ஸ்ரீ சுகர் மனிதன் படும்
அத்தனைவிதமான துன்பங்களையும் பல்வேறு விதமான உவமைகளோடு விளக்கிக்கூறினார். சுகர்
வர்ணிக்காத துன்பங்களே இல்லை எனும் அளவிற்கு, அனத்துக் கஷ்டங்களையும் மிக விரிவாக
வர்ணிப்பதன் மூலம், படிப்பவர் மற்றும் கேட்பவர் மனத்தில் திடமான வைராக்யத்தை மிக
அழகாக விதைக்கிறார்.
அதன் பிறகு பரதரின்
பெருமைகளைக்கூறினார்.
பரதர் மான் பிறவியை
விடும்நேரத்தில் பகவான் ஸ்ரீ ஹரியை நினைந்து வணங்கினார். அதன் வாயிலாக ஞானத்தை
அடைந்து அந்தண குலத்தில்பிறந்து யோகீஸ்வரராகத் திகழ்ந்தார்.
இந்தச் சரித்திரம் எல்லா
நலன்களையும் அளிக்க வல்லது. நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் தரவல்லது. இதைச்
சொல்பவர் மற்றும் கேட்பவர் அனைவரின் விருப்பங்களும் தாமாகவே நிறைவேறும்.
பிறரிடம் எதையும் எதிர்பார்க்காத நிலையை அடைவர்.
இதன் பின்னர் பரதரின்
வம்சத்தைப் பற்றிக் கூறினார் ஸ்ரீ சுகர்.
பரதருடைய மகன் ஸுமதி ஆவார்.
அவர் ரிஷபதேவரின் வழியைப் பின்பற்றினார். கலியுகத்தில் மறநெறி தழுவும்
நாத்திகர்கள் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் வேதநெறியை விட்டு விலகி, அவருடைய புற
ஒழுக்கத்தை மட்டும் ஏற்று, அவரை தெய்வமாகக் கற்பனை செய்யப்போகிறார்கள்.
ஸுமதியின் மனைவி
வ்ருத்தஸேனைக்கு தேவாதாஜித் என்பவன்பிறந்தான். அவன் மனைவி தேனுமதி. அவர்களது
புதல்வன் பரமேஷ்டி.
பரமேஷ்டியின் மனைவி
ஸுவர்ச்சலை. அவர்களது புதல்வன் ப்ரதீஹன். இவர் மற்றவர்க்கு ஆன்ம வித்தையை
உபதேசம்செய்து தானும் மனத்தூய்மை பெற்று பகவானை நேரடியாக அனுபவித்தார்.
ப்ரதீஹனின் மனைவி
ஸ்வர்ச்சலை. அவர்களது மகன்கள் ப்ரதிஹர்த்தா, ப்ரஸ்தோதா, உத்காதா ஆகிய மூவர்.
அவர்கள் வேள்விகளில் சிறந்து விளங்கினர். அவர்களது புதல்வர்கள் அஜன், பூமா
இருவருமாவர்.
பூமா என்பவனின் மனைவி
ரிஷிகுல்யை. அவளது மகன் உத்கீதன். அவன் மனைவி தேவகுல்யை. அவளது புதல்வன்
ப்ரஸ்தாவன். அவன் மனைவி நியுத்ஸை. அவர்களது மகன் விபு. விபுவின் மனைவி ரதி.
அவர்களது புதல்வன் ப்ருதுஷேணன். அவனது மனைவி ஆகூதி. அவளது மகன் நக்தன். அவனுக்கு
த்ருதி என்பவளிடம் கயன் ஆவான்.
இவன் சிறந்த அரசனாகத்
திகழ்ந்தான். மிகவும் உயர்ந்த புருஷனாகக் கருதப்பட்டான். மாமன்னனான கயன் மக்களைக்
காத்தல், மகிழ்வித்தல், ஊக்குவித்தல், அடக்குதல் முதலிய அலுவல்களை முறை தவறாது
ஆற்றினான். அனைத்துச் செயல்களையும் பகவத் அர்ப்பணமாகச் செய்தான்.
இவ்வாறு அவன் முறையாக
தர்மத்தைப் பின்பற்றியதாலும், சாது சேவையாலும் பக்தியோகம் சித்தித்தது.
எப்போதும் இறைசிந்தனை
ஏற்பட்டு , உள்ளத் தூய்மை பெற்றான். அஹங்காரத்தை நீக்கி ப்ரும்மத்தை
அனுபவிக்கலானார். ஆனால், எந்தவிதப் பற்றுதலும் இன்றி அரசாட்சி நடத்திவந்தார்.
அனைத்து சான்றோர்களும்
அவனது பெருமையைப் பாடினர். சிரத்தை, தயை, நட்புணர்வு ஆகியவற்றால் தேவலோகத்தார்
அவனுக்கு கங்கை நீரினால் அபிஷேகம் செய்தனர். அவர் விரும்பாவிட்டாலும், பூமி கயனது
நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்து அனைத்து செல்வங்களையும் வாரிக் கொடுத்தாள்.
அவர் விரும்பாவிடினும்,
செய்த கர்மங்கள் அனைத்து போகங்களையும் அளித்தன. அந்தணர்கள் தக்ஷிணைகளால்
மகிழ்ச்சிகொண்டு தங்களுடைய புண்ய பலன்களில் ஆறில் ஒரு பங்கை அரசனுக்களித்தனர்.
இந்திரனுக்கு கயன் செய்த
வேள்விகளின் ஸோமரசத்தை உண்டு உண்டு மதம் பிடித்தது. மிகவும் தூய்மையான பக்தியோடு
அவர் அளித்த ஹவிர் பாகத்தை ஸ்ரீ மன் நாராயணன் நேரில் வந்து பெற்றுக்கொண்டு மிகவும்
த்ருப்தியடைந்தார்.
பகவான் தன்னிறைவு பெற்றவர்.
ஆயினும் கயனிடத்து மிகுந்த ப்ரீதியுடன் இருந்தார்.
கயனுக்கு கயந்தி என்ற
மனைவியிடம் சித்ரரதன், ஸுகதி, அவரோதனன், என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர்.
சித்ரரதனனின் மனைவி ஊர்ணை.
அவளுக்கு ஸம்ராட் என்பவன் பிறந்தான். ஸம்ராட்டின் மனைவி உத்கலை. அவளுக்கு
பிறந்தவன் மரீசி. மரீசிக்கு பிந்துமதி என்பவளிடம் பிந்துமான் தோன்றினான். அவனுக்கு
ஸரகையிடம் மது என்பவன் பிறந்தான்.
மதுவின் மனைவி ஸுமனஸ்.
அவளது மகன் வீரவ்ரதன். அவன் மனைவி போஜை. அவர்களுக்கு மந்து, ப்ரமந்து என்ற இருவர்
பிறந்தனர். மந்துவின் மனைவி ஸத்யை. அவளது புதல்வன் பௌவனன். அவன் வி தூஷணை. அவளது
மகன் த்வஷ்டா. த்வஷ்டாவின் மனைவி விரோசனை. அவளுக்குப் பிறந்தவன் விரஜன். விரஜனுக்கு
விஷூசியிடம் ஸதஜித் முதலான நூறு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.
விரஜனைப் பற்றி அனைவரும்
புகழ்ந்து உரைக்கின்றனர். ப்ரியவிரதனது வம்சத்தின் கடைசி அரசனான விரஜன்
அவ்வம்சத்தைத் தன் புகழால் அலங்கரித்தான் என்கின்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ
முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment