Sunday, December 16, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 174 புவனகோச வர்ணனை - 5

சூரியப்பாதை -2

சூரிய ரதத்தின் ஒரு சக்கரம் பன்னிரண்டு மாதங்கள் என்னும் பன்னிரண்டு ஆரக்கால்கள்‌ கொண்டது. ஆறு பருவங்களான ஆறு நேமிகளைக்‌ கொண்டது. ஒரு குடத்திற்கு நான்கு மாதங்கள் வீதம் மூன்று குடங்களைக் கொண்டது. அதன் அச்சின் ஒரு நுனி மகாமேருவின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 
மற்றொரு நுனி மானஸோத்தர மலையில் கட்டப்பட்டுள்ளது.


இந்த அச்சில் கோக்கப்பட்ட சூரிய சக்கரம் எண்ணெய் செக்கின் சக்கரம் போல் சுழன்று கொண்டே மானஸோத்தர மலையின் மேல் சுற்று வருகிறது.

அச்சின் மேல்முனை எண்ணெய்ச் செக்கின் அச்சுபோல் துருவ மண்டலத்தின் வாயு பாசத்தினால் கோக்கப்பட்டுள்ளது.

இந்த ரதத்தின் தேர்த்தட்டு முப்பத்தாறு லட்சம் யோஜனை நீளமானது. அதன் கால்பங்கான ஒன்பது லட்சம் யோஜனை அகலமுடையது. 

இதன் நுகத்தடியியும் முப்பத்தாறு லட்சம் யோஜனை அளவுள்ளது. இந்த நுகத்தடியில்  காயத்ரி, உஷ்ணீக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ரிஷ்டுப், ஜகதீ என்ற சந்தஸ்ஸுகளின் பெயர்கள் கொண்ட குதிரைகள் கட்டப்பட்டுள்ளன. 

சூரிய பகவானின் தேரோட்டியின் பெயர் அருணன்.
அவர் ப்ரும்மதேவரால் இப்பணியில் அமர்த்தப்பட்டவர்.

சூரியனுக்கெதிரில்  ஸ்வஸ்தி வசனம் (நல்வாக்கு) கூறுவதற்காகவே ஒரு கணு அளவு உயரமுள்ள வால்கில்யர்கள் என்ற அறுபதாயிரம் மஹரிஷிகள் ப்ரும்மாவால்‌ நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சூரியனைத் துதிப்பதே..

இவர்களைத்தவிர 
ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், தேவதைகள் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருடன் சூரியனைப் பூஜிக்கிறார்கள்.

பரீக்ஷித் கேட்டார்

ரிஷிஸ்ரேஷ்டரே! சூரியன் மேஷம் முதலிய ராசிகளின் வழி செல்லும்போது மேரு, த்ருவமண்டலம் இரண்டிற்கும்  வலப்புறமாய்ச் செல்வதாகத் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறல்ல என்று கூறினீர்களே. அது எவ்வாறு?

ஸ்ரீ சுகர் கூறினார் - குயவன் சுற்றும் சக்கரத்தின் மேல் அமர்ந்து சுற்றும் எறும்பின் பாதை வேறு. ஆனால் சக்கரத்தின் மேலும்‌ அது ஒரே இடத்தில் இல்லாமல்‌ நகரும். 

அதுபோலவே நக்ஷத்ரங்கள்,  ராசிகள், மற்றும் சூரியன் ஆகியவை தனித்தனியே தத்தம் பாதையில் வெவ்வேறு வேகத்தில் சுற்றுகின்றன. அவற்றின் காலமும் மாறுபடுகிறது.

வேதங்களும் சான்றோர்களும் சாக்ஷாத் ஸ்ரீ மன் நாராயணனே ஆன சூரிய பகவானின் வழியை அறிந்து அவரது சஞ்சாரத்தின்படி தங்கள் கர்மங்களை வகுத்துக்கொள்கிறார்கள்.

மேலும்,அனைத்து உலகங்களின் ஆன்மாவாகிய சூரிய பகவான் பூமிக்கும், விண்ணுலகிற்கும் இடையே உள்ள ஆகாய மார்கத்தில் காலச் சக்கரத்தில் நின்றுகொண்டு மேஷம்‌ முதலிய ராசிகளில்‌ தங்கி பன்னிரண்டு மாதங்களையும்‌ அனுபவிக்கிறார்.


இதில் மாதம் என்பது சந்திரனின் பயணத்தின்படி வளர்பிறை‌, தேய்பிறை என்று இரு பாகங்கள் கொண்டது. பித்ருக்களின் கணக்குப்படி பகல் இரவு எனவும் சூரியனின் கணக்குப்படி இரண்டேகால் நக்ஷத்திரங்கள் எனவும் கூறப்படுகிறது. சூரியனின் வருடத்தில் ஆறில் ஒரு பங்கு, இரண்டு மாதங்கள் ஒரு ருது (பருவம்) எனப்படும்.

ஆகாய மார்கத்தில் சூரியனின் சரிபாதி பாதையைக்  கடப்பதற்கு ஆகும் நேரம் (ஆறு மாதம்) அயனம் என்கின்றனர்.

சூரியனுக்கு மேல் ஒரு லட்சம் யோஜனை தூரத்தில் சந்திரன் இருக்கிறார். இவருடைய வேகம் அதிகம் என்பதால் நக்ஷத்திரங்களுக்கும்‌ முன்னால் இருக்கிறார். ஸூரியன் ஒரு வருடத்தில் கடக்கும் பாதையை இவர் ஒரு மாதத்தில் கடக்கிறார். ஒரு பட்சத்தின் பாதையை ஒரு நாளில் கடக்கிறார்.

வளர்பிறையில் வளரும் கலைகளால் தேவர்களுக்கும்,  தேய்பிறையில் தேயும் கலைகளால் பித்ருக்களுக்கும் பகல் இரவு ஆகியவற்றை ஏற்படுத்துகிறார்.

பதினாறு கலைகள் கொண்ட சந்திரன் மனத்திற்கு ஆதாரமாவார். மனத்திற்கு ஆதார்மானதால் மனோமயன் என்றும், தானியங்களின் செழிப்பிற்குக் காரணமானதால் அன்னமயன் என்றும் அமுத கிரணங்கள் உடையதால் அம்ருதமயன் என்றும், அனைத்து ஜீவராசிகளின் செழுமைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமானதால் ஸர்வமயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சந்திரனுக்கு மேல் மூன்று லக்ஷம் யோஜனை தொலைவில் அபிஜித் என்னும் நக்ஷத்ரத்தையும் சேர்த்து இருபத்தெட்டு நக்ஷத்ர மண்டலங்கள் உள்ளன. இவையும் மேருவை வலமாகச் சுற்றி வருகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment