Monday, May 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 449

கம்சனால் சின்னாபின்னமாகியிருந்த நாடு, இப்போது கண்ணனால் காக்கப்படுகிறது. 

அமைதியிழந்து தினமும் பயத்தால் விரக்தியடைந்திருந்த மக்களுக்கு இப்போது ஸ்வர்கத்தில் வசிப்பதுபோலாயிற்று. அவர்களின் வாழ்வாதாரங்கள் பேணப்பட்டதோடன்றி கூடுதலாக தினமும் கண்ணனின் தரிசனம்.

ஆனந்தப் பூஞ்சோலையாக விளங்கும் மதுரா நகரத்தில் கண்ணனும் பலராமனும் பல லீலைகள் செய்தனர். அவர்களின் திருமுகத்திலிருந்து பெருகும் அமுதைக் கண்களால் பருகி பருகி அவர்களும் கண்ணனைப் போலவே ஆயினர்.

நந்தனும் மற்ற கோபர்களும்‌ கண்ணன் தங்களுடன் திரும்புவானோ என்ற நப்பாசையில் அங்கேயே சில‌ நாள்கள்‌ தங்கியிருந்தனர்.

ஒரு நாள் காலை கண்ணன் நந்தனை அழைத்து, 

அப்பா! பெற்றோர்க்குத் தம்மைவிடத் தம் புதல்வர்கள் மீதே அதிக அன்பு இருக்கும்.
வளர்க்கவும் காப்பாற்றவும் இயலாமல் பெற்றோரால் கைவிடப்பட்டு தங்களைத் தஞ்சமடைந்த குழந்தைகளை வளர்ப்பவரே உண்மையில் அக்குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.

நாங்கள் இங்குள்ளவர்களை இவ்வளவு காலமாகப் பிரிந்திருந்தோம். எனவே மேலும் சில காலம் இங்கு தங்கி இங்குள்ள உறவினர்களை மகிழ்வித்துவிட்டுப் பின்னர் கோகுலம் வருகிறோம்.
இப்போது நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள். அம்மாவிடமும் சொல்லுங்கள். 

என்று சொல்லி நந்தனுக்கும் கோபர்களுக்கும் நிறைய பரிசுப்பொருள்கள், ஆடை அணிகலன்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொடுத்தான்.

சொல்லற நின்றார் நந்தன். கண்ணனின் பேச்சுக்கு மறு பேச்சே பேசியறியாதவர். இப்போது மட்டும் எப்படிப்‌ பேசுவார்? அவரது கண்களோ‌ நீரைப்‌பெருக்கி உள்ளத்தைக் காட்டிக் கொடுத்தன.

கண்ணன் இறுக்கி அணைத்து விடை கொடுத்தான். அன்பால் தளர்ந்துபோனார் நந்தன். அதற்குமேல் அங்கு தாமதிக்க இயலாமல் கோபர்களுடன் கிளம்பினார்.

வசுதேவர், கண்ணன் பிறந்த அன்று செய்ய வேண்டிய தான தர்மங்களை  மானசீகமாக சங்கல்பம்‌ செய்து கொண்டிருந்தார். கம்சன் அவரை விடுவித்தபோது அவர் சங்கல்பத்தின்படி  தானம் செய்ய முற்பட்டார். அப்போது கம்சன் அனைத்தையும் பறித்துக்கொண்டான்.  இப்போது அவை அனைத்தையும் நினைவு கூர்ந்து அத்தனை தானங்களையும் செய்து முடித்தார்.

பின்னர் இரு குழந்தைகளுக்கும் முறையாக உபநயனம் செய்துவைத்தார். 

குடிலாளகபரனாக, தலை முழுவதும் சுருள் சுருளான கேசத்தை அலங்காரம்‌ செய்து மயில்பீலி துவங்க விளங்கும்  கண்ணன் இப்போது மொட்டைத்தலையும் உச்சிக்குடுமியுமாக  அழகு சொட்டக் காட்சியளித்தான்.

இவ்வைபவத்திற்காக வசுதேவர்  அந்தணர்களுக்கு  ஏராளமான பசுக்களைக் கன்றுக்குட்டிகளுடன்  தானமாக அளித்தார். 

ஜகத்குருவான கண்ணனுக்கு வசுதேவர் காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்ததும் அக்னியைப் போல் ஜொலித்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment