ப்ரமர கீதம்
உத்தவனைக் கண்ட கோபியர் நேரடியாக அவருடன் பேசத் தயங்கினர். அதனால் அங்கு பூக்களைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வண்டை நோக்கிப் பேசத் தலைப்பட்டனர். வண்டை நோக்கிப் பாடப்படுவதால் இந்த கீதம் ப்ரமர கீதம் அல்லது மதுப கீதம் எனப்படுகிறது.
ஒரு கணம் கூட கண்ணனை மறக்க இயலாத கோபியர் அவனது விரஹத்தால் துடித்து பாடப்படும் ஸ்துதியாகும். மேலோட்டமாகப் பார்த்தால் நிந்தா ஸ்துதிபோல் அமையப்பெற்றது. ஆனால் உண்மையில் ஒவ்வொன்றும் கண்ணனின் பெருமைகளையும் ஸ்வரூபத்தையும் சொல்பவையாகும்.
பத்து ஸ்லோகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு கோபியால் சொல்லப்பட்டதென்றோ அல்லது அத்தனை கோபிகளின் சார்பாகவும் ஒருத்தி பேசினாள் என்றோ கொள்ளலாம்.
கண்ணனை வண்டுடன் ஒப்பு நோக்கி அழைக்கிறாள். ஏனெனில் வண்டு ஒவ்வொரு பூவாகச் சென்று அதன் சாரமான தேனை உறிஞ்சிக்கொள்கிறது. பின்னர் அடுத்த மலருக்குச் செல்கிறது. அதுபோல் கண்ணன் ஒவ்வொரு பக்தரிடமும் சென்று அவர்களது சாரமான பக்தியையும் அன்பையும் அனுபவித்து விட்டுப் பின்னர் புதிய பக்தரிடம் கவனம் செலுத்துகிறான் என்கிறார்கள்.
எனில், யாரிடம் தூய்மையான அன்பிருந்தாலும் கண்ணன் வந்துவிடுவான். அவர் புதிய பக்தர், நேற்றுதான் பக்தி செய்யத் துவங்கினார். இவர் பரம்பரையாக பக்தி செலுத்துபவர் என்ற பேதமில்லாதவன்.
உன் (உத்தவன்) கழுத்திலிருப்பது கண்ணன் சாற்றிக்கொண்ட மாலை என்பது எங்களுக்குத் தெரியும். அதில் குங்குமமும் சந்தனமும் அப்பியிருக்கிறது. பொதுவாக ப்ரும்மச்சாரிகள் இவற்றை ஏற்பதில்லை. எனில் கண்ணனிடம் மயங்கிய மதுரா நகரப் பெண்களின் சந்தனமே மாலையில் அப்பியிருக்கிறது. அதை நீ போட்டுக் கொண்டதால் உன் மீசையிலும் குங்குமம் அப்பியிருக்கிறது. அப்படிப்பட்ட கண்ணனின் தூதன் நீயென்று அறிவோம் என்பதாகும்.
திருமகளே மோஹிக்கும் அழகுடையவன் கண்ணன். எனில் மதுரா நகரப் பெண்கள் எம்மாத்திரம்? இது அவனது தோஷமல்ல. அவனது அழகு அனைவரையும் மயக்கக்கூடியது என்பது மறைபொருள்.
மற்ற பெண்களின் பிரசாதம் எங்களுக்கு வேண்டாம். அதை நீயே வைத்துக்கொள் என்கிறார்கள். என்றால் கண்ணன் வந்தால் வரட்டும். அதுவரை அவனது விரஹமே சுகம். அன்புக்காக ஏங்கினால் கண்டிப்பாக வருவான். பிரசாதம் கொடுத்து தாபத்தை சமனப்படுத்திவிட்டால் அவனது வருகை தாமதமாகலாம். எனவே வேண்டாம் என்பதாம்.
ஹே வண்டே! உன்னைப் போன்றவன்தான் கண்ணனும். நீயும் கறுப்பு. அவனும் கறுப்பு. அவனது அன்பை ஒருமுறை அனுபவிக்கச் செய்துவிட்டுச் சென்றுவிட்டான். இப்போது அவனது கதாம்ருதத்தால் உயிர் வாழ்கிறோம். எப்படித்தான் லக்ஷ்மி அவனைவிட்டு நீங்காமல் இருக்கிறாளோ. அவ்வப்போது அவன் புகழ்ந்து பேசும் சொற்களைக்கேட்டு மயங்கியிருப்பாள் போலும். என்றால், கண்ணன் இருக்குமிடத்தில் மஹாலக்ஷ்மி நித்யவாசம் செய்கிறாள் என்பதாம்.
நாங்கள் வீடு வாசலற்ற நாகரிகமற்ற காட்டுவாசிகள். உம் அரசனின் புகழை இங்கு பாடிப் பயனில்லை. மதுரா நகரத்து நாகரிக யுவதிகளிடம் சென்று அவன் புகழைப் பாடினால் நல்ல பரிசு கொடுப்பார்கள். அங்கு சென்று அவன் புகழைப் பாடுவாயாக. கண்ணன் புகழைப் பாடினால் பரிசாக நான்கு புருஷார்த்தங்களும் நிச்சயம் என்பது பொருளாம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment