சாதுவிடமிருந்து கடிதத்தைக் கைகளில் வாங்கவில்லை கேசவன்.
ஐயன்மீர்! எனக்கென்று ரகசியங்கள் ஏதுமில்லை. இக்கடிதத்தை தாங்களே படியுங்கள் என்றான்.
தன்னை விரும்பும் பெண் கொடுத்த கடிதத்தை இன்னொருவரை விட்டுப் படிக்கச் சொல்வதா? என்ன இது? என்று தோன்றுகிறதா?
கண்ணனே உலகின் தந்தை. ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மியே ருக்மிணியாக அவதாரம் செய்திருக்கிறாள்.
ஜகன்மாதாவிற்கும் ஜகத்பிதாவிற்குமான சம்பாஷணைகள் அனைத்தும் உலகின் நன்மைக்காகவே. ருக்மிணி தேவி தன் குழந்தைகளை முன்னிட்டுக்கொண்டு தான் சரணாகதி செய்கிறாள். ஒவ்வொரு ஜீவனின் சார்பாகவும் உன்னைச் சரணடைகிறேன் என்று நமக்கும் சரணாகதியை சொல்லித் தருகிறாள்.
சுற்றியிருக்கும் அனைவரும் எதிரிகள். அசந்தால் சிசுபாலனுடன் திருமணம் நடந்துவிடும். உதவுவார் எவருமின்றி நிற்கும்போது அபலையாகத் தவிக்கும்போது தேடி வந்தவரை குருவாக வணங்கி சரணாகதி செய்கிறாள்.
ஜீவன் செய்யும் சரணாகதியை அப்படியே கொண்டுபோய் இறைவனிடம் சேர்த்து, இறைவனையும் ஜீவனையும் இணைத்துவைப்பதே குருவின் தலையாய பணி. சூழ்நிலை பற்றிக் கவலை கொள்ளாமல், பயப்படாமல் இறைவனின் சரணத்தை நம்பினால் குருவின் மூலமாக இறைவன் நல்வழி காட்டுவான் என்பதே சாரம்.
இப்போது மூன்றாவது நபராக இல்லாமல் ருக்மிணியின் 'பா'வத்திலேயே கடிதத்தைப் படிக்கிறார் சாது.
ஏழு ஸ்லோகங்களைக் கொண்டது இக்கடிதம். திருமணத்தில் ஸப்தபதி என்பது மிகவும் முக்கியமானது. அதைப்போல் இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இந்த ஏழு ஸ்லோகங்கள் முக்கியமானவை.
ஒருவருடன் ஏழு அடிகள் ஒன்றாக நடந்தால் அவருடன் நம் வாழ்வு எவ்விதத்திலேனும் பிணைக்கப்படுகிறது. அதனாலேயே சாதுக்கள் நடக்கும்போது கூடவே அவரது சீடர்கள் நடந்து செல்வதைப் பார்க்கிறோம்.
இந்த ஏழு அடிகள் கொண்ட ஸ்லோகத்தினால் ஜீவனின் வாழ்வு பகவானுடன் பிணைக்கப்படும்.
1. ச்ருத்வா கு3ணான் பு4வனஸுந்தரா ச்ருண்வதாம் தே
நிர்விச்ய கர்ண விவரைர் ஹரதோங்க3 தாபம்|
ரூபம்த்ருஶாம் த்ருஶிமதாம் அகிலார்த2 லாப4ம்
த்வய்யச்சுதாவிஶதி சித்தமபத்ரபம் மே||
புவனசுந்தரா! என்று அழைக்கிறாள் தாயார். புவனம் அனைத்திலும் அழகனே! பார்க்காமலே எப்படி அழகன் என்று சொல்லுவாள்.
கண்ணில் இதுவரை கண்டே அறியாத ஒரு ஆடவனுக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தவறாக எண்ணவேண்டாம்.
உன் கல்யாண குணங்களையும் எண்ணற்ற லீலைகளையும் சாதுக்கள் மூலம் தினம் தினம் கேட்டு கேட்டு உன் திருவுருவம் என் இதயத்தில் பதிந்துவிட்டது. சாது ரக்ஷகனாக விளங்குபவர்களின் ஹ்ருதயம் அழகாகத்தான் இருக்கும். உள்ளம் அழகியவர்களின் முகம்? அதுவே அழகிற்சிறந்த முகமாம். மேலும் ச்ரவண பக்தியையே தாயார் சிறப்பித்துக் கூறுகிறாள். பக்த சக்ரவர்த்தியான ப்ரஹலாதன் நவ வித பக்தி சாதனங்களைக் கூறுங்கால்
ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்
என்கிறான். முதல் படி ச்ரவண பக்தி. அதாவது இறைவனின் புகழை, லீலைகளை, குணங்களைக் கேட்பது. காது வழியாகத்தான் இறைவன் இதயம் நுழைகிறான்.
ஒவ்வொரு புலனுக்கும் மூடி இருக்கிறது. கண், வாக்கு, நாக்கு, இவைகளை மூடிக்கொள்ளலாம். ஆனால், காது? எப்படியாவது தற்செயலாகவாவது ஒருவனின் காது வழியாக இறை நாமம் புகுந்துவிட்டதென்றால் அது நெஞ்சில் படிந்த நெருப்பாக அவனது அத்தனை பாவங்களையும் பொசுக்கவல்லது. ஜீவனின் மேலுள்ள அளவற்ற கருணையினாலேயே காதுகளுக்கு மூடி வைக்கவில்லை இறைவன்.
புவன சுந்தரனே! உன் அழியாப் புகழும் குணங்களும் செவி வழியே இதயம் நுழைந்து பிறவித் துன்பத்தைக் களையவல்லவை. தங்களின் மேனியழகு காண்பவர்க்கு நான்கு புருஷார்த்தங்களையும் வழங்கவல்லது. இவற்றைக் கேட்டு என் மனம் காந்த முள் எப்போதும் வடதிசை காட்டுவதுபோல் தங்களையே எப்போதும் நாடுகிறது. தாங்கள் நம்பியவரைக் கைவிடாத அச்சுதரல்லவா? எனைக் காத்தருள்வீர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment