உலகின் பேரரசராக அறிவிக்கப்பட்டார் தர்மபுத்திரர். கண்ணன் அங்கு சிலகாலம் தங்கியிருந்தான். பின்னர் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று துவாரகை திரும்பினான்.
ஹே! பரீக்ஷித்! இந்த ராஜஸூய யாகத்தைப் புகழ்ந்தவண்ணம் அனைத்து அரசர்களும் ஊர் திரும்ப துரியோதனனின் மனம் மட்டும் பொறாமைத்தீயால் வெந்துகொண்டிருந்தது.
ஜராசந்தனிடமிருந்து அரசர்கள் விடுபட்ட கதை, சிசுபால வதம் மற்றும் ராஜசூயயாகம் பற்றிய விஷயங்களைக் கேட்பவர்கள் அனைத்துப் பாவங்களினின்றும் விடுபடுவர். என்றார் ஸ்ரீ சுகர்.
கவனமாகக் கதை கேட்ட பரீக்ஷித் கேள்வி கேட்டான். அனைவரும் புகழும் வண்ணம் எவ்வாறு யாகம் சிறப்புற்றிருந்தது? துரியோதனனுக்கு மட்டும் ஏன் தீய எண்ணம்? என்றான்.
ஸ்ரீ சுகர் கூறலானார்.
நன்று கேட்டாய் அரசனே! ராஜ சூய வேள்வியில் தர்மபுத்திரரின் உறவினர் அனைவரும் ஆளுக்கொரு கைங்கர்யத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றினர். பீமன் சமையலறையின் பொறுப்பை ஏற்றான். துரியோதனன் பொக்கிஷ அதிகாரியாகப் பணியேற்றுக்கொண்டான். சகாதேவன் பெரியோர்களை உபசரிக்கும் சேவையை ஏற்றான். நகுலன் யாகத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் சேகரித்துத் தரும் பொறுப்பை ஏற்றான். அர்ஜுனன் வந்திருந்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பை ஏற்றான். கண்ணன் வந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் பாதபூஜை செய்யும் பொறுப்பை ஏற்றான். த்ரௌபதி அன்னமிடும் வேலையை ஏற்றாள். தானங்கள் செய்யும் பொறுப்பு கர்ணனிடம் கொடுக்கப்பட்டது. ஸத்யகி, விகர்ணன், ஹார்திக்யன், விதுரர், பூரிசிரவஸ், ஸந்தர்தனன் ஆகியோர் ஆளுக்கொரு பணியை ஏற்றுச் செய்தனர்.
அனைவரும் யாகம் முடியும் வரை இன்முகமும், இன்சொல்லும் கூடியவர்களாய் விளங்கினர்.
சிசுபாலன் பகவானை அடைந்த பின்பு அனைவரும் கங்கைக்குச் சென்று அவபிருத ஸ்நானம் செய்தனர்.
அந்த ஊர்வலத்தில் அனைத்து மங்கல வாத்யங்களும் முழங்கிக்கொண்டு முன் செல்ல, காயகர்கள் பாட, நர்த்தகிகள் ஆடிக்கொண்டு சென்றனர்.
வரவேற்பு தோரணங்கள், யானைகள், குதிரைகள், படைகள், நன்கு அலங்கரித்துக் கொண்ட மக்கள், அனைத்து தேசத்தரசர்கள் அனைவரும் தர்மபுத்திரரின் பின்னால் அணிவகுக்க தேவர்களும் கந்தர்வர்களும் பூமாரி பெய்ய, அவ்வூர்வலம் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது.
சந்தனம், மாலைகள், நீர், வெண்ணெய், பால் ஆகியவற்றை ஒருவர்மேல் ஒருவர் பூசிக்கொண்டும் தெளித்துக்கொண்டு விளையாடிக்கொண்டே சென்றனர்.
இந்திரப்ரஸ்தத்தின் அந்தப்புரத்து ராணிகள் அனைவரும் தனித்தனிப் பல்லக்கில் வர, அவர்கள் மாமன் மகனான கண்ணனின் மனைவிகளால் நீராட்டப்பட்டனர்.
அரச குலத்தோர் ஜலக்ரீடை செய்து விளையாடினர்.
தர்மபுத்திரர் திரௌபதியுடன் தங்க ரதத்தில் ஏறி யாகமே உருக்கொண்டு வருவதுபோல் வந்தார்.
ருத்விக்குகள் அவபிருத ஸ்நானத்திற்கான சடங்குகளை செய்தபின் இருவரையும் கங்கையில் நீராட்டினர்.
அவர்களைப் பின்பற்றி அனைவரும் நீராடினர். பின்னர் அவர்கள் இருவரும் புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிந்துகொண்டு ருத்விக்குகளுக்கும் அந்தணர்களுக்கும் பல தானங்களை வழங்கி கௌரவித்தனர். பின்னர் அனைவரும் உபசரிக்கப்பட்டு தர்மபுத்திரரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். யாகத்தின் சிறப்பை எவ்வளவு பேசினாலும் அவர்களுக்குத் த்ருப்தி ஏற்படவில்லை.
மற்ற அரசர்களுக்கு விடை கொடுத்த தர்ம புத்திரர் உற்றார் உறவினரையும் கண்ணனையும் பிரிய மனமின்றி சிலகாலம் தங்குமாறு வேண்டினார்.
கண்ணன் அவரது அன்பு வேண்டுகோளைத் தட்ட இயலாமல் தன் மனைவி, மக்கள், படைகள் அனைவரையும் துவாரகைக்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் தங்கினான்.
துரியோதனனோ யாகத்தின் சிறப்பை எண்ணி எண்ணி பொறாமைப் பட்டான்.
திரௌபதியின் அழகு, பொறுமை, அவள் கணவர்களை உபசரிக்கும் விதம், மற்றவர்களிடம் அன்புடன் பழகும் பாங்கு ஆகியவற்றைக் கண்டு காமத்தால் கலங்கினான்.
ஒரு நாள் தன் அடிமைகளுக்குக் கட்டளையிட்டுக்கொண்டே சபையினுள் வந்தான். அந்தச் சபை காண்டவ வனத் தீயிலிருந்து தம் இனத்தைக் காத்ததற்காக அசுரச் சிற்பியான மயன் நிர்மாணித்துக் கொடுத்ததாகும். பலவிதமான மாயத் தோற்றங்கள் கொண்டது. நீருள்ள இடம் பளிங்குத் தரை போலவும், பளிங்குத்தரை நீர் தளும்புவது போலவும் தோற்றம் காட்டுவது. கவனிக்காமல் பேசிக்கொண்டே விடுவிடுவென்று நடந்த துரியோதனன் தரை எது என்றறியாமல் குழம்பி நீரில் காலை வைத்து தலைகுப்புற விழுந்தான்.
அதைக் கண்டு தர்மபுத்திரர் அனைவரையும் எவ்வளவோ தடுத்தும் அனைவரும் சிரித்துவிட்டனர்.
கண்ணனோ அனைத்தையும் புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். யுகமுடிவிற்கான தன் வேலையைத் துவங்கிவிட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment