ஸத்ரயாகம் நடக்கும் யாகசாலைக்குள் பலராமன் நுழைந்ததும், அங்கிருந்த ரிஷிகள், முனிவர்கள், ரித்விக்குகள் அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்தனர். பலராமனை வணங்கி வரவேற்றனர்.
அங்கே ரோமஹர்ஷணர் மட்டும் அனைவர்க்கும் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எழவில்லை. ரோமஹர்ஷணர் வர்ண முறையற்ற திருமணத்தில் பிறந்த குழந்தை. இருப்பினும் புராண இதிஹாசங்கள் அனைத்தையும் வியாசரிடமிருந்து முறையாகக் கற்றவர்.
அளவுக்கதிகமான கல்வியறிவால் அகங்காரம் கொண்டு தன்னை மதிக்கவில்லை. அதனால்தான் எழுந்து மரியாதை செய்யவில்லை என்று எண்ணினான் பலராமன். துஷ்டர்களைக் கொல்லவே நான் அவதாரம் செய்துள்ளேன். இவனைக் கொல்வது என் கடைமை என்றெண்ணினான்.
துஷ்டர்களைக் கொல்லும் வேலை தனக்கு வேண்டாம் என்று தான் யுத்தத்திலிருந்து விலகி தீர்த்த யாத்திரை வந்தான் பலராமன். ஆனால், வந்த இடத்தில் இப்போது நடக்கவேண்டியது நடந்தே தீரும் என்றாகும்படி, ஒரு தர்பையை எடுத்து ரோமஹர்ஷணரை அடிக்க, அவர் இறந்துபோனார்.
உடனே முனிவர்கள் அனைவரும் பதைபதைத்து பலராமனிடம்,
இது தகாது. இந்த ஸத்ரயாகம் முடிவுறும் வரையில் ரித்விக்குகளின் தலைமைப் பொறுப்பான ப்ரும்ம பதவியை இவருக்கு அளித்தோம். அந்தணரைக் கொல்வதற்கு ஈடான ப்ரும்மஹத்தி பாவம் இது. அந்த தோஷம் பரமேஸ்வரனான உம்மைத் தொடாமல் இருக்கலாம். உமக்குப் ப்ராயசித்தங்களும் அவசியமில்லைதான். ஆனால், நீங்கள் இதற்குத் தகுந்த உபாயம் கண்டால் அறநெறியைப் பின்பற்றும் வழியை உலகோர்க்குக் காட்டியதாகும். என்றனர்.
சினம் தணிந்த பலராமன், உலகை ஒட்டியே வாழ விரும்புகிறேன். மற்றவர்க்கும் அதுவே பாடமாகட்டும். நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுங்கள். என் யோகபலத்தால் அனைத்தையும் செய்வேன் என்றான்.
பலராமா! பகவானான உமது சங்கல்பமும், அஸ்திரமும் வீணாகக்கூடாது. அதே சமயம் அறநெறிக்கேற்பவும், சத்தியம் காக்கவும் எது உகந்ததோ அதைச் செய்யுங்கள் என்றனர் அந்தணர்.
தானே புத்திரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதன்படி இந்த ரோமஹர்ஷணரின் புதல்வன் தந்தைக்குரிய அனைத்து ஞானத்தையும் பெற்று புலன்களை வென்று, மனவலிமை பெற்று, இனி புராணங்களை அனைவர்க்கும் எடுத்துரைக்கட்டும் என்று வரமளித்தான் பலராமன்.
ரோமஹர்ஷணரின் புதல்வர்தான் ரௌமஹர்ஷணர்
என்றழைக்கப்படும் உக்ரஸ்ரவஸ்.
அவரே இப்புராணத்தை நைமிஷாரண்யத்தில் ஸத்ரயாகத்தில் விரித்துக்கூறும் ஸூதர் ஆவார்.
பலராமன் மேலும் கூறினான்.
ரிஷிகளே! எனக்கு இங்கு நடப்பவை பற்றி ஒன்றும் தெரியாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள். அதை நிறைவேற்றித் தருகிறேன். என்றான்.
உடனே ரிஷிகள், இல்வலன் என்ற அசுரனின் புதல்வன் பல்வலன். அவன் ஒவ்வொரு பருவத்திலும் இங்கு வந்து ஸத்ரயாகத்தைக் கலைக்கிறான். யாக குண்டத்தின் மீது ரத்தம், மாமிசம், மலம், மூத்திரம் ஆகியவற்றைப் பொழியும் அப்பாவி கொல்லப்பட வேண்டும்.
அதன்பின், பாரதவர்ஷத்தை வலம் வந்து ஒரு வருடம் விரதம் இருந்து தூய்மை பெறுங்கள். என்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment