Friday, November 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 159 ரிஷபதேவர்

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷீத்! நாபியின் மகன் பிறக்கும்போதே திருவடிகளில் தாமரை, அங்குசம் போன்ற ரேகைகளோடு பிறந்தார்.

அனைவரிடமும் பட்சபாதமின்மை, அடக்கம், பற்றற்ற நிலை, எல்லையற்ற திறன், பெரும்புகழ், தேஜஸ், உடல் வலிமை, செல்வம் வீரம் ஆகிய அனைத்து நற்குணங்களையும் கொண்ட அக்குழந்தைக்கு உயர்ந்தவன் என்னும் பொருள்படும்படியாக ரிஷபன் என்று பெயர் வைத்தான் நாபி.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் குழந்தையின் மேன்மை கண்டு அமைச்சர்கள், நகர ப்ரதானிகள், மக்கள்,‌ அந்தணர்கள் அனைவரும் அவனை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த விருப்பம் கொண்டனர்.

ரிஷபனின் உயர்வு கண்டு பொறாமை கொண்ட இந்திரன் மழையை நிறுத்தினான். அவர் இந்திரனின் அறியாமையைக் கண்டு நகைத்துவிட்டு, தன் யோக சக்தியால் அஜநாபம் என்ற தன் தேசத்தில் மழை பெய்வித்தார்.

நாபி தன் மகனின் அறிவையும் திறமையையும் கண்டு மாயையினால் மயங்கி, எப்போதும் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே இருந்தான்.

தகுந்த காலம் வந்ததும் ரிஷபனுக்கு முடி சூட்டிவிட்டு அந்தணர்களின் மேற்பார்வையில் ஒப்படைத்துவிட்டு, தன் மனைவியான மேருதேவியுடன் வனம் சென்றான்.

அங்கு அஹிம்சை நெறி ஏற்று, தவயோகத்தாலும், தியானத்தாலும் நர நாராயண மூர்த்திகளாக விளங்கும் வாசுதேவனை ஆராதித்து சில நாள்களிலேயே ஸாயுஜ்ய பதவியை அடைந்தான்.

பகவான் ரிஷபன் தன் தேசமான அஜநாப வர்ஷத்தைக் கர்மானுஷ்டானங்களுக்கான தேசமாகக் கருதினார். உதாரணமாக இருக்கவேண்டி சிலகாலம் உலக வழக்கை ஒட்டி, குருகுல வாசம் செய்தார்.

குருவுக்கு தக்ஷிணையளித்து அவரது அனுமதி பெற்று இல்லறம்‌ ஏற்றார். இந்திரனின் மகளான ஜெயந்தியை மணந்து தன்னையொத்த நூறு பிள்ளைகள் பெற்றார்.

அவர்களில் மூத்தவனான பரதன் சிறந்த யோக புருஷன் ஆவான். அவனது பெயரால் இந்த அஜநாப வர்ஷம் பாரதவர்ஷம் என்றழைக்கப்பட்டது.

ப என்பது ஞானியைக்‌குறிக்கும். ரத - என்பது வழிநடத்திச் செல்லுதல்.
ஞானியரால் வழிநடத்திச் செல்லப்படும் தேசம் என்பதாகவும் பாரதம் எனப்படுகிறது.

மண்ணின் தன்மையைப் பொறுத்து விளைபொருள் அமையும்.

பாரத மண்ணின் தன்மை ஞானியரைத் தோற்றுவிப்பதாகும். அதனாலேயே இம்மண்ணில் ஏராளமான ஞானிகள் தோன்றியுள்ளனர்.

மற்ற நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு மஹாத்மாக்கள் இருப்பார்கள். பாரத பூமியிலோ இமயம் முதல் குமரி வரை கிராமத்திற்கு கிராமம் யாராவது ஒரு ‌மஹாத்மாவின் பெயர் ஒலிக்கும். சிலர் ப்ரபலமாகியிருப்பார்கள். சிலர் அப்பகுதியில் அல்லது சில குடும்பங்கள் மட்டும் அறிந்தவராயிருப்பார்கள்.

பாரத பூமி ஞானியரின் பூமி என்பதாலேயே பல அரசர்கள் ஞானிகளாகவும், பகவானை நேரில் கண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களாலேயே பாரததேசம் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது.

அவர்களுக்கெல்லாம் முதல்வன் மன்னன் ரிஷபனின் புதல்வன் பரதன் ஆவார்.

பரதனின் தம்பிகள் குசாவர்த்தன், இலாவர்த்தன், ப்ரும்மாவர்த்தன், மலயர், கேது, இந்திரஸ்ப்ருக், விதர்பர், கீகடர் ஆகியோர். இவர்களின் தம்பிகள் கவி, ஹரி, அந்தரிக்ஷர், பிரபுத்தர், பிப்பலாயனர், ஆவிர்ஹோத்ரர், த்ருமிலர், சமஸர், கரபாஜனர் இவர்கள் ஒன்பது பேரும் பக்தியைப் பரப்பும் பாகவதோத்தமர்கள். இவர்களது சரித்ரம் மிகவும் தூய்மையானது. இவர்களது கதை பதினோராவது ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறபடுகிறது.

மீதி எண்பத்தோரு பேரும் தந்தை சொல் தவறாதவர்கள். வேதங்களில்‌ கூறப்படும் ச்ரௌத கர்மாக்களில் சிறந்தவர்கள். தினமும் செய்யவேண்டிய ஸத்கர்மங்களைத் தவறாமல் செய்தனர். அதன் பயனாய் மனத்தூய்மை பெற்று ப்ரும்மநிஷ்டர்களாயினர்.

பகவான் ரிஷபர் எவ்விதக்‌ கர்மத் தளைகளிலும் சிக்காதவர். ஸ்வதந்த்ரர். எனினும் சாதாரணனைப்போல் காலத்தால் அழிந்துபோன அனைத்து அறநெறிகளையும் தானே பின்பற்றி மக்களுக்கு உதாரண புருஷராய்த் திகழ்ந்தார். அனைவரிடமும் பாரபட்சமற்ற அன்பு பாராட்டினார்.

உலகியல் இன்பங்களின் முடிவில் முக்தியின்பம் பெறுவதற்கு வேண்டிய நெறிமுறைகளில் மக்களைத் தூண்டினார்.

கோமானின் வழியே குடிமக்களும் அறவழி நின்றனர்.

அந்தந்த காலங்களுக்குரிய வேள்விகளையும் கர்மாக்களையும்‌ செய்தார். நூறு வேள்விகள்‌செய்தார்.
ஒரு சமயம்‌ ப்ரும்ம நிஷ்டர்களாய் விளங்கும் தன் மகன்களுக்கும், மக்களுக்கும் சபையில் சில நல்லுபதேசங்களைக் கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 29, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 158 ரித்விக்குகள் பெற்ற வரம்

ஸ்ரீ சுகர் பரிக்ஷித்தைப் பார்த்துக் கூறினார்.

ஹே அரசனே! நாபி மன்னன் செய்த யாகத்தில் தோன்றிய பகவானைப் பார்த்து ரித்விக்குகள் துதி செய்தனர்.

இறைவா! நாங்கள் தங்கள் கட்டளைகளைச் சிரமேல் தாங்கும் அடியவர்கள். தங்களைத் திரும்ப திரும்ப பூஜிக்கிறோம். ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் எட்டாதவர் தாங்கள். மாயையின் அதிபதி. மாயைக்காட்பட்டவர்களால் தங்களது குணங்களை எப்படிப்‌ புரிந்துகொள்ள முடியும்?

தங்களது மேன்மையை எவ்வளவு வர்ணித்தாலும் அது மலையின் ஒரு சிறுதுளியைச் சொன்னதுபோல் ஆகும்.

நீங்கள் மிகவும் பெரியவர். ஆனால், மிகவும் எளிமையான தண்ணீர், இளம் தளிர், துளசி, அருகம்புல், தானிய முளைகள், கோதுமை இவற்றைக் கொண்டு பூஜித்தால் மகிழ்கிறீர்கள்.

தங்கள் மேல் அன்பு மிகுந்து காதலாகிக் கசிந்துருகுவதைத் தவிர வேறு பூஜைகளால் தங்களை மகிழ்விக்க இயலாது.

தங்களிடமிருந்து ஆனந்தம் இடைவிடாமல் பெருகிக்கொண்டிருக்கிறது.

அறிவிலிகளை ஆட்கொள்ள அறிஞர்கள் அழைக்காமலேயே அவர்களிடம் சென்று வேண்டியவற்றைச் செய்கிறார்கள். அதுபோல், நன்மை எது தீமை எதுவென்றறியாத எங்களுக்காக கருணையுள்ளத்தோடு வந்திருக்கிறீர்கள்.

ராஜரிஷியான நாபியின் வேள்வியில் எங்களுக்கும் காட்சி அளிக்கிறீர்கள். தங்கள் தரிசனத்தாலேயே எங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிட்டன. இருப்பினும் தங்களிடம்‌ ஒரு வரம் வேண்டுகிறோம்.
அறியாமல் இடறிவிழுதல், மயங்கிவிழுதல், தும்முதல், கொட்டாவி விடுதல், துன்பம்‌ நேரும்‌ சமயம், நோய்வாய்ப்படும் சமயம், மரணத் தருவாய் ஆகிய நேரங்களில் எங்களால் தங்களை அழைக்க முடியாமல்‌ போகக்கூடும்.

அப்போதும் பாவங்கள் போக்கும் தங்கள் திருநாமங்களான, க்ருஷ்ணா, கோவிந்தா, அச்சுதா, முகுந்தா போன்றவற்றை எங்கள் வாயால் எப்படியாவது உச்சரிக்குமாறு நீங்கள் செய்யவேண்டும்.

மேலும், தாங்கள் ஸர்வேஸ்வரன். விண்ணுலக இன்பமோ, முக்தியோ எது வேண்டுமானாலும் அளிப்பவர். மிகப்பெரிய வள்ளலிடம் பரம ஏழை ஒருவன் தவிடு கேட்டானாம்.
அதுபோல், அனைத்தும்‌ வழங்கத் தயாராக இருக்கும்‌ உங்களிடம் இந்த ராஜரிஷி நாபி ஒரு பிள்ளைவரம் வேண்டுகிறான்.

இவன் பெரியோர்களின் திருவடிகளுக்கு ஸேவை புரிபவன். தோல்வியற்றவன். மாயை கூட இவனது அறிவைக் கலக்க முடியாது.
எல்லாம் வல்ல தங்களிடம் பிள்ளைவரம் வேண்டுவது தவறுதான். இருப்பினும் உதார குணத்துடன் அதனைப் பொறுத்து தங்களைப் போலவே ஒரு புத்திரனை இந்த நாபிக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். என்றனர்.

கலகலவெனச் சிரித்தார் பகவான்.
இதுவா சிறிய வரம்? நீங்கள் மஹாத்மாக்கள். வாய்மையே உருவானவர்கள். என்னைப் போல் பிள்ளை வேண்டும் என்று கேட்டீர்களே. இது பெறற்கரிய வரமாயிற்றே.

எனக்கு ஒத்தார் மிக்கார் இல்லையே. இருப்பினும் அந்தணர்களான தங்கள் வாக்கு பொய்க்கக்கூடாது. எனக்குச் சமமான வேறொருவன் இல்லாததால் நானே எனது ஒரு அம்சத்துடன் இந்த நாபிக்கு புதல்வனாகப் பிறக்கிறேன். என்று கூறி மறைந்தார்.

உத்தமமான ரித்விக்குகளால் நாபிக்கு இறையே மகவாய்ப் பிறந்தது. பகவான் மேருதேவியிடத்தில் ஸத்வகுணமே வடிவானதோ என்னும்படி அழகிய திருமேனியோடு அவதாரம்‌ செய்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, November 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 157 ஆக்னீத்ரன்

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
தந்தையான ப்ரியவிரதன் புறப்பட்டுச் சென்றதும் ஆக்னீத்ரன் ஜம்புத்வீபத்தில் உள்ள மக்களைத் தன் பிள்ளைகள் போல் காத்து அறநெறி வழுவாமல் அரசாட்சி நடத்தினான்.

ஒரு சமயம்‌ ஆக்னீத்ரன் பிள்ளைப்பேறு வேண்டி தவம்‌ செய்வதற்காக மந்தரமலையின் தாழ்வரைக்குச் சென்றான். அங்கு அவன் பலகாலம் மனத்தை ஒருமுகப்படுத்தி ப்ரும்மாவை நோக்கித் தவமிருந்தான்.

ப்ரும்மா அவனது விருப்பத்தை அறிந்து தன் அவைப் பாடகியான பூர்வஸித்தி என்ற தேவமாதை அனுப்பினார்.

ஆக்னீத்ரன் தவம் செய்யும்‌ இடம் மிக அழகாக இருந்தது. அவ்விடத்தின் அழகும் பூர்வஸித்தியின் அழகும் சேர்ந்துகொண்டது. அவளிடம் மயங்கினான் ஆக்னீத்ரன்.

இருவரும் பல்லாயிரக்கணக்கன வருடங்கள் இன்பமாக வாழ்ந்தனர். சிறந்த அரசனான ஆக்னீத்ரனுக்கு பூர்வஸித்தியிடம் ஒன்பது குழந்தைகள் பிறந்தன.

நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவிருதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஶ்வன், கேதுமாலன் ஆகியோர் ஆக்னீதரனின் புதல்வர்கள்.

பூர்வஸித்தி அக்குழந்தைகளை அரண்மனையிலேயே ஆக்னீதரனுடன் விட்டுவிட்டுத் திரும்பவும் ப்ரும்மலோகத்தை அடைந்தாள்.

ஒன்பது குழந்தைகளும் தாயின் அருளால் இயற்கையிலேயே நல்ல உடற்கட்டும் பலமும் பெற்றிருந்தனர்.

ஆக்னீத்ரன் அவர்கள் பெயராலேயே ஜம்புத்வீபத்தை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து ஒப்படைத்தான்.

உலகியல் இன்பங்களைப் பல வருடங்கள் அனுபவித்த போதிலும் ஆக்னீத்ரனால் அவற்றை விடமுடியவில்லை. மனைவியைப் பெரும்‌பேறாகவே எண்ணினான்.

தான் செய்த வைதீக கர்மங்களின் பயனாக பித்ருலோகத்தை அடைந்தான்.

தந்தை ஆக்னீத்ரன் மறைந்ததும் அவனது மைந்தர்களான நாபி முதலிய ஒன்பது பேரும் மேருவின் பெண்களான மேருதேவி, ப்ரதிரூபை, உக்ரதம்ஷ்ட்ரி, லதை, ரம்யை, ஷ்யாமை, நாரீ, பத்ரை, தேவவீதி என்ற ஒன்பது பேரை மணந்துகொண்டனர்.

அரசே! நாபிக்குப் புதல்வர்கள்‌ இல்லை. அவன் தன் மனைவியான மேருதேவியுடன், பகவான் ஸ்ரீ மன் நாராயணனை வேள்விகளால் ஆராதனை செய்தான்.

வேள்வியில் ஸம்ர்ப்பிக்கப்டும் தூய்மையான ஹவிஸ், வேள்விக்கான உயர்ந்த காலமான வஸந்த ருது, முறையறிந்த உயர்ந்த ரித்விக்குகள், அவர்களுக்கு அளிக்கப்படும் தக்ஷிணைகள், வேள்வியின் விதிமுறைகள் ஆகியவற்றால் மட்டும் மனம் மகிழ்ந்து பகவான் வந்துவிடுவார் என்று எண்ணவேண்டாம்.

எந்த வித சாதனைகளாலும் அவரை அடைய இயலாது. இறைவன் தன் கருணையால் மட்டுமே பக்தர்களுக்கு அருள் புரிய வருகிறார்.

தூய்மையான மனத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் நாபி ஆராதனை செய்தான். அதனால் பரவசமடைந்த இறைவன் மனத்திற்கும் கண்களுக்கும் விருந்தாக ஒப்பற்ற அழகிய திருமேனியோடு அங்கு எழுந்தருளினார்.

இடுப்பில் மஞ்சள் பட்டாடை, மார்பில் ஸ்ரீ வத்ஸம், நான்கு கைகளிலும் சங்கு, சக்ரம், கதை தாமரை மலர், கௌஸ்துபம் என்னும் திவ்யமணி, ஒவ்வொரு அவயவங்களுக்கும் அழகு நேர்க்கும் ஆபரணங்கள், நவமணிமகுடம், மகரகுண்டலங்கள், வளையல்கள், ஒட்டியாணம், முக்தாஹாரங்கள், தோள்வளைகள், நூபுரங்கள் ஆகியவற்றுடன் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார் இறைவன்.

அவரை அனைவரும் வணங்கினர். ரித்விக்குகள் துதித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Tuesday, November 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 156

ப்ரியவிரதன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஸ்வாயம்புவ மனு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் நெகிழ்ந்துபோய் ப்ரும்மாவைத் தொழுதார். ப்ரும்மா கிளம்பி ஸத்யலோகம்‌ சென்றதும், தானும் ஆசைகளை விட்டு காட்டுக்கு ஏகினார்.

ப்ரியவிரதன் எப்போதும் இறைவனின் திருவடித் தாமரைகளை நெஞ்சில் நிறுத்தி தியானித்து வந்ததால், விருப்பு வெறுப்புகள் இன்றி மிகுந்த அன்புடன் மக்களைக் காத்துவந்தான்.

விசுவகர்மா என்ற ப்ரஜாபதியின் மகளான பர்ஹிஷ்மதி என்பவளை‌ மணந்தான். அவனைப் போலவே அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பத்து பிள்ளைகளும்,‌ ஊர்ஜஸ்வதி என்ற பெண்ணும் பிறந்தனர்.

பத்து பிள்ளைகளின் பெயர்களும் ஆக்னீதரன், இத்மஜிஹ்வன், யக்ஞபாஹு, மஹாவீரன், ஹிரண்யரேதஸ், க்ருதப்ருஷ்டன், ஸவனன், மேதாதிதி, வீதிஹோத்ரன், கவி என்று அக்னியின் பெயர்களாகவே அமைந்தன.

இவர்களுள் கவி, மஹாவீரன், ஸவனன் ஆகிய மூவரும் இல்லறம்‌ ஏற்காமல், நைஷ்டிக ப்ரும்மசாரிகளாக இருந்தனர். இளம் வயது முதலே ஆத்மவிசாரம்‌ மேற்கொண்டு முடிவில் துறவு ஏற்றனர்.

இடையறாது பகவத் தியானம் செய்து இருமை அகலப்பெற்று ஞானத்தை அடைந்தனர்.

ப்ரியவிரதனின் மற்றொரு மனைவி உத்தமன், தாமஸன், ரைவதன் என்ற மூன்று மகன்களைப்‌ பெற்றாள்.

அவர்கள் தங்கள் பெயர்களைக் கொண்ட மன்வந்தரங்களுக்குத் தலைவர்களாயினர்.

ப்ரியவிரதன் பதினோரு கோடி வருடங்கள் அரசாட்சி புரிந்தான். அவனது வில்லின் நாணொலிக்கு பயந்து மறவழிச் செல்பவர் அனைவரும் ஓடி ஒளிந்தனர்.

அவனது மனைவி பர்ஹிஷ்மதியின் அன்பான பணிவிடைகளால் ஆன்மஸ்வரூபத்தையே மறந்தவன் போலாகிவிட்டான். அத்தனையும் மறந்தவன் போல, சாதாரணனைப்போல் உலக இன்பங்களில் திளைத்தானேயன்றி ஒருகணம் கூட அவன் மனம் உலகியல் விஷயங்களில் லயிக்கவில்லை.

அவன் தேரிலேறி ஏழுமுறை பூவுலகை வலம் வந்தான். அவனது ஒளியால் இரண்டாவது சூரியனோ என்று அனைவரும் ஐயமுற்றனர்.

அவன் ப்ரதக்ஷிணம் செய்யும்போது தேர்க்கால்கள் பூமியில் பட்டு நேர்ந்த பள்ளங்களே ஏழு கடல்களாகக் காட்சியளிக்கின்றன.

அதனால் பூமியில் ஏழு தீவுகள்‌ தோன்றின. அவை ஜம்புத்தீவு, ப்லக்ஷத்தீவு, சால்மலித்தீவு, குசத்தீவு, க்ரௌஞ்சத்தீவு, சாகத்தீ்வு, புஷ்கரத்தீவு. இவை மேல்வரிசையாக ஒன்றைக்காட்டிலும்‌ அடுத்தது இருமடங்கு பெரியதாக பூமியின் நாற்றிசைகளிலும் சமுத்திரங்களுக்கு வெளியே பரவியுள்ளன.

ஏழு‌கடல்களும் முறையே உப்புநீர், கரும்புச்சாறு, கள், நெய், பால், மோர், இனிய சுத்தமான நீர் நிரம்பியவை.
ஒவ்வொன்றும் அடுத்த தீவை வெளிப்புறமாக அகழிபோல் சுற்றியிருக்கின்றன.

முதலில் ஜம்புத்தீவு அதைச் சுற்றி உப்புக்கடல். அதைச் சுற்றி ப்லக்ஷத்தீவு, அதைச் சுற்றி கருப்பஞ்சாற்றுக் கடல். அதைச் சுற்றி சால்மலித்தீவு. அடுத்தது கள் கடல். பின்னர் குசத்தீவு. அதைத் தொடர்ந்து நெய்க்கடல். அதைச் சுற்றி கிரௌஞ்சத்தீவு. அதைச் சூழ்ந்து நிற்பது பாற்கடல். பின்னர் சாகத்தீவு. அதைச் சூழ்ந்தது மோர்க்கடல். பின்னர் புஷ்கரத்தீவைச் சுற்றி நன்னீர்க்கடல்.
பிரிய விரதன் தன் ஏழு பிள்ளைகளையும் ஒவ்வொரு தீவிற்கு அரசனாக்கினான்.

ஊர்ஜஸ்வதி என்ற மகளை சுக்ராசார்யாருக்கு மணம்‌முடித்து வைத்தான்.

சுக்ரரின் மகள்‌ தேவயானி.
ஒருநாள் ப்ரியவிரதன் தனக்குத்தானே ஆன்மஞானம் பெற்றும் இப்படி உழல்கிறேனே என்று நொந்துகொண்டான். அக்கணமே அவனது பற்றுகள் அறுந்தன. சவத்தைப் போல் அக்கணமே ராஜ்யத்தைத் துறந்தான். ஆன்மஞானியாகிவிட்டான்.

அவனது திறமையால் பூவுலகின் எல்லைகளை கடல்கள், மலைகள் எனப் பிரித்துக் காத்தான்.

அப்பேர்ப்பட்ட பிரியவிரதன், பாதாளலோகம், தெய்வலோகமான விண்ணுலகம், மானிட உலகம் யோகமார்கங்களால் அடையப்படும் செல்வங்கள் அனைத்தையுமே நரகமாக எண்ணி ஒரே கணத்தில் துறந்தான். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 26, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 155

ஐந்தாவது ஸ்கந்தத்தில் ப்ரியவிரதன், ஆக்னீதரன், நாபி, ரிஷபதேவர், ஜடபரதர், பரதவம்சம், பூலோக கோசங்களின் வர்ணனை, கங்கை, வர்ஷங்கள், கிரஹங்களின் இருப்பிடம், சஞ்சாரம், சிம்சுமார சக்கரம், சங்கர்ஷண மூர்த்தி, நரகங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்மால் இயன்றவரை சுருக்கமாகக் காண்போம்.

மன்னன் பரீக்ஷித் ஸ்ரீ சுகமுனியைப் பார்த்துக் கேட்டான்.

முனிவரே! ஸ்வாயம்புவ மனுவின் புதல்வன் ப்ரியவிரதன், பெரிய பக்திமான். நாரத மஹரிஷியிடமிருந்து ஆத்ம வித்யையைப்‌ பெற்று தியானத்திலெயே இருந்தார். அவருக்கு இல்லற ஆசை எவ்வாறு உண்டாயிற்று? இது முரணாக உள்ளதே. அவரது கதையைச் சொல்லுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
அரசே! ஆன்மஞானம் பெற்றவர்க்கு இல்லற ஆசை எழாது. ஆனால், எவருடைய மனம் அஞ்ஞான இருளினின்று அகன்று பகவானின் மதுரமான திருவடித் தாமரைகளின் ரஸத்தில் மூழ்குகின்றதோ, அவர்கள் எவ்வளவு இடையூறுகள் இருந்தபோதிலும், பகவானின் கதைகளில் இருக்கும் ஆசையை விடமாட்டார்கள்.

பூர்வ வாசனையால் அவ்வழியிலேயே அவர்களது மனம் செல்லும்.

அரசே! ஸ்வாயம்புவ மனுவின் புதல்வன் இயற்கையிலேயே பகவானின் பரமபக்தன். நாரத மஹரிஷிக்கு அவர் மனம் குளிர குளிரப் பணிவிடைகள் செய்து இறையறிவு பெற்றவன்.

ப்ரும்மத்தைப் பற்றியே எப்போதும் சிந்தனை செய்தல் என்ற ப்ரும்மஸத்ர வேள்விக்காக தீக்ஷை எடுத்துக்கொள்ளப்போகிறவன். அரசர்க்குரிய அனைத்து மேன்மையான குணநலன்களும் அவனிடம்‌ இருந்தன.

அவனைப் பார்த்து மகிழ்வுற்ற ஸ்வாயம்புவ மனு அவனை அரசாட்சியை ஏற்கும்படி கட்டளையிட்டார்.

ஆனால், ப்ரியவிரதனோ, அரசாட்சியை ஏற்றால் அது தியானத்திற்கும், பக்திக்கும் இடைஞ்சல். மேலும் மனைவி மகன் என்றாகிவிட்டால், நாட்டு நலம், குடும்ப நலம் ஆகியவற்றில் மனம்‌செல்லும். ஆன்ம நாட்டம்‌ குறைந்துவிடும் என்று நினைத்து அரசுரிமையை ஏற்க மறுத்தான்.

ப்ரும்மதேவர் ப்ரியவிரதனின் மனநிலையை அறிந்து, முனிவர்களின் கூட்டத்தை அழைத்துக்கொண்டு ஸத்யலோகத்தினின்றும் இறங்கி வந்தார்.

அவர் வரும் வழியிலிருந்த இந்திர லோகத்தைச் சேர்ந்தவர்களும், சித்த சாரண கந்தர்வர்களும் அவரைப் பூஜை செய்தனர். அனைவரின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டு ப்ரியவிரதன் இருக்கும் கந்தமாதன மலையின் தாழ்வரையை அடைந்தார்.

அங்கு ஏற்கனவே ப்ரியவிரதனுக்கு ஆத்மவித்யையை உபதேசிப்பதற்காக நாரதர் வந்திருந்தார்.

அன்னப்பறவையைக்‌ கண்டதும் தன் தந்தையாகிய ப்ரும்மதேவர்தான் வருகிறார் என்றறிந்து நாரதர், ஸ்வாயம்புவ‌மனு, ப்ரியவிரதனுடன் வேகமாக எழுந்து கைகூப்பி வரவேற்று உபசரித்து துதித்தார்.

நாரதர் பலவாறு ப்ரும்மாவின் பெருமைகளை எடுத்துக்கூறி துதி செய்ததும், ப்ரும்மா கருணை பொங்கும் கண்களால் ப்ரியவிரதனைக் கடாக்ஷம் செய்தார்.

அதன்பின் அவனைப் பார்த்துப் பேசலானார்.

குழந்தாய்! அனைத்து உலகங்களையும் படைத்துக் காத்து அழித்துவரும் பகவான் வாசுதேவனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள். நான், பரமேஸ்வரன், மனு, உன் குருவான நாரதர் இன்னும் இங்கு வந்திருக்கும் பல மஹரிஷிகளும், ப்ரஜாபதிகளும் பகவானின் கட்டளையைத் தலைமேல் தாங்கி அதன்படி நடக்கிறோம்.

எந்த ஒரு ஜீவனும் தன் தவத்தாலோ, அறிவாலோ, புத்தியாலோ, உடல்பலத்தாலோ பகவானின் செயல்பாடுகளை‌ மாற்ற இயலாது. வேள்விகளால் ஏற்படும் புண்ணியத்தால் பகவானை அசைக்க இயலாது.

இவ்வுலகில் எத்தனை விதமான ஜீவன்கள் எத்தனையெத்தனை விதமான உடல்களை ஏற்றுக்கொண்டு பிறக்கின்றன. அனைத்தும் பகவானின் ஸங்கல்பமே.

ஞானத்தை அடைந்த ஜீவன் முக்தன் முன்வினைப்‌ பயன்களை அனுபவிப்பதற்காக, பகவானது விருப்பப்படியே உடலைத் தாங்குகிறான். அவன் எந்நேரமும் விழிப்புடன் பகவானை மறவாமல் இருப்பான். அடுத்த பிறவிக்கான கர்மாக்களையும், வாசனைகளையும் அவன் சுமப்பதில்லை.

நன்றாகக் கேளுங்கள்.
பகவானை ஆராதிக்காதவன், புலனடக்கமற்றவன், காடுகளில் இருந்தாலும்‌ என்ன பயன்? புலன்களை வெல்லாதவன் எங்கிருந்தாலும் புலன் இன்பத்தைத்தான் நினைப்பான்.

புலன்களை வெற்றி கொண்டவன் மற்றும் பகவானிடம் பற்று கொண்டவனே பகுத்தறிவு பெற்றவன். அவன் இல்லறத்தானாக இருந்தால்‌என்ன? துறவியாயினும் என்ன? இவ்வுலக வாழ்க்கை அவனை எவ்விதத்திலும் பாதிக்காது.

மேலும் ஐம்புலன்களையும் வெற்றிகொள்ள விழைபவன் இல்லறத்தில் இருந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை அடக்கித் தன்வயப்படுத்தவேண்டும்.

கோட்டைக்குள் பத்திரமாக இருந்து போரிடுபவன் பெரும்படையையும் வெற்றி கொள்வான்.

நீ பகவானின் திருவடித்தாமரைகளின் கோட்டைக்குள்‌ இருக்கிறாய். புலன்களை வென்றுவிட்டாய். எனவே, அரச போகங்களை அனுபவி. அரசாட்சி செய். பின்னர் அவற்றைத் துறந்து ஞான ஸ்வரூபனான பகவானிடம்‌ ஒன்றுபடு.
என்றார்.

ப்ரும்மதேவரின் கூற்றை மறுக்க இயலாத ப்ரியவிரதன்,
அவ்வாறே செய்கிறேன் என்று சொல்லி, அவரையும் மற்ற மூத்தோர் பெருமக்களையும், முனிவர்களையும் வணங்கி அரசாட்சியை ஏற்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


Saturday, November 24, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 154 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 98

நாரதர் மேலும்‌ கூறினார்.
அரசே! உனக்கு அனைத்து நலன்களும் கிட்டட்டும். மனம்தான் ஒருவனது முற்பிறவி பற்றியும், விதேக முக்தி பற்றியும் அறிவிக்கிறது. நீசப்பிறவி என்று தெரியப்படுத்துவதும் மனமே.
சில சமயம் இடம், காலம், செயல் ஆகியவை பற்றி அல்லது தொடர்புள்ள விஷயங்கள்‌ கனவில் தோன்றும். அவை இதுவரை பார்க்கப்படாமலும் கேள்விப்படாததுமாகக்கூட இருக்கலாம். உதாரணத்திற்கு மலை உச்சியில் கற்பாறையில் தாமரைப்பூ போன்றவை. இவ்வாறு காண்பது தூக்கமின்மையால் ஆகும்.

புலன் நுகர்ந்த விஷயங்கள்‌ பல முறை தோன்றும். புலன்களால் இதுவரை அறியப்படாத விஷயங்கள் தோன்றாது.

சிலசமயம் மனம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றால் அவனுக்கு பகவானின் அருளால் ப்ரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் தெரியும்.

முக்குணங்கள், புத்தி, மனம், புலன்கள், அவற்றால் உணரப்படும் உணர்வுகளால் ஆன கூட்டமே மனத்துடன் கூடிய ஸூக்ஷ்ம அல்லது லிங்க சரீரம். இது உள்ளவரை ஜீவனுக்கு நான் எனது என்ற பற்று விடாது.

ஆழ்ந்த உறக்கத்திலும், காய்ச்சல், ஜன்னி மற்றும் நோய்வாய்ப்பட்டு, மயக்கமருந்து செலுத்தப்பட்ட நேரத்திலும், (கோமாவிலும்) நான் இருக்கும். ஆனால் இந்திரியங்களின் வலிமை குன்றியதால் மறைந்திருக்கும்.

புல்லைத் தின்னும் புழு ஒரு புல்லைத் தின்னும்போதே, அது முடியும் தருவாயில் பின்னங்கால்களால் வேறொரு புல்லைப் பிடித்துக்கொள்ளும்.

அதுபோலவே ஜீவனும் இறக்கும் தருவாயில் தான் வசிக்கும் தேகத்தை விடுவதற்கு முன்னால் வேறொரு சரீரத்தைப் (யாதனா சரீரம்) பிடித்துக்கொள்கிறது. அதுவரை முன்பு பற்றியிருந்த தேகத்தின் மீது அபிமானம் விடாது.

அடுத்த பிறவி இனி இல்லை எனும் நிலை வரும் வரை இப்படித்தான்.
இந்த பந்தத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற பகவான் ஸ்ரீஹரியைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு நாரதர் ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை மிக விரிவாகக் கூறிவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு சித்தர்களின் உலகத்திற்குச் சென்றார்.

ராஜரிஷியான ப்ராசீனபர்ஹிஸ் அரசுரிமையையும் மக்களைக் காப்பதையும் தன் புதல்வர்களிடம்‌ ஒப்படைத்துவிட்டு கபிலாசிரமத்திற்குத் தவம் செய்யச் சென்றார்.

அங்கு சென்றதும், பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஒருமுகப்பட்ட மனத்தோடும், மிகுந்த பக்தியோடும், ஹரியின் திருவடித் தாமரைகளைப் பூஜித்து, சாரூப்ய முக்தியை அடைந்தார்.

புரஞ்சனோபாக்யானத்தையும் நாரதர் செய்த இந்த உபதேசத்தையும் பக்தியுடன் கேட்பவர்களும் சொல்பவர்களும் விரைவிலேயே அனைத்துவிதமான தளைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்
என்று முடித்தார் மைத்ரேயர்.

இதன் பின் ப்ரசேதஸர்கள் பத்து லட்சம் வருஷங்கள் பூவுலகை ஆண்டு அனுபவித்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ ஹரி கூறிய உபதேசங்களை நினைத்து நினைத்து ஆன்மஞானம் பெற்றனர். பின்னர் அரசாங்கத்தை மகன் தக்ஷனிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனை யிலிருந்து வெளியேறினர்.

மேற்குக் கடற்கரையில் ஜாஜலி என்ற ரிஷி சித்தியடைந்த இடத்தில் ஆன்ம விசாரத்திற்காக ப்ரும்மஸத்ரம்‌ என்ற யாகம் செய்ய தீக்ஷை ஏற்றனர்.
ப்ராணன், மனம், சொல், பார்வை அனைத்தையும் தன்வசமாக்கி உடலை அசைவற்று நேராக நிமிர்த்தி, பத்மாசனத்தில் அமர்ந்து தவமியற்றினர்.

அதைக் கண்ட நாரதர் அங்கு வந்தார்.
நாரதரைக் கண்டதும் எழுந்து விழுந்து வணங்கி முறைவழுவாது பூஜித்தனர்.
தேவரிஷியே! எங்கள் பாக்யத்தால் இன்று தங்கள் தரிசனம் கிடைத்தது. சூரியன் புற இருளை நீக்குவதுபோல் நீங்கள் அக இருளை நீக்குகிறீர்கள்.

பகவான் ஸ்ரீ ஹரி உபதேசம் செய்த ஆத்ம தத்வம், நாங்கள்‌ பலகாலம் இல்லறத்தில் உழன்றதால் பெரும்பாலும் மறந்துவிட்டது.
அந்த ஸத்ய ஞானத்தை எங்களுக்கு மீண்டும் உபதேசம்‌ செய்யுங்கள். அதைக் கேட்டு நாங்கள் விரைவில் முக்தி பெறுவோம்
என்றனர்.

நாரதர் பகவானை தியானித்துப் பின் கூறினார்.

இவ்வுலகில் பகவான் ஸ்ரீ ஹரியிடம் மனத்தை ஒன்றுபடுத்திப் பூஜை செய்பவரே நற்பிறவியாளர். அவரது செயலே நற்செயல். அவரது ஆயுளே பூரண ஆயுள். அவரது வாக்கே நல்வாக்கு. மற்ற அனைத்தும் வீண்.

ஒருவன் கூர்மையான அறிவு, தவம், நாவன்மை, உடல் வலிமை, பல திறமைகள் அனைத்தையும் பெற்றாலும் யாது பயன்?

கர்மயோகங்கள், துறவறம், விரதங்கள், நற்செயல்கள் இவை அனைத்தும் பகவானின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படாவிடில் அவை வீணே.
உண்மையில் ஜீவன் தன் நிஜ ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்வதே உயர்நலன். ஆன்மஞானத்தை வாரி வழங்குபவர் ஸ்ரீஹரிதான். அவரே அனைத்து ஜீவராசிகட்கும் பிரியமானவர்.

ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் அதன் நடுத்தண்டு, கிளைகள், அனைத்தும் செழிக்கின்றன. பூக்களும் காய்கனிகளும் உண்டாகின்றன.
ஆகாரம் வாய் வழியே உட்கொண்டால் ப்ராணன் காப்பாற்றப்படுவதோடு, உடலின் அனைத்து பாகங்களும் உறுதி பெறுகின்றன.

அதுபோல் ஸ்ரீ ஹரியைப் பூஜித்தால் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகிறது.

அனைத்து தாவர ஜங்கமங்களும், ஜீவன்களும், ப்ரபஞ்சமும் அவரிடமே தோன்றி அவரிடமே லயமடைகின்றன.
உண்மையில் இவ்வுலகம் ஸ்ரீ ஹரியின் வெளித்தோற்றமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டாலும் அதன் ஒளி அதைவிட்டுப் பிரிவதில்லை. இவ்வுலகம் பகவான் இல்லாமல் இருப்பதில்லை.

ப்ரும்மா முதலிய தேவர்களுக்கும் தலைவரான ஸ்ரீ ஹரியை அவர் வேறு நாம் வேறு என்ற பேத புத்தியின்றி பூஜை செய்யுங்கள்.

எல்லா ஜீவராசிகளிடமும் கருணை காட்டுதல், கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்ளுதல், பொறி புலன்களை அவற்றின் வழிச் செல்லாது நிறுத்தல் ஆகியவற்றால் பகவான் விரைவிலேயே மனம் மகிழ்கிறார்.

பகவான் அன்பு மிகுந்தவர். நீங்காத செல்வம், ரஸக்ஞன், ஸ்வரூபானந்தர், ஏழைப்பங்காளர், அடியார்க்கடியவர். இத்தகைய நற்குணங்கள்‌ கொண்ட பகவானை யார்தான்‌ மறப்பார்?
என்றார் நாரதர்.

நாரதரின் உபதேசம்‌ கேட்டு, பகவானின் திருவடித்தாமரைகளில்‌ மனத்தை இருத்தி ப்ரசேதஸர்கள் வைகுண்டத்தை அடைந்தனர்.

மைத்ரேயர் கூறிய பகவத் கதைகளைக்‌கேட்ட விதுரர் பக்தி மேலிட்டு, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி மைத்ரேயர் திருவடியில்‌ பலமுறை வீழ்ந்து வணங்கினார்.

யோகீஸ்வரரே! கருணைக்கடலாகிய தாங்கள் என்னை அறியாமை இருளின் அக்கரையில் அக்கறையுடன் கொண்டு சேர்த்தீர்கள்
என்ற விதுரர்.

பின்னர் மனநிறைவுடன் கிளம்பி அஸ்தினாபுரம்‌ நோக்கிச் சென்றார்.
ஸ்ரீ மத் பாகவதம் நான்காவது ஸ்கந்தம் முற்றிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 153 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 97

நாரதர் தொடர்ந்தார்.
ஹே அரசனே! அந்த பகவானேதான் அனைவர்க்கும் ப்ரியமான ஆத்மாவாக விளங்குகிறார்.

அவரை உபாசிப்பதொன்றே அனைத்துவிதமான பயங்களிலிருந்தும் ஒருவனை விடுவிக்கும்.

இந்த வழியைச் சொல்லித்தருபவரே உண்மையான குரு.

அந்த குரு வேறுயாருமல்ல. ஸாக்ஷாத் பகவான் ஸ்ரீ ஹரியே.

குருவிற்கும் பகவானுக்கும் வேறுபாடில்லை.

ஒரு ஆண்மான் தன் பெண்மானோடு இன்பமாகப் புல்‌மேய்கிறது. ரத்தவெறிகொண்ட செந்நாய்கள் அந்த மான்களின்மீது பாய சமயம்‌ பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேடன் மானைப் பிடிக்க எண்ணம் கொண்டு பின்னாலிருந்து அம்பெய்கிறான். மானோ எதையும் அறியவில்லை.

அம்மானின் நிலையில்தான் நீயும் இருக்கிறாய்.

உன் ஆயுளைக் காலம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. காலன் உன் உயிரைக் கொண்டு செல்லத் தொடர்ந்து வருகிறான். நீயோ சிற்றின்பங்களில் மூழ்கியிருக்கிறாய்.

மெதுவாக மனத்தை அடக்கி ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்து. உலகியல் இன்பங்களைப் பற்றிய பேச்சுக்களை விடு. சிறுகச் சிறுக உலகியல் ஆசைகளிலிருந்து விலகு.
ப்ராசீனபர்ஹிஸ் கேட்டான்.

தாங்கள் மிகவும் உயர்ந்த விஷயங்களைச் சொன்னீர்கள். இவ்விஷயங்களை இதுவரை கர்மங்களைச் செய்ய என்னை ஊக்குவித்த ப்ரோஹிதர்களோ ரிஷிகளோ என்னிடம்‌சொன்னதே இல்லையே. அவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் சொல்லவில்லையா?

மேலும், ஒரு சந்தேகம்.
ஒரு மனிதன் இவ்வுடலால் பல கர்மாக்களைச் செய்கிறான். இறக்கும்போது உடலை இங்கேயே விட்டு விடுகிறான்.

ஆனால், கர்மாக்களின் பயனை வேறு உடலோடு பரலோகத்தில் அனுபவிக்கிறான். இது எப்படிச் சரியாகும்?

கர்மா செய்வது ஒரு உடல். அனுபவிப்பது வேறோர் உடலா? கர்மா இங்கே முடிந்துவிடுமானால், பயனும் இங்கேயே முடியத்தானே வேண்டும்? அது பலனளிப்பதற்காக வேறொரு உலகில் வேறொரு விதமாக எப்படி வெளிப்படுகின்றன?

நாரதர் கூறலானார்.
அரசே! இந்த உடல் மனத்தை முக்கியமாகக் கொண்ட ஸூக்ஷ்ம சரீரத்திற்குக் கட்டுப்பட்டது. உலகில் கர்மா செய்வது உடல் அல்ல. மனமே. உடல் உலகை விடுத்ததும், அந்த ஸூக்ஷம சரீரமே மனத்துடன் பயணிக்கிறது. அதுதான் பலனை அனுபவிக்கிறது.

உறங்கும்போது உடல் பூமியில் கிடக்கிறது. உடல் மூச்சு விடுகிறது. மனமோ கனவில் வேறொரு உடலுடன் எங்கெங்கோ செல்கிறது. கனவில் அவன் தன்னையே காண்பதும் உண்டு.
அவ்வுடல் எவ்வாறு வந்தது? அவ்வுடலைப் படைத்தது மனமேதான். ஏதோ ஒன்றைக் காண ஆசைப்பட்டு படைக்கிறது.

முற்பிறவியில் செய்த கர்மாக்களின் நினைவு இல்லாவிட்டாலும் மனத்தில் மறைந்திருக்கும். அதனால், பிறவிகள் தோறும் தொடர்ந்துவரும்‌ மனத்தாலேயே எல்லா பயன்களும் அனுபவிக்கப் படுகின்றன.

ஒரே உடல்தான் என்பதல்ல. பசு, பக்ஷி மிருகங்களாகவும் உடல் எடுத்து கர்மாக்களை அனுபவிப்பது மனம் ஒன்றே.

ஜீவன் மனத்தால் செய்யும்‌ செயல்களை உடலால் செய்வதாக எண்ணிக் கொள்கிறான்.இவ்வுடலுடன் ஏற்படும் உறவுகளை என் உறவுகள் என்று நினைக்கிறான். உடலையே நான் என்றும் எண்ணுகிறான்.

அனைத்துச் செயல்களையும் தான் செய்வதாக எண்ணி அஹங்காரத்தை ஏற்றிக்கொள்கிறான். இதனால் வீணாகப் பிறவி வந்துவிடுகிறது.
மனத்தின் பல்வேறான செயல்பாடுகள் ஒருவனது முந்தைய பிறவியைக் காட்டிக்கொடுத்துவிடும்.

சிலசமயம் நாம் இப்பிறவியில் இதுவரை கண்டறியாத கேட்டறியாத விஷயங்கள் கனவில் தத்ரூபமாகத் தெரிகின்றன.

எப்படி எனில், அவை மனத்தில் பதிந்திருக்கும் முந்தைய பிறவிகளின் வாசனைகளே (நினைவுகள்).

கனவுலகில்‌ காணப்படும்‌ எதுவுமே உண்மையில்லைதான்.ஆனால்,‌ கனவு காணும்வரை அவை உண்மைதானே. அதுபோலவே இவ்வுடலும் அதனால்‌ நுகரப்படும் பொருள்களும் பொய்யே.
இதை ஜீவன் உண்மை என்று நினைக்கும்வரை தளை நீங்காது. பிறவி தொடரும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 22, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 152 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 96

காட்டில் கணவனின் சிதையில் உடன்கட்டை ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்த வைதர்பியிடம் ஒரு அந்தணர் வந்தார்.

அம்மா! ஏன் இப்படிக் கதறுகிறாய்? இந்த ஆண்மகன் யார்? உன்னையே நீ மறந்துவிட்டாயா? உன் நண்பன் அவிக்ஞாதன் நான்.

நாம் இருவரும் ஆயிரமாயிரம்‌ ஆண்டுகளாக நண்பர்களாய் இருந்தோமே. தங்க இடமின்றித் தவித்ததால் நீ ஒரு பெண் அமைத்த இடத்திற்குச் சென்று உலகியல் இன்பங்களில் வீழ்ந்தாயே!

அவ்விடத்தில் ஐந்து நந்தவனங்கள் ஒன்பது வாயில்கள், ஒரு வாயில்காப்பான், மூன்று மதில்கள், ஆறு வியாபாரிகள், ஐந்து கடைத்தெருக்கள் இருந்தன. அவை அனைத்தும் உருவகங்களாகச் செய்யப்பட்டவை. இதற்கு தலைவியாக ஒரு பெண்.

ஐம்பொறிகளே ஐந்து நந்தவனங்கள், பொறிகள் இயங்கும் இடங்கள் கண், காது போன்ற இடங்களே ஒன்பது வாயில்கள். ஒளி, நீர், பூமி ஆகியவை மதில்கள். மனமும், அறிவுப்புலன்கள் ஐந்தும் ஆறு வியாபாரிகள்.

செயற்புலன்கள் ஐந்தும் கடைவீதிகள். புத்திதான் நகரத் தலைவி.அந்த நகரத்தினுள் நுழைபவன் உண்மை அறிவை இழக்கிறான். தான் யார் என்பதை மறக்கிறான்.

நீ மாய வலையில் வீழ்ந்து இந்த இழிநிலையை அடைந்தாய்.
நீ உண்மையில் விதர்பனின் மகனுமல்ல. இந்த மலயத்வஜன் உன் கணவனும்‌அல்ல. புரஞ்சனியின் கணவனும் நீயல்ல.

முதலில் உன்னை ஆண்மகன் என்று எண்ணினாய். பிறகு கற்புக்கரசி என்றெண்ணுகிறாய். நீ புருஷனும் அல்ல. பெண்ணும் அல்ல. நாம் இருவருமே மாயையின் சம்பந்தமற்ற தூய ஹம்ஸ (ஆன்ம) வடிவினர்.
நண்பனே! நான் ஈஸ்வரன். நீ ஜீவன். இருப்பினும் நானும் நீயும்‌ ஒன்றே.

உண்மையறிந்தவர் நம்மிடையே வேற்றுமையைக் காண்பதில்லை.

ஒருவன் தன் உருவத்தைக் கண்ணாடியிலும், மற்றொருவனின் கண்களிலும் வெவ்வேறாகக் காண்பதைப்போல், ஒரே ஆத்ம தத்துவத்தை அறிவினால் ஈஸ்வரனாகவும், அறியாமையால் ஜீவனாகவும் பலவாகக் காண்கிறான்.
இவ்வாறு அந்த ஹம்ஸம் மானஸஸரஸில் வாழ்ந்து கொண்டிருந்த ஜீவனான மற்றொரு ஹம்ஸத்தை சமாதானம் செய்ததும் ஜீவன் ஞானம்‌ பெற்றது.

ப்ராசீனபர்ஹிஸ்! ஆத்ம தத்துவத்தின் உண்மை அறிவையே உனக்கு கதை வடிவில் கூறினேன்.

இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்த மறைபொருளான இறைவன் மறைபொருளாய் மறைந்துதான் விளங்குகிறான். அவனை மறைத்துச் சொல்வதையே விரும்புகிறான். என்றார் நாரதர்.

இத்தனையும் கேட்டுவிட்டு ப்ராசீனபர்ஹிஸ் புரியவில்லை என்றதும், நாரதர் கருணையோடு முழுக் கதையையும் அதில் வரும் பெயர்களோடும் அவற்றின் தத்துவங்களோடும் மறுபடி விளக்கிக் கூறினார்.

மேலும் தொடர்ந்தார்.
மன்னா! உண்மைபோல் இருக்கும். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். ஆனால், உண்மைப்பொருளான ஆன்மாவிற்குச் சற்றும் தொடர்பிருக்காது. அத்தகைய கர்ம மார்கங்களில் மனம் செலுத்தாதே.
கர்மங்களின் பயனைக் கொடுப்பவர் இறைவனே. மனத்தூய்மை பெறாதவர்கள் பலனை உத்தேசித்துச் செய்வார்கள். மனத்தூய்மை பெற்றவர்கள் எந்தக் கர்மத்தைச் செய்தாலும் அதை பகவத் அர்ப்பணமாகச் செய்வார்கள்.

கிழக்கு நுனியாகத் தர்ப்பைகளைப் போட்டு இப்பூமண்டலம்‌ முழுதும் நிரப்பி, வேள்விகள் செய்தாய். அதனால் பெரும்‌ செருக்கடைந்தாய். எனவே வேள்விப்பசுக்கள் உன்னை மன்னிக்கவில்லை.

கர்மயோகத்தின் உண்மைப்பொருளை நீ அறியவில்லை.

எதைக் கண்டால் பகவான் ஸ்ரீ ஹரி மகிழ்ச்சியடைவாரோ அதுவே நற்செயல்.

எதனால் பகவானின் நினைவு ஏற்படுமோ, அவரிடமே மனம்‌ லயிக்குமோ அதுவே வித்யை. அதுவே மந்திரமும்.

ஹே அரசனே! உனக்குப் புரியும்படி இன்னும் ஒரு நுட்பமான செய்தியைச் சொல்கிறேன் கேள் என்றார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Wednesday, November 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 151 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 95

புரஞ்சனோபாக்யானம்
ப்ரசேதஸர்கள் தவம் செய்யப்போன சமயத்தில், அவர்களது தந்தை ப்ராசீனபர்ஹிஸ் கர்ம மார்கத்திலேயே ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது சபைக்கு நாரதர் வந்தார்.

நாரதரை வணங்கிப் பூஜை செய்து அவரிடம் கேட்டான் அரசன்.
மஹரிஷியே! கர்மங்களில்‌ கொண்ட தீவிர ஈடுபாட்டினால் முக்தி இன்பம்‌ பற்றி எதுவும் அறியவில்லை. நான் கர்மத்தளையினின்று விடுபட எனக்கு ஞானோபதேசம் செய்யுங்கள். என்றான்.

நாரதர், கூற ஆரம்பித்தார்.
அரசே! நீங்கள் வேள்விகளில் கொன்று குவித்த ஆயிரமாயிரம் வேள்விப் பசுக்களைப் பாருங்கள்
என்று சொல்லி, கர்ம மார்கத்தில் வைராக்யம் ஏற்படச்செய்து ப்ரும்மவித்யை உபதேசிப்பதற்காக நாரதர் யோகத்தினால் இறந்த பசுக் கூட்டங்களைக் காட்டினார்.

அவை நீங்கள் செய்த ஜீவஹிம்சைகளை நினைந்து கோபமாக தங்களது வரவை எதிர்பார்த்திருக்கின்றன. இந்தப் பசுக்கள் தங்களது இரும்பு போன்ற கொம்புகளால் தங்களைத் தாக்கப்போகின்றன. என்றார்.

உண்மையில் பகவத் அர்ப்பணமாகச் செய்யப்படும் வேள்வியில் பலியாகும் பசுக்கள் உயர்ந்த லோகங்களை அடைகின்றன. யாகங்களில் பலியிடப்படும் பசுக்களே இவ்வாறு தாங்கள் பட்ட துன்பங்களுக்காக தண்டனை அளிக்கக் காத்திருக்குமானால், தற்காலத்தில் அசைவ உணவுக்காக கோடிக்கணக்கான ஜீவராசிகள் (கோழிகள், மீன்கள், பசுக்கள், பன்றிகள், இன்னும் பல) கொல்லப்படுகின்றனவே.

உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் உண்ணாத ஜீவனே இல்லை எனலாம். அவைகளைக் கொல்பவர்கள், அதை ஆதரிப்பவர்கள், மற்றும் உண்பவர்களின் கதி என்னாகும் என்று நினைக்கவே குலை நடுங்குகிறது.

நாரதர் தொடர்ந்தார்.

இப்போது புரஞ்சனன் என்பவனின் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள் என்றார்.
புரஞ்சனன் (ஜீவன்) என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு அவிக்ஞாதன் (பெயரற்றவன், பகவான்) என்றொரு நண்பன்.

புரஞ்சனன் தான் வசிக்க ஒரு நல்ல இடத்தை தேடி பூமி‌ முழுதும் அலைந்தான். அலைந்தலைந்து இமயமலையின் தென்புறத்தில் மிக அழகிய ஒரு நகரத்தைக்‌கண்டான். அந்நகரத்தின் அழகில் மயங்கினான்.

அங்கு அலைந்து திரிந்தபோது, தற்செயலாக அங்கு வந்த பெண்ணொருத்தியைக் (புத்தி, அவித்யை) கண்டான்.

அவளுக்குப் பத்து பணியாட்கள். (பத்து புலன்கள்). ஐந்து தலை நாகம்‌ ஒன்று அவளுக்குப் பாதுகாவல். (குண்டலினி)
தேவதை போலிருந்த அவள் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு புரஞ்சனனிடம் வேண்டினாள்.
புரஞ்சனனோ ஏற்கனவே அவளது அழகில் மதிமயங்கிப் பிதற்றிக்கொண்டிருந்தான். இருவரும் திருமணம் செய்துகொண்டு நூறாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

அந்த நகரத்தில் மேற்புறம் ஏழு வாயில்கள். கீழ்ப்புறம்‌ இரண்டு வாயில்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும், வெவ்வேறு தேசங்களுக்குச் சென்று வந்தான். (ஒன்பது வாயில்கள் இவ்வுடலில் உள்ள ஒன்பது துவாரங்கள். ஒவ்வொன்றின் மூலமும் வெவ்வேறு இன்பங்கள். ஒவ்வொரு வாசல், மற்றும் தேசங்களின் பெயர்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நாம் தத்துவத்தை மட்டும் பார்க்கலாம்.)

புரஞ்சனியின் மீது அளவற்ற மோகம் கொண்ட புரஞ்சனன் வளர்ப்பு நாய்போல் அவள் சொற்படியெல்லாம் ஆடினான்.

ஒரு சமயம் வேட்டையாடச் சென்றவன், அரச தர்மத்தை மீறி, தன்னிஷ்டம் போல் மிருகங்களைக் கொன்று குவித்தான்.

மனைவியுடன் மிகுந்த இன்பத்துடன் பொழுதைப் போக்கினான். அவனது இளமை அரைநொடிபோல் கழிந்தது.
அவர்களுக்கு ஆயிரத்து நூறு புதல்வர்கள் பிறந்தனர்.

தன் புதல்வர்களுக்கும் பெண்களுக்கும் நல்ல வரன்களைப் பார்த்து திருமணம்‌ செய்து வைத்தான்.‌ புரஞ்சனனின் வம்சம் பெருகியது.
அவனோ நான் எனது என்று பாசத்தால் கட்டுண்டு தவித்தான்.

காமப்பித்து அகலாத நிலையில் அவனுக்கு மூப்பு வந்தது. அவனை ஜரையும், பயமும் தாக்கின.
அச்சமயம் அவனது மந்திரிகள் வம்சத்தினர் அனைவரும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தான்.
கந்தர்வர்களும் யவனர்களும் அவனது கோட்டையைத் தாக்கி செல்வங்களைக் கவர்ந்தனர்.

வேறு வழியின்றி விருப்பமில்லாமல் கோட்டையை விட்டு வெளியேறினான்.
யவன மன்னனின் தம்பியான ப்ரஜ்வரன் அக்கோட்டை முழுவதையும் தீக்கிரையாக்கினான்.

தன் நகரம்‌ தீக்கிரையாவது கண்டு வருந்தினான் புரஞ்சனன்.

தன் மனைவி மக்களைப் பற்றி மிகுந்த கவலை கொண்டான். பயத்தின் கடுமையான தாகுதலால் சக்தியிழந்த அவனை யவனமன்னன் பலிகடாவைப் போல் இழுத்துச் சென்றான். நகரைக் காப்பாற்றும் பாம்பும் அவனோடு சென்றது.

இப்போதும் மனைவி மக்களை நினைத்து வருந்தினானேயன்றி தன் பழைய நண்பனான அவிக்ஞாதனை நினைக்கவில்லை.

பல்வேறு மோகங்களால் அறிவிழந்த புரஞ்சனன் நெடுங்காலம் நரகத்தை அனுபவித்தான்.

பின்னர் தன் மனைவி பற்றி நினைத்துக் கொண்டே இறந்ததால் மறுபிறவியில் விதர்ப்ப மன்னனின் மகளாகப் பிறந்து வைதர்பி என்று பெயர் கொண்டான்.

அவளை மலயத்வஜன் என்ற மாவீரனான பாண்டிய மன்னனுக்கு மணமுடித்தான் விதர்பன்.

அவர்களுக்கு ஏழு புதல்வர்கள்‌ பிறந்தனர். அவர்களின் வம்சமே தென்னாட்டை ஆண்டது.

ராஜரிஷி மலயத்வஜன் வைராக்யசாலி. உரிய நேரத்தில் நாட்டை புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு வனமேகினான்.
ஸ்ரீ மன் நாராயணனை ஆராதனம் செய்ய எண்ணி திருவேங்கடமலை சென்றான். பதிவ்ரதையான வைதர்பியும் கணவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

மலயத்வஜன் பகவானை ஹ்ருதயத்தில் நிறுத்தி தூண்போல் அசையாமல் தவமியற்றினான். சமாதியில் ஒருநாள் இறைவனுடன் கலந்தான்.

உயிர் பிரிந்தபோதும் அவனது உடல் நேராக, எவ்விதமாறுதலும் இன்றி நின்றது.

தவத்திலிருந்த கணவனுக்குப் பணிவிடை செய்துவந்த விதர்பி, ஒருநாள் அவனது திருவடியைத் தொடும்போது, உயிரற்று சில்லிட்டுப்போனதை உணர்ந்து அழுதாள். பின்னர் அவனுக்கான ஈமக்கிரியைகளைச் செய்துவிட்டு சிதை மூட்டி உடன் கட்டை ஏறப்போனாள்.

அப்போது பழைய நண்பனான அவிக்ஞாதன் அங்கு வந்தான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 20, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 150 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 94

தங்கள் முன் தோன்றிய பகவான் நாராயணனைப் பார்த்து இருகை கூப்பிய வண்ணம் நாதழுதழுக்கக் கூறினார்கள்.

இறைவா! பக்தர்கள் அனைவரின் துயரத்தையும் துடைப்பவர் தாங்களே. வேதங்களும் ஞானியரும் தங்கள் புகழையே பறைசாற்றுகின்றனர்.

தாங்கள் எப்போதும் ஸத்ய வடிவினராக இருப்பதால் தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்கிறீர்கள்.

முத்தொழில்களைச் செய்வதற்காக மூன்று உருவங்களை ஏற்கிறீர்கள்.
தங்களுடைய திருவுந்திக்கமலத்திலிருந்து இந்த ப்ரும்மாண்டம் தோன்றியது. தங்கள்‌ கண்களும் தாமரை. கழுத்தில் தாமரை மலர். திருவடிகளும் தாமரையே.

அரையில், தாமரை மலரின் மகரந்தம் போன்ற பட்டாடை. அனைத்து ஜீவராசிகளின் புகலிடம். அனைத்திற்கும் சாட்சி. தங்கள் தரிசனம் அனைத்து துன்பங்களையும்‌ நொடியில் தீர்ப்பது.

அறியாமை, செருக்கு, விருப்பு, வெறுப்புகளுக்கிடையில் உழலும் எங்களுக்கும் தங்களைத் தரிசிக்கும்‌ பாக்யம்‌ கிட்டியதே!

தங்களை மனதார நினைப்பதாலேயே அனைத்து ஜீவன்களுக்கும் அமைதி கிடைக்கிறது.

அந்தர்யாமியாக இருக்கும்‌தங்களுக்கு எங்கள் விருப்பம் தெரியாதா?

தங்களிடம்‌ எப்போதும் அன்பாக இருப்பது ஒன்றே நாங்கள் வேண்டும் வரம்.

கற்பகமலர் கிடைத்துவிட்டால் வேறு மலரில் விருப்பம் வருமா? அதுபோல் தங்கள்‌ திருவடி‌மலரைக் கண்ட எங்களுக்கு வேறென்ன வேண்டும்?

எப்போதும் தங்களுடைய அடியார்களின் இணக்கம் வேண்டும்.

இறையடியார் கூட்டத்தில் எப்போதும் தங்களுடைய திருவிளையாடல் பற்றிய கதையமுதம் பெருகிக்கொண்டே இருக்கும். அதை அரைநொடி கேட்டாலும் தாபங்கள் அனைத்தும் தீரும். ஜீவன்களுக்குள்‌ பகைமை விலகும். அன்பு பெருகும்.
ஸாதுக்கள் புண்யநதிகளையும் க்ஷேத்ரங்களையும் தூய்மைப்படுத்துவதற்காகவே தீர்த்தயாத்திரை என்ற பெயரில் உலவி வருகிறார்கள்.

தங்களுக்கு மிகவும் நெருங்கியவரான பரமேஸ்வரனின் ஒரு கணநேர இணக்கத்தாலேயே தங்கள் தரிசனம்‌ கிடைத்தது.

தங்கள்‌ பெருமை அளவிட இயலாதது.
எங்கள் அறிவுக்கெட்டியவரை தங்களைப் போற்றினோம்
இறைவா! இதுவரை ஒன்றிய மனத்துடன் நாங்கள் செய்த வேத அத்யயனம், ஆசிரியர் களுக்கு ச் செய்த பணிவிடை, அந்தணர்களுக்கும், 
பெரியோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் செய்த சேவை, அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி, உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர்க்கு தன்னலமற்றுச் செய்த உதவிகளும், தொண்டும், ஊண் உறக்கமின்றி நெடுங்காலம் இயற்றிய தவம் அனைத்தும் சர்வவியாபியான தங்களுடைய மகிழ்ச்சிக்காகவே ஆகட்டும்.

இதுவே நாங்கள் கோரும் வரம்.
தங்களை மீண்டும்‌ மீண்டும் வணங்குகிறோம்.
பகவான் மனம் மகிழ்ந்து நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும்‌ என்று அருள் செய்துவிட்டு அவர்கள் கண்ணெதிரிலேயே வைகுண்டம்‌ கிளம்பினார்.

பின்னர், கடல் நீரிலிருந்து வெளிவந்த ப்ரசேதஸர்கள் கரைக்கு வந்து நிற்கக்கூட இடமின்றி, வானளாவ உயர்ந்து நிற்கும்‌ மரங்களைச் சினத்துடன் பார்க்க, அவை பற்றி எரியத் துவங்கின.

மரஞ்செடிகொடிகள் பற்றியெரிவது கண்டு அங்கு தோன்றிய ப்ரும்மதேவர், அவர்களை ஆற்றுப்படுத்தினார். மீதமிருந்த மரங்கள் தங்கள் புதல்விகளை ப்ரசேதஸர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர்.
அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். முன்பு பரமேஸ்வரனை நிந்தித்ததன் பயனாக உடலை இழந்த தக்ஷன் இப்போது மீண்டும்‌ பிறந்தான். கால வெள்ளத்தில் முந்திய படைப்புகள் அழிந்து சாக்ஷுஷ மன்வந்தரம் துவங்கியபோது இந்த தக்ஷன் மீண்டும் ப்ரும்மதேவரால் ப்ரஜாபதியாக நியமிக்கப்பட்டான்.

அவனை மக்களைப் படைத்து நன்முறையில் காக்குமாறு ப்ரும்மதேவர் உத்தரவிட்டார். மரீசி முதலிய மற்ற ப்ரஜாபதிகளையும் அவரவர் பதவியில் நியமித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..