Friday, May 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 459

கோபியர் கூறியதைக் கேட்ட உத்தவர் வியந்துபோய்ச் சற்று நேரம் நின்றார். பின்னர்

ஆஹா! உங்கள் மனம் எப்போதும் கண்ணனையே நாடுகிறதே.

தானம், விரதம், தவம், ஹோமம், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய நியமங்களின் பலன் க்ருஷ்ணபக்தியே ஆகும்.

அத்தகைய பக்தி உங்களிடம் அமையப்பெற்றது பெரும்‌பேறு. 

மனம் வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் கண்ணனிடம் தனித்த பக்தி கொண்டிருக்கிறீர்கள். அவரை விட்டுப் பிரிந்த விரஹ தாபத்தினால் எங்கும் எதிலும் கண்ணனையே காண்கிறீர்கள்.
எனக்கும் தங்களைக் காணும் பேறு கிடைத்துவிட்டது.

நான் கண்ணனின் அந்தரங்கப் பணியாளன்.
உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறேன். அதைக் கேளுங்கள்.

கண்ணன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளார். அவரே அனைத்திற்கும் மூல காரணமாவார். உங்களிடமிருந்து அவர் பிரிந்திருப்பதென்பது இயலவே இயலாது. ஏனெனில் ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி, அசைவன, அசையாதன, மனம், பிராணன், இந்திரியங்கள், அவற்றின் நுகர்வான சப்தம், தொடு‌வுணர்வு அனைத்தும் கண்ணனே.

தன் மாயை என்னும் சக்தியால் அனைத்தையும் படைத்து, காத்து பின் தனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்கிறார்.

ஆத்மாவாக அனைத்திலிம் நிறைந்திருப்பவர் கண்ணனே. குணக்கலப்பில்லாதவர். மாயை அவருடைய சக்திதான். ஆனால் அவரை அது பாதிப்பதில்லை.

விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், ஸமாதி ஆகிய நான்கு நிலைகளுக்கும் கண்ணனே‌ சாட்சியாவார்.

தத்வ விசாரம், துறவறம், தவம் புலனடக்கம் எல்லாமே ஸத்யவஸ்துவான அவரை உணர்வதற்கான வழியைக் காட்டுபவையே. மனத்தை அடக்குவதே கண்ணனை அடையும் ஒரே வழி.

உங்களை விட்டு அவர் விலகியிருப்பதன் காரணம், உங்களுக்குத் தொடர்ச்சியாக அவரது நினைவை அளிப்பதே. அதனால் உடலால் விலகியிருந்தாலும் மனத்தால் கண்ணனை  நீங்காமல் இருப்பீர்கள்.

பொதுவாகவே பிடித்த பொருள் அருகிலிருந்தால் மனம் அதில் முழுவதும் ஈடுபடாது. 
மனத்தை முழுமையாக கண்ணனிடம் செலுத்தி முழுமையாக அவரை  நினைத்தால் வெகு விரைவில் அவரை அடைவீர்கள்.

என்று கூறினார்.

இதைக் கேட்ட கோபியர், கண்ணன் நலமா? மகிழ்ச்சியாய் இருக்கிறானா? எங்களை மகிழ்வித்ததுபோல் மதுரா நகரப் பெண்களைத் தன் அன்பாலும் சிரிப்பாலும் மகிழ்விக்கிறானா?
எப்போதாவது பட்டிக்காட்டுப் பெண்களான எங்களது நினைவு அவனுக்கு வருமா?

இங்கு மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தில் பௌர்ணமி இரவுகளில் காற்சலங்கைகள் ஒலிக்க ராஸநடனம் ஆடினான். அது நினைவிருக்கிறதா?

இந்த மலையைப் பாருங்கள். இதைத்தான் ஏழு நாள்கள் தன் சுண்டுவிரலில் தாங்கி எங்களைக் கொடு மழை யிலிருந்து காத்தான்.

அவனுக்குப் பகைவர்களே இல்லை. அரசாட்சியும் கிடைத்துவிட்டது. இனியும் காட்டுவாசிகளாலோ நகரப் பெண்களாலோ அல்லது வேறு எவராலுமோ அவனுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.

பற்றற்றிருப்பதே பேரின்பம் என்று எத்தனை விதமாக ஆன்றோர் எடுத்துரைத்தபோதும் எங்களால் கண்ணன் மீதுள்ள பற்றை மட்டும் விடமுடியவில்லை.

இந்த ப்ருந்தாவனம் ஒவ்வொரு கணமும் எங்களுக்குக் கண்ணனை நினைவூட்டுகிறது. எங்களால் எப்படி மறக்கமுடியும்? எங்களைக் கண்ணன்தான் எப்படியாவது கரையேற்றவேண்டும் என்று கூறினர்.

பின்னர் உத்தவரைப் பாராட்டிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment