Tuesday, July 31, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 58 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 2


விராட்புருஷனின் தோற்றம்
உலகனைத்திற்கும் நலம் பயக்கும் கேள்விகளை விதுரர் கேட்டார்.
மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்.
விதுரரே, தங்கள் மனம் எப்போதும் இறைவனின் திருவடியிலேயே லயித்திருப்பதால் உலகிற்கே நலம் தரும் கேள்விகளைக் கேட்டீர்.

இவற்றால் தங்கள் புகழ் மேலும் ஓங்கப்போகிறது.
வியாசரின் சகோதரன் விசித்ரவீர்யன். அவர்களிருவருக்கும் தாய் ஸத்யவதி. விசித்ரவீர்யனின் மனைவியாய் இருந்த பணிப்பெண்களுள் ஒருத்தியின் வயிற்றில் வியாசரின் அருளால் அவதரித்தீர்.
நீங்கள் அவரவர் செய்வினைகளுக்கேற்ப தண்டனையருளும் யமதர்மராஜனின் அம்சமாவீர். ஆணிமாண்டவ்ய ரிஷியின் சாபத்தால் இவ்வுலகில் பிறந்தீர்.
தாங்கள் பகவான் க்ருஷ்ணனுக்கு மிகவும் ப்ரியமானவர். பகவான் தான் வைகுண்டம் செல்லும் சமயம் தங்களுக்கு ஞானோபதேசம் செய்யுமாறு என்னிடம் கூறிச் சென்றார்.

பகவானின் திருவிளையாடல்களில் முக்கியமான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறேன்.
என்று சொல்லி,
பகவான் தனித்திருப்பத்தையும், பின்னர் தன் மாயா சக்தியால் முக்குணங்களைத் தோற்றுவித்ததையும்,
அவைகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினால் தன் அம்சத்தை அதனுள் புகுத்தி சமன் செய்ததையும் கூறினார். அதுவே ஜீவன் ஆகும்.
பின்னர் மஹத் தத்வம், ஐம்பெரும் பூதங்கள், பத்து புலன்கள், மனம், அஹம் எனும் தத்வம் ஆகியவற்றின் தோற்றம், தன்மை, குணங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொன்னார்.
தொடு உணர்ச்சி, வாயு, ஒளி, அக்னி, சுவை, நீர், மணம், மண் ஆகியவற்றின் தோற்றங்களும் விளக்கப்பட்டன.
இவையனைத்தும் தனித்தனியாக இருந்தமையால் ப்ரபஞ்சம் உருவாகவில்லை. தேவர்களின் ப்ரார்த்தனைக்கிணங்கி, பகவான் அவற்றினுள் அந்தர்யாமியாக நுழைந்து தன் க்ரியா சக்தியால் அவற்றின் செயல்பாடுகளைத் தூண்டிவிட்டார்.
இருபத்துமூன்று தத்வங்களும் ஒன்றிணைந்து விராட்புருஷனைத் தோற்றுவித்தன. அதுவே பகவானின் முதல் அவதாரம்.
இவரிடமிருந்தே அனைத்து ஜீவன்களும் தோன்றின.
விராட்புருஷன் உணர்வு கொண்டதும் அவரது அங்கங்களிலிருந்து சகல தேவதைகளும் தோன்றினர்.
அவருடைய உருவம், ஸ்தானம், லோகங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கினார் மைத்ரேயர்.
(இரண்டாவது ஸ்கந்தத்தில் நாம் இவற்றை விரிவாகப் பார்த்தபடியால், இங்கே குறிப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.)
மைத்ரேயர் மேலும் கூறினார்.
விதுரரே, காலம் தர்மம் இவற்றோடு கூடி யோக மாயையின் பெருமையை வெளிப்படுத்துபவர் இந்த விராட் புருஷன். இவரது ஸ்வரூபத்தை முழுமையாக எவராலும் வர்ணிக்க இயலாது.
மனம்போனபடி உலக விஷயங்களைப் பேசி பேசித் தூய்மையை இழந்துவிட்ட என் நாவைத் தூய்மைப்படுத்துவதற்காகவே, என் குரு உபதேசம் செய்தவற்றை என் சிற்றறிவிற்கு எட்டியவரை உமக்குச் சொல்கிறேன். கேளும்.
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 57 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 1


பரீக்ஷித் கேட்டார்
அந்தணரது சாபத்தால் போஜ மற்றும் வ்ருஷ்ணி குலத்தின் சிறந்த வீரர்கள், சேனைத்தலைவர்கள், மஹாரதர்கள் அனைவரும் இறந்துபட்டனர்.
மும்மூர்த்திகளுக்கும் தலைவரான க்ருஷ்ணனே உடலை மறைத்துக்கொண்டார். அப்படியிருக்க, அவர்களில் ஒருவரான உத்தவர் மட்டும் எவ்வாறு மீதமானார்?
அவருக்கு எதுவும் ஆகவில்லையா?
ஸ்ரீ சுகர் பதிலுரைத்தார்
பகவான் க்ருஷ்ணன் அந்தணரது சாபம் என்ற சாக்கில் தன் குலத்தையே அழித்து, தானும் இவ்வுலகை விடுத்துக் கிளம்பும்போது
என்னைப் பற்றிய ஆத்மஞானத்தைப் பெற தகுதியானவன் உத்தவர் ஒருவரே.. அவர் எனக்கு நிகரானவர். தன்னைத்தானே வெற்றி கொண்டவர். புலனடக்கம் உள்ளவர். ஆகவே, என்னைப் பற்றிய தத்துவ ஞானத்தை உலகோர்க்கு அளித்துக்கொண்டு இங்கேயே இருக்கட்டும்..
என்று நினைத்தார்.
எனவே உத்தவரை பதரிகாஸ்ரமம் சென்று தன்னை ஆராதித்துவரும்படி கட்டளையிட்டார்.
விதுரர் உத்தவர்கூறியபடி மைத்ரேயரைத் தேடி ஹர்த்துவாரத்தை அடைந்தார்.
விண்ணுலகிலிருந்து விழும் கங்கை மண்ணுலகைத் தொடும் இடம் ஹரித்துவாரம் ஆகும்.
க்ருஷ்ண பக்தியால் மனத்தூய்மை பெற்ற விதுரர், மைத்ரேயரின் நற்குண சீலங்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன் ஐயங்களைக் கேட்டார்.

1. உலகில் அனைத்து மக்களும் சுகம் வேண்டி பற்ப்பல காரியங்களைச் செய்கின்றனரே. அதனால் இன்பம் அடைகிறார்களா? அல்லது மேலும் பல துன்பங்கள் வருகின்றனவா? உண்மையில் எது செய்தால் நலம்?

2. எந்த நல்வழிச் சென்றால் இறைவன் மகிழ்ந்து பக்தனின் தூய்மையான உளத்தில் அமர்வான்?
அமைதி நல்கும் நல்வழி எது?

3. பகவான் ஸ்வதந்த்ர புருஷர். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர். அவர் என்னென்ன அவதாரம் செய்து என்னென்ன திருவிளையாடல்கள் புரிந்தார்?

4. எவ்வாறு செயலற்ற யோகமாயையால் உலகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்கிறார்?

5. பகவான் ஒருவராக இருந்தும் ப்ரும்மாண்டத்தின் அனைத்துயிர்களிலும் அந்தர்யாமியாக ஊடுருவிப் பல்வேறு உருவங்களாகக் காட்சியளிக்கிறாரே. அதெப்படி?

6. பகவான் எந்தெந்த தத்துவங்களை ஏற்று இவ்வுலக ங் களையும், அதன் தலைவர்களையும், படைத்தார்?

7. ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாகவே இயல்பு, செயல், மேனி ஆகியவை வருமாறு படைக்கிறாரே. அதெப்படி?

அனைத்து நெறிமுறைகளையும் தங்களின் உற்ற நண்பரான வியாசர் சொல்லிப் பலமுறை கேட்டுள்ளேன். கண்ணனின் கதையமுதம் எவ்வளவு கேட்டாலும் திகட்டுவதில்லை.
நீங்கள் தேனீயைப்போல் அனைத்துக் கதைகளிலிருந்தும் ஸாரமான தேன் போன்ற க்ருஷ்ண கதைகளைச் சேகரித்துள்ளீர்கள். எனக்கு அவைகளைச் சொல்லுங்கள்
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 29, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 56 பகவானின் விசித்ர லீலைகள்


உத்தவர் தொடர்ந்தார்..
பகவான் என்னை பதரிகாஸ்ரமம் செல்லக் கட்டளையிட்டார்.
நான் அவரைப் பிரிய மனமின்றிப் பின்தொடர்ந்தேன்.
பகவான் க்ருஷ்ணன் அழகோ அழகு.
அனைத்திற்கும் பற்றுக்கோடு. அழகிற்கு அழகு சேர்க்கும் அழகரான அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
தாமரை போன்ற தன் திருவடியைத் தன் தொடைமேல் வைத்திருந்தார்.
ஆனந்தமே வடிவெடுத்ததுபோல் காணப்பட்டார்.
அப்போது மைத்ரேய மஹரிஷி தற்செயலாய் அங்கு வந்தார்.
அவர் பராசர முனிவரின் சீடர். குருபுத்ரரான வியாசரின் உற்ற தோழர். பகவானின் பரம பக்தர். சித்தர்.
அவரைக் கண்டதும்,
இவரது கனிந்த பார்வையும், புன்சிரிப்பும் கண்டு என் சோர்வெல்லாம் தீர்ந்தது
என்று பகவான் என்னிடம் கூறினார்.
பகவான் மேலும் சொன்னார்.
உத்தவா, யாராலும் அடையமுடியாததை உனக்கு அளிக்கப்போகிறேன். முற்பிறவியில் நீ அஷ்டவசுக்களுள் ஒருவன். முன்பு ப்ரஜாபதிகளும், வசுக்களும் சேர்ந்து ஒரு வேள்வி இயற்றினர். அப்போது நீ என்னையே அடையவேண்டும் என்ற ஒரே விருப்பத்தோடு என்னைப் பூஜித்தாய்.
நீ பரமசாது. என் பரிபூரணமான அருள் பெற்ற உனக்கு இஃதே கடைசிப் பிறவி.
நான் இப்போது உடலைத் துறந்து வைகுண்டம் செல்லப்போகிறேன். உன் பக்தியால் நீ தனித்திருக்கும் என்னை தரிசித்துவிட்டாய்.
முன்பு பாத்ம கல்பத்தில் படைப்பின் தொடக்கத்தில் என் தொப்புள் கொடியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவுக்கு என்னைப் பற்றியும், என் திருவிளையாடல்கள் ப‌ற்றியும் கூறினேன். ஞானத்தை வழங்கும் அதை ஞானிகள் பாகவதம் என்கின்றனர்.
அதை இப்போது உனக்குத் தரப்போகிறேன்..
(அதுவே உத்தவ கீதையாகும். பதினோராம் ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.)
விதுரரே! பகவானுக்கு என்மீது எவ்வளவு கருணை பார்த்தீரா..
இதைக் கேட்டு என் மேனி சிலிர்த்தது.
ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செலுத்தினேன்.
இறைவா! தங்கள் திருவடிகளை சேவிப்பவர்களுக்கு நான்கு பெரும் பேறுகளும் கிட்டுகின்றன. ஆனால் பிச்சைப்பொருளான அவற்றின் மீது எனக்கு இச்சையில்லை. தங்கள் திருவடிக் கமலங்களை சேவிப்பதொன்றே எனக்கு மகிழ்ச்சி.
தங்களுக்கென்று விருப்பங்கள் இல்லை. செயல்களும் இல்லை. ஆனால், பற்பல செயல்களை எங்களுக்காக நிகழ்த்துகிறீர்.
எங்களுக்காகப் பிறக்கிறீர். காலகாலனான தாங்கள் பகைவர்க்கு பயந்தவர்போல் ஓடுகிறீர்.
நீர் ஆத்மாராமன். தங்களை மகிழ்விக்க வேறு சாதனம் தேவையில்லை. ஆனால் 16000 பெண்களைத் திருமணம் செய்து திருவிளையாடல் புரிந்தீர்.
விசித்ரமான உங்கள் திருவிளையாடல் யாருக்கும் புரிவதில்லை.
தங்களுடைய அறிவு என்றுமே மழுங்காதது. ஆழ்ந்து அகன்றது. குறைவற்றது. ஆனால், ஏதுமறியாதவர்போல் மந்திராலோசனையில் என்னையும் அழைத்து என் அபிப்ராயம் கேட்பீர். அது என்னை என்னவோ செய்கிறது.
ப்ரும்மதேவருக்குத் தாங்கள் உபதேசித்த பாகவதத்தை அறிந்துகொள்ள எனக்குச் சக்தியும் தகுதியும் இருக்குமானால் எனக்குச் சொல்லுங்கள். நான் சிரமமின்றி சம்சாரக் கடலைக் கடப்பேன்.
இவ்வாறு நான் வணங்கி வேண்ட பகவான் எனக்கு நல்லுபதேசம் செய்தார்.
அவரை வலம் வந்து வணங்கி, இன்று அவரைப் பிரிந்த வருத்தத்தோடு உம்மைச் சந்தித்தேன்.
கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி ஒரு புறம். பிரிவுத்துயர் ஒருபுறம். நான் பத்ரிகாஸ்ரமம் கிளம்புகிறேன்
என்றார்.
விதுரர், தாங்கவொணாத துக்கச் செய்தியைக் கேட்டும் தன் ஞானத்தால் பொறுத்துக்கொண்டார்.
வணக்கமாக உத்தவரிடம் கேட்டார்.
‌பகவான் தங்களுக்குச் சொன்ன நல்லுபதேசத்தை எனக்குச் சொல்ல வேண்டும். பகவானைப் பற்றிய உண்மை அறிவைப் புகட்ட தம்மைப்போன்ற அடியார்களால்தான் முடியும். அதற்காகத்தானே அடியார்கள் உலகெங்கும் சுற்றி வருகின்றனர்.
உத்தவர் பதிலுரைத்தார்.
விதுரரே, பகவான் எனக்குக் கூறியவற்றை அப்போது அங்கிருந்த மைத்ரேய மகரிஷியும் கேட்டார். அவற்றை தங்களுக்குச் சொல்லும்படி மைத்ரேயருக்கு என் எதிரில்தான் கட்டளையிட்டார். ஆகவே, நீங்கள் மைத்ரேய மஹரிஷியைக் கண்டு அவ்விவரங்களை அறிந்துகொள்ளுங்கள் என்று சொல்லிப் புறப்பட்டார்.
விதுரர் துள்ளிக் குதித்தார்.
அனைவரும் தாம்‌ உடலை விடும் நேரம் பகவானை ஸ்மரிக்க விரும்புவர். ஆஹா! பகவானுக்கு ஏழையான என்மேல் எவ்வளவு கருணை. அவர் உடலை விடும் சமயம் என் பெயரைச் சொன்னாரே..
ஒரு பக்கம் பகவான் கிளம்பிய துக்கம்..
இன்னொருபுறம் பகவான் தன்னை மறவாமல் நினைத்தானே என்ற ஆனந்தம்..
தவித்துக்கொண்டு ஒருவாறாக யமுனைக் கரையிலிருந்து புறப்பட்டு மைத்ரேயர் வாசம் செய்யும் கங்கைக் கரையை நோக்கி நடந்தார் விதுரர்.
# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 28, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 55 யாதவகுலத்தின் அழிவு


உத்தவர் தொடர்ந்தார்..

சரத்கால இரவில் ப்ருந்தாவனமெங்கும் பௌர்ணமி நிலவு பரவியிருக்கும் வேளையில் கண்ணன் இனிய முரளிகானம் செய்துகொண்டு ராஸலீலை செய்தார்.
தாய் தந்தையரைக் காக்க வடமதுரை வந்து மாமன் கம்சனைக் கீழேதள்ளிக் கொன்று, அவன் உடலை தரதரவென்று தரையில் இழுத்தார்.
சாந்தீபனி முனிவரின் குருகுலம் சென்று வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஒரே முறை கேட்டு அத்யயனம் முடித்தார்.
அவரது இறந்த மகனை மீட்க பஞ்சஜனன் என்ற அரக்கனின் வயிற்றைக் கிழித்தார். பின்னர் யமலோகம் வரை சென்று அவனை மீட்டு வரும் வழியிலேயே குரு தனக்குச் சொன்ன அத்தனை வித்தைகளையும் அவனுக்கு போதித்து முழுமையாக்கி குருவிடமே ஒப்படைத்தார்.
பீஷ்மக மஹாராஜனின் மகளான ருக்மிணியின் அழைப்பை ஏற்று காந்தர்வ முறைப்படி விவாஹம் செய்ய எண்ணி, கருடன் அமுதகலசத்தை கவர்ந்து செல்வதுபோல் அவளை அழைத்துவந்தார்.
நக்னஜித் என்பவரின் மகளான ஸத்யாவை அவளது திருமணத்திற்குப் பணயமாக வைக்கப்பட்டிருந்த ஏழு காளைகளை அடக்கி திருமணம் செய்துகொண்டார்.
ஸத்யபாமா பாரிஜாத மலருக்கு ஆசைப்பட்டாள். அப்போது சாதாரண உலகியலைப் பின்பற்றி மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவன்போல் ஸ்வர்கத்திலிருந்து பாரிஜாத மரத்தையே எடுத்துவந்து அவளது ஆசையைப் பூர்த்தி செய்தார்.
இந்திரனின் வேண்டுதலுக்கிணங்க நரகாசுரனைக் கொன்றார். அவன் பிற அரசர்களிடமிருந்து கவர்ந்த செல்வம் போக மீதியையும், அரசாட்சியையும் அவனது பிள்ளையான பகதத்தனுக்குக் கொடுத்தார்.
நரகாசுரனின் அந்தப்புரத்தில் நுழைந்தார். அப்போது நரகாசுரனால் கடத்திவந்து சிறை வைக்கப்பட்டிருந்த 16000 ராஜகுமாரிகள் கண்ணனைக் கண்ட நொடியில் காதல்கொண்டு மணக்க விரும்பினர்.
பகவான் தன் மாயையால், அவரவர்களுக்கு ஏற்ப தனித்தனி வடிவம் கொண்டு அவர்கள் அனைவரையும் மணந்தார்.
தன் அளவிடற்கரிய லீலைகளை வெளிப்படுத்த எண்ணிய பகவான் அவர்கள் ஒவ்வொருவரிடம் தனக்கு ஒப்பான பத்து பிள்ளைகளைத் தோற்றுவித்தார்.
காலயவனன், ஜராஸந்தன், சால்வன் முதலியோர் மதுரையை முற்றுகையிட்டபோது அவர்களை முசுகுந்தன், பீமன் முதலியோரைக் கொண்டு வதைத்தார்.
சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், தந்தவக்த்ரன் முதலிய அசுரர்களில் சிலரைத் தானே கொன்றார். சிலரை பீமனை விட்டுக் கொல்லச் செய்தார்.
விதுரரே! துரியோதனாதியர், பாண்டவர்கள் இன்னும் பல அரசர்களின் படையால் பூமியே நடுங்கிற்றே. அவர்களை உண்மையில் கொன்றவர் கண்ணனன்றோ..
கர்ணன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் பீமனால் முறிக்கப்பட்டு வீழ்ந்தபோதும் பூபாரம் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று எண்ணினார்.
பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் அழிந்தன. ஆனால் எனது அம்சபூதமாகத் தோன்றிய யாதவப் படை மிகப்பெரிதாக வளர்ந்து நிற்கிறதே..
அவர்கள் தாமாகவே அழிந்தால்தான் உண்டு. வேறெவரும் அழிக்க இயலாது என்று எண்ணினார்.
தர்மபுத்ரரை அரசபீடத்தில் அமர்த்தினார்.
உத்தரையின் வயிற்றிலிருந்த பூரு வம்சத்தின் விதையான பரிக்ஷித்தைக் காப்பாற்றினார்.
தர்மபுத்ரருக்கு மூன்று அஸ்வமேதயாகங்களை நடத்திக்கொடுத்து அவர் நிலவுலகை‌ மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.
உள்ளும் புறமும் எங்கும் வியாபித்திருக்கும் பகவான் எதிலும் ஒட்டாமல் உலகியல் நெறிகளை மேற்கொண்டு அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு துவாரகையில் வசித்துவந்தார்.
ஒரு சமயம் விளையாடிக்கொண்டிருந்த யாதவ குமாரர்களும், போஜ குமாரர்களும் சில முனிவர்களை சினம் கொள்ளச் செய்தனர்.
யாதவகுலத்தின் அழிவே பகவானின் திருவுளம் என்றறிந்த முனிவர்கள் அவர்களுக்குச் சாபமிட்டனர்.
சிலமாதங்கள் கழித்து வ்ருஷ்ணி, போஜ, அந்தக வம்சத்து யாதவர்கள் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்தனர்.
அங்கு நீராடி ரிஷிகள், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து அந்தணர்களுக்குச் சிறந்த தானங்களை அளித்தனர்.
அங்கு தங்கியிருந்த சமயத்தில் உணவு ஏற்று, பின்னர் மதுவருந்தினர். அதனால் மதிகெட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ ஏற்பட்டு காட்டை அழிப்பதுபோல் தங்களுக்குள் அடித்துக்கொண்டு மாய்ந்து போனார்கள்.
பகவான் தன் மாயையின் திறனைக்கண்டு பின் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
தன் குலம் அழிவதைக் காண என் மனம் தாங்காது எனவும், என்னை பதரிகாச்ரமம் செல்லும்படியும் கட்டளையிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Friday, July 27, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 54 பிரிவுத்துயர்

விதுரர் உணர்ச்சிப் பெருக்கினால் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, பேச்சற்ற நிலையில் கண்ணீர் வழிந்தோட கண்ணனின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் உத்தவர்.
ஒரு முஹூர்த்த நேரம் கழித்து சற்று உணர்வு திரும்பியவராய்த் தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.
க்ருஷ்ணனாகிய சூரியன் அந்தமித்துவிட்டது விதுரரே.. அவரின் அத்தனை உறவினர்களும் காலம் என்னும் பாம்பினால் விழுங்கப்பட்டனர்.
நலமா என்று கேட்டால் நான் என்ன சொல்வது?
கண்ணனோடு நெருங்கிப்பழகியும், அவரை பகவான் என்று யாதவர்கள் அறிந்துகொள்ளவில்லையே. கண்ணனைத் தங்களுக்குள் சிறந்தவன் என்றே எண்ணினர்.
தவமே புரியாத யாதவர்களோடு சிலகாலம் பழகிவிட்டு, தன் உடலை மறைத்துக்கொண்டார் கண்ணன். அனைத்து உலகங்களையும் மயக்கும் அழகுத் திருமேனி கொண்டவர். ஏன்? அவரே அதைக் கண்டு வியந்தார்.
தர்மபுத்திரர் நடத்திய ராஜஸூய வேள்வியைக் காண வந்த அனைவரும் ப்ரும்மதேவனின் படைப்புத்திறன் இவரோடு முடிந்ததோ?
இதற்கு மேலான அழகை இனி அவர் படைக்க இயலாதோ என்று நினைத்தனர்.
அவரது உளம்கனிந்த பார்வையாலும், விநோதமான சிரிப்பாலும் இடைப்பெண்கள் அனைவர் மனத்தையும் கவர்ந்தார்.
அவர் பிறப்பற்றவர். ஆயினும் வசுதேவரின் திருமகனாய்ப் பிறந்தார்.
அவர் பயமற்றவர். எனினும் கம்சனிடம் பயந்தவர்போல் கோகுலத்தில் ஒளிக்கப்பட்டு வளர்ந்தார்.
அவரது பராக்ரமம் எல்லையற்றது. இருப்பினும் காலயவனனுக்கு பயந்தவர்போல் வடமதுரையை விடுத்து துவாரகைக்கு ஓடினார்.
இவையெல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
கம்சனைக் கொன்றதும், சிறைக்கு ஓடிச்சென்று தாய் தந்தையரை விடுவித்தார். அவர்கள் கால்களில் விழுந்து என்ன சொன்னார் தெரியுமா?
கம்சனுக்கு பயந்து கோகுலத்தில் ஒளிந்து வசித்த என்னால் தங்களுக்கு எந்தப் பணிவிடையும் செய்ய முடியவில்லை.. தாங்கள் அதை மனத்தில் கொள்ளாது என்னை மன்னிக்கவேண்டும் என்றார். அதை நினைத்தாலே என் மனம் விம்முகிறது.
அவரது இரு புருவங்களிலும் காலதேவன் வசிக்கிறான். அவற்றை நெரித்தே இவ்வுலகின் பாரத்தைக் குறைத்தார்.
தன்னை நிந்தித்த சிசுபாலனுக்கு அவர் ஸாயுஜ்ய பதவி கொடுத்ததை நீங்களும் அறிவீர்கள்தானே.. இப்படிப்பட்டவரின் பிரிவை எவரால் சகிக்க இயலும்?
பாரதப்போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் அவரது திருமுகமண்டலத்தின் அழகைப் பருகியவாறே அவரது உலகை அடைந்தனரே.
அவரே மூவுலகிற்கும் தலைவர். தன் இயல்பான செல்வத்தினால் குறைவற்றவர். அவருக்கு ஈடானவரே இல்லையெனும்போது உயர்ந்தவர் எவரேனும் உண்டா?
இந்திராதி தேவர்களும் லோகபாலர்களும் காணிக்கைகளைக் கையிலேந்திக்கொண்டு அவரைக் காண வரிசையில் நிற்கிறார்கள்.
காணிக்கை செலுத்தும்போது தங்கள் கிரீடங்கள் அவர் திருவடியில் படுமாறு சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்,
உக்ரசேனரை உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்திவிட்டு அவரருகில் கைகட்டி நின்று
அரசே! நான் சொல்வதைக் கேட்டருளுங்கள் என்று கூறி சேவை செய்கிறார்.
மார்பில் விஷம் வைத்துக்கொண்டு பாலூட்ட வந்த பூதனைக்கு யசோதைக்கு அளிக்கும் அதே நற்கதியை அளித்தார். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு வேறு யாரைச் சரணடைவது?
அசுரர்கள்கூட பகைமையினால் எப்போதும் தியானித்துக்கொண்டு அவரையே அடைந்தனரே.
பூமிக்கு நலம் செய்ய சிறையிலன்றோ அவதரித்தார்.
யமுனை நதிக்கரையில் பற்பல பறவைக்கூட்டங்கள் நிரம்பிய அடர்ந்த காடுகளில் இடைச்சிறார்களுடன் கன்று மேய்த்து விளையாடினார்.
ஏராளமான குழந்தை விளையாட்டுக்களை இடைச்சிகளுக்குக் காட்டினார்.
சிலசமயம் அழுவார். சிலசமயம் சிரிப்பார்.
ஒன்றுமறியாதவர்போல் மிடுக்காக ஒரு பார்வை பார்ப்பார். அத்தனையும் அழகு சொட்டுமே..
கண்ணனின் மாமனான கம்சன் அவரைக் கொல்வதற்காக விருப்பம்போல் வடிவெடுக்கும் மாயாவிகளான பல அரக்கர்களை அனுப்பினான்.
குழந்தைகள் தம் விருப்பம்போல் விளையாட்டு பொம்மைகளைப் போட்டுடைப்பதுபோல் அத்தனை அரக்கர்களையும் உடல் சிதறச்செய்தார்.
காளியனின் விஷம் கலந்த நீரைக் குடித்து மயங்கிய கோபச்சிறுவர்களை தன் அமுதப்பார்வையால் உயிர்ப்பித்தார்.
காளியனையும் அடக்கி, கடலுக்குத் துரத்தி, நீரை மக்களுக்குப் பயன்படச் செய்தார்.
கண்ணன் வந்து குடியிருந்ததால் நந்தகோபரின் திருமாளிகையில் ஏராளமான செல்வம்‌குவிந்து செல்வச் சுமை ஏற்பட்டது. அதை எப்படி நல்வழியில் செலவழிக்க வேண்டும் என்று வழிகாட்டி நந்தனை உத்தம அந்தணர்களைக்‌கொண்டு கோஸவம் (பசுக்களைப் பூஜிப்பது) என்ற வேள்வியைச் செய்தார்.
இந்திரனின் கர்வத்தை அடக்க, குழந்தைகள் நாய்க்குடையைப் பிடுங்குவதுபோல் கோவர்தன மலையைப் பிடுங்கிக் குடையாய்ப் பிடித்து தன்னையே நம்பியிருக்கும் கோகுலவாசிகளைக் காத்தார்.
இவ்வாறு கண்ணனின் ஒவ்வொரு லீலையையும் சொல்லிச் சொல்லி அழுதார் உத்தவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 26, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 53 கேள்விக்கணைகள்


உத்தவரும் விதுரரும் யமுனைக்கரையில் சந்தித்தனர்.
ஆனந்தத்தில் தம்மையே மறந்து தழுவிக்கொண்டு வெகுநேரம் நின்றனர். பின்னர், விதுரர் உத்தவனைப் பார்த்து மிகவும் பரபரப்புடன் வரிசையாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
கண்ணனைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் போதும் என்ற தவிப்பு மிகுந்திருந்தது அவர் குரலில்.
தன் தொப்புள்குழியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி பூபாரம் தீர்க்கவந்த கண்ணனும் பலராமனும் நலமா?
குருவம்சத்தின் நெருங்கிய நண்பரான வசுதேவர் நலமா?
குந்தி முதலிய தன் சகோதரிகளுக்கு தந்தையைப்போல் மனம் மகிழ்ந்து திளைக்கும்படி வேண்டியதையெல்லாம் கொடுத்து சீர்செய்வாரே.. அவர் எப்படி இருக்கிறார்?
ருக்மிணியின் மகனும், சிறந்த சேனாதிபதியுமான ப்ரத்யும்னன் நலமா?
அரசனாகும் ஆசையை அறவே விட்டொழித்தவரும், கண்ணனின் வேண்டுகோளுக்காக அரசாட்சி செய்பவருமான உக்ரசேனர் நலமா?
ஸ்ரீ க்ருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி முருகனைப் பலவாறு விரதங்களால் பூஜித்து சாம்பன் என்ற பெயரில் தன் மகனாகவே அடைந்தாளே..சாம்பனும் ஜாம்பவதியும் எப்படி இருக்கிறார்கள்?
அர்ஜுனனிடமிருந்து தனுர்வேதத்தின் ரகசியங்களைக் கற்ற ஸாத்யகி நலமா?
ஶ்வபல்கரின் மகனான அக்ரூரர் கிருஷ்ண பக்தியில் தலைசிறந்தவராயிற்றே. மஹா அறிவாளி. க்ருஷ்ணனின் காலடிச்சுவடுகளைக் கண்டு பரமானந்தமடைந்து ப்ருந்தாவனத்து வீதிகளில் விழுந்து புரண்டவர் அவர். அவர் நலமோடு இருக்கிறாரா?
போஜமன்னனின் பெண்ணான தேவகி தேவமாதா அதிதிக்கு ஒப்பானவள். வேதமாதா வேள்விகளின் நெறிகளையும், அவற்றின் பொருளையும் மந்திர உருவில் தாங்குவதுபோல் ஸ்ரீ க்ருஷ்ணனை உதரத்தில் தாங்கினாளே. அவள் நலமா?
சாஸ்திரங்களுக்கும் வேதங்களுக்கும் ஆதிகாரணன் எனவும், அந்தக்கரணங்களில் ஒன்றான மனத்தின் தேவதையென்றும் புகழப்படும் அநிருத்தன் நலமா?
(அந்தக்கரணங்கள் நான்கு
சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் ஆகியவை.
அவற்றின் தேவதைகள் முறையே
வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர்)
உத்தவரே!
க்ருஷ்ணனை ஹ்ருதய கமலத்தில் தாங்கி உடலைத் துரும்பென மதிப்பவர்களான ஹ்ருதீகன், சத்யபாமாவின் மகனான சாருதோஷ்ணன், கதன் ஆகியோர் நலமா?
தர்மபுத்ரன் பற்றி ஏதாவது தெரியுமா?
க்ருஷ்ணனும் அர்ஜுனனும் அவரது இரு கரங்கள் போல் இருப்பார்களே. அவர் நல்லாட்சி புரிகிறாரா?
பீமன் போர்க்களத்திற்குத் தேரிலேறித்தான் வருவான். யுத்தம் சற்று உக்ரமடைந்ததும் சினத்தினால் கீழே குதித்து கதையைச் சுழற்ற ஆரம்பிப்பானே. அவனது சினம் குறைந்திருக்கிறதா?
காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனன், தன்னைச் சார்ந்தவர் அனைவர்க்கும் நற்பெயர் வாங்கித் தருபவன். வேடனாக வந்த பரமேஸ்வரனையே பாணங்களால் மூடி மறைத்தவனாயிற்றே. அதனால் மகிழ்ந்து அவர் பாசுபதாஸ்திரம் கொடுத்தாரே..
இப்போதுதான் பகைவர்கள் அழிந்து விட்டார்களே. அவன் சந்தோஷமாக இருக்கிறானா?
நகுல சகாதேவர்கள் மாத்ரிக்குப் பிறந்தார்கள். ஆனால், அவர்களைத் தன் பிள்ளைகள் போலவே வளர்த்தாளே குந்தி. மற்ற மூன்று பாண்டவர்களும் மிகுந்த அன்புடன் அவர்களைக் காத்தார்கள்.
அவர்கள் இருவரும் நலமா?
குந்தியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அளவுக்கதிகமான கஷ்டங்களை அனுபவித்த அவள் இப்போதாவது மகிழ்ச்சியாய் இருக்கிறாளா?
கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் என் அண்ணன் த்ருதராஷ்ட்ரனைப் பற்றித்தான் மிகுந்த கவலையாய் இருக்கிறது.
பாண்டுவிற்கு அவர் செய்யும் துரோகங்கள் இன்னும் முடியவில்லை.
ஆனால் பகவான்தானே அத்தனைபேரையும் ஆட்டிப்படைக்கிறான். எனவே, வருந்துவதில் அர்த்தமில்லை.
கௌரவர்கள் பகவானையே அவமதித்தனரே.
க்ருஷ்ணனைப் பற்றிய ஏதாவதொரு செய்தியையாவது கூறுங்கள் உத்தவரே..
க்ருஷ்ணனின் புகழைக் கேட்டாலே போதும். ஒருவர் அத்தனை சங்கடங்களிலிருந்தும் விடுபடுவார்.
இறைவனான அவர், மானுட வேடம் தரித்து யதுகுலத்தில் திருத்தோற்றம் கொண்டார்.
விதுரர் மிகுந்த படபடப்புடன் பேசிக்கொண்டே போனார்.
உத்தவரோ தனக்கும் க்ருஷ்ணனுக்கும் இடையே இருந்த நட்பையும், இப்போது பிரிவாற்றாமையையும் நினைத்து தன்வசமிழந்து பதில் கூறவும் சக்தியின்றி,
கண்ணீர் உகுத்தபடி ஒரு முஹூர்த்த காலம் பேசாமல் இருந்தார்.
அவர் ஐந்து வயதுக் குழந்தை யாக இருந்தபோது குழந்தை விளையாட்டில் ஸ்ரீ க்ருஷ்ணனின் உருவத்தை பொம்மையாகச் செய்து அதைப் பூஜிப்பதும், பேசுவதுமாக விளையாடுவார்.
உணவு உண்ண அன்னை அழைக்கும் குரல் கூட காதில் விழாது.
இப்போது வயதாகிவிட்டது. கண்ணனுடனேயே பலகாலம் இருந்தவருக்கு பேச்சு எப்படி எழும்?
அவரது கண்கள் மூடியிருந்தன. மெய்சிலிர்த்தது.
ஆறாகக் கண்ணீர் பெருகியவண்ணம் இருந்தது.
அவரது நிலைமையைக் கண்ட விதுரர், இவரை தரிசித்ததே பெரும் பாக்யம் என்று எண்ணிக்கொண்டார்.
அவராக அந்நிலையிலிருந்து விடுபடும்வரை நிலவைக் காண ஏங்கும் சகோரபக்ஷிபோல் பொறுமையாகக் காத்திருந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 25, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 52 விதுரரின் தீர்த்தயாத்திரை


தீர்த்த யாத்திரை சென்ற விதுரர், மதுரா, ப்ருந்தாவனம், அதன் உபவனங்கள், கோவர்தனம், யமுனை, கங்கை, இன்னும் பல புண்ய நதிகள், நாராயண ஸரஸ், போன்ற பல இடங்களுக்கு தனி ஒருவராகவே யாத்திரை சென்றார்.
உயிர்வாழத் தேவையான மிதமான, ஸாத்வீகமான, சுத்தமான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
ஒவ்வொரு நதியிலும் தனித்தனியாக நீராடி, விரிப்பு ஏதுமின்றி நிலத்தில் படுத்தார். மிக மெல்லிய தேகமுடையவராகி அவரைச் சேர்ந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு மரவுரியுடுத்து, விரதங்களை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார்.
பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு ப்ரபாஸ தீர்த்தத்திற்குத் திரும்புவதற்கு வெகு காலமாயிற்று.
இதற்கிடையில் பாரத யுத்தம் முடிந்து தர்மபுத்ரர் நேர்மையுடன் நல்லாட்சி புரிந்துவந்தார்.
பாரதப்போரில் நிகழ்ந்தவை அனைத்தையும் கேள்வியுற்ற விதுரர் வருந்தியவராக மௌனவிரதமேற்று ஸரஸ்வதி நதி மேற்கு நோக்கிப் பாயுமிடத்தை அடைந்தார்.
அங்கு
திரிதர், உசனஸ், மனு, ப்ருது, அக்னி அஸிதர், வாயு, ஸுதாசர், கோ, குகன், சிராத்ததேவர் ஆகியோரின் பெயர்களில் இருந்த புண்ய தீர்த்தங்களில் நீராடி, இறந்துபோன உறவினர்களுக்காக நீர்க்கடன் செய்தார்.
ஸரஸ்வதி நதி தீரத்தில் மஹரிஷிகளாலும், தேவர்களாலும் நிறுவப்பட்ட பற்பல திருக்கோவில்கள் இருந்தன. எல்லாவற்றையும் தரிசனம் செய்தார் விதுரர்.
அக்கோவில்களின் கோபுர கலசங்களில் சுதர்சன சக்கர அடையாளங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் கண்ணன் நினைவு வந்தது.
அங்கிருந்து கிளம்பி, ஸௌராஷ்டிரம், சௌவீரம், மத்ஸ்யம், குருஜாங்காலம் ஆகிய தேசங்களைத்தாண்டி யமுனைக்கரையை அடைந்தார்.
அங்கு பரம பாகவதரான உத்தவரைச் சந்தித்தார்.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே பரமபக்தர் என்று தெரிந்துவிட்டது.
பாம்பின் கால் பாம்பறியும்..உத்தம பக்தர்களை அத்தகையோரே அறிவர் அன்றோ..
துவாரகையில் கண்ணனோடு அல்லவா இருப்பார். இங்கு வந்திருப்பவர் உத்தவர் மாதிரி இருக்கிறதே..
உத்தவரும் விதுரர் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறார். பரம பக்தர் என்று நன்றாய்த் தெரிந்தது. ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் ஒத்துப்போகாத அளவிற்கு விதுரர் உரு மாறியிருந்தார்.
தான் கண்ணனின் மந்திரி என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் மலர்ந்திரு க்கும் உத்தவன் முகமோ வாடிப்போயிருந்தது. ஏதோ பெயருக்கு உயிரைச் சுமந்தவரைப்போல் காணப்பட்டார்.
பக்தர்களின் ஹ்ருதயம் ஒன்றே.. ஏனெனில் அவர்கள் ஹ்ருதயத்தில் குடியிருப்பவன் ஒருவன்தானே..அதனால் ஹ்ருதயத்திலும் பேதம் இல்லை.
அருகில் வந்ததும், அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
கண்ணனையே நேரில் கண்டவர்போல் அகமகிழ்ந்துபோனார்கள் இருவரும்..
ஆரத்தழுவிக்கொண்டு பேச்சற்ற நிலையில் தவித்தார்கள் இருவரும். ஒருவாறாக சிறிது நேரம் கழித்து விதுரர், கேள்விமழை பொழிந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, July 24, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 51 யார் வீடு?

சௌனகர் கேட்டார்
ஸூதரே, பரம பக்தரான விதுரர் யுத்தத்தைக் காண சகியாமல், தீர்த்த யாத்திரை சென்றாராமே.
அப்போது மைத்ரேய மஹரிஷியை சந்தித்தார் என்று கூறினீர்களே.
இருவருக்கும் பகவத் விஷயமாக ஏதாவது உரையாடல் நடந்ததா?
ஒரே தெய்வத்தை வழிபடும் இரு பக்தர்களோ, ஒரே குருவை அடைந்த உண்மையான சீடர்களோ சந்தித்தால் வேறென்ன பேசுவார்கள்?
அவர்களது தெய்வத்தைப் பற்றியே அவர்களது பேச்சு இருக்கும்.
அவர்களின் உரையாடல் எங்கு நடந்தது?
விதுரர் எதற்காக சுற்றத்தை வெறுத்துக் கிளம்பினார்?
ஸூதர் சொன்னார்
இதே கேள்வியை பரிக்ஷித்தும் கேட்டார். அதற்கு
ஸ்ரீ சுகர் கூறிய பதிலையே உங்களுக்குச் சொல்கிறேன்.

ஸர்வேஸ்வரனான இறைவன் ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவ தூதனாக அஸ்தினாபுரம் சென்றான்.
அப்போது துரியோதனன் என் வீட்டிலோ அல்லது விருந்தினர் மாளிகையிலோ தங்கலாமே என்றழைத்தான்.
தூது வந்த இடத்தில் கை நனைக்கலாது என்று சொல்லிவிட்டான் கண்ணன்.
த்ரௌபதியை மானபங்கம் செய்யும் சமயத்தில் வாளாவிருந்ததால், பீஷ்மர், த்ரோணர் போன்றவர்கள் மீதும் அவனுக்கு வருத்தம் இருந்தது.
யார் வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக்கொண்டு ராஜவீதியில் இறங்கி நடந்தான்.
பகவான் வீதியில் நடப்பதைக்கண்டு அவன் பின்னால் அனைவரும் வந்தனர். முதலில் வெள்ளை வெளேரென்ற பளிங்கு மாளைகை வந்ததும்
இது யார் வீடு?
பீஷ்மர் முன் வந்து என் வீடுதான் கண்ணா.. உள்ளே வா என்றழைத்தார்.
பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்தான்.
அடுத்து வந்த மாளிகையை துரோணர் தன் வீடென்று அழைத்தார்.
கர்ணனுக்கும் ஆசை.
அவனும் தன் மாளிகையைக் கடக்கும்போது கூப்பிட்டுப்பார்த்தான்.
கண்ணன் பிறகு வருகிறேன் என்றதும் திட்டினான்.
வரிசையாக ஒவ்வொரு வீட்டையும் கடந்து சென்று கொண்டே இருந்தான்.
எங்கேதான் தங்கப்போகிறான் என்ற ஆவல் அனைவர்க்கும் மேலிட்டது.
அப்போது மிகச் சாதாரணமாக அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் ஒரு பழைய ஓட்டுவீடு வந்தது.
இது யார் வீடு?
இது உன்னுடைய வீடுதான் கண்ணா..
என்றார் விதுரர்.
அந்த வீடு கண்ணனுக்கு கோகுலத்து வீட்டை நினைவு படுத்தியது போலும்.
மிகவும் மகிழ்ந்துபோன கண்ணன்,
ஆ.. என் அம்மா யசோதைக்குத்தான் என்மீது எவ்வளவு அன்பு. நான் எங்கு போனாலும் அவ்விடத்தில் நான் வசிக்க ஒரு வீடு கட்டி வைத்திருக்கிறாளே..
நான் இன்று இங்கேயே தங்குகிறேன்.
என்று சொல்லி அவனது சொந்த வீட்டிற்குள் நுழைவதுபோல் உள்ளே போனான்.
குந்தியும் விதுரர் வீட்டில்தான் தங்கியிருந்தாள்.
அப்படிப்பட்ட பக்தர் விதுரர் பகவான் எழுந்தருளிய அந்த வீட்டை விட்டுச் சென்றாரே..
அவர் மைத்ரேயரைச் சந்தித்துப் பேசிய உரையாடலை சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள்.
அந்த உரையாடலைக் கூறுங்கள் என்றார் பரிக்ஷித்.

ஸ்ரீ சுகர் சொன்னார்
மறுநாள் பகவான் அவைக்குச் சென்றபோது, அவன் கூறிய நல்லுரைகள் அனைத்தும் குருடனான த்ருதராஷ்ட்ரனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
அப்போது விதுரர் எழுந்து பல நல்லுரைகளைக் கூறினார்.
அவையே விதுர நீதி என்று பெரியோரால் போற்றப்படுகிறது.
விதுரர் சொன்னார்,
அண்ணா!
துரியோதனன் பிறந்தபோதே உங்களுக்குக் கூறினேன்.
இவன் கலிபுருஷனின் அவதாரம். இவனால் நாடு கெட்டுப்போகும்.
குலம் விளங்க ஒருவனைத் தள்ளலாம். கிராமம் விளங்க ஒரு குடும்பத்தைத் தள்ளலாம்.
நாடு விளங்க ஒரு கிராமத்தையே அழிக்கலாம். ஆத்மாவை உணர உலகையே துறக்கலாம்.
துரியோதனன் மீது புத்ரபாசம் வேண்டாம். நாடு கடத்துங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்று சொன்னேன்.
இவனை இப்போதே விலக்கிவிட்டு கண்ணன் சொல்வதைக் கேளுங்கள் என்றார்.
உடனே துரியோதனன், வெகுண்டு எழுந்து விதுரரைப் பார்த்து ஆத்திரத்துடன்,
வேலைக்காரியின் மகனான இவனை யார் சபைக்கு அழைத்தது? நாம் போடும் சோற்றை உண்டு நமக்கெதிராகப் பேசுகிறான். இவனை நாடு கடத்துங்கள் என்று கத்தினான்.
அதைக் கேட்டு த்ருதராஷ்ட்ரன் பேசாமல் இருக்கவே, விதுரர், இதுவும் பகவானின் லீலை என்று உணர்ந்து, சிறிதும் கலக்கமின்றி, கோட்டை வாசலில் வில்லை வைத்துவிட்டு‌ அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினார். கௌரவர்கள் செய்த புண்ணியங்களின் பலன் அன்றே தீர்ந்தது.
தன் ப்ரியனான பகவான் எங்கெல்லாம் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியிருக்கிறாரோ அங்கெல்லாம் செல்ல மனம் கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார் விதுரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 23, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம்- 50 படைப்பின் முறை


தனித்து நீரில் யோகசயனத்தில் இருந்த விராட்புருஷன் விழித்துக் கொண்டதும், ஒவ்வொரு அங்கமும் செயல்படுவதற்கேற்ப அவற்றின் அதிஷ்டான தேவதைகளும், புலன்களின் சக்திகளும் உயிர்பெறுகின்றன.
அவர் பார்க்க நினைத்தபோது சூரியன் தோன்றினான். அவரே கண்ணின் அதிஷ்டான தேவதை.
கரங்களை அசைத்தபோது அவற்றின் அதிஷ்டான தேவதையான இந்திரன் தோன்றினான்.
மாயை பற்றி நினைத்தபோது இதயமும் அதை ஒட்டி மனமும், அதன் அதிஷ்டான தேவதையான சந்திரனும் தோன்றின.
இவ்வாறு ஒவ்வொரு தேவதையாக விராட்புருஷனின் செயல்பாடுகளுக்கேற்பத் தோன்றின.
இவ்வுருவத்திற்கப்பாலும் இறைவன் சூக்ஷ்ம ரூபமாக நீக்கமற நிறைந்திருக்கிறான்.
அது சொல்லுக்கெட்டாதது. மனத்திற்கும் எட்டாதது.
இறைவனின் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்கள் இரண்டுமே மாயையின் தோற்றங்கள்.
உண்மையில் இறைவன் தானாக எச்செயலும் செய்வதில்லை. மாயையைக்கொண்டே அத்தனை செயல்களையும் நிகழ்த்துகிறான்.
ப்ரும்மா விராஜன் என்ற உருவிலும், வாச்யன் (சொல்லப்படுபவன்), வாசகன் (சொல்பவன்) என்ற உருவிலும் விளங்குகிறார். அதாவது சொல், பொருள் இரண்டு உருவிலும் இருக்கிறார்.
இன்னும் பல திருமேனிகளையும்,திருப் பெயர்களையும் கொள்கிறார்.
மரீசி முதலிய ப்ரஜாபதிகள், மனுக்கள், தேவர்கள், ரிஷிகள், பித்ரு தேவதைகள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், அசுரர்கள், குஹ்யகர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கிம்புருஷர்கள், உரகர்கள், மாத்ருதேவதைகள், அரக்கர்கள், பிசாசர்கள், ப்ரேதங்கள், விநாயகர்கள், கூஷ்மாண்டர்கள், உன்மாதர்கள், வேதாளர்கள், யாதுதானர்கள், கிரகங்கள், பறவைகள், விலங்குகள், பசுக்கள், மரங்கள், செடிகொடிகள், மலைகள், ஊர்வன, அசைவன, அசையாதன, கருவில் தோன்றுவன, முட்டையிலிருந்து வெளிவருவன, அழுக்கிலிருந்து தோன்றும் புழுக்கள், நீர், நிலம் ஆகாயத்தில் வசிப்பன அனைத்தையும் ப்ரும்மாவே படைக்கிறார்.
இவற்றில் சான்றோர்களிடம் ஸத்வ குணமும், தீயோர்களிடம் தமோ குணமும், இரண்டும்கெட்டு நடுவிலிருப்போரிடம் குணக்கலப்பும் இருப்பது அவரவரின் பாவ புண்ய கர்மாக்களினாலேயே ஆகும்.
ஸத்வ, ரஜஸ், தமஸ் அடிப்படையில் மூன்று இடங்கள் உள்ளன.
அவை
தேவர்கள் அனுபவிக்கும் ஸ்வர்கம்,
மனிதர் அனுபவிக்கும், செல்வம் மக்கள் முதலியவை,
நரகம்
ஆகியவை. இவற்றிலும் குணபேதங்களால் பிரிவுகள் உண்டு.
இறைவனே உலகைக் காக்க அறமே உருவெடுத்த மஹா விஷ்ணுவாகவும், மீனம், வராகம் போன்றவையாகவும், ராமன் கிருஷ்ணன் போன்ற மானுட வடிவிலும் அவதாரம் செய்கிறார்.
இறைவன் ப்ரளய காலத்தில் காலாக்னி ருத்ர ரூபியாகவும் இருந்து தம்மிடம் தோன்றிய ப்ரபஞ்சத்தைத் தானே சிதறடிக்கிறார்.
இப்படியெல்லாம் சொன்னபோதிலும், வேதங்களாலும், சான்றோர்களாலும் இறைவனின் மகிமைகளையும், ஸ்வரூபத்தையும் முழுதும் கூற இயல்வதில்லை.
பகவானே எல்லாவற்றையும் செய்வதாகக் கூறும் வேதங்கள், பின்பு, அவையனைத்தும் மாயையின் செயல், பகவானிடம் ஏற்றிச் சொல்லப்பட்டது என்கின்றன.
கல்பம் என்பது இருவிதங்கள்.
ஒன்று ப்ரும்மாவின் ஆயுள்காலம் முடியும்வரை உள்ள மஹாகல்பம்.
இன்னொன்று ப்ரும்மாவின் பகல்பொழுது முடியும்வரை உள்ள அவாந்தர கல்பம்.
இதுவரை சொன்னது இரண்டு கல்பங்களின் துவக்கத்திலும் நிகழ்பவை.
எல்லா கல்பங்களிலும் படைப்பு என்பது ஒரே மாதிரிதான் நிகழும்.
மஹாகல்பத்தில் ப்ரக்ருதி, மஹத் என்பவற்றிலிருந்து துவங்குகிறது.
அவாந்தர கல்பத்தில் ஜீவராசிகளிலிருந்து படைப்பு துவங்குகிறது.
ஒன்று புதிதாகத் துவங்குவது. மற்றொன்று திருத்தியமைப்பது.
இதன் பின் சௌனகர் விதுரரின் தீர்த்த யாத்திரை பற்றி வினவுகிறார்.
இரண்டாவது ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 49 புராண லக்ஷணங்கள்

படைப்பின் ரஹசியங்களையும் பகவான் உபதேசித்த சதுஸ்லோகீ பாகவதத்தையும் நாரதர்க்கு எடுத்துச் சொன்னார் ப்ரும்மா. 
நாரதர் அவற்றை வியாஸருக்குக் கூறினார்.
ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்..

அரசே! புராணம் என்பது பத்து லக்ஷணங்கள் கொண்டது. அவை அத்தனையும் கொண்டது ஸ்ரீமத் பாகவதம்.
ஸர்கம், விஸர்கம், ஸ்தானம், போஷணம், ஊதிகள், மன்வந்தரங்கள், பகவத் கதைகள், நிரோதம், முக்தி, ஆஸ்ரயம் ஆகியவையே பத்து லக்ஷணங்களாகும்.

பகவானின் நியமனத்தால் ஏற்பட்ட முக்குண பரிமாணங்களால் தோன்றிய பஞ்சபூதங்கள், சப்தம் போன்ற தன்மாத்திரைகள், ஐம்புலன்கள், அஹங்காரம், மஹத் முதலியவை பற்றிக்கூறுவது ஸர்கம்.

விராட்புருஷனிடமிருந்து தோன்றிய ப்ரும்மதேவரின் படைப்புகளைப் பற்றிக்கூறுவது விஸர்கம்.

ஜீவன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் இறைவனின் பெருமைகளே ஸ்தானம் ஆகும்.

தன் பக்தர்களிடம் இறைவன் காட்டும் கருணையே போஷணம் ஆகும்.

அன்புடன் மக்களைக் காக்கும் தூய தர்மத்தைப் பின்பற்றும் மனு என்னும் அரசர்களைப் பற்றிக்கூறுவது மன்வந்தரக் கதைகள்.

ஜீவனைக் கர்மத்தளைகளில் மாட்டிவிடும் வாஸனைகளைப் பற்றிக்கூறுவது ஊதிகள் ஆகும்.

பகவானின் பற்பல திருத்தோற்றங்களையும், பக்தர்களின் கதைகளையும் கூறுவது ஈசானு கதைகள் அல்லது பகவத் கதைகள் ஆகும்.

இறைவன் யோகநித்ரை புரியும்போது, ஜீவன் உபாதிகளுடனேயே இறைவனோடு கலப்பது நிரோதம்
நான் என்ற அஹங்காரத்தைத் துறப்பது முக்தி. அதுவும் விளக்கப்படுகிறது.

அசைவனவும், அசையாதனவும் தோன்றுவதற்கு ஆதாரமான இறைவனிடமே அவையனைத்தும் லயமாகின்றன. இதுவே ஆஸ்ரயம். இதை விளக்குவதற்கு ஏராளமான உதாரணங்களும், அனுபவக்கதைகளும் கூறப்படுகின்றன.

ஐம்பொறிகளில் எதை எடுத்துக் கொண்டாலும், அதன் உருவம், அதன் அதிஷ்டான தேவதை, அதன் உணர்ச்சி மூன்றும் உண்டு.
அனைத்திற்கும் ஜீவன் பொதுவானது.
கண்ணை எடுத்துக்கொண்டால்
பஞ்சபூதங்களால் ஆன கோளம் ஆதி பௌதிகம்
அதன் பார்வைக்கு தேவதை சூரியன். அது ஆதி தைவிகம்.
பார்க்கும் சக்தி ஞானமே வடிவான பகவான். அது ஆத்யாமிகம்.
இம்மூன்றும் ஒரே ஜீவனுக்குள் வெளிப்படுகிறது.
இம்மூன்றிலும் ஒன்றில்லாவிடில் மற்றொன்றை நம்மால் அறிய முடியாது.
மூன்றையும் சாட்சியாக இருந்து அறிபவர் பரமாத்மா. அவரே ஆஸ்ரயன் ஆவார்.
விராட் புருஷன் ப்ரும்மாண்டத்தைப் பிளந்துகொண்டு வெளிவந்து தான் வசிக்க இடம் வேண்டி நீரைப் படைத்தார்.
விராட்புருஷனுக்கே நரன் என்ற பெயருண்டு. அவரிடமிருந்து தோன்றியதால் நீருக்கு நாரம் என்ற காரணப்பெயர் வந்தது.
நீரிலேயே ஆயிரம் வருஷங்கள் குடியிருந்ததால் நாராயணன் என்று பெயர் வந்துவிட்டது.
பகவானின் சங்கல்பத்தாலேயே பஞ்சபூதங்கள், கர்மாக்கள், அவற்றின் கதி, அவற்றை செயல்படுத்தும் காலம், அதன் இயல்பு, இவையனைத்தையும் அனுபவிக்கும் ஜீவன் அனைவர்க்கும் செயல்படும் சக்தி கிட்டுகிறது.
பகவான் செயல்படாமல் இருப்பாராயின் இவையனைத்துமே சக்தியற்றுச் செயல்படாமல் இருக்கின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 48 சதுஸ்லோகீ பாகவதம்

தன்னை வணங்கிய ப்ரும்மதேவரின்கரங்களைப் பிடித்துக்கொண்டு பகவான் உபதேசம் செய்த நான்கு ஸ்லோகங்களும் சதுஸ்லோகீ பாகவதம் எனப்படுகின்றன.
ப்ரபஞ்சம் மற்றும் படைப்பின் ரகசியங்களைக் கூறும் அந்த ஸ்லோகங்கள் பின்வருமாறு.

1. ‍அஹமேவாஸமேவாக்3ரே யதா2பா4வோ யத்3 ரூபகு3ணகர்மக:|
ததை2வ தத்த்வவிக்ஞாநமஸ்து தே மத3நுக்ரஹாத்||
படைப்பிற்கு முன் நான் மட்டுமே இருந்தேன். அதுதான் என் தூய்மையான பரிபூரண நிலை.
என்னைத் தவிர ஸ்தூலமாகவோ, ஸூக்ஷ்மமாகவோ வேறெதுவுமில்லை. படைப்பின் உருவமாகத் தோன்றும் அனைத்தும் நானே.
ப்ரபஞ்சம் ப்ரளயத்தில் லயமடைந்தபின் நானே தனித்திருக்கிறேன்.

2. ருதோ(அ)ர்த2ம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத சாத்மநி |
தத்வித்3யாதா3த்மநோ மாயாம் யதா2பா4ஸோ யதா மம||
ஒரு பொருளின் பிம்பம் என்பது உண்மையில் அந்தப் பொருள் அல்ல. அது வெறும் பிம்பமே.
பரமாத்மாவான என்னைத் தவிர வேறொரு பொருள் இல்லை.
என் ப்ரதிபிம்பமாகத் தோன்றும் பொருள்கள் நிஜம் இல்லை.
ராகு என்று ஒரு கிரகம் ஆகாயத்தில் காணப்படாத போதிலும் உண்மையில் இருப்பதுபோல், நான் யாராலும் காணப்படாவிடினும் உண்மையில் நான் மட்டுமே இருக்கிறேன்.
இருக்கும் பொருளை மறைப்பதும், இல்லாத பொருளைக் காட்டுவதுமாக, என் மாயை இரண்டு விதமாக செயல்படுகிறது.

3. யதா2 மஹாந்தி பூ4தாநி பூதேஷூச்சாவயேஷ்வநு |
ப்ரவிஷ்டாந்யப்ரவிஷ்டாநி ததா2 தேஷு ந தேஷ்வஹம் ||
ஆகாயம் முதலிய ஐம்பெரும்பூதங்கள் எல்லா பொருள்களிலும் உள் நிரம்பியுள்ளன. ஆனால், அப்பொருள்கள் தோன்றுமுன்னேயும் பஞ்சபூதங்களும் இருந்தன. எனவே உட்புகவில்லை என்றும் கூறலாம்.
இருவிதமாகவும் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.
அதுபோல்,
அனைத்துயிர்களிலும் ஆன்மாவாக உள்நுழைந்துள்ளவன் நானே.
ஆனால், உடல்களில் மட்டுமின்றி அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்தும் இருக்கிறேன்.
உதாரணத்திற்கு,
மண்ணைக் கொண்டு சுவற்றைக் கட்டுகிறார்கள். சுவற்றில் மண் இருக்கிறது.
மண் இல்லாமல் சுவர் இல்லை. ஆனால், சுவர் இல்லாமலும் மண் உண்டு.

4. ஏதாவதே3வ ஜி க்ஞாஸ்யம் தத்த்வஜிக்ஞாஸுநாssத்மந:|
அந்வயவ்யதிரேகாப்4யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா3 ||
உலகியல் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் இது ப்ரும்மமல்ல இது ப்ரும்மமல்ல என்று எதிர்மறைப் போக்கில் தள்ளிக்கொண்டு வருவதாலும்,
அவற்றின் ஆன்மாவாக விளங்குவதால் இது ப்ரும்மமே என்ற நேர்மறைப்போக்கிலும்
அறியப்படுபவன் நான் ஒருவனே.
அனைத்தையும் கடந்தும், உள்நுழைந்து வியாபித்தும்
இருப்பவன் இறைவன் ஒருவனே.
பரமாத்மாவின் உண்மைத் தத்துவம் இதுவொன்றே.

இக்கொள்கையை ஒருமனத்துடன் பற்றிக்கொள். உனக்கு எப்போதும் எவ்விதமான படைப்புகளாலும் மயக்கம் ஏற்படாது
என்று கூறி ப்ரும்மதேவரை ஆசீர்வதித்துவிட்டு தன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டார் இறைவன்.
அந்த ஸ்ரீ ஹரியை வணங்கிவிட்டு தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார் ப்ரும்மதேவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..