Thursday, February 28, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 219 ப்ரஹலாதனின் உபதேசம்

பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களைக் கற்றபோதிலும், அவற்றில் மனம் ஒப்பவில்லை ப்ரஹலாதனுக்கு.

ஒருநாள் குருமார்கள் இருவரும் பூஜை, ஹோமங்கள் முதலியவற்றை  இல்லறத்தார்க்குச் செய்து வைப்பதற்காக வெளியில் சென்றனர்.

ஆசிரியர் வெளியில் போயிருக்கிறார். சில மணி நேரங்களுக்கு வரமாட்டார் என்றறிந்தால் வகுப்பறை என்னாகும்?

எல்லாக்‌ குழந்தைகளும் விளையாடத் துவங்கின. ப்ரஹலாதனின் ஒத்த வயதுள்ள சிறுவர்கள் அவனை விளையாட அழைத்தனர்.

மிகவும் புத்திசாலியான ப்ரஹலாதன் அவர்கள் தன்மீது கொண்ட கள்ளமற்ற‌ அன்பை முழுதுமாய் உணர்ந்தவன். எனவே, அவர்களின் நன்மையைக் கருதி இனிய சொற்களால் உபதேசம்‌ செய்தான்.

சிறுவர்கள் மனம் கெடாமல் தூய்மையாய் இருப்பவர்கள். அவர்கள் ப்ரஹலாதன் மேலுள்ள ஈர்ப்பினால், அவனைச் சுற்றி அமர்ந்து அவன் சொல்வதைக் கேட்கத் துவங்கினர்.


நண்பர்களே! இவ்வுலகில் மானுடப் பிறவி மிகவும்‌அரிதானது. இதன் மூலம் அழியாத பரம்பொருளை அடைந்து விட முடியும்

இதெல்லாம் வயதான பிறகுதானே ப்ரஹலாதா?

அப்படி இல்லை. மிகவும் குறுகிய இப்பிறவியில் ஆயுள்காலம் நிச்சயமில்லை.

இளவயதில் மரணிப்போரும் உண்டு. மிக நீண்ட காலம் வாழ்ந்து, எமனின் வரவை எதிர்நோக்குவாரும் உண்டு.

காலத்தை வீணாக்காமல் இறைவனை அடையும் சாதனைகளை இளவயதிலேயே  பழகிவிடவேண்டும்.
பகவானின் திருவடிகளே ஒருவர்க்கு உற்ற துணை. அவரே அனைத்து ஜீவராசிகளின் உள்ளும் உறைபவர். தலைவர். உற்ற நண்பர்.

ப்ரஹலாதா! நீ அரசரின் மகன். உழைக்காமல் இருந்து சாதனை செய்தாலும் வாழ்க்கை வசதிகள் கிட்டும்.‌ எங்களுக்கு அப்படி இல்லையே.

புலன்களால் நுகரப்படும் இன்பம் முன்வினைக்கேற்ப நிச்சயம் கிடைக்கும். கர்மாவின் படி அதற்கான முயற்சிகளை ஒருவன் எப்படியும் செய்துவிடுவான். அதற்காகப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை.
துன்பம் வேண்டாம் என்றெண்ணுபவர்க்கும் துன்பம் வருவதுபோல், இன்பம் வேண்டாம் என்றாலும் கர்மாவின்படி நிகழும்.

ஒரு பயணத்தில்,  வண்டியில் ஏறி அமர்ந்தால் போதும். வேடிக்கை பார்த்து, வீண் விவகாரங்களில் ஈடுபடுவோராயினும்,  அயர்ந்து உறங்கிக்கொண்டே செல்வோராயினும் இலக்கை அடைந்து விடுவது போல், உடலின் யாத்திரை கர்மப்படி நடந்துவிடும். ஆனால், மனத்தை இறையின் பால் வைத்து விட வேண்டும்.

உடல் எடுத்தவரே சாதனை செய்து இறையை அடைய இயலும். கிழட்டுத்தனம், நோய் ஆகியவற்றில் அகப்படுவதற்கு முன்பே ஒருவன் ஆன்ம நலனுக்கான முயற்சியைச் செய்தாகவேண்டும். இல்லையெனில் பிறவிச் சுழலில் சிக்க நேரிடும்.

ஒரு மனிதனின் முழு வயது நூறு ஆண்டுகள் என்று கொண்டால், புலன்களை வயப்படுத்தாதவனுக்கு அதில் பாதியான 50 வருடங்கள் உறக்கத்தில் கழியும்.

குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும், நன்மை தீமையை உணராமல் 20 ஆண்டுகள் ஓடும்.

கிழட்டுத்தனம் வந்துவிட்டால் கடைசி 20 ஆண்டுகளில் ஒன்றும்‌செய்ய இயலாது.

மீதி பத்து ஆண்டுகள் நிறைவேறாத ஆசைகளைத் தொடர்ந்து ஓடுவதிலேயே கழித்து விடுகிறான் மனிதன்.

யான், எனது என்ற பற்றினால் கட்டப்பட்ட புத்தி தன்னை விடுவித்துக்கொள்வது மிகவும்‌ கடினம்.

அறிஞனாக இருப்பினும், இறைவனை நினைக்காமல், உலகியல் பற்றுக்களில் உழல்வானாகில், பிறவிச் சுழலினின்று விடுபட இயலாது.

நண்பர்களே! உலக சுகங்களில் பற்றுள்ள அசுரர்களின் நட்பை உதறுங்கள். ஸ்ரீமன் நாராயணனையே கதியெனப் பற்றுங்கள். அவர் சான்றோர்களின் அன்பர். முடிவான புகலிடம்‌ ஆவார்.

அவரை எப்படி அடைவது ப்ரஹலாதா?

பகவானை மகிழ்விக்கப் பெரிய முயற்சிகளோ, உழைப்போ எதுவும் தேவையில்லை.

ஏனெனில் அவர் நம் ஆன்மாவில் உறைபவர். வேறெங்கோ இருப்பவர் இல்லை.

கஷ்டமான சாதனைகளைச் செய்தால்தான் பலன் என்பதில்லை.

நாள் முழுதும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு, சொற்பமான கூலி கிடைக்கும். ஆனால், ஒரு அறையில்‌ இருந்த இடத்தில் இருந்துகொண்டு சிறிது நேரம் ஒருவருடன் பேசுவதாலேயே பெரும்‌பொருளைச் சம்பாதிப்பவர் உண்டு.

அதுபோல், அசுர குணத்தை விடுத்து, அனைவரிடமும் அன்போடும், கருணையோடும் பழகுவதாலும், ஸ்ரீமன் நாராயணனின் திருப்பெயரையும், புகழையும் வாயாரப் பாடுவதாலும் இறையின் கவனத்தை ஈர்க்க இயலும். அத்தகையவர்க்கு முக்தியின்பம் கூடப் பெரிதல்ல.

அதுசரி, இறையைப் பாடினால் வயிற்றுக்கு உணவு கிடைக்குமா?

அவர் மனம் மகிழ்ந்தால் கிடைக்காதது ஏதாவது உண்டா? அனைத்து சாஸ்திரங்களிலும் அறம், பொருள், இன்பம் பற்றியே கூறப்பட்டிருக்கின்றன. ஆன்ம வித்யை, கர்ம காண்டம், தண்ட நீதி, அனைத்தும் வேதங்களில் உள. ஆனால், அவை இறையை அடைய வழி காட்டாவிடில் ஏது பயன்?

இப்போது நான் உபதேசம்‌ செய்த ஞானம்‌ கிடைத்தற்கரியது. இவையனைத்தும் இறைவனின் திருவடி தூளியில் மகிழ்ந்து நீராடும்‌ சான்றோரால் கற்பிக்கப்படுபவை. எனக்கு ஸ்ரீ நாரத மஹரிஷி இவற்றை உபதேசம் செய்தார் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 218

ப்ரஹலாதனின் ஆன்மபலம்

ஹிரண்யகசிபு ப்ரஹலாதனை பலப்பல முறைகளில் கொல்ல முயற்சி செய்தான்.

ஐந்து வயதுக் குழந்தையைக் கொண்டுபோய் பனிக்கட்டிகள் நிரம்பிய அறைக்குள் நாள் கணக்காய்த் தள்ளினான். குழந்தை அன்றலர்ந்த தாமரையைப் போல் இருந்தான்.

சூறாளவளிக் காற்றை அவன் மீது ஏவ, ஹ்ருதயத்தில் நாராயணனைப் ப்ரதிஷ்டை செய்த ப்ரஹலாதன் அசையக்கூட இல்லை.

நெருப்பை மூட்டி, அதன் நடுவில்‌ நிற்கவைத்தனர் குழந்தையை. அவனோ, தென்றல் வீசுவதை அனுபவிப்பதுபோல் மகிழ்வோடு இருந்தான்.


கல்லில் கட்டி நடுக்கடலில் கொண்டுபோய் குழந்தையைப் போட்டார்கள் அந்தக் கல் நெஞ்சத்தினர்.

ஸமுத்திரராஜன், பாக்யமென்று கருதி,  அவனைத்  தன் மடியில் ஏந்தி லாலனை செய்தவாறு  கரையில் கொண்டு சேர்த்தான்.

மலைக் குகைகளில் கொண்டு விட்டார்கள். குழந்தை பயப்படுகிறானா என்று பார்த்தால், அவன் கண்களை மூடி தியானம் செய்தவாறு அமர்ந்திருக்க, குகையில் இருந்த விஷ ஜந்துக்கள் அவனைச் சுற்றிக் காவலாய் நின்றன.


இவ்வளவு செய்தும் ப்ரஹலாதனைக் கொல்லமுடியாததால், அவனைக் கண்டாலே காவலர்கள் பயந்து ஓடினர்.

வேறு உபாயங்கள் ஏதும் தோன்றாததால், தன் இயலாமையை நினைந்து தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஹிரண்யகசிபு.

எத்தனை கொடூரமான வார்த்தைகளால் இவனைத் திட்டினேன். கொல்வதற்கு எத்தனை உபாயங்கள் செய்தேன். இருப்பினும் இவன் எந்த உதவியும் இன்றித் தன் ஆன்மபலத்தாலேயே தப்பித்துக்கொண்டானே.

சிறுவனானாலும், எவ்வித ஐயமும் இன்றி திடநம்பிக்கையுடன் இருக்கிறான். இவனிடம் ஏதோ மகிமை இருக்கிறது. எதற்கும் அஞ்சுவதில்லை. இறக்கவும் இல்லை.

நான் செய்த கொடுமைகள் மறக்கக்கூடியவை அல்ல.

ஒருக்கால், தந்தை சொத்து பிள்ளைக்கு என்பதுபோல், நான் செய்த தவத்தின் பயன் இவனை அடைந்துவிட்டதா?

இவனாலேயேகூட எனக்கு மரணம் வருமோ?

இப்படிக் கவலை கொண்ட ஹிரண்யகசிபுவின் முகம் வாடி, ஒளியிழந்து தரையை நோக்கத் துவங்கியது.

அதைக் கண்ட சண்டாமர்க்கர்கள் தனிமையில் அவனைச் சந்தித்து பின்வருமாறு கூறினர்.

அரசே! கவலைப் படாதீர்கள். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர் தாங்கள். இந்தச் சிறிய விஷயத்திற்கு ஏன் இவ்வளவு கவலை? குழந்தையின் செயலில் குற்றம் காணவேண்டாம். தானே சரியாகும். காலம் அனைத்தையும் மாற்றும்.

எங்கள் தந்தை சுக்ராச்சாரியார் வந்தால் இவனை சரி செய்துவிடுவார். அவர் வரும் வரை இவனை வருணபாசத்தால் கட்டி வையுங்கள். வளர வளர இவனது புத்தி மாறும். என்றனர்.

இதைக் கேட்டு ஹிரண்யகசிபு, சரி, இவனைக் கொண்டுபோய் க்ஷத்ரியர்களுக்குரிய கடமைகளை நன்கு உபதேசம் செய்யுங்கள். என்றான்.

அவர்கள் ப்ரஹலாதனை அழைத்துக்கொண்டு மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.

அவனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றிய அனைத்து சாஸ்திரங்களையும் போதித்தனர்.

ப்ரஹலாதன் இயல்பிலேயே வணக்கமுடையவன். குருமார்கள் சொல்லிக் கொடுத்ததைக் கற்றாலும் அவை சரியென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அவர்கள் அறம், பொருள், இன்பம் பற்றி‌ மட்டும் கற்பிக்கிறார்களே. அது விருப்பு வெறுப்புகளுடன் உலக சுகங்களில் உழல்பவர்க்குத்தானே பொருந்தும்?

அவனோ நான்காவதான வீடு எனப்படும் மோக்ஷத்தைக்கூட உதறிவிட்டு பகவான் மேல் அன்பு பூண்டொழுகுபவன். அதனால், அந்தப் பாடங்களை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, February 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 217 கொல்லத் துணிந்த தந்தை

நவவித பக்தி சாதனங்களைப் பற்றி தந்தைக்கு மிக அழகாக எடுத்துக் கூறினான் ப்ரஹலாதன்.

அதைக் கேட்ட ஹிரண்ய கசிபுவுக்கோ, கோபம் தலைக்கேறியது.

சண்டாமர்க்கர்களைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான்.

ஹே! அயோக்யர்களே! உண்ட வீட்டிற்கே இரண்டகமா? என் மகனுக்கு எதெதையோ கற்பித்திருக்கிறீர்களே. நீங்கள் பகவானின் கட்சியா? வேண்டியவர் போல் நடித்து உள்ளே பகை பாராட்டும் தீயோர்களே! என்று கர்ஜனை செய்தான்.

சுக்ராசார்யாரின் புதல்வர்கள் அரசனைக் கண்டு மிகவும்  பயந்தார்கள்.

அரசே! இதையெல்லாம் நாங்கள் சொல்லித்தரவில்லை. வேறெவரும் கூடக் கற்பிக்கவில்லை. இவனுக்கு இந்த புத்தி இயல்பாகவே இருக்கிறது. வீணாக எங்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். என்றனர்.

உடனே, ஹிரண்யகசிபு, ப்ரஹலாதனைப் பார்த்து, குரு சொல்லித் தராவிட்டால், உனக்கெப்படியடா இவ்விஷயங்கள் தெரிந்தது? என்றான்.

ப்ரஹலாதனோ,

அப்பா! மக்கள் உலகியல் விஷயங்களையே அரைத்த மாவை அரைப்பது போல் சுற்றி சுற்றி வருகின்றனர். புலன்களை வசப்படுத்தாவிடில், ஆசை தீரவே தீராது. மனைவி, மக்கள், வீடு, வாசல் என்று பற்று கொண்டவர்களுக்கு, பகவத் பக்தி, எடுத்துக் கூறினாலும் வராது.

ஒரு குருடன் வழிகாட்ட, அவனைத் தொடர்ந்து செல்லும் குருடன்போல், சம்சாரப் படுகுழியில் வீழ்வர். உலகியல் ஆசைகளால் கெட்டுப்போன அந்தக்கரணத்தை உடையவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனே இம்மையும், மறுமைக்கும் பற்றாவான் என்பது தெரியாது.

யாருடைய மனம் பகவானின் சரணங்களில் ஈடுபடுகிறதோ, அவருக்கு பிறப்பு இறப்புக் கேடுகள் முற்றிலும் அழிகின்றன. அடியார்களின் திருவடிகளில் புரண்டு அழாதவர்களின் மனம் விஷயச் சேற்றில் அமிழும்.
என்றான்.

அதனைக் கேட்ட ஹிரண்யகசிபு, கடுங்கோபம் கொண்டு குழந்தை ப்ரஹலாதனை மடியிலிருந்து தூக்கி எறிந்தான்.

அசுரர்களே! இவனைக் கொல்லுங்கள். இவன் தன் சிற்றப்பனைக் கொன்றவனைத் தொழுகிறான். ஒருக்கால், என் தம்பியைக் கொன்ற அந்த விஷ்ணுவே இவன் உருவில் வந்தானோ?
ஐந்து வயதிலேயே நன்றி மறந்து பகைவன் புகழ் பாடுகிறான்.

உறவினன் இல்லாவிடினும் நோய் போக்கும் மருந்துபோல் உதவி செய்தால் அவன் மகனைப் போன்றவனே. மகனே ஆனாலும், தீமை செய்தால் அவன் நோய் போன்றவன். பகைவன்.

நம் உடலிலேயே ஏதேனும் உறுப்புகளால் தீங்கு நேருமாயின் அதை அகற்றவேண்டும். அபோதுதான் மற்ற உறுப்புகள் நலமுடன் இயங்கும்.

இவனை ஏதாவது உபாயம்‌ செய்து கொல்லுங்கள்‌ என்றான் ஹிரண்யகசிபு.

உடனே மிக பயங்கரமான உருவம் கொண்ட அசுரர்கள் கையில் சூலங்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்து ப்ரஹலாதனைப் பலமுறை குத்தினர். ப்ரஹலாதனின் மனமோ ஸ்ரீமன் நாராயணனிடம் லயித்திருந்தது. எனவே, குத்தியதெல்லாம் பயனற்றுப்போயின.

உடனே ஹிரண்யகசிபு மிகவும் ஐயமுற்று, மற்ற உபாயங்களைக் கொண்டு அவனைக் கொல்லச் சொன்னான்.

மதங்கொண்ட யானைகளால் மிதிக்கச் செய்தான். யானையோ சிறுவனை வணங்கிற்று.

விஷநாகங்களால் கடிக்கச் செய்தான். விஷம் ஒன்றும் செய்யவில்லை.


ஆபிசாரம் செய்து ஒரு அரக்கியை குழந்தை மீது ஏவினான். அவளால் ப்ரஹலாதனை நெருங்கக்கூட முடியவில்லை. தூக்கி எறியப்பட்டாள்.

மலை உச்சியிலிருந்து உருட்டிவிட, பூமாதேவி அஞ்சினாள். தன்னால் பக்த சிரோமணியான  இக்குழந்தைக்கு அடிபடக்கூடாதென்று பூப்போல் ப்ரஹலாதனைத் தாங்கினாள்.

சம்பராசுரனை விட்டு ‌பல மாயைகளை ஏவினான். குழந்தையின் முகத்தில் சிரிப்புகூட மாறவில்லை. அஞ்சுவதெப்படி?

இருள் சூழ்ந்த பாதாளச் சிறையில் அடைத்தான். ப்ரஹலாதன் தனிமையில்  ஆனந்தமாக கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தான்.

அன்னை கையாலேயே விஷம்‌ கொடுத்தான். அமுதம் உண்டவனைப்போல் ஒளிமிக்கவனாய் விளங்கினான் ப்ரஹலாதன்.

உணவு கொடுக்காமல் பட்டினி போட்டான். சரீரம் தான் என்ற எண்ணமில்லாதவனுக்கு பட்டினியும், விருந்தும் ஒன்றே. ப்ரஹலாதனின் சக்தி குறையவில்லை. முக மலர்ச்சியுடன் விளங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, February 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 216

நவவித பக்தி

சண்டாமர்க்கர்கள் ப்ரஹலாதனை எப்படி உனக்கு பகவானைப் பற்றித் தெரியும் என்று விசாரித்தனர்?

ப்ரஹலாதன் மிக அழகாக பதில் உரைத்தான்.

உலகியல் விஷயங்களில் பற்றுக் கொள்பவருக்கே மாயையினால், நான், எனது என்ற எண்ணம் வரும். பரமாத்மாவின் கருணைக்கு ஆட்பட்டவர்களுக்கு  இரண்டாவதாக ஒரு பொருள் தெரிவதில்லை.

என்று சொல்ல, அவர்கள் ஒன்றும் புரியாமல்  திருதிருவென்று விழித்தனர்.

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், பகவான்தான் எனக்கு இந்த புத்தியைக் கொடுத்தான் என்று எளிமையாக முடித்தான்.

காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல்  என் மனம் பகவானை நோக்கி ஈர்க்கப்படுகிறது.
என்றான்.

ஆசிரியர்களுக்கு ஒரு பக்கம் இவன் இப்படிப் பேசினால்  தங்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம். ஒரு பக்கம் மாணவன் சொல்பேச்சு கேட்கவில்லை என்ற கோபம்.

ஒரு பிரம்பை எடுத்துவந்து அடிப்பதைப் போல் மிரட்டி, அதட்டி, உருட்டி, இன்னும் பல உபாயங்கள் செய்து, ப்ரஹலாதனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கூறும் சாஸ்திரங்களை போதித்தனர்.

குறுகிய காலத்திலேயே அனைத்து பாடங்களையும் கற்றுத் தேர்ந்தான் ப்ரஹலாதன்.

அவனை அழைத்துச்சென்று அவன் தாயான கயாதுவிடம் விட்டனர் குருமார்கள்.

கயாது குழந்தைக்கு மங்கள ஸ்நானம்‌ செய்வித்து, பட்டு உடுத்திவிட்டு, மிக அழகாக அலங்கரித்து, ஹிரண்யகசிபுவிடம்  அழைத்துச் சென்றாள்.

ப்ரஹலாதன்  தந்தையைக்  கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

ப்ரஹலாதன் மிகவும் தேஜஸ் மிகுந்தவனாக, அழகான திருமேனியுடன் விளங்குவான். அவனை ஆசையுடன் தூக்கி எடுத்து மடிமேல் அமர்த்திக் கட்டியணைத்து உச்சி மோந்தான் ஹிரண்யகசிபு.

மனதார நீடுழி வாழ்வாய் குழந்தாய்! என்று ஆசீர்வாதம் செய்தான்.

ஹிரண்யகசிபு பெரிய தபஸ்வியாதலால், அவன் மனமகிழ்ந்து செய்த ஆசீர்வாதம் அப்படியே பலித்துவிட்டது ப்ரஹலாதனுக்கு.

துரியோதனனின் ஏச்சு தாங்கமல், பாண்டவர்களை அழிப்பேன். அர்ஜுனை வீழ்த்துவேன் என்று பீஷ்மர் சபதம் செய்தபோது பாண்டவர்கள் நடுங்கினர். அப்போது கண்ணன் மிகவும் தந்திரமாக போர்ப் பாசறையில் திரௌபதியை அழைத்துக் கொண்டு போய் பீஷ்மரை வணங்கச் செய்தான். பீஷ்மர் தீர்க சுமங்கலி பவ என்று ஆசீர்வாதம் செய்ய, கண்ணன் ததாஸ்து என்று முடித்தான். அவரது ஆசீர்வாத பலத்தினால் மஹாபாரதத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டபோதும், பாண்டவர்கள் ஐந்துபேரும் தப்பினர்.

அதே போல், தந்தையும் மிகப்பெரிய தபஸ்வியுமான  ஹிரண்யகசிபுவின் ஆசீர்வாதம் பின்னாளில்  அவனுக்கெதிராகவே வேலை செய்தது.

குழந்தையின் கமல முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஹிரண்யகசிபு, அவனிடம் கேட்டான்.

குழந்தாய்! எல்லாப் பாடங்களையும் இவ்வளவு சீக்கிரமாகவே  கற்றுத் தேர்ந்துவிட்டாயாமே? எங்கே நீ கற்றுக்கொண்டவற்றுள் சிறந்ததும் உனக்குப் பிடித்தமானதையும் கூறு பார்க்கலாம். என்றான்.

முதல் முறை கேட்டபோதே ஹரி சரணத்தை ஆஸ்ரயிக்கவேண்டும் என்று சொன்னோமே. தந்தைக்குப் புரியவில்லை போலும். எப்படி ஆஸ்ரயிப்பது என்று சொன்னால்தானே தெரியும் என்று நினைத்தான் குழந்தை.

உடனே சற்றும் தயங்காமல், அப்பா! நாராயணனிடம் பக்தி செய்யும் முறைகள் ஒன்பது.


ச்ரவணம் - பகவான்‌‌ ஸ்ரீ ஹரியின்  கதைகளைக் கேட்பது,

கீர்த்தனம் - அவரது பெயரையும் புகழையும் பாடுவது,

விஷ்ணோ: ஸ்மரணம் - அவரை எப்போதும் நினைத்து க் கொண்டிருப்பது, தியானம் செய்வது,

பாதஸேவனம் - அவரது திருவடி சேவை,

அர்ச்சனம் - அவரது மூர்த்திக்குப்  பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்வது

வந்தனம் - அவரை வணங்குவது

தாஸ்யம் - செய்யும் ஒவ்வொரு வேலையையும் பகவானின் உகப்பிற்காக மட்டும் செய்வது

ஸக்யம் - அவரை நண்பராக நினைத்துப் பழகுவது

ஆத்ம நிவேதனம் - தன்னையே அவரிடம் ஒப்படைத்து, ஒரு ஜடப்பொருள் போல் தன் வாழ்வு பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது

என்று மிக அழகாக விளக்கினான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, February 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 215

கற்றதில் உயர்ந்தது

நாரத மஹரிஷி கூறலானார்.

அசுரர்களின் குரு சுக்ராசார்யார். அவரது மகன்களான  சண்டன், அமர்க்கன் இருவரும் அரண்மனைக்கருகிலேயே பாடசாலை அமைத்துக் கொண்டனர்.

ப்ரஹலாதன், அவனது சகோதரர்கள் மற்றும் ராஜ வம்சத்து குழந்தைகள் அனைவரும் அந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களும் செவ்வனே அனைத்து சாஸ்திரங்களும் கற்றுக்கொடுத்தனர்.
ப்ரஹலாதன் ஏகசந்த க்ராஹி என்பதற்கேற்ப ஒரு முறை கேட்டதுமே அப்படியே பாடங்களை ஒப்பித்தான்.

ஆனால், அவனுக்குப் பாடங்கள் சரியாகப் படவில்லை.

அவை ப்ரும்மத்தைப் பற்றிய உண்மைப் பாடங்களாக இல்லாமல், தான், பிறர் என்ற வேற்றுமையை வளர்க்கும் பொய்ப்பாடங்களாக இருந்தன.

சிலநாள்கள் கழித்து, ஹிரண்யகசிபு பாடசாலையிலிருந்து திரும்பியிருந்த ப்ரஹலாதனை மிகவும் ஆசையுடன் மடியில் ஏற்றி வைத்துக்கொண்டு கேட்டான்.

குழந்தாய்! நீ இவ்வளவு நாள்கள் படித்தாயே. அதில் எதை  உயரந்த விஷயம் என்று நினைக்கிறாய்? சொல் பார்க்கலாம் என்றான்.

ப்ரஹலாதன் சற்றும் தயங்காமல் சொன்னான்.

அப்பா! உலகில் உள்ளவர் எல்லார்க்கும் நான் எனது என்ற பற்று வளரும்படியாக பாடங்கள் இருப்பது வருத்தமாய் இருக்கிறது. உண்மையில் நன்மை தருவது எது தெரியுமா? இந்த வீடு வாசல், உறவுகள் எல்லாம் என்னுடையது என்ற பற்றே ஜீவன்களின் தாழ்மைக்குக் காரணம். அவர்கள் பற்றை விடுத்து வைராக்யத்துடன் காட்டுக்குச் சென்று ஸ்ரீஹரியைச் சரணடையவேண்டும். அதுவே உயர்ந்தது என்றான்.

தந்தையின் நியமனப்படியே பாடத்திட்டம் இருப்பதால், அவரிடம் சொல்லி மாற்றலாம் என்று நினைத்தான் போலும்.

எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேலாக பகவன் நாம ஒலியே கேட்காத வண்ணம் உலகை ஆண்ட ஹிரண்யகசிபு, இப்போது தன் பாசத்திற்குரிய மகன் வாயிலாக இறைவன் புகழைக் கேட்டான்.

ஆனால், அந்தோ..ஆசிரியர்களால் குழந்தையின் மனம் கெடுக்கப்படுகிறதே என்றெண்ணினான்.

விஷ்ணுவின் பக்தர்கள் யாரோ பாடசாலையில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள்தான் குழந்தைகளுக்கு போதிக்கிறார்கள் என்று நினைத்தான்.

சண்டாமர்க்கர்களை அழைத்து, குழந்தைக்கு தீய பாடங்களை எவரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறு நிகழா வண்ணம் இவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களோடு ப்ரஹலாதனை அனுப்பிவிட்டான்.

சண்டாமர்க்கர்களுக்குத் தலை சுற்றியது.
ப்ரஹலாதனை அழைத்து விசாரித்தனர்.

குழந்தாய்! பொய் சொல்வது தவறு. உண்மையைச் சொல். உனக்கு மட்டும் ஏன் இந்த கெட்ட புத்தி? மற்ற எந்தக்‌ குழந்தையும் இவ்வாறு சொல்லவில்லையே. நாங்கள் சொல்லிக் கொடுப்பதைத்தானே கற்றுக்கொள்கிறாய்? வேறெவராவது வந்து உனக்கு ரகசியமாகச் சொல்லிக்கொடுக்கிறார்களா? ஏன் இந்த புத்தி மயக்கம்? என்று பலவாறு விசாரிக்க,

மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையைப் பேசுவதில் தீதென்ன இருக்கிறது என்று யோசித்தான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, February 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 214

தன் பக்தர்களான ஜெய விஜயர்கள் தானே ஹிரண்யாக்ஷனும், ஹிரண்யகசிபுவும்.  கால் கடுக்க எப்போதும் நின்றுகொண்டே இருப்பவர்கள். கைங்கர்ய சிரோமணிகள். வாய்ப்பு கிட்டும்போது,  தன்னிஷ்டம் போல்‌ சந்தோஷமாக இருக்கட்டும் என்று பகவான் ஒரு மன்வந்தரத்திற்கு ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

அசரீரி கேட்டதும் தேவர்களும் ரிஷிகளும் நிம்மதியடைந்தனர்.

ஹிரண்யகசிபுவுக்கு  நான்கு புதல்வர்கள். அவர்களுள் கடைசியாகப் பிறந்தவன் ப்ரஹ்லாதன்.

பொதுவாக முளைவிட்டு, செடி வளர்ந்து மலரும்போதுதான் நறுமணம் வரும்.  துளசி மட்டும் சிறியதாக முளை விடும்போதே இலையில் வாசனை வரும். அதுபோல் மஹான்கள் பிறக்கும்போதே பக்தியுடன் பிறக்கிறார்கள். பிற்காலத்தில் மஹானாகப் போகிறார் என்று  அவர்களின் இளவயதிலேயே தெரிந்துவிடும்.


ப்ரஹலாதன் மற்ற அசுரச் சிறுவர்கள் போல் இல்லை. அந்தணர்களிடம் பக்தி, ஒழுக்கம், வாய்மை, புலனடக்கம், அனைவரிடமும் அன்பு, இன்சொல், பிறர் நலம் பேணல் என்று அனைத்து நற்குணங்களும் பூண்டு ஒழுகினான்.

சான்றோரிடம் அடிமை போலவும், ஏழை எளியோரிடம் தந்தை போலவும், தன்னொத்த வயதினரிடம் உடன் பிறப்பைப் போலவும், ஆசார்யரிடம் பக்தனைப் போலவும் பழகினான். அரசனின் பிள்ளை என்ற செருக்கு துளியும் இல்லை.

ஏதேனும் துன்பம் நேர்ந்தாலும் வருந்துவதில்லை. இன்ப துன்பங்களில் சமபுத்தியுடன் விளங்கினான்.

யுதிஷ்டிரா! பகவானின் கல்யாண குணங்களுக்கு எல்லையில்லாதது போல் ப்ரஹலாதனின் கல்யாண குணங்களுக்கும் எல்லையே இல்லை.

சான்றோர்களே இவன் குணத்தைப் பாடுகின்றனர். அசுரர்களின் பகைவரான தேவர்களும்கூட ப்ரஹலாதனைப் பற்றியே எப்போதும் பேசினர்.

நாராயணன் மீது அவன் கொண்டிருந்த எல்லையற்ற அன்பு ஒன்றே போதும் அவன் குணங்களைப் பறை சாற்ற.

பாமர விளையாட்டுக்களை உதறிய ப்ரஹலாதன், அவ்வப்போது கண்களை மூடி இறைவனின் ஸ்வரூபத்தில் நிலைத்துவிடுவான். திடீரென்று பகவத் குணங்களைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணபக்தி என்ற கிரஹத்தால் பீடிக்கப்பட்டு நாமரூபம் உள்ள ப்ரபஞ்சத்தையே மறந்துவிடுவான்.

பகவானின் மடியில் அமர்ந்திருப்பது போன்றே  நினைத்துக்கொண்டிருப்பான். அமர்ந்தாலும் எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் நாராயணன் பெயரையே சொல்லி, பகவானின் நினைவில் ஆழ்ந்து செயல்களை மறந்திருந்தான்.

சிலசமயம், பகவத் விரஹத்தினால் கலங்கி அழுவான். பின்னர் பகவான் எதிரில் வந்துவிட்டதாகக் குதிப்பான். ஹ்ருதயத்தினுள் பகவானைக் கண்டு உரக்கச் சிரிப்பான்.

உலகினர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லை. சிலசமயம் பகவானுடன் தன்வயமாகி அவரது லீலைகளை அனுகரணம் செய்வான். சிலசமயம் மயிர் கூச்செறிந்து,‌ கண்கள் திறந்து நிலை குத்தியிருக்கும். சில‌சமயம் ஆனந்தக் கண்ணீர் வழியும்.

இத்தகைய பக்தனை எங்காவது பார்க்கமுடியுமா? அவனைப்போய் தன் பகைவன் என்றெண்ணினான் ஹிரண்யகசிபு.

யுதிஷ்டிரர் ஆச்சர்யம் மேலிட கேட்டார்.
மஹரிஷியே! இத்தகைய குழந்தையை யாராவது வெறுப்பார்களா? என்ன நடந்தது? விரிவாகச் சொல்லுங்கள் என்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 213 ஹிரண்யகசிபுவின் ஆட்சி

ஹிரண்யகசிபு கேட்ட வரங்கள் அனைத்தையும் ப்ரும்மதேவர் அளித்தார்.


அவன் கேட்ட வரங்கள் மிகவும் ஆபத்தானவைதான். ப்ரும்மாவை வணங்கிவிட்டு அவரையே அவமானப்படுத்துவதுபோல், உமது படைப்பினால் மரணம் நேரக்கூடாது என்று வேண்டினான் அவன்.

 ப்ரபஞ்சம் முழுவதுமே ப்ரும்மாவின் படைப்பு, அவருக்கு மேற்பட்ட தலைவர் இல்லையென்று நினைத்தானோ?

ப்ரும்மாவைப் படைத்தவர் பகவான் என்பதை அறியானோ?

அல்லது ஏற்கனவே த்வாரபாலகனாக இருந்தமையால், பகவானைப் பார்க்கவேண்டும், அவர் கையாலேயே மடிய வேண்டும் என்ற ஆசையால், வேறொருவரால் மரணம் வேண்டாம் என்று நினைத்தானோ?

காரணம் எதுவாயினும் கேட்டுவிட்டான். ப்ரும்மா ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சி, இப்போது அருள் செய்யக் கடமைப்பட்டுவிட்டார்.

எனவே, எவ்வளவு புத்திசாலித்தனமாக  வரம் கேட்டாலும், அதிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவனை அழிப்பது பகவானுக்கு வெகு சுலபம் என்று நினைத்து அசுரன் கேட்ட எல்லாவற்றிற்கும் தலையசைத்துவிட்டு, மீண்டும் அவனுக்கு ஏதேனும் நினைவுக்கு வருவதற்குள் தப்பித்துக்கொள்வோம்  என்று மறைந்துவிட்டார்.

இப்போது ஹிரண்யகசிபுவின் உடல் எல்லையற்ற வலிமை உடையதாயிற்று. தம்பி இறந்ததை நினைத்து நினைத்து பகவானிடம் மென்மேலும் பகையை வளர்த்துக்கொண்டான்.


நாட்டுக்குத் திரும்பியவன், மூவுலகங்களையும் வென்றான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷ, கின்னரர்கள், பித்ரு கணங்கள், பிசாசர்கள், மற்றுமுள்ள அனைத்து ப்ராணிகளின் தலைவர்களையும் வென்றான். எண்டிசை பாலகர்களின் சக்தியையும் பதவிகளையும் பறித்துக்கொண்டான்.

ஆலயங்கள் அனைத்திலும் ஹிரண்யகசிபுவின் உருவம்‌ ப்ரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. வேத மந்திரங்கள் அவனுக்கேற்றவாறு மாற்றி உச்சரிக்கப்பட்டன.‌ அனைத்து உலகங்களிலும் யார் என்ன நல்ல காரியங்களைச் செய்தாலும், அவற்றின் பலன் ஹிரண்யகசிபுவை அடையும்படி செய்யப்பட்டது.

புதிதாகத் தோன்றிய தலைமுறையினருக்கு பகவான் என்றாலே ஹிரண்யகசிபுதான் என்பதாக உபதேசிக்கப்பட்டது. எந்த இடத்திலும் பகவான் நாராயணனின் பெயரோ, மற்ற தேவர்களின் பெயரோ உச்சரிக்கப்படாத வண்ணம் அனைத்துமே மாறிற்று.

பின்னர் ஸ்வர்கத்திலேயே சென்று வசிக்கலானான்.
வேள்விகளில் தேவர்களுக்குத் தரப்படும் அவியுணவையும் தானே ஏற்றான்.

அவன் விரும்பிய வண்ணம் உலகங்கள் மாறின.
எல்லா விதமான சுகங்களையும், அற்புதப் பொருள்களையும் கடல்களும், மலைகளும் வாரிக் கொடுத்தன. புலன்களுக்கு அடிமைப்பட்டவனாக அனைத்தையும் ஆசைதீர அனுபவித்தான்.

இவ்வாறு எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேல்  ஹிரண்யகசிபுவின் ஆட்சி நீடித்தது.

ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியால் மிகவும் வருந்திய திக்பாலர்களும், மக்களும் பகவானைச் சரண் புகுந்தனர். மனத்திற்குள்ளாகவே துதிக்கலாயினர்.

அவர்கள் பலநாள்கள் புலன்களை அடக்கி மனத்தை ஒருமுகப்படுத்தி, உணவும் உறக்கமும் துறந்து தம்மைக் காக்கும்படி  பகவானை வேண்டினர்.

அப்போது ஒரு நாள், அசரீரி கேட்டது.

தேவர்களே! ஸாதுக்களே! பயம் வேண்டாம். எனக்கு இந்த அசுரனைப் பற்றித் தெரியும். சிறிது காலம் பொறுத்திருங்கள். நானே அவனை அழிப்பேன்.

எப்பேர்ப்பட்டவனாக இருப்பினும் தேவர்கள், பசுக்கள், அந்தணர்கள், சாதுக்கள், வேத தர்மம் ஆகியவற்றில் பகை கொள்பவன் விரைவிலேயே அழிவான்.

ஹிரண்யகசிபு மஹாத்மாவான தன் மகன் ப்ரஹ்லாதனுக்கே துன்பம் இழைக்க முற்படுவான். அப்போது நானே அவனை அழிப்பேன்.
என்பதாக அசரீரி ஒலித்தது.

இதைக் கேட்ட தேவர்களுக்கு மனத்தில் ஓர் ஐயம் எழுந்தது. எழுபத்தோரு சதுர்யுகங்களாக அசுரனிடம் வதைபடுகிறோமே. நாங்களும் பகவானின் குழந்தைகள்தானே. நாங்கள் சாதுக்கள் இல்லையா? எம்மைக் காக்க இறைவன் வரலாகாதா? ப்ரஹலாதனை ஹிரண்யகசிபு துன்புறுத்தும்போது மட்டும்தான் இறைவன் வரவேண்டுமா? என்பது.

இந்த தேவர்களைத் துன்புறுத்துவதுபோல், ப்ரஹலாதனை இன்னும் பல மடங்கு துன்புறுத்தப்போகிறான். தேவர்கள் இவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போது ஹிரண்யகசிபுவின் அழிவை விரும்புகின்றனர்.

ஆனால், தன்னைக் கொல்லத்துணியும்  தந்தையை அழிக்கும்படி ப்ரஹலாதன் ஒருபோதும் நினைக்கக்கூட மாட்டான் என்பதாலேயே அவனுக்காக பகவான் நேரில் வருகிறார். அத்தகைய சுத்த சாத்வீகம் நிறைந்த பக்தன் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, February 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 212 ஹிரண்யகசிபுவின் தவம்

ஹிரண்யாக்ஷன் இறந்துபட்ட துக்கத்தில் ஆழ்ந்துபட்ட அவனது மனைவி, மக்கள், மற்றும் தாயான திதிதேவியை சமாதானப்படுத்தினான் ஹிரண்யகசிபு.

ஒரு இறந்துபட்டவர் வீட்டின் உறவினர் வெகுநேரம் சமாதானம் ஆகாமல், ஸம்ஸ்காரங்களையும் செய்யாமல் அழுது கொண்டிருந்த போது, யமதர்மராஜனே ஒரு சிறிய குழந்தை உருவில் வந்து ஞானத்தை போதித்த கதையை ஹிரண்யகசிபு தன் உறவினர்களுக்குக் கூறினான்.

பலவிதமான உவமைகளுடனும், கதைகளுடனும் நிலையாமையை விளக்கிய ஹிரண்யகசிபு, தான் மட்டும் மரணமில்லாமல் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

தனக்குப் பகைவனே இருக்கக்கூடாது. உலகங்கள் அனைத்திற்கும் தானே தனியொரு அரசனாக விளங்கவேண்டும். என்பதே அவனது எண்ணம்.

அதற்காக மந்தரமலையின் தாழ்வறைக்குச் சென்று இரண்டு கைகளையும் உயர்த்தி, கண்களை உச்சியில் நிறுத்தி, கால் கட்டைவிரலை மட்டும் தரையில் ஊன்றி, மிகக் கடுமையாகத் தவம் செய்தான்.

அவன் தவம் செய்யப்போனதும், தேவர்கள் தத்தம் பதவிகளில் அமர்ந்தனர்.

நெடுங்காலம் செய்த தவத்தால், அவனது உச்சந்தலையிலிருந்து  எழும்பிய அக்னி, மூவுலகங்களையும் எரித்தது.

பூமி முதலான அனைத்து லோகங்களும் ஆடத்துவங்கின. விண்ணுலகம் வரை அக்னி படர்ந்தது. அதனால், தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ப்ரும்மாவை நோக்கிச் சென்றார்கள்.

அவரிடம், ஹிரண்யகசிபுவின் தவத்தை அமைதிப்படுத்துங்கள்  என்று வேண்டினர்.

மேலும், அவன் மூவுலகிற்கும் தலைவனாகி, ப்ரும்மாவான தங்கள்  பதவியைப் பறிப்பதற்காகவே தவம் செய்கிறான். அவன் தலைவனானால், உலகில் தீமை பெருகும். எனவே, சிந்தித்து ஆவன செய்யுங்கள் என்று வேண்டினர்.

இவ்வாறு அவர்கள் வேண்டியதும், ப்ரும்மா தன் வாகனமான  அன்னப்பறவை மீதேறி,  ப்ரஜாபதிகளை அழைத்துக்கொண்டு ஹிரண்யகசிபுவைக் காணச் சென்றார்.

அவனது தவத்தைக் கண்டதும் ப்ரும்மாவிற்கே இப்படி ஒரு கடுந்தவமா என்று  ஆச்சர்யம் மேலிட்டது.

பின்னர், ஹிரண்யகசிபுவைப் பார்த்து,

கச்யபர் மைந்தனே! எழுந்திரு! உன் தவத்தின் பயனை அளிக்கவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.

 நீ செய்யும் இந்தத் தவம் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இவ்வாறான கடுந்தவத்தை இதுவரை எவருமே செய்ததில்லை.

 உன் இதய வலிமை மிகவும் போற்றுதலுக்குரியது. உன் உடலை எறும்புகள் அரித்துவிட்டன. என்றாலும் உயிர் போகவில்லை. தண்ணீர்கூட அருந்தாமல் நூறு வருடங்கள் எவன் உயிருடன் இருப்பான்? உனக்கு என்ன வேண்டும் சொல்.

நீ மரண தர்மம் உள்ள மனிதன். எனவே, மரணமற்ற தன்மை தவிர்த்து, நீ எது வேண்டினாலும் தருவேன். என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, எறும்புகள் மொய்த்துத் தின்றபின் எஞ்சியிருக்கும் ஹிரண்யகசிபுவின் உடலின் மீது தன் கமண்டல நீரைத் தெளித்தார்.


அந்தப் புனித நீர் பட்டதும், மூங்கிற்புதற்களும், புற்களும் முளைத்திருந்த அந்தப் புற்றிலிருந்து ஹிரண்யகசிபு, வெளிப்பட்டான். முழுமையான, வஜ்ரம்போல்  வலிமையான, ஒளி பொருந்திய உடலைப் பெற்று, அவனது புலன்கள் உணர்வு பெற்றன. இளம் பருவத்தினனாக வெளியில் வந்தான்.

அன்னப்பறவை மேல் விளங்கிய ப்ரும்மதேவரை விழுந்து வணங்கினான். பின்னர் இரு கரம் கூப்பி அவரைத் தொழுதான்.

தாங்களே இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து, அழிக்கிறீர்கள். முக்குணங்களின் இருப்பிடம் தாங்களே. முதலில் தோன்றியவர். தாவர ஜங்கமங்கள் நிறைந்த ப்ரபஞ்சத்தின் மூலகாரணம் தாமே ஆவீர்.

மனத்தின் உயிரோட்டம், பஞ்ச பூதங்கள், புலன்கள், அவற்றின் குணங்கள், வாசனைகள் அனைத்தையும் செயல்படுத்தும் மஹத் தத்வம் தாங்கள்தான்.

வேதங்களின் இருப்பிடம் தாங்கள்தான். தாங்கள் தான் புராண புருஷர். ஒளிவீசும் இந்த ப்ரும்மாண்டம் தங்கள் வயிற்றினுள் இருக்கிறது. அருள் செய்வதில்  தங்களுக்கு இணை எவருமில்லை.

நீங்கள் எனக்கு வரம் தருவதாய் இருந்தால், தாங்கள் படைத்த எந்த ஜீவராசியாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது.

உள்ளிலோ, வெளியிலோ, மற்ற ப்ரஜாபதிகளின் ச்ருஷ்டிகளாலோ, அஸ்திர, சஸ்திரங்களாலோ, மண்ணிலோ, விண்ணிலோ, மனிதர்களாலோ,‌ விலங்குகளாலோ, உயிரற்றவைகளாலோ, உயிருள்ளவைகளாலொ, தேவர்கள், அசுரர்கள், முதலியவர்களாலோ,  எனக்கு மரணம் நிகழக்கூடாது.

எல்லா உயிர்கட்கும் நானொருவனே சக்ரவர்த்தியாக விளங்கவேண்டும். இங்குள்ள தேவர்களும், லோகபாலர்களும் தங்களைக் கொண்டாடுவதுபோல், என்னைக் கொண்டாடவேண்டும். எனக்கு அஷ்டமா சித்திகளும்‌ வேண்டும்‌.

என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, February 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 211

நாரதர் கூறலானார்.

தர்மராஜனே! பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதைத்தான்.


 ஹிரண்யகசிபு தம்பி இறந்த சோகத்தில் மூழ்கினான். பின்னர் மிகுந்த சினத்துடன், பற்களால் உதடுகளைக் கடித்து, கண்கள் சிவந்து பயங்கரத் தோற்றத்துடன் வானத்தை நோக்கியவாறு கூறலானான்.

தைத்யர்களே! தானவர்களே! தேவர்கள் என் தம்பியை விஷ்ணுவை வைத்துக் கொன்றுவிட்டனர்.

விஷ்ணுவுக்கு தேவர்களும், அசுரர்களும் ஒன்றுதான். அவர் பாரபட்சம் அற்றவர்தான். ஆனால், தேவர்கள் அவரிடம் நெருங்கிப் பழகி, சேவை புரிந்து தன்வயப்படுத்திக் கொண்டனர்.

இப்போது அவர் மாயையினால் பல உருவம் ஏற்று தன் இயல்பினின்று மாறிவிட்டார். சேவை புரிபவர் பின்னால், குழந்தையைப் போல் பின்தொடர்கிறார்.

நான் அவரை வெட்டி, என் தம்பிக்கு அவரது உதிரத்தினால் தர்ப்பணம் செய்யப்போகிறேன். விஷ்ணுவை அழித்தால், தேவர்கள் அழிவார்கள். அந்தணர்கள் மற்றும் க்ஷத்ரியர்களே அவரது பலம்.

எனவே, வேத அத்யயனம், விரதம், தானம், வேள்விகள் செய்வோரைத் துன்புறுத்தி அழியுங்கள். விஷ்ணுவின் வேர்  அந்தணர்களின் அறச்செயல்களே.

 தேவர்கள், ரிஷிகள், பித்ருதேவதைகள், ஜீவராசிகள் அனைத்திற்காகவும் செய்யும் பஞ்சமஹா யக்ஞங்களுக்கு விஷ்ணுவே  ஆதாரம்.

எனவே, அந்தணர்களும் பசுக்களும், வர்ணாஸ்ரமங்களுக்குத் தக்க அனுஷ்டானங்களும் நடைபெறும் இடங்களை அழியுங்கள். என்றான்.

இயல்பாகவே மற்றவரைத் துன்புறுத்துவதில் இன்பம் காணும் அசுரர்களுக்கு இப்போது அரச உத்தரவே வந்துவிட்டது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்  மக்களைப் பீடிக்கலானார்கள்.

நகரங்கள், கிராமங்கள், பசுமாட்டுக் கொட்டில்கள், வயல்கள், பூங்காக்கள், முனிவர்களின் ஆசிரமங்கள், இரத்தினம் விளையும் சுரங்கங்கள், வேளாளர்கள் குடியிருக்கும் பகுதிகள் மலையுச்சிலிருக்கும் சிற்சிறு கிராமங்கள், இடைச்சேரிகள், வணிகர்கள் வாழும் பகுதிகள் ஆகியவற்றைத் தீக்கிரையாக்கினர்.

பாலங்கள், அணைகள், கோட்டைச் சுவர்கள், கோவில்கள்  ஆகியவற்றை இடித்துத் தள்ளினர். பச்சை மரங்களை வெட்டினர். அசுர மன்னனின் பணியாளர்கள் உலகோரைத் துன்புறுத்தவே, தேவர்கள் அவியுணவு கிடைக்காமல், தேவருலகை விடுத்து மண்ணுலகில் வந்து மறைந்து வாழத் துவங்கினர்.

தம்பியின் பிரிவால் துன்புற்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனின் புதல்வர்களான சகுனி, சம்பரன், த்ருஷ்டன், பூட்கஸந்தாபனன், விருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிச்மச்ரு, உத்கசன் ஆகியோர் மூலம் அவனுக்கு பித்ரு காரியங்களைச் செய்வித்தான்.

தம்பியின் மனைவியான ருஷபானுவையும், தன் தாயான திதிதேவியையும் சமாதானம் செய்துவிட்டுக் கூறினான்.

இனி நீங்கள் வருந்தலாகாது. போர்முனையில் பகைவனைத் தாக்கி வீரமரணம் எய்துவதையே வீரர்கள் விரும்புவர்.

நீர்நிலைகளில் மக்கள் கூடுவதைப்போல், ஜீவன்கள் முன்வினைக்கேற்ப சிலகாலம் ஒன்று சேர்ந்து, பின்னர் பிரிந்துவிடுகின்றனர்.

உண்மையில் ஆன்மா அழியாதது. தூய்மையானது. மாறுதலற்றது. புலன்களில் ஒட்டாதது. தனித்திருப்பது.

நீர்நிலையின் மேற்பரப்பில் அசைவு ஏற்படும்போது அதில் ப்ரதிபலிக்கும் மரங்கள் போன்றவையும் அசைவதுபோல் தெரியும்.

அதுபோலவே ஆன்மா மாறுபாடற்றிருப்பினும், உலகியல் பொருள்களால் மனம் ஊசலாடும்போது, ஆன்மாவும் ஆடுவதுபோல் தோன்றுகிறது.

இறந்தவனைக் குறித்து வருந்தும்போது சான்றோர் ஒரு கதையைச் சொல்கின்றனர்.
என்று கூறினான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 12, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 210 அசுரப்பிறவி

நாரதர் பக்தி மார்கத்தின் வழிகளை மேலும் விளக்கினார்.

குளவி ஒரு புழுவை எடுத்து வந்து தன் கூட்டில் அடைத்து வைக்கிறது. அந்தப்புழு பயத்தினாலும், த்வேஷத்தாலும் குளவியையே நினைந்து நினைந்து தானும் குளவியாக மாறிவிடுகிறது.

ஸ்ரீ மன் நாராயணனே லீலைகள் புரிவதற்காக ஸ்ரீ க்ருஷ்ணனாக அவதாரம் செய்திருக்கிறார். அவரிடம் பகை கொள்பவனும் அவரையே நினைந்து நினைத்து முடிவில் அவரையே அடைகிறான்.

ஒருவர் இருவரல்லர், பல்லாயிரம் பேர்கள்  காதல், பயம், பகை, நட்பு ஆகிய உணர்வுகளால் பகவானிடம் மனத்தை ஈடுபடுத்தி இறைவனை அடைந்துள்ளனர்.

கோபிகள் காதலாலும், கம்சன் பயத்தாலும், சிசுபாலன், தந்தவக்த்ரன் முதலானோர் பகையாலும், வ்ருஷ்ணி வம்சத்து யாதவர்கள் உறவுமுறையாலும், பாண்டவர்கள் நட்பினாலும், பக்தியால் நாங்களும் பகவானிடம் மனத்தை ஈடுபடுத்தியுள்ளோம்.

வேனனைப் பற்றிக் கேட்டாயல்லவா? அவன் மேற்கண்ட எந்த ஒரு வழியிலும் பகவானிடம் மனத்தைச் செலுத்தவில்லை. எனவே நரகத்தில் வீழ்ந்தான்.

பாண்டு வம்சத்தவனே! சிசுபாலனும், தந்தவக்த்ரனும், பகவானின் மிகவும் நெருங்கிய தொண்டர்கள். ஸனகாதிகளின் சாபத்தால் பதவியை இழந்து பகவானிடம் பகைமை பாராட்டினர்.

யுதிஷ்டிரன் அந்த சாபம் பற்றிக் கேள்வியெழுப்பினார்.

நாரதர் சாபம் பற்றிய விவரங்களைக் கூறினார்.


முன்பொருமுறை ப்ரும்மதேவரின் மானஸ புத்திரர்களான ஸனகாதிகள், தம் விருப்பம்போல் மூவுலகையும் சுற்றி வந்தனர். அவர்கள்  வைகுண்டம் சென்றபோது, துவாரபாலர்கள் அவர்களைத் தடுத்தனர். அதனால் கோபமடைந்த ஸனகாதிகள், அவர்களை அசுரப் பிறவிகள் எடுக்கும்படி சபித்தனர்.

அவர்கள் கீழே விழுவதைக் கண்டு ஸனகாதிகள் இரக்கம் கொண்டு, மூன்று பிறவிகள் இந்தச் சாபத்தை அனுபவித்து விட்டு பின் வைகுண்டம் வாருங்கள் என்றனர்.

அவ்விருவரும்தான் திதிதேவியின் புதல்களாக ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்னும் பெயர்களில் பிறந்தனர்.

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹ வடிவெடுத்தும், ஹிரண்யகசிபுவை நரஸிம்ம உருவெடுத்தும் வதைத்தார்.

பகவானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த ப்ரஹலாதனை அவனது தந்தையான ஹிரண்யகசிபு மிகவும் துன்புறுத்தினான்.

ப்ரஹ்லாதனோ பகவானிடம் உள்ளத்தை நிறுத்தியவன். அமைதியே வடிவானவன். அனைத்திலும் ஸ்ரீ ஹரியையே கண்டவன். அதனால், எவ்வளவு முயன்றும் ஹிரண்யகசிபுவால் ப்ரஹலாதனைக் கொல்ல முடியவில்லை.

அவர்கள் இருவரும் அடுத்த பிறவியில் விச்ரவஸ் முனிவரின் மனைவியான கேசினி என்னும் கைகஸியிடம் ராவணன் மற்றும் கும்பகர்ணனாகப் பிறந்தனர். அவர்களை பகவான் ஸ்ரீ ராமனாக அவதாரம்‌ செய்து கொன்றார்.

அவர்களே இப்போது மூன்றாவதாக உன் சிற்றன்னையின் புதல்வர்களாகப் பிறந்துள்ளனர். ஸ்ரீ க்ருஷ்ணன் சுதர்சன சக்ரம் கொண்டு அவர்களை வதைத்ததும், சாபம் நீங்கப்பெற்று மீண்டும் துவாரபாலகர் பதவியைப் பெற்றனர்.

உடனே பரீக்‌ஷித் கேட்டான். பரம ஸாதுவான பெற்ற பிள்ளையிடம் ஹிரண்யகசிபு ஏன் பகைமை கொண்டான்? அசுர வம்சத்தில் பிறந்த ப்ரஹ்லாதனுக்கு அத்தகைய த்ருடபக்தி எவ்வாறு உண்டாயிற்று?

இதற்கு பதிலாக ப்ரஹலாதனின் கதையை ஸ்ரீ சுகர் விளக்கமாகக் கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, February 10, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 209

ஏழாவது ஸ்கந்தம் 

சித்ரகேதுவின் கதையைக் கேட்டதும், நம் அனைவருக்கும் எழும் சந்தேகத்தை நம் சார்பில் பரீக்ஷித் கேட்டான்.

மஹரிஷியே! பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே விதமாக அன்பு கொண்டவர்தானே! சமபுத்தியுள்ளவர். அப்படியிருக்க வேண்டியவன் பக்கம் சேர்ந்துகொண்டு வேண்டாதவர்க்குத் தீமை செய்யும் மனிதர்கள்போல், பல தீமைகள் செய்திருந்த போதிலும் வேண்டினான் என்பதற்காக  இந்திரனுக்கு நன்மை செய்ய அசுரர்களை அழிப்பானேன்?

வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் ஏன் இப்படிச் செய்தார்? தவறு செய்தாலும் தேவர்களுக்குப் பரிந்து வருவார். நல்லதே செய்தாலும் அசுரர்களை அழிப்பாரா?

அனைவரையும் சமமாகப் பார்க்கும் இறைவனின் இச்செயல் விளங்கிக்கொள்ளக் கடினமாக இருக்கிறதே. தயை கூர்ந்து என் சந்தேகத்தைப் போக்குங்கள். என்றான்.

ஸ்ரீ சுகர் கூறத் துவங்கினார்.
மன்னனே! நீ எழுப்பிய வினா மிகவும் சரியானது. இதற்கு விடையாக அசுர குலக்கொழுந்தும்,  பரம பாகவதோத்தமனுமான ப்ரஹலாதனுக்கு பகவான் எப்படி அருள் செய்தார் என்று கூறுகிறேன்.

நாரதர் முதலிய பெரியோர்களும் இந்த சரித்ரத்தை பக்தியுடன் போற்றுகின்றனர். என் தந்தையான வியாசரை வணங்கிக்கொண்டு உனக்கு இக்கதையைச் சொல்கிறேன். கேள்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். ப்ரக்ருதி, மாயை இவற்றால் பாதிக்கப்படாதவர்.
ஸத்வம், ராஜஸம், தாமஸம் போன்ற குணங்கள் மாயையால் ப்ரக்ருதியில் காணப்படுகின்றன. உண்மையில் அவை பகவானுடையவை அல்ல. இவை மூன்றும் ஒரே நேரத்தில் குறையவோ, நிறையவோ இயலாது. ஏற்றத்தாழ்வுகளோடுதான் இருக்கும்.

பகவான் அனைத்து ஜீவராசிகளிலும் வெளித்தோன்றாது மறைந்துள்ளார். அறிஞன் அவரைத் தவிர மற்ற பொருள்களை ஒதுக்கித் தள்ளி, முடிவில், தன் இதயத்தில் அந்த பகவானையே அந்தர்யாமியாக ஆன்மாவாகக் காண்கிறான்.

மன்னா! பகவான் ஸத்யசங்கல்பன். நினைத்ததை நினைத்தபடி முடிப்பவன். காலத்துக்கு உட்பட்டவர் அல்ல.

உன் பாட்டனார் தர்மபுத்ரர் ராஜசூய யாகம் நடத்தினார். அப்போது இது தொடர்பான கேள்வியை எழுப்ப, அதற்கு விடையாக நாரத மஹரிஷி மனமுவந்து கூறிய கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்.


அம்மாபெரும் வேள்வியில், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் ஒரு ஜ்யோதியாக  கண்ணனின் உடலில் இரண்டறக் கலந்தான். அதைக் கண்டு வியப்படைந்த  யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டார்.

ஆஹா! இதென்ன ஆச்சர்யம்‌ நாரதரே! பரம்பொருளான க்ருஷ்ணனிடம் இரண்டறக் கலப்பதென்பது பகவத் பக்தர்களுக்கே மிகவும் அரிய விஷயம். 

அப்படியிருக்க, எப்போதும் பகவானைத் திட்டிக்கொண்டிருந்த  சிசுபாலனுக்கு இந்த நற்பேறு எப்படிக் கிடைத்தது? முன்பொரு முறை வேனன் பகவானை நிந்தித்ததால் ரிஷிகள் அவனை நரகத்தில்‌ தள்ளினர். தீயபுத்தி கொண்ட சிசுபாலன் மழலைப் பருவம்‌ முதல் சற்று‌முன் வரை பகவானை நிந்தித்தானே. அவனுக்கு மட்டும் முக்தியா? அது எவ்வாறு?

இதன் பின்னால் இருக்கும் உண்மையைக் கூறுங்கள் என்றார்.

நாரதர் மிகவும் மகிழ்ந்து கூறலானார்.

மன்னா!  நிந்தித்தல், புகழ்தல், மரியாதை செய்தல், அவமதித்தல் இவையெல்லாம் உடலின் தொடர்புடையவை.  சரீரமே ஒரு கற்பனை. அதன் காரணம் மாயை. ஆன்மாவைப் பற்றிய உண்மையறிவு இல்லாததே காரணம்.

இவ்வுடலை ஆன்மாவென்று எண்ணும்போது, நான், எனது, என்ற எண்ணம் தோன்றுகிறது. வேற்றுமை எண்ணங்களே அனைத்துக்குமான அடித்தளம். அதனால்தான் உடலைத் திட்டும்போது மனம் துன்பமடைகிறது.

தீவிரமான பக்தி, தீவிரமான பகை, பயம், அன்பு, காதல் இவற்றில் ஏதோ ஒரு வழியில் மனத்தை முழுமையாக ஒப்படைத்தல் வேண்டும். பகவானுக்கு இவற்றுள் எந்த வேற்பாடும் இல்லை. எந்த வழியில் இறைவனை நாடுகிறோமோ அதேவழியில் அவர் நம்மை ஆட்கொள்கிறார்.

ஒரு ரகசியம் என்னவெனில் தீவிரமான பகையினால் பகவானுடன் ஒட்டிக் கொள்வதைப் போல், பக்தியோகத்தினால் கூடச் செய்ய முடிவதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, February 9, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 208 மருத் கணங்களின் தோற்றம்

பும்ஸவன விரதத்தை மிகுந்த சிரத்தையுடன் பின்பற்றினாள் திதிதேவி.

தன் சிற்றன்னையின் நோக்கத்தை அறிந்துகொண்ட இந்திரன், மிகவும் புத்திசாலித்தனமாகத் தன்னை மறைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திதியின் ஆசிரமத்தில் வந்து அவளுக்குப் பணியாற்றத் துவங்கினான்.

நாள்தோறும் அவளுக்கு வேண்டிய பூக்கள், காய்கனிகள், ஸமித், தர்பை, புற்றுமண், நன்னீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொடுத்தான்.

பரீக்ஷித்! தேவேந்திரன் திதியின் அருகிலேயே இருந்துகொண்டு அவள் ஏதேனும் தவறு செய்கிறாளா என்பதை உன்னிப்புடன் கவனித்து வந்தான்.

ஆனால், அவனால் எந்த ஒரு தவற்றையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் பொறுமையுடன் காத்திருந்தான்.

ஒருநாள்‌ மிகவும் சோர்வுற்ற திதிதேவி மாலை வேளையில் முகம் கழுவாமல், காலும் அலம்பாமல், அழுக்குடன் விதியின் கட்டளைப்படி உறங்கிவிட்டாள்.

இதுதான் சமயமென்று இந்திரன் தன் யோக சக்தியால் திதியின் கருப்பைக்குள் நுழைந்தான். அங்கு தங்கம் போல் ஒளிவீசிய கருவைத் தன் வஜ்ராயுதத்தால் ஏழு துண்டங்களாக்கினான். அவை அழத்துவங்கியதும் அழாதே. (மா ருத) என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு துண்டத்தையும் ஏழு ஏழாகப் பிளந்தான்.

அவனை நோக்கிக் கை கூப்பியவாறு அந்தத் துண்டங்கள், நாங்கள் உன் சகோதரர்கள். எங்களை வெட்டாதே என்று வேண்டின.

உடனே இந்திரன், இனி இவை தமக்கு அணுக்கமான தொண்டர்களாகிவிடும் என்று புரிந்துகொண்டு, அவைகளிடம் பேசினான்.

பரீக்ஷித்! அச்வத்தாமாவின் ப்ருமாஸ்திரத்திலிருந்து நீ பகவானால் காப்பாற்றப்பட்டாய் அல்லவா? அதைப்போல் அவை நாராயணனால் காப்பாற்றப்பட்டன.

திதிதேவி ஒரு வருஷத்துக்குச் சற்றுக் குறைவாக தினமும் பகவான் நாராயணனை ஆராதித்திருந்தாள். அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது.

திதி கண் விழித்ததும் இந்திரனுடன் தன் நாற்பத்தொன்பது பிள்ளைகளும் நிற்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றாள்.

ஆனால், அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாததால் இந்திரனைக் கேட்டாள்.
இந்திரன் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒளிக்காமல் சொல்லிவிட்டு, இறைவன் அருளாலேயே வெட்டப்பட்ட குழந்தைகள் பிழைத்தன. என்னை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினான்.

உண்மையைச் சொன்னதால், இந்திரனைக் கண்டு மகிழ்ந்தாள் திதி. இந்திரன் மருத் கணங்களோடு அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.

பரீக்ஷித் பும்ஸவன விரதம் பற்றி இன்னும் விரிவாக விளக்கும்படி சுகாசார்யாரிடம் கேட்க, அவர் மீண்டும், பும்ஸவன விரதத்தைப் பற்றியும், அதன் நெறி முறைகள் பற்றியும் 28 ஸ்லோகங்களில் விளக்குகிறார்.

பின்னர், இதைப் பின்பற்றும் பெண்கள், மிகுந்த நன்மையடைவார்கள். மலடு நீங்கி‌ நன்மக்களை அடைவாள். நீண்ட ஆயுளை உடைய குழந்தைகள்‌ பிறக்கும். பித்ரு தேவதைகளும் மகிழ்வார்கள்.

இதைப் பற்றி வேள்விக்காலங்களில் கேட்டால், ஸ்ரீ நாராயணனும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
என்றார் சுகர்.

ஆறாம் ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, February 8, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 207 பும்ஸவன விரதம்

மிகவும் கவனமாகக் கதை கேட்டு வரும் பரீக்ஷித் உடனே கேட்டான்.

மஹரிஷியே! திதியின் புதல்வர்களான மருத்துக்கள் இயற்கையில் அசுரர்கள்தானே. அவர்களை ஏன் தேவேந்திரன் தேவர்களாக்கினான்? அப்படிச் செய்ய அவர்கள் என்ன நற்செயல் செய்தனர்? அசுர குணத்தை எவ்வாறு கைவிட்டனர்?

ஸ்ரீ சுகர் தொடர்ந்து பதில் சொல்லத் துவங்கினார்.
ஹிரண்யாக்ஷன், மற்றும் ஹிரண்யகசிபு இருவரையும்‌ இந்திரனுக்கு உதவுவதற்காக பகவான் அழித்தார். கர்மப் பித்து பிடித்தலையும்‌ இந்திரன் தன் தம்பிகளைக் கொன்றுவிட்டான். அவனை அழிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தால்தான் நான் சுகமாக உறங்கமுடியும் என்று நினைத்தாள் திதி தேவி.

அன்புடனும் விநயத்துடனும் புலனடக்கத்துடன் கணவரான கச்யபருக்குப் பணிவிடை செய்தாள். அவரது மனமறிந்து செய்யும் பணிவிடைகளாலும், இனிய பேச்சு மற்றும் ஜாடைகளாலும் அவரைக் கவர்ந்தாள்.

கச்யபர் பேரறிஞராயினும், அவளது பணிவிடைகளில் மெய் மறந்து, உன் விருப்பம் எதுவோ சொல். நிறைவேற்றுகிறேன் என்று வாக்களித்தார்.

தேவீ.. அனைத்து ஜீவன்களின் உருவிலும் இறைவனே விளங்குகிறான். கணவனுக்கு பக்தியுடன் செய்யப்படும் பணிவிடை இறைவனுக்குச் செய்வதேயாகும். எனவே தான் கற்புடை மகளிர் கணவரின் உருவில் இறைவனைப் பூஜிக்கின்றனர். உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறைவேற்றுகிறேன் என்றார்.

திதி கேட்டது என்ன தெரியுமா?
ப்ரும்மஞானியே! இந்திரன் என் இரு மகன்களையும் அழிவித்தான். எனக்குக் குழந்தைகளே இல்லையென்றாகிவிட்டது.

நீங்கள் வரம் தருவதானால் இந்திரனைக் கொல்லக்கூடிய ஆற்றலுடையவனும், மரணமற்றவனுமான ஒரு மகனை எனக்கு அருளவேண்டும் என்றாள்.

கச்யபர் அதிர்ந்துபோனார்.
தவறு செய்துவிட்டேனே என்று கலங்கினார்.

பெண்ணுருவில் வந்த மாயையில் மயங்கினேனே.
இவள்மேல் தவறில்லை. இவள் கணவனான எனக்குப் பணிவிடை செய்தாள். ஆனால், நான் தான் பொறிகளின் வயப்பட்டு மனம் மயங்கி வலுவில் வாக்களித்துவிட்டேன். என்று மனம் வருந்தினார்.

பின்னர் சற்று சினந்து அவளிடம் கூறினார்.
தேவீ, நான் கூறும்‌ விரதத்தை ஒரு வருட காலம்‌ முறைப்படி செய்தால் இந்திரனைக் கொல்லும் மகன் பிறப்பான். அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அவன் தேவர்களின் நண்பனாகிவிடுவான். என்றார்.

திதி தான்‌ முறைப்படி விரதம்‌ இருப்பதாகச் சொல்லி உபதேசம் வாங்கிக்கொண்டாள்.
விரத நியமங்களாக கச்யபர் கூறியவை பின்வருமாறு.

* எந்த ஜீவராசிக்கும் மனம், சொல், செயலால் எவ்விதத் தீங்கும் செய்யலாகாது.

* எவரையும் கடிந்து பேசலாகாது.

* பொய் சொல்லக்கூடாது.

* நகம், தலைமுடி ஆகியவற்றை வெட்டக்கூடாது.

* தூய்மையற்ற எலும்பு முதலியவற்றைத் தொடலாகாது.

* நீரில் மூழ்கி நீராடலாகாது.

* சினம் கூடாது.

* தீயோரிணக்கம்‌ கூடாது.

* அழுக்கு உடையை உடுக்கலாகாது.

* ஒரு முறை அணிந்த அல்லது பிறர் அணிந்த மாலையை அணியலாகாது.

* எச்சில் சோறு, காளிக்கு நிவேதனம் செய்த அன்னம், எறும்பு மொய்த்த சோறு, மாமிசம், ஆகியவற்றை உண்ணக்கூடாது.

* வெளியே செல்லும்போது, அசுத்தமாகவோ, நீராடாமலோ, சந்திவேளையிலோ, தலைமுடியை விரித்துக்கொண்டோ, மங்கள ஆபரணங்கள் இன்றியோ, நாவடக்கமின்றியோ, மேலங்கி அணியாமலோ செல்லக்கூடாது.

* கால் அலம்பாமலும், அசுத்தமாகவும், ஈரக்கால்களுடனும், வடக்கு மற்றும்‌ மேற்கு திசைகளில் தலை வைத்தும் உறங்கக்கூடாது.

* பிற ஆடவர்களுடன் பேசக்கூடாது.

* காலை மாலை சந்தி வேளைகளில் படுத்து உறங்கக்கூடாது.
எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்து, சுமங்கலிகளுக்குரிய மங்கள ஆபரணங்களை அணிந்து, காலை உணவுக்கு முன், பசு, அந்தணன், திருமகள், நாராயணன் ஆகியோரைப் பூஜை செய்யவேண்டும்.

* பின்னர் சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கிப்‌ பூஜை செய்யவேண்டும்.

* கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முகம் கோணாமல் செய்யவேண்டும்.

இந்த விரதத்திற்கு பும்ஸவனம் என்று பெயர். இதை நீ‌ விதி வழுவாது மேற்கொண்டால் நீ விரும்பிய வண்ணம் உனக்கு மகன் பிறப்பான்.
என்று கூறினார்.

திதி தேவி மிகுந்த சிரத்தையுடனும், கவனத்துடனும் பும்ஸவன விரதத்தைக் கடைப்பிடிக்கத் துவங்கினாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, February 7, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 206 கச்யப வம்சம்

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கச்யபரின் வம்சத்தைக் கூறலானார்.


ஸவிதாவின் மனைவி ப்ருச்னி என்பவள், ஸாவித்ரி என்ற மந்திர தேவதையையும், பூ:, புவ:, ஸுவ: ஆகியவற்றின் வ்யவஹார தேவதைகளையும், ரிக், யஜுர், ஸாமம் முதலிய வேதங்களின் தேவதைகளையும், அக்னிஹோத்ரம், நிரூடசுபந்தம், சோமம், சாதுர்மாஸ்ய யக்ஞம், பஞ்சமஹா யக்ஞம் ஆகியவற்றின் தேவதைகளைப் பெற்றெடுத்தாள்.

பகனின் மனவி ஸித்தி என்பவள், மஹிமா, விபு, ப்ரபு ஆகிய மகன்களையும், ஆசிஷ் என்ற பெண்மகவையும் பெற்றாள். அந்தக் குழந்தை மிகுந்த அழகும், ஒழுக்கம் உடையவளாகத் திகழ்ந்தாள்.

தாதாவிற்கு குஹூ, ஸினீவாலி, ராகா, அனுமதி என்று நான்கு‌ மனைவிகள். இவர்களுக்கு ஸாயம், தர்சன், பிராதன், பூர்ணமாஸன் ஆகியமகன்கள் பிறந்தனர்.

தாதாவின் சகோதரன் விதாதா. அவனது மனைவி க்ரியா. அவர்களது மகன்கள் புரீஷ்யர் என்ற ஐந்து அக்னிகள். வருணனின் மனைவி சர்ஷணீ. ப்ரும்மாவின்‌ மகனான ப்ருகு மஹரிஷி வருணனுக்கு மீண்டும் பிறந்தார்.

வால்மீகியும் வருணனின் மகனே. ஊர்வசியைப் பார்த்து மயங்கிய மித்ரன், வருணன் ஆகியோரிடமிருந்து தோன்றியவர்கள்‌ அகஸ்தியரும், வசிஷ்டரும். அதிதியின் பத்தாவது மகனான மித்ரனின் மனைவி ரேவதி. அவர்களுடைய மகன்கள் உத்ஸார்கன், அரிஷ்டன், பிப்பலன் ஆகியோர்.

அதிதியின் பதினோராவது மகன் இந்திரன். அவனது மனைவி புலோமனின் பெண் சசீதேவி. அவளது மகன் ஜயந்தன், ரிஷபன், மீட்வான் ஆகியோர்.

பகவான் நாராயணனே வாமன மூர்த்தியாக அதிதியிடம் அவதாரம் செய்தார். அவர் மூன்றடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்தார். அவரது மனைவி கீர்த்தி. அவர்களது மகன் ப்ருஹத்சுலோகன். அவருக்கு ஸௌபகன் முதலிய பல குழந்தைகள் பிறந்தனர்.

வாமன மூர்த்தியைப் பர்றியும், அவரது லீலையையும் பிறகு சொல்கிறேன்.
கச்யபரின் இரண்டாவது மனைவி திதி. அவளது வம்சத்தில்தான் பரம பக்தர்களான ப்ரஹ்லாதனும், பலியும் பிறந்தனர்.

திதிக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.
ஹிரண்யாக்ஷனைப் பற்றி மூன்றாம் ஸ்கந்தத்தில் பார்த்தோம்.

ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது. அவளுக்கு ஸம்ஹ்ராதன், அனுஹ்ராதன், ஹ்ராதன், ப்ரஹ்லாதன் என்ற நான்கு புதல்வர்கள். அவளது தங்கை ஸிம்ஹிகை விப்ரசித் என்பவனை மணந்து ராகுவைப் பெற்றாள்.

அமுதத்தைப் பருகுவதற்காக தேவ வரிசையில் அமர்ந்த ராகுவின் தலையை மோஹினி அவதாரம் செய்திருந்த விஷனு பகவான் அறுத்துவிட்டார்.

ஸம்ஹ்ராதனின் மனைவி கிருதி. அவளது மகன் பஞ்சஜனன்.
ஹ்ராதனின் மனைவி தமனி. அவள் வாதாபி, இல்வலன் என்னும் இரு பிள்ளைகளைப்‌ பெற்றாள். இல்வலன் தன் தம்பியான வாதாபியைச் சமைத்து அகஸ்தியருக்குப் போட்டான்.

அனுஹ்ராதனின் மனைவி ஸூர்மி. அவளது மகன்கள் பாஷ்கலன், மஹிஷாஸுரன் ஆகொயோர். ப்ரஹ்லாதனின் மகன் விரோசனன். அவனது மனைவி தேவிக்குப் பிறந்தவன் பலி.

பலியின் மனைவி அசனா. அவளது மகன்கள் பாணன் முதலான நூற்றுவர். பாணன் பரமேஸ்வரனை ஆராதித்து அவரது ப்ரமத கணங்களின் தலைவன் ஆனான். இன்றும் பரமேஸ்வரன் பாணாசுரனின் நகரத்திற்குக் காவல் நிற்கிறார்.

ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷனைத் தவிர திதிக்கு 49 புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் மருத்துக்கள் ஆவர். அவர்கள் மக்கட்பேறற்றவர்கள். இந்திரன் தேவ பதவி கொடுத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 205 சித்ரகேது -5

பரமேஸ்வரனை ஏளனமாகப் பேசிய சித்ரகேதுவை பார்வதிதேவி அசுரனாகப் பிறக்கும்படி சாபமிட்டாள்.

ஞானம் வந்த பின்னர் உடல் ஒரு பொருட்டல்லவே! சித்ரகேது கலங்கவில்லை.

தாயே! நீங்கள் அளித்த சாபத்தை மகிழ்வோடு ஏற்கிறேன்.
அஞ்ஞானத்தில் உழல்பவன் இவ்வுலக வாழ்க்கையில் மயங்கி இன்பதுன்பங்களை அனுபவிக்கிறான்.

இவ்வுலக வாழ்வே மாயையின் பெருவெள்ளம். இதில் சாபமென்ன? வரமென்ன? ஸ்வர்க நரகங்கள்தான் ஏது? இன்ப துன்பங்கள் ஏது?

இறைவன் பரிபூரணன். அவரே மாயையைத் தோற்றுவிக்கிறார். அதிலிருந்து விடுவிக்கவும் செய்கிறார். ஆனால் அவருக்கு மாயையின் தொடர்பு இல்லை.

அவருக்குப் பட்சபாதம் இல்லை. தூயவர். அவருக்கு பற்றுமில்லை. அதனால் தோன்றும் கோபமும் இல்லை.

கிடைப்பது எப்பிறவியானாலும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் உத்தம பதிவிரதை. தாங்கள் சினத்தை விட்டு எனக்கு அருள் செய்யுங்கள். சாபவிமோசனத்திற்காக அல்ல. நான் தவறு செய்தேன் என்று நீங்கள் நினைப்பதால், அதைப் பொறுத்தருளுங்கள்.

என்று கூறிவிட்டு, பதிலைக்கூட எதிர்பாராமல் தன் விமானத்தில் ஏறிப் புறப்பட்டுச் சென்றான்.

அப்போது பரமேஸ்வரன் பார்வதியிடம், கூடியிருந்த ரிஷிகள் கேட்கும் வண்ணம்,
ஸௌபாக்யவதீ! ஸ்ரீமன் நாராயணனின் பக்தர்களையும், அவர்களது பெருமைகளையும் பார்த்தாயா? பகவானைத் தஞ்சமடைந்தவர்களுக்கு ஸ்வர்கம், மோட்சம், நரகம், எல்லாம் ஒன்றுதான். அவர்களின் பெருமையை நான், ப்ரும்மா, ஸனகாதிகள் இன்னும் பலர் உள்பட எவரும் அறியார்.

சித்ரகேது பகவானின் அன்புத் தொண்டன். எதிலும் சம நோக்குடையவன். இவன் இப்படிப்‌ பேசியதில் வியப்பேதுமில்லை. என்றார்.

சித்ரகேது பார்வதியின் சாபத்திற்கு எதிர்சாபம் கொடுக்கத் தகுதி படைத்தவன்தான். ஆனாலும், சாபத்தைத் தலை வணங்கி ஏற்றான். இதுவே சான்றோர் குணம்.

இந்த சித்ரகேது பின்னர் த்வஷ்டாவின் வேள்வித்தீயினின்று வ்ருத்ராசுரனாய் வெளிப்பட்டான். அசுரனாக இருந்தபோதிலும், பகவத் பக்தியும், ஸ்வரூப ஞானமும் பெற்றிருந்தான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார், அசுரனாய் இருந்தும் வ்ருத்திராசுரனுக்கு பக்தி வந்தது எப்படி என்று புரிந்ததா?
பெருமனம் படைத்த சித்ரகேதுவின் இந்தப் புண்ணியக் கதை அவனுடைய கதை மட்டுமல்ல. அனைத்து பகவத் பக்தர்களின் பெருமைகளையும்‌ கூறுவதாகும். இதைக் கேட்பவன் எல்லா ஸம்சார பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, February 1, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 204 சித்ரகேது - 4

புலனடக்கத்துடன் மௌன விரதமேற்று தன்னை வணங்கும் சித்ரகேதுவைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார் நாரதர். பின்னர் அவனுக்கு எட்டு ஸ்லோகங்களில் பகவானின் குணங்களையும், பெருமைகளையும் சொல்லும் ஸ்துதியான ஆத்ம வித்யையை உபதேசம் செய்தார்.

சித்ரகேது அந்த உயர்ந்த மந்திரத்தை மனனம் செய்து ஏழு நாள்கள் தியானம் செய்தான். அதன் பலனாக சித்ரகேது வித்யாதரர்களின் தலைமைப் பதவியைப் பெற்றான்.

அந்த மந்திரத்தின் மஹிமையால் மனத்தூய்மை பெற்று ஸங்கர்ஷண மூர்த்தியின் திருவடித் தாமரைகளின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றான்.
சித்தர்கள் சூழ விளங்கும் ஸங்கர்ஷண மூர்த்தி. தாமரைத்தண்டு போன்ற வெண்மை நிறம். அழகிய திருமேனி. நீலப்பட்டு. தலையில் நவரத்ன கிரீடம், புஜங்களில் தோள்வளைகள், செம்மை படர்ந்த அழகிய கண்கள், தெளிவான திருமுக மண்டலம்.

அவரைக் கண்ட‌ மாத்திரத்தில் சித்ரகேதுவின் அனைத்து பாவங்களும் அழிந்தன. அவன் மனம் தெளிந்து பக்தி பெருகிற்று. கண்களில்‌ நீர் சொரிய, மயிர்க்கூச்செறிந்து ஆதிசேஷனை வணங்கினான்.

அன்பின் முதிர்ச்சியால் சொல்லற்ற நிலையில் வெகுநேரம் நாத்தழுதழுக்க வாளாவிருந்தான்.

அதன் பின் எவராலும் வெல்லமுடியாத அவரைப் பலவாறு துதிக்கலானான்.
அதைக்கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன் சித்ரகேதுவைக் கொண்டாடி, பகவத் ஸ்வரூபத்தை உபதேசம்‌செய்தார். பின்னர் உனக்கு ஞானம் சித்திக்கும்‌ என்று அருளிச்செய்தார்.

வித்யாதரர்களின் அரசனாகிவிட்ட சித்ரகேது, ஸங்கர்ஷணர் மறைந்ததும், அவர் சென்ற திசை நோக்கித் தொழுத வண்ணம்‌ வெகு நேரம்‌ நின்றான். பின்னர் விமானத்திலேறி வான்வெளியில் தன் விருப்பம் போல் சுற்றத் துவங்கினான்.

பல யோகசித்திகள் கைவரப்பெற்ற சித்ரகேதுவை வித்யாதரர்களும், முனிவர்களும் புகழ்ந்தனர். அவன் மேரு மலையின் தாழ்வரைகளில் சுற்றத் துவங்கினான்.

ஒரு சமயம் பறக்கும்போது கீழே சித்த சாரணர்களும், முனிவர்களும்‌ சூழ்ந்திருக்க பரமேஸ்வரன் பார்வதியைத் தன் மடிமேல் அமர்த்திக்கொண்டிருப்பதைக் கண்டான்.


தன் விமானத்திலிருந்தபடியே சிரித்த வண்ணம் பார்வதியின் காதுகளில் விழும்படி,
உலகிற்கெல்லாம் ஆசார்யனான இவர் மஹரிஷிகள் கூடிய சபையில் வெட்கமின்றி மனைவியை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறாரே. பெருந்தவசி, ப்ரும்மவிசாரம் செய்பவர். இருந்தும் வெட்கமில்லையே.

பாமரன் கூட தனிமையில்தான் மனைவியைக் கொஞ்சுவான். இவர் கடினமான விரதங்கள் மேற்கொண்டவராய் இருந்தபோதிலும் இப்படிச் செய்கிறாரே. என்றான்.

பகவானின் பெருமையை சித்ரகேது அறியாதவனா? இருப்பினும் தான் புலன்களை வென்றவன் என்ற செருக்கு அவன் கண்களை மறைத்துவிட்டது.

அதைக் கேட்ட பார்வதி தேவி கடுஞ்சினம் கொண்டாள்.
இங்கிருக்கும் பெரியோர் தர்மநெறி அறியாரா? தலைவர்க்கெல்லாம் தலைவனான பரமேஸ்வரனுக்கே பாடம் சொல்வானா?

இவனது செருக்கு மிகுந்தது. இவனை தண்டிக்கத்தான் வேண்டும். ஆகவே ! தீயபுத்தி கொண்ட சித்ரகேதுவே! நீ அசுரப் பிறவியை அடைவாயாக! என்று சாபமிட்டாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..