நான், அண்ணா இருவருமே ஊரில் இல்லை. துவாரகைக்கு ஏதோ ஆபத்து என்று ஒன்றுமறியாதவன்போல் வழியெங்கும் புலம்பிக்கொண்டே வந்தான் கண்ணன். அன்பு கண்ணை மறைத்தது போலும். அல்லது இயல்பான ஞானத்தை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டான் போலும்.
துவாரகையின் உள்ளே நுழையும்போதே அனைத்து சேதங்களையும் பார்த்துக்கொண்டே வந்த கண்ணன், மனம் வருந்தினான். பலராமனை துவாரகையைக் காப்பதற்காகக் காவல் நிறுத்திவிட்டு தான் ரதத்திலேறிப் போர்க்களம் புகுந்தான்.
சௌபம் என்ற விமானத்தையும் சால்வனையும் பார்த்து சாரதியான தாருகனிடம் அவனருகில் செல் என்றான்.
சால்வன் ஒரு பெரிய சக்திவேலை தாருகன் மீது எறிந்தான். கண்ணன் அதைப் பொடிப்பொடியாக்கினான்.
சால்வனைப் பதினாறு பாணங்களாலும், ஆகாயத்தில் சுற்றி வரும் சௌபத்தை மறைக்கும் படியும் பாணங்களால் அடித்தான் கண்ணன்.
சால்வன் கண்ணனின் இடதுகையை அடிக்க, சார்ங்கம் கீழே விழுந்தது. அதைக்கண்ட தேவர்கள் ஹாஹா என்று கூச்சலிட்டனர்.
சால்வன் கண்ணனைப் பார்த்துக் கூறினான்.
என் நண்பனான சிசுபாலனின் திருமணத்தைக் கெடுத்து பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனாய். அவன் சற்று அசந்த நேரமாகப் பார்த்து வஞ்சகமாகக் கொன்றாய். உன்னை ஒருவராலும் வெல்லமுடியாதென அஹங்காரம் கொண்டிருக்கிறாய். உன்னை இப்போதே என் பாணங்களால் வானுலகம் அனுப்புவேன்.
கண்ணனோ,
உன்னருகில் நிற்கும் எமனைத் தெரியவில்லையா. பேச்சை விடுத்து உன் ஆண்மையைக் காட்டு என்று கூறி அவனை கதையால் அடித்தான். சால்வன் ரத்தம் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். உடனே தான் மறைந்துகொண்டு தன் மாயச் சக்திகளை ப்ரயோகம் செய்யத் துவங்கினான்.
ஒரு தூதன் கண்ணனிடம் ஓடிவந்து சால்வன் தங்கள் தந்தையைக் கட்டி இழுத்துக்கொண்டு போய்விட்டான் என்று கூற, கண்ணன் பாசத்தால் தடுமாறினான். பலராமனை ஒருவனால் அடக்க முடியுமா. அப்படியும் தந்தையைக் கொண்டுபோனானா என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே சால்வன் வசுதேவர் போன்ற ஒரு மாயை மனிதனைக் கொண்டு வந்தான்.
இதோ இவருக்காகத்தானே வாழ்கிறாய். முடிந்தால் இவரைக் காப்பாற்று என்று கண்ணனை மிரட்டிவிட்டு அந்த மாயா வசுதேவரின் தலையை வெட்டிவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டான்.
கண்ணன் சிறிது நேரம் துக்கத்தில் ஆழ்ந்தான். பின்னர் மனம் தெளிந்து அனைத்தும் அசுர மாயை என்றுணர்ந்தான். அப்போது அங்கு அந்த தூதனையோ, வசுதேவரின் உடலோ தலையோ ஒன்றும் காணப்படவில்லை.
இவ்விடத்தில் கண்ணன் பாமரனைப்போல் கலங்கினான் என்று சொல்கிறார்கள். ஆனால் பூர்ணானந்த ஸ்வரூபனான கண்ணனுக்கு அது பொருந்தாது. அவன் தூய்மையான அன்பிற்கு வசப்பட்டவன் ஆதலால், இந்நிலையைக் கடக்க சில நிமிடங்களாயிற்று.
வசுதேவரின் அன்பு அத்தகையது. கண்ணனை மாயை எதுவும் செய்ய இயலாது.
கண்ணன் கடுங்கோபமுற்று விளையாடியது போதும் என்று முடிவெடுத்தான். சால்வனின் கவசங்கள், வில், தலையிலிருந்த சூடாமணி அனைத்தையும் தெறிக்கச் செய்தான்.
தன் கதையை சௌப விமானத்தை நோக்கிச் சுழற்றியடிக்க அது ஆயிரம்துண்டுகளாக உடைந்து கடலில் விழுந்தது. தரையில் இறங்கி வேகமாகத் தன்னை நோக்கி ஓடிவந்த சால்வனின் கரங்களை வெட்டினான். தலையை சக்ராயுதம் அறுத்தது.
ஊழிக்காலத்தின் காலதேவனைப்போல் விளங்கிய கண்ணனை வானிலிருந்து எழுந்த மங்கள ஒலியும் பூமாரியும் அமைதிப்படுத்தின.
கண்ணன் தன் அமுதப் பார்வையால் துவாரகையை முன்போல் செல்வச் செழிப்புள்ளதாக்கினான்.
சால்வன் அழிந்தபோதும் துவாரகைக்கான ஆபத்து நீங்கவில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment