பாரத வர்ஷம்
பாரத வர்ஷத்தில் நரநாராயணயர்களைக் குறித்துத் துதி செய்யும் நாரத
மஹரிஷி பின்வருமாறு கூறுகிறார்.
ப்ரணவ வடிவானவரே! பற்றற்றவர்களின் செல்வமே! அஹங்காரம் அற்றவரே!
சாந்த வடிவானவரே! ரிஷிகளில் உயர்ந்தவரே! பரமஹம்ஸர்களுக்கெல்லாம் குருவானவரே! உம்மை
வணங்குகிறேன்.
தாங்கள் இந்த ப்ரபஞ்சத்தை படைத்துக் காத்து அழிக்கிறீர்கள்.
தான்தான் செய்பவன் என்னும் தளையில் அகப்படுவதில்லை. இவ்வுடலில்
ஆன்மாவாகவசித்தாலும் உடலின் பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை.
அனைத்தையும் காண்பவர். ஆனால், காணப்படும் பொருளின் குணதோஷங்கள்
தம்மை பாதிப்பதில்லை. எதிலும் ஒட்டாதவர்.
தாங்கள் எங்களுக்கு பக்தியோகத்தை அருளுங்கள்.
இந்த பாரத வர்ஷத்தில் பல நதிகளும், மலைகளும்உள்ளன. மலயம்,
மங்களப்ரஸ்தம், மைநாகம், திரிகூடம், ரிஷபம், கூடகம், கோல்லகம், ஸஹ்யம், தேவகிரி,
ரிஷ்யமூகம், ஸ்ரீ சைலம், திருவேங்கடம், மஹேந்திரம், வாரிதாரம், விந்தியம்,
சுக்திமான், ருக்ஷகிரி, பாரியாத்ரம், துரோணம், சித்ரகூடம், கோவர்தனம், ரைவதகம்,
ககுபம், நீலம், கோகாமுகம், இந்திரகீலம், காமகிரி போன்ற ஆயிரமாயிரம் மலைகள் உள்ளன.
அவற்றிலிருந்து பெருகும் நதிகளும் கணக்கற்றவை.
அவற்றுள் முக்கியமானவை..
சந்திரவஸா, தாமிரபரணி, அவடோதா, க்ருதமாலா (வைகை), வைகாயஸி, காவேரி,
வேணி, பயஸ்வினி (பாலாறு), சர்க்கராவர்த்தா, துங்கபத்ரா, க்ருஷ்ணா, வேண்யா, பீமரதி,
கோதாவரி, நிர்விந்த்யா, பயோஷ்ணீ, தாபீ, ரேவா, சுரஸா, நர்மதா, சர்மண்வதீ, சிந்து,
அந்தம் (ப்ரும்மபுத்ரா), சோணை, மஹாநதி, வேதஸ்ம்ருதி, ரிஷிகுல்யா, திரிஸாமா,
கௌசிகீ, மந்தாகினி, யமுனா, ஸரஸ்வதி, த்ருஷத்வதி, கோமதி, ஸரயு, ரோதஸ்வதி, ஸப்தவதி,
ஸுஷோமா, சதத்ரு, சந்திரபாகா, மருத்வ்ருதா, விதஸ்தா, அஸிக்னீ முதலியவை.
இந்த பாரத வர்ஷத்தில் பிறவியெடுப்பவர்களுக்கு ஸத்வ, ரஜஸ், தமஸ்
ஆகிய குணங்களுக்கேற்ப, நல்வினை தீவினைப் பயன்களை அனுசரித்து தேவர்கள், மனிதர்கள்,
நரகவாசிகள் என்ற பிறவிகள் ஏற்படுகின்றன.
அவரவர் செய்த கர்மவினைகளுக்கேற்பவே பிறவி அமைகிறது.
இந்த வர்ஷத்தில் தர்மநெறிகளை ஒழுங்காகப் பின்பற்றிவந்தாலே
போதும். முக்தி சுலபமாகிவிடும்.
பாரதத்தில் மனிதப்பிறவி பெற்றவர்களை விண்ணவரும் புகழ்ந்து
பாடுகிறார்கள்.
பாரதத்தில் பிறவி எடுப்பவனுக்கு இறையின் தொண்டு தானாகவே
கிடைக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அவன் காதுகளில் இறைநாமம் விழுந்து விடுகிறது.
மற்ற வர்ஷங்களிலோ, தேசங்களிலோ இப்பேறு சுலபம்இல்லை.
ப்ரும்மாதி வர்ஷத்தில் நீண்ட ஆயுளோடு பிறப்பவரைக் காட்டிலும்
குறைந்த ஆயுளோடு பிறந்தாலும் பாரத வர்ஷத்தில் பிறப்பது சிறந்தது.
இஙுள்ள தீரர்கள் ஒரு நொடியில் கர்மங்கள் அனைத்தையும் பகவத்
அர்ப்பணம் செய்து முக்தி பெற்று விடுகிறார்கள்.
எங்கு பகவானின் திருக்கதைகள் இல்லையோ, எங்கு இறையடியார்கள்
வசிக்கவில்லையோ, எங்கு பகவானுக்கு பூஜைகள் நடை பெறுவதில்லை யோ, எங்கு பகவானின்
திருநாமங்கள் பாடப்படுவதில்லையோ அவ்விடம் விண்ணுலகமே ஆயினும் அதை
விரும்பக்கூடாது.
இந்த பாரத வர்ஷத்தில் பிறவி பெற்றும், முக்திக்கு வேண்டிய அத்தனை
சாதனைகளும் சுலபமாகக் கிடைத்தும், பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுபட முயற்சி
செய்யாமல் வாசனா பலத்தால் சிற்றின்பத்தில் உழல்பவர்கள்
வேடனின் வலையில் சிக்கி விடுதலை பெற்ற பின், பழத்துக்கு மயங்கி அதே
மரத்திற்கு வந்து மீண்டும் வலையில் சிக்கும் பறவைகள் போன்றவர்கள்.
பாரத வர்ஷமே கர்மபூமி. இங்குதான் யாகங்கள் சிறப்பாகச்
செய்யப்படுகின்றன.
அவற்றில் மகிழ்ந்து பகவான் பயனை அளிக்கிறார். பயன் கருதாது வேள்வி
செய்பவர்க்குத் தன்னையே அளிக்கிறார்.
விண்ணுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தபின், முற்பிறவியில்
செய்த வேள்வியின் பயனோ, நாமங்கள்சொன்ன பயனோ, நற்செயல்களின் பயனோ மிச்சமிருப்பின்,
இந்த அஜநாபம் என்னும் பாரதவர்ஷத்தில் பகவத் பக்தியோடு கூடிய மனிதப்பிறவி
கிடைக்கட்டும்.
என்று நாரதர் பகவானைப் புகழ்ந்து பின்னர் பாரதவர்ஷத்தின்
பெருமைகளையும் எடுத்துரைக்கிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட
ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment