ஜடபரதர் மேலும் கூறலானார்.
பரிபூரண ஞானம் ஒன்றே சத்யமானது. தூய்மையானது. இரண்டற்றது. உள்ளும் புறமும் என்ற வேறுபாடற்றது. அமைதியானது. எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லை என்றாகாதது. அதைத்தான் பகவான் என்றும் வாசுதேவன் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ரஹூகணா! சாதுக்களின் திருவடித்துகளில் நீராடு. அப்போதுதான் பகவானைப் பற்றிய ஞானத்தை உணர இயலும். தவம்செய்வதாலோ, வேள்விகளாலோ, விரதமேற்பதாலோ, வேறெந்த சாதனைகளாலுமோ அறிய இயலாது.
இதைக் குறிக்கும் குருநாதர் எழுதிய மதுரகீதத்தின் வரிகள்.
உண்டென்றிரு - ப்ரும்மம் ஒன்றென்றிரு
குருபத த்யானமே நன்றென்றிரு.
குருபத த்யானமே நன்றென்றிரு.
எதனால் அப்படி?
சான்றோரின் அவையில் உலக விஷயங்களைப் பற்றிய பேச்சு இருக்காது. இறைவனுடைய கல்யாண குணங்களையே எப்போதும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பார்கள்.
தினந்தோறும் பகவானின் திருக்கதைகளைப் பருகுதல் சுலபமாக பகவானின் திருவடித் தாமரைகளில் மனத்தை லயிக்கச் செய்யும்.
ஒரு கல்யாணத்திற்குச் சென்றால், நமக்கு மகிழ்ச்சியான உணர்வு இல்லாவிடினும், அங்கு பலர் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருப்பதைக் காணும்போது நமக்கும் மனத்தில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
ஒரு துக்கம் நடந்த வீட்டிற்குச் சென்றால் நம்மை அறியாமல் மனத்தை துக்கம் பீடிக்கும்.
மகிழ்ச்சி, துக்கம் என்பதுபோல் பக்தியும் ஒரு உணர்வு. பக்தி மிகுந்த ஒருவரின் அல்லது சாதுக்களின் சங்கத்தில் உடலைக் கொண்டுபோய்க் கட்டாயமாகவாவது போட்டால், நாளடைவில் பக்திஉணர்வு மனத்தில் தொற்றிக்கொள்ளும்.
உறுதியான பக்தி ஏற்படச் சுலபமான வழி சாது சங்கமே.
முற்பிறவியில் நான் பரதன் என்ற மஹாராஜனாக இருந்தேன். இஹபர விஷயங்களில் வெறுப்பு கொண்டு பகவானை ஆராதனம் செய்துவந்தேன். ஆனால், தற்செயலாக ஒரு மான்குட்டியின் மேல் வைத்த பாசத்தினால் முக்திநிலையை எட்டும் தன்மையை இழந்து, அடுத்த பிறவியில் மானாகப் பிறந்துவிட்டேன்.
ஆனால், முற்பிறவியில் செய்த பக்தியும், ஆராதனைகளும் வீண்போகவில்லை. எந்த நினைவும் என் மனத்தை விட்டு அகலவில்லை.
இருப்பினும் தவறுதலாக மக்களின் தொடர்பு பற்றிக்கொள்ளுமோ என்று ஐயத்தில் பற்றுதலின்றி எவர்க்கும் தெரியாமல் ஒளிந்து வாழ்கிறேன்.
மானுடப் பிறவி பெற்றவன், பற்றற்ற சான்றோரின் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு ஆன்ம ஞானம் பெற முயற்சிக்கவேண்டும்.
பகவானின் கல்யாண குணங்களை வாயாரப் பாட வேண்டும். காதாரக் கேட்க வேண்டும்.பக்தியுணர்வைப் பெற்று இந்த சம்சாரத்தை வெகு எளிதில் கடந்துவிடலாம்.
இவ்வாறு கூறிய அந்தணர் மேலும் இந்த ஸம்சாரத்தைக் கொடிய இருள் மிகுந்த, ஆபத்து நிறைந்த காடு எனச் சொல்லி ஏராளமான உதாரணங்களுடன் வர்ணிக்கிறார். இவ்வாறு அவர் செய்வது சீடனின் மனத்தில் ஏற்பட்டுள்ள சம்சாரப் பிடிப்பை அக்கணமே களைய வேண்டும் என்ற பெருங் கருணையால்தான்.
சம்சாரக் காட்டில் ஆறு திருடர்கள் (புலன்கள்) உள்ளனர். அவர்களுக்குத் தலைமையேற்று ஜீவன் ஆனந்தம் என்ற பெரும் சொத்தைக் கொள்ளையடிக்கிறான். பயங்கரமான துன்பங்கள் நிறைந்தது அக்காடு. ஏராளமான புதர்கள், புதைகுழிகள், கொசு, பயங்கர விலங்குகள், விஷ ஜந்துக்கள் இவைகளின் நடுவே கந்தர்வ நகரம் போன்ற ஒரு மாயத்தோற்றம் கொண்டது. அதை உண்மை என்று நம்பி அதை அடைய விழைகிறான்.
ஒவ்வொரு விஷயத்தின் மேலும் பற்று வைத்துக் காட்டில் அலைகிறான்.
திடீரென்று தாகம் மேலிட்டால் நீரை நோக்கி ஓடுவான். அது உண்மையான நீரல்ல, கானல் நீர் என்பதையும் உணரமாட்டான்.
அவனுக்கு நிலையான இருப்பிடமோ, செல்வமோ, தடையற்ற உணவோ கிடைக்காது. அவ்வப்போது கிடைப்பவற்றை உண்டு அதையே சாஸ்வதம் என்று நம்புவான். அது நீங்கியதும் ஓலமிடுவான்.
பெருகிய குடும்பத்தைச் சுமக்க இயலாமல், கோபம், பகை முதலியவற்றைக் குடும்பத்தார் மீதே காட்டுவான்.
அற்பச் சுகங்களைத் தேடிப்போகும் நேரம், பல அவமானங்களைச் சந்திப்பான்.
சம்சாரம் எனும்கொடிய காட்டில் கைப்பொருளின்றி வாடி வதங்கும் ஜீவன் மரித்துப்போனால், அவனை விட்டுப் பயணத்தைத் தொடர்வார்கள் அவனைச் சேர்ந்தவர்கள்.
அடுத்த வேளை பசி வந்ததும் இவ்வளவு நாள் காத்தவனை மறந்து உணவை ஏற்பார்கள்.
எண்திசையை வெற்றிகொள்ளும் சக்தி பெற்றவர்களும் சம்சாரக் காட்டினின்று தப்பிக்க இயலாமல் அழிந்துபோகிறார்கள்.
ரஹூகணா! நீயும் இந்த வழியில் உழலாதே! அனைவரிடத்தும் அன்பு கொள். அனைத்திலும் பற்றை ஒழி. பகவத் பக்தியால் கூர்மையாக்கப்பட்ட ஞானம் எனும் வாளின் துணைகொண்டு சம்சாரக்காட்டைக் கடந்து விரைவில் செல்.
தேடி வந்தனையே! எனை நீ நாடி வந்தனையே!
முன்னோர் செய்த தவப்பயனோ
நல்லோர் அளித்த நல்வரமோ
முற்பிறவிகளின் புண்ணியம்தானோ அல்லது நான் செய்த பூஜாபலனோ
நல்லோர் அளித்த நல்வரமோ
முற்பிறவிகளின் புண்ணியம்தானோ அல்லது நான் செய்த பூஜாபலனோ
என்று துள்ளிக் குதித்தான்.
பலமுறை பரதரின் தாள்களில் விழுந்து விழுந்து வணங்கினான்.
என் ஐயமெல்லாம் நீங்கப்பெற்றதே. கருணைக்கடலே என்று ஆர்ப்பரித்தான்.
என்னைப்போன்ற அறிவிலிகளைக் கரையேற்ற வந்தீரோ என்று அவரைச் சுற்றி சுற்றி வந்தான்.
ஜடபரதரோ ஆழ்கடலைப்போல் அமைதியாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் ரஹூகணன் சிலகாலம் அப்பெருந்தகையுடனேயே இருந்து சேவை செய்து, இவ்வுடலே ஆன்மா என்ற எண்ணத்தை அறவே ஒழித்தான். வெகு சீக்கிரம் அறியாமை நீங்கி ஞானத்தை அடைந்தான்.
ஜடபரதரோ ஒன்றும் நடவாததுபோல் அமைதியாகக் கிளம்பி சங்கல்பமற்று உலகில் உலா வரலானார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment