Thursday, January 31, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 203 சித்ரகேது - 3

பிள்ளை இறந்த துக்கத்தில் மூழ்கியிருந்த சித்ரகேதுவுக்கு ஆங்கீரஸ மஹரிஷியும், நாரத மஹரிஷியும் தத்வோபதேசம் செய்தனர்.

ஆங்கீரஸ் கூறினார்.
நீ பிள்ளைப்பேறின்றிக் கலங்கியிருந்தபோது உனக்காக யாகம் செய்த ஆங்கீரஸ் தான் நான்.

நீ பரம பக்தன். இப்போது அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறாய். நான் முதலில் வந்தபோதே உனக்கு ஞானத்தை உபதேசம் செய்திருக்கலாம்தான். ஆனால், அப்போது உன் மனம் பிள்ளைப் பேற்றிற்காக ஏங்கிக்கொண்டிருந்தது. எனவே நீ வேண்டிய வரத்தை மட்டும் அளித்தேன்.

இப்போது நீ ஒரு அஞ்ஞானி படும் துன்பத்தை அனுபவிக்கிறாய்.
உண்மையில் செல்வச் செழிப்பு, அரசுரிமை, படைகள், கருவூலங்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைத்தும் அழியக்கூடியவை.

இவையனைத்தும்‌ ஒரு ஜீவனின் துக்கம், பயம், வருத்தம், மோஹம் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன.

ஒரு நேரம்‌ இருப்பது போலிருந்து இன்னொரு சமயம் மறையக்கூடியவை. முற்பிறவி கர்ம வாஸனைகளால் தூண்டப்பட்டு மனம் இவற்றை நாடுகிறது.

இந்த உலகியல் விஷயங்களில் உலா வரும் உன் மனத்தை வசப்படுத்து. அமைதி கொள். உன் உண்மை ஸ்வரூபத்தை உணர். காட்சி தரும் இவ்வுலகம் உண்மை என்றெண்ணாதே.

அதிலுள்ள நம்பிக்கையை இறைவன்பால் வைத்து மனத்தை ஒருமுகப்படுத்து
என்றார்.

நாரதர் சித்ரகேதுவைப் பார்த்து,
அரசே, நான் உனக்கு உபநிஷத்தை உபதேசம்‌ செய்கிறேன். இதை முறைப்படி ஏழே நாள்கள் ஜபம் செய்தால்‌ போதும். ஸ்ரீமன் நாராயணனை நேரில்‌ காணலாம். என்றார்.

பின்னர், இறந்துபோன குழந்தையின் ஜீவாத்மாவை, சோகத்தில் தவிக்கும்‌ சித்ரகேதுவுக்கும் அவனது உறவினர்க்கும் நேராகக் காட்டினார்.

அதைப் பார்த்துப் பேசலானார்.
ஹே ஜீவாத்மாவே! உனது தாய் தந்தையர் உன்னைப் பிரிந்ததால் அடையும் வேதனையைப் பார். நீ இந்த உடலில் திரும்பவும் வந்து சேர்.

மீதியுள்ள உன் ஆயுள்காலத்தை உன் பெற்றோருடனும், சுற்றத்தாருடனும் மகிழ்ச்சியாகக் கழிப்பாய். அரசுகட்டிலில் நீ அமரலாம். என்றார்.

அதற்கு அந்த ஜீவன் பின்வருமாறு பேசிற்று.

தேவரிஷியே! நான் கர்ம வினையால் தேவன், மனிதன், விலங்கு, பறவை எனப் பல பிறவிகள் எடுத்துள்ளேன். இதில் எந்தப் பிறவியின் பெற்றோர் இவர்கள்?

பற்பல பிறவிகளில் அனைவரும் சகோதரர்கள், உறவினர், பகைவர் , நடுநிலையாளர் என்று பலவாறான உறவுகளில் இருந்திருக்கிறோம்.

விற்கும், வாங்கும் பொருள் ஒருவனிடமிருந்து மற்றவனுக்குக் கைமாறுவதுபோல் ஜீவன் பற்பல பிறவிகளில் பிறக்கிறான்.

எத்தனை காலம் ஒருவருடன் உறவு நீடிக்கிறதோ, அதுவரை அவர் தன்னுடையவர் என்ற எண்ணம் இருக்கிறது.

ஜீவாத்மா பற்றற்றவன். அழிவில்லாதவன். வாழும் வரையே அந்த உடல் என்னுடையது. இறந்த பிறகு, அவ்வுடலில் ஜீவனுக்கு எந்தப் பற்றும் கிடையாது.

ஜீவாத்மா எந்தவித ஒட்டுதலுமின்றி தனித்திருப்பவன். என்றது.
குழந்தையான ஜீவாத்மாவின் இப்பேச்சைக் கேட்டு அனைவரும் வியந்தனர். பின்னர் சோகத்தை விட்டு குழந்தைக்கு அந்திமக் கடன்களை செய்தனர்.

மற்ற மனைவியருக்கு சிசுஹத்தி தோஷம்‌ வந்தது. அதனால் பொலிவை இழந்து அருவறுக்கத்தக்க தோற்றத்துடன் மாறினர்.

பின்னர் ஆங்கீரஸ மஹரிஷியின் வழிகாட்டுதலின்படி தோஷம்‌ நீங்க யமுனைக் கரையில் ப்ராயசித்தம்‌ செய்தனர்.

சித்ரகேது யமுனையில் குளித்து முறைப்படி கர்மங்களை ‌முடித்து முனிவர்களை வணங்கினான். பின்னர் மௌனவிரதம்‌ ஏற்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, January 30, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 202 சித்ரகேது - 2

வாராது வந்த மாமணி.

பல வருடங்களாக ஏங்கி ஏங்கித் தவித்த பிள்ளைச் செல்வம். சித்ரகேது விற்குத் தலைகால் புரியவில்லை. க்ருதயுதியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டான்.

மற்ற மனைவியர் அனைவர்க்கும் மன்னன் தங்களைச் சற்றும் மதியாதது கண்டு பொறாமைத்தீ வளர்ந்தது.

இனி இந்த க்ருதத்யுதி நம்மைப் பணிப்பெண்களைப் போல் நடத்துவாள். கணவனும் நம்மை நினைக்கவே மாட்டான். அரசிகளாய் இருந்தும் அநாதைகள்போல் ஆகிவிட்டோமே. வேலைக்காரிகளே தேவலாம். நாம் இப்படி ஒதுக்கப்படுகிறோமே என்று வருந்தினர்.

மனம் புழுங்கிய அப்பெண்கள், குழந்தைக்கு நஞ்சைக் கொடுத்தனர். அந்தோ.. பச்சிளம் குழந்தை எப்படித் தாங்கும்?

வெகுநேரமாகக் குழந்தை அசைவின்றி உறங்குவதைக் கண்ட க்ருதத்யுதி, பணிப்பெண்ணை அழைத்து குழந்தையைத் தூக்கிவரச் சொன்னாள். அவள் அருகில் வந்து பார்த்தபோது, குழந்தையின் உயிர் பிரிந்திருந்ததைக் கண்டு பதறிப்போனாள். பணிப்பெண்ணின் கதறியதைக் கேட்டு ஓடிவந்த க்ருதத்யுதிக்கு எப்படி இருக்கும்? அவளது கதறல் மூவுலகிற்கும் கேட்டது.

மற்ற அரசிகளும் ஓடிவந்து துக்கத்தில் பங்கு கொள்வதைப்போல் பாசாங்காய் அழுது புலம்பினர்.

நாடே துக்கத்தில் மூழ்கியது. க்ருதத்யுதி குரரிப் பறவைபோல் கதறினாள். ப்ரும்மதேவரைப் பலவாறு பழித்தாள்.

சித்ரகேதுவின் நிலைமை இன்னும் மோசம். அவன் புத்ரசோகத்தால் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டான்.

ஒருவன் துக்கத்தில் மூழ்கும் நேரம் அழைத்தால் உடனே வருபவன் இறைவன். அழையாமலே வந்து அன்னைபோல் காப்பவர் குருநாதரைத் தவிர வேறெவர்?

குருதேவர் பெரும்பாலும் துக்கத்தைப் போக்குவார். சில நேரங்களில் துக்கத்தைச் சந்திக்கும் மனோபலத்தைக் கொடுத்து சீடனைத் தன்னைப்போல் உயர்த்துவார்.

அழையாமலே வந்தனர் ஆங்கீரஸ முனியும், நாரத மஹரிஷியும்.
இறந்துகிடக்கும் குழந்தையின் அருகில் இன்னொரு பிணம்போல் கிடக்கும் சித்ரகேதுவின் அருகில் சென்று நல்லுபதேசம் செய்தனர்.

இது மிகவும் அரிய உபதேசம். பிறப்பு இறப்பு பற்றிய உண்மை நிலையை உரைப்பதாகும்.

நம் தமிழ் மொழியின் அற்புதம் இது. பிறந்த குழந்தையிடம் நாரதர் சொல்லும் அதே விஷயத்தைப் பேசுகிறது. ஆம். நமது மொழியின் தாலாட்டுப்பாடல்.

ஆராரோ.. ஆரிவரோ..
நீ யாரோ.. நான் யாரோ..
என்பதாகத் துவங்குகிறது.

சித்ரகேது! இந்தக் குழந்தையை நினைத்து வருந்துகிறாயே.. இது முற்பிறவியில் உனக்கு உறவா என்ன? நீ அவனுக்கு யார்? உனக்கும் அவனுக்கும் உறவேது?

ஆற்றுநதியின் ஓட்டத்தில் மணற்துகள்கள் பிரிந்து பிரிந்து சேர்வதைப்போல் ஜீவன்கள் ஸம்ஸார ஓட்டத்தில் தத்தம் வினைக்கேற்ப சேர்ந்து பிரிகின்றன.

எந்த ஜீவராசியானாலும் முந்தைய பிறவிகளில் அதன் பெற்றோர் வேறு. ஒரு ஜீவனுக்கு எத்தனை பெற்றோர்கள் என்பதைக் கணக்கிடவே முடியாது. அத்தனை பேரும் உறவு கொண்டாடவும் இயலாது. மரணத்திற்குப் பின்னால் ஜீவனுக்கு அவ்வுடலின் தொடர்பு அறுந்துபோகிறது.

பகவான் ஒருவனே அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயும் தந்தையுமானவன்.

உன் பிள்ளையின் உடல்தான் அழிந்தது. அந்த ஜீவன் தன் பயணத்தைத் துவங்கிவிட்டது. ஜீவனுக்கு அழிவில்லை. அது முக்தியடையும் வரை வெவ்வேறு உடல்களில் வாசம் செய்யும்.

இவ்வாறு உபதேசம் செய்த முனிவர்களை வணங்கினான் சித்ரகேது.

துக்கத்தினால், தனக்கு யாகம் செய்து வைத்த ஆங்கீரஸ‌முனியைக் கூட அவனால் அடையாளம் காணமுடியவில்லை.

நீங்கள் இருவரும் சான்றோர்களுக்கெல்லாம்‌ சான்றோர்கள்.
என்னைப் போன்ற பாமரனுக்கு உண்மைப் பொருளை விளக்க எண்ணி சஞ்சரிக்கிறீர்கள்.

நான் விலங்குபோல் அஞ்ஞானத்தில் மூழ்கித் தவிக்கிறேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. எனக்கு ஞானச்சுடரேற்றி வழிகாட்டுங்கள் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, January 29, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 201 சித்ரகேது -1

பரீக்ஷித் கேட்டான்
ப்ரும்மரிஷியே.. வ்ருத்ராசுரன் இயற்கையிலேயே ரஜோ குணமும், தமோகுணமும் நிறைந்த அசுரன். அவனுக்கெப்படி பக்தி உண்டாயிற்று?
ஸத்வகுணமுள்ள தேவர்களுக்கே இத்தகைய பக்தி மிகவும் கடினம்.

இவ்வுலக ஜீவராசிகளின் எண்ணிக்கை பூமியிலுள்ள புழுதியின் எண்ணிக்கை போன்றது. அவற்றுள் சில‌மனிதர்களே தங்கள் ஆத்மநலனுக்காக பாடுபடுகின்றனர். அவர்களிலும்‌ யாரோ ஒருவனுக்குத்தான் கர்மத்தளையிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மீதி அனைவரும் சிற்றின்பங்களில் உழல்பவர்களே.

இந்த வ்ருத்ராசுரனோ உலகங்கள் அனைத்தையும் கொடூரமாக வாட்டி எடுத்தவன்? ஆனால், போர்முனையில் பகவானிடம் மனத்தை நிலைப்படுத்தினான். இந்திரனே அவனை மெச்சுகிறான். இதெப்படி சாத்தியமாயிற்று?

மிகவும் பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்ட பரிக்ஷித்தை சுகர் மிகவும் பாராட்டினார்.

பின்னர், வ்ருத்ராசுரனின் பூர்வகதையைக் கூறலானார்.
பரீக்ஷித் இக்கதையை நான் என் தந்தையான வியாஸரிடமிருந்தும், தேவரிஷி நாரதரிடமிருந்தும், பின்னர் தேவல முனிவரிடமிருந்தும் கேட்டறிந்தேன். கவனமாகக் கேள் என்றார்.

இது ஒரு பழங்கதை. சூரசேன தேசத்தின் அரசன் சித்ரகேது. அவன் மிகவும் நல்லாட்சி புரிந்துவந்தான்.
அவனுக்கு ஏராளமான மனைவியர் இருந்தும் ஒரு குழந்தைகூட இல்லை. எந்தக் குறையுமற்ற அரசனுக்கு, மிக அழகான மனைவிகள், மிகுந்த செல்வம், காலடிக்கீழுள்ள உலகம் எதுவும் மகிழ்ச்சியைத் தரவில்லை.

பிள்ளைப்பேறின்றி மிகவும் வருந்தினான் அவன். அவ்வமயம் பகவான் ஆங்கீரஸ் தற்செயலாக அவனது அரண்மனைக்கு வந்தார். அவர் வரமும் அளிப்பார். சாபமும் அளிப்பார்.

முனிவரை மிகவும் மரியாதையுடன் முறைப்படி வரவேற்று ஆசனமளித்தான் சித்ரகேது.
மன்னா, உன் ஆட்சியில் அனைவரும் நலமா? எல்லோரும் கீழ்ப்படிகிறார்களா? தர்மம் செழிக்கிறதா? நீ மனக்கவலையோடு இருக்கிறாய் என்று நினைக்கிறேனே. உன் மனவருத்தத்தின் காரணம் யாது?
என்று வினவினார்.
மஹான்களிடம் வாயைத் திறந்து எதுவும் சொல்லவேண்டியதே இல்லை. சேயைக் காணும் தாய்போல் ஜீவன்களைக் கண்டதுமே அவர்களின் கஷ்டத்தை உணர்ந்துவிடுவர் ஸாதுக்கள்.
முனிவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், அவன் வாயிலாக விண்ணப்பிக்கட்டும் என்று கேட்டார்.

சித்ரகேது சொன்னான்
ரிஷியே! தவம், ஞானம் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் தங்களுக்கு உலகியல் பற்றுக்களால் தவிக்கும் என் உள்ளும் புறமும் தெரியாதா? இருப்பினும் தாங்கள் கேட்பதால் என் கவலையைத் தங்கள் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன்.

பசியோடு இருப்பவனுக்கு நல்ல ஆடை அணிகலனால் என்ன பயன்? ஒரு பிடி சோறுதான் அவனுக்கு நிம்மதி தரும்.‌அதுபோல் எல்லா செல்வங்களும் இருந்தும், மக்கட்பேறின்றித் தவிக்கிறேன். என் கவலையைப் போக்கி அருள் செய்யுங்கள்.
என்றான்.

அரசன் இவ்வாறு கேட்டதும், ப்ரும்மதேவரின் மகனான ஆங்கீரஸ முனி, த்வஷ்டாவுக்கான கஞ்சியைத் தானே சமைத்து அந்த தேவதையை அரசனின் பொருட்டு ஆராதித்தார். வேள்வியில் எஞ்சிய அவியை, சித்ரகேதுவின் பட்டத்தரசிகளில் மூத்தவளும், குணவதியுமான க்ருதத்யுதிக்குக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

அரசே! உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் உனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பான் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவியுணவை உண்ட க்ருதத்யுதி கருவுற்றாள். ஒரு நல்ல நாளில் அரசனும் நாட்டு மக்களும் மகிழும்படி ஒரு அழகான குழந்தையைப் பெற்றாள்.

சித்ரகேதுவின் மகிழ்வுக்கு எல்லையே இல்லை. அவன் கைம்மாறு வேண்டா மேகம் போல் அனைவர்க்கும் அவரவர் விரும்பிய பொருள்களை வாரி வழங்கினான்.

வறியவனுக்குத் தான் வருந்தி உழைத்த பொருள்மேல் உண்டாகும் பேராசைபோல் சித்ரகேதுவிற்கு மகன் மீதான பாசம் பெருகிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, January 27, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 200 ப்ரும்மஹத்தி

வ்ருத்ராசுரன் இறந்ததில் மூவுலகத்தாரும் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால், தேவேந்திரன் மிகவும் வருத்தமுற்றான்.

முதலில், அவன் வ்ருத்ரனைக் கொல்லத் தயங்கினான்.

ப்ரும்மஹத்தி பாவம் வரும், பக்தனாக வேறு இருக்கிறானே என்று அஞ்சினான்.

மேலும்,
இப்போதுதான் ஒரு ப்ரும்மஹத்தியைப்‌ பிரித்து பூமி, நதி, பெண்கள்‌ ஆகியோர்க்குக் கொடுத்தேன். மறுபடி தோஷம் வந்தால் தாங்க இயலாது
என்று கவலைப்பட்டான்.

அப்போது முனிவர்கள்,
மூவுலகங்களின் நன்மைக்காகச் செய்துதான் ஆகவேண்டும். இதனால் வரும் ப்ரும்மஹத்தியை உனக்காக அஸ்வமேத யாகம்‌செய்து போக்கிவிடுகிறோம்
என்று தைரியம்‌ சொன்னதனாலேயே அசுரனை வீழ்த்தினான் இந்திரன்.

வ்ருத்ராசுர வதம் முடிந்ததும் ப்ரும்மஹத்தி இந்திரனைத் தொடரலாயிற்று.

மிகவும் அவலட்சணமாக, மூப்பினால் நடுங்குகின்ற, என்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டு, சிவப்பு ஆடையுடன், நரைத்த கூந்தலை விரித்துக் கொண்டு, மீன் நாற்றமுள்ள சுவாசத்துடன் துர்நாற்றத்தைப் பரப்பிக்கொண்டு, ப்ரும்மஹத்தி இந்திரனைத் தொடர்ந்து ஓடிவந்தது.

அதனிடமிருந்து தப்பிக்க இந்திரன் எல்லா திசைகளிலும் ஓடினான். புகலிடம் இன்றி மானஸ ஸரஸில் நுழைந்தான்.

அங்கு ஒரு தாமரைத் தண்டினுள் ஆயிரம் ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தான்.

தேவர்கள் அக்னி மூலமே அவியுணவைப் பெற இயலும். இந்திரன் நீருக்குள் ஒளிந்ததால் அக்னியால் அவனுக்கு உணவைக் கொண்டு சேர்க்க முடியவில்லை.

இந்திரன் பசியால் வாடினான்.
இந்த இடைவெளியில் வித்யை, தவம், மற்றும் யோகப்பயிற்சியால் நகுஷன் என்பவன் இந்திர பதவியை அடைந்து மூவுலகையும் ஆண்டு வந்தான். அவ்வமயம் அழகே உருவான இந்திரனின் மனைவியான சசிதேவியிடம், தவறாக நடக்க முயன்றான்.

சசிதேவி நகுஷனை ஸப்தரிஷிகளிடம் அபசாரப்படும்படி தந்திரமாக மாட்டிவிட்டாள்.
அதனால் நகுஷன் சாபம்‌பெற்று பாம்பாக உருக்கொண்டான்.

நீருக்குள் ஒளிந்து தேவேந்திரன் பகவானையே தியானம் செய்ததால் ப்ரும்மஹத்தி விலகியது.

ப்ரும்மாவின் உத்தரவின்படி அக்னி சென்று இந்திரனை அழைக்க இந்திரன் மீண்டும் ஸ்வர்கம் வந்தான்.

முனிவர்கள் தேவேந்திரனை முன்னிறுத்தி, அனைத்து விதிகளையும் பின்பற்றி, முறைப்படி அஸ்வமேத யாகம் செய்துவைத்தனர். அதன் பலனாய் அனைத்துவிதமான தோஷங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் இந்திரனை விட்டு விலகின.

இந்த உயர்ந்த கதையைக் கேட்பவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கப்பெற்று தூய்மையான உள்ளத்தைப் பெறுவர். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கேட்டால் பெரும் செல்வமும் புகழும் சேரும். பகை அழியும். ஆயுள் வளரும். இன்னும் பல நன்மைகளையும் பெறலாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, January 26, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 199 வ்ருத்ராசுரனின் முக்தி

வ்ருத்ராசுரன் தொடர்ந்து கூறினான்.
ஹே இந்திரனே! எம் தலைவனான பகவான் ஸ்ரீமன் நாராயணன் தன் அடியார்கள் விரும்பும் அறம், பொருள், இன்பத்திற்கான முயற்சிகளைப் பலனற்றுப் போகச் செய்வார். அவர்களுக்குத் தானே செல்வமாக விளங்குவார்.

இதை அந்த அடியாரையன்றி வேறெவராலும் புரிந்துகொள்ள இயலாது.
என்று சொன்னான்.

பின்னர் சட்டென்று தியான யோகத்தினால் ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்தி துதிக்கத் துவங்கினான்.

ஹே! நாராயண! உமது அடியாரின் திருவடித் தொண்டை அடுத்த பிறவியிலாவது கொடு. எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு அடியார் சேவையே கிட்டவேண்டும். உமது கல்யாணகுணங்களை நான் மறவாதிருக்கவேண்டும். உமது பணியே எப்போதும் நான் செய்திடல் வேண்டும்.

செல்வக் களஞ்சியமே! நீ இல்லாத விண்ணுலகோ, ப்ரும்மலோகமோ, ஸ்வர்கமோ, எண்வகை சித்திகளோ எதற்காக? முக்தியைக் கூட நான் வேண்டவில்லை.

இறக்கை முளைக்காத குஞ்சுகள் கூட்டி லிருந்து கொண்டே தாய்ப் பறவையை எதிர்நோக்கும்..

கவையில் கட்டப்பட்டிருக்கும் கன்று தன் தாய்ப்பசுவுக்காக ஏங்கி நிற்கும்.

கணவனின் பிரிவைத் தாங்காத கற்புக்கரசி அவன் வரவையே எதிர்பார்த்து ஏங்கி நிற்பாள். அதுபோல் என் மனம் உன்னையே நாடுகிறது.

என் வினைப்பயனால் இந்த ஸம்சாரத்தில் சிக்கித் தவிக்கிறேன். நான் எங்கு எப்படிப் பிறந்தாலும் உமது அடியாரின் நல்லிணக்கம் வேண்டும். உன் மாயைக்கு ஆட்பட்டு வீடு, மனைவி, மக்கள், செல்வம் என்று உழலும் வீணர்களின் தொடர்பு எந்நிலையிலும் எனக்கு வேண்டாம்.
என்று வேண்டினான்.

இந்திரனை வென்று ஸ்வர்கத்தை அனுபவிப்பதை விட, போரில் உயிர் துறந்து பகவானை அடைய விரும்பினான் வ்ருத்ராசுரன்.

படு கோபத்துடன் தீப்பொறிகள் கக்கும் தன் சூலத்தை இந்திரன் மீது எறிந்தான். இந்திரன் சற்றும் கலங்காமல் அதையும் வ்ருத்ரனின் பரந்த தோளையும் தன் வஜ்ராயுதத்தால் வெட்டித் தள்ளினான்.

ஒரு கை வெட்டுப்பட்ட நிலையில் வ்ருத்ரன் இந்திரனின் அருகில் சென்று அவனையும், ஐராவதத்தையும் ஓங்கி அடிக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை நழுவவிட்டான்.

அதை எடுக்க இந்திரன் வெட்கினான். அப்போது வ்ருத்ரன், வருந்தாதே! உன் ஆயுதத்தைக் கையிலேந்தி எனைத் தாக்கு. பகவான் ஒருவரே படைப்பிற்கும் அழிவிற்கும் காரணம். வலையில் சிக்கிய பறவை போல் மாயையில் மாட்டிக்கொண்டு, அனைத்து உலகங்களும் அதன் தலைவர்களும் பகவானின் இஷ்டப்படி ஆடுகின்றனர். காலதேவனே வெற்றிதோல்வியை நிர்ணயிப்பவன்.

மரத்தால் செய்யப்பட்ட பொம்மை ஆட்டுவிப்பவனுக்கேற்ப ஆடுவதுபோல் இறைவனால் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம்.

கெட்டகாலம் வந்தால் விரும்பாவிடினும் அவமானமும், அவப்பெயரும் வருவதுபோல், நல்லகாலம் வந்தால் நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவை தானாகவே வரும்.
போர்முனையில் உணர்வுகளுக்கு இடமில்லை. நீ என்னை வெட்டியபோதும் நான் என் முயற்சியைச் செய்கிறேன் அல்லவா? அதுபோல் நீ மனம் தளராமல் உன் முயற்சியைச் செய்.

அவனது வாக்கைக் கேட்ட இந்திரன் அவனைக் கொண்டாடினான்.
தானவர் கோனே! நீ சித்த புருஷன். உனக்கு பகவானிடம் அன்பும், பற்றும் உறுதியாக ஏற்பட்டுள்ளது. நீ மாயையை வெற்றிகொண்டுவிட்டாய். உன் அசுரத்தன்மை நீங்கி மஹானாகிவிட்டாய். நீயோ ரஜோகுணம் நிரம்பிய அசுரன். ஆனால், சுத்த ஸத்வ குணமுள்ள பகவானிடம் உனக்கு காதல் உண்டானது பெரும் வியப்பு.

இதைக் கேட்ட வ்ருத்திரன் ஒரு கத்தியை எடுத்து வீச, இந்திரன் அந்த ஆயுதத்தையும், வ்ருத்ரனின் இன்னொரு தோளையும் சிதைத்தான். இரு கரங்களும் வெட்டுப்பட்டு மலை போல் காட்சியளித்த வ்ருத்ரன், அசைந்து அசைந்து வந்து, மலைப்பாம்பு யானையை விழுங்குவதுபோல் தேவேந்திரனை விழுங்கி விட்டான்.

வ்ருத்ரனின் வயிற்றுக்குள் சென்று விட்ட போதிலும் நாராயணகவசத்தால் காக்கப்பட்ட இந்திரன் இறக்கவில்லை. தன் வஜ்ராயுதத்தால் வ்ருத்ரனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். பின்னர் வ்ருத்ரனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அப்போது துந்துபி முதலிய வாத்யங்கள்‌முழங்கின. இந்திரனை அனைவரும் கொண்டாடினர்.

வ்ருத்ராசுரனின் உடலிலிருந்து கிளம்பிய ஜ்யோதி அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எல்லா உலகங்களையும் தாண்டி, ஸ்ரீ மன் நாராயணனின் ஸ்வரூபத்தில் கலந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, January 25, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 198

ததீசி முனிவரின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட வஜ்ராயுதத்துடன், தேவேந்திரன் வ்ருத்ராசுரனை எதிர்த்தான்.

வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் சதுர்யுகத்தில் வரும் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் நர்மதா நதி தீரத்தில் நிகழ்ந்தது இப்போர்.

முப்பத்து முக்கோடி தேவர் சூழ வரும் இந்திரனைக் கண்டு அசுரர்கள் வெகுண்டு எழுந்தனர்.

மிகவும் கடுமையான இப்போரில், அஸ்த்ர சஸ்த்ரங்கள் தீர்ந்துபோனதும், மலைச் சிகரங்களைக் கொண்டுதாக்கினர் அசுரர்கள்.

எவ்வளவு தாக்கியும், தேவர்களின் பலம் ஓங்கியே இருந்ததால், அசுரப்படைக்கு பயம் ஏற்பட்டது.

அவர்களது உற்சாகம் குறையத் துவங்கியதும், வ்ருத்ராசுரனைப் போர்முனையில் தனியே விட்டு நாற்புறமும் சிதறி ஓடத் துவங்கினர்.

வ்ருத்ராசுரன் புறமுதுகிட்டு ஓடும் அசுரர்களைப் பார்த்துச் சிரித்தான்.
விப்ரசித்தி, நமுசி, புலோமா, மயன், அனர்வா, சம்பரன் முதலிய அசுரர்களை விளித்துக் கூறினான்.

அசுரர்களே! ஓடாதீர்கள்! மானமே பெரிது. பிறப்பவன் எப்படியும் இறந்துதான் ஆகவேண்டும். மரணத்திலிருந்து விடுபட இதுவரை எந்த உபாயமும் எவராலும் கூறப்படவில்லை. சமரில் ஏற்படும் வீரமரணத்தால், இம்மையில் புகழும், மறுமையில் ஸ்வர்கமும் கிட்டும். அதை வேண்டாம் என்று யாரேனும் மறுப்பரா?

யோகிகள் தன் ப்ராணன்களை வசப்படுத்தி, பயிற்சியால் ப்ராணனை ஆத்மாவுடன் ஒடுங்கச் செய்து உடலை விடுகின்றனர். போர் வீரன் முன் வைத்த காலைப் பின்னெடுக்காமல் மார்பில் அடிபட்டு உயிரை விடுகிறான். இந்த இருவகையான மரணங்களும் மிகவும் உயர்ந்தவை. கிடைத்தற்கரிதானவை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்து போரிடுங்கள் என்றான்.

அவர்கள் உயிர் பயத்தினால் வ்ருத்ராசுரனின் பொருள் பொதிந்த சொற்களைச் செவி மடுக்காமல் தப்பி ஓடினர்.

உடனே தேவர்களைப் பார்த்துக் கூவினான்.
அற்ப தேவர்களே! உயிருக்கு பயந்து ஓடும் அசுரர்களை ஏன் தாக்குகிறீர்கள்? அவர்கள் பெற்றோரின் கழிவுகள். நீங்கள் சுத்த வீரர்கள் என்ற எண்ணம் இருப்பின், என்னெதிரே வந்து நில்லுங்கள்‌ என்றான்.

வ்ருத்ரனின் பெரிய உடலைப் பார்த்தாலே பல தேவர்களுக்குக் குலை நடுங்கியது. பலர் மூர்ச்சையடைந்தனர். அவனது கர்ஜனைக்குப் பலர் மயங்கி விழுந்தனர்.

அவ்வாறு விழுந்தவர்களை வ்ருத்ரன் காலால் நசுக்கிக் கொன்றான்.
அதைக் கண்டு சினம் கொண்ட தேவேந்திரன் ஒரு கதையை வீச, அதைப் பந்தாட்டம் போல் பிடித்த வ்ருத்ரன், அந்த கதையால் ஐராவதத்தின் தலை மீது ஒரு அடி வைத்தான்.

ஐராவதம் வலி தாங்காமல், உதிரம்‌ பெருக ஏழு வில்லடிகள்‌ (ஒரு வில்லடி - நான்கு முழம்) பின்னால் நகர்ந்து மூர்ச்சையடைந்தது.

அதைக் கண்டு இந்திரன்‌மிகவும் மனம் வருந்தினான். போரின் தர்மத்தை நன்கறிந்த வ்ருத்ரன், மீண்டும் ஆயுதப் ப்ரயோகம் செய்யவில்லை. தேவேந்திரன் தன் அமுதம்‌ நிரம்பிய கைகளால் ஐராவதத்தைத் தடவிக் கொடுக்க, அது புத்துணர்வு பெற்று எழுந்தது.

அப்போது வ்ருத்ரன் தேவேந்திரனைப் பார்த்து,
தீயவனே! நீ ஒரு குருத்ரோஹி. அந்தணனைக் கொன்றவன். பாவியான உன் இதயத்தை நான் பிளப்பேன். என் தமையனான விஸ்வரூபன் ஆத்மஞானி. ஒரு பாவமும் அறியாத அப்பாவி அந்தணன். வேள்வி தீக்ஷையில் இருந்தவனின் தலையை வெட்டினாய்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? விண்ணுலக இன்பங்களுக்கு அடிமையாகி, வேள்விப் பசுவைக் கத்தியால் வெட்டுவது போன்றது. இன்று என் சூலம் உன் உடலைப் பிளக்கப் போகிறது.

ஹே! தேவேந்த்ரா ! ஒருக்கால், நீ பகவானை வேண்டி என்னைக் கொல்வதற்காகவே வாங்கி வந்திருக்கும் வஜ்ராயுதத்தால் என் தலையைக் கொய்யக்கூடும். அப்போது என் உடலை விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அர்ப்பணம் செய்து, உலகியல் தளைகளிலிருந்து விடுபட்டு மஹான்களின் சரண தூளியை அடைவேன். சான்றோரின் உலகம்‌ எனக்குக் கிடைக்கும்.

எது நிகழ்ந்தாலும் எனக்குத்தான் நன்மை.
கொடியவனான நீ ஏன் வாளாவிருக்கிறாய்? உன் வஜ்ராயுதத்தை எடுத்து என் மீது வீசு பார்க்கலாம்.
என்றான்.

இதன் பின் அத்தனை சான்றோர்களும் புகழ்ந்தேத்தும் ஸ்லோகங்களை வ்ருத்ராசுரன் கூறுகிறான். அவை அடுத்த பதிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, January 21, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 197 ததீசியின் தியாகம்

பகவான் கூறலானார்.
தேவர்களே! உங்களின் துதி கேட்டு மகிழ்ந்தேன். என்னிடம் காதல் கொண்ட அடியவன் என்னைத் தவிர எதையும் விரும்பான். உலகப் பொருள்களை உண்மையென நம்பும் அறிவிலி உலகியல் இன்பங்களை நாடுகிறான். முக்தியின்பத்தை உணர்ந்தவன் அஞ்ஞானியானாலும் கூட அவனை கர்மத்தளையில் சிக்க உபதேசிக்கமாட்டான். நல்ல மருத்துவன் நோயாளி விரும்பிக் கேட்டாலும்கூட அவனுக்கு ஒவ்வாத மருந்தையோ உணவையோ கொடுப்பாரா?

இந்திரா! உனக்கு எல்லா நலன்களும் விளையட்டும். நீங்கள் ததீசி முனிவரிடம் சென்று அவரது உடலை தானமாக வேண்டுங்கள். அவ்வுடல் விரதபலம், உபாசனாபலம் மற்றும் தபோபலம் ஊறியது. மிகவும் உறுதியானது.

அவர் ப்ரும்ம ஞானி. தனமளிக்கும் வித்தையையும் அறிந்தவர். அஸ்வசிரஸ் என்ற உயர்ந்த வித்தையை அஸ்வினி குமாரர்களுக்கு உபதேசம் செய்தவர். அதன் மஹிமையால் அவர்கள் ஜீவன் முக்தர்களாயினர்.

அதர்வண வேதத்தை நன்குணர்ந்த ததீசி முனிவர், எவராலும் துளைக்க இயலாத நாராயண கவசத்தை முதலில் த்வஷ்டாவிற்கு உபதேசம் செய்தார். அதை த்வஷ்டா தன் மகனான விஸ்வரூபருக்கு உபதேசம் செய்தார். விஸ்வரூபர் அந்த நாராயண கவசத்தை ‌உனக்கு உபதேசம் செய்தார்.

நீ கேட்டால் ததீசி முனிவர் தன் உடலைத் தந்துவிடுவார். அவரது எலும்புகளைக் கொண்டு விஸ்வகர்மாவின் மூலம் ஒரு ஆயுதம்‌ செய்துகொள். இந்திரனே! நீ அந்த ஆயுதத்தால் வ்ருத்ராசுரனை அழிக்கலாம்.

அதன் பின் உன் தேஜஸ்,செல்வம், அஸ்திரங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள்.
என்றார்.

தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பகவான் தம்மை மறைத்துக்கொண்டார்.

பகவான் சொன்ன உபாயத்தின்படி தேவேந்திரன் அந்த பெருமனம் படைத்த முனிவர் ததீசியிடம் சென்று அவரது உடலை வேண்டினர்.

யாரேனும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது உங்கள்‌ எலும்புகளைக் கொண்டு ஆயுதம்‌ செய்ய உடல் வேண்டும் என்று கேட்பார்களா? கேட்டால் கொடுக்கத்தான் முடியுமா?

அம்முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் கொடுக்க இசைந்தார். இவ்வுடலால் எப்பயனும் இல்லை என்று நினைத்திருந்தேன். இவ்வுடலுக்கு ஒரு பயன் உண்டென்பதை அறிந்து மிக்க‌ மகிழ்ச்சி கொண்டேன். மண்ணில் மக்கப்போகும் உடல் உங்களுக்குப் பயன்படுவதை விட வேறென்ன ஆனந்தம்‌ இருக்கமுடியும்? என்றார்.

அவரது தியாகத்தைக் கண்டு நடுங்கிப்போனான் சுயநலமே உருவான இந்திரன்,

ப்ரும்மரிஷியே! சகல ஜீவன்களிடமும் அன்பு கொண்ட தங்களைப் போன்றவர்கள் எதைத்தான் தியாகம்‌செய்ய மாட்டார்கள்? என்று நெகிழ்ந்தான். இருப்பினும் அவரது உடலைப் பெறுவதில் குறியாக இருந்தான்.

ததீசி முனிவர் அக்கணமே தன்னுடலை விடத் தீர்மானம் செய்து, தன் ஜீவனை பகவானிடம் இரண்டறக் கலக்கச் செய்தார்.

பகவானின் திருவருளைப்‌ பெற்றிருந்த இந்திரனது பலமும் வீரமும் வளர்ந்தன. விஸ்வகர்மா ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் செய்து அதை இந்திரனுக்கு அளித்தான். தேவேந்திரன் தேவர்கள் சூழ, மூவுலகமும் மகிழ, ஐராவதத்தின் மீதேறி வ்ருத்ராசுரனை எதிர்க்கச் சென்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

படம்:
நைமிஷாரண்யத்தில் ததீசி முனிவர் உயிர் துறந்த இடம். அவ்விடத்தில் அவரது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோர்க்கும் தனித்தனி ஸந்நிதிகள் உள்ளன. ததீசி குண்ட் எனப்படும் அழகான குளக்கரையில் அமைந்திருக்கிறது இந்த ஆஸ்ரமம்.

Sunday, January 20, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 196 வ்ருத்ராசுரன்

தன் மகனான விஸ்வரூபரைக் கொன்றதற்காக, இந்திரன் மீது சினம் கொண்டு அவனை அழிக்க, ஒரு பகைவனை ஏற்படுத்த, த்வஷ்டா ஒரு வேள்வி செய்தார்.

வேள்வியின் முடிவில் ப்ரளயகால காலனோ என்னும்படி ஒரு ப்ரும்மாண்டமான உருவம் அக்னிகுண்டத்திலிருந்து வெளிப்பட்டது. அவன் உடல் நாற்புறமும் பல காத தூரத்திற்குப் பெருகி வளர்ந்தது. எரிந்து கருகிய மலைபோலும், மாலை வேளையின் மேகக்கூட்டம்போலும் இருந்தான் அவன்.

அவனது தலைமுடியும் தாடியும் சிவப்பு நிறத்தில் இருந்தன. கண்கள் நெருப்புக் கங்குகளைப் போல் இருந்தன.

ஒரு பெரிய முத்தலைச் சூலத்தைக் கையிலேந்தியபடி உரக்கக் கத்திக்கொண்டு குதித்தாடத் துவங்கினான். பூமி நடுங்கியது.

அடிக்கடி கொட்டாவி விட்டன். அவன் வாய் மலைக் குகை போலிருந்தது. ஆகாயத்தை விழுங்குபவன்போல் வாயைத் திறந்தான். அவனைக் கண்டு அனைவரும் பத்து திசைகளிலும் சிதறி ஓடினர்.

அவனுக்கு வ்ருத்திரன் என்ற காரணப்பெயர் அமைந்தது. வ்ருத்திரன் என்றால் எங்கும் வியாபித்திருப்பவன் என்று பொருள்.

தலைசிறந்த தேவர் அனைவரும் பற்பல ஆயுதங்களைக் கொண்டு அவனைத் தாக்கினர். ஆனால், அவன் அனைத்தையும் விழுங்கிவிட்டான். அவனது திறன் வளர்ந்துகொண்டே போவதைக் கண்டு பயந்துபோன தேவர்கள், அந்தர்யாமியான ஸ்ரீ மன் நாராயணனைத் துதிக்கலாயினர்.

பகவானே! தங்களுக்கு எதுவும் புதிதல்ல. எதைக் கண்டும் தாங்கள் வியப்படைவதில்லை. வேண்டுதல் வேண்டாமையற்ற பூரணர். தங்களை விடுத்து பிறரைச் சரணடைபவன் மூடன். அவன் நாயின் வாலைப் பற்றிக்கொண்டு கடலைக் கடக்க முயற்சி செய்பவன்.

சென்ற கல்பத்தின் முடிவில், ஸத்யவிரதன் என்ற மனு, மத்ஸ்யமூர்த்தியான தங்கள் மூக்கிலுள்ள கொம்பில் படகைக் கட்டிக்கொண்டு ப்ரளயகாலத் துன்பத்தை வென்றார். தங்களைச் சரணடைந்த எங்களையும் காக்கவேண்டும்.

ஒருமுறை ஊழிக்காற்றின் இறைச்சலைக் கேட்டு பயந்த ப்ரும்மதேவர் நாபிக் கமலத்திலிருந்து ஊழிக்கால நீரில் தவறி விழுந்தார். அப்போது எந்த உதவியும் இன்றி, தங்களைச் சரணடைந்து அந்த துன்பத்தைக் கடந்தார். அதுபோல் நீங்கள் எங்களைக் காப்பாற்றவேண்டும்.

தேவர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் பகைவர்களால் துன்புறும் சமயம், பகவானான தாங்கள் மாயையால் பல உருவங்கள் ஏற்று எங்களையும் தங்கள் அடியார்களாகக் கருதி காப்பாற்றி வருகிறீர்.

நீங்களே எங்களது ஆன்மா. நீர் உலகமாகவும், தனித்தும் இருக்கிறீர். எங்களுக்கு எல்லா நலன்களையும் அளிப்பீராக. என்று வேண்டினர்.
அவர்களின் துதியைக் கேட்டு பகவான் நாராயணர் அங்கு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி மேற்கு திசையில் பதினாறு பார்ஷதர்கள் சூழத் தோன்றினார்.
அதைக் கண்ட தேவர்கள் அனைவரும் அவரை விழுந்து வணங்கினர்.

பகவானே! காலரூபனான தங்களுக்கு வணக்கம். வேள்விகளின் பயனாக ஸ்வர்கம் முதலிய லோகங்களை அளிப்பவரே! வேள்விகளுக்கு இடையூறு செய்பவரைத் தகர்ப்பவரே! பற்பல திருநாமங்கள் கொண்டவரே! தங்களுக்கு வணக்கம்! ஸ்ரீ மன் நாராயணா! பர வாஸுதேவரே! ஆதிபுருஷரே! புருஷோத்தமரே! எல்லை கடந்த பெருமை உடையவரே! மங்களரூபரே! கல்யாண ஸ்வரூபரே! ஏழைப் பங்காளரே! அகில உலகங்களுக்கும் ஆதாரமானவரே! ஒத்தார் மிக்கார் இலாதவரே! அனைத்துலக நாயகரே! ஸர்வேஸ்வரரே! அழகும் இளமையும் கொண்ட திருமகள் கேள்வரே! யோகிகளின் உள்ளத்தில் விளங்குபவரே! தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறோம்.
என்று கூறி இன்னும் பலவாறாகத் துதி செய்தனர்.

மேலும், தாங்களே எங்களைக் காத்தருளவேண்டும். வ்ருத்திராசுரன் எங்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விழுங்கி விட்டான். மேலும் ஒவ்வொரு உலகமாக விழுங்கிக்கொண்டு வருகிறான். அவனைத் தாங்கள் கொன்று ஒழிக்கவேண்டும். எங்களைக் காப்பற்றுங்கள் என்று கூறி வணங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, January 19, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 195 ப்ரும்மஹத்தி

சுகாசார்யார் கூறலானார்.
விஸ்வரூபருக்கு மூன்று தலைகள் உண்டு.

ஒரு சமயம் தேவர்களின் குருவான அவர், யாகம் அவர்கள் பொருட்டு யாகம் செய்வித்தார். அவ்வமயம், தன் தந்தையான த்வஷ்டா, பன்னிரு ஆதித்யர்களில் ஒருவரானதால், உரத்த குரலில் மரியாதையுடன் தேவர்களுக்கான அவியுணவை அளித்தார்.

ஆனால், கூடவே, மறைமுகமாக, அசுரர்களுக்கும் அவியைக் கொடுத்தார்.

அசுரர்கள் அவரது தாய் வழி உறவு. தாய்வீட்டுப் பாசத்தினால் அசுரர்கள் மேலும் அவருக்கு ஒரு வாஞ்சை இருந்தது. அதனால் அப்படிச் செய்தார்.

அதைக் கவனித்துவிட்ட இந்திரன், தேவர்களை அவமதித்து அறநெறிக்குப் புறம்பாக துரோகம் செய்கிறார் என்று விஸ்வரூபர் மீது கடுங்கோபம் கொண்டான். சினத்தினால் அவருடைய மூன்று தலைகளையும் வெட்டிச் சாய்த்துவிட்டான்.

விஸ்வரூபரது மூன்று தலைகளும் மூன்று பறவைகளாக உருக்கொண்டன.

இந்திரன் விரும்பியிருந்தால் விஸ்வரூபரைக் கொன்றதற்காக வந்த ப்ரும்மஹத்தி தோஷத்தை பரிஹாரங்கள் செய்து தவிர்த்திருக்கலாம். ஆனால், தான் செய்தது தவறில்லை‌. எனவே விளைவை அனுபவிக்கலாம். பின்னால் வரும் சந்ததியினருக்குப் பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததால், அந்த தோஷத்தைத் தன் இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டான்.

அவனது தேஜஸ் அழிந்துபோயிற்று.
ஒரு வருடம் வரை அதை நீக்கிக்கொள்ள எந்த உபாயமும் செய்யாமல் மறைந்திருந்து அனுபவித்தான்.

பின்னர், தன் தோஷமான பாவத்தை நான்காகப் பிரித்து பூமி, தண்ணீர், மரம், மற்றும் பெண்கள் ஆகியோர்க்கு அளித்தான்.

மண்ணை வெட்டிப் பள்ளமாக்கினாலும் அவ்விடம் தானாகவே தூர்ந்துவிடவேண்டும் என்ற வரத்தைப் பெற்றுக்கொண்டு பூமி இந்திரனின் ப்ரும்மஹத்தி தோஷத்தில் நான்கில் ஒரு பாகத்தை வாங்கிக்கொண்டது. அதன் பலனாக பூமியில் உவர்நிலம் ஏற்பட்டது. அங்கு பயிர் பச்சைகள் எதுவும் வளராது.

மரம் தான் வெட்டப்படாலும் மீண்டும் அவ்விடத்தில் கிளை துளிர்க்கவேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்டு தோஷத்தை பிசினாகக் (மரங்களில் இருக்கும் கோந்து போன்ற பசை) கொண்டது.

எந்தப் பொருளுடன் கலந்தாலும் அது அளவில் அதிகமாக வேண்டும். அருவிகளாகவும், வெள்ளமாகவும் வளரவேண்டும். இயற்கையில் எப்போதும் திரவமாகவே இருக்கவேண்டும் என்று நீர் வரம் வாங்கிக்கொண்டது.
ப்ரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பாகம் நீரில் நுரையும் நீர்க்குமிழிகளாகவும் வெளிப்படுகிறது. அதை நீரிலிருந்து எடுப்பவன் நீரின் பாவத்தை அகற்றுகிறான். அதிலேயே விடுபவன் பாவத்தை அடைகிறான். அதனால்தான் மக்கள், நுரையை நீக்கிவிட்டுத் தண்ணீரை எடுத்துக்கொள்கின்றனர்.

பெண்கள் கர்பமுற்றாலும் இன்பத்திற்குக் குறைவின்றி இருக்கவேண்டும் என்ற வரத்தை வாங்கிக்கொண்டு ப்ரும்மஹத்தி தோஷத்தை மாதவிடாயாக அனுபவிக்க ஒப்புக்கொண்டனர்.

தன் பிள்ளை விஸ்வரூபரை இந்திரன் கொன்றுவிட்டான் என்றறிந்த த்வஷ்டா கடுங்கோபம் கொண்டார். தானே வலிய வந்து குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டு என் பிள்ளையை வதம் செய்துவிட்டான். இந்திரனின் பகைவனே நீ ஓங்கி வளர்வாய்! வெகு விரைவில் இந்திரனை ஒழிப்பாய்! என்று பொருள்படும்படி மந்திரத்தை உச்சரித்தவாறே ஒரு வேள்வியைச் செய்தார்.

#மஹாராண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, January 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 194 ஸ்ரீ நாராயண கவசம் - 3

27,28.
நவக்ரஹங்கள், வால் நட்சத்திரம், தீய மனிதர்கள், கொடிய விலங்குகள், அமானுஷ்ய பயங்கள், ஆகியவற்றால் ஏற்படும் மன சஞ்சலங்களும், விளைவுகளும் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தைச் சொல்லும் கணத்திலேயே மறைந்துவிடும்.

29. ஸாமவேதத்தை இறக்கைகளாகக் கொண்ட கருட பகவானும், விஷ்வக்சேனரும், ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தைச் சொன்னதுமே என்னை எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் காக்கட்டும்.

30. பகவான் ஸ்ரீ ஹரியின் நாமம், திருவுருவம், வாகனங்கள், ஆயுதங்கள், பார்ஷதர்கள் அனைத்தும், எங்களது புத்தி, புலன்கள், மனம், ஐந்து ப்ராணன்கள் ஆகியவற்றை அனைத்துவிதமான ஆபத்துக்களிலிருந்தும் எல்லா வகையிலும் காத்தருளட்டும்.

31. அனைத்து உலகங்களும், அவற்றின் செயல்பாடுகளும் உண்மையில் ஸக்ஷாத் பகவானின் ஸகுண வடிவம் என்பது உண்மையெனில், அவர் பெயரால் நமது அனைத்து துன்பங்களும் அழிந்து ஒழியட்டும்.

32, 33. எல்லா ரூபங்களும், ஜீவன்களும் மாறுபாடற்ற பகவத் ஸ்வரூபமே என்றாலும் பகவான் தன் மாயையினால் மந்த புத்தியுள்ளவர்களுக்கு, பல்வேறு ரூபங்களைக் காட்டுகிறார். எனவே, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்ரீ ஹரி எனக்கு எல்லா வகையிலும் காவலாய் விளங்கட்டும்.

34. ஸ்ரீ ந்ருஸிம்ம மூர்த்தியின் ஒளியால் அனைத்து ஒளி மண்டலங்களும் மங்கிப்போகின்றன. அவர் தன் அட்டஹாஸச் சிரிப்பால் அனைத்து ஜீவராசிகளின் பயத்தையும் போக்குகிறார். அவர் என்னை மேலும், கீழும், உள்ளும், வெளியும், எல்லா திசைகளிலும் காக்கட்டும்.

35. ஹே! இந்திரா! இத்தகைய நாராயண கவசத்தை உனக்கு உபதேசித்தேன். இதை நீ பல முறை ஜபம் செய்து உனக்குக் கவசமாக்கிக்கொள். இதனால் நீ அசுரர்களை எளிதில் வெல்லலாம்.

36. ஸ்ரீ நாராயண கவசத்தை ஓதி சித்தி பெற்றவன் யாரைத் தொட்டாலும், பார்த்தாலும் அவன் எல்லா வித பயங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

37. இந்த மந்திர கவசத்தை அணிந்து கொள்பவனுக்கு அரசர்கள், திருடர்கள், பூத பிசாசங்கள், கொடிய விலங்குகள் ஆகிய எதனாலும் எங்கும் எப்போதும் எவ்விதத்திலும் பயமில்லை.

38. முன்னொரு சமயம் கௌசிக கோத்திரத்தில் பிறந்த அந்தணன் ஒருவன் இந்த ஸ்ரீ நாராயண கவசத்தை சித்தி செய்து தன் யோகசக்தியால் தன் உயிரை ஒரு பாலைவனத்தில் விட்டான்.

39, 40. ஆகாயத்தில் மனைவிகளுடன் விமானத்தில் பறந்துகொண்டிருந்த சித்ரரதன் என்ற கந்தர்வ அரசன் அவ்விடம் வந்ததும் தலைகீழாக விழுந்தான்.
அதனால் வியப்படைந்த வால்கியர்கள்‌ என்ற முனிவர்கள் அவ்விடத்தில் இறந்துபோன அந்தணன் ஸ்ரீநாராயண கவசத்தை சித்தி பெற்றவன் என்று சொல்லி அதன் மஹிமையையும் அவனுக்குச் சொன்னார்கள்.

அதைக் கேட்டு சித்ரரதன் அந்த அந்தணனின் எலும்புகளை பொறுக்கி எடுத்து ஸரஸ்வதி நதியில் போட்டு நீராடிப் பின் தன் இருப்பிடம்‌ சென்றான்.

41.ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! துன்பம் நேரும் சமயத்தில் இந்த ஸ்ரீ நாராயண கவசத்தை மிகுந்த மன ஈடுபாட்டுடன் கேட்பவன், மற்றும் சித்தி செய்து அணிபவன் அனைத்து பயங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை எல்லா ஜீவராசிகளும் தலை வணங்கும்.

42. நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரன், குருவான விஸ்வரூபரிடமிருந்து உபதேசமாகப் பெற்ற இந்த ஸ்ரீ நாராயண கவசத்தின் மஹிமையால் போர்முனையில்‌ அசுரர்களை வென்று மீண்டும் இந்திரபதவியை அடைந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, January 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 193 ஸ்ரீ நாராயண கவசம் - 2

15. தன் தெற்றிப்பற்களால் பூமியை ப்ரளய ஜலத்தினின்று தூக்கிக்கொண்டு வந்தாரே. அந்த ஸ்ரீவராஹர் தனிவழிப்பாதையில் என்னைக் காக்கட்டும். மலைச் சிகரங்களில் பரசுராமரும், பயணங்களின்போது, ராமலக்ஷ்மணர்களும் என்னைக்‌ காக்கட்டும்.

16. எல்லாவிதமான பில்லி சூனியம், மற்றும் ஆபிசாரங்களிலிருந்தும், ஏமாற்றங்களிலிருந்தும் ஸ்ரீமன் நாராயணன் என்னைக் காக்கட்டும். ரிஷிகளில் சிறந்தவரான நரன் அர்ஜுனன் என்னை செருக்கிலிருந்து கப்பாற்றட்டும். தத்தாத்ரேயர் என்னை யோகங்களின் இடையில் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து என்னைக் காக்கட்டும். ஸ்ரீ கபில வாசுதேவர் என்னை கர்ம பந்தங்களிலிருந்து காபாற்றட்டும்.

17. ஸனத்குமாரர் என்னை காமத்திலிருந்து காத்தருளட்டும். ஹயக்ரீவர் நடைபாதைகளிலும், வழியிலும் உள்ள தெய்வங்களை நான் வழிபடாமல் சென்ற பாவத்திலிருந்து என்னைக் காக்கட்டும். பகவானின் பூஜைக்கு ஏற்படும் தடைகளையும், பகவான்/ குரு சேவையில் ஏற்படும் முப்பத்தியிரண்டு விதமான அபராதங்களையும் தேவரிஷி நாரதர் போக்கட்டும். கூர்மாவதார பகவான் என்னை நரகத்தில் விழாமல் காக்கட்டும்.

18. தன்வந்த்ரி பகவான் தூய்மையற்ற உணவால் ஏற்படும் உபாதைகளிலிருந்து என்னைக் காக்கட்டும். ரிஷபதேவர் இன்ப துன்ப இரட்டைகளிலிருந்தும் யக்ஞமூர்த்தி இழி/ பழிச்சொற்களிலிருந்தும், மனிதர்களால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து பலராமனும், பாம்புகளிடமிருந்து ஆதிசேஷனும் என்னை எப்போதும் காக்கட்டும்.

19. அஞ்ஞானத்திலிருந்து வியாஸர் காக்கட்டும்.‌ உலக மயக்கங்களிலிருந்து புத்த பகவான் காக்கட்டும். கல்கி பகவான் கலியின் கொடுமைகளிலிருந்து என்னை விடுவிக்கட்டும்.

20. காலையில் என்னை கேசவனும், குழலூதும் கண்ணன் ஸந்தி வேளையிலும், பிற்பகலில் நாராயணனும், நடுப்பகலில் சக்கரமேந்திய மஹாவிஷ்ணுவும் என்னைக் காக்கட்டும்.

21.சார்ங்கம் தரித்த மதுசூதனன் என்னை பிற்பகலில் காக்கட்டும். மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான மாதவன் மாலையில் எனைக் காக்கட்டும். ப்ரதோஷ காலத்தில் ஹ்ருஷீகேசனும், முன்னிரவிலும் பின்னிரவிலும் பத்மநாபனும் என்னைக் காக்கட்டும்.

22. ஸ்ரீ வத்ஸம் தரித்த ஸ்ரீ ஹரி என்னை இரவிலும், விடியும் வேளையில் நந்தகம் ஏந்திய ஜனார்த்தனனும், காலையில் தாமோதரனும், ஸந்தி வேளைகளில் விஸ்வரூபனான பகவானும் என்னைக் காக்கட்டும்.

23. சுதர்சன மூர்த்தியே! தங்களது சுற்றுவட்டம் மிகவும் கூர்மையானது. ஊழித்தீ போன்றது. காற்றுடன் சேர்ந்த நெருப்பு காய்ந்த புற்களைப் பொசுக்குவதுபோல் நீர் என் பகைவர்களைப் பொசுக்கவேண்டும்.

24. கௌமோதகமான கதையே! உங்களிடமிருந்து கிளம்பும்‌ தீப்பொறி வஜ்ரப்படை போன்றது. ஸ்ரீமன் நாராயணனுக்கு மிகவும் ப்ரியமானவள் நீ. அவரது தொண்டனான என்னை அரக்கர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிரகங்கள் ஆகியவற்றிலிருந்து காப்பற்று.

25. பாஞ்சஜன்யம் என்ற பெயர்கொண்ட வெண்சங்கே! ஸ்ரீ க்ருஷ்ணன் உன்னை வாயில் வைத்து ஊதுவாரே. அவ்வொலியால்‌ நீ என் எதிரிகளின் இதயத்தைப் பிளந்துவிடு. ப்ரேதங்கள், பூதங்கள், பிசாசங்கள், ப்ரும்மராக்ஷஸர்கள் ஆகியவர்களை துரத்தி ஓடச் செய். அவர்களின் பார்வையிலிந்து என்னைக் காப்பற்று.

26. நந்தகம் எனப்படும் கூர்மையான கத்தியே! நீ பகவானுக்கு ப்ரியமானவன். என் பகைவர்களை சின்னாபின்னமாக்கு. சந்திரமண்டலம் போன்று நூற்றுக்கணக்கான மண்டலங்களுடைய கேடயமே! பகைவர்களின் கொள்ளிக் கண் பார்வையிலிருந்து என்னைக் காப்பாற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, January 16, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 192 ஸ்ரீ நாராயண கவசம் - 1

இந்திரன் செய்த அவமரியாதையால் தேவகுருவான ப்ருஹஸ்பதி பகவான் மனம் வருந்தி தன்னை மறைத்துக்கொண்டார். குருவை அலட்சியம் செய்ததால் தேவர்களுக்கு ஆபத்து சூழ்ந்தது. அவர்களின் தேஜஸ் அழிந்துபோனது. சக்திகளை இழந்தனர். குருகடாக்ஷம் இல்லையெனில் வெற்றி பெற இயலாது என்பதால் ப்ரும்மா தற்காலிகமாக த்வஷ்டாவின் புதல்வனான விஸ்வரூபனை குருவாக நியமித்துக்கொள்ளும்படி தேவேந்திரனுக்கு பரிந்துரை செய்தார்.

தேவர் தலைவன் விஸ்வரூபனை குருவாக இருக்கும்படி வேண்டினான். விஸ்வரூபனும் மனம் மகிழ்ந்து சம்மதித்தான்.

சுக்ராசார்யார் தமது பலத்தால் அசுரர்களின் செல்வத்தைக் காத்தபோதிலும், அனைத்திலும் வல்ல விஸ்வரூபன் ஸ்ரீநாராயண கவசத்தின் பலத்தால் அவற்றை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்.

ஸ்ரீ நாராயண கவசத்தை இந்திரனுக்கு மீண்டும் உபதேசித்தார்.

அப்போது பரீக்ஷித் ஸ்ரீநாராயண கவசத்தை தனக்கும் உபதேசம் செய்யும்படி வேண்டினார்.

விஸ்வரூபனால் இந்திரனுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த ஸ்ரீ நாராயண கவசம் அதை சித்தி செய்துகொள்பவனை முக்காலமும் காக்க வல்லது. எதிரிகளை அழிக்கவல்லது.

நாற்பத்தியிரண்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1,2.

ரிஷிகளில் சிறந்தவரே! இந்திரன் எந்த மந்திரத்தால் காப்பாற்றப்பட்டான்? அதை எனக்குக் கூறுங்கள். அவன் தன் பகைவர்களை எவ்வாறு வென்றான் என்றும் அறிய விரும்புகிறேன்.
என்றான்.

3. ஸர்வ மங்களமும் தரும் ஸ்ரீ நாராயண கவசத்தைக் கூறுகிறேன் கேள் என்று சொல்லித் துவங்கினார் சுகர்.

4-7.
விஸ்வரூபன் கூறலானார்.
பயம் ஏற்படும்போது ஸ்ரீ நாராயண கவசத்தைக் கூறி நம்மைப் பாதுக்காத்துக்கொள்ள வேண்டும்.
அதன் நியமங்களாவன.

முகம், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.
வலக்கை மோதிர விரலில் தர்பையினால் ஆன பவித்ரத்தை அணிந்து வடக்கு நோக்கி அமரவேண்டும். மேலும், த்வாதஸாக்ஷரி மற்றும் அஷ்டாக்ஷர மந்திரங்களால் உடலின் பாகங்களைத் தொட்டு அங்க நியாஸம் மற்றும் கர ந்யாஸம் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

8-10. விஷ்ணவே நம: என்ற மந்திரத்தால்‌ உடலின் சந்திகளில் நியாஸம்‌செய்துகொண்டு தலைச் சுற்றி திக்பந்தனம் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் செய்பவன் மந்திரமயமான உடலைப் பெறுகிறான்.

11. ஆறு குணங்கள் கொண்ட பகவானை தியானம் செய்தல் வேண்டும். தன்னையும் பகவானின் ஸ்வரூபத்தில் ஒருவனாகக் காணவேண்டும்.
அதன் பின்னர் ஸ்ரீ நாராயண கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

12. பகவானுக்கு அனைத்து விதமான ஸித்திகளும் சேவை செய்கின்றன. சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்பு, வில், பாசம், ஆகியவற்றைத் தன் எட்டு கரங்களிலும் தாங்கி கருடனின் முதுகில் தன் தாமரைத் திருவடிகளைப் பதித்து நிற்கும் ஸ்ரீமன் நாராயணன் என்னை எல்லா உலகங்களிலும் காக்கட்டும்.

13. மீன் வடிவம் கொண்ட பகவான் என்னை நீரிலும், நீருக்கடியிலும், நீர்வாழ் உயிரினங்களிடமிருந்தும், மற்றும்‌ வருண பாசத்தினொன்றும் என்னைக் காத்தருளட்டும். ப்ரும்மசாரியாக வந்து திரிவிக்ரமூர்த்தியாக வளர்ந்த வாமன பகவான் என்னை நிலத்திலும், ஆகாயத்திலும் காக்கட்டும்.

14. அசுரக்கூட்டங்களின் பகைவரான ஸ்ரீ நரஸிம்மரின் அட்டஹாஸச் சிரிப்பு எண்டிசைகளிலும் எதிரொலித்ததே. அதைக் கேட்டு அசுரப் பெண்களின் கர்பங்கள் பயத்தால் நழுவிற்றே. அத்தகைய ந்ருஸிம்ஹர் என்னை கோட்டை, போர்முனை, காடுகள் ஆகியவற்றில் என்னைக் காக்கட்டும்.

ஸ்ரீ நாராயண கவசத்தின் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதம் PDF வடிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..