விதுரர் கூறினார்.
அந்தணர்கள் ப்ருதுவிற்குப் பட்டாபிஷேகம் செய்து மக்களின் காவலன் என்று அழைத்தனர்.
வேனனது கொடுஞ்செயலால் பூமி தன் வளங்களைத் தனக்குள் ஒளித்துக்கொண்டாள். அதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது.
மக்கள் பட்டினியால் வாடினர். ப்ருதுவிடம் முறையிட்டனர்.
அகில உலகிற்கும் காவலர் தாங்களே! தாங்களே எங்கள் பிழைப்பிற்கும் வழி செய்யவேண்டும் பசிக்கொடுமை வாட்டுகிறது. உடனே ஆவன செய்யுங்கள். இல்லையேல் மடிந்து போக நேரிடும்.
மக்களின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டு இந்நிலைமைக்குக் காரணம் என்ன என்று யோசிக்கலானார்.
பூமி பயிர் பச்சைகள், மூலிகைகள் அனைத்தையும் தனக்குள் ஒளித்துக்கொண்டது என்று ஆராய்ந்து கண்டார். சிவபெருமான் முப்புரமெரிக்கக் கிளம்பியதுபோல் கடுங்கோபம் கொண்டு வில்லை எடுத்து பூமியின் மேல் எய்வதற்காகத் தொடுத்தார்.
அதைக் கண்டு பயந்த பூமிதேவி பசுவின் உருக்கொண்டு ஓடலானாள். அவள் நாற்றிசைகளிலும் ஓட அவளை விடாமல் தொடர்ந்தார் ப்ருது.
அவள் மூவுலகிலும் காப்பார் யாரு மி ன்றி ப்ருதுவிடமே திரும்பி வந்து கூறலானாள்.
தர்ம நெறியறிந்தவரே! துன்பமடைந்தவரைக் காப்பவரே! என்னையும் தாங்களே காக்க வேண்டும். குற்றம்புரியாத என்னை ஏன் கொல்ல விரும்புகிறீர்? தர்மநெறியறிந்தவன் பெண்ணைக் கொல்ல முயல்வானா?
நான் உறுதியான படகுபோல் அனைத்து ஜீவன்களையும் என்மேல் வைத்துக் காக்கிறேன். நீங்கள்என்னை அழித்தால் உங்களையே நம்பிய மக்களை நீரின்மேல் வைத்து எப்படிக் காப்பாற்றுவீர்கள்?
ப்ருது சொன்னார்..
பூமியே! என் கட்டளையை மீறுகிறாய். அதனால் உன்னைக் கொல்லப்போகிறேன். வேள்வியில் ஹவிர்பாகம் பெறுகிறாய் அல்லவா? ஆனால் தானியங்களைத் தர மறுக்கிறாய்.
நீ பசுவின் உருவின் புல்லை மட்டும் உண்டு பாலைக் கொடுப்பதில்லை. கொடியவளான உன்னைத் தண்டிப்பது குற்றமாகாது.
ப்ரும்மதேவரால் உண்டாக்கப்பட்ட தானிய வகைகளை உன்னுள் ஒளித்துக்கொண்டு கொடுக்க மறுக்கிறாய். உன்னைக் கொன்று உன் கொழுப்பால் என் மக்களின் பசியைத் தீர்ப்பேன். எவன் தன்னை மட்டும் போஷித்துக் கொண்டு மற்ற ஜீவராசிகளிடம் கருணையின்றி நடக்கிறானோ அவன் ஆணானாலும், பெண்ணானாலும் மூன்றாம் பாலினத்தவராயினும், சுயநலமியான அவனைக் கொல்வது கொலையாகாது.
திமிர் பிடித்த உன்னைத் துண்டு துண்டாய் வெட்டி என் யோக சக்தியால் மக்களைக் காப்பேன்.
என்றார்.
பூமி நடுங்கிக்கொண்டு கூறினாள்
நீங்கள் ஸாக்ஷாத் பரமபுருஷரே ஆவீர். மாயையை ஏற்றுப் பல உருவம் கொள்கிறீர். உண்மையில் விருப்பு வெறுப்பற்றவர். தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறேன்.
அனைத்தையும் படைத்த தாங்களே என்னைக் கொல்ல வந்தால் நான் யாரிடம் சரண் புகுவேன்?
தங்கள் மாயையை எவராலும் வெல்லமுடியாது. தாங்களே அன்று ஆதிவராஹமூர்த்தியாய் என்னை சமுத்திரத்திலிருந்து தூக்கிவந்தீர்கள்.
இபோது தாங்களே என்னைக் கொல்லத் துணியலாமா?
தங்களுக்கும் தங்கள் அடியார்களுக்கும் வணக்கம்.
என்மீது கொண்ட கோபத்தைச் சற்றே அடக்கிக்கொண்டு நான் கூறுவதைக் கேளுங்கள்.
உண்மையைக் கண்ட முனிவர்கள் மக்களின் நன்மையின் பொருட்டு பல்வேறு வழிகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர். மக்கள் அந்த தர்ம வழிகளில் ஒழுகினால் பல்வேறு விருப்பங்களையும் அடையப்பெறுவர்.
ஆனால், அவற்றில் நம்பிக்கையற்ற மூடன் தன் விருப்பப்படி ஒரு வழியைக் கைக்கொண்டால் அது பலனளிப்பதில்லை.
ப்ரும்மதேவரால் படைக்கப்பட்ட தானியங்களை தீயவர்கள் உண்டு கொழுத்திருந்தனர். அவர்களின் அதர்மச் செயல்கள் பெருகின. எனவே அவற்றை நான் என்னுள் ஒளித்தேன்.
தாங்கள் நம் முன்னோர்களின் அறவுரைப்படி அவற்றை என்னிடமிருந்து கறக்க ஆவன செய்யுங்கள்.
ஒரு கன்றுக்குட்டி யும் பாத்திரமும் கொண்டுவந்தால், கன்றின்மேலுள்ள அன்பினால் பாலின் உருவில் அனைத்து வளங்களையும் பொழிந்து விடுகிறேன்.
அரசே! நதிப்பாசன நிலமாய் என்னைச் சமன் செய்தால் மழைக் காலத்திலும் வறண்ட காலத்திலும் மாரிகாலத்து மழை என்னுள் தங்கும். அது மக்களுக்கு நன்மைகளைத் தரும்.
என்றாள்.
என்றாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment