Tuesday, May 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 463

மதுரா வந்தவுடனேயே நேராகத் தன் வீட்டிற்கு எழுந்தருளுமாறு அக்ரூரர் அழைத்திருந்தாரல்லவா? அதை நினைவு கூர்ந்தான் கண்ணன். அவரைக் கொண்டு மேலும் சில பணிகளை முடிக்கத் திட்டமிட்டான் கண்ணன்.

அண்ணன் பலராமன், உத்தவர் இருவரையும் அழைத்துக்கொண்டு அக்ரூரர் வீட்டை நோக்கி‌ நடந்தான். 

மூவரும் வீதி முனையில் வருவதை எதேச்சையாகக் கண்டார் அக்ரூரர். ஆனந்தத்தினால் துள்ளிக் குதித்தார். ஓடோடிச் சென்று வரவேற்றார். கட்டியணைத்துக் கொண்டார்.

பித்துப் பிடித்தவர்போல் குதித்துக்கொண்டே கண்ணனைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினார்.

கண்ணன் வருவதைக் கண்ட அக்ரூரரின் மனைவி கிடுகிடுவென்று அவனை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்தாள். சற்று தன்னிலைக்கு வந்த அக்ரூரர் மூவரையும் முறைப்படி ஆசனத்தில் அமர்த்தினார். கண்ணன் மற்றும் பலராமனின் தாமரைத் திருவடிகளுக்குப் பாத பூஜை  செய்தார். அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்ட பின் சொட்டு கூட மிச்சம் வைக்காமல் கடகடவென்று குடித்துவிட்டார். தன் மேல் அங்கவஸ்திரத்தால் பாதங்களை ஈரம் போகத் துடைத்தார். பாதங்களுக்கு சந்தன குங்குமம் இட்டு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தார். தூப தீபங்கள் காட்டினார்.

பின்னர் அவர்களின் காலடிகளின் அமர்ந்து இருவரின் பாதங்களையும் தன் மடிமீது வைத்து மெதுவாக வருடலானார்.

அனைத்தையும் புன்னகை ததும்பும் முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் மூவரும். அக்ரூரர் மெதுவாகக் கண்ணனிடம் பேசலானார்.

நல்ல வேளையாக நீங்கள் கம்சனை அவனது பரிவாரங்களுடன் அழித்தீர்கள். அத்தனை கஷ்டங்களுக்கும் விடிவுகாலம் பிறந்தது.

நீங்கள் இருவருமே மூலப்பொருள். இயற்கையும் ஜீவன்களுக்குள் பரிணமிப்பவர்களும் தாங்களே. தங்களைத் தவிர இவ்வுலகில் வேறு காரண காரியங்கள் இல்லை.

பஞ்ச பூதங்களும் வெவ்வேறு பொருள்களில் நுழைந்து பலவாறாகத் தெரிவதுபோல் நீங்களும் காரணப்பொருளாக அனைத்து பொருள்களிலும் விளங்குகிறீர்கள்.

ரஜோ குணத்தால் படைக்கிறீர்கள். தமோ குணத்தால் மறைக்கிறீர்கள். ஸத்வ குணத்தால் காக்கிறீர்கள். அந்த குணங்கள் உங்களைக் கட்டுப்படுத்துவதில்லை.

உலகின் நன்மைக்காக வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் வகுத்தீர்கள். மறநெறிச் செல்வோரால் தர்மம் பாதிக்கப்படும்போது  தாங்கள்‌ ஸத்வகுணம் கொண்ட திருமேனி தாங்கி அவதாரம் செய்கிறீர்கள்.

தாங்கள் பூமியின் சுமையை நீக்க வந்தவர். புலன்களுக்கெட்டாதவரே! என் கண்களுக்குப்‌ புலப்படும்படி திருமேனி தாங்கி தங்கள் பொன்னடிகளை இவ்வீட்டில் வைத்து எழுந்தருளியதால் நானும் என் முன்னோரும் பாக்யம் பெற்றோம். இவ்வீடு புனிதத்தலமாயிற்று.
தூய உள்ளம் படைத்த தாங்கள் அண்டியவரின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர். மாற்றமில்லாதவர். குறைகளற்ற கோவிந்தர். பக்தருக்காக தம்மையே தருபவர். ஸத்யமே உருவானவர். 
பகுத்தறிவு கொண்டவர். தம்மை விட்டு வேறு யாரைச் சரணடையமுடியும்?

இந்திராதி தேவர்களும் தங்கள் தரிசனத்திற்காகத் தவமிருக்க எளியேனான என் இல்லத்தைத் தேடி வந்தீர்களே. என்னைப் பிணைத்திருக்கும் மாயவலையை அறுத்தெறியுங்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட கண்ணன் கலகலவென்று சிரித்தான். அவனது சிரிப்பில் மயங்கிய அக்ரூரரைப் பார்த்து 

சித்தப்பா! தாங்கள் மூத்தவர்.  நாங்கள் உங்கள் குழந்தைகள்.

உங்களைப் போன்ற பாக்யசாலி யாருமில்லை. மேன்மையை விரும்புகிறவர்கள் தங்களைப் போன்ற சாதுக்களைப் பூஜிக்கவேண்டும்.
தெய்வ தரிசனம் கூட கிடைத்துவிடும்‌. சாதுக்களின் தரிசனம் துர்லபம் சித்தப்பா. 

நீர்நிலைகளிலுள்ள எல்லா நீரும் புனித தீர்த்தமில்லை. விக்ரஹங்கள் அனைத்தும் தெய்வங்களல்ல. அவற்றில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து தொடர்ந்து பூஜை செய்வதாலேயே ஸாந்நித்யம் நிலைக்கும். ஆனால் சாதுக்களின் தரிசனமோ வாழ்நாளில் ஒருறை பெற்றாலும் போதும். அவர்களின் பார்வையே நம்மைப் புனிதமாக்கும்.

சித்தப்பா! தாங்கள் எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும். என்றான்.

இப்போது அக்ரூரருக்கு மாயையினால்  கண்ணன் தன் குழந்தை என்ற எண்ணம் வந்துவிட்டது. 

சொல் கண்ணா! உடனே செய்வேன். என்றார்.

நம் உறவினரான பாண்டவர்களைப் பற்றிய செய்திகளை அறிந்துவர தாங்களே ‌‌ஏற்றவர். தாங்கள் அஸ்தினாபுரம் செல்லவேண்டும். வீரரான பாண்டு மறைந்ததும் என் அத்தையான குந்திதேவி தன் குழந்தைகளுடன் அஸ்தினாபுரம் சென்று வசிக்கிறாராம். அங்கு அவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லையாம். நீங்கள் சென்று அவர்களின் நலத்தையும், துன்புறுத்தப்படுகிறார்களா என்பதையும் அறிந்து வரவேண்டும். நாம்  பாண்டவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் ஆவன செய்யவேண்டும். நாளைக் காலை கிளம்பிச் செல்லுங்கள் சித்தப்பா.

என்றான்.

நிச்சயம் செல்கிறேன் கண்ணா என்றார் அக்ரூரர். 

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு அண்ணனும் உத்தவரும் உடன் வர அரண்மனைக்குச் சென்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment