Saturday, December 15, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 173 புவனகோச வர்ணனை - 4

ஸ்ரீ மத் பாகவத பழம் - 173

புவனகோச வர்ணனை - 4


ஸ்ரீ சுகர் ஜம்பூத்தீவைச் சுற்றி அடுக்கடுக்காக விளங்கும் ப்லக்ஷத்தீவு, சால்மலித்தீவு, குசத்தீவு, க்ரௌஞ்சத் தீவு, சாகத்தீவு  மற்றும் புஷ்கரத்தீவு ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதற்கப்பால் விளங்கும் லோகாலோக பர்வதத்தைப் பற்றியும், ப்ரபஞ்ச இடைவெளி பற்றியும் விவரிக்கிறார்.

குவலயத்தில் சூரிய ஒளி படும்‌ இடத்தையும் சூரிய ஒளி படாத இடத்தையும்‌பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ளது லோகாலோக பர்வதம்.
அதற்கப்பால் உள்ள நிலம்‌ தங்கமயமானது. அது தேவர்கள் மட்டுமே வசிக்கத் தகுந்தது.

மூவுலகங்களுக்கும் அப்பால் எல்லையாக அம்மலை விளங்குகிறது.

இதற்கு அப்பால் பூமண்டலத்தை நிறுத்துவதற்காக ப்ரும்மா ருஷபம், புஷ்கரசூடம், வாமனம், அபராஜிதம் என்ற நான்கு யானைகளை நிறுத்தியுள்ளார்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆத்மாவாக விளங்கும் பகவான், விஷ்வக்சேனர் மற்றும் பரிவாரங்களுடன் புவன கோசத்தைக்  காப்பதற்காக லோகாலோக பர்வதத்தின் மீது கல்பகாலம் முடியும் வரை வீற்றிருக்கிறார்.

லோகாலோக பர்வதத்திற்கு உட்பட்ட பூமியின் பரப்பளவை விரிவாகப் பார்த்தோம். அதற்கு மேல் உள்ளவற்றை யோகபுருஷர்களால் மட்டுமே அறியமுடியும். 

ஆகாயத்திற்கும் பூமிக்கும்‌இடையே உள்ள ப்ரும்மாண்டத்தின் நடுவே சூரியன் இருக்கிறார். சூரியனுக்கும் அண்டகோளத்திற்கும் இடையே உள்ள தூரம் இருபத்தைந்து கோடி யோஜனை.

உணர்வற்ற அண்டத்தின் மத்தியில் வைராஜனாக விளங்குவதால் அவருக்கு மார்த்தாண்டன் என்று பெயர்.

பொன்மயமான ப்ரும்மாண்டத்திலிருந்து தோன்றியவர். அதனால் ஹிரண்யகர்பன் எனப்படுகிறார்.

சூரியனால்தான் திசைகள், ஆகாயம், விண்ணுலகம், பூவுலகம், ஸ்வர்கம், மோக்ஷம், நரகம், ரஸாதலம் இன்னும் பலவகையான உலகங்களும்‌பிரித்தறியப்படுகின்றன.

சூரியபகவான் தேவர்கள், விலங்கினங்கள், மனிதர்கள், ஊர்வன, செடி கொடிகள், மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவற்றின் செயல்களுக்கும் சாட்சியாக விளங்குகிறார்.
இவரே கண் எனும் புலனின் தேவதையானதால் அனைவரும் பார்க்கும் ஒளியாகவும் விளங்குகிறார்.

பூமண்டலத்தின் அமைப்பு, அளவு, இலக்கணம் உருவம் ஆகியவை விளக்கமாகக்‌கூறப்பட்டது. அவரைவிதையின் ஒரு தளத்தின் அளவு தெரிந்து கொண்டால் மற்றதின் அளவை ஊகிக்க இயலும். அதுபோல் பூமியின் அளவைக் கொண்டு  விண்ணுலகின் அளவை ஊகித்தறிய இயலும். இவை இரண்டையும் இணைப்பது அந்தரிக்ஷ உலகம்.

அந்தரிக்ஷத்தின் நடுவில்தான் சூரியன் இருக்கிறார்.

தன் வெயிலால் மூவுலகங்களையும் எரிக்கிறார். ஒளியால் ப்ரகாசப்படுத்துகிறார். உத்தராயணம் (மெதுவாகச் செல்லுதல்), தக்ஷிணாயணம் (வேகமாகச் செல்லுதல்), விஷு (சீராகச் செல்லுதல்) என்று மூன்று நடைகளில் செல்கிறார்.

சூரியன் மேஷராசி (சித்திரை மாதம்) மற்றும்  துலா ராசி (ஐப்பசி) யில்  செல்லும் சமயம், பகலும்‌ இரவும்‌ சமமாக இருக்கும். 

ரிஷப ராசி முதல் (வைகாசி முதல் புரட்டாசி) ஐந்து ராசிகளில் செல்லும்போது ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு நாழிகை (24 நிமிடங்கள்) வீதம்‌ குறைந்து கொண்டே வரும். அதற்கேற்ப பகல்‌ நீளும்.

விருச்சிகம் (கார்த்திகை) முதலிய ஐந்து ராசிகளில்‌ இருக்கும்போது பகலிரவு நேரங்கள்‌ இதற்கு மாறாக அமைகின்றன. அதாவது இரவு அதிகமாகி பகல்‌ குறையும்.

தக்ஷிணாயணத்தில்‌ இரவு அதிகமாகவும், உத்தராயணத்தில் பகல் அதிகமாகவும் இருக்கும்.
ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயணம். தை முதல் ஆனி வரை உத்தராயணம்.

மானஸோத்தர மலையை சூரியன் வலம் வர ஒன்பது கோடியே ஐம்பத்தோரு லக்ஷம் யோஜனை தூரம் ப்ரயாணம் செய்ய வேண்டும்.

மானஸோத்தர மலையிலுள்ள மேருமலையின் கிழக்கே தேவதானீ என்ற இந்திரனின் நகரமும், தெற்கே ஸம்யமனீ என்ற யமபட்டணமும், மேற்கே நிம்லோசனீ என்ற வருணனின் நகரமும், வடக்கே சந்திரனின் நகரமான விபாவரியும் உள்ளன. இந்நகரங்களின் காலங்களுக்கேற்ப ஆங்காங்கே சூர்யோதயம், அஸ்தமனம், உச்சி, சந்த்யாகாலம், இரவு ஆகியவை மாறுபடும்.

மேருவில் இருப்பவர்களை சூரியன் உச்சிவெயிலில் கொளுத்துகிறார். அவர் தன் மார்கத்தின்படி அஸ்வினி முதலான நக்ஷத்ரங்களின் வழியாக இடப்புறமாகச் சென்றாலும், ஒளிமண்டலங்கள் வலப்புறமாகச் சுழலும்  காற்றினால் அலைக்கழிக்கப்படுவதால்  அவரும் வலப்புறம் செல்வதாகத் தோன்றுகிறது.

சூரியன் கிழக்கே இந்திர லோகத்திலிருந்து யமனின் தென் திசை வரை செல்வதற்கு பதினைந்து நாழிகையில் (ஆறு மணி நேரத்தில்) இரண்டு கோடியே முப்பத்தேழு லட்சத்து ஐமதாயிரம் யோஜனைக்கு சற்று அதிகமான தூரத்தைக் கடக்கவேண்டும்.

அவ்வாறே பயணித்து வருணன் மற்றும் சந்திரனின் திசைகளையும் கடந்து கிழக்கை அடைகிறார்.

இவ்வாறு சூரியனின் தேர் 90 நிமிடங்களில் முப்பத்து நான்கு லட்சத்து எண்ணூறு யோஜனை தூரம் பயணிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசம் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment