Wednesday, September 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 573

நிமிச் சக்ரவர்த்தி நடத்திய ஸத்ர யாகத்திற்கு நவ யோகிகள் எதேச்சையாக வந்தனர்.

நவயோகிகளிடம் பாகவத தர்மத்தை எடுத்துக்கூற வேண்டி நிமிச் சக்ரவர்த்தி கேட்டார்.

நவ யோகிகளுள் ஒருவரான கவி என்பவர் பதிலிறுத்தார்.

பகவான் தன் 
அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை.  பகவானின் திருவடியை எப்போதும் பற்றிக்கொள்பவர்களுக்கே நிரந்தரமான பேரானந்தம் சாத்தியமாகிறது.

நான் எனது என்ற அஹங்கார, மமகாரங்களும் இறைவனின் திருவடியைப் பற்றுவதால் விலகிப்போகின்றன. அவர்களுக்கு உலகப்பொருள்களில் வெறுப்பு உண்டாகிறது. இதையே பகவான் பகவத் கீதையிலும் சொல்கிறான்.

அத்தகைய அடியார்களுக்கு எல்லாப் பொருள்களும் பரமாத்மாவின் வடிவங்களாகவே தெரிகின்றன.

பாமரர்களும் தன்னை எளிதில் அடைவதற்காக பகவான் தன் வாயாலேயே கூறியருளிய மார்கம் இந்த பாகவத தர்மம்.

இதைக் கடைப்பிடிப்பவர்க்குத் துன்பங்களே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ஓடினாலும் கீழே விழமாட்டார். பாதை தவறமாட்டார். நிச்சயமாகப் பலனை அடைந்துவிடுவார். அவர்கள்  எப்போதாவது விதிமுறைளிலிருஎது விலகினாலும் அது அவர்களைப் பாதிக்காது.

தன்னுடைய உடல், சொல், மனம், புலன்கள் புத்தி, தன்முனைப்பு, இயல்பு, அனைத்தினாலும் செய்கின்ற எல்லாச் செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிடுவதே எளிய வழி.

பகவானைத் தவிர வேறு பொருளில் நாட்டம் வருமானால் அது அச்சத்திற்கு வழி வகுக்கும்‌. அவர்கள் தங்களுடைய உண்மைத் தோற்றத்தை மறந்துபோகிறார்கள்.

கனவுக்காட்சிகள் அனைத்தும் பொய்த்தோற்றம் என்பது விழித்ததும் தெரியும். அதைப்போலவே விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் காணும் பொருள்களும் தோற்றமும் பொய்யானவை‌. எனவே அவற்றில் சிக்கித் தவிக்கும் புத்தியின் எண்ண ஓட்டத்தை நிறுத்துவதே தெளிந்த ஞானம் பெறும் வழி.

பகவான் இவ்வுலகில் பிறந்து பற்பல லீலைகளைச் செய்துள்ளார். அவற்றைக் குறிக்கும் பல்வேறு பெயர்களும் அவருக்கு ஏற்பட்டுள்ளன. மங்களமயமான அத்திஉப்பெயர்களைக் கேட்டும் பாடியும் பரவியும் அனுபவிக்க வேண்டும். 

நாமகீர்த்தனம் செய்பவரின் உள்ளம் கனிந்து கசிந்து கொஞ்சம் கொஞ்சமாக பகவானின் பேரன்பை உள்ளத்தில் நிரப்பி விடுகிறது. அதன் விளைவாக அவர் சில சமயங்களில் உலக இயல்புக்கு மாறாக நடக்க்கக்கூடும். பக்தி மேலீட்டால் ஆடுவார், பாடுவார், கூவுவார், பித்து பிடித்தவர் போல் அலைவார்.

ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம், விலங்குகள், ஜீவன்கள், திசைகள், மரம், செடி கொடிகள், ஆறு, கடல் ஆகிய அனைத்துமே பகவானின் உருவங்களே. எனவே எதைக் கண்டாலும் பகவானின் நினைவு வரவேண்டும். காக்கைச் சிறகினில் நந்தலாலாவைக் கண்டார் நமது முண்டாசுக் கவி.

பக்தி, பகவத் தரிசனம், எல்லாப் பொருள்களிலும் பற்றை விடுதல் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நிகழும். அதாவது பக்தி பூரணமாக சித்திக்கும் அதே கணத்தில் பகவத் தரிசனம் ஏற்படும். அப்போதே பற்றுகள் விடும். எப்படியெனில், உணவை உண்ணும்போதே, த்ருப்தி ஏற்படுகிறது, அதே நேரத்தில் பசி நீங்குகிறது, உடலுக்கு சக்தி கிடைக்கிறது, ருசியும் உணரமுடிகிறது. அனைத்தும் உணவை உண்ணும் அதே நேரத்தில் நிகழ்கின்றன.

இத்தகைய பக்தர் பகவானுக்கு மிகவும் பிரியமானவர். அவர் பேரமைதியை அடைந்து அதை ஆழ்ந்து அனுபவிக்கிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, September 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 572

ராஜரிஷியாக விளங்கிய பரதன் புவி முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்டான். பகவானைச் சிறப்பாக பக்தி செய்து, தவம் செய்வதற்காக அரசைத் துறந்து கானகம் ஏகினான். அங்கே ஒரு மானால் சஞ்சலம் அடைந்து பின்னர் மூன்றாவது பிறவியில்  ஜடபரதர் என்ற மஹாஞானியாகப் பிறந்து பகவானை அடைந்தான்.

ரிஷபதேவரின் நூறு மகன்களில் ஒன்பது பேர் பாரத வர்ஷத்தைச் சுற்றியிருக்கும் ஒன்பது தீபகற்பங்களுக்குத் தலைவர்களானார்கள். எண்பதோரு பேர் கர்மவழிச் செல்லும் வைதிகர்கள் ஆனார்கள்.

 மீதியுள்ள ஒன்பது பேர் அனைத்தையும் துறந்து திகம்பரர்கள் ஆனார்கள். அவர்களின் பெயர்கள் கவி, ஹரி, அந்தரிக்ஷர், ப்ரபுத்தர், பிப்பலாயனர், ஆவிர்ஹோத்ரர், த்ருமிளர், சமஸர், கரபாஜனர் ஆகியவை.

அவர்கள் இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் பகவானாகவே கண்டனர். தங்களை உலகிற்குத் தொடர்பில்லாதவர்களாக எண்ணாமல் அனைத்துமே பகவான் என்றெண்ணியதால் சுதந்திரமாகச் சுற்றி வந்தனர்.

மூன்று உலகங்கள், ஸித்த, சாரண, கந்தர்வ, வித்யாதர லோகங்களிலும் சஞ்சாரம் செய்தனர்.

ஒரு சமயம் அஜநாபம் என்றழைக்கப்படும் இந்த பாரத வர்ஷத்தில் விதேக அரசனான நிமிச் சக்ரவர்த்தி ஒரு ஸத்ர யாகம் நசத்தினார். இந்த ஒன்பது யோகீஸ்வரர்களும் தன்னிச்சையாக அந்த யாக சாலையில் ப்ரவேசித்தனர்.

தன்னொளி வீசும் அவர்களைக் கண்டதுமே அவர்கள்  ஞானிகள் என்பது அனைவர்க்கும் தெளிவாக  விளங்கிற்று.

வேள்வியின் தலைவரான நிமி, அக்னி குண்டத்தில் எழுந்தருளியிருந்த அக்னி தேவர், மற்றும் ரித்விக்குகள் அனைவரும் அவர்களைக் கடதும் உடனே எழுந்து நின்றனர். 

ஏதாவது ஸத்காரியம் நடக்கும்போது அவ்விடத்திற்கு ஒரு மஹாத்மா முன்னறிவிப்பின்றி எதேச்சையாக வந்தால், அக்கர்மத்தினால் இறைவன் மகிழ்ந்தான் என்றும் அது ஸபலமாயிற்று என்றும் கொள்ளவேண்டும். 

இங்கே ப்ரும்மஞானிகளான நவயோகிகளைப் பார்த்ததும் நிமி மிகவும் மகிழ்ந்தார்‌. ஓடோடிச்சென்று அவர்களை வணங்கி, வரவேற்று ஆசனமளித்தார்.

பின்னர் அவர்களைப் பார்த்துக் கூறினார்.

நீங்கள் பகவானின் பிரியமான தொண்டர்கள் என்றறிகிறேன். ஹரியின் பக்தர்கள் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்துவதற்காகச் சுற்றி வருகின்றனர்.

இந்த மானுடப் பிறவியே மிகவும் அரிதானது. மிகவும் குறைவான காலமே நிலைக்கக்கூடியது. இக்குறுகிய வாழ்வில் பகவானின் தரிசனம் கிடைப்பது அரிது. அதனினும் அரிது பகவானின் தொண்டர்களின் தரிசனம். தங்களைப் போன்றவர்களுடன் அரை நொடி நேரம் ஸத்சங்கம் கிடைத்தாலும் அது மாபெரும் நிதியாகும்‌. அழிவற்ற தன்மையை அடையும் வழியை எடுத்துக்கூறும்படி தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பாகவத தர்மத்தைக் கேட்டு அதன்படி நடந்தால் பகவான் அவர்க்குத் தன்னையே தந்துவிடுவார். அத்தகைய பெருமை வாய்ந்த விஷயத்தைக் கேட்கும் தகுதி எனக்கு இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் எனக்கு விளக்கியருளுங்கள் என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, September 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 571

மூவுலகிலும் சஞ்சாரம் செய்யும் நாரதர் அடிக்கடி துவாரகையில் வந்து தங்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு சமயம் துவாரகை வந்த நாரதர், வசுதேவரின் வீட்டிற்குச் சென்றார். வசுதேவர் அவரை முறைப்படி வரவேற்று உபசரித்தார்‌. பின்னர் அவரிடம் கூறினார்.

மஹரிஷீ! தாங்கள் பகவானின் வழியைப் பின்பற்றுகிறீர்கள். தங்கள் வருகை அனைவர்க்கும் நன்மை செய்யக்கூடியது.

தேவதைகள் உடனுக்குடன் அருள்கின்றனவோ இல்லையோ, தங்களைப்போன்ற மஹான்களின் அருளைப் பெறுவது எளிது. அது பகவானிடம் ஒரு ஜீவனை அழைத்துச் சென்றுவிடுகிறது.  
பிற தெய்வங்கள் வழிபாட்டுக்கேற்ப  அருள்பவை. ஆனால் ஸாதுக்களோ காரணமே இன்றி கருணை பொழிபவர்கள்.

எல்லா பயங்களிலும் விடுவிக்கும் பாகவத தர்மத்தை எனக்கு உபதேசிக்கும்படி வேண்டுகிறேன்.

முன்பொரு சமயம் நான் பகவானை ஆராதனம் செய்தேன். முக்தியைக் கொடுக்க வல்ல அவரிடம் போய் பிள்ளைப்பேறு வேண்டும் என்று கேட்டேன். அப்போது தேவமாயை என்னை மயக்கியிருந்தது‌.

தவ ச்ரேஷ்டரே! இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்கள் கூட சில சமயம் இன்பமளிப்பவை போல் ஏமாற்றுகின்றன. நிச்சய இன்பத்தைத் தரும் முக்தி மார்கத்தை எனக்குக் கூறியருளுங்கள். என்றார்.
இதைக் கேட்டதும் நாரதர், பகவானின் கல்யாண குணங்களை எண்ணி பரவசத்துடன் மெய்மறந்தார். பின்னர் மெதுவாகப் பேசத் துவங்கினார்.

யதுகுலோத்தமரே! உலகனைத்திற்கும் நன்மை பயக்கும் பாகவத தர்மத்தைக் கேட்டீர்கள்.

பாகவத தர்மத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும், மனப்பூர்வமாக அனுசரிப்பதாலும் அந்த நொடியே ஒரு ஜீவன் புனிதமடைகிறான். எவ்வளவு தீயவனாக இருப்பினும் அவன் உடனேயே தூய்மையாகிவிடுகிறான். 

மங்கள மயமான பகவானின் நாமங்களை உச்சரிப்பது, கேட்பது, ஆகியவை பெரும் புண்ணியம் தருபவை. அத்தகைய பகவான் நாராயணனை எனக்கு நீங்கள் நினைவுபடுத்தினீர்கள்.

இது விஷயமாக ஒரு பழைய நிகழ்வைக் கூறுகிறேன்.

விதேக நாட்டு மன்னர் நிமி (அவரது சரித்ரம் முன்பு கூறப்பட்டது.)  என்பவருக்கு நவ யோகிகள் என்றழைக்கப்ப்டும் ரிஷபதேவரின் புதல்வர்கள் கூறிய விஷயம்தான் இவை.

ஸ்வாயம்புவ மனுவின் மகன் ப்ரியவ்ரதன். அவருடைய மகன் ஆக்னீத்ரன். அவருடைய மகன் நாபி. நாபியின் புதல்வர் பகவான் ரிஷபதேவர்.

பகவான் வாசுதேவனின் அம்சமாகப் பிறந்தவர் ரிஷபதேவர். அவருடைய மகன்கள் நூற்றுவர். அவர்களுள் முதல்வன் பரதன். என்பவன். பெரிய பக்தனாகவும், ஞானியாகவும் விளங்கினான். அவனுடைய பெயரிலேயே இந்த தேசம் பாரத வர்ஷம் என்றழைக்கப்படுகிறது.‌

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, September 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 570

முனிவர்களின் சாபத்தைக் கேட்டதும் பயந்துபோனார்கள் யாதவ இளைஞர்கள். உடனே சாம்பனின் வேஷத்தைக் கலைத்து வயிற்றில் சுற்றியிருந்த துணியை நீக்கினால் அதனுள் நிஜமாகவே ஒரு இரும்பு உலக்கை இருந்தது.

ஐயகோ!  நமக்குக் கெட்டகாலம் வந்துவிட்டது போலும். பெரிய தவறு செய்தோம். என்று அரற்றிக்கொண்டு வருத்தத்துடன் அனைவரும் வீடு திரும்பினர்.

மறுநாள் நேராக உக்ரசேனரின் அவையில் கொண்டுபோய் உலக்கையை வைத்தனர். நடந்த அனைத்து விஷயங்களையும் ஒளிக்காமல் கூறினார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு அத்தனை பேருக்கும் கிலி பிடித்துக்கொண்டது. அந்தணர் சாபம் பொய்க்காது என்று பயந்தார்கள்.

உக்ரசேனர் அவ்வுலக்கையைப் பொடிப்பொடியாக நொறுக்கி கடலில் வீசக் கட்டளையிட்டார். இது விஷயமாகக் கண்ணனுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

ஒருக்கால் கண்ணனிடம் தெரிவித்திருந்தால் வேறு உபாயம் செய்திருப்பானோ என்னவோ. எல்லாவற்றையும் ஓடி ஓடி கண்ணனிடம் முதலில் தெரிவிக்கும் அவர்களுக்கு இவ்விஷயத்தைச் சொல்லவேண்டாம் என்று தோன்றியதும் அவனது சங்கல்பமே.

இரும்புத்தூள்கள் கடலில் கரையுமா என்ன?
சில நாள்களுக்குப் பின் அவை மிதந்து கரை ஒதுங்கின‌. அவைகளிலிருந்து ஒரு விதமான கோரைப்புற்கள் தோன்றின. அவ்விரும்புத் துகளுள் ஒன்றை ஒரு மீன் விழுங்கியது.

அந்த மீன் ஒரு மீனவனின் வலையில் சிக்கியது‌. அதை அவன் சந்தையில் விற்கப் புகுந்தான். அதை ஒரு வேட்டைக் காரன் வாங்கினான். அவன் வீட்டுக்குச் சென்று மீனை அறுத்ட்கபோது அதன் வயிற்றில் மிகவும் கூரான ஒரு இரும்புத்துகளைக் கண்டான். அதை எடுத்துத் தன் அம்பில் பொருத்திக்கொண்டான்.

அனைத்தையும் கண்ணன் அறிந்தே வாளாவிருந்தான். அந்தண சாபத்தை மாற்றி அமைக்கும் திறன் இருந்தும், கால வடிவம் எடுத்தவனாய் அழிக்கும் சக்தியாய் பூபாரத்தைக் குறைக்கவேண்டி பேசாமல் இருந்தான். அந்தண சாபத்தை ஒரு காரணமாக வைத்து யாதவ குலத்தை அழிக்க முடிவுசெய்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, September 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 569

கண்ணன் பலராமனுடன் சேர்ந்து அசுரர்களைக் கொன்று பூமியின் பாரத்தைக் குறைத்தான். மேலும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே யுத்தத்தை வரவழைத்து ஒரு பெரும் கூட்டத்தை ஒரே இடத்தில் கூட்டி அனைவரையும் அழித்தான் கண்ணன்.

பல்கிப்‌பெருகியிருந்த  யாதவ வீரர்களின் கூட்டம் எவராலும் வெல்ல இயலாததாய் விளங்கியது. அவர்களையும் அழித்தாலொழிய பூமியின் சுமை குறையாது என்றெண்ணினான் கண்ணன்.

என்னைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவர்களது வீழ்ச்சி சாத்தியமில்லை. ஆனால் அளவற்ற வீரம், மற்றும் செல்வத்தால் கட்டுப்பாடின்றி நடக்கத் துவங்கிவிட்டார்கள்.
எவருக்கும் பணிவோ, அடக்கமோ இல்லை. எதிர்க்க ஆளில்லாததால் மதர்த்துப் போயிருந்தார்கள்.

இவர்களை என்ன செய்வது என்று யோசித்த கண்ணன் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசி காடே தீப்பிடிப்பது போல், இவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டால்தான் உண்டு என்றெண்ணினான்.

அந்தணர்களின் சாபத்தை ஒரு காரணமாக வைத்து தன் இனத்தையே மொத்தமாக அழித்தான்.

தன் எல்லையற்ற புகழைப் புவியில் பரவச் செய்தான். வருங்கால மக்கள் அதைக் கேட்டும் பாடியுமே கண்ணனின் திருப்பாதங்களை அடைந்துவிடமுடியும் என்பதால் தானும் பரமபதத்திற்கு எழுந்தருளினான்.

பரீக்ஷித் கேட்டான்.
முனிச்ரேஷ்டரே! யதுகுலத்தவர்கள் அந்தணர்களிடம் பெருமதிப்பு கொண்டவர்களாயிற்றே. அவர்களுக்கு எவ்வாறு அந்தண சாபம் ஏற்பட்டது?

ஸ்ரீ சுகர் பரீக்ஷித்தின் ஆர்வத்தை மெச்சிவிட்டுக் கூறத் துவங்கினார்.

கண்ணன் அழகனைத்திற்கும் கூடாரமாக விளங்குபவன். அவனுக்கென்று தனி விருப்பங்கள் ஏதுமில்லை. பூபாரத்தைக் குறைக்கும் பணியில் யாதவ வீரர்கள் கூட்டம் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஒருநாள் முனிவர்கள் அனைவரையும் பிண்டாரகம் என்னும் ப்ரபாஸத்தில் போய்த் தங்குமாறு செய்தி அனுப்பினான். கண்ணனின் வேண்டுகோளை ஏற்று விஸ்வாமித்திரர், அஸிதர், கண்வர், துர்வாஸர், பிருகு, ஆங்கீரஸ், கச்யபர், வாமதேவர், அத்ரி, வஸிஷ்டர், நாரதர் ஆகியோர் ப்ரபாஸம் சென்று அங்கே சில காலம் வசித்தனர்.

ஒருநாள் யதுகுலத்தின்  விளையாட்டுப்பிள்ளைகள் சிலர் முனிவர்கள் இருக்கும் இடம் சென்றனர். அவர்களைப் பார்த்ததும் ஏதாவது விஷமம் செய்யலாம் என்று தோன்றியது.

அவர்களுள் ஜாம்பவதியின் மகனான சாம்பன் முருகனின் அம்சமாகப் பிறந்தவன். மிகவும் அழகாக இருப்பான். அவனுக்குப் பெண் வேடமிட்டு முனிவர்கள் எதிரே அழைத்துப் போனார்கள்.

ரிஷிகளை நமஸ்காரம் செய்து, முனிச்ரேஷ்டர்களே! இவள் கர்பம் தரித்திருக்கிறாள். தானே கேட்பதற்கு வெட்கப்படுகிறாள். இவளுக்கு ஆண் மகன் பிறப்பானா? பெண் மகவா? தங்கள் தவ வலிமையால் கண்டு சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.

வேண்டுமென்றே விஷமம் செய்ய வந்த இளைஞர்களைக் கண்டு முனிவர்களுக்கு கோபம் வந்தது.

முட்டாள்களே! இந்தப் பெண்ணால் உங்கள் குலம் அழியப்போகிறது. இவள் வயிற்றில் ஒரு உலக்கைதான் பிறக்கும் என்றனர்‌ முனிவர்கள்.

விளையாட்டிற்காகக் கூட ஸாதுக்களிடம் அபசாரப் படலாகாது. அவர்களது கோபம் குலநாசம் செய்யும் என்பதற்கான சான்று இது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 568

ஸ்ரீ சுகர் கூறலானார்

ஹே அரசனே! 
ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைச் சுத்தம் செய்த தீர்த்தமான கங்கை எல்லாத் தீர்த்தங்களையும்  விட உயர்ந்தது. ஆனால் யது வம்சத்தில் பிறந்த கண்ணனின் புகழ் எல்லா உயர்ந்த விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

தேவதைகள் உள்பட அனைவரும் திருமகளை அடைய முயற்சிக்கின்றனர். ஆனால், அவளோ கண்ணனின் பாதசேவையை விரும்புகிறாள்.

கண்ணனின் திருநாமம் ஒரு முறை சொன்னாலும், சொல்லக் கேட்டாலும் எல்லாப் பாவங்களையும் போக்கிவிடுகிறது. 

இரண்டு பரார்த்த அளவு நீளமுள்ள காலசக்கரத்தைக் கையில் தாங்கும் பகவானுக்கு பூபாரம் களைவது ஒரு பெரிய வேலையா?

கண்ணனே அனைத்துயிர்களிலும் உள்ளும் புறமுமாகப் பரவி நிற்கும் பரம்பொருள். அனைத்திற்குமான புகலிடம் கண்ணனே. கண்ணனின் கிங்கரர்களான யாதவ வீரர்கள் தம் தோள் வலியாலேயே தீமைகளைக் களையவல்லவர். கண்ணன் வேறுபாடுகள் அற்றவர். தன் தாமரை முகத்தின் புன்சிரிப்பால் அனைவரையும் கவர்பவர்.

தான் வகுத்த அறநெறியைக் காக்கத் திருவுளம் கொண்டு லீலையாக அவதாரம் செய்தவர். அவரது லீலைகளை நினைப்பவரின் மூன்றுவிதமான கர்மவினைகளும் நீங்கும்.

ஒவ்வொரு நொடியும் ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு  இறைவனின் புகழைக் கேட்டு, பாடி, நினைத்து அதிலேயே மூழ்குகிறானோ அவ்வளவுக்கவ்வளவு பக்தியைப் பெற்று பரமபதத்தை அடைகிறான்.

எனவே கண்ணனின் கதையமுதத்தைச் செவியாறப் பருகுவதே முக்தியின்பத்தை அடையச் சுலபமான வழி என்றார்.

இத்துடன் ஸ்ரீமத் பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் முற்றிற்று.

தொண்ணூறு அத்யாயங்களைக் கொண்ட இந்தப் பத்தாவது ஸ்கந்தம் முழுக்க முழுக்க கண்ணனின் கதையை மட்டுமே கூறுகிறது. 

இதை ஆச்ரயம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர் பெரியோர்.

அனைவரும் தஞ்சமடையத் தக்கது கண்ணனின் லீலைகளைக் கூறும் இந்தப் பத்தாவது ஸ்கந்தமே என்று பொருள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 567

கண்ணன் தர்மத்திற்கு விரோதமாக நடந்த அரசர்களைத் தானேயும், சிலரை அர்ஜுனனைக் கொண்டும் அழித்தான். 

துவாரகையில் மேலும் சில ஆண்டுகள் மனைவிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வசித்தான். அவனது மனைவிகள் அனைவரும் கண்ணன் மேல் பித்துப் பிடித்தவர்களாக, மிகவும் ஒற்றுமையுடன் எப்போதும் கண்ணனின் புகழைப் பாடிய வண்ணமே இருந்தனர். 

ஒவ்வொரு மனைவிக்கும் பத்து புதல்வர்கள் பிறந்ததை முன்பே பார்த்தோம். அவர்களுள் 18 பேர் மாபெரும் வீரர்கள்.

அவர்களது பெயர்களாவன, 
ப்ரத்யும்னன், அநிருத்தன், தீப்திமான், பானு, சாம்பன், மது, ப்ருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஹு, ச்ருததேவன், ஸுநந்தனன், சித்ரபாஹு, விரூபன்(வரூதன்), கவி, ந்யக்ரோதன் ஆகியவை.

இவர்களுள் ருக்மிணியின் ப்ரத்யும்னன் தந்தையைபோலவே எல்லா குணங்களும் பொருந்தியவனாக இருந்தான். ருக்மியின் மகள் அவனது மனைவியானாள். அவர்களது மகன் அநிருத்தன் மாபெரும் பலசாலியாக விளங்கினான். 

அவன் ருக்மியின் மகன் வயிற்றுப் பேத்தியை மணந்தான். அவனது மகன் வஜ்ரன். அந்தணர்களின் சாபத்தால் உலக்கையைக் காரணமாகக் கொண்டு அழிந்த யாதவர்களுள் இவன் ஒருவனே மிஞ்சினான்.

வஜ்ரனின் மகன் ப்ரதிபாஹு. அவனது புதல்வன் ஸுபாஹு. ஸுபாஹுவின் மகன் சாந்தஸேனன். அவனது புதல்வன் சதஸேனன்.

இந்த வம்சத்தில் வந்த அனைவருமே பெரும்‌செல்வம் நிரம்பியவர்களாகவும், நிறைய கல்வியறிவு படைத்தவர்களாகவும், பேராற்றலுடையவர்களாகவும், நீண்ட ஆயுள் கொண்டவர்களாகவும், அந்தணர்களிடம் மிகுந்த அன்புடையவர்களாகவும் இருந்தனர்‌.

யது குலத்தில் எண்ண இயலாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான இணையற்ற வீரர்கள் இருந்தனர். அவர்களுள் ஆயிரம் பேருக்கு ஒரு ஆசார்யர் வீதம் மூன்று கோடியே எண்ணாயிரத்து ஐநூறு ஆசார்யர்கள் இருந்தனர். 

உக்ரசேனரின் வம்சாவளியே பத்து லட்சம் கோடி. தேவாசுர யுத்தத்தில் இறந்துபட்ட பல கொடிய அசுரர்கள் மீண்டும் பூமியில் பிறந்து மக்களைத் துன்புறுத்தலாயினர். அவர்களை அழிப்பதற்காக பகவானின் கட்டளையை ஏற்ற தேவர்கள் யது வம்சத்தின் நூற்றியோரு பிரிவுகளில் பிறந்தனர். அனைவர்க்கும் கண்ணன் ஒருவனே தெய்வமாக விளங்கினான். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையிலும் முன்னேறியவர்களாக இருந்தனர்.

மனம், வாக்கு, செயல் அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்து அசனது ஏவல் ஒன்றையே ஏற்று, அவன் புகழைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தம்மை மறந்து ஆனந்த வாழ்வில் லயித்திருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, September 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 566

ஒளிமயமாக இருக்கும் அவ்விடத்தில் நுழைந்ததும் மிகவும் கூசவே, கண்களை மூடிக்கொண்டான் அர்ஜுனன். பின்னர் பழகப் பழக மெதுவாகக் கண்களைத் திறக்க, ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி! 

பேரலைகள் மிகுந்த பெருங்கடலின் நடுவில் தங்க மயமான ஒரு மாளிகை இருந்தது. தேரிலிருந்து இறங்கி அர்ஜுனனை அழைத்துக்கொண்டு உள்நுழைந்தான் கண்ணன்.

ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தூண்களைக் கடந்து, உள்ளே சென்றனர்.

பளபளவென்ற திருமேனியுடன், மிகவும் பயங்கரமாக, ஆயிரம் தலைகளிலுள்ள பெரிய படங்களிலும் நாகரத்தினங்கள் ஒளிர, இரண்டாயிரம் கண்களும் அக்னிப் பிழம்புகள் போலிருக்க, வெள்ளிமலை போன்ற உடலும், கறுத்த கழுத்தும் உடைய பகவான் ஆதிசேஷன் வீற்றிருந்தார்.

அவரை மெத்தென்ற இருக்கையாகக் கொண்டு பரமபுருஷனான பகவான் அமர்ந்திருந்தார்.

மழைமேகம்போல் கறுத்த திருமேனி, மஞ்சள் பட்டாடை, காது வரை நீண்ட அழகிய திருக்கண்கள், ரத்தினக் கிரீடம், குண்டலங்கள் கன்னத்தில் பளீரிட, சுருண்ட கேசம் நெற்றியில் தவழ, மலர்ந்த திருமுகம், முழங்கால் வரை நீண்ட எட்டு திருக்கரங்கள், மார்பில் ஸ்ரீ வத்ஸம், திருக்கரங்களில் ஆயுதங்கள், அவரைச் சுற்றி நந்தன் மற்றும் ஸுநந்தன் என்ற பார்ஷதர்கள், புஷ்டி தேவி, ஸ்ரீ தேவி, கீர்த்தி தேவி, அஜை எனப்படும் மாயாதேவி ஆகிய நான்கு சக்திகள், சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றின் தேவதைகள், அனைவரும் விளங்கினர்.

ப்ரமிப்பு நீங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் அர்ஜுனன்.

தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்த பரமபுருஷனை கண்ணன் வணங்கினான். 
அவனைத் தொடர்ந்து அர்ஜுனனும் சுயநினைவு வந்தவனாக வணங்கினான்.

பரமபுருஷன் இடிபோன்ற கனத்த குரலில் பேசினார்..

உங்கள் இருவரையும் காணவே அந்தணர்களின் குழந்தைகளைக் கொண்டு வந்தேன். பூபாரம் தீர்க்கவும், தர்மத்தைக் காக்கவும் அவதாரம் செய்திருக்கிறீர்கள். சீக்கிரமாக உங்களுடைய பணிகளை முடித்துக் கொண்டு என்னிடமே வந்து சேருங்கள் என்றார்.

உலகில் தர்மத்தை ஸ்தாபிக்க நீங்கள் இருவரும் நர நாராயண ரிஷிகளாக அவதாரம் செய்யவேண்டும். 

என்றார்.

இருவரும் அப்படியே செய்கிறோம் என்று கூறி வணங்கினர். பின்னர் பரமபுருஷனிடமிருந்து அந்தணரின் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். 

வந்த வழியே மீண்டும் திரும்பி அந்தணரிடம் அவரது குழந்தைகளை ஒப்படைத்தனர். அவர்களது பிறப்பிற்கேற்றபடி வயதும், அறிவும் வளர்ந்த குழந்தைகளாக அவை இருந்தன. 

அர்ஜுனன் கண்ணனால் தான் அவ்வளவும் நிகழ்ந்ததென்று எண்ணி எண்ணி நெகிழ்ந்தான். மனிதரின் ஆற்றலுக்கப்பால் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்றெண்ணும்போது அவனுக்கு மிகவும் மலைப்பாக இருந்தது. தன்னைப்போல் சிறந்த வில்லாளன் இல்லை என்ற எண்ணத்தை அக்கணமே விட்டொழித்தான்.

இவ்வாறு கண்ணன் அறநெறிகளைப் பின்பற்றுவதில் சான்றோரைப் போலவும், அற்புதங்களைச் செய்வதில் பகவானாகவும் விளங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, September 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 565

குழந்தையைக் காப்பாற்றுகிறேன் என்று அந்தணர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத குற்றத்திற்காக தீக்குளிக்கத் தயாராக நின்றுகொண்டு அக்னியின் முன்பாக ப்ரார்த்தனை செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன்.

அதற்கு மேல் வேடிக்கை பார்க்க இயலாமல் கண்ணன் அவனருகில் சென்றான்.

அர்ஜுனா! வீணாக வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதே. இந்த மனிதர்களே இப்படித்தான். இப்போது வசை பாடுபவர்கள், உதவி செய்தால் போதும், நமது புகழைப் பாடுவார்கள். அதேபோல எவ்வளவு முறை உதவினாலும், ஒரு முறை தவறினால் திட்டித் தீர்ப்பார்கள்.

என்னுடன் வா. அந்தணச் சிறுவர்களைக் காட்டுகிறேன். என்றான்.

தன் உயிரைக் காப்பாற்ற தான் வேண்டாமலே கண்ணன் வந்ததைக் கண்டு அர்ஜுனன் வெட்கினான். அந்தணர் புலம்பும்போது, அவரிடம் சென்று வீராவேசமாய்ப் பேசுவதை விடுத்து, ஏன் வாளாவிருக்கிறாய்? என்று கண்ணனையே கேட்டிருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

கண்கள் குளமாக மௌனமாகக் கண்ணணின் பின் சென்றான்.

கண்ணன் அர்ஜுனனைத் தன் தேரிலேற்றிக்கொண்டு மேற்கு திசையில் சென்றான்.

ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் அனைத்தையும் தாண்டிச் சென்றனர்.

குற்ற உணர்வினால் அர்ஜுனன் வழியெங்கும் ஒன்றும் பேசவில்லை. எளிமையே உருவான கண்ணன், அவன் கேளாமலே ஒவ்வொரு இடத்தையும் கடக்கும்போதும் அவைகளின் பெயர்கள், மற்றும் அவற்றைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தான். ஓரளவு இயல்பு நிலைக்கு அர்ஜுனனைக் கொண்டுவரும் மனோதத்துவப் பயிற்சி அது.

ப்ரும்மாண்டத்தின் எல்லையான லோகாலோகம் என்ற மலை வந்தது. அதையும் தாண்டி அண்டத்தின் பேரிருளில் ப்ரவேசித்தான்.

கண்ணனின் குதிரைகளான சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகிய நான்கு குதிரைகளும் இருட்டில் வழி தெரியாமல் தடுமாறின.

குதிரைகள் தவிப்பதைக் கண்ட கண்ணன் கோடி சூரியப் ப்ரகாசம் கொண்ட சுதர்சனத்தை தேருக்கு முன்னால் செல்லும்படி அனுப்பினான்.

ஒளியை வீசிக்கொண்டு ராமபாணத்தைப்போல் மனோவேகத்தில் சுழன்றுகொண்டே முன்னால் சென்றது சுதர்சனம்.

கண்ணனால் படைக்கப்பட்ட அடர்த்தி மிகுந்த அந்தப் பேரிருள் பயங்கரமாக இருந்தது. அர்ஜுனனுக்கு சற்று பயமாக இருந்தது. அதை உணர்ந்த கண்ணன் இயல்பாகப் பிடிப்பதுபோல் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே அவனது கையைப் பிடித்துக்கொண்டான். அர்ஜுனனின் பயம் நீங்கியது.

அவ்விருளின் எல்லையில் கண்ணைக் கூசும் பேரொளி வந்தது. எங்கும் பரந்திருந்த அவ்வொளியைக் காணவே அர்ஜுனனால் இயலவில்லை. கைகளால் இரு கண்களையும் மூடிக்கொண்டான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 564

மனைவியின் அடுத்த பேறுகாலம் வந்ததும், அந்தணர் அர்ஜுனனுக்குத் தகவல் தெரிவித்தார். 

அர்ஜுனன் ஸ்நானம் செய்து, தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு பரமேஸ்வரனை தியானம் செய்து, தெய்வீக அஸ்திரங்களை வணங்கி, காண்டீபத்தைக் கையிலேந்திக் கிளம்பினான்.

பிள்ளைப்பேறு நடக்கும் இடத்தைச் சுற்றிலும் மேலும் கீழுமாக தன் பாணங்களால் ஒரு கூடு அமைத்தான்.

அந்தணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. சற்று நேரம் அழுகைச் சத்தம் கேட்டது. பின்னர் கண்களுக்குப் புலப்படாமல் வானில் சென்று மறைந்துவிட்டது.

அதைக் கண்ட அந்தணர் கோவென்று கதறத் துவங்கினார். இந்தப் பேடியான அர்ஜுனனைப் போய் நம்பினேனே. நான் ஒரு முட்டாள். ப்ரத்யும்னன், அநிருத்தன் பலராமன், கண்ணன் ஆகியோராலேயே இயலாத காரியம் வேறெவரால் ஆகும்?

இந்த முட்டாள் அர்ஜுனன், தெய்வம் கொண்டுபோன பொருளை மீட்கத் துணிவானோ. தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அறிவிலி. என்று கத்தினார்.

அவர் கத்திக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனன் தன் யோகசக்தியால் யமனின் நகரமான ஸம்யமனீ நகரத்திற்குச் சென்றான்.

அங்கே யமனிடம் விசாரித்தபோது, அவர் குழந்தையைத் தான் எடுத்துவரவில்லை என்று கூறினார்.

பின்னர் அர்ஜுனன் இந்திரன், அக்னி, ஸோமன், வாயு, வருணன், ஆகியோரின் நகரங்களுக்கும் தேவலோகம் முழுவதிலும் குழந்தையைத் தேடினான்.

எங்குமே குழந்தையைக் கண்டானில்லை.
மிகவும் சோர்வுற்று துவாரகை திரும்பிய அர்ஜுனன், தன் வாக்கைக் காப்பாற்றத் துணிந்தான்.

தீ வளர்த்து அதில் பாய ஆயத்தமானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 563

ஸ்ரீ சுகர் அடுத்த சரித்ரத்தைக் கூறத் துவங்கினார்.

அரசனே! ஒரு சமயம் துவாரகையில் ஒரு அந்தணர் வீட்டுக் குழந்தை பிறந்ததும் இறந்துபோயிற்று.

அந்த அந்தணர் குழந்தையின் சரீரத்தைத் தூக்கிக்கொண்டுவந்து அரண்மனையின் வாயிலில் கிடத்தி ஓலமிடத் துவங்கினார்.

என் குழந்தை இறந்ததன் காரணம் அரசன் செய்த தவறே ஆகும். பேராசைக்காரன், சிற்றின்பத்தில் மூழ்குபவன், வஞ்சகன் அந்தணரை வெறுப்பவன் ஆகியோரின் அரசாட்சியில்தான் இதுபோல் பிறந்த குழந்தை இறக்கும். 
ஒழுக்கம் கெட்டவனை அரசனாகக் கொண்ட மக்கள் தினந்தோறும் துயரக்கடலில் மூழ்குவர்.

என்று ஓலமிட்டார்.

யாரும் பதிலிறுக்காததைக் கண்டு திட்டிக்கொண்டே சென்றுவிட்டார்.

அதேபோல அடுத்தடுத்த குழந்தைகளும் இறந்துபட்டன. ஒவ்வொரு குழந்தையும் இறந்ததும் சரீரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து அரண்மனை வாயிலில் போட்டு கத்தி அழுதுவிட்டுப் போவார்.

ஒன்பதாவது குழந்தையின் மரணத்திற்கு அவர் ஓலமிடும்போது அர்ஜுனன் துவாரகையில் கண்ணனைக் காண வந்திருந்தான். அவனது காதில் இவரது அழுகைச் சத்தம் கேட்டதும், நேராக அவரிடம் வந்தான்.

எல்லாம் அறிந்த கண்ணன், பலராமன் ஆகியோர் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் காரணம் இருக்கலாம் என்று சற்றும் யோசிக்கவில்லை.

நீங்கள் ஏன் இப்படி அழுகிறீர்கள்? இவ்வூரில் க்ஷத்ரியர்கள் இல்லையா? இந்த யாதவர்களெல்லாம் அந்தணர்களா என்ன? ஒரு அந்தணன் வருந்தும்போது உதவ முன்வரவில்லையெனில் அவன் அரசன் வேடமணிந்த நடிகனேயாவான். உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன். இது சத்யம். என்னால் அது முடியாமல் போனால் தீக்குளித்து என் பாவத்தைப் போக்கிக்கொள்வேன். என்று சபதம் செய்தான்.

அதைக் கேட்ட அந்தணர், ஹே அர்ஜுனா! இவ்வூரில் கண்ணன், பலராமன், அநிருத்தன், ப்ரத்யும்னன் போன்ற சிறந்த வீரர்கள் உளர். அவர்களே இயலாதென வாளாவிருக்கும்போது நீ எவ்வாறு காப்பாற்றுவாய்? எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. வீணாக சபதமிட்டு உயிர் துறக்கப்போகிறாய். என்றார்.

சீண்டிவிட்ட பாம்பைப்போல் சீறினான் அர்ஜுனன்.

அந்தணரே! நான் கண்ணனில்லை. அவனது புதல்வனுமில்லைதான். ஆனால் பரமேஸ்வரனையும் என் தவத்தால் மகிழ்வித்தவன். என் ஆற்றல் பற்றித் தெரியாமல் இகழவேண்டாம். உங்கள் மனைவியின் அடுத்த பேறு காலம் வரும்போது எனக்குத் தகவல் தெரிவியுங்கள். என்றான்.

அந்தணரும் சற்று ஆறுதலடைந்து சரியென்று கூறிப் புறப்பட்டார்.

அனைத்தையும் உப்பரிகையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் விஷமச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, September 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 562

கைலாயத்திலிருந்து கிளம்பிய ப்ருகு மஹரிஷி நேராக ஸ்ரீ வைகுண்டம் சென்றார்.

மஹாலக்ஷ்மியின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தார் பகவான்.

வழக்கமாக ரிஷிகள் யார் வந்தாலும் எழுந்து வரவேற்பார் ஸ்ரீஹரி. ஆனால், அதற்கெல்லாம் அவகாசம் கொடாமல் வேகமாக விடுவிடுவென்று சென்று படுத்திருந்த ஸ்ரீ ஹரியின் மார்பில் ஓங்கி ஒரு உதை விட்டார் ப்ருகு.

பகவான் சட்டென்று எழுந்து மஹாலக்ஷ்மி தாயாருடன் முனிவரை வணங்கினார்.

வாருங்கள் மஹரிஷி. இப்படி அமருங்கள். என்னைப் பொறுத்தருளுங்கள். தாங்கள் வந்ததை நான் உணரவில்லை.

கடினமான பாறைபோல் இருக்கும் என் நெஞ்சில் தமது ம்ருதுவான பாதங்கள் பட்டால் நோகுமே. வலிக்கிறதா.. என்று கேட்டுப் பாதங்களைப் பிடித்து விட்டார்.

பின்னர் பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் க்ஷேத்ரங்களுக்கும் சென்று அவற்றைப் பாவனப் படுத்துகிறீர். இவ்வைகுண்டத்தில் தேவரீர் எழுந்தருளியது என் பாக்யமாகும்.‌ இன்று தங்கள் திருவடி பட்டதால் இவ்விடமே புனிதமாயிற்று. தங்கள் திருவடி பட்டதால் என் நெஞ்சில் ஏற்பட்ட மச்சத்தில் இனி மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள். என்றான் பகவான்.

பகவானின் எளிமையையும், பொறுமையையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி மேலிட, பக்தியினால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் மல்க, மேனி சிலிர்க்க பேச்சற்றுப் போய் சிலைபோல் நின்றார் ப்ருகு.

பின்னர் பகவானிடம் விடை பெற்று யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கிருந்த முனிவர்களிடம் நடந்தது அனைத்தையும் விவரித்தார்.

அவர்கள் அனைத்தையும் கேட்டு ஐயம் நீங்கி அமைதியும் பொறுமையும் உடையவர் மஹாவிஷ்ணு என்ற முடிவுக்கு வந்தனர்.

அவரிடமிருந்தே பகவத் தர்மம், ஞானம், வைராக்யம், அஷ்டமா சித்திகள், பாவமில்லாத புகழ், அனைத்தும் தோன்றுகின்றன.

தீய எண்ணமற்றவர்கள், கிடைத்ததைக் கொண்டு மனநிறைவடைபவர்கள், ஸ்வர்கம், நரகம், முக்தி ஆகியவற்றில் சம எண்ணம் உள்ளவர்கள், சூது வாது அறியாத முனிவர்கள் ஆகியோர்க்கு பகவான் ஸ்ரீஹரியே பற்றுக்கோடு ஆவார். ஸத்வ குணம் நிரம்பிய பகவானையே அவர்கள் எப்போதும் வழிபடுகிறார்கள். 

முக்குணங்கள் கொண்ட மாயை அவரது வடிவமாகவே தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள் அனைவரையும் படைத்தது. இவற்றுள் ஸத்வ குணமே பகவானை அடையும் வழி.

இவற்றை உணர்ந்தவர்தாம் அந்த முனிவர்கள். இருப்பினும், உலகின் ஐயத்தைப் போக்கவே இந்தச் சோதனையை நிகழ்த்தினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, September 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 561

அடுத்ததாக இன்னொரு சுவையான நிகழ்வை விவரிக்கத் துவங்கினார் ஸ்ரீ சுகர்.

பரீக்ஷித் ப்ராயோபவேசம் வந்து ஆறு நாள்களாகிவிட்டிருந்து. அவன் மனத்தில் ஏகாக்ர பக்தியை விதைக்க, பகவான் ஹரியின் மேன்மைகளைப் பறைசாற்றும் கதைகளாகத் தேர்ந்தெடுத்து கூறினார் போலும்.

சீடனின் மனப்பக்குவத்தை அறிந்து அதற்கேற்ப அவனை வழிநடத்திச் செல்வதே குருவின் தலையாய பணியல்லவா?

பரீக்ஷித்! ஒரு சமயம் ஸரஸ்வதி நதிக்கரையில் முனிவர்கள் ஸத்ரயாகம்‌ செய்தனர். 

யாகத்தின் விராம(இடைவெளி) காலத்தில், உறங்கக்கூடாது. அதற்காக, வேதாந்த ஸதஸ்கள், புராண ப்ரவசனங்கள், விவாதங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொள்வார்கள். அதுபோல இந்த யாகத்தின் விராமத்தில் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவருள் யார் சிறந்தவர் என்ற விவாதத்தை மேற்கொண்டனர்.

அதற்கு முடிவு எட்டப்படாததால், உண்மையை அறியவிரும்பி, ப்ரும்மாவின் புதல்வரான ப்ருகு முனிவரை அனுப்பினர்.

ப்ருகு முனிவர் முதலில் ப்ரும்மலோகம்‌ சென்றார். 

ப்ரும்மாவின் குணத்தைச் சோதிக்க விரும்பிய ப்ருகு, ப்ரும்மாவின் எதிரில் போய் நின்றார். வணங்கவும் இல்லை, துதிக்கவும் இல்லை.

ப்ரும்மாவிற்கு கடுங்கோபம் வந்தது. எட்டு கண்களும் சிவந்தன. தன்னை அவமதித்ததாக எண்ணினார். இருப்பினும் ப்ருகு அவரது மகன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் பொறுத்துக்கொண்டார். 

அதைப் புரிந்துகொண்ட ப்ருகு, ஒன்றும் பேசாமல், கிளம்பிவிட்டார். 

நேராக கைலாயத்தினுள் நுழைந்தார். ப்ருகுவைக் கண்டதும் பரமேஸ்வரன் மிகவும்‌ மகிழ்ச்சியுடன் அவரைத் தழுவுதற்காக வந்தார். ப்ருகு முனிவரோ, வேண்டுமென்றே, அவரது கைகளைத் தள்ளி, 

நீங்கள் வேதத்திற்கும் உலக நடைமுறைக்கும் ஒவ்வாத வழிச் செல்கிறீர்கள் என்றார்.

அன்புடன் அணைக்க வந்த கரத்தைத் தட்டியதோடு, குறைகாணும் சொற்களைப் பேசியதையும் கேட்டு
பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு ப்ருகுவைத் தாக்குவதற்காக சூலத்தை எடுத்தார்.

முனிவரைத் தாக்குதல் தகாது என்று பார்வதி ஓடிவந்து கணவரைச் சமாதானம் செய்தார். பாதிப்பு வருவதற்குள் ப்ருகு அங்கிருந்து நழுவிவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 560

பகவான் ஸ்ரீ ஹரி ஒரு ப்ரும்மச்சாரியின் உருவில் வ்ருகனின் முன்பு நின்றார்.

ஓ! சகுனியின் மகன்தானே நீங்கள்? 

தந்தையின் பெயரைச் சொல்லவும் சற்று நின்றான் வ்ருகன்.

என் தந்தையைத் தெரியுமா? 

தெரியுமாவாவது? சரியாகப் போயிற்று. மூச்சு வாங்குகிறது பாருங்கள். சற்று இளைப்பாறுங்கள். இப்படி உடலை வருத்திக்கொள்ளலாமா? உடல்தானே எல்லா சுகங்களையும் அனுபவிக்கக் காரணமாகிறது. 

என்று கை காட்ட, அங்கே ஒரு பெரிய கல் இருந்தது. அதன் மீது அமர்ந்தான் வ்ருகன்.

பகவான் ஹரியின் தேஜோமயமான அழகில் சற்று மயங்கிப் போயிருந்தான்.

அவன் இளைப்பாறட்டும் என்று காத்திருந்த பகவான், சற்று நேரம் கழித்து, 

எதற்காக இப்படி ஓடிவந்தீர்கள்? உங்களுக்கு விருப்பமெனில் என்னிடம் உங்களது எண்ணங்களைப் பகிரலாம்.

என்றார்.

மிகவும் இனிமையாக ஆத்ம நண்பர்போல் பகவான் கேட்கும்போது சொல்லாமல் இருக்க எவரால் இயலும்?

வ்ருகன் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறினான்.

அதைக் கேட்ட பகவான், அவர் தக்ஷனின் சாபத்தால் மயானவாசியாகிவிட்டாரே. போயும் போயும் அவர் பேச்சையா நம்புகிறீர்கள்? யாராவது எதையாவது சொன்னால் அப்படியே நம்பலாமா? சோதித்துப் பார்க்கவேண்டாமா? இவ்வளவு சிறப்பான குலத்தில் பிறந்து, பல மேன்மைகளையும் அடைந்தும் கோட்டை விட்டுவிட்டீரே. அவர் சொல்கிறபடியெல்லாம் ஒன்றும் நடவாது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் தலையில் கை வைத்துப் பாருங்கள். பிறகு தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று.

வ்ருகன் சற்று யோசிக்க, அவனுக்கு சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக அடுத்த அஸ்திரத்தை விட்டார் ப்ரும்மச்சாரி.

அவர் சொல்வது பொய் என்று நீங்கள் உணர்ந்துகொண்டால் நீங்களே அவரைக் கொன்றுவிடலாமே. அதற்காகத்தான் சொல்கிறேன். என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் வேண்டாம்.

துஷ்டர்களிடம் இனிமையாகப் பேசினால் மயங்குவார்கள் என்பதற்கேற்ப, வ்ருகன் செயல் மறந்து அந்த அழகிய மணவாளன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்படியா சொல்கிறாய்? நான் தவமெல்லாம் செய்தேனே? அத்தனையும் வீணா? இந்த வரம் மட்டும் பொய்க்கட்டும். என்ன செய்கிறேன் பார் அந்த சிவனை. என்னை ஏமாற்றுபவர் எவரும் தப்பிக்க இயலாது. நீ எவ்வளவு அழகாகப்‌ பேசுகிறாய்? நீ சொன்னால்‌ சரியாகத் தான் இருக்கும். இப்போதே என் தலையில் கைவைத்துச் சோதிக்கிறேன்.

என்று சொல்லி கையைத் தன் தலையில் வைத்தான்‌. அடுத்த கணம் எரிந்து சாம்பலாகிப் போனான்.

வானுலகத்தோர் அனைவரும் ஜெய ஜெய, நன்று நன்று என்று கோஷமிட்டுக்கொண்டு பூமாரி பொழிந்தனர். 

பரமேஸ்வரன் பகவான் ஹரியின் முன் வந்தார்.

அவரைப் பேசவிடாமல் பகவான் பேசினான்.

ஓ! தேவதேவரே! மஹாதேவரே! இவன் ஒரு மஹாபாவி. தன்னுடைய பாவங்களாலேயே அழிந்துபோனான். பரம மங்கள விக்ரஹமான தங்களுக்கு அபராதம் செய்பவன் எவ்வாறு நலமுடன் இருக்க இயலும்? 
என்றான்.

பரமேஸ்வரன் பகவான் ஹரியின் விநயத்தையும் அன்பையும் கண்டு பேச்சற்று நின்றார். இருவரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் நீங்காமல் வசிக்கின்றனர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

சைவ வைணவ ஒற்றுமையை கிரந்தம் முழுவதிலும் ஆங்காங்கே நிறுவுகிறது ஸ்ரீமத் பாகவதம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 559

 பரமேஸ்வரன் கருணை மிகுதியால் நெகிழ்ந்துபோய் பேசினார். 

அன்பனே! போதும் உன்னை வருத்திக்கொண்டது. என்னை முழுமனதாகப் பூஜிப்பவர்கள் நீரை மட்டும் அளித்தாலும் த்ருப்தியுடன் ஏற்பேன். வீணாக உன் உடலைச் சேதப்படுத்திக்கொள்ளாதே. என்ன விரும்புகிறாயோ கேள் என்றார்.

வ்ருகாசுரன் அவரது கருணையைப் புரிந்துகொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லிக்கொண்டு தெய்வம் வந்து எதிரில் நிற்கும்போது அதைவிடப் பெரும்பேறு என்ன இருக்கமுடியும். 

என்னுடனேயே இரு என்று கேட்கத் தெரியாமல், பாணாசுரன் என் நகரத்திற்குக் காவலாய் இரு என்று கங்கையைச் சிரசில் கொண்டவர்க்குக் காவல்காரவேலை கொடுத்தான்.

இந்த வ்ருகனோ, மிகவும் பைத்தியக்காரத்தனமாக நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவன் சாம்பலாகவேண்டும் என்று கேட்டான்.

பரமேஸ்வரன் அதிர்ந்தார். அவனது கீழான எண்ணத்தைக் கண்டு நொந்துபோய்த் தலையில் அடித்துக் கொண்டார்.

வளமான வாழ்வைக் கேட்காமல் பிறரின் அழிவைக் கேட்கிறானே. வாக்கைக் கொடுத்தாயிற்று. தீய எண்ணம் கொண்டவன் அதனாலேயே அழிவான் என்பது விதி என்பதால் அப்படியே ஆகட்டும் என்று அங்கீகரித்துவிட்டார். 

உடனே வ்ருகன், முதலில் உங்களது சக்தியான கௌரியை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறிக்கொண்டு பரமேஸ்வரன் தலையிலேயே கையை வைக்க ஓடிவந்தான்.

ஸத்ய ஸ்வரூபனான அவரது வாக்கு பொய்க்காது. ஆதலால் அவர் உடனே அங்கிருந்து கிளம்பினார். 

அவர் எங்கு சென்றாலும் துரத்திக்கொண்டு வந்தான் வ்ருகாசுரன்.

பரமேஸ்வரன் வைகுண்டத்தினுள் சென்றார். உள்ளே சென்ற எவரும் திரும்ப இயலாத இடம் அது. 
தனக்குத் தீங்கு செய்பவரையும் பொறுத்தருளும் ஸ்ரீஹரி பரமேஸ்வரன் வருவதையும், பின்னால் வ்ருகன் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்து அனைத்தையும் உணர்ந்துகொண்டார்.

சட்டென்று யோகசக்தியால் ஒரு இளவயது ப்ரும்மச்சாரியாக வ்ருகனின் முன் தோன்றினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 558

பரமேஸ்வரன் உடனடியாக மகிழ்ச்சியடையக் கூடியவர் என்பதற்கு உதாரணமாக வ்ருகாஸுரனின் கதையைச் சொல்வர் பெரியோர்.

சகுனி என்பவனின் (மஹாபாரத சகுனி அல்ல) புதல்வன் வ்ருகன் என்பவன். அவன் ஒரு அசுரனாவான். அவன் உலகனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆள விரும்பினான். அனைவரும் அவனைக் கண்டாலே அஞ்சி ஓடும்படி செய்தால், உலகை ஆளலாம் என்று எண்ணினான்.

அன்பினால் ஆள்பவருக்கே வெற்றி. அதிகாரத்தால் ஆள நினைப்பவருக்கு அப்போதைக்கு வெற்றி‌ கிடைத்தாலும் அது நீடிக்காது. படுகுழியில் வீழ்வர் என்பதை அவன் அறியவில்லை போலும்‌. அதிகாரம் தரும் போதை மிகக் கொடியது.

தவம் செய்து ஏதாவதொரு மாபெரும் சக்தியைப் பெற்றுவிட்டால் தன் எண்ணம் ஈடேறும் என்று எண்ணிக் கொண்டே சென்றான். அவன் செல்லும் வழியில் நாரதரைக் கண்டதும் வணங்கி, அவரிடம் கேட்டான். 

மஹரிஷீ! வணக்கம். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவருள் எந்த தெய்வம் விரைவில் மகிழ்ந்து அருளும்? 
என்று கேட்டான்.

அவருக்கு அவனது எண்ணம் புரியாமல் இல்லை. முக்காலமும் உணர்ந்த அவர் மிகவும் எச்சரிக்கையாக பதில் சொன்னார்.

வ்ருகா! பரமேஸ்வரனே விரைவில் மகிழ்பவர். விரும்பியதனைத்தையும் தருபவர். ஆனால், தவறு செய்தால் உடனே கோபிக்கவும் செய்வார். அவரிடம் அபசாரப் பட்டால் அழிவு நிச்சயம். 

ராவணனும் பாணனும் அவரைத் துதிபாடகர்கள்போல் விடாமல் துதி செய்து பெருஞ்செல்வம் பெற்றனர். அதனால் அவருக்குச் சங்கடம் உண்டாயிற்று. பின்னர் அதிகாரத்தினால் அவரையே அவமதித்து அழிவைத் தேடிக்கொண்டனர்.

என்றார். 

அவரை வணங்கிவிட்டுக் கிளம்பிய வ்ருகன் நேராக கேதாரம் சென்றான். அங்கே ஒரு அக்னிகுண்டம் மூட்டி, தன் உடலின் அங்கங்களையே அறுத்து ஹோமம் செய்து பரமேஸ்வரனை வழிபட்டான். 

ஆறுநாள்கள் அவ்வாறு பூஜை செய்தும் பரமேஸ்வரன் தரிசனமளிக்காததால், ஏழாவது நாள், கேதாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி, தனது ஈரத்தலையை வெட்டி அக்னியில் போட்டு ஹோமம் செய்யத் துணிந்தான்.

அவனது உயிர்போகும் தறுவாயில், தற்கொலை செய்துகொள்பவனைக் காக்கும் கருணையுடன் பரமேஸ்வரன் தோன்றினார். அவன் அக்னி குண்டத்திலிருந்து மற்றொரு அக்னியைப் போல் காட்சியளித்தார். தன் திருக்கரங்களால் அவன் கரங்களையும் தலையையும் பிடித்து அறுபடாமல் காத்தார். பரமேஸ்வரனின் திருக்கரம் பட்டதும் அவனது தலை முன்போலாயிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, September 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 557

ஸ்ரீ சுகர் கூறலானார்.

படைப்பின் தத்துவங்களில் முதலில் தோன்றியது அஹங்கார தத்வம். அதன் தலைவர் பரமேஸ்வரன். அது வைகாரிகம்,‌ ராஜஸம், தாமஸம் என்று மூவகையாகப் ‌பிரிகிறது.

மனம், செயற்புலன்கள் ஐந்து, அறிவுப் புலன்கள் ஐந்து, ஐம்பெரும்பூதங்கள் ஆகிய பதினாறும் அஹங்கார தத்துவத்தின் மாறுபாடுகளே. இவற்றின் அதிஷ்டான தேவதைகளின் எந்த சக்தியை உபாசனை செய்தாலும், எல்லா செல்வங்களும் கிடைக்கும். 

மூல தத்வமான ஆதிசக்தியுடன் கூடிய பரமேஸ்வரனையும், வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.

பகவான் ஸ்ரீ ஹரியோ, குணங்களற்ற நிர்குணர். ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவர். எல்லா உள்ளங்களிலும் சாட்சியாகவும், ஆன்மாவாகவும் உறைந்தபோதும், எதிலும் படாமல் பூரண ப்ரும்மமாகத் தனித்து நிற்பவர். அவரை வழிபடுபவனும் நிர்குணன் ஆகிறான். 

தன்னை வணங்கும் ஜீவனின் பிறவிச்சுழலை அறுக்க, ஆசைகளை நிறைவேற்றுவதுபோல் நிறைவேற்றி, பின்னர் ஆசைகளே எழாமல் செய்து விடுகிறார். அனைத்தையும் துறக்கும் முடிவில் ஜீவன் பரமஹம்ஸனாகிறான்.

இதே கேள்வியை முன்பு உன் தாத்தா தர்மபுத்திரர் அஸ்வமேத யாகம் முடிந்ததும் கண்ணனிடமே கேட்டார். அதற்கு கண்ணன் கூறிய பதில் யாதெனில்,

நான் யாருக்கு அருள்புரிய விரும்புகிறேனோ, அவன் அனைத்து செல்வங்களையும் இழந்து, உறவுகளையும் இழந்து, மீண்டும் செல்வம் சேர்க்கப் பலமுறை முயன்று தோற்றுப்போய், முடிவில் என் பக்தர்களின் சங்கத்தை அடைவான். அப்போது அவனுக்கு நான் அருள் புரிவேன். ஸாதுசங்கத்தை அடைந்ததும் அவனுக்கு எல்லா செல்வங்களும் சேர்ந்தபோதிலும் என் அருளால் அவற்றில் நாட்டமிராது. 

பரம்பொருள் எல்லாவற்றைக் காட்டிலும் நுட்பமானது. ஸத்தானது‌. முடிவற்றது. அதை வழிபடுவது எளிதல்ல. எனவே மக்கள் என்னை விட்டு, என் வேறு வடிவங்களாக விளங்கும் தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

அந்த தெய்வங்கள் எளிதில் வரம் தருவதால், திமிர் அடைந்து வரம் தந்த தெய்வத்தை மறந்து அவமதிக்கக்கூட துணிவார்கள்.

ப்ரும்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் மூவருமே வரமும், சாபமும் அளிக்க வல்லவர்கள்தாம். அவர்களுள் சிவனுக்கு ஆசுதோஷி என்று பெயர். மனமொப்பி வழிபடுபவனுக்கு மகிழ்ந்து உடனே வரமளித்துவிடுவார். அவருடைய இந்த எளிமையைப் பயன்படுத்திக்கொள்ளும் அசுரர் பலர்.

என்று சொல்லி தொடர்ந்து விருகாசுரனின் கதையைச் சொல்லத் துவங்கினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, September 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 556

வேதங்கள் பகவானின் ஸ்வரூபத்தை எவ்வாறு துதி செய்து வர்ணிக்கின்றன என்று பார்த்தோம்.

அதைக் கேட்ட அனைத்து ரிஷிகளும் ஸனந்தனரைப் பாராட்டினர்.

நாரதரிடம் நர நாராயண ரிஷி,‌ 
ஸனகாதி முனிவர்கள் படைப்பின் துவக்கத்தில் தோன்றியவர்கள். வான் வழிச் செல்பவர்கள். வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதங்கள் அனைத்தையும் பிழிந்து ஸாரமாக இந்த ச்ருதி கீதையை அருளியுள்ளனர்.

தாங்களும் ப்ரும்மாவின் மானஸ புத்திரராயிற்றே. ப்ரும்மத்தை அறிந்தவர்தானே. இந்த ப்ரும்மவித்தையை எப்போதும் சிந்தித்துக்கொண்டு உலகைச் சுற்றி வாருங்கள். என்றார்.

நாரதர் நைஷ்டிக ப்ரும்மச்சாரியாவார். ஆனந்த வடிவினர். 
மிகவும் விநயத்துடன் பதிலிறுத்தார்.

பகவானே! தாங்களே கண்ணனாக அவதாரம் செய்திருக்கிறீர்கள். தங்களுடைய புகழ் மிகவும் நன்மையைத் தரக்கூடியது. ஜீவன்களுக்கு அருள் புரிவதற்காக பல்வேறு அவதாரங்களும் லீலைகளும் செய்கிறீர்கள்.

என்று சொல்லி நர நாராயண ரிஷியையும், அவரது சிஷ்யர்களையும் வணங்கினார். பின்னர் என் தந்தையான வியாஸரின் ஆசிரமத்திற்கு வந்தார். 

வியாஸருக்கு நர நாராயணரின் திருமுகமாகக் கேட்ட அனைத்தையும் விளக்கினார்.

ஸ்ரீ சுகாசார்யார் தொடர்ந்தார்.

பரீக்ஷித்! குணங்களற்ற ப்ரும்மம் வாக்கிற்கு எட்டாதது. அதை எப்படி வேதங்களால் வர்ணிக்க இயலும் என்று நீ கேட்டாயல்லவா. அதற்கான விடைதான் ச்ருதி கீதை. என் தந்தை எனக்கு எப்படி உபதேசம் செய்தாரோ அதை அப்படியே உனக்கு உபதேசம் செய்தேன். 

முக்தியடைய எளிய வழி இறைவனை எப்போதும் சிந்திப்பதே. பயத்தைக் களையும் ஸ்ரீஹரியையே எப்போதும் வழிபடவேண்டும். அதுவே சிறந்த வழி. என்றார்.

அடுத்ததாக மிகவும் நுணுக்கமான கேள்வியைக் கேட்டான் பரீக்ஷித்.

மஹரிஷி! சிவபெருமான் உலகப் பொருள்கள் அனைத்தையும் துறந்து மலைமேலும், மயானத்திலும் வசிப்பவர். ஆனால் அவரை வழிபடுபவர்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் விளங்குகிறார்கள். ஸாக்ஷாத் திருமகளின் கணவரான ஹரியை வழிபடுபவர்கள் செல்வத்தையும் போதத்தையும் வெறுத்து பரமஹம்ஸர்களாகிறார்கள்.

இது எவ்வாறு? எனக்கு விளங்கவில்லையே. தியாகராஜாவாக விளங்குபவரை வழிபட்டால் செல்வமும், செல்வத்தின் அதிபதியை வணங்கினால் தியாகமும் வருமா?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சுகப்ரும்மம் மிகவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிக்கொண்டு சிரித்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, September 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 555

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைப் பார்த்துக் கூறுகின்றன.

இவ்வுலகம் ஸத் ஆன தங்களிடமிருந்து தோன்றினாலும் பொய்யான பல தோற்றங்களைக் கொண்டிருப்பதால் ஸத் அல்ல. இவ்வுலகில் கர்மானுஷ்டானங்களைச் செய்வதால் அவற்றிற்குப் பலன் சொல்லப்பட்டிருக்கிறதுதான்‌. ஆனால் அவற்றை உள்ளத் தூய்மையுடனும், உயிர்களிடத்து அன்புடனுடம் பற்றின்றிச் செய்துவந்தால் தங்களை அடையும் மார்கம் திறக்கும். இல்லாவிடில் கர்மாக்களின் பயன்களில் மாட்டிக்கொள்வார்கள்.

உலகை வெளிப்படையாகத் துறந்தாலும் உள்ளத்தில் காமவாசனைகள் இருப்பவன், நீங்கள் உள்ளத்திலேயே குடியிருந்தபோதிலும் உணரமுடியாதவன் ஆகிறான். 

ரத்தினமாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டே ஊரெல்லாம் தேடுவதைப் போன்றது இது.

புலன் இன்பங்களை வெறுக்காதவரை ஒருவனுக்குச் சுகம் என்பது இம்மையிலும் இல்லை. மறுமையிலும்‌ இல்லை.

தங்கள் ஸ்வரூபத்தை அறிந்த பக்தன், கர்மங்களின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துச்சமாக எண்ணுகிறான். அனுபவம், பொருள் இரண்டின் தொடர்பையும் மனத்தளவில் அறுக்கிறான்.

இதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்ற விதிகளும் அவன் வரையில் ஒதுங்குகின்றன. அத்தனை விதிகளும் உடலை ஆன்மா என்று எண்ணும் அறிவிலிகளை நெறிப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை. அவனுக்கு உடல் பற்றிய அபிமானம் இல்லாததால் அவன் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவனுக்குத் தாங்கள் முக்தியளிக்கிறீர்கள்.

இந்திரன், ப்ரும்மா முதலியவர்களுக்கும் தங்கள் ஸ்வரூபம் பற்றிய பூரண அறிவு இல்லை. வியப்பு யாதெனில் தங்களுக்கே கூட தங்களுடைய பூரண ஸ்வரூபம் தெரியாது.

ஒரு பெரிய கோடீஸ்வரனுக்குப் பல நாடுகளில் சிறியதும் பெரியதுமாக பல‌நிறுவனங்களும் அசையும், அசையா சொத்துக்களும்‌ இருக்கும். அவற்றைப்‌ பற்றிய முழு விவரங்களை அவனே அறியமாட்டான். அவற்றை நிர்வாகம்‌ செய்ய பல நிலைகளில் அலுவலர்களை வைத்துக்கொள்வான். அதுபோலத்தான் தாங்களும்.

அனைத்துலகும் அதற்கு அப்பாற்பட்டவைகளும் தங்களுடையவைதான். அவற்றின் விவரங்கள் தங்கள் பேரறிவையும் விஞ்சி நிற்பவை. 

காற்றில் தூசி பறப்பது போல ஏழு ஆவரணங்கள் கொண்ட கோடி கோடி ப்ரும்மாண்டங்களும் தங்கள் வயிற்றினுள் கூட்டம் கூட்டமாக காலச் சக்கரத்திற்காட்பட்டு சுழன்று கொண்டிருக்கின்றன. 

இப்போது சொல்லுங்கள் தங்கள் பேராளுமைக்கு எல்லைதான் எது?

தங்களுக்கு ஒப்புமையாக ஏற்றிக்கூற ஒரு பொருளும் இல்லை. அதனால் இது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொரு பொருளாகத் தள்ளிக்கொண்டே வந்தால் கடைசியாக விஞ்சும் எல்லைநிலம் தாங்களே.

எனவே வேதங்களாகிய நாங்களும் தங்களிடமிருந்தே துவங்கி தங்களுக்குள் அடங்குகிறோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 554

#ச்ருதி_கீதை

வேதங்கள் கூறுகின்றன.

பகவானே! ஜீவன்கள் அனைத்தும் தங்களிடமிருந்தே தோன்றுகின்றன. ப்ரக்ருதியும் புருஷனும்‌ பிறப்பற்றவர்கள். ஜீவன்கள் தங்களது அம்சமே. தாங்கள் வினைக்காட்பட்டு பிறப்பதில்லை என்றால் ஜீவன்கள் எப்படி பிறக்கும்? 

உண்மையில்‌ நீர்க்குமிழி என்ற ஒன்று இல்லை. அது நீரில் காற்று ஊடுருவதால் ஏற்படுகிறது. அதுபோல ப்ரக்ருதியில் புருஷனை ஏற்றிக் கற்பனை செய்வதால் பற்பல குணங்களும், பெயர்களும் கொண்ட ஜீவன்கள் தெரிகின்றன. நதியாக இருக்கும்வரை பெயர் உண்டு. கடலில் கலந்தபின் ஏது பெயர்?

பற்பல பூக்களின் மகரந்தங்கள் சேர்ந்து தேனாகின்றது. அதுபோல் பற்பல ஜீவன்கள் தங்களிடம் லயமாகின்றன. ஜீவன்களின் வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துபவர் தாங்களே.

நதிகள் கடலில் சங்கமித்தபின்பு தனித்த அடையாளத்தைத் துறப்பதுபோல, ஸாதுக்கள் தங்களுடன் கலந்து, அவர்களது நாம ரூபங்களை இழக்கிறார்கள்.

மாயையின் மயக்கத்தை எண்ணி பயந்து தங்களிடம் சரணடைகின்றனர். தங்களது புருவ நெறிப்பிற்கேற்பவே காலச் சக்கரம் சுழல்கிறது.

அனைவரையும் பயமுறுத்துகிறது. தங்களைச் சரணடைந்தவர்க்கோ பிறவிச் சுழலின் பயம் இல்லை.

எவ்வளவோ யோகிகள் தங்களது சுயமுயற்சியாலும் ப்ராணாயாமத்தாலும் பொறிகளைக் கட்டுகின்றனர். ஆனால், சரியான பாதையைக் காட்டும் குருவின் திருவடி பற்றாததால் சுலபத்தில் அவர்களது மனம் கட்டவிழ்ந்து புலன்களைக் கலக்கி சாதனைகளின் பயனை வீணடித்துவிடுகிறது.

படகோட்டி இல்லாத படகைப் போன்றது அவர்களது நிலை. 

மனக் குதிரையை அடக்க நல்ல குதிரைப்பாகன் தேவை. முக்தி வேண்டுமெனில் நல்ல குருநாதரைச் சரணடையவேண்டும்.

குருவன்றி கதி வேறில்லை. குருவல்லால் முக்தியும் இல்லை. 

உயர்ந்த ஆனந்த வடிவினரான குருநாதரை வணங்கி அவரது திருவடிகளில் பற்றுகொள்ளும் ஜீவன், சாதனைகளால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு ஆட்படாமல் துன்பங்களைக் கடக்கும். முக்தியடையும்.

தங்களையே சேவிப்பவனுக்கு எல்லா விதமான ஆனந்தமாகவும் தாங்களே விளங்குகிறீர்கள். அவனுக்கு மனைவி, மக்கள், உற்றார், உறவினர், செல்வம் ஆகியவற்றால் யாது பயன்? 

செருக்குகளை உதறி, உலகைத் தூய்மையாக்கும் ஸாதுக்களே கங்கையைக் காட்டிலும் உயர்ந்த தீர்த்தங்களாவர். அவர்களது இதயத்தில் தாங்கள் குடியிருப்பதால், அவர்களது திருவடி தீர்த்தம் அனைத்து பாவங்களையும் அழிக்கிறது.

எனினும் அவர்கள் பல புண்ய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். அதன் காரணம் யாதெனில், பல காலமாக அத்தீர்த்தங்களில் நீராடும் மக்களின் பாவங்கள் அவற்றில் ஸாதுக்கள் நீராடுவதால் விலகுகின்றன. தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் புனிதப்படுத்தவே ஸாதுக்கள் யாத்திரை செல்கின்றனர். அவர்கள் தீர்த்த யாத்திரை என்னும் சாக்கில் போகுமிடத்திலெல்லாம் தங்களது புகழையும் லீலைகளையும் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் களித்திருக்கிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 553

#ச்ருதி_கீதை

வேதங்கள் கூறுகின்றன.

ஒருவன் பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தாலும், மலையிலிருந்து உருண்டு விழுந்தாலும், தீர்த்தயாத்திரைகள் ஆயிரம் செய்தாலும், வேதங்களைக் கசடறப் பயின்றாலும், இன்னும் எவ்வளவு கடினமான சாதனைகளைச் செய்தாலும்,  ஹ்ருதயத்தில் பக்தி இல்லையென்றால் தங்களைக் காண இயலாது.

பகவானே! தாங்கள் மனம், புத்தி, பொறிகள், கரணங்கள், செயல் ஆகிய அனைத்திலிருந்தும் தனித்து விளங்குகிறீர். ஆனால் அனைத்தின் சக்தியும் ஒருங்கே கொண்டிருக்கிறீர்.

 பேரறிவே உருவானவர். பிறரின் துணையின்றித் தானே ஒளிர்பவர். பிறரையும் ஒளிரச் செய்பவர். தாங்கள் லீலைகள் செய்ய பிறரின் உதவி தேவையில்லை. 

சிற்றரசர்கள் மக்களிடமிருந்து அவர்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்று பேரரசனுக்குக் கப்பம் செலுத்துவர். அதுபோல, இந்திரன் முதலான தேவர்கள் வேள்விகள் மூலம் பெறும் அவியுணவைத் தங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். பின்னர் அவற்றை தங்களின் ப்ரசாதங்களாக இந்திரியங்களின் தேவதைகளாக இருந்துகொண்டு நுகர்கிறார்கள்.

தங்களிடம்‌ உள்ள பயத்தால் கடைமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றுகிறார்கள்.

தாங்கள் லீலை செய்ய எண்ணும்போது மாயையானது தங்களின் கடைக்கண் நோக்கிற்கேற்ப அசையும் அசையாப் பொருள்களைப் படைத்து விடுகிறது. அப்போது முன்வினைப் பயன் கொண்ட அத்துனை ஜீவன்களும் அவரவர் வினைக்கேற்ப மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, தேவராகவோ, பித்ரு கணங்களாகவோ, மற்றும் யக்ஷ கின்னர கந்தர்வராகவோ பிறப்பெப்பெடுக்கின்றன.

தாங்களோ ஆகாயம் போல் எல்லா இடத்திலும் வேறுபாடின்றிப் பரவியிருக்கிறீர். வேண்டுதல் வேண்டாமை இலாத தங்களைச் சொல்லோ மனமோ எட்டமுடிவதில்லை. காரண காரிய உருவான இவ்வுலகின் தொடர்பற்றுத் தனித்திருப்பதால் சூன்யம் போல் தோற்றமளிக்கிறீர். ஆனல் தாங்களே உண்மைப் பொருளான பூரணராவீர்.

ஜீவன்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்து அவற்றைக் கட்டுப்படுத்துகிறீர்கள்.

தங்கள் திருமேனி விவரத்தை முழுதும் அறிந்தவர் இல்லை. அவ்வாறு அறிந்தேன் என்று கூறுபவர் உண்மையில் அறியாதவரே.

அறிவுக்கெட்டாத தாங்களை அறிவுக்கெட்டும் பொருள்களைக் கொண்டு நிர்ணயம் செய்ய இயலாது. ஒவ்வொரு கொள்கையும் (மதம்) ஒன்றுக்கொன்று முரணானவை. தாங்களோ மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள். ச்ருதிகளாகிய எங்கள் கொள்கைப்படி, பரமேஸ்வரனான தங்களின் திருவடி பற்றுவதே முக்திக்கான வழி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

Tuesday, September 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 552

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைப் பார்த்துக் கூறுகின்றன.

தங்களை உள்ளது உள்ளபடி அறிவதென்பது இயலாது‌. இதைப் பற்றிப் பேசுவதில் பலரும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகம் முன்பு இருந்ததில்லை.

ஆண் பெண் சேர்க்கையால் ஜீவன்கள் தோன்றின என்று சொல்லுகிறார்கள். இல்லாமலிருந்து புதிதாக ஒன்று தோன்றினாலும் அழிவதும் அதன் விதியே. 

ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு ஆன்மா உள்ளதென்கிறார்கள் ஸாங்க்யர்கள். 

கர்மாவும் அதன் பயனும் ஸத்யம் என்கின்றனர் மீமாம்ஸகர்கள். 

இவ்வாறு அவரவர் தத்தம் குணங்களுக்கேற்றவாறு தங்களை வரையறுத்து வாதிடுகின்றனர். 

சிலர் ஜீவன் முக்குணங்களுக்கு ஆட்பட்டவன் என்கின்றனர்‌ . உண்மையில் அனைத்தும் அஞ்ஞானமே. பரமா! தாங்கள் ஞானவடிவினர். ஜீவனும் ஞான வடிவினனே. ஆனால் அவன் தன் உண்மைத் தன்மையை மறந்து ப்ரக்ருதியான மாயையின்பாற்பட்டு சுழற்சியில் சிக்கித் தவிக்கிறான். ஞானியான தங்களிடம் குழப்பங்களே இல்லை.

ஜீவனும் புருஷனும் வெவ்வேறல்ல எனில் ஏன் தனித்துக் காணப்படுகின்றனர் என்ற கேள்வி எழலாம்.

பலவாகத் தோன்றும் இவ்வுலகம் வெறும் கனவுக் காட்சியாகும்‌. இது ஸத் அல்ல. ஆனால் ஸத் போன்று தோற்றமளிக்கிறது.

இவ்வுலகம் மெய்யெனத் தோன்றுகிறதே என்று கேட்டால், ஞானிகள் ப்ரும்மத்தை எங்கும் காண்கின்றனர். அதனால் ஸத் ஆகத் தோன்றுகிறது‌.

காரணப் பொருளான தங்களுக்கும், காரியப் பொருளான உலகிற்கும் வேறுபாடு இல்லை. பொன்னாலான குண்டலங்கள், வளை, மாலை போன்ற அணிகலன்களை விரும்பி அணிகின்றார்கள். ஆனால் திருடனோ அனைத்தையும் தங்கம் என்று எடுத்துச் செல்கிறான். இரண்டும் உண்மைதானே.

அதுபோல உங்களால் படைக்கப்பட்ட இவ்வுலகில் ஒவ்வொரு பொருளிலும் நீங்களே நுழைந்து பரவி நிற்கிறீர்கள். 

அவைகளுக்குச் செய்யும் பூஜை அனைத்தும் உங்களையே ‌சேர்கிறது. பக்தி செய்பவனின் அனைத்து செயல்களும் தங்களுக்கான ஆராதனையே. அவ்வாறு கருதும் சான்றோர்கள் எமனைத் துச்சமாக எண்ணி அவன் தலைமேல் பாதம் வைத்து ஏறிச்செல்கிறார்கள். மரணமிலாப் பெருவாழ்வு அடைகிறார்கள்.

உங்களிடம் பக்தியில்லாதவர்கள் எவ்வளவு செல்வந்தராக இருப்பினும், தளைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.

வினைப்பயன்களின் மேலுள்ள ஆசை அவர்களை மாட்டிவிடுகிறது. ஆடு மாடுகளை மேய்ப்பதுபோல தன் செயல்களின் பலனைக் கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். 
தங்கள் பக்தன் தங்களையே அடைகிறான். மீண்டும் பிறப்பதில்லை. தன்னைச் சார்ந்தவர் களையும் தூய்மையாக்குகிறான். அவர்களையும் உலகியல் தளைகளிலிருந்து விடுவிக்கிறான்‌.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..