Friday, May 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 476

ருக்மிணி தேவி என்ன செய்வதென்று தெரியாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்த சமயம்..

நாதா ஹரே 
ஜகந்நாதா ஹரே
ப்ராணநாதா ஹரே

உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு 
ஸுஸ்வரத்தில் பாடிக்கொண்டு ஒரு சாது வீதி வழியாகச் சென்றார். தலையில் நாம சூத்திரம். தோளில் ஒரு பித்தளை சொம்பு, ஒரு கையில் சிப்ளா கட்டை. ஒரு கையால் தம்பூராவை மீட்டிக்கொண்டு பாடிக்கொண்டு வந்தார்.

மாடத்தில் இருந்த ருக்மிணிக்கு காதில் தேன் பாய்ந்தாற்போலிருந்தது. இறைவனது திருநாமம் கேட்ட மாத்திரத்திலேயே உள்ளத்திலுள்ள துக்கத்தைப் போக்க வல்லதன்றோ..

ஓடோடிச் சென்று அவரது திருப்பாதங்களில் விழுந்தாள். உள்ளே அழைத்து அவருக்கு மரியாதைகள் செய்து பாதபூஜை செய்து தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு தோழிகளுக்கும் தெளித்தாள்.

சாதுக்கள் ஒருவரைப் பார்த்ததுமே ஹ்ருதயத்தை அறிய வல்லவர்கள். இருப்பினும் கேட்டார்.

குழந்தாய்! தாமரை போன்ற உன் முகம் வாடியிருக்கிறதே. உனக்கு ஏதாவது மனக்கஷ்டம் உள்ளதா? நீ விரும்பினால் சொல்லலாம்‌ என்றார்.

ருக்மிணி தோழிகளைப் பார்க்க, ஒருத்தி அப்போதைய நிலைமையைச் சொன்னாள்.

உடனே அவர், நான் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறேன். நீ கலங்காதே அம்மா. நீ கண்ணனுக்கு மிகவும் பொருத்தமானவள். பகவான் கண்ணனின் திருமணத்தில் எனக்கும் ஒரு கைங்கர்யம் கிடைக்கட்டும். நான் இப்போதே சென்று கண்ணனிடம் தெரிவித்து அவரை அழைத்துவருகிறேன்.

அதைக் கேட்டு ருக்மிணி மிகவும் மகிழ்ந்தாலும், காலம் குறுகியிருப்பதால் கவலை கொண்டாள்.
 
என் துன்பத்தில் உதவ தெய்வமே உங்களை அனுப்பியதுபோல் உணர்கிறேன். ஆனால் நான்கே நாள்கள்தான் உள்ளன. நீங்கள் அதற்குள் எப்படி துவாரகை வரை சென்று திரும்ப இயலும்? என்றாள்.

அவர் சிரித்தார்.
கண்ணைத் துடைத்துக்கொள் தேவி. உன் துன்பம் அகன்றது. எனக்கு யோகசக்தி உண்டு. பகவன் நாமம் பாடி உஞ்சவ்ருத்தி எடுத்து ஜீவனம் செய்வதே என் விருப்பமாகையால், சித்திகளைப் பயன்படுத்துவதில்லை. இப்போது உனக்கும் பகவானுக்கும் திருமணம் நடக்க என் யோகசக்தி பயன்படுமானால் அதை விட வேறென்ன பேறு இருக்கிறது? நான் இன்று மாலைக்குள் துவாரகையை அடைந்துவிடுவேன். நீ அனுப்பி நான் கண்ணனைக் காணச் செல்வதன் அடையாளமாக ஒரு கடிதம்‌ எழுதிக் கொடு. அதைக் கொண்டுபோய் இன்றே கமலக்கண்ணனிடம் சேர்ப்பேன். என்றார்.

துள்ளிக் குதித்தாள் ருக்மிணி. நாணத்தில்‌ முகம் சிவக்க, ஓடிப்போய் ஒரு ஓலையில் கடிதம் எழுதிக் கொண்டுவந்தாள்.

அதைக் கையில் வாங்கிய அந்த அந்தணர், ருக்மிணி பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன் யோக சக்தியால் வானில் கிளம்பிச் சென்றார்.

சொன்னபடி அன்று மாலையே துவாரகையை அடைந்தார். கண்ணனின் திருமாளிகை அந்தணர்களுக்கு எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். எந்தக் காவலரும் தடுக்கமாட்டர்கள். நேராக கண்ணன் இருக்குமிடம் சென்றார்.

கண்ணன் அவரைக் கண்டதும் வணங்கி வரவேற்று பாதபூஜை செய்தான். அவர் உணவேற்றதும், அழகிய ஆசனத்தில் அமரச் செய்து, அவர் வந்த காரணத்தை விசாரித்தான்.

அவர் விதர்ப்ப தேசத்து இளவரசியான ருக்மிணியைப் பற்றி எடுத்துரைத்து அவள் உங்களை மணாளனாக வரித்திருக்கிறாள். இந்தக் கடிதத்தை உங்களுக்காகக் கொடுத்தனுப்பியிருக்கிறாள் என்று எடுத்துக் கொடுத்தார்.

ராமாயணத்தில் சிவாம்சமாக ஹனுமான் அவதரித்து ராமனும் சீதையும் சேர்வதற்குத் தூது சென்றார். இருவரையும் இணைத்து வைத்ததால் பெரும்புகழ் பெற்றார். கருடன் தனக்கும் அவ்வாறு ஒரு கைங்கர்யம் வேண்டுமென்று மிகவும்‌ ஆசைப்பட்டார். க்ருஷ்ணாவதாரத்தில் வாய்ப்பு கிடைத்ததும் பயன்படுத்திக் கொண்டார். கருடனே உஞ்சவ்ருத்தி எடுப்பவராக வந்தார் என்று பெரியோர் போற்றுகின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment