Wednesday, December 5, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 163 ஜடபரதர் - 2


ஒரு சமயம் பரதர் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு அனுஷ்டானங்களை‌
முடித்துக்கொண்டு ஆற்றங்கரையிலேயே மூன்று முஹூர்த்த காலம் ப்ரணவ ஜபம்
செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கர்பம் தரித்த பெண்மான் தனியாக அங்கு நீர் குடிக்க வந்தது.

நாற்புறமும் பார்த்துவிட்டு நீரில் அது வாயை வைத்ததும் அதிரும்படியான ஒரு சிம்மகர்ஜனை கேட்டது.

அதைக் கேட்டதும் மிகவும் பயந்துபோன அப்பெண்மான் கண்கள் சுழல, இதயம் துடிக்க,
நீர் குடிக்காமல் எதிர்க் கரைக்குச் செல்லத் துள்ளியது. பயத்தினால் அதிவேகமாகத் தாவ, வயிற்றிலிருந்த கர்பம் நழுவி, குட்டி மான் நதியில் விழுந்தது.

மிகுந்த துன்பத்தோடும் வலியோடும் பயத்தோடும் தாவிய மான் எதிர்ப்புறம் ஒரு மலைக்குகை வாயிலில் வீழ்ந்து இறந்துபட்டது.

அப்பெண்மானின் குட்டி, நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட ராஜரிஷியான பரதர்
கருணை மிகுந்து அதைத் தன் குழந்தைபோல் ஏந்தி ஆசிரமம் எடுத்து வந்தார்.

அம்மான்குட்டியிடம் மிகவும் அன்பு கொண்டு, பாலூட்டி, சீராட்டி, காட்டு
விலங்குகளிடமிருந்து காப்பாற்றி வந்தார். அதை எப்போதும்‌ கொஞ்சி மகிழ்வார். அது கண்ணெதிரில் இல்லாமல் எங்காவது சுற்றினால் மிகவும்‌கவலைப்படுவார்.

பாவம் அந்த மான்குட்டி. தன் சுற்றத்தாரைப் பிரிந்து விதியினால் என்னிடம் வந்துவிட்டது. என்னையே நம்பி சரணடைந்த மான்குட்டியை நான்தானே காக்கவேண்டும். எங்கு
போயிற்றோ என்றெல்லாம் மனம் சஞ்சலப்படுவார்.

தன் தவ வலிமையை முன்னிட்டு அதைக் காக்கவேண்டி இறைவனிடம் வேண்டுவார்.

இவ்வாறு மான்குட்டியின் சிந்தனையால் சில நாள்களிலேயே அவரது பூஜைகள்,
அனுஷ்டானங்கள், தவம் எல்லாம் தானாக நின்றுபோயின.
உண்மையில் சான்றோர்கள் தங்களிடம் அடைக்கலம் புகுந்த எளியோரின் பொருட்டு
தங்கள் சுகங்களையும் துச்சமாக எண்ணுவார்கள்.

மான்குட்டியின் மீதுகொண்ட பற்றால் படுப்பது, நிற்பது, நடப்பது, நீராடுவது, உண்பது அனைத்தும் அதன் நினைவிலேயே கழிந்தது.

தான் எங்கு சென்றாலும் கூடவே கூட்டிச் செல்வார். அது புல்லைக் கண்டு நின்றாலும், அதனால் நடக்க முடியவில்லை போலிருக்கிறது. பாவம் என்றெண்ணி தோளில் சுமந்து
செல்வார்.

ஒரு சமயம் மான்குட்டி எங்கோ சென்றுவிட்டு வெகு நேரம் திரும்பவில்லை. பூஜைக்கு
நடுவில் எழுந்து வந்து வந்து பார்த்த பரதர், அதற்கு என்னாகியிருக்குமோ, காட்டு விலங்குகள் அடித்திருக்குமோ, நான் அதைக் காக்கத் தவறிவிட்டேனோ என்றெல்லாம் எண்ணிப் பலவாறு புலம்பினார்.

அந்த மானுடன் தான் விளையாடியதையெல்லாம் நினைத்து நினைத்து வருந்தினார்.

தேவர்களையும் சூரிய சந்திரர்களையும் மானின் நலமோடு திரும்புவதற்காக ப்ரார்த்தனை செய்தார்.

பொருத்தமற்ற எண்ணங்களாலும், வீண் கவலைகளாலும் அவரது சித்தம்‌ கலங்கியது.

பரம யோகியாகவும் தபஸ்வியாகவும் வாழ்ந்த பரதர், அரசர்க்கரசனாய் இருந்து பின்னர் அனைத்து போகங்களையும் உறவுகளையும் ஒரு கணத்தில் துறந்த பரதர், மான்குட்டி
வடிவில் வந்த ஊழ்வினையில் மாட்டிக் கொண்டார். சாதனைகள் அனைத்தையும் துறந்து ஆத்ம ஸ்வரூபத்தை மறந்தார்.

அவ்வமயம் காலதேவன் வந்து பீடிக்க, மரணத் தறுவாயில் தன்னெதிரே அமைதியாய் வந்து அமர்ந்திருந்த மானைக் கண்டு, இதைத் தவிக்கவிட்டுப் போகிறோம்
என்றெண்ணினார். மானின் நினைவிலேயே உயிர் பிரிந்தது.

மரணத் தறுவாயில் மானை நினைத்துக் கொண்டே உயிர் நீத்ததால் அடுத்த பிறவியில்
மானாகப் பிறந்தார்.

பூர்வ ஜென்மத்தில் செய்த தவப்பயனாய் அவருக்கு அனைத்தும் நினைவிருந்தது.

தனக்கு மான் பிறவி வந்ததை எண்ணி எண்ணி நொந்தார்.

மனவடக்கத்தினின்றும் சான்றோர் வழியினின்றும்‌ வழுவினேனே..

பகவான் வாசுதேவனின் குணங்களைக்‌ கேட்டல், பாடுதல், சிந்தித்தல் நினைந்து நினைந்து
உருகுதல் போன்ற பக்தி நெறியில் பலகாலம் மனம் நிலைத்திருந்தபோதும்
தற்செயலாக ஒரு மான்குட்டியின் பின்னால் சென்று பந்தத்தில் மாட்டிக்கொண்டேனே
என்று மனம் வெதும்பினார்.

பின்னர் மனத்தில் தோன்றிய வைராக்யத்தை வெளிக்காட்டாமல் தன் மானினத்தை
விட்டுப் பிரிந்து முந்தைய பிறவியில் தான் வாழ்ந்த புலஹரின் ஆசிரமத்தை அடைந்தார்.

அங்கேயே தங்கி காய்ந்த இலைகள், சருகுகள் ஆகியவற்றை மட்டும் உட்கொண்டு
இடையறாது பகவத் சிந்தனம் செய்து முடிவு காலத்தை எதிர்நோக்கியிருந்தார்.

காலன் வந்த சமயம், கண்டகி நதியின் தன் மான் சரீரத்தை விடுத்து உயிர் நீத்தார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment