ஆறாவது ஸ்கந்தம்
ப்ராயசித்தம்
பாவங்களுக்காகச் செய்யப்படும் ப்ராயசித்த கர்மாக்கள் பாவங்களைப் போக்கும். ஆனால், மீண்டும் பாவம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தைப் போக்காது. இன்னும் சொல்லப்போனால், ப்ராயசித்தம் இருக்கிறதே என்ற தைரியத்தில் பாவம் செய்யத் தூண்டுகோலாகிவிடக்கூடும் அபாயம் உள்ளது. என்றார் ஸ்ரீ சுகர்.
ஸமர்த்த ராமதாசர் என்ற மஹாத்மா மஹாராஷ்ட்ர தேசத்தில் வசித்துவந்தார். ராமபக்தரான இவர் ஞானியாவார். பெரியோர்கள் இவரை ஹனுமானின் அவதாரம் என்று சொல்கின்றனர். சத்ரபதி சிவாஜியின் குருவாவார்.
இவர் ஒரு சமயம் கோதாவரி நதிக்கரையில் நடந்து கொண்டிருந்தார். இடுப்பில் கோமணம், தோளில் ஒரு பை. அவ்வளவுதான் அவரது உடைமை.
மஹாத்மாக்கள் செய்வதனைத்தும் பகவானின் லீலையே தவிர, வேறொன்றுமில்லை. அவர் சிற்சிறு கற்களைப் பையிலிருந்து எடுத்து வானத்தில் பறக்கும் பறவைகளைக் குறிவைத்து அடித்தார்.
அடிபட்டுக் கீழே விழும் பறவைகளைப் பிடித்துப் பையில் போட்டுக்கொண்டே போனார்.
பார்த்தவர்கள் அனைவர்க்கும் வியப்பு, கோபம். ஆனாலும் அவரிடம் கேட்க பயம்.
அங்கே நதிக்கரையில் சில அந்தணர்கள் இருந்தனர். இவரது செயலைப் பார்த்துக் கோபமுற்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
பெரிய மஹாத்மாவாம். பண்ற காரியத்தைப் பார்த்தியா?
இதெல்லாம் தப்புன்னு தெரியாதா?
இப்படியெல்லாம் பண்றவர் எப்படி மஹாத்மாவா இருக்கமுடியும்?
சத்தமா பேசாத. ராஜகுரு. ராஜாவுக்குத் தெரிஞ்சா நம்ம தலையை வாங்கிடுவான்.
இருந்தாலும் இவரை இப்படியே விடக்கூடாது.
நாம என்ன பண்ணமுடியும்?
இப்ப பாருங்கோ..
சொன்னவர் ராமதாசரிடம் வந்தார்.
ஸ்வாமி, இப்படி உயிக்கொலை பண்றேளே. தப்பில்லையா?
தப்பா?
என்ன ஸ்வாமி இப்படிக் கேக்கறேள். தப்பு மட்டுமில்ல. மஹாபாவம்.
அப்படியா? பாவமா? தெரியாம பண்ணிட்டேனே. இப்ப நான் என்ன பண்றது?
நான் ப்ராயசித்தம் பண்ணிவெக்கறேனே.
ஓ.. ப்ராயசித்தம் பண்ணினா பாவம் போயிடுமா?
போயிடும் ஸ்வாமி..
சரி. பண்ணி வைங்கோ.
அந்த அந்தணர் இன்னும் சிலரைச் சேர்த்துக்கொண்டு உயிர்க்கொலைக்கான ப்ராயசித்த ஹோமங்களை நதிக்கரையிலேயே பண்ணி வைத்தார்.
ஸ்வாமி.. ப்ராயசித்தம் ஆயிடுத்து.
அப்படியா.. சரி..
ஸ்வாமி.. தக்ஷிணை..
என்கிட்ட ஒன்னுமே இல்லியே..
நீங்க ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கோ. நாங்க ராஜாகிட்ட வாங்கிக்கறோம்.
சீட்டா.. சரி எழுதித்தரேன். ஆனா, பாவம் போயிடுத்தா..
போயிடுத்து ஸ்வாமி..
பைக்குள் பார்த்தார்.
இந்தப் பறவையெல்லாம் பறக்கலையே..
இந்தப் பறவையெல்லாம் பறக்கலையே..
செத்துப்போன பறவை எப்படிப் பறக்கும் ஸ்வாமி..
பறக்காதா?
பறக்காது ஸ்வாமி..
பாவம் மட்டும் பறக்குமாக்கும்..
...
அவர் ஏதோ வம்பு செய்கிறார் என்று உறைத்தது அவர்களுக்கு.
ஸ்வாமி. இது விதண்டாவாதம்.. நீங்க சீட்டு எழுதிக்கொடுங்கோ..
பறவை பறக்காம சீட்டு எப்படி தரது? இப்ப நான் ஒரு ப்ராயசித்தம் பண்ணவா?
அந்தணர்களின் கோபம் அதிகரித்தது.
ஓஹோ.. பண்ணுங்கள் பார்க்கலாம். நீங்கள் ப்ராயசித்தம் செய்தால் பறவை பறக்குமோ..
பார்க்கலாம்.
ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
என்று சொல்லி சொல்லி பைக்குள்ளிருந்து ஒவ்வொரு பறவையாய் எடுத்து வானில் விட, அத்தனை பறவைகளும் சிறகடித்துப் பறந்தன.
என்று சொல்லி சொல்லி பைக்குள்ளிருந்து ஒவ்வொரு பறவையாய் எடுத்து வானில் விட, அத்தனை பறவைகளும் சிறகடித்துப் பறந்தன.
அந்தணர்களின் முகம் பயத்தால் வெளியது. இவரிடம் வம்பு செய்தால் ராஜ தண்டனை கிடைக்கும் என்று அஞ்சினர்.
அவர் காலில் விழ, ராமதாசர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
நீங்கள் செய்யும் ஹோமங்களை அதன் தாத்பர்யம் புரிந்துகொண்டு லோக க்ஷேமத்திற்காகப் பண்ணுங்கள்.
தக்ஷிணைக்காகச் செய்தால் பலன் குறையும். உங்களுக்கும் பாவம் வந்து சேரும்.
என்று சொல்லிவிட்டு நடந்தார்.
ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம் ஓம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம்
என்ற ஒலி கம்பீரமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம்
என்ற ஒலி கம்பீரமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment