ந்து போயிருந்த அக்காட்டில் மருந்துக்கும் எங்கும் தண்ணீர் இல்லை. தாகத்தினால் தவித்த மாடுகள், வழி தெரியாத குழப்பத்தினால் அங்குமிங்கும் ஓடி, தீனமாகக் குரல் எழுப்பத் துவங்கின.

சற்று நேரம் கழித்து மாடுகளைக் காணாமல் கோபச் சிறுவர்கள் பயந்து போயினர். பின்னர் அவற்றின் குளம்படித் தடம், மிதிபட்டிருக்கும் புற்கள் ஆகியவற்றைப்‌ பின்பற்றிக்கொண்டே முஞ்சைக் காட்டை அடைந்தனர். அங்கும் வெகுதூரம் அலைந்தபின்பும் மாடுகளைக் காணவில்லை. ஆனால் அவற்றின் குரல் மட்டும் நாலாபுறங்களிலிருந்தும் எழும்பியது. 

கண்ணன் தன் குழலை எடுத்து ஒவ்வொரு‌ மாட்டின் பெயரையும் சொல்லி ஊத, அவை பதில் குரல் எழுப்பிக்கொண்டு குழலிசை வந்த திசையை நோக்கி ஓடிவந்தன.

அங்கே கண்ணனையும் சிறுவர்களைக் கண்டதும் மயிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன‌.

மாடுகளை அழைத்துக்கொண்டு அனைவரும்  கிளம்பினர்.

திரும்பிச் செல்லும் வழியில் மிகவும் காய்ந்திருந்த அந்த முஞ்சைக் காடு எங்கோ பற்றிக்கொண்டது.

கிடுகிடுவென்று நாலாபக்கமும் நெருப்பு பரவிவிட்டது.
மாடுகள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு ஓடின. பயத்தில் மிகவும் தீனமாகக்‌ குரல் எழுப்பின. கோபச் சிறுவர்கள் கண்ணா காப்பாற்று என்று கூறிக்கொண்டு சரணடைந்தனர். 

கண்ணன் மறுபடி மாடுகளை ஒரு சிறு குழலோசையால் அடக்கினான். பின்னர் அனைவரையும் கண்ணை மூடிக்கொள்ளச் செய்தான்.

மாடுகள் உள்பட அனைவரும் கண்களை மூட, ஹாவென்று கோட்டை வாசல் போல்  வாயைத் திறந்தான்.

பஞ்சபூதங்களும் அவன் வயிற்றினுள்‌அடக்கம். அங்கிருந்த நெருப்பு முழுவதையும் குடித்துவிட்டான். அவ்விடத்தைத் தன் அமுதப் பார்வையால் சோலை வனமாக்கினான்.

பின்னர், தன் யோகமாயையால் அனைவரையும் பாண்டீர வனத்தில் யமுனைக் கரையில் இருக்கும்  பெரிய ஆலமரத்தின் அடியில் கொண்டு வந்துவிட்டான். 

 கண்ணைத் திறக்கலாம் என்ற கண்ணனின் குரலைக் கேட்டு கண்ணைத் திறந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

இன்று வீட்டுக்குச் சென்றதும் அன்னையிடம் சொல்ல நிறைய விஷயம் இருந்தது அந்த கோபச் சிறுவர்களுக்கு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...




Friday, February 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 393

ஒரு சமயம் கடுங்கோடை வந்தது. சூரியன் தன் வெப்பத்தினால் பூமியை அப்படியே உறிஞ்சி எடுத்ததைப் போல் இருந்தது. ஆனாலும், கண்ணனின் சம்பந்தத்தால் ப்ருந்தாவனம் மட்டும் குளிர்ச்சியாகவும், வசந்த ருதுவைப் போலவும் காட்சியளித்தது.

எங்கும் பசுமை நிரம்பிய ப்ருந்தாவனத்தில் விளையாடுவது கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன் நண்பர்களையும் பலராமனையும் அழைத்துக்கொண்டு பாண்டீரவனம் என்னும் அடர்ந்த காடுகள் நிரம்பிய பகுதிக்குச் சென்றான்.

அங்கு ஒளிந்து விளையாடுவது, கண்ணாமூச்சி, விலங்குகள் பறவைகள் போல் சேட்டை செய்வது, தவளைபோல் எம்பிக் குதிப்பது, கல்லின் மேல் அமர்ந்து அரச தர்பார் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினான்.

ஆற்றங்கறையிலும், கொடி வீடுகளிலும், மலையடிவாரத்திலும் அருவிகளிலும் இஷ்டம்போல் விளையாடினர்.

கோபர்களுடன் கலந்து விளையாடி கண்ணனைச் சமயம் பார்த்துக் கடத்திச் சென்று கொன்றுவிடும் எண்ணத்துடன் வந்திருந்தான் பிரலம்பன் என்ற அசுரன்.

சிறுவனைப்போல் உருக்கொண்ட அவன் அவர்கள் அனைவருடனும் வந்துவிட்டான். ஏராளமான சிறுவர்கள் இருந்ததால் அவர்களுக்குப் புதியவனை அடையாளம் தெரியவில்லை. அவனும் கோபச் சிறுவன் என்றே நினைத்தனர்.

கண்ணனுக்குத் தெரியாதா என்ன? அவனுக்கு அத்தனை சிறுவர்கள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மாடுகளையும், அவற்றின் கன்றுகளையும் கூட அறிவான் அவன்.

பிரலம்பன் விளையாடும் சமயம், பல முறை கண்ணனைக் கொல்ல முயற்சித்தும், அவனால் கண்ணனின் அருகில் கூட செல்ல முடியவில்லை. எனவே பலராமனைக் கொல்ல முடிவெடுத்தான்.

கண்ணன் எல்லா சிறுவர்களையும்‌ அழைத்து இரு அணிகளாகப் பிரிந்து விளையாடத் திட்டமிட்டான். பலராமன் ஒரு அணிக்கும் கண்ணன் ஒரு அணிக்கும் தலைமையேற்றனர்.

தோற்றவர் ஜெயித்தவரைத் தூக்கிகோண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓட வேண்டும். அதுதான் நிபந்தனை.

பிரலம்பன் கண்ணனின் அணியில் சேர்ந்து கொண்டான். ஒரு விளையாட்டில் வேண்டுமென்றே பலராமனிடம் தோற்பதுபோல்‌ நடித்தான். கண்ணன் கண்ணைக் காட்ட, பலராமனும் புரிந்து கொண்டான்.

இப்போது பிரலம்பன் பலராமனைத் தூக்கிக்கொண்டு மலையடிவாரம் வரை  ஓடவேண்டும். பிரலம்பனும் பலராமனைத் தூக்கிக்கொண்டு ஓடத்துவங்கினான். சிறிது தூரம் சென்றதும் தன் சுய உருவம் பெற்றான். கோரமான பற்களும், சிவந்த கண்களும் உடல் நிறைய முடியும், தலையில் இரண்டு கொம்புகளுமாக மிகுந்த கோரமான உருவம் அவனுடையது. பலராமனைத் தோளில் தூக்கிக்கொண்டு வானில் பறக்கத் துவங்கினான்.

பலராமன் குறிப்பிட்ட உயரம் சென்றதும், தன்‌ முஷ்டியால் பிரலம்பனின் தலையில் ஓங்கிக் குத்தினான்.

கடப்பாறை தலையில் இறங்கியதுபோல் பிரலம்பனின் தலை பிளந்தது. அலறிக்கொண்டு உயரத்திலிருந்து கீழே விழுந்தான். அவன் உடல் மீதே விழுந்த பலராமனுக்கு அடிபடவில்லை. அத்தனை சிறுவர்களும் துள்ளிக் குதித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். பலராமனைத் தோளில் தாங்கினர். வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

மாலையாகிவிட கண்ணனும் பலராமனும் நிறைய வித்யாசமான பழங்களையும் பூக்களையும் சேகரித்துக் கொண்டு மாடுகளையும் சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு இடைச்சேரிக்குத் திரும்பினர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, February 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 392

காளியனை அடக்கிவிட்டுக் கண்ணன் கரைக்கு வரும் சமயம் நன்றாக இருள் சூழத் துவங்கிவிட்டிருந்தது.

இறைவன் கருணையால் கண்ணன் காக்கப்பட்டான் என்று மிகவும்‌ மகிழ்ந்த‌ நந்தன் அப்போதே நிறைய தானங்களைச் செய்தான்.

யசோதையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்ணனை மடியிலமர்த்திக்கொண்டு பலவாறு கொஞ்சினாள். நாள் முழுதும் நீரில் நின்றுவிட்டு நனைந்து வந்திருந்த கண்ணனைத் தலை, உடல் எல்லாம் துவட்டினாள். உச்சி மோந்தாள். ஈர உடையைக் கழற்றி, வேறு உத்தரீயத்தை எடுத்து இடுப்பில் கட்டிவிட்டாள். வேண்டாம் என்றால் யசோதை விட்டாளா?  கரையில் கோபியர் உள்பட அனைவரும் சூழ்ந்திருந்ததால் கண்ணன் சற்று வெட்கத்தோடு உடை மாற்றிக்கொண்டான். 

அவனுக்கு எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

எமன் வாயில் சென்று மீண்டு வந்தான் என்றே எண்ணினாள்.

கோபர்கள் ஆங்காங்கே சென்று சில கிழங்குகளையும், பழங்களையும் கொண்டு வந்தனர்.  கோபிகள், அங்கேயே கல்லைக் கூட்டி, தீ மூட்டி, கிழங்குகளை வேகவைத்து அனைவர்க்கும் பகிர்ந்தனர்.

மிகவும்‌ இருளாகி விட்டபடியால்  பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காட்டு வழியில் வீடு செல்வது நல்லதல்ல என்று நந்தன் எண்ணினான். யமுனையின் மணல் திட்டு மிகவும் அகலமாக இருந்தது. சுற்றிக் காவல் போட்டு  அங்கேயே அன்றிரவு தங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

நள்ளிரவில் திடீரென்று சடசடவென்று சத்தத்துடன் பெரிய வெளிச்சம் தோன்ற, காட்டுத்தீ என்று உணர்வதற்குள் வேகமாகப் பரவிவிட்டது.

அந்தப் பக்கம் நெருப்பு, இந்தப்பக்கம் ஆழமான மடு. இடையில் சிக்கிக்கொண்டார்கள் இடையர்கள். காட்டுத்தீயின் வெம்மை தாங்காமல் அனைவரும் தவித்தனர். இருக்க இருக்க காற்றின் வேகத்தால் தீக்கங்குகளும், மரங்களும் அவர்கள் மேல் பறந்து வந்து விழுந்தன.

வேறு வழியின்றி அசந்து உறங்கிக்கொண்டிருந்த கண்ணனை எழுப்பினார்கள் சிறுவர்கள்.

கண்ணா! காட்டுத்தீ பரவிண்டே இருக்கு. எல்லாரும் கஷ்டப்படறாங்க. எப்டியாவது காப்பாத்து. 

கண்ணன் எழுந்து பார்த்தான்.

சுற்றிலும் வானளாவிய நெருப்பு, வேறொன்றும் இல்லை. இந்தப்பக்கம் மடுநீர் இருந்தாலும், அது ஆழமானது. 

சற்று யோசித்தான். பின்னர் எல்லாரையும் அங்குமிங்கும் ஓடாமல்  ஒரே இடத்தில் வந்து குழுமி நிற்கச் சொன்னான். எல்லாரும் ஓருடத்தில் வந்ததும், அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்றான்.

நந்தனுக்கு அவன் செய்வது விசித்ரமாக இருந்தாலும், கண்ணன் சொன்னதை மீற எண்ணம் எழவில்லை.

அனைவரும் கண்களை மூடியதும் ஹா வென்று கோட்டை வாசலைப் போல் தன் செப்புவாயைத் திறந்து அத்தனையும் நெருப்பையும் உறிஞ்சிவிட்டான்.

அவன் வயிற்றினுள்தானே அனைத்து பூதங்களும் அடக்கம்? 

ஓரிரு நிமிடங்களில் நெருப்பு முழுவதையும் கண்ணன் குடித்துவிட்டு,  கருகியிருந்த மரம் செடி கொடிகளைத் தன் அமுதப் பார்வையால் செழிப்புறச் செய்தான். அவை முன்போல் ஆனதும், இப்போது கண்ணைத் திறக்கலாம் என்று பலராமன் அறைகூவல் இட்டான்.

கண்ணைத் திறந்த இடையர்கள் ஆச்சரியமுற்றனர். அங்கே நெருப்பு எரிந்த சுவடே இல்லை.

முன்னைவிடவும் பசுமையாக, செடிகளும் கொடிகளும் மலர்களுமாகக் காட்சியளித்தது அவ்வனம்.

அதிகாலைப் பொழுதாகிவிட, மாடு கறக்கும் வேளை வந்துவிட்டதென்று அனைவரும் அவசரம் அவசரமாக இடைச்சேரி நோக்கிக் கிளம்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...




Wednesday, February 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 391

கண்ணன் காளியனினை விடுவித்ததும், காளியன் கண்ணனை வணங்கிப் பேசத் துவங்கினான்.

நாங்கள் பிறவியிலேயே தமோ குணம் மிக்கவர்கள். கோபவெறி உள்ளவர்கள். பிறருக்குத் தீங்கிழைக்கும் இயல்புள்ளவர்கள். எங்கள்  இயல்பை எங்களால் எளிதில் விட இயாலாதே. நான், எனது என்ற அபிமானத்தால் தவறு செய்கிறோம்.

முக்குணங்களின் கலவையாலேயே இவ்வுலகம் உம்மால் படைக்கப்பட்டுள்ளது.

உமது மாயையில் கட்டுண்டு கிடக்கும் எங்களுக்கு உண்மை அறிவு ஏது? எல்லாம் அறிந்த உலகின் தலைவரான தாங்கள் என்ன செய்தாலும் கட்டுப்படுகிறோம். மன்னிப்பதும், தண்டிப்பதும் தங்கள் விருப்பம். 
என்றான்.

கண்ணன் அவனைக் கருணையுடன் பார்த்தான்.

ஹே! சர்ப்பமே! நீ இனி இங்கு வசிக்கலாகாது. உன் இனத்தார், மற்றும் குடும்பங்களுடன் கடலுக்குப் போ. இங்குள்ள மக்களுக்கு இவ்வாற்று நீர் பயன்படட்டும்.

நான் உனக்கிட்ட கட்டளையையும், இந்த லீலையையும் காலை மாலை இரு வேளைகளிலும் நினைப்பவர்க்கு பாம்புகளிடம் பயம் கிடையாது. நான் விளையாடிய இம்மடுவில் நீராடி, உபவாசமிருந்து தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணம் செய்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

நீ கருடனுக்கு பயந்துதானே இங்கு வந்தாய். உன் தலைகளின் மீது என் பாதச் சுவடுகளைப் பதித்திருக்கிறேன். அவற்றிலுள்ள சின்னங்களைப் பார்த்தால் கருடன் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டான். நீ விரைவில் இங்கிருந்து புறப்படு.
என்று அருளினான்.

காளியனும் அவனது மனைவியரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

உயர்ந்த மாலைகள், ரத்தினங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றைக் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்தனர். பின்னர் கண்ணனை வலம் வந்து வணங்கிவிட்டுத் தன் மனைவி, சுற்றங்களுடன் தன் இருப்பிடமான  ரமணகத் தீவிற்குப் புறப்பட்டான் காளியன். யமுனை நதி் விஷம் நீங்கி அமுதநீராய்ப் பாயலாயிற்று.

பரீக்ஷித் உடனே‌ கேட்டான்.
மஹரிஷீ! காளியன் ரமணகத் தீவை விட்டு ஏன் வெளியேறினான்? கருடன் ஏன் அவனைத் தொந்தரவு செய்தான்? வேறெங்காவது செல்லாமல் இந்த மடுவிற்கு காளியன் வரக் காரணம் என்ன?

சபாஷ்! மிகவும் கவனமாகக் கேட்கிறாய் அரசனே! என்று மகிழ்வுடன் கூறிய ஸ்ரீ சுகர், தொடர்ந்தார்.

ரமணகத் தீவிற்கு உணவிற்காக கருடன் அடிக்கடி வருவான். திடீர் திடீரென்று அவன் பாம்புகளைக் கொத்திச் செல்வதால், அனைத்து பாம்புகளும் பயந்து போயின. 

எனவே ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று  பூக்காமல் காய்க்கும் ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் கருடனுக்கு தாங்களே முன்வந்து உணவு வைப்பதாகவும், மற்ற நாள்களில் தங்கள் தீவிற்கு வரக்கூடாதென்றும்  ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அதன்படி எல்லா நாகங்களும் கருடனுக்குத் தத்தம் பலியைக் கொடுத்துவந்தன. காளியன் மட்டும் தன் விஷத்தின் தன்மையால் மிகுந்த செருக்கு கொண்டிருந்தான். எனவே கருடனின் பலியைத் தானே சாப்பிட்டு வந்தான்.

இதனால் கோபமடைந்த கருடன் காளியனைத் தாக்கினான். காளியன் தீப்பொறி பறக்க கருடனைக் கடித்தான். பேராற்றலும் கடும் வேகமும் கொண்ட கருடன், உருக்கிய தங்கம் போல் ஒளிவீசும் தன் இடது இறக்கையால் காளியனைக் கடுமையாகத் தாக்கினான். உயிருக்கு பயந்து காளியன் அங்கிருந்து வெளியேறினான். 

ஒரு சமயம் கருடன் யமுனையின் மடுவில் மீனைக் கொத்திக்கொண்டு பறந்தான். அப்போது நீருக்குள் இருந்த சௌபரி மஹரிஷி, மற்ற மீன்கள் பயப்படுவதைப் பார்த்து அவற்றின் மீது கருணை கொண்டார். 

இனி கருடன் இங்கு வாழும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் நோக்குடன் வருவானாகில் அவனது உயிர் போகும் என்று சபித்தார். 

சௌபரி மஹரிஷியின் சாபத்தை அறிந்த காளியன், யமுனையின் மடுவில் ஒளிந்தால் கருடனால் தீங்கு நேராதென்று மடுவிற்கு வந்து வாழலானான்.

இன்று கண்ணன் காளியனின் பயத்தைப் போக்கியதோடு, அவனிடமிருந்து மடுவையும் காத்தான்.

ஏராளமான கண்ணைக் கவரும் விலை உயர்ந்த ரத்தினங்களையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு வந்த கண்ணனை கோகுல வாசிகள் அனைவரும் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..