Saturday, June 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 27 காலம்


தன் இரு சகோதரர்களின் புதல்வர்களுக்குள் யுத்தம் மூண்டபடியால், விதுரர், யுத்தத்தில் பங்கேற்க மனமின்றி தீர்த்த யாத்திரை சென்றார்.
யுத்தம் முடிந்த நிலையில் நாடு திரும்பிக் கொண்டிருந்த விதுரர், வழியில் கங்கைக் கரையில், மைத்ரேய மகரிஷியைச் சந்தித்தார். கண்ணனிடத்துப் பேரன்பு கொண்டிருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், சந்தித்ததில்லை. மைத்ரேயரும் விதுரரைப் பற்றி அறிந்திருந்தாரே தவிர கண்டதில்லை.
ஆனால், உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அன்பு ஒன்றே அன்றோ! எனவே, தூரத்தே கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டனர். அன்புணர்வு மிகுதியான உள்ளங்களுக்கு நாவின் துணை தேவையா என்ன
ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டனர். பின்னர், மெதுவாக மைத்ரேயர் சுதாரித்துக்கொண்டு, நிறைய விஷயங்களைச் சொன்னார்.
விதுரரும் அவரிடம் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்டார். நேரம் போவதே தெரியாமல் இருவரும் அன்பினால் கட்டுண்டு அளவளாவினர்.
கண்ணனின் அடியார்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவனைப் பற்றிப் பேச நேரமும் போதவில்லை
பின்னர், விதுரர் மெதுவாக விடை பெற்றுக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார்.
தர்மபுத்ரர், தம்பிகள், யுயுத்ஸு, த்ருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி, சஞ்சயன், த்ரௌபதி, சுபத்ரை, உத்தரை, க்ருபி, மற்றும் மற்ற உறவுக்காரர்கள் அனைவரும் வந்து உயிரைக் கை வரவேற்பதுபோல் விதுரரை வரவேற்றனர்.
மிக்க மகிழ்ச்சியுடன் தர்மபுத்ரர் விதுரருக்கு பூஜை செய்தார்.
களைப்பாறிய பின்னர், அனைவரும் சூழ, விதுரரிடம் தர்புத்ரர் கேட்டார்.
உங்கள் நிழலில் வளர்ந்த எங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா?
விஷம், நெருப்பு முதலியவற்றிலிருந்து நீங்களே எம்மைக் காத்தீர்
யாத்திரையாக எங்கெல்லாம் சென்றீர்கள்?
என்னென்ன தீர்த்தம், க்ஷேத்ரங்களை தரிசனம் செய்தீர்கள்?
வழியில் துவாரகை பக்கம் சென்றீர்களா? கண்ணன் எப்படி இருக்கிறான்? வேறு யாராவது பந்துக்களைப் பார்த்தீர்களா?
விதுரர், ஒரே ஒரு செய்தியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்.
துக்ககரமான அந்த செய்தியைச் சொல்லி, அனைவர் மனத்தையும் புண்படுத்த அவர் விரும்பவில்லை.
சிலகாலம் அங்கு தங்கியிருந்தார் விதுரர். மாண்டவ்ய மஹரிஷியின் சாபத்தால் நூறு வருஷங்களுக்கு பூமியில் விதுரராகப் பிறந்திருந்தார். அப்போது யமனின் வேலையை அர்யமா என்பவர் செய்துவந்தார்.
காலத்தின் வேகத்தை அறிந்த விதுரர், ஒருநாள் த்ருதராஷ்ட்ரனைத் தனிமையில் சந்தித்தார்
அண்ணா, நம் எல்லோருக்குமே மரணகாலம் வந்துவிட்டது. சீக்கிரம் கிளம்புங்கள்
உங்கள் தந்தை, சகோதரர், நண்பன், புத்திரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.
உங்களுக்கும் முதுமை வந்துவிட்டது. மனிதனுக்கு உயிரோடிருப்பதில் ஆசை அதிகம். பீமனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தீர். இப்போது வேளை தவறாமல் வந்து நாய்க்குக் கொடுப்பதுபோல் உணவு வைத்துவிட்டுப்போகிறான். கொழுக்கட்டையை அவன் கொடுக்கும்போது அதே கொழுக்கட்டையில் நீங்கள் அவனுக்கு விஷம் கொடுத்தது நினைவு வரவில்லையா? குலவதுவான த்ரௌபதியை சபையில் அவமானப்படுத்தியபோது வாளாவிருந்துவிட்டு, இன்று அவள் தர்மபுத்ரரோடு வந்து தினமும் வணங்குவதையும் ஏற்றுக்கொள்கிறீரே. அந்த யுதிஷ்டிரனை நீங்கள் தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு நாடு கடத்தினீர்கள்.
இப்படியாவது நீங்கள் உயிர் தரிக்கத்தான் வேண்டுமா? நீங்கள் விரும்பாவிட்டாலும் மரணம் வந்தே தீரும். அதற்கு முன்னால் விரக்தியடைந்து, தானாகவே அனைத்தையும் துறந்து கிளம்புபவனை தீரன் என்று உலகம் புகழ்கிறது. ஸ்ரீ வாசுதேவனை மனத்தில் தியானித்து, இவ்வுலக வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தியுடன் வடக்கு திசை நோக்கிக் கிளம்புங்கள். இதன் பின் வரப்போகும் காலம் கலியுகமாகும்
என்றார்.
இவ்வாறு கேட்டதும், குருடனான த்ருதராஷ்ட்ரன், மன உறுதியுடன் பந்தங்களை உதறி, விதுரர் சொன்னபடி கிளம்பினார். பதிவ்ரதையான காந்தாரியும் அவரை பின் தொடர்ந்தாள்.
மாலை அனுஷ்டாங்களை முடித்துவிட்டு, பெரியோர்களை வணங்குவதற்காக த்ரௌபதியோடு வந்த யுதிஷ்டிரன் பெரிய தந்தை, பெரியம்மா, சிற்றப்பாவான விதுரர் ஒருவரும் அரண்மனையில் இல்லாதது கண்டு திகைத்தார்
பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் அழுது அரற்றத்துவங்கினார்.
சஞ்சயனைக் கேட்டார்.
பெரியப்பா எங்கே? தந்தையில்லாத காலத்தில் எங்களை அரவணைத்தவர் அவர். பெரியம்மா எங்கே
கண்கள் தெரியாதே. என்னிடம் ஏதாவது குறையா? சொல்லாமல் எங்கு போனார்கள்? கங்கையில் விழுந்துவிட்டார்களா?
என்றெல்லாம் கேட்க, சஞ்சயனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
ஒருவர் கலக்கமுறும் நேரத்திலெல்லாம் அரவணைப்பவர் குரு ஒருவரே. நாரதர் அங்கு வந்து சேர்ந்தார்.
மஹரிஷியைக் கண்டதும் யுதிஷ்டிரர் அவரை வரவேற்று பாதபூஜைகள் செய்து ஆசனம் அளித்தார்.
பின்னர், அவரிடம் தன் தவிப்பைச் சொன்னார் யுதிஷ்டிரர்.
கரைகாணாத படகோட்டிபோல் தவிக்கும் தர்மபுத்ரரைப் பார்த்து நாரதர் சொல்லலானார்.
தர்மபுத்ரரே, நீ வருத்தமடையாதே. உலகமே ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது. எந்த இறைவன் நம்மை ஒன்று சேர்த்து வைக்கிறானோ, அவனே பிரித்தும் வைக்கிறான்.
இந்த தேஹம் அழிவுடையது. ஆனால், ஆத்மா அழிவில்லாதது என்பதைத் தெரிந்து கொண்டால் நீ வருந்தமாட்டாய். அதனால், உன் பெரியோர்களைக் குறித்து கலக்கம் அடையாதே. காலத்திலிருந்து யார் யாரைக் காப்பாற்றமுடியும்?
இப்படியாக பல உபதேசங்கள் செய்தார்.
பின்னர்,
இவ்வுலகில் அசுரர்களை அழிப்பதற்காக ஸ்ரீ வாசுதேவனே கண்ணனாகப் பிறந்தார். அவரது வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவர் இவ்வுலகில் வசிக்கும் காலம் வரை நீயும் வசிப்பாயாக.
த்ருதராஷ்ட்ரர் விதுரனோடும், காந்தாரியோடும், இமயத்திற்குத் தெற்கே உள்ள மஹரிஷிகளின் ஆசிரமத்தில் இருக்கிறார். அவர் பரம வைராக்யத்தை அடைந்து இன்றிலிருந்து ஐந்தாம் நாள் யோகத்தினாலேயே சரீரத்தை விடப்போகிறார். அவருக்கு நீ இடையூறாகிவிடாதே. காந்தாரியும் அவரது யோகாக்னியில் ப்ரவேசிப்பாள். அதன் பின் விதுரர் தீர்த்தயாத்திரை செல்வார்.
என்று சொல்லி, இன்னும் பலவாறு ஆறுதல்கள் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தும்புரு மஹரிஷியோடு தேவலோகம் சென்றார்.
நாரதரின் தரிசனத்தால் தர்மபுத்ரரின் மனக்கலக்கம் நீங்கியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 29, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 26 கண்ணன் காத்த குழந்தை

விஷ்ணுராதனுக்கு புண்ணியாக வசனமும், ஜாதகர்மாவும் தௌம்யர் போன்ற மஹரிஷிகளைக் கொண்டு செய்விக்கப் பட்டது.
தர்மபுத்ரர் ஏராளமான தானங்களைச் செய்தார். அப்போது அவரை வாழ்த்திய அந்தணர்கள்,
விஷ்ணுராதன், ஸார்வபௌமனாகவும், மிகுந்த புகழுடையவனாகவும், மஹா பாகவதனாகவும் விளங்குவான்.
இக்ஷ்வாகு போல் மக்களைக் காப்பவன்.
ராமனைப்போல் மக்களிடத்தில் பிரியமுள்ளவன்.
சிபியைப்போல் கொடையாளி,
பரதனைப்போல் தன்னைச் சேர்ந்தவர்களுடைய புகழை அதிகரிக்கச்செய்வான்.
கார்த்தவீர்யன், அர்ஜுனன் இவர்களைப்போல் சிறந்த வில்லாளி,
அக்னிபோல் நெருங்க முடியாதவன்.
சிம்மம்போல் பராக்ரமம் உள்ளவன்,
பொறுமையுடையவன்.
ப்ரும்மாவைப்போல் பாரபட்சமில்லாதவன்.
சிவனைப்போல் அனுக்ரஹம் செய்பவன்.
மஹா விஷ்ணு வை ப் போல் அனைவர்க்கும் ஆச்ரயமாய் விளங்குவான்.
ஸாக்ஷாத் க்ருஷ்ணனைப்போல் அனைத்து நற்குணங்களும் கொண்டவன்.
ரந்திதேவன்போல் உதாரகுணமுள்ளவன்.
தைரியத்தில் மஹாபலிபோலும், ப்ரஹ்லாதன்போல் பகவானிடம் பற்றுள்ளவனாகவும் இருப்பான்.
நிறைய ராஜரிஷிகளை உண்டுபண்ணுவான்.
கெட்ட வழியில் நடப்பவர்களை தண்டிப்பான்.
கலியை அடக்குவான்.
ஒரு ப்ராம்மண குமாரனின் சாபத்தால் தன் மரணத்தை அறிந்துகொண்டு, விரக்தனாகி ஹரிசரணத்தை அடைவான் .
வியாசரின் பிள்ளையான சுகரிடம் கதைகேட்டு, ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்து, கங்கைக்கரையில் இவனுக்கு மோக்ஷம் கிட்டும்.
என்றனர்.
ப்ராம்மண சாபம் கிட்டும் என்றதும் சற்று கலங்கிய தர்மபுத்ரர், ஸத்சங்கம் கிட்டும், மோக்ஷத்தை அடைவான் என்றதும் ஆறுதல் அடைந்தார்.
அன்னை, 5 தாத்தாக்கள், ஏராளமான பாட்டிகள், கொள்ளுப்பாட்டியான குந்தி, அத்தனைபேரின் அரவணைப்பிலும் வெகுசீக்கிரம் வளர்ந்தான் குழந்தை.
ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்மபுத்ரர் மூன்று அச்வமேத யாகங்கள் செய்தார்.
பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக் கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த கண்ணன், தன்னால் காக்கப்பட்ட குழந்தையோடு ஆசையாய் விளையாடினான். பின்னர், மீண்டும் துவாரகை திரும்பும்போது, அர்ஜுனனை உடன் அழைத்துக்கொண்டு திரும்பினான்.
அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும் அஸ்தினாபுரத்தை எட்டவில்லை.
தர்மபுத்ரர் கவலை கொள்ளத்துவங்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 25 மழை கண்ட பாலை


அரசவைக்குத் திரும்பிய தர்மபுத்ரர் காந்தாரியையும் த்ருதராஷ்ட்ரனையும் ஒருவாறு தேற்றினார்.
பீஷ்மராலும் கண்ணனாலும் சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களையும் கேட்டு, ஆட்சிப்பொறுப்பை ஏற்று தர்மத்தோடு அரசாட்சி செய்யலானார்.
அவரது ஆட்சியில் நன்றாக மழை பொழிந்தது. பூமி விரும்பியவற்றையெல்லாம் கொடுத்தது. பசுக்கள் ஏராளமான பாலைப் பொழிந்தன. ஒவ்வொரு பருவகாலத்திலும், அவற்றிற்கேற்ற விளைச்சலும், ஔஷதிகளும் நன்கு பலன் கொடுத்தன.
தர்மபுத்ரரின் ஆட்சியில் ஆதி தைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிகமான மனக்லேசங்கள், வியாதிகள், பருவகாலத் துயரங்கள், இயற்கையினால் ஏற்படக்கூடிய இடர்கள் ஆகியவை ஒருபொழுதும் ஏற்படவில்லை. அனைவரும் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் .
சில மாதங்கள் கழித்து, கண்ணன் துவாரகைக்குக் கிளம்பினான்.
எல்லோரும் அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்தனர்.
அஸ்தினாபுரத்து மக்கள் நாடெங்கிலும் சாலையின் இருமருங்கிலும் நின்று பிரிவுத்துயரை அடக்கிக்கொண்டு வழியனுப்பினர். பெண்கள் உப்பரிகையில் நின்று கொண்டு புஷ்பங்களைத் தூவினர்.
யுதிஷ்டிரர் கண்ணனின் மேலுள்ள பிரியத்தால், கண்ணன் மறுத்தபோதிலும் அவனது பாதுகாப்புக்கென்று ஒரு சேனையை உடன் அனுப்பினார்.
காற்றாய்ப் பறந்த ரதம் துவாரகை நகர எல்லையை அடைந்தது. நகரின் வாயிலை அடைந்ததும், யுதிஷ்டிரர் அனுப்பிய சேனையைத் திருப்பி அனுப்பிவிட்டு,
கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான்.
அவ்வளவுதான்.
கண்ணனின் சங்க நாதத்தை அறியாதவர்களா துவாரகை மக்கள்?
பல காலமாக கண்ணனைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.
சபரி தினமும் ராமனுக்காக எதிர்பார்த்து, எத்தனையோ வருடங்களாக தினமும் கோலமிட்டு, புஷ்பங்களும் கனிகளும் பறித்துவைத்துக்கொண்டு அதுவரை தான் பார்த்தேயிராத ராமனுக்காகக் காத்திருந்தாள்.
துவாரகை மக்களோ கண்ணனின் அன்பில் திளைத்தவர்களாயிற்றே.
எதிர்பார்த்து பார்த்து, எப்போது கண்ணன் வந்தாலும் வரவேற்பதற்காக ஆரத்தி, புஷ்பங்கள், மங்கள திரவியங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருந்தனர்.
சங்கநாதம் கேட்டதும், அனைவரும் வீதிக்குப் பாய்ந்தோடி வந்தனர்.
துதிபாடிகளும், நர்த்தகிகளும், கண்ணைன் நண்பர்களும், மந்திரிகளும் விரைந்து வந்து எதிர்கொண்டழைத்தனர்.
கண்ணன் மெதுவாக ரதத்தைச் செலுத்தச் சொல்லி, மக்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்ணுக்குக் கண் நோக்கி, கையசைத்துக்கொண்டு நகரத்தினுள் ப்ரவேசித்தான்.
பெண்கள் உப்பரிகையிலிருந்து புஷ்ப வர்ஷம் செய்தனர். வயதான பெண்கள் வந்து ஆரத்தி எடுத்தனர்.
மங்கலத் தோரணங்களும், தீபங்களும் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் ஒளிவீசின.
மெதுவாக அரண்மனையை அடைந்தான் கண்ணன். பலராமனும், தந்தையும் அணைத்து வரவேற்றனர். வசுதேவருக்கு தேவகியையும் சேர்த்து ஏழு மனைவிகள். அத்தனை அன்னைகளையும் வணங்கினான் கண்ணன். அவர்கள் ஒவ்வொருவரும், கண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருக்கினர்.
பின்னர் மனைவிகள் இருக்கும் பவனத்தை அடைந்தான் கண்ணன்.
கண்ணன் அஸ்தினாபுரம் சென்றதிலிருந்து அவனது மனைவியர் பலவிதமான விரதங்களை மேற்கொண்டிருந்தனர்.
ருக்மிணி உள்பட அனைவரும் இன்று தான் கண்ணனை முதன்முதலில் பார்ப்பவர் போல் பரவசமடைந்து விரதங்களை விட்டு எழுந்தோடி வந்தனர்.
ஆத்மாராமனான கண்ணன் எவ்வித அழகிலும் மயங்குவதில்லை. மன்மதனும் அவன் மனத்தில் எந்த விகாரத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோற்றுப்போனான். ஆனால், அவரவர் மனோபாவத்திற்கேற்ப, கண்ணன் தன்னைத்தான் விரும்புகிறான், தன் அழகில் மயங்கிக் கிடக்கிறான் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டார்கள். அவர்களது மனோபாவத்திற்கேற்ப கண்ணன் மனைவிகளை சந்தோஷப்படுத்தினான்.
ஶௌனக மஹரிஷி கேட்டார்.

உத்தரையின் கர்பத்திலிருந்த குழந்தை யார்? அவருக்கு என்னவாயிற்று?
ஸூதர் பரீக்ஷித்தின் கதையைக் கூடலானார்.
கர்பத்திலிருந்த குழந்தை கட்டைவிரல் அளவிற்கு ஒரு உருவம் தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டது. மிக அழகாக இருந்த அந்த உருவம் கையிலிருந்த கதையைச் சுழற்றிக்கொண்டே குழந்தையைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தது.
குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ்வுருவம் மறைந்துவிட்டது.
சில நாள்களில் பூமியில் பிறந்த அக்குழந்தைக்கு, யுதிஷ்டிரர் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவன் என்று பொருள்படும்படி யாக, விஷ்ணுராதன் என்று பெயரிட்டார்.
பிறந்த குழந்தையோ, தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் கர்பத்தில் தான் பார்த்தவர் இவரா என்று ஆராய்ந்து ஆராய்ந்து உற்று உற்றுப் பார்த்து அழுதது. அதனாலேயே பரீக்ஷித் என்று பெயர் பெற்றது.
இப்பெயருக்கு இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவற்றை அந்தந்த தருணங்களில் காண்போம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, June 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -24 பீஷ்ம ஸ்துதி


ஸூரியன் வடகிழக்கு திசையில் திரும்ப, உத்தராயண புண்ய காலம் துவங்குகிறது.
பீஷ்மர் என்ற யோகீஷ்வரர், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, விரும்பி ப்ரும்மச்சர்யத்தை ஏற்றவர். கங்கா மாதாவின் புதல்வர். அத்தனை விதமான தர்மங்களையும் அறிந்தவர். இப்போது யோக பலத்தால் சரீரத்தை விடப் போகிறார். சபரியின் மோக்ஷத்திற்கு ராமன் சாட்சியாக விளங்கியதைப் போல், இப்போதும், பகவான் சாட்சியாகவே விளங்குகிறான்.
அவர் கண்ணனைக் காண விரும்பினார் என்றாலும், கிளம்புவதற்கு முன்பாக அர்ஜுனனிடம், பீஷ்மரை தரிசனம் செய்துவிட்டு வரலாம் வா என்று சொல்லி அழைத்துக்கொண்டுவருகிறான்.
பகவானே காண விரும்பித் தேடி வரும் அளவுக்கு பீஷ்மர் பக்தியிலும் சிறந்து விளங்கினார்.
இப்போது, பீஷ்மர் கண்ணனைப் பார்த்து ப்ரார்த்தனை செய்கிறார்.
எந்தவிருப்பமும் இல்லாத என் மனத்தை, உயிர் துறக்கும் இந்நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணனான உன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன்.
நீ ஆத்மாராமனாக இருந்தபோதிலும் சிலசமயங்களில் லீலைக்காக உன் சக்தியான ப்ரக்ருதியை ஏற்று உலகைப் படைக்கிறாய்.
உன் திருமேனியழகு மூவுலகையும் ஈர்ப்பது. நீலமேக ஷ்யாமளன், சூரிய ஒளிபோல் மின்னும் பீதாம்பரம் தரித்தவன். சுருண்ட கேசம் முன்னெற்றியில் விழுந்து உன் தாமரையொத்த முகத்தில் விழுகிறது. அர்ஜுனனின் தோழன், உன்னிடம் எனக்கு பயன் கருதாத அன்பு உண்டாகட்டும்.
போரில், தூசுகளால் உடலும், முடியும் அழுக்கடைந்திருக்கும். முன்னெற்றியில் கேசம் அசைந்தாடும். வியர்வைத்துளிகள் முகத்தை அலங்கரிக்கும். பாவியான என் பாணங்கள் பட்டு கவசங்கள் பிளந்து உடலில் காயங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்தபோதும் நீ பேரழகனாகவே திகழ்ந்தாய். அந்தக்கோலத்தில் இருக்கும் உன்னிடம் எனக்கு பக்தி ஏற்படட்டும்.
தோழனான அர்ஜுனனின் சொல் கேட்டு, பாண்டவ கௌரவ சேனைகளின் நடுவே தேரை நிறுத்தி, சத்ரு சேனையின் உயிரைப் பார்வையாலேயே அபகரித்த உன்னிடம் எனக்கு பற்று ஏற்படட்டும்.
உறவினர்களைக் கொல்வதா என்று குற்ற உணர்ச்சியால் மயங்கிய அர்ஜுனனுக்கு பகவத் கீதை என்ற ஞானோபதேசத்தை வழங்கி 'நான் செய்கிறேன்' என்ற அகங்காரத்தை அழித்து அவனை ஊக்குவித்த பரமனான உன் திருவடிகளில் என் மனம் நிலைத்திருக்கட்டும்.
போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் சபதம் செய்திருந்தான் கண்ணன். அவனது சபதத்தை உடைத்து ஆயுதம் எடுக்கச் செய்வதாக பீஷ்மர் ஒரு சபதம் செய்தார். அதற்காக அம்புகளை மழையாக அர்ஜுனன்மீது பொழிந்தார். அர்ஜுனனைக் காக்க அத்தனை அம்புகளையும் தானே முன் வந்து வாங்கிக் கொண்டான் பகவான். ஒரு கட்டத்தில் பீஷ்மரைக் கட்டுப்படுத்த சக்ராயுதத்தை எடுக்க அவகாசம் இன்றி, பக்கத்தில் உடைந்து கிடந்த தேரின் சக்கரத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். அவ்வாறு கண்ணன் பீஷ்மரை நோக்கி சக்கரத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது அவனது உத்தரீயம் (மேலாடை) நழுவி தேர்த்தட்டில் விழுந்தது.
கவசமும் உடைபட்ட நிலையில், உத்தரீயமும் நழுவி, தன் மார்பழகை முழுமையாக பீஷ்மருக்குக் காட்டிக்கொண்டு ஓடிவந்தான்.
மேலும், அர்ஜுனன் மீதும் தேரின் மீதும் பல திவ்யாஸ்திரங்கள் ஏவப்பட்டிருந்தன. அர்ஜுனன்மீது அவை தாக்காமல் கண்ணன் காத்தான். ஆனால் தேரில் அவற்றின் வீரியம் இருந்தது. பகவான் தேரில் இருந்ததால் அவை தேரை அழிக்காமல் இருந்தன. கண்ணன் தேரை விட்டிறங்கினால், அர்ஜுனனுக்கு ஏற்கனவே ஏவப்பட்ட திவ்யாஸ்திரங்களின் வீரியத்தால் ஆபத்து நிகழலாம் என்றெண்ணி ரக்ஷையாக உத்தரீயத்தைத் தேர்த்தட்டில் விட்டான் போலும்.
மேலும் அது தன் இருக்கை. அர்ஜுனனுக்கு ஸாரத்தியம் செய்வது தன் உரிமை என்று நிலைநாட்ட, துண்டு போடுவது போல் போட்டுவிட்டுப் போனானோ..
அம்பு மழையிலிருந்து அர்ஜுனனைக் காக்க பீஷ்மரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே இருந்ததால், மேலாடை நழுவுவதைக்கூட கவனியாமல் ஓடினானோ
ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் ப்ரதிக்ஞையைக்கூட விட்டுவிட்டு, பீஷ்மரின் ப்ரதிக்ஞையைக் காக்க ஆயுதம் எடுத்தானோ..
தன் சபதத்தை விட பக்தனின் சபதம் முக்கியம் என்று நினைத்தானோ...
ஏழாம் நாள் போரில் இவ்வாறு ஓடிவந்த கண்ணனின் அழகில் என் மனம் ஈடுபடட்டும் என்கிறார் பீஷ்மர்.
அர்ஜுனனுடைய ரதத்தையே தன் குடும்பமாக எண்ணி சாட்டையும் கடிவாளமும் ஏந்தி தேரோட்டியாக அமர்ந்திருந்த கோலத்தைக் காண்பதே பெரும் பேறு. போரில் இறந்த அனைவருக்கும் சாரூப்ய முக்தி அளித்தானே. அந்த கண்ணனிடம் எனக்கு பற்று உண்டாகட்டும்.
யோகீஷ்வரரான பீஷ்மர், தன் அந்திம காலத்தில் இடைப் பெண்களான கோபிகளை நினைக்கிறார். எனில், கோபிகளின் பக்தி எத்தகையது?
அழகிய நடை, லீலைகள், புன்சிரிப்பு, கனிந்த பார்வை இவற்றால் கண்ணனிடம் ஈர்க்கப்பட்ட கோபியர், ராசலீலையில் மயங்கி அவனது லீலைகளை அனுகரணம் செய்து, தன்வயமானார்களே.. அவர்களை வணங்குகிறேன்.
அப்படிப்பட்ட பக்தி எனக்கும் ஏற்படட்டும். மறுபிறவி என்று ஒன்று எனக்கு ஏற்படுமாயின் ப்ருந்தாவனத்தில் ஒரு கோபியாக எனக்கு பிறவி அமையட்டும்.
ராஜஸூய யாகத்தில் முதல் மரியாதையை ஏற்பதற்காக வந்த பர்ந்தாமன் என் கண்முன் நிற்கிறாரே.
காற்று மூங்கில்களை உராயச்செய்து தீயை உண்டாக்கி, அம்மூங்கில் காட்டையே அழிக்கும். அதுபோல் சூதாட்டம் என்ற தீயால், அரக்கர்களை அழித்து பூபாரம் குறைத்த க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளில் என் மனத்தை இருத்தி இம்மானுட உடலை விட்டொழிக்கிறேன்.
ஒரே சூரியன் பல பாத்திரங்களில் உள்ள நீரில் ப்ரதிபலித்து பல சூரியன்களாகக் காட்சி தருகிறான். அதுபோல் கண்ணனும் ஒவ்வொரு ஜீவனின் ஹ்ருதயத்திலும் ப்ரதிபலித்து வெவ்வேறாகக் காட்சியளிறான். இவனை நான் காணப்பெற்றது பெரும் பாக்யம்
என்கிறார்.
இது மற்ற ஸ்துதிகளைப்போலன்றி தன் அனுபவத்தை வைத்து ஸ்துதி செய்கிறார். படிப்பைவிட அனுபூதி சிறந்ததல்லவா?
எனவே, எவ்வளவோ துதிகள் பகவானைக் குறித்து இருந்தபோதிலும், பீஷ்மர் செய்த ஸ்துதி மிகவும் சிறந்ததாகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.
பீஷ்மர் தன் மனம், உடல், வாக்கு அனைத்தையும் அடக்கி ஆன்மாவை க்ருஷ்ணனிடம் ஒடுங்கச் செய்து ஓய்வடைந்தார்.
அவருக்கு விதிப்படி ஈமக்கிரியைகளைச் செய்துவிட்டு தர்மர் சோகத்தில் மூழ்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Tuesday, June 26, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 23 பக்தனின் ஊடல்


பகவானான கண்ணனே உடனிருந்து யுத்தத்தை நடத்தி அதில் வெற்றிக்கனியைப் பெற்றுத்தந்தபோதும், தர்மபுத்திரனின் மனக்கலக்கம் நீங்கவில்லை.
வியாஸரும் மற்ற மஹரிஷிகளும், கண்ணனும் தேற்றியும், தன் சுற்றத்தார் அனைவரும் போரில் இறந்துபடத் தானே காரணம் என்று எண்ணி சோகத்தில் ஆழ்ந்தார்.
அழியக்கூடிய இவ்வுடலைக் காக்க, எவ்வளவு சேனைகள் கொல்லப்பட்டன.குழந்தைகள், அந்தணர்கள், உறவினர்கள் நண்பர்கள், சகோதரர்கள், ஆசிரியர்கள் அனைவர்க்கும் துரோகம் இழைத்துவிட்டேன். குடிகளைக் காக்க நேர்ந்த தர்மப்போர் என்றாலும் என் மனம் கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைக்கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட கறையை எப்படிப் போக்கிக்கொள்வது?
என்று புலம்பினார்.
பின்னர் அந்திம காலத்தில் இருக்கும் பீஷ்மரிடம் சென்று தர்மங்களைக் கேட்டு அறியச் சென்றார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனோடு கண்ணனும் பீஷ்மரைப் பார்க்கச் சென்றான்.
பீஷ்மர் யுத்தத்தில் கண்ணன் மேலுள்ள அபரிமிதமான பக்தியால், கண்ணன் மீது அம்புமழை பொழிந்தார்.
தன்மீது சாக்கிய நாயனார் எறிந்த கற்களைப் பூக்களால் ஆன பூஜைபோன்று சிவபெருமான் ஏற்றார். அதைப்போலவே, பீஷ்மர் விட்ட அத்தனை அம்புகளையும் தானே விரும்பி ஏற்றான் கண்ணன். அந்த அம்புகளால் ஏற்பட்ட வடுக்களை பூஷ்ணமாக ஏற்று இன்றும் திருவல்லிக்கேணியில் பார்த்தஸாரதியாய் காட்சியளிக்கிறான்.
சாதாரண மாந்தர்க்கே அந்திம நேரத்தில் பகவானை நினைத்தால் மோக்ஷம் கிட்டும் என்றால், பீஷ்மருக்கு?
அவருக்கு மோக்ஷத்தைக் கண்ணன் அருள வேண்டியதில்லை. அவரது தந்தை சந்தனுவால் விரும்பியபடி மரணம் என்ற வரத்தைப் பெற்றிருந்தார். ப்ரும்மச்சர்யத்தாலும், கடுமையான ஸாதனைகளாலும் யோகீஷ்வரராகவும் ஆகிவிட்டார். தன் உடலைத் தான் விரும்பிய நேரம் நீங்கலாம் என்ற வரம் பெற்றிருந்தும் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.
அதென்ன அம்புகளை வரிசையாக நட்டுப்போட்ட படுக்கையா என்ன?
யுத்தத்தின் பத்தாம் நாளன்று
அர்ஜுனன் விட்ட அம்புகள் அனைத்தும் பீஷ்மரின் உடலின் முன்புறம் குத்தி பின்புறமாய் வெளிவந்திருக்கின்றன. உடலில் உள்ள குருதி முழுதும் வடிந்துவிட்டது.
அதன் பின்னர் யுத்தம் எட்டுநாள்கள் நடந்தது.
அஸ்தினாபுரத்தின் அரியணை ஒரு தர்மவானிடத்து ஒப்படைக்கப்பட்டது என்ற சேதியும் அவருக்கு வந்தது.
உடல் முழுவதும் வலிகளோடு துடித்துக் கொண்டு, ப்ராணனை விடாமல்,
அதற்காகக் காத்திருந்தார் என்று சொல்பவர்கள் உண்டு.
இன்னும் சிலர் உத்தராயண புண்யகாலத்திற்காகக் காத்திருந்தார் என்று சொல்வார்கள்.
யுத்தம் மார்கழி மாதக் கடைசியில் முடிந்துவிட்டது. மகரசங்கராந்தி புண்யகாலமும், உத்தராயணமும் வந்து ஒரு வாரம் ஆயிற்று. இன்னும் வலிகளோடு உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். எதற்காக?
அந்திம காலத்தில் கண்ணனைக் காணவேண்டும் என்பதற்காக.
அதற்கென்ன? அஸ்தினாபுரத்தில்தானே இருக்கிறான்? யாரிடமாவது
சொல்லிவிட்டால் ஓடிவரமாட்டானா?
இல்லை. இது பக்தனுக்குள்ள பிடிவாதம். அதென்ன நான் சொல்லி அவர் தெரிந்து கொள்வது? அவருக்கு என்னைத் தெரியாதா? என் கஷ்டம் அறியாதவரா? என்னைப் பார்க்க அவருக்கு எப்போது விருப்பமோ அப்போது வரட்டும். அதுவரை காத்திருப்பேன். வராமல் இருந்துவிடுவாரா என்ன?
பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள ஊடல்.
அவரது எண்ணம் தெரிந்தே கண்ணனும் ஒரு வாரம் சோதித்துவிட்டு,
இப்போது தானே வந்து அவர் முன் நின்றான்.
கண்ணன் பீஷ்மரைக் காண விரும்பியே தன் பயணத்தைத் தள்ளிப் போட்டான்.

யுதிஷ்டிரன் பிதாமகரை, உயர்ந்த தர்மங்களை எடுத்துச் சொல்லும்படி கேட்டார்.
ஒருவன் தன் கடைசி காலத்தில் சில ரகசியமான சொத்துக்களை மகனிடம் கொடுப்பதுபோல், நீங்கள் எனக்கு இதுவரை சொல்லாத விசேஷ தர்மங்கள் இருந்தால் அவற்றைச் சொல்லுங்கள் என்றார்.
தன் முன் வந்து நின்ற பகவானைக் கண்ணால் பருகிக்கொண்டே யுதிஷ்டிரனின் கேள்விக்கு பதில் சொன்னார் பீஷ்மர்.
ப்ரும்மாதி தேவர்களுக்கும் கிட்டாத பகவான் உன் வீட்டில் வந்து சகஜமாகப் பழகுகிறான்.
பகவானையே எப்போதும் நம்பியிருந்தபோதிலும் பாண்டவர்களான உங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள். விதி எவ்வளவு வலிமையானது பார்த்தாயா? எல்லாமே காலத்தின் கோலம்.
எனவே நடப்பதெல்லாம் நாராயணனின் சங்கல்பம் என்று கொள்வாய். இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கும் ஸர்வ வல்லமை படைத்த பகவானே உன் வீட்டில் இதோ இந்த க்ருஷ்ணனாக நடிக்கிறான்.
என்று சொல்லி, பகவானை ஸஹஸ்ரநாமங்களால் துதித்தார்.
இதற்குள் ரிஷிகள் பலரும், அமரர்களும் அங்கு கூடினர். மஹாபாரதத்தில் விஸ்தாரமாகச் சொல்லிவிட்டதால், இங்கு சுருக்கமாகச் சொல்கிறார் வியாஸர். அதன் பின் பீஷ்மர் மானிடப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள், ப்ரும்மச்சாரிகள், இல்லறவாசிகளின் தர்மங்கள், தான தர்மங்கள், ராஜ தர்மங்கள், மோக்ஷ நெறி, கற்பு நெறி, பெண்களுக்குண்டான தர்மங்கள், ஏகாதசி போன்ற விரத தர்மங்கள், அறம், பொருள், இன்பம், வீடு அச்கிய நால்வகைப் புருஷார்த்தங்களை அடையும் முறை ஆகியவற்றை சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் கூறியுள்ளபடி சுருக்கமாகக் கூறினார்.
பின்னர் தன் கண் முன் நிற்கும் கண்ணனைக் கண்ணாரக் கண்டு தன் அந்திம ப்ரார்த்தனையை அவன் முன் ஸமர்ப்பித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 25, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -22 அத்தை செய்த துதி

ப்ரும்மாஸ்திரத்தால் வந்த ஆபத்தை விலக்கி கர்பத்தைக் காத்தது கண்ணன் ஏவிய ஸுதர்சனம் என்பதை குந்தி உடனே புரிந்துகொண்டாள்.
வம்சத்தின் மூத்தவள். பாண்டுவுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அன்றிலிருந்து காந்தாரியின் பொறாமையைச் சகித்துக்கிண்டு, தன் பிள்ளைகளைக் கொல்லத்துணிந்த கௌரவர்களைச் சகித்துக்கொண்டு, பொறுமையின் உருவமாய்த் திகழ்பவள்.பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்கள் இருந்தும் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டவள். சிறு வயது முதல்,
ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கண்ணன் எப்படி தங்கள் வாரிசுகளைக் காத்தான் என்பதை அருகிலிருந்து பார்த்தவள்.
உத்தரையின் வயிற்றிலிருக்கும் சிசுதான் இப்போது ஒரே வாரிசு.மற்ற அத்தனை குழந்தைகளும் இறந்துவிட்டன. அதைக் கண்ணன் காப்பாற்றிக் கொடுத்ததும், அவனது கருணையை நினைத்து குந்தியின் கண்களில் நீர் திரண்டது.
குந்தி வசுதேவரின் தங்கை ஆவாள். அதனால் அவள் கண்ணனுக்கு அத்தையாகிறாள்.
ரதத்திலேறி கண்ணன் துவாரகைக்குப் புறப்படும் சமயத்தில் இவ்வளவு அமர்க்களம். கண்ணன் ரதத்தைவிட்டு இறங்கவில்லை. குந்தி மெதுவாக ரத்தத்தின் அருகே சென்று கண்ணனைப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள்.
நீ ஸர்வேஸ்வரன், முதல் காரண புருஷன், பார்வையற்றவனுக்கு விஷயங்கள் தெரியாததைப்போல்,
மாயையினால் கண்கள் கட்டப்பட்டிருப்பவர்களின் கண்களுக்கு உமது ஸ்வரூபம் தெரிவதில்லை.
உம்மை நமஸ்கரிக்கிறேன் என்றாள்.
இப்படிப்பட்ட ஸ்துதிகளைக் கேட்கவா கண்ணன் அவதாரம் செய்தான்?
கலகலவென்று சிரித்தான். மாயையைத் துணைக்கு அழைத்தான்.
என்னாச்சு அத்தே உனக்கு?
ஏன் இப்படி சொல்ற?
நீ பெரியவ . நீ போய் எனக்கு நமஸ்காரம்னு சொல்ற?
அவனைப் பரம்பொருளே என்றழைத்து தூரத்தில் வைப்பதை அவன் விரும்புவதே இல்லை. சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே என்ற ஆண்டாளின் கூற்றுக்கு இப்பெயர்களெல்லாம் சிறுபெயர்களாயிற்று என்று பெரியவாச்சான்பிள்ளை அவர்கள் வியாக்யானம் செய்கிறார்.
குந்தி புரிந்துகொண்டாள்.
உடனே,
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச|
நந்தகோப குமாராய கோவிந்தாய் நமோ நம: ||
என்று அடுத்த வாக்கியம் சொன்னாள்.
கண்ணன் மகிழ்ந்துபோனான். கண்ணா, வசுதேவன் மகனே, நந்தகுமாரா, கோவிந்தா என்பவை அவன் விரும்பி ஏற்கும் விளிப்பெயர்கள்.
இந்த ஸ்லோகத்தை அறியாதவர்களே இல்லை எனலாம்.
கண்ணனின் தாய் தேவகி, தந்தை வசுதேவர், பின்னர் வளர்ப்புத்தந்தை நந்தன் ஒவ்வொருவராய் வரிசையில் நினைக்கிறாள். எனில் வளர்ப்புத்தாயான யசோதையை நினைக்கவில்லையா என்றால், அவளுக்குத் தனி ஏற்றம். பின்னால் ஒரு ஸ்லோகம் முழுவதும் யசோதையை ஸ்மரிக்கிறாள்.
என்ன விஷயம் அத்தே சொல்லு..
உன் அவயவங்கள் ஒவ்வொறுமே தாமரையின் வடிவழகை ஒத்தவை கண்ணா.
பதினான்கு வருடங்கள் சிறையில் வாடிய பின்னரே உன் தாயான தேவகியை விடுவித்தாய். ஆனால், உன்னைப் பெற்றவளை விடவும் அதிகமாக என்மீது வாஞ்சை வைத்து ஒவ்வொரு ஆபத்து வரும்போதும் உடனே ஓடி வந்து காத்தாய்.
பீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய்.
அரக்கு மாளிகையோடு கொளுத்தப்பட்டபோதும் காத்தாய்
ஹிடும்பன் முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும், வனவாஸத்தில் ஒவ்வொருநாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும், காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின் அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ.
நீ ஒடிவந்து தர்சனம் அளித்துக் காக்கும்படியான விபத்துக்களும் கஷ்டங்களும் எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே விலகுகிறது.
நீ தயிர்ச்சட்டிகளை உடைத்தபோது, யசோதை உன்னைக் கட்டுவதற்கு கயிற்றைக் கொண்டுவந்தாள். அப்போது முகத்தைத் தாழ்த்திக்கொண்டு, பயமே பயப்படும் ஸ்வரூபமாகிய நீ பயந்தவன் போல் நின்றாயே. அந்த உன் ஸ்வரூபம் என்னை மயக்குகிறது. அதுவே என் தியானத்தில் எப்போதும் இருக்கட்டும்.
பிறப்பே இல்லாத நீ தேவர்களுக்கும் எங்களுக்கும் க்ஷேமம் செய்வதற்காக ப்ரும்மாவின் வேண்டுகோளுக்கிரங்கி அவதரித்திருக்கிறாய்.
யார் உன் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ திரும்ப திரும்ப சொல்கிறார்களோ, அடிக்கடி நினைக்கிறார்களோ அவர்கள் உன் திருவடித் தாமரை யை வெகு சீக்கிரம் பார்க்கிறார்கள்.
ஹே கிருஷ்ணா! அர்ஜுனனின் தோழனே! வ்ருஷ்ணிகுலத்தலைவனே!
யோகீஷ்வரா! உனக்கு நமஸ்காரம்
என்று இன்னு ம் பலவாறு ஸ்துதி செய்து கண்ணனை வணங்கினாள்.
குந்தி ஸ்துதி எனப்படும் இந்த ஸ்துதி பஞ்ச ஸ்துதிகளுள் ஒன்றாகும்.
இதைக்கேட்டு கண்ணன் அன்போடு ஒரு புன்முறுவல் செய்துவிட்டு
போய்ட்டு வரேன் அத்தை என்றான்.
அப்போது தர்மபுத்திரர் அருகே வந்து,
கண்ணா, இப்போதான் ஒரு ஆபத்து விலகியிருக்கு. மனம் ரொம்ப சங்கடமாய் இருக்கு. நீயும் இப்பவே கிளம்பணுமா? நீ இன்னும் கொஞ்சநாள் எங்களோடு இருந்தா எங்களுக்கு ஆறுதலா இருக்கும் என்று சொன்னார்.
அங்கிருக்குந்த அனைவர் முகத்தையும் பார்த்தான் கண்ணன். சற்று நேரம் முன்பு ஏற்பட்ட ஆபத்தின் அதிர்ச்சி யிலிருந்து ஒருவரும் மீளவில்லை.
சரி, நான் இப்ப போகல.
என்று சொல்லி ரதத்திலிருந்து குதித்து இறங்கி அர்ஜுனனின் தோளின்மீது கையைப்போட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.
தாமரைக்கண்ணன் ஊருக்குக் கிளம்பவில்லை என்றதும் அனைவரின் முகங்களும் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, June 24, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 21 ப்ரும்மாஸ்திரத்தினால் வந்த நன்மை

வானத்தில் நெருப்பைக் கக்கிக்கொண்டு தூமகேதுவைப் போல் இரும்பாலான அம்பு ஒன்று உத்தரையைக் குறி வைத்து வந்துகொண்டுகொண்டிருந்தது. உத்தரை ஓடிவந்து கண்ணனின் கால்களில் விழுந்து சரணாகதி செய்ததும், அனைவரும் அதை நோக்கினர்.
அது பாண்டவ வம்சத்தைப் பூண்டோடு அழிக்க அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரம் என்று அறிந்துகொண்டான் கண்ணன்.
கர்பத்திலிருக்கும் சிசுவைக் கொல்ல அஸ்திரங்களிலேயே உயர்ந்ததான ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான் அந்தக் கொடியவன்.
ப்ரும்மாஸ்திரம் என்பது தற்போதைய அணுஆயுதத்திற்கும் அதிகமாக சேதங்களை விளைவிப்பது.
அதனால்தான் மஹாபாரத யுத்தத்திற்கு ஊரை விட்டுத்தள்ளி குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான் கண்ணன்.
யுத்தத்தின் பாதிப்பினாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் குருக்ஷேத்திரம் வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.
பாண்டவர்கள் அனைவரும் சட்டென்று தத்தம் ஆயுதங்களை எடுக்க, கண்ணன் ஸுதர்சனத்தை எடுத்தான்.
சட்டென்று ஸுதர்சனத்தினால் உத்தரையின் கர்பத்தை மறைத்தான். அதாவது, உத்தரையின் கர்பத்தினுள் ஸுதர்சனம் ப்ரவேசித்து அதைச் சுற்றிக் கவசமாயிற்று.
கர்பத்தை நோக்கிவந்த ப்ரும்மாஸ்திரத்தை தானே உள்வாங்கிக்கொண்டு, மீண்டும் கண்ணனிடம் வந்தது.
உபபாண்டவகளைக் கொன்றது அச்வத்தாமன் என்றறிந்து அர்ஜுனன் அவனைப் பிடிக்கப்போகும்போதும் அவன் தன்னைக் காத்துக்கொள்ள ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான்.
ப்ரும்மாஸ்திரத்திற்கு ப்ரதி அஸ்திரம் போடக்கூடாது என்பது விதி. என்ன செய்வது என்று திகைத்தான் அர்ஜுனன்.
அப்போது உடனிருந்த கண்ணன்,
அர்ஜுனா, இவனுக்கு ப்ரும்மாஸ்திரத்தைப் போடத்தான் தெரியும். திரும்ப வாங்கத்தெரியாது. ப்ரதி அஸ்திரம் போடக்கூடாது என்பது விதியாக இருந்தாலும், நீ இப்போது அதற்குப் ப்ரதியா இன்னொரு ப்ரும்மாஸ்திரம் போடு.
பின்னர் இரண்டையும் சேர்த்து திருப்பி வாங்கு.
என்று சொல்ல அர்ஜுனன் அவ்வாறே செய்தான்.
தர்மத்தின் பக்கம் நிற்கும் தன் பக்தனுக்காக பகவான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள்.
இதில் இன்னொரு அற்புதம் என்னவெனில்,
குருவான துரோணர், தன் மகனான அச்வத்தாமனுக்குக்கூட ப்ரும்மாஸ்திரத்தை திரும்ப வாங்கக் கற்பிக்கவில்லை. சீடனான அர்ஜுனனுக்கோ தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் பூர்ணமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
குருவான அவரது ஹ்ருதயம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
குருசிஷ்ய உறவின் மேன்மையை எப்படிக்கூறுவது?
வித்யை சொல்லித்தரும் குருவே இப்படி என்றால், ஞானாசிரியனாக விளங்கும் ஒரு ஞானி குருவாகக் கிடைத்தால் அவர் பகவானையே தூக்கி சிஷ்யனிடம் கொடுத்து விடுகிறார்.
எப்படியாவது ஒரு குருவின் க்ருபைக்கு பாத்திரமாகிவிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் அதற்காகத்தான்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,
அப்போது ப்ரும்மாஸ்திரத்திற்கு அர்ஜுனனை ப்ரதி அஸ்திரம் போடச்சொன்ன பகவான், உத்தரை அபயம் என்று அலறியதும் எதையும் யோசிக்காமல் தானே சுதர்சனத்தால் காத்தான்.
எதனால் அப்படி?
தன்னிடம் அபயம் என்று வந்தவளைக் காக்க இன்னொருவனின் உதவி பகவானுக்குத் தேவையில்லை.
தன் பக்தர்களான பாண்டவர்களைக் காத்த பெருமை தன் ஒருவனுக்கே என்ற பெருமையை பகவான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
யோகி, ஞானி என்றெல்லாம் கீதையில் சொல்பவன் பக்தனை மட்டும் மத்பக்த:, மத்பக்த: என் பக்தன் என் பக்தன் என்று மார்தட்டிக்கொள்கிறான்.
பக்தனின் வீட்டில் குதிரை குளிப்பாட்டுவது முதல் ஆசையாகச் செய்பவன், அவனது வம்ச சிசுவைப் பார்க்க ஆவல் கொண்டு கர்பத்தினுள் புகுந்தான். ஸுதர்சன சக்கரத்தில் குட்டியாக பகவானின் திருவுருவம் ஒன்று இருக்கும்.
பின்னாளில் தன் கதையைக் கேட்டே முக்தி அடையப்போகும் பரம பாகவதனான அந்தக் குழந்தையோடு தானும் சிறிது நேரம் கர்பவாசம் செய்ய விரும்பினான்.
முதன்முதலில் கர்பத்திலிருக்கும் சிசுவை ஆய்வு(scan) செய்தவன் பகவான். க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது அத்தனை கலைகளுக்கும் சேர்த்துத்தான்.
இன்னும் ஆயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.
குலத்தை அழிக்க வந்த ப்ரும்மாஸ்திரம் கர்பத்திலிருந்த சிசுவிற்கு பகவத் தரிசனத்தைப் பெற்றுத்தந்தது.
சுற்றி நின்றுகொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்பு வந்ததும், கண்ணன் சுதர்சனத்தை எடுத்ததும் மறைந்துபோனதையுமே அவர்கள் பார்த்தனர்.
ஆனால், அவர்களுள் ஒருவர் என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 23, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 20 தர்மசங்கடம்

மஹாபாரதத்தை அப்போதுதான் முடித்திருந்ததால் அடுத்த கிரந்தத்தை வியாஸர் யுத்தமுடிவிலிருந்தே துவங்கினார் போலும்.
தன் குழந்தைகளை உறங்கும்போது வெட்டிய அஸ்வத்தாமனை மன்னித்துவிடச் சொல்கிறாள் திரௌபதி. மேலும்
இவன் ப்ராம்மணன். இவனைக் கொன்றால் ப்ருமஹத்தி தோஷம் வரும். ஏற்கனவே நாம் துன்பப்பட்டது போதும். புதிதாய் ஏதும் தோஷங்கள் நமக்கு வர வேண்டாம். அதனால் விட்டுவிடுங்கள்
என்றாள். சாஸ்திரத்தின் மீதும் குருவின் மீதும் உள்ள பக்தியால் குருபுத்ரன் கொடியவனாயினும் வதம் செய்யக்கூடாது என்றாள். உடனே, பீமசேனன் கொதித்தெழுந்தான். உறங்குபவர்களையும், எதிர்க்க சக்தியில்லாதவர்களையும், சிறுவர்களையும் கொன்றவன் ப்ராம்மணனாயினும், அவனைக் கொல்லத்தான் வேண்டும். மேலும், எஜமானனுக்கு வேண்டியோ, தன்னுடைய லாபத்திற்கோ கூட இல்லாமல் வீணாகக் கொன்றிருக்கிறான். இவனைத் தண்டிப்பது இவனுக்கே நன்மை பயக்கக்கூடியதுதான். எனவே அஸ்வத்தாமனைக் கொல்லவேண்டும்.
கண்ணன் கட்டப்பட்டிருக்கும் அச்வத்தாமனிடம்
த்ரௌபதியை அழைத்துப்போக அவளோ, இவன் குருபுத்ரன் என்று வணங்கினாள்.
தர்மபுத்ரருக்கும் த்ரௌபதி சொல்வது சரியென்று பட்டது.
குழப்பமடைந்த அர்ஜுனன் க்ருஷ்ணனைப் பார்த்தான். கண்ணன் சிரித்தான்.
அர்ஜுனா, குருபுத்ரன். ப்ராம்மணன். அதனால் கொல்லக்கூடாது என்பது சாஸ்திரம். வீணாக மஹாபாவங்களைச் செய்தவனை அரசனானவன் கொல்லவேண்டும் என்பதும் என்னால் கொடுக்கப்பட்ட சாஸ்திரம்தான். இரண்டுமே தர்மமாகிறது. (இம்மாதிரி இரண்டு தர்மங்களுள் எதைச் செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதே தர்ம சங்கடமாகும்).
நீயோ இவனைக் கொல்வதாய் சபதமிட்டிருக்கிறாய். எனவே,
நீ த்ரௌபதிக்கும், பீமனுக்கும், எனக்கும், உனக்கும் பிரியமானது எதுவென்று யோசித்து அவ்வாறு செய் என்றான்.
அனைவர்க்கும் பிரியமானதைச் செய்வதா? இப்படி மாட்டிவிடுகிறாயே கண்ணா என்ற அர்ஜுனன் சற்று யோசித்தான்.
அச்வத்தாமனின் தலையில் ஒரு ரத்தினம் உண்டு. அது அவன் உடன்பிறந்தது. அதனால் மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். அர்ஜுனன் அந்த மணியை முடியோடு சேர்த்து அறுத்தான்.
ஒருவரின் தலைமுடியை தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுப்பதே தன் ப்ராணனை காணிக்கையாக்குவதற்குச் சமம். அநாவசியமாக முடியை வெட்டுபவர்களின் ப்ராணசக்தி குறைகிறது.
தலைமுடியையும், அவனது கர்வத்திற்குக் காரணமான ரத்தினமும் வெட்டப்பட்டதால் அவனைக் கொன்றதற்கு சமமாயிற்று.
மிகவும் சாதுர்யமாக யோசித்து அர்ஜுனன் செய்த காரியத்தினால் அனைவர்க்கும் சமாதானம் ஏற்பட்டது.
உயிர் பிழைத்த அச்வத்தாமன் மகிழவில்லை. மாறாக, ஒரு பெண்ணால் உயிர்ப்பிச்சை கிடைத்ததே என்றெண்ணி அவமானத்தினால், அடிபட்ட நாகம்போல் கருவிக்கொண்டு பாண்டவர்களைப் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான்.
இழந்த குழந்தைகளை நினைத்துப் புலம்பிக்கொண்டு அனைவரும் அரண்மனை திரும்பினர். தர்மபுத்திரர் அரசு கட்டில் ஏறினார்.
அர்ஜுனனின் மகனான அபிமன்யு ஏற்கனவே யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டான். அவனுக்குத் திருமணமாகி சில காலம்தான் ஆகியிருந்தது. அவனது இளம் மனைவியான உத்தரை கருவுற்றிருந்தாள்.
துவாரகையை விட்டு வந்து வெகு நாட்களாகிவிட்டதால் கண்ணன் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானான். கண்ணனைப் பிரிவது சுலபமா என்ன? இருப்பினும் அவன் தங்களுக்காக தனது ராஜ்ஜியத்தையும் பெற்றோரையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதால், பிரியாவிடை கொடுத்தனர்.
அனைவரும் வாசலில் வந்து கண்ணனின் ரதத்தைச் சூழ்ந்து நின்றனர்.
ரதத்தில் ஏறப்போன கண்ணனின் கால்களில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்
(பாஹி பாஹி மஹா யோகின் தேவ தேவ ஜகத்பதே!
நான்யம் த்வதபயம் பஷ்ய யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்) என்று அலறிக்கொண்டு
திடீரென்று ஓடிவந்து ஒரு பெண் விழுந்தாள்.
யாரென்று பார்த்தால், அது அபிமன்யுவின் மனைவி உத்தரை.
கண்ணன் அவளைத் தூக்கி நிறுத்தி,
என்னாச்சும்மா? என்று பரிவோடு விசாரிக்க,
தூரத்தில் வானில் நெருப்பைக் கக்கிக்கொண்டு ஏதோ ஒன்று அவளைத் துரத்துவதைக் காண்பித்தாள். கண்ணன் அதைப் பார்க்க
சற்று நேரத்தில் அது மறைந்துவிட்டது..
என்னவாய் இருக்கும்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 19 திரௌபதியின் மேன்மை

தலைகீழாக நின்றும், உடலைப் பலவாறு வருத்திக் கொண்டும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் தவம் செய்து புலன்களால் சறுக்கி விழுந்து, மீண்டும் தவம் செய்தும் மஹரிஷி என்று பெயர் வாங்கியவர்கள் பலர். ஆனால், நாராயண நாராயண என்று பகவன் நாமத்தை மட்டுமே எப்போதும் சொல்லி மஹரிஷி பட்டம் வாங்கிவிட்டேன்.
முக்தியை விரும்புபவர்கள், மற்ற தெய்வங்களிடத்து அஸூயையோ, வெறுப்போ இல்லாமல், அமைதியுடன் ஸ்ரீ வாசுதேவனது சரணங்களையே பஜிக்கிறார்கள்.
ஒரு விஷயம் எவ்வளவு அழகாகச் சொல்லப்பட்ட போதிலும், அது பகவானின் கீர்த்தியைச் சொல்லாவிடில், அதை ஸாதுக்கள் ஏற்பதில்லை.
அதை எச்சில் குழியாக எண்ணுகிறார்கள். எச்சில் குழியிலும் எல்லாரும் மீதி வைத்த உணவுப் பண்டங்கள் விழும். ஆனால், அது அவற்றின் சுவை அறியாது. பகவன் நாமத்தைப் பாடாத நாவும் அப்படியே. அதில் எவ்வளவு அழகான சொற்கள் விழுந்தாலும், பகவன் நாமத்தைச் சொல்வதாலேயே ஜீவனுக்கு ஈஸ்வரனின் ரசிகத் தன்மையும், ப்ரபாவமும் புலப்படும்.
ஸம்சாரத்தில் அமிழ்ந்து துக்கங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவனது மனம் பகவானின் நாமங்களையும் புகழையும் கேட்ட மாத்திரத்தில் அமைதியடைகிறது. ஸாதுக்கள் எப்போதும் வாசுதேவனின் பெயர்களைச் சொல்பவர்கள் இருந்தால் கேட்பார்கள். கேட்பவர்கள் இருந்தால் சொல்வார்கள். ஒருவரும் இல்லையெனில், தாங்களே தனியாக கானம் செய்துகொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஸாதுக்களைக் கவரும் வண்ணம் பகவானின் கீர்த்தி நன்கு புலப்படும் வண்ணம் அவனது லீலைகளை ஒன்று பட்ட மனத்தோடு தியானித்து வர்ணிப்பீராக.. வாஸுதேவனை பஜிக்கும் ஒருவன் நிச்சயமாக மீண்டும் பிறவியை அடைவதில்லை.
இவ்வாறு பலவிதமாகச் சொல்லி, ஸாதுக்களின் மஹிமையையும், பகவன் நாமத்தின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லிவிட்டு, நாரதர் கிளம்பினார்.
அதன் பின்னர் வியாஸர் இலந்தை மரங்களால் சூழப்பட்டதும், ஸரஸ்வதி நதிக்கரையில் அமைந்ததுமான தனது ஆசிரமத்தில் அமர்ந்து பகவானை தியானம் செய்தார். பின்னர் புராணங்களுள் ரத்தினமாக விளங்கும், ஸ்ரீமத் பாகவதம் என்ற புராணத்தைச் செய்தார். அதைத் தன் மகனான சுகருக்கு உபதேசம் செய்தார்.
என்று சொல்லி, ஸூத பௌராணிகர் மேலும் சொல்லலானார்.

மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். யுத்தத்தில் கடுமையாக அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தான் துரியோதனன். அவன் மகிழ்ச்சியடைவான் என்று நினைத்துக் கொண்டு துரோணரின் புதல்வனும், துரியோதனனின் நண்பனுமான அஸ்வத்தாமன் ஒரு வேலை செய்தான். பாண்டவர்களின் பாசறையில் யாருமில்லாதபோது நுழைந்தான். உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு, ஐந்து குழந்தைகளையும் கொன்றுவிட்டான்.
ஆனால், துரியோதனன் நண்பனின் இந்தச் செய்கையால் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக வருந்தினான். அவன் உடலில் இருந்த குருதி முழுவதும் வெளியேறிவிட்ட நிலையில் அவனுக்கு நல்லெண்ணம் வந்தது.
குழந்தைகள் இறந்துபட்ட செய்தி கேட்டு பாண்டவர்கள் துடித்துப் போனார்கள். வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் குலக் கொழுந்துகள் பட்டுப்போய் வாரிசற்ற நிலைமை வந்துவிட்டது.
திரௌபதியின் அழுகையால் மூவுலகங்களும் ஸ்தம்பித்துப்போனதென்றுதான் சொல்லவேண்டும்.
அப்போது அர்ஜுனன்
இக்காரியத்தைச் செய்தவன் தலையை இன்று மாலைக்குள் வெட்டுவேன்
என்று சூளுரைத்தான்.
வெட்டியவனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. அசுவத்தாமாவைப் பிடித்துக்கொண்டு வந்து திரௌபதியின் முன் நிறுத்தினான்.
அக்னியிலிருந்து தோன்றியவள். அரசகுமாரி. முற்பிறவியில் கடும் தவம் செய்து தர்மம், வீரம், சாதுர்யம், அத்தனை சாஸ்திரங்களிலும் நிபுணத்வம், ஞானம் இவை அனைத்தும் கொண்ட வரனை வேண்டியவள்.
ஐந்தும் ஒருவரிடத்து ஒருங்கே அமைவது கடினம் என்று ஒரே ஸ்வரூபமாகவும், ஐந்து உடல்களையும் கொண்ட மஹாபுருஷர்களுக்கு வரிக்கப்பட்டவள். ஒவ்வொரு வருடமும் அக்னிப்ரவேசம் செய்பவள். மஹாபதிவ்ரதை.
திருமணமான அன்றிலிருந்து காடுகளில் அலைந்து, சுடுசொற்களாலும், பழிச்சொற்களாலும் காயப்பட்டு பலவிதமான துன்பங்களை அனுபவித்தவள். இப்போது குழந்தைகளையும் இழந்து நிற்கிறாள்.
உறங்கிக்கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கொன்றது மகாபாவியான அசுவத்தாமன் என்றறிந்ததும் என்ன சொன்னாள் தெரியுமா?
ஸ்வாமி, இவர் குழந்தைகளைக் கொன்றவராயினும் குரு புத்ரன். குருவை இழந்துவிட்டோம். தந்தையானவர் மகனின் உருவிலேயே வசிக்கிறார் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏற்கனவே கணவரை இழந்து இவரது தாயும் மஹா உத்தமியுமான கிருபி துன்பக்கடலில் தத்தளிக்கிறார். குழந்தைகளை இழந்து நான் படும் துயரத்தை அந்தத் தாயும் அனுபவிக்க வேண்டாம். இவரை மன்னித்து விட்டுவிடுங்கள்
என்றாளே பார்க்கவேண்டும்.
த்ரௌபதியின் ஹ்ருதயத்தின் மேன்மையைக் கண்டு பகவானான கண்ணனே ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 18 வியாஸ நாரத ஸம்வாதம் - 4

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாயே முதல் குருவாகிறாள். தன் குழந்தை நிம்மதியோடு வாழவேண்டும் என்று ஆசைப்படாத தாயே இல்லை. குழந்தை கர்பத்திலிருக்கும்போதே அவளது ப்ரார்த்தனைகள் து வங்கி விடுகின்றன. கைக்குழந்தை என்றும் பாராமல், மாஹாத்மாக்களின் சரணங்களிலும் கோவில்களில் ஸந்நிதிகளிலும் குழந்தையைக் கிடத்தி தன் குழந்தையின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்யாத அம்மாக்கள் எங்கேயாவது உண்டா?
இங்கு நாரதரின் பூர்வாசிரமத்தில் அவரது தாயே ஸாதுசங்கத்தை அறிமுகம் செய்துவைக்கிறாள்.
ஸாது கொடுத்த உச்சிஷ்டத்தை உண்ட குழந்தைக்கு, உள்ளத்தில் எம்முயற்சியுமின்றி தானாகவே ஹரிநாமம் கேட்டது.
கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. சாதுர்மாஸ்யம் முடிந்து ஸாதுக்கள் கிளம்பினார்கள். போகும்போது ஒரு ஸாது குழந்தையை அழைத்து அதன் வலதுகாதில் ஹரி நாமத்தை உபதேசம் செய்துவிட்டுப் போனார்.
ஸாதுக்களைப் போல் பொல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஒரே காட்சியில் அன்பினால் ஹ்ருதயம் நுழைந்து விடுவார்கள். இனி அவர்களைப் பிரியமுடியாது என்னும்படியாக நம்மீது அன்பைக் கொட்டிவிட்டு அடுத்தவர்க்கு அனுக்ரஹம் செய்யக் கிளம்பிவிடுவார்கள்.
அவ்வளவுதான் நமது நிலைமை.
அமர்ந்தாலும், எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் உறங்கினாலும், கனவிலும்கூட அவர்கள் நினைவே ஆட்கொண்டுவிடும். ஒரு கட்டத்தில் நாம் லௌகீகமாக உழன்றுகொண்டிருந்ததே தேவலாம் என்னும் அளவிற்கு அவர்களது பிரிவு வாட்டும். கணவன் மனைவி, தாய் பிள்ளை, காதலன் காதலி இவர்களது அன்பைக் காட்டிலும் பலமடங்கு சக்தி வாய்ந்தது குருவிற்கும் சிஷ்யனுக்குமிடையிலான அன்பு.
நம்மைப் பிரிவதன் மூலம், நமது முயற்சியின்றியே நமக்கு குருவின் தியானம் சித்தித்துவிடும்.
குழந்தையால் அந்த ஸாதுக்களைப் பிரிய முடியவில்லை. அவர்களோடு போக விழைந்தாலும், ஆதரவற்ற அன்னையை விட்டுப்போக முடியவில்லை. மேலும் அவனோ ஐந்து வயதுக் குழந்தை.
ஒரு நாள் விதி வசத்தால் தாய் பாம்பு கடித்து மாண்டுபோனாள்.
ஸாதுசேவை செய்தும் தாய் இறந்துவிட்டாளே என்று தோன்றவில்லை. மாறாக, இறைவனை அடையும் வழியில் தடையாக இருந்த ஒரே பந்தத்தையும் இறைவன் விலக்கினானே என்று தோன்றியது குழந்தைக்கு.
பக்தி, ஞானம், வைராக்யம் இவையெல்லாம் ஒரு உண்மையான மஹாத்மாவின் ஸந்நிதியில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாலே கிடைத்துவிடுகிறது.
இனி தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையென்று ஸாதுக்கள் போன திக்கிலேயே கிளம்பினான்.
வழி நடந்து கங்கா தீரத்தை அடைந்தான். மனம் தியானத்தில் இயல்பாக மூழ்கித் திளைத்தது. கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தால், தானாகவே ஹ்ருதயத்தில் ஒரு ஒளி தோன்றியது. குழலோசை கேட்டது. மின்னல்போல் அவ்வப்போது திவ்யக் காட்சிகள் தென்பட்டன.
ஒருநாள் அசரீரி கேட்டது.
இடிபோன்ற குரலில் பகவான் குழந்தையிடம் பேசினான்.
குழந்தாய்! உன்னைக் கண்டு மகிழ்ந்தேன். என் அனுபவத்தில் நான் யாரோடும் இவ்வளவு சீக்கிரமாக பேசியதுமில்லை. தரிசனம் கொடுத்ததும் இல்லை. நீ அறிந்தோ அறியாமலோ ஸாதுக்களின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிவிட்டாய். குறுக்கு வழியில் வெகு சீக்கிரத்தில் என் அனுக்ரஹத்தை அடைந்துவிட்டாய். எனினும் இப்பிறவியில் என் தரிசனத்தைக் காணும் பக்குவத்தை நீ அடையவில்லை. எனவே, உனது அடுத்த பிறவியில் உனக்கு என் தரிசனம் கிட்டும்.
குரல் வந்த திசையில் நமஸ்காரம் செய்த குழந்தை சிரித்தான்.
இப்போது தரிசனம் இல்லை என்கிறேன் சிரிக்கிறாயே.
இருக்கட்டுமே. அதனால் என்ன?
இப்போதும் நீங்கள் என்னோடு பேசியதன் காரணம் என்ன தெரியுமா? அன்றொருநாள் எனக்கு அனுக்ரஹம் செய்தார்களே அந்த ஸாதுக்கள்,
அந்த ஊரில் ஒரு குழந்தை நம்மோடு ஓடி ஓடி வந்ததே. இப்போது எப்படி இருக்கிறானோ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்கள்.
நீங்கள் அவர்கள் ஹ்ருதயத்தில் குடி கொண்டிருப்பதால், அவர்கள் என்னை நினைத்ததும் ஓடி வந்து என்னோடு பேசுகிறீர்கள்.
அடுத்த பிறவி என்று நீங்களே வந்து சொல்கிறீர்களே.. அதுவே பாக்யம்தானே. என்னிடம் வந்து அதைச் சொல்ல அவசியம் என்ன இருக்கிறது? என் மீதான அந்த மஹாத்மாக்களின் கருணையே உம்மை என்னோடு பேசத் தூண்டிற்று. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் கொடுங்கள். அது உங்கள் விருப்பம்.
எனக்கு உங்கள்மீது எப்போதும் பக்தி இருக்கவேண்டும் என்று அனுக்ரஹம் செய்யுங்கள்
என்று சொல்லி மீண்டும் நமஸ்காரம் செய்தான்.
மிகவும் மகிழ்ந்த பகவான் அப்படியே என்று அசரீரியாகச் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த வியாஸர்,
ஸ்வாமி, இப்போது அடுத்த பிறவியா?
என்றார்.
ஆம். அதன் பிறகு அந்தப் பிறவியை ஹரி தியானத்திலேயே கழித்தேன்.
பிறகு ப்ரும்மாவின் மானஸ புத்திரர்களுள் ஒருவனாக இந்தப் பிறவி வாய்த்தது..
இப்போது பகவான் தரிசனம் கொடுத்தாரா?
அதை ஏன் கேட்கிறீர்கள் வியாஸரே..
சென்ற பிறவியில் தெரியாத்தனமாக தியானம் செய்துவிட்டேன். மின்னல்போல் அவ்வப்போது ஒளியாய்த் தோன்றி, அசரீரியாகப் பேசினார். இப்பிறவியில் நான் நான் தியானமோ, யோகமோ வேறெந்த ஸாதனைகளுமோ செய்வதில்லை. எந்நேரமும் நாராயணா எனும் நாமத்தையே சொல்கிறேன். அதனால் குச்சி வைத்துக்கொண்டு விரட்டினாலும் என்னைவிட்டுப் போவதே இல்லை.
எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறார். எந்நேரத்திலும் நேரில் தோன்றி என்னோடு பேசுகிறார்.
எனவே, நீங்கள் நாமத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஒரு கிரந்தம் செய்யுங்கள்.
என்றார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..