Tuesday, October 30, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 136 விதுர மைத் ரேய ஸம்வாதம் - 80

இந்திரனது தீய செயலை அறிந்த ப்ருது சினம் கொண்டு அவனைக் கொல்ல வில்லை எடுத்தார்.

சினத்தால் பொங்கும் அவரது கண்களைக் காணமுடியாமல் அனைவரும் கூசினர். மிகுந்த பராக்ரமம் உள்ள அவரை ரித்விக்குகள் தடுத்தனர்.

மன்னவா! தாங்கள் வேள்விக்கான தீட்சை ஏற்றபின் வேள்விப் பசுவைத் தவிர வேறெந்த ஜீவனையும் வதம் செய்யக்கூடாது. அது வேள்விக்கு இடையூறாகும்.

தங்கள் பகைவன் இந்திரன் பொறாமையால் ஒளியிழந்துபோனான். அவனை மந்திரக்கட்டு போட்டு இங்கு இழுத்துவந்து ஹோமம் செய்துவிடுகிறோம்.
என்று சொன்னார்கள்.

அவர்கள் இந்திரனை ஆவாஹனம் செய்து ஹோமத்தில் விடத் துணிந்தபோது ப்ரும்மதேவர் எழுந்தருளினார்.

ரித்விக்குகளே ! நீங்கள் செய்வது தவறு. எந்த தேவர்களுக்காக வேள்வி செய்கிறீர்களோ அவர்கள் இந்திரனின் திருமேனி. இந்திரன் பகவான் யக்ஞ நாராயணனின் அம்சம்.

இந்திரன் பொறாமை கொண்டு நாத்திகத்தைப் பரப்பி விட்டான். உங்கள் பகைமை அதிகமானால் அவன் சினம் கொண்டு தர்மத்திற்கெதிரானவற்றை வளர்த்துவிடுவான்.

மிகுந்த புகழ் கொண்ட ப்ருதுவிற்கு தொண்ணூற்றொன்பது அச்வமேதம் செய்தவர் என்ற புகழே போதும். சதக்ரது என்பது இந்திரனின் பெயர்.

ஏகோன சதக்ரது (நூறுக்கு ஒன்று குறைவு) என்ற பெயர் ப்ருதுவுக்கு மட்டுமே உரியது.

இதுவரை அறநெறி வழுவாது செய்த வேள்விகளின் பயனை, இந்த ஒரு செயலால் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

ப்ருதுவிற்கும் இந்திர பதவியில் ஆசை இல்லை.
எனவே இவ்வேள்வியினால் பயனில்லை.

ப்ருதுவே, நீங்களும் இந்திரனும் பகவானின் அம்சங்களே. ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்ளலாகாது.
இவ்வேள்வி தெய்வத்தினால் தடைபட்டது. எனவே வருத்தம் வேண்டாம்.

தெய்வம் தடை செய்ததை மீண்டும் சரிவரச் செய்ய நினைப்பவனின் மனம் சினத்தினால் மயங்குகிறது.

வேள்வியை நிறுத்த இந்திரன் ஏற்படுத்திய நாத்தீக தர்மங்களால் மக்கள் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, வேள்வியை நிறுத்திவிட்டு உங்கள் முதல் கடைமையான மக்களைக் காப்பாற்றுவதைச் செய்யுங்கள்.

இந்த மறநெறிகளை அழிக்க வல்லவர் நீர் ஒருவரே.

ப்ரும்மாவின் வார்த்தைகளைக் கேட்ட ப்ருது சமாதானம் அடைந்து அவரை வணங்கி வேள்வியை நிறுத்தினார்.

பின்னர் வேள்வி முடிந்ததற்கான அவ்ப்ருத ஸ்நானத்தைச் செய்துவிட்டு இந்திரனோடு நட்பு கொண்டார்.

அனைவர்க்கும் ஏராளமான தட்சிணைகள் அளித்தார்.

இந்திரன் மீண்டும் மனமார ப்ருதுவிடம் மன்னிப்பு வேண்டினான்.

யாகங்களால் மகிழ்ச்சி கொண்ட பகவான் மீண்டும் தோன்றினார்.

அரசே! இவன் வேள்விகளுக்கு இடையூறு செய்தவன்தான். இப்போது மன்னிப்பு வேண்டுகிறான்.

சான்றோர்கள் பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் இவ்வுடலை ஆன்மா என்று எண்ணுவதில்லை.

உன்னைப் போன்றவர்கள் மாயையில் மயங்குவாராயின், இவ்வளவு காலம் பெரியோர்க்குச் செய்த பணிவிடைகளுக்குப் பலன் ஏது?

அத்தனையும் வீண் சிரமம் என்றாகும்.
உடலில் பற்றில்லாதவன், உறவு, பகை, மனைவி, மக்கள், நட்பு என்று பற்று கொள்வானா?

தனக்கென்று நியமிக்கப்பட்ட தர்மங்களை பயனில் பற்றின்றி சிரத்தையுடன் எனக்காகச் செய்பவனது மனம் தெளிவடைகிறது.
மனம் தெளிந்தால், உடல் ஆன்மா அல்ல என்ற அறிவு பிறக்கும். அதனாலேயே அவன் என்னைப் (சாருப்யத்தை) பொன்ற திருமேனியை அடைகிறான். இதுவே அழிவற்ற சாந்தமான நிலை.

என் அடியார்கள் என்னிடம் புத்தியைச் செலுத்துவதால் எவரிடமும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.
அதனால் மகிழ்ச்சியோ துக்கமோ கொள்வதில்லை.

எனவே, வீரனே, வேறுபாடுகளை விடுத்து, அமைதி கொள். உனக்கு நியமிக்கப்பட்ட சபையையும், படைகளையும் கொண்டு உலக மக்களைக் காத்து நில்.

மக்களைக் காப்பதே அரசனின் பணி. அப்படிச் செய்தால் அவர்களது புண்ணியத்தில் ஒரு பங்கு அரசனைச் சேர்கிறது.

வரிவசூல் மட்டும் செய்து மக்களைக் காக்கத் தவறுபவன் மக்கள் செய்யும் தீவினைகளின் பயனை அடைகிறான்.

அறநெறியைப் பின்பற்றி அரசாட்சி செய். ஸனகாதி முனிவர்கள் உனைத் தேடி வருவர்.

உனது நற்குணங்களும் நன்னடத்தையும் என்னைக் கட்டிவிட்டன.

ஏதேனும் ஒரு வரம் கேள்.
அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனின் இதயத்தில் நான் இருக்கிறேன். மற்றபடி, தவம் செய்வதாலோ, யோகாசனத்தில் நிற்பதாலோ, என்னை அடைய முடியாது.

நற்குணங்களும் நற்சிந்தனைகளும் உள்ளவனின் உள்ளத்தில் விரும்பிக் குடியேறுகிறேன்.
என்றார்.

ப்ருது பகவானின் சொற்களைக் கேட்டுக் கண்ணீர் உகுத்தார். அவனது கருணையால் நெஞ்சம் விம்மினார். இந்திரனிடத்துப் பகையை விட்டு அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

பகவானின் சரணத்தில் விழுந்து அவரது பாததாமரைகளைப் பிடித்துக்கொண்டார்.

பகவான் அங்கிருந்து புறப்பட நினைத்தான். ஆனால் போக விடாமல் ப்ருதுவின் அன்பினால் கட்டுண்டுபோய் அவரை அன்பொழுகப் பார்த்துக்கொண்டே நின்றார்.

போதும் என்று சொல்லமுடியாதபடி பகவானும் பக்தனும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, October 29, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 135 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 79

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்.
ஸரஸ்வதி நதி கிழக்கு நோக்கிப் பாயும் ப்ரும்மாவர்த்தம் என்ற இடம் மனு சக்ரவர்த்தியின் புனிதத்தலம். அங்கு ப்ருது நூறு அச்வமேத யாகங்கள் செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டார்.

நூறு அச்வமேத யாகங்கள் செய்பவரே இந்திர பதவியை அடையலாம். ப்ருது பதவியை எண்ணிச் செய்யவில்லை. ஆனாலும் இந்திரன் அவர் மீது பொறாமை கொண்டான்.

ப்ருது மன்னனின் இவ்வேள்வியில் அனைத்துலகோரும் மகிழ்ந்து வணங்கும் யக்ஞ நாராயணனான பகவான் ஸ்ரீ ஹரி நேரிடையாக தரிசனம் தந்தார்.

அவருடன் ப்ரும்மாவும், பரிவாரங்களும், எண்டிசை பாலகர்களும் வந்தனர். அப்போது கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரஸ்கள் அனைவரும் பகவானின் புகழை இசைத்தனர்.

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு குழுமினர்.

விதுரா! பூமாதேவி காமதேனு உருக்கொண்டு யாகத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கினாள்.

திராட்சை, பழரசம், கரும்புச்சாறு, பால், தயிர், அன்னம், நெய் அனைத்தும் பெருகி வந்தன. மரங்கள் தேன் சிந்தும் பழங்களை அளித்தன.

அனைத்து வகையான உணவு வகைகளையும் மலைகள் கொடுத்தன. ரத்தினங்களை ஸமுத்திரங்கள் அளித்தன.

எண்டிசைப் பாலர்களும், மற்ற மன்னர்களும் பல உயர்ந்த காணிக்கைகளை அளித்தனர்.
ப்ருதுவின் செழிப்பைக் கண்டு மனம் பொறாத இந்திரன் வேள்விக்கு இடையூறு செய்ய முற்பட்டான்.

ப்ருது தொண்ணூற்றொன்பது அச்வமேத யாகங்களை முடித்தார். நூறாவது யாகத்தில் இந்திரன் குதிரைகளைக் கவர்ந்து சென்றான்.

மறநெறியை (அதர்மத்தை) அறநெறியாகக் காட்டுவது நாத்திகம். அதைப் பாகண்டம் என்பர்.

இந்த வேடத்தில் தீயோனும் நல்லவனாகக் காட்சி தருவான்.

தன்னைக் காத்துக்கொள்ள நாத்திக வேடம் தரித்து வேள்விக்கான குதிரையை இந்திரன் கவர்ந்து கொண்டு வான் வழிச் சென்றான். அதை அத்ரி முனிவர் பார்த்தார்.

அவர் ப்ருதுவின் மகனிடம் கூறினார். அவன் சினம் கொண்டு இந்திரனைக் கொல்ல எண்ணி நில் நில் என்று கத்திக்கொண்டு துரத்திச் சென்றான்.

தலையில் சடாமுடியும், விபூதி பூசிய திருமேனியுமாக இருந்த இந்திரனைக் கண்டு தர்மதேவதையே உருவெடுத்து வந்ததோ என்றெண்ணி ஏமாந்தான்.
இந்திரன் மீது பாணம் எய்யாமல் திரும்பினான்.

ப்ருதுவின் மகன் இந்திரனைக் கொல்லாமல் திரும்பியது கண்டு, அத்ரி, குழந்தாய்! அவன் தீய குணம் கொண்ட இந்திரனே. யாகத்தைக் கெடுக்க வந்தவன். அவனைக் கொல்
என்றார்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ஜடாயு துரத்தியதுபோல்
ப்ருதுவின் மகன் மறுபடி இந்திரனைத் தொடர்ந்தான்.

அவன் துரத்துவதைக் கண்ட இந்திரன் தன் வேஷத்தைக் கலைத்துவிட்டு குதிரைகளை விட்டு விட்டு மறைந்தான்.

குதிரையோடு திரும்பி வந்த ப்ருதுவின் மகனை முனிவர்கள் "விஜிதாச்வன்" என்று கொண்டாடினர்.

இந்திரன் அடர்ந்த இருளைத் தோற்றுவித்து, அதில் மறைந்திருந்து, சஷாலம் என்னும் யூபஸ்தம்பத்திலிருந்து தங்கக் கடிவாளம் போட்ட வேள்விக் குதிரையை மீண்டும் கவர்ந்து சென்றான்.

கையில் கபாலமும் கட்வாங்கம் என்னும் தண்டமும் ஏந்தி காபாலிகன் வேடத்தில் குதிரையுடன் விண்வழித் தப்பியோடினான் இந்திரன். அத்ரி முனிவர் சுட்டிக்காட்டியும், அவன் சிவபக்தன்போல் வேடமணிந்திருந்ததால் விஜிதாச்வன் தயங்கினான்.

அத்ரி மீண்டும் தூண்டவே, கோபம் கொண்டு அம்பு தொடுத்தான் விஜிதாச்வன்.

இந்திரன் உடனே குதிரையை விட்டு மறைந்துவிட்டான்.

விஜிதாச்வன் குதிரையுடன் திரும்பினான். இந்திரன் விட்டுச் சென்ற வேஷங்களை அறிவிலிகள் ஏற்று நாத்திகர்களாயினர்.

அவை பாவத்தின் சின்னங்கள் எனவும், பாகண்டம் எனவும் அழைக்கப்படுகின்றன.

அவ்வேடங்களின் கொள்கைகள் மனம் மயக்குபவை. செவிக்கு இனிமையானவை. பலவிதமான இனிய உத்திகளால் தம் கொள்கைகளை நிறுத்துபவை. ஆனால் அத்தனையும் போலி தர்மங்கள்.

ஆனால், உலகோர் அவற்றை நம்பி மனத்தைப் பறிகொடுக்கின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, October 28, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 134 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 78

பூமிதேவியின் சொற்களால் மகிழ்ந்தார் ப்ருது.

பசு உருவத்திலிருந்த பூமியிடம் ஸ்வாயம்புவமனுவைக் கன்றாகக் கொண்டு அனைத்து விதமான பயிர்களையும் கைகளாலேயே கறந்து ஏந்திக்கொண்டார்.

ப்ருதுவைப் போலவே மற்றவர்களும் பேச்சின் ஸாரத்தையே உள்வாங்கிக்கொண்டனர்.

எனவே ரிஷிகள் ப்ருஹஸ்பதியைக் கன்றாகக் கொண்டு வேதங்களைக் கறந்தனர்.

தேவர்கள் இந்திரனைக் கன்றாக அமைத்து தங்கப்பாத்திரத்தில் மனவலிமை, பொறி புலன்களின் வலிமை, உடல் வலிமை, அமிர்தம் ஆகியவற்றைக் கறந்தனர்.

அசுரர்கள் அசுரர்களில் சிறந்தவனான ப்ரஹ்லாதனைக் கன்றாகக் கொண்டு இரும்புப் பாத்திரத்தில் கள்ளையும், மற்ற போதை தரும் வஸ்துக்களையும் கறந்தனர்.

கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் விச்வாவசு என்ற கந்தர்வனைக் கன்றாய்க் கொண்டு தாமரை மலர்ப் பாத்திரத்தில் சங்கீதம் என்ற தேனையும், அழகு என்ற பாலையும் கறந்தனர்.

ச்ராத்த தேவர்களான பித்ருக்கள் அர்யமா என்ற பித் ரு தேவனைக் கன்றாக்கி சூளையில் சுடாத மண் பாத்திரத்தில் பிதுர் தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் கவயம் என்ற ஹவிஸைக் கறந்தனர்.

சித்தர்கள் கபிலரைக் கன்றாகக் கொண்டு அஷ்ட சித்திகளையும், அந்தர்தானம் முதலிய வித்தைகளையும் ஆகாயமாகிய பாத்திரத்தில் கறந்தனர்.

மாயையில் வல்ல கிம்புருஷர்கள் மயனைக் கன்றாக்கி பலவிதமான மாயைகளைக் கறந்தனர்.

மாமிசம் உண்ணும் யக்ஷ கின்னரர்களும் பூத பிசாசர்களும் ருத் ரனைக் கன்றாய்க் கொண்டு, மண்டை ஓட்டில் ரத்தமான கள்ளைக் கறந்தனர்.

படம் எடுக்கும், எடுக்காத பாம்பு வகைகளும், தேள் முதலியவையும், தக்ஷகனைக் கன்றாக்கி தம் வாய் எனும் பாத்திரத்தில் விஷமாகிய பாலைக் கறந்தனர்.

பசுக்கள் ருத்ரனின் வாகனமான காளையைக் கன்றாய்க் கொண்டு வனமாகிய பாத்திரத்தில் புல்லைக் கறந்தன.

பறவைகள் கருடனைக் கன்றாக்கி அசைவ உணவுகளையும், பழங்களையும் கறந்தன.

மரங்கள் ஆலமரத்தைக் கன்றாக்கி ரஸரூபமான பாலைக் கறந்தன.
மலைகள் இமயமலையைக் கன்றாக்கி தாழ்வரைப் பாத்திரத்தில் தாதுப்பொருள்களைக் கறந்தன.

ப்ருது மன்னனின் அனுமதியோடு அவரவர் தத்தம் தலைவர்களைக் கன்றாய்க் கொண்டு, தங்களுக்கு விருப்பமானவற்றைக் கறந்துகொண்டனர்.

விரும்பியதனைத்தையும் கொடுத்த பூமாதேவியிடம் அன்பு பெருகி அவளைத் தன் மகளாகவே ஏற்றார் ப்ருது.

இவையனைத்தும் உருவகங்கள். அனைவர்க்கும் வேண்டியதை பூமி அளித்தது என்பதே அறிய வேண்டிய விஷயம்.

ஒரு தந்தைபோல் பூமிக்கு சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்.

ஏழு கண்டங்களாகப் பிரித்து (எவ்வளவோ நிலப்பரப்புகளைக் கடல் கொண்டாலும், வெளி வந்தாலும் இன்று வரை ஏழு கண்டங்களே)
மேடு பள்ளங்களைச் சமனாக்கி, மக்கள் வாழ வீடுகளையும், நகரங்களையும் அமைத்தார்.

கிராமங்கள், பட்டணங்கள், நகரங்கள், கூடாரங்கள், சுரங்கங்கள், கோட்டைகள், வேடுவச்சேரிகள், இடைச்சேரிகள், சேனைக் கூடாரங்கள், வேளாண் கிராமங்கள், மலைச் சாரல் கிராமங்கள், அனைவர்க்குமான வாழ்க்கைத் தளம் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

ப்ருதுவிற்கு முன்பு இவ்வாறான கட்டமைப்புகள் இல்லை. மக்கள் தங்கள் வசதிக்கேற்ப இன்பமாக வாழ்ந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன் யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, October 27, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 133 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 77

விதுரர் கூறினார்.
அந்தணர்கள்‌ ப்ருதுவிற்குப் பட்டாபிஷேகம்‌ செய்து மக்களின் காவலன் என்று அழைத்தனர்.

வேனனது கொடுஞ்செயலால் பூமி தன் வளங்களைத் தனக்குள் ஒளித்துக்கொண்டாள். அதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது.

மக்கள்‌ பட்டினியால் வாடினர். ப்ருதுவிடம் முறையிட்டனர்.

அகில உலகிற்கும் காவலர் தாங்களே! தாங்களே எங்கள் பிழைப்பிற்கும் வழி செய்யவேண்டும் பசிக்கொடுமை வாட்டுகிறது. உடனே ஆவன செய்யுங்கள். இல்லையேல் மடிந்து போக நேரிடும்.

மக்களின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டு இந்நிலைமைக்குக் காரணம்‌ என்ன என்று யோசிக்கலானார்.

பூமி பயிர் பச்சைகள், மூலிகைகள் அனைத்தையும் தனக்குள்‌ ஒளித்துக்கொண்டது என்று ஆராய்ந்து கண்டார். சிவபெருமான் முப்புரமெரிக்கக் கிளம்பியதுபோல் கடுங்கோபம் கொண்டு வில்லை எடுத்து பூமியின் மேல் எய்வதற்காகத் தொடுத்தார்.

அதைக் கண்டு பயந்த பூமிதேவி பசுவின் உருக்கொண்டு ஓடலானாள். அவள் நாற்றிசைகளிலும் ஓட அவளை விடாமல் தொடர்ந்தார் ப்ருது.

அவள்‌ மூவுலகிலும்‌ காப்பார் யாரு மி ன்றி ப்ருதுவிடமே திரும்பி வந்து கூறலானாள்.

தர்ம நெறியறிந்தவரே! துன்பமடைந்தவரைக் காப்பவரே! என்னையும் தாங்களே காக்க வேண்டும். குற்றம்‌புரியாத என்னை ஏன் கொல்ல விரும்புகிறீர்? தர்மநெறியறிந்தவன் பெண்ணைக் கொல்ல முயல்வானா?

நான் உறுதியான படகுபோல் அனைத்து ஜீவன்களையும் என்மேல் வைத்துக் காக்கிறேன். நீங்கள்‌என்னை அழித்தால்‌ உங்களையே நம்பிய மக்களை நீரின்மேல் வைத்து எப்படிக் காப்பாற்றுவீர்கள்?

ப்ருது சொன்னார்..
பூமியே! என் கட்டளையை மீறுகிறாய். அதனால் உன்னைக் கொல்லப்போகிறேன். வேள்வியில் ஹவிர்பாகம் பெறுகிறாய் அல்லவா? ஆனால் தானியங்களைத் தர மறுக்கிறாய்.

நீ பசுவின் உருவின் புல்லை மட்டும் உண்டு பாலைக் கொடுப்பதில்லை. கொடியவளான உன்னைத் தண்டிப்பது குற்றமாகாது.

ப்ரும்மதேவரால் உண்டாக்கப்பட்ட தானிய வகைகளை உன்னுள் ஒளித்துக்கொண்டு கொடுக்க மறுக்கிறாய். உன்னைக் கொன்று உன் கொழுப்பால் என் மக்களின் பசியைத் தீர்ப்பேன். எவன் தன்னை மட்டும் போஷித்துக் கொண்டு மற்ற ஜீவராசிகளிடம் கருணையின்றி நடக்கிறானோ அவன் ஆணானாலும், பெண்ணானாலும் மூன்றாம் பாலினத்தவராயினும், சுயநலமியான அவனைக் கொல்வது கொலையாகாது.

திமிர் பிடித்த உன்னைத் துண்டு துண்டாய் வெட்டி என் யோக சக்தியால் மக்களைக்‌ காப்பேன்.
என்றார்.

பூமி நடுங்கிக்கொண்டு கூறினாள்
நீங்கள் ஸாக்ஷாத் பரமபுருஷரே ஆவீர். மாயையை ஏற்றுப் பல உருவம்‌ கொள்கிறீர். உண்மையில் விருப்பு வெறுப்பற்றவர். தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறேன்.

அனைத்தையும்‌ படைத்த தாங்களே என்னைக் கொல்ல வந்தால் நான் யாரிடம் சரண் புகுவேன்?

தங்கள்‌ மாயையை எவராலும் வெல்லமுடியாது. தாங்களே அன்று ஆதிவராஹமூர்த்தியாய் என்னை சமுத்திரத்திலிருந்து தூக்கிவந்தீர்கள்.
இபோது தாங்களே என்னைக் கொல்லத் துணியலாமா?

தங்களுக்கும் தங்கள் அடியார்களுக்கும் வணக்கம்.

என்மீது கொண்ட கோபத்தைச் சற்றே அடக்கிக்கொண்டு நான் கூறுவதைக் கேளுங்கள்.

உண்மையைக் கண்ட முனிவர்கள் மக்களின் நன்மையின் பொருட்டு பல்வேறு வழிகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர். மக்கள் அந்த தர்ம வழிகளில் ஒழுகினால் பல்வேறு விருப்பங்களையும் அடையப்பெறுவர்.

ஆனால், அவற்றில் நம்பிக்கையற்ற மூடன் தன் விருப்பப்படி ஒரு வழியைக் கைக்கொண்டால் அது பலனளிப்பதில்லை.

ப்ரும்மதேவரால் படைக்கப்பட்ட தானியங்களை தீயவர்கள் உண்டு கொழுத்திருந்தனர். அவர்களின் அதர்மச் செயல்கள்‌ பெருகின. எனவே அவற்றை நான் என்னுள்‌ ஒளித்தேன்.
தாங்கள் நம் முன்னோர்களின் அறவுரைப்படி அவற்றை என்னிடமிருந்து கறக்க ஆவன செய்யுங்கள்.

ஒரு கன்றுக்குட்டி யும் பாத்திரமும் கொண்டுவந்தால், கன்றின்மேலுள்ள அன்பினால் பாலின் உருவில் அனைத்து வளங்களையும் பொழிந்து விடுகிறேன்.

அரசே! நதிப்பாசன நிலமாய் என்னைச் சமன் செய்தால் மழைக் காலத்திலும் வறண்ட காலத்திலும் மாரிகாலத்து மழை என்னுள் தங்கும். அது மக்களுக்கு நன்மைகளைத் தரும்.
என்றாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, October 26, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 132 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 76

ப்ருது மன்னனின் விநயத்தையும் இனிமையான பேச்சையும் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

முனிவர்களின் கூற்றுப்படி துதிபாடகர்கள் பாடத் துவங்கினர்.

மன்னவா! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனின் திருவவதாரமே. தங்கள் பெருமைகளை வர்ணிக்க உண்மையில் எங்களுக்குத் திறமையில்லைதான். மன்னன் வேனனது உயிரற்ற உடலிலிருந்து வெளிவந்தபோதும், உண்மையில் நீங்கள் மங்கல ரூபம் கொண்டவர். தங்கள் பௌருஷத்தை நினைத்தால் ப்ரும்மதேவர் உள்பட அனைவரும் மதி மயங்குகின்றனர்.

இருப்பினும் தங்களது கதாம்ருதத்தின் சுவையில் உள்ள ஆசையால், முனிவர்களது கட்டளையை ஏற்று எங்களால் இயன்றவரை தங்கள்‌ பெருமைகளை விவரிக்கிறோம்.

தங்கள் புகழ் எல்லையற்றது. தாங்கள் தர்ம நெறிகளை ஒழுகுவதில் தலை சிறந்தவர். மக்களை அறநெறியில் செலுத்தி அவர்களைக் காப்பவர். தர்மத்திற்கு ஊறு விளைவிப்போரை தண்டிப்பவர்.

தாங்கள் ஒருவராகவே , மக்களைக் காப்பது, போஷிப்பது, மகிழ்விப்பது ஆகிய செயல்களையொட்டி லோகபாலர்களின் சக்தியை தாங்கி நிற்கிறீர்.

வேள்விகள் மூலம் விண்ணுலகங்களையும், மழை பொழிவதை ஒழுங்குபடுத்தி மண்ணுலகையும் காக்கிறீர்.

சூரியன்போல் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகிமை உடையவர்.

சூரியன் எட்டு மாதங்கள் தண்ணீரை உறிஞ்சியெடுத்து, பின் வர்ஷருதுவில் மழையாகப் பொழிந்து காக்கிறார்.

மலரிலிருந்து வண்டு மலரைப் பாதிக்காமல் தேனைச் சேகரிப்பதுபோல் சுபிக்ஷமான காலத்தில் வரிவசூல் செய்து, பஞ்சம்‌ வரும் காலங்களில் அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்துகிறீர்.

நீர் ஏழைப்பங்காளன். தரையில் கால் வைத்து நடந்தாலும் அசுத்தம் செய்தாலும் பூமி அவற்றைத் தாங்குவதுபோல் , தன்னைத் தகைபவர்களையும் எதிர்ச் செயல் புரிவோரையும் பொறுக்கிறீர்.

தங்களது தோற்றமே மக்களை‌‌ மகிழ்ச்சிப் படுத்துகிறது.

தங்கள் செயல்முறை மிகவும் ரகசியமானது. எவரும் அறியவொண்ணாதது. தங்களது செல்வப் பெருக்கு எவராலும் களவு செய்ய இயலாதது. பாதுகாப்பானது. பெருமைக்கும் நற்குணங்களும் வற்றாத ஊற்றாவீர். பகைவர்களால் அணுகவோ அடக்கவோ இயலாதவர்.

ஒற்றர் வாயிலாக மக்களின் எண்ண ஓட்டத்தை நன்கறிந்தபோதிலும், தன்னைப் பற்றிய நிந்தையையோ, புகழையோ செவி மடுப்பதில்லை.
பகைவனின் புதல்வனே ஆனாலும், தவறு செய்யாவிடில் தண்டிக்கமாட்டீர்.
சூரியனின் ப்ரகாசம் எந்தெந்தப் பகுதிகளிலெல் லா ம் பரவுகிறதோ அத்தனையும் உங்கள் ஆட்சிக்குட்பட்டதே.

தனது நற்செயல்களால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதால் மக்கள் தங்களை ராஜா (ரஞ்சயிஷ்யதி ராஜா - மனம் மகிழச் செய்பவர்) என்றழைப்பர்.

உறுதியான எண்ணம் படைத்தவர். அசைக்க முடியாத கொள்கை உடையவர். சத்தியசந்தர். அந்தணர்களிடம்‌ அன்பு பூண்டவர். மூத்தோரைப் பணிபவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் அடைக்கலமானவர். அவற்றை மதிப்பவர்.

பிறன் மனையைத் தாயென மதிப்பவர். தன் மனையைத் தன்னில் பாதியாய் எண்ணுபவர். குடிமக்களைத் தன் மக்களென பாலிப்பவர். ஞானிகளின் தொண்டர்.

தீயவர்களுக்கு யமன்.

மக்கள் அவித்யையால் இவரை சாதாரண மன்னன் என்று நினைப்பவர். ஆனால் இவர் ஆத்ம ஸ்வரூபமானவர்.

ஒரே வெண்கொற்றக் குடையின் கீழ் பூமண்டலம் முழுவதையும் ஆட்சி செய்பவர்.

கைகளில் வில்லேந்தி சூரியன்போல் நாற்றிசையிலும் தடையின்றி சஞ்சரிப்பார்.

மக்களின் ஜீவனோபாயத்திற்காக பசு வடிவம் தாங்கிய பூமாதேவியிடமிருந்து அனைத்துப் பொருள்களையும் கறப்பார்.

தன் வில்லம்புகளால் மலைகளைப் பிளந்து பூமியைச் சமன் செய்வார்.
இவரது வில்லின் நாணொலி கேட்டு தீயவர்கள் நடுநடுங்கி அழிந்துபோவர்.
ஸர்ஸ்வதி நதிக்கரையில் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்யப்போகிறார். நூறாவது யாகத்தில் இந்திரன் இவரது குதிரையைக் கவர்ந்து செல்வான்.

தன் அரண்மனைப் பூங்காவில் ஸனத்குமாரரைச் சந்தித்து, அவருக்கு பரமபக்தியோடு பணிவிடைகள் செய்து, ஞானத்தைப் பெறுவார்.
இவரது பராக்ரமம் கொடி கட்டிப் பறக்கும்போது, அதைப் பற்றியே அனைத்து மக்களும் பேசுவர்.
இவ்வாறு கூறியவ்துதிபாடகர்களைக் கௌரவித்து சன்மானங்கள் அளித்தார்.

விதுரர் கேட்டார்.

ப்ருது எவ்வாறு பூமியைச் சமன் செய்தார்?

பூமியிடமிருந்து என்னென்ன பொருள்களைக் கறந்தார்?

இந்திரன் எதற்காகக் குதிரைகளை அபகரித்தான்?

ஆத்மஞானம்‌ பெற்று எந்த லோகத்தை அடைந்தார்?

மஹரிஷியே!
ப்ருது மன்னரின் சரித்திரத்தை விரிவாகக்‌ கூறுங்கள். அவரது புகழ் பகவான் நாராயணின் புகழே அன்றோ?
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, October 25, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 131 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 75


வேனனின் கைகளை‌ முனிவர்கள் கடைய அவற்றிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் தோன்றினர்.


ப்ரும்மத்தின் தத்வம்‌ அறிந்த ரிஷிகள்‌ அவர்களைக்‌ கண்டதுமே பகவத் அம்சமாய் வந்தவர்கள்‌ என்று அறிந்துகொண்டனர்.


ரிஷிகள் கூறினர்.
இந்த ஆண்மகன் பகவான் விஷ்ணுவின் அம்சம். இவன் பெயர் ப்ருது. இவன் உலகைக் காக்கப் பிறந்தவன்.

இவளோ திருமகளின் அவதாரம். முத்துப் பற்களைக் கொண்ட இவள் பெயர் அர்ச்சிஸ். இவளை ப்ருது மணப்பான்.

உலகைக் காக்க மஹாவிஷ்ணுவே அவதரித்துள்ளார். அவருக்குப் பணிவிடை செய்ய மஹாலக்ஷ்மியே உடன் வந்துள்ளாள்.

அனைவரும் அவர்களது அவதாரத்தைக் கொண்டாடினர். ஆடிப் பாடினர். பூமாரி பொழிந்தனர்.

தேவர்களும் ரிஷிகளும்‌ கூட்டம் கூட்டமாக வந்தனர். பல மங்கல வாத்யங்கள் முழங்கின.

ப்ரும்மதேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது திருக்கரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் போன்ற ரேகைகளும் பாதத்தில் தாமரை ரேகைகளும்‌ இருப்பது கண்டு ஸ்ரீ ஹரியின் அம்சமே என்று நிர்ணயம் செய்தார்.

எவருடைய கைகளில் வேறு ரேகைகளின் தொடர்பின்றி சக்ர ரேகை மட்டும் தனித்துள்ளதோ அவர் ஸ்ரீ ஹரியின் அம்சமே.

ப்ருதுவுக்கு முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர். மக்கள் பலவிடங்களிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்குத் தேவையானவற்றை ஆசையுடன் கொண்டு வந்து குவித்தனர்.

பஞ்சபூதங்களின் தேவதைகளும் காணிக்கைகள் கொடுத்தன.

ப்ருது மஹாராஜன் தன் தேவியோடு பட்டாபிஷேகம்‌ செய்துகொண்டு இன்னொரு அக்னியோ என்னும்படி ஒளிர்ந்தார்.

விதுரரே!
குபேரன் அவருக்குத் தங்க சிம்மாசனம்‌ கொடுத்தான். வருணன் நீர்த்திவலைகள் தெளிப்பதுபோல் குளிர்ந்த வெண்கொற்றக்குடை கொடுத்தான்.

வாயு வெண்சாமரங்களையும், தர்ம தேவதை புகழ் பரப்பும்‌மலர் மாலையையும், இந்திரன் ரத்தின கிரீடத்தையும், யமன் அனைவரையும் அடக்கியாளும் தண்டத்தையும் கொடுத்தனர்.

ப்ரும்மதேவர் வேதமயமான யும், ஸரஸ்வதி அழகான ஹாரத்தையும், மஹா விஷ்ணு சுதர்சனத்தையும், மஹாலக்ஷ்மி குறைவற்ற செல்வத்தையும்‌கொடுத்தார்கள்.

ருத்ரன் பத்து சந்திர பிம்பங்கள்‌ பொறித்த கூரிய வாளையும், அம்பிகை நூறு சந்திர பிம்பங்கள் பொறித்த கேடயத்தையும், சந்திரன் அமுதமயமான குதிரைகளையும், தேவசிற்பியான துவஷ்டா அழகிய ரதத்தையும்‌ கொடுத்தனர்.

அக்னி உயர்ந்த வில் கொடுத்தார். சூரியன் தன் கிரணங்களைப்போல் ஒளிமிக்க அம்புகளைக் கொடுத்தார். பூமாதேவி நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய யோகசக்தியுள்ள பாதுகைகளைக் கொடுத்தாள்.

ஆகாயமோ தினமும் அணிய தேவலோகப் பூக்களைக் கொடுத்தது.

சித்தர்களும் கந்தர்வர்களும் ஆடல் பாடல் களையும், வாத்தியம்‌ இசைக்கும் கலையையும், திடீரென மறையும்‌ அந்தர்தான வித்தையையும் அளித்தனர்.

சமுத்திரம் தன்னிடம்‌ தோன்றிய சங்கத்தைக் கொடுத்தது.

ப்ருதுவைப் பாட துதி பாடகர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் ப்ருது கூறினார்.

அன்பு மிக்கவர்களே! என் குணங்கள் பற்றிய புகழ் ஏது? இல்லாத குணங்களைப் பாடுவார்களா? தகுதியுள்ளவர்களைப் பாடுங்களேன்
இனி வரப்போகும் காலங்களில் என் புகழ் பரவினால் அப்போது பாடலாம். ஸ்ரீ மன் நாராயணனின் புகழில் மனம் கொண்டவர்கள்‌ மனிதர்களைப் பாடமாட்டார்கள்.

சான்றோர்கள் புகழுக்குப் பாத்திரமான போதிலும் தங்கள் புகழைக் கேட்பதை விரும்பார். நானோ இன்னும் நற்செயல்களைத் துவங்கவில்லை. அப்படியிருக்க எனது புகழ் என்று ஏதுமில்லையே.
என்றார்.

ஆனால், முனிவர்களின் கூற்றுப்படி அவர்கள் ப்ருதுவைப் பாடத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, October 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 130 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 74

முனிவர்களின் பேச்சைக் கேட்ட வேனன் ஏளனமாய்ச் சிரித்தான். பின்னர் மனம்போன போக்கில் பேசத் துவங்கினான்.

அறிவிலிகளே! மதநெறியை அறநெறி என்கிறீர்களே. உங்களுக்குச் சோறுபோடும் என்னை விடுத்து யாரோ ஒருவனை வேண்டுகிறீர்களே. கணவனை விடுத்து கள்ளக் காதலனை அணுகுவார்களா?
அதுபோல் உள்ளது உங்கள் செயல்.

அரசனே கடவுள். தீய நடத்தையுள்ள பெண் கணவனை விடுத்து வேறொருவனை நாடுவதுபோல் அரசானான என்னை விடுத்து இவ்வளவு பக்தியுடன் எவனோ ஒரு யக்ஞபுருஷனைக் கொண்டாடுகிறீர்கள்.

அனைத்து தேவர்களும் அரசனின் திருமேனியில் வாசம் செய்கிறார்கள்.

ஆகவே, நீங்கள்‌ முதலில் என்னைப் பூஜை செய்யுங்கள். எல்லாக் காணிக்கையும் எனக்கே. உங்கள் வேள்விகளின் ஹவிர்பாகம் என்னையே அடையட்டும். என்னைத் தவிர இங்கு வேறெவருக்கும் ஆராதனை நடைபெறுவது தகாது.
என்றான்.

தீய புத்தி கொண்ட வேனன் ஸாதுக்களை அவமதித்ததால் அவனிடம் கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டிருந்த புண்யபலன் அப்போதே தீர்ந்துபோய், பாவம் மலையென உயர்ந்தது.

முனிவர்கள் அவன்‌மீது கடுங்கோகம் கொண்டனர்.

மஹாபொறுமைசாலிகளும் ஞானிகளுமான அவர்கள் உலக நன்மை கருதி கோபத்தை ஏற்றனர்.
இந்தப் பாவியைக்‌ கொல்லுங்கள். இவன் சில நாள்களிலேயே பூமியைச் சாம்பலாக்கிவிடுவான். வேள்விகளின் தலைவனான ஸ்ரீமன் நாராயணனை வெட்கமின்றி நிந்திக்கிறான். இவன் சிங்காசனத்திற்கு ஏற்றவனல்லன்
என்று கூக்குரலிட்டனர்.

அனைவரும்‌ சேர்ந்து ஒரு ஹூங்கரம் செய்தனர். அதனால் எழுந்த அக்னி ஜ்வாலையால் அவர் உயிர் அக்கணமே பிரிந்தது.

பகவான் அச்சுதனை நிந்தித்ததால் அவன் முன்பே இறந்ததற்கொப்பானவனே.

வேனன் இறந்துபட்டதும் முனிவர்களின்‌ கோபம் தணிந்தது. துக்கத்தினால் துன்புற்ற வேனனின் தாய் தன் தவ வலிமையாலும், வேறு சில யுக்திகளாலும் வேனனின் உடலைக் காத்து வந்தாள்.

முனிவர்கள் ஆசிரமம் சென்று ஸரஸ்வதி நதியில் நீராடி, அனுஷ்டானங்களை‌முடித்து, பகவானின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது துர்நிமித்தங்கள் தோன்றின.

அரசனில்லாததால் கொள்ளையர்கள் பெருகுவரே என்று கவலை கொண்டனர். அச்சமயம் கொள்ளையடித்துக்கொண்டு திருடர்கள் குதிரை மீதேறி ஓடுவதால் புழுதி நாற்றிசையையும் மூடியது.

அரசன் இல்லாததால் அதர்மம் சூழ்வது கண்டு வருந்தினர். தங்கள் தவ வலிமையால் அதர்மத்தைத் தடுக்க இயலும் என்றாலும் அதில் பல தோஷங்கள் ஏற்படும் என்பதால் செய்யவில்லை.

அந்தணன் அனைத்திலும் ஒரே நோக்குடையவனாயினும், அமைதியே உருவெடுத்தவனாயினும், தீனர்களது துன்பம்‌ கண்டு அதை நீக்க வழி வகை செய்ய இயன்றும் வாளாவிருந்தால் அவனது தவம்‌ ஓட்டைப் பாத்திரத்திலுள்ள நீர்போல் சிறிது சிறிதாய்க் குறையும்.

ராஜராஜனான அங்கனது வம்சம் வேனனோடு அழியக்கூடாது இந்த வம்சத்தரசர்கள் பக்தர்கள். பகவானையே நம்பியவர்கள். என்றெல்லாம் தீர்மானித்த முனிவர்கள் அரண்மனையை அடைந்தனர்.

வேனனது உடலைக் கொண்டு வரச்சொல்லி அவனது தொடையைக்‌ கடைய அதிலிருந்து பாகுகன்‌ என்ற குள்ளமான ஒரு மனிதன் தோன்றினான்.

அவன் காக்கை போல் கருப்பாக இருந்தான். குட்டையான உடலும் கை கால்களும் கொண்டு செம்பட்டை முடியுடன் இருந்தான்.

அவன் முனிவர்களை வணங்கினான்
நான் பாகுகன். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?
என்று கேட்டான்.

அவனை முனிவர்கள் நிஷீத! உட்கார். என்றனர். அவன் பெயர் நிஷாதன் என்றாயிற்று.

அவன் வேனனின் பாவங்கள் மொத்ததின் உருவாக இருந்தான். அவன் வம்சத்தினர் ஹிம்சை, திருட்டு முதலியவைகளில்‌ ஈடுபட்டனர். மலைகளிலும் வங்களிலும் வசிக்கலாயினர்.

அதன்‌ பின்னர் முனிவர்கள் வேனனின் கைகளைக் கடைய அவற்றிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் தோன்றினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, October 22, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 129 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 73

தீயொழுக்கம் உள்ள பிள்ளையின் செயல்களால் பெற்றோரின் புகழ் மண்ணோடு மண்ணாகும்.
அதர்மத்தில் பங்கேற்கும் பிள்ளையால் வீடே நரகமாகிறது. அனைவரிடமும் பகை மூள்கிறது. முடிவற்ற மனவேதனை உண்டாகிறது. பெயரளவில் பிள்ளை வேண்டும் என்பதற்காக தீயொழுக்கம் உள்ள பிள்ளையை அறிவுள்ளவன் ஆசைப்படுவானா? ஆன்மாவைச் சிறையிடும் மோகவலை அது.

ஒரு விதத்தில் நல்ல பிள்ளையை விட, கெட்ட பிள்ளை தேவலாமோ? ஏனெனில் நல்ல பிள்ளை பற்றுக்குக் காரணமாவான். அதனால் அவனைத் துறப்பது பெரும் துன்பம் தரும். கெட்ட பிள்ளையால் வீடே நரகமாகும். துறவு மனப்பான்மை விரைவில் ஏற்படும்.

இப்படிப் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்த அங்கன், தன் மனைவி, தாய் ஆகியோரைத் துறந்து நள்ளிரவில் யாருமறியா வண்ணம் வீட்டைத் துறந்து கானகம் சென்றான்.

யோக மார்கத்தின் உண்மை வழியறியாதவன் இறைவனை வெளியில் தேடுவதுபோல் சபையோரும் மந்திரிகளும், உற்றாரும் அரசனைத் தேடியலைந்தனர்.

மக்கள் தங்கள் அன்பு மிகுந்த அரசனைக் காணாது கண்ணீரில் மூழ்கினர்.

ப்ரும்ம ஸ்வரூபத்தையறிந்த ப்ருகு முதலிய முனிவர்கள் உலக நன்மையையே எப்போதும் வேண்டுபவர்கள்.

மக்களைக் காக்க அரசன் என்று ஒருவன் இல்லாவிடில் நாடு கேட்டையடையும் என்றறிந்து, மந்திரிகள் விரும்பாவிடினும் தாய் ஸுநீதையின் அனுமதி பெற்று வேனனை அரசனாக்கினர்.

மிகவும் கொடுமையாக தண்டிக்கும் இயல்புடைய வேனன் அரசனானதும், திருடரும் கொள்ளையரும் பாம்பைக் கண்ட எலி போல் பதுங்கினர்.

அரியணை ஏறிய வேனன் அஷ்டதிக்பாலர்களையும் செல்வங்களையும் பெற்றதால் தன்னை மிக உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டான். ஸாதுக்களை அவமதிக்கத் துவங்கினான்.

அடக்குவாரின்றி செல்வச் செருக்கால் மதியிழந்து, கண்ணிருந்தும் குருடனாய் தேரிலேறி விண்ணும் மண்ணும் அதிரச் சுற்றியலைந்தான்.

எவரும் வேள்விகள் செய்வதோ, பூஜை செய்வதோ, தானங்கள் அளிப்பதோ கூடாது என்று முரசறைவித்தான். அனைத்து தர்ம காரியங்களையும் தடுத்து நிறுத்தினான்.

அவனது தீய செயல்களால்‌ அவதியுறும் மக்களைக் கண்டு முனிவர்கள்‌ கருணை கொண்டு ஒன்று கூடினர்.

அரசனில்லாது நாடு துன்பப்படுகிறதே என்று இந்த வேனனை அரசனாக்கினோம். ஆனால் மக்களின் துன்பம் அதிகரித்துவிட்டதே. எப்படி இந்த நிலைமையைச் சீர் செய்வது? பாம்பிற்குப் பாலூட்டி வளர்த்தாற்போல் அரசனானதும் இவனது துஷ்டத்தனம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதே.

இவனைப் பேசி நல்வழிப் படுத்துவோம். அவன் சமாதானப் பேச்சுக்கு சரிவரவில்லை எனில் எரித்துவிடலாம் என்ற முடிவோடு அவனிடம் சென்றனர்.

முனிவர்கள் வேனனைப் பார்த்து இனிமையாகப் பேசத் துவங்கினர்.

அரசே! மனம், வாக்கு, உடல், புத்தி இவைகளால் ஒருவன் தர்மத்தைத் தழுவி நடந்தால் உத்தம லோகங்களை அடையலாம். அதே தர்மத்தை பயன் கருதாமல் செய்தால் முக்தி கிட்டும்.

அறநெறி பாழானால் செல்வங்கள் அழியும். மக்களுக்கு நன்மை அளிக்கும் தர்மத்தை நீங்கள் பின்பற்றவேண்டும்.

திருடர்களிடமிருந்தும், தீயோரிடமிருந்தும் மக்களைக் காத்து, முறையாகக் கப்பம்‌ வசூலித்து அறநெறிப்படி வாழும் அரசன் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நன்மைகளையும்‌ பெறுவான்.

எந்த அரசாட்சியில் மக்கள் முறைப்படி இறைவனைப் பூஜிக்கிறார்களோ அந்த அரசனின் ஆட்சி கண்டு இறைவன் மகிழ்கிறார்.

பகவான் அரசர்க்கரசர். இந்திராதி தேவர்களும் அவரைப் பணிகின்றனர்.
அவரே அனைத்துப் பொருள்களாகவும் தவமாகவும் விளங்குகிறார்.

தங்களது தேசத்தில் வசிக்கும் நாங்களும் தங்களது நன்மைக்காகவே வேள்விகளால் பகவானை ஆராதனை செய்கிறோம்.

அந்தணர்கள் அரசனின் நன்மை கருதி முறையாக வேள்வி செய்தால், தேவர்கள் அரசனிடத்தில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மக்கள் விரும்பியதனைத்தையும் கொடுக்கிறார்கள். தாங்கள் அவர்களை அவமதிக்கக்க்கூடாது
என்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Sunday, October 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 128 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 72

விதுரர் கேட்டார்.

முனிவரே அங்க மஹாராஜன் ஒழுக்கம்‌ மிகுந்தவன். பரம ஸாது. மகானும் கூட. அவனுக்கு வேனன் போன்ற கொடிய இயல்புடைய மகன் எவ்வாறு பிறந்தான்?

குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசனுடையது. அப்படியிருக்க அரசனையே முனிவர்கள் தண்டிக்க இயலுமா? அவன் அப்படி என்ன தவறு செய்தான்?
மைத்ரேயர் கூறினார்.

அங்கன் ஒரு சமயம் யாகங்களில் சிறந்த அசுவமேத யாகத்தைச் செய்தான். அதில் நெறி தவறாது அத்தனை மந்திரங்களையும் கூறி அழைத்தும், தேவர்கள் அவிர்பாகத்தைப் பெற்றுக்கொள்ள வரவில்லை.

இதைக்‌கண்ட ரித்விக்குகளும் எல்லாமே குறைவற இருந்தும் தேவர்கள் வராததன் காரணம் தெரியாமல் திகைத்தனர்.

அங்கன் மிகவும் வருந்தி, யாகத்திற்காகத் தான் ஏற்ற மௌன விரதத்தை விடுத்து அவையோர்களைப் பார்த்து தேவர்கள் அவர்கள் வராததன் காரணம் கேட்டான்.

அரசே, இப்போது ஏதும் தவறு இல்லைதான். ஆனால் நிச்சயமாக ஏதோ முன்வினைப் பயன் உள்ளது. அதன் காரணமாகவே இதுவரை தங்களுக்கு பிள்ளைப்பேறும் இல்லை. எனவே நீங்கள் நல்லதோர் குமாரனைப் பெற முயற்சி செய்யுங்கள். புத்ர ஸந்தானம் வேண்டி யக்ஞ புருஷனான ஸ்ரீமன் நாராயணனை ஆராதனை செய்யுங்கள். அவர் மகிழ்ந்தால் போதும். புத்ர ஸந்தானமும் கிடைக்கும். தேவர்களும் ஹவியை ஏற்க வருவர் 
என்றனர்.

புரோகிதர்கள் அங்கனுக்கு புத்ர பாக்யம் வேண்டி புரோடாசம் என்ற அவியைத் தயாரித்து, மஹாவிஷ்ணுவைத் தியானித்து அதை வேள்வியில் இட்டார்கள்.

உடனே வேள்வியிலிருந்து கழுத்தில் தங்க ஹாரமும் தூய்மையான பொன்னாடையும் அணிந்த யக்ஞபுருஷன் தங்கப் பாத்திரத்தில் பாயசத்தை ஏந்திய வண்ணம் வெளிவந்தார்.

அங்கன் மிகவும் மரியாதையுடன் இரு கரங்களால் அதை வாங்கி மகிழ்ச்சியோடு மனைவியிடம்‌ கொடுத்தான்.

அரசி தன் பேற்றை நினைந்து மகிழ்ந்து அந்தப் பாயசத்தை அருந்திக் கருவுற்றாள்.

உரிய காலத்தில் ஓர் ஆண்மகவை ஈன்றாள்.

அதர்மத்தின் அம்சத்திலிருந்து தோன்றிய ம்ருத்யு இவனது தாய் வழித் தாத்தா. ஆகவே அக்குழந்தை சிறு வயதிலிருந்தே தாத்தாவைப் பின்பற்றி தீயவழியிலேயே நின்றான்.

கையில் வில்லேந்தி வேட்டையாடச் சென்று எளிய விலங்குகளைக் கொன்றான்.

அதைக்‌கண்டு மக்கள் கொடியவன் என்று பொருள்படும்படி வேனன் என்று அவனை அழைக்கத் துவங்கினர்.
விளையாட்டுத் திடலில் தன்னொத்த சிறுவர்களைப் பிடித்து பலவந்தமாகக் கொன்றுவிடுவான்.

மன்னன் அங்கன் அவனைப் பல விதங்களில் தண்டித்தும், தீய செயல் களிலிருந்து தடுத்தும் அவன் நல்வழித் திரும்பினான் இல்லை.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, October 20, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 127 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 71

மைத்ரேயர் கூறினார்
ப்ரசேதஸர்கள் அறநெறி வழுவாது பகவான் யக்ஞபுருஷ்னை வேள்விகளால் ஆராதித்தபோது, நாரதர் அங்கு வந்து த்ருவனின் கல்யாண குணங்களை வர்ணித்தார்.

விதுரர் உடனே,
அந்தண குலதிலகமே, நாரதர் அச்சபையில் கூறிய அனைத்துக் கதைகளையும் கருணை கூர்ந்து எனக்குக்‌ கூறுங்கள், என்றார்.

அவரது ஆர்வத்தைக் கண்டு பரவசமடைந்த மைத்ரேயர் கூறலானார்.

த்ருவன் தான் விரும்பியது போல் உத்தம பதத்தை அடைந்தான். அங்கே அவனைச் சுற்றி ஸப்தரிஷிகளும் விளங்குகிறார்கள்.

அனவரதமும் அவர்கள் சொல்லும் பகவத் கதைகளைக்‌ கேட்டுக்கொண்டு நாளுக்கு நாள் தேஜஸ்‌ மிகுந்து ப்ரகாசிக்கிறான்.

த்ருவனது புதல்வனான உத்கலன் தந்தை கானகம்‌ சென்ற பின்பு அரசை ஏற்றான். ஆனால் அவன் மனம் பதவியிலோ, செல்வத்திலோ, செல்லவில்லை.

பிறவி முதலே மனவடக்கமுள்ளவன். பற்றற்றவன். எங்கும் எதிலும் சமநோக்குள்ளவன். அவ்வாறான உத்கலன், அனைத்து ஜீவராசிகளைத் தன்னுள்ளும், தன்னை அனைத்து ஜீவராசிகளிடமும் கண்டான்.

தீவிரமான யோகப் பயிற்சியால் அவனது வாசனைகள் எரிந்துபோயின. ஆத்மானந்தம் சித்தித்தது. தன்னையே பரமசாந்த வடிவினனாக, ஞானரூபமாக, எங்கும் நிறைந்தவனாகக் கண்டான்.

உடல் தான் என்ற எண்ணம்‌ நீங்கி பரமாத்ம ஸ்வரூபமே தான் என்று உணர்ந்தான்.

வெளித்தோற்றத்திற்கு ஜடம் போலவும், குருடன் போலவும், பைத்தியம், ஊமை போலவும் காணபட்டான். ஆனால் உண்மையில் குறைகள் ஏதும் அற்றவன் அவன். உடலைத் தான் என்றெண்ணிய பாமரர்களுக்கு அக்னி அடங்கிய ஜ்வாலை போல் இருந்தான்.

அதனால் அவனை அறிவீனன், பைத்தியம் என்று நினைத்து, அக்குலத்து மூத்தோர், சபையில் கலந்தாலோசித்து, த்ருவனின் மனைவி ப்ரமியின் இளைய குமாரனான வத்ஸரனை அரசனாக்கினர்.

வத்ஸரனின் அன்பு மனைவி ஸ்வர்வீதி என்பவள், புஷ்பார்ணன், திக்மகேது, இஷன், ஊர்ஜன், வஸு, ஜயன் என்ற ஆறு புதல்வர்களைப் பெற்றாள்.

புஷ்பார்ணனுக்கு ப்ரபை தோஷை என்று இரு மனைவியர். ப்ரபைக்கு பிராதன், மத்யந்தினன், ஸாயன் என்று மூன்று பிள்ளைகள்.
தோஷா என்பவளின் மகன்கள், ப்ரதோஷன், நிசிதன், வியுஷ்டன். வியுஷ்டனின் மனைவி புஷ்கரிணி. இவர்களது புதல்வன் ஸர்வதேஜஸ் என்பவன்.

ஸர்வதேஜஸின் மனைவி ஆகூதி. இவர்களது மகம் சக்ஷுஸ் என்ற மனு. அவனது மனைவி நட்வலா. இவர்களது புதல்வர்கள் புரு, குத்ஸன், த்ரிதன், தியும்னன், ஸத்யவந்தன், ரிதன், விரதன், அக்னிஷ்டோமன், அதிராத்ரன், பிரத்யும்னன், சிபி, உல்முகன் ஆகிய பன்னிருவர். அனைவரும் தூய்மையானவர்கள்.

உல்முகன் புஷ்கரிணியை மணந்து அங்கன், சுமனஸ், கியாதி, கிரது, அங்கிரஸ், கயன் ஆகிய ஆறு மகன்களைப் பெற்றான்.

அங்கனது மனைவி ஸுநீதை என்பவள் கொடியவனான வேனனை ஈன்றாள்.
அவனது செயல்களைக் கண்டு வருந்திய ராஜரிஷியான அங்கன், நாட்டைத் துறந்து கானகம் சென்றான்.
முனிவர்களின் சாபம் வஜ்ரப்படை போன்றது. வேனனது கொடுங்கோலைக் கண்டு வருந்திய முனிவர்கள், கோபம் கொண்டு அவனைச் சபிக்க அவன் மாண்டு போனான்.

உலகம் காவலன் இன்றி ஆகவே, திருடர்கள் மிகுந்தனர். இதைக் கண்டு முனிவர்கள் வேனனது வலது கரத்தைக் கடைந்தபோது, அதிலிருந்து ப்ருது மஹாராஜன் தோன்றினார்.
அவர்தான் உலகின் முதல் சக்ரவர்த்தி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, October 19, 2018

ஸ்ரீமத் பாகவத பழம்-126 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 70

அரசாட்சியைத் துறந்து வனம் சென்று தவம் மேற்கொண்ட துருவனுக்கு நிர்விகல்ப ஸமாதி சித்தித்தது. அப்போது வானிலிருந்து திவ்ய விமானம் வந்தது.

அவ்விமானத்தில் நீலமேக ஷ்யாமள ரூபத்துடன், கிரீட குண்டலங்கள்‌ அணிந்து, கையில் கதையேந்தி, பொன்னாடைகளும் முத்து மாலைகளும் எல்லா ஆபரணங்களும் தரித்து இளம் வயதினராக இரண்டு தேவ ஸ்ரேஷ்டர்கள் வந்தனர்.

அவர்கள் இருவரையும் தன் தலைவனான விஷ்ணுவின் பாரஷதர்கள் என்றறிந்தான். பரபரப்புடன் எழுந்து அவர்களை மரியாதையுடன் பகவன் நாமங்களைக் கூறிக்கொண்டே விழுந்து வணங்கினான் த்ருவன்.

பகவானின் தொண்டர்களான நந்தன், ஸுநந்தன் என்ற அவ்விருவரும் விநயத்துடன் வணங்கி நிற்கும் துருவனிடம் சிரித்தபடியே வந்தனர்.

துருவராஜனே, நாங்கள் இருவரும் பகவானின் அணுக்கத் தொண்டர்கள். தம்மை அழைத்துப்போகவே வந்தோம்.
பகவானது அந்த ஸ்தானத்தை ஸப்த ரிஷிகளும்கூட மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர, அடைய முடியவில்லை.

சூரியன், சந்திரன், கோள்கள் எல்லாருமே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு போகும் அந்த வைகுண்டம் தங்களால் சுலபமாக அடையப்பட்டது.

தங்கள்‌ முன்னோர்கள் எவரும் அடைந்திராத வைகுண்டத்தை தாங்கள் பெற்றீர்கள். புண்யசிகாமணியான தங்களுக்காக இச்சிறந்த விமானத்தை பகவான் அனுப்பியுள்ளார்.

பார்ஷதர்களின் தேனொழுகும் சொற்களைக்‌கேட்ட த்ருவன் மகிழ்ந்து, நீராடி, அன்றைய நாளின் கடைமைகளை முடித்து, அங்குள்ள முனிவர்களை வணங்கி ஆசி பெற்றான்.

பின்னர் விமானத்தை வலம் வந்து வணங்கிய த்ருவனுக்கு பொன்னைப் போன்ற மேனி கிடைத்தது.

விமானத்தில் ஏறி அமர யத்தனித்த த்ருவன், அங்கு மரணதேவதையான யமதர்மராஜன் வந்திருப்பதைக் கண்டான்.

அவர் வந்து குனிந்து விமானத்தின் அருகில் நிற்க அவரது தலைமேல் கால் வைத்து விமானத்தில் ஏறி அமர்ந்தான்.

அப்போது துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்கள் பாடினர். பூமாரி பொழிந்தது.

விமானம்‌புறப்படும் சமயத்தில் தன் தாயார் ஸுநீதியை நினைத்தான் த்ருவன். தன் முன்னேற்றங்கள் அனைத்திற்கும் மூல காரணமான தாயை விட்டுத் தான் மட்டும் வைகுண்டம் செல்வதா என்றெண்ணினான்.

அவனது எண்ணத்தை உணர்ந்த விஷ்ணு பார்ஷதர்கள்
அவ்விமானத்திற்கு முன்னால் 
வேறொரு விமானத்தில் சென்றுகொண்டிருந்த ஸுநீதியைக் காண்பித்தனர்.

தாய்க்கும் வைகுண்டம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி கொண்டான் த்ருவன்.

பகவத் பக்தனான த்ருவனது இந்த தூய்மையான சரித்ரத்தை ஈடுபாட்டுடன் அடிக்கடி கேட்பவர்க்கு பகவானிடம்‌ இடையறாத பக்தி ஏற்படும். அதனால் அவரது துக்கங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகும்.

நல்லொழுக்கம்‌ உண்டாகும். மேன்மை, தேஜஸ், வலிமை ஆகியவற்றைப் பெறுவர்.

இச்சரிதத்தை காலையிலும் மாலையிலும் கேட்கவேண்டும்.
பலனில் பற்று கொள்ளாமல் பௌர்ணமி, அமாவசை, துவாதசி, திருவோணம், சங்கராந்தி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் பகவானை உள்ளத்திலிருத்திக்‌ கூறுபவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அவன் சித்தபுருஷனாகி, பூரணனாவான்.

விதுரா, த்ருவன் சின்னஞ்சிறு வயதிலேயே வீடு வாசல், தாயார் எல்லவற்றையும்‌ விட்டு பகவானைச் சரணடைந்தவன். அவனது சரித்ரத்தை உனக்கு விரிவாகக்‌கூறினேன்.

மேற்கொண்டு விதுரர் ப்ரசேதசர்கள் பற்றிக் கேட்க, அவர்களது கதையைக் கூறத் துவங்கினார் மைத்ரேயர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...