Sunday, May 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 448

கம்சனுக்குரிய ஈமச் சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்தான் கண்ணன். பின்னர் உக்ரசேனரைச் சிறையிலிருந்து விடுவித்தான்.

அவரிடம் தன் தாய் தந்தையரை விடுவிக்க அனுமதி கேட்டான் கண்ணன். இப்படி ஒரு குணமா என்று கண்ணீர் பெருக்கினார் உக்ரசேனர்.

குழந்தைகள் இருவரும் ஓடோடிச் சென்றனர் சிறைக்கு.

தங்கள் திருக்கரங்களாலேயே விலங்குகளை அவிழ்த்துவிட்டுப் பணிந்தார்கள்.

பெற்றோரின் நிலையை எப்படிச் சொல்வது? அருவி போல்‌ கண்களில் நீர் பெருக்கினர். ஆயினும் வாரி அணைக்கவில்லை. கண்ணே முத்தே மணியே என்று கொஞ்சவில்லை. 

இவன் இறைவன் என்ற எண்ணம் தடுத்தது. மிகவும் மரியாதையுடன் குழந்தைகளைப் பார்த்துக் கரம் குவித்தனர்.

வசுதேவர் ஞானியாவார். அவரது சங்கத்தால் இத்தனை ஆண்டுகளில் தேவகியும் ஞானியாகிவிட்டிருந்தாள்.

கண்ணன் பிறந்தபோதே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்று ஸ்துதி செய்தவளாயிற்றே. பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையைப் பிரிய நேர்ந்ததால் அன்றைக்கு இவன் எங்கும் நிறைந்தவன் என்ற புகழாரம் ஆறுதல் தந்தது.

இன்று கட்டிளம்பருவத்தில் கண்ணெதிரே நிற்கும் அழகுப்‌பெட்டகத்தை,  வையகத்தோர் அனைவரும் எங்கள் வீட்டுப் பிள்ளையெனக் கொஞ்சும் கண்மணியை பெற்றவள் கொஞ்சாவிட்டால் பகவான் அவதாரம் எடுத்துதான் என்ன பயன்?

தன் மாயையால் அவர்களது ஞானத்தை மறைத்தான் அந்த மாயாவி.

அம்மா! அப்பா! என்று‌ கண்ணனும் பலராமனும் வாய் நிறைய அழைத்தனர். 

சுய உணர்வு வந்ததுபோல் இருவரும் தேம்பினர். கட்டியணைத்துக்கொண்டனர். 

இதற்காகத்தானே இவ்வளவு நாள்கள் காத்திருந்தனர்?
உச்சி மோந்து முத்த மாரி பொழிந்து  மடியில் அமர்த்திக் கொண்டார்கள்.
கண்ணன் சொன்னான்.

பெற்ற குழந்தையால் பெற்றோர்க்கு பயனில்லாமல் போகும் நிலை இவ்வையத்தில் உண்டு. ஆனால், அவர்கள் கூட பிறந்ததுமுதல் தமது மழலையாலும் விளையாட்டுகளாலும் அந்தந்தப் பருவங்களுக்குரிய மகிழ்ச்சியைப் பெற்றோர்க்குத் தருவர்.

எங்களுக்கு அந்த வாய்ப்பு  கிட்டவில்லை. பெற்றோரால் கிடைத்த இவ்வுடலைக் கொண்டு அவர்களுக்குப் பணி செய்து கடனைத் தீர்க்கவே இயலாது.

முதிர்ந்த பெற்றோரையும், மனைவியையும், குழந்தையையும், குருவையும், அந்தணரையும், தன்னைச் சரணடைந்தவரையும், வாய்ப்பும் சக்தியும் இருந்தும் காப்பாற்றாமல் கைவிடுபவன் உயிருள்ள சவமாவான்.

எங்களுக்கு இவ்வளவு நாள்களாக உங்களுக்குப் பணிவிடை செய்ய வாய்ப்பு கிட்டவில்லை. கம்சனுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த எங்கள் குற்றத்தை மன்னியுங்கள்.

செப்பு வாயைக் குவித்தும் சேர்த்தும் கண்ணன் பேசிய அழகைக் கண்ட தேவகியும் வசுதேவரும் மயங்கிப் போனார்கள்.

முதன் முதலில் குழந்தையின் பேச்சைக் காதுகுளிரக் கேட்டார்கள். அவன் என்ன சொன்னான் என்பது உறைக்கவே யில்லை.

நெகிழ்ந்துபோய்ப் பேசாமல் விழிவிரியப் பார்த்துக் கொண்டே இருந்தவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் அரண்மனைக்குச் சென்றனர்.

கண்ணனுக்கு அனைத்து சேவைகளையும் தேவகி விரும்பிச் செய்தாள். அவளே நீராட்டினாள். கண்ணனுக்காக உணவு சமைத்து அதை ஊட்டியும் விட்டாள். ரோஹிணியை  கணவரான வசுதேவரிடம் கொண்டுவிட்டிருந்தார் நந்தன்.

கண்ணனும் பலராமனும் உக்ரசேனரின் அரசவைக்குச் சென்றனர்.
உக்ரசேனர் அரசராகப் பொறுப்பேற்றார்.  

கண்ணன் அரசரைப் பார்த்து, 

போஜராஜரே! நாங்கள்‌ உங்கள் குடிமக்கள். எமக்கும் ஆணையிடுங்கள். யயாதி அரசரின் சாபத்தால் எங்களால் அரியணை ஏற இயலாது. எனவே தாங்களே எங்கள் அரசர்.  தங்கள் ஆணையை சிரமேற்கொண்டு செய்வோம். என்றான்.

பின்னர் அவரது அனுமதியுடன், கம்சனுக்கு பயந்து ஊரை விட்டுச் சென்ற மற்றும் ஒளிந்து வாழ்ந்த யாதவர்கள், வ்ருஷ்ணிகள், அந்தகர்கள், மது, தாசார்ஹர்கள், குகுரர்கள் முதலிய தன் உற்றார் உறவினர்களை அழைத்து வரச் செய்தான். அவர்களுக்கு மரியாதை செய்து அனைவரும் அவரவர் இல்லங்களில் நலமோடு வாழ வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment