யதுகுலம் முழுதும் அழிந்தபின் பலராமன் ஸமுத்திரக் கரையில் சென்று அமைதியாக அமர்ந்தான். ஆத்மாவைத் தன்னிலையில் நிறுத்தி தியானம் செய்து மனித உடலைத் துறந்தான். பரமாத்மாவை அடைந்தான்.
பலராமன் கிளம்பிவிட்டதைக் கண்ட கண்ணன் ஒரு அரசமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். பின்னர் ப்ரகாசிக்கும் அக்னியின் வண்ணத்தின் ஒளிமயமான உடலைக் கொண்டான். நான்கு கரங்கள், ஸ்ரீ வத்ஸம், மஞ்சள் நிற பட்டாடை, மகர குண்டலம், தலையில் கிரீடம், கைகளில் கங்கணங்கள், புஜங்களில் தோள்வளை, மாலை, பாதங்களில் நூபுரம், கழுத்தில் கௌஸ்துபம், மங்கல வடிவம்கொண்டு புன்சிரிப்புடன் கூடிய திருமுகத்துடன் அமர்ந்திருந்தான். சங்கு, சக்கரம், கதை ஆகியவை அருகில் இருந்தன. தன் இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைத்து அமர்ந்திருந்த கோலம் அழகே உருவாக அமைந்திருந்தது.
அப்போது ஜரன் என்ற வேடன் தூரத்திலிருந்து கண்ணனின் பாதத்தை மட்டும் பார்த்தான். அவனுக்கு வேறெதுவும் தெரியவில்லை. கண்ணனின் சிவந்த பாதம் மானின் முகம் போல் தெரிந்தது.
மான் என்றெண்ணி அதை நோக்கி ஒரு அம்பைச் செலுத்தினான். அந்த அம்பின் நுனியில் உலக்கையின் ஒரு துண்டு செருகப்பட்டிருந்தது.
அம்பை எய்துவிட்டு அடிபட்ட மானைத் தேடி வந்தவன் நான்கு கரங்களுடன் அழகே உருவான ஒரு புருஷன் அமர்ந்திருப்பதைக் கண்டு பயந்துவிட்டான்.
தவறு செய்துவிட்டேன் என்று கதறிக்கொண்டு ஓடிவந்து அடிபணிந்தான்.
ஐயா! தாங்கள் பகவான் கண்ணன் அல்லவா! பெருந்தவறு செய்துவிட்டேன். அறியாமல் செய்த என் குற்றத்தை மன்னிக்கவேண்டும். உங்களை நினைத்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்து ஞானம் பிறக்கும். அப்படிப்பட்ட உங்கள் மீது அம்பெய்துவிட்டேனே.
கண்ணன் அவனைத் தேற்றினான்.
ஜரனே! பயப்படாதே. இது என் சங்கல்பமே. நான் உனக்கு புண்ணிய லோகமான ஸ்வர்கத்தைத் தருகிறேன்.
என்று கூறினான்.
ஜரன் அழுதுகொண்டே கண்ணனை மும்முறை வலம் வந்து வணங்கினான். அப்போது ஸ்வர்கலோகத்திலிருந்து அவனுக்கான விமானம் வந்தது. அதிலேறி விண்ணூலகம் சென்றான்.
கண்ணனின் தேரோட்டியான தாருகன் கண்ணனைக் காணாமல் தேடிக்கொண்டு வந்தான். துளசியின் நறுமணத்தை வைத்து கண்ணன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
பேரொளியுடன் திகழும் கண்ணனைப் பார்த்ததும் கிளம்பப்போகிறான் என்று புரிந்துகொண்டு பெருங்குரல் எடுத்து அழத் துவங்கினான்.
ப்ரபோ! தங்களைக் காணாமல் எப்படி வாழ்வோம். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று அவன் கதறும்போதே கண்ணனின் திவ்யமான தேர் கிளம்பி ஆகாயத்தை நோக்கிச் சென்றது. பின்னர் கதை, சங்கு, சக்ரம் ஆகியவையும் மேலே சென்றன.
கண்ணன் தாருகனைப் பார்த்து நீங்கள் இனி துவாரகையில் இருக்கவேண்டாம். நான் சென்றதும் துவாரகை கடலில் மூழ்கிவிடும். அங்கிருக்கும் பெண்களும், முதியோரும் உடனே கிளம்பி இந்திரப்ரஸ்தம் செல்லட்டும். என் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு அர்ஜுனனிடம் செல்லுங்கள். தாங்கள் பாகவத தர்மத்தை அனுசரித்து ஞானம் பெற்று என்னை வந்தடையுங்கள். இவை அனைத்தும் மாயையின் லீலை என்பதை உணர்வீர்களாக என்றான். கண்ணன் அவசரப்படுத்தவும், பகவானை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு தாருகன் கிளம்பினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..